THE TYRANT DRACULA`S HISTORY






THE TYRANT DRACULA`S HISTORY


கொடூரத்திற்கு விலை கொடூரமே !!!


டிராகுலா (Dracula) என்றாலே ஆங்கில பேய்ப்பட ரசிகர்கள் அனைவரும் அஞ்சி நடுங்குவார்கள். தமிழில் ரத்தக் காட்டேரி என்றும் பிற்கால ஐரோப்பாவில் வேம்பயர் (vampire) என்றும் பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்ட இந்த டிராகுலாவின் வரலாறு என்ன? அந்த வரலாற்றை ஆராய்ந்தால் டிராகுலா நாம் நினைப்பது போல் ரத்த வெறியன் இல்லை என்பதும் அவனது கொடூரங்களுக்கு ஒரு காரணம் இருந்திருப்பதும் தெரிய வருகிறது. அதனால் டிராகுலாவின் வரலாற்றையும் சற்று ஆராய்வோம்.

ஹங்கேரி நாட்டில் 1431ஆம் ஆண்டு வலேசியா (wallachia) எனும் சிறுநாட்டின் மன்னர் வம்சத்தில் பிறந்தவன், விளாட் டிராகுல். இவனே பிற்காலத்தில் விளாட் தெ இம்பேலர் (கழுவேற்றும் விளாட் - Vlad the Impaler), கவுண்ட் டிராகுலா (Count Dracula) என்ற பெயரில் புகழ் பெற்றவன்.


அன்று கிழக்கு ஐரோப்பா எதிர்கொண்ட மிக முக்கிய சக்தி, ஆட்டோமான் (Ottomon Turks) துருக்கிய சாம்ராஜ்யம். டிராகுலாவின் தந்தை, துருக்கிய சுல்தானுக்குக் கப்பம் கட்டி வந்தார். ஒருதரம் கப்பப் பணம் கட்டத் தாமதமாகவே, தன் இரு பிள்ளைகளான விளாட் மற்றும் ராடு (Radu the Handsome) இருவரையும் பணயக் கைதிகளாக ஆட்டொமான் சுல்தான் அரண்மனைக்கு அனுப்பி வைத்தார். கப்பத் தொகை கட்டி முடிக்கும்வரை இரு பிள்ளைகளும் சுல்தானிடம் கைதியாக இருந்தார்கள்.


இந்தச் சூழலில் ராட் சின்ன நாடான வலேசியாவின் மன்னனாவதை விட அன்றைய வல்லரசான துருக்கியில் இருந்தால் தான் தன் எதிர்காலத்துக்கு நல்லது என நினைத்து முஸ்லிம் மதத்துக்கு மாறி, சுல்தானின் படையணியில் சேர்ந்துவிட்டான். மனம் மாறாத விளாட், தன் தந்தையுடன் வலேசியா திரும்பினான். அதன்பின் சுல்தானுக்கு நாணயமாகக் கப்பம் கட்டி வந்தார் விளாடின் தந்தை. அவரது அரியணைக்கு ஆபத்து வந்தபோது சுல்தானும் அவரது உதவிக்கு வந்தார். இந்தச் சூழலில் விளாட், தன் தந்தை மறைவுக்குப் பின் ஆட்சிக்கு வந்தான்.

விளாடுக்கு 18 வயது ஆகையில் 1459ஆம் ஆண்டு, அன்றைய போப் இரண்டாம் பயஸ் (Pious II) சிலுவைப் போரை அறிவித்தார். கிறிஸ்தவர்கள் அனைவரும் அப்போரில் இணைந்து, ஆட்டோமான் சுல்தானுடன் போரிடுவது கடமை ஆனது. சுல்தானுக்குக் கப்பம் கட்டி வாழும் நிலையை அறவே வெறுத்த விளாட், சிலுவைப் போரில் இணைந்து கொண்டான். கப்பம் கட்டுவதையும் நிறுத்தினான். அதனால் கோபம் அடைந்த சுல்தான் மஹமது (Sultan Mehmed), கப்பத் தொகையை வாங்கி வர அதிகாரிகள் இருவரை அனுப்பினார்.


அதிகாரிகள் அரசவையில் நுழைந்து, விளாடுக்காகக் காத்திருந்தார்கள். விளாட் வந்ததும் ஒட்டுமொத்த அரசவையே எழுந்து நின்று வணங்கியது. இரு அதிகாரிகளும் எழுந்து நிற்கவில்லை. மரியாதைக்காகத் தொப்பியைக் கழற்றி, வணக்கம் செலுத்தவும் இல்லை. சுல்தானின் தூதர்கள், தம்மை விட அந்தஸ்தில் குறைந்த கப்பம் கட்டும் குறுநில மன்னன் முன் தொப்பியைக் கழற்றுவது வழக்கமில்லை என அதற்குக் காரணமும் கூறினார்கள்.


"சரி, இனி நீங்கள் ஆயுளுக்கும் தொப்பியைக் கழற்றவே வேண்டாம்" எனக் கூறிய விளாட் தொப்பியை அவர்கள் தலையுடன் சேர்த்து ஆணி அடிக்க உத்தரவிட்டான். அலறித் துடித்த ஆட்டோமான் தூதர்கள், என்ன கெஞ்சியும் மன்னிப்பு கேட்டும் விடாமல், அவர்களைப் பிடித்த வீரர்கள், அவர்கள் தலையில் தொப்பியுடன் சேர்த்து ஆணி அடித்துக் கொன்றார்கள்.


தூதர்கள் கொல்லப்பட்டவுடன் கடுமையான சீற்றம் அடைந்த சுல்தான் மஹமது, சிலுவைப் போருக்கு மத்தியிலும் விளாடைக் கொல்ல ஒரு படையை ஹம்ஸா பே (Hamza Bey) என்பவர் தலைமையில் அனுப்பினார். அவர்கள் ஒரு குறுகலான மலைப் பாதையைக் கடக்கையில் எதிர்பாராவிதமாக தாக்குதல் நடத்தி அவர்களை முறியடித்த விளாட், பிடிபட்ட அத்தனை துருக்கிய வீரர்களையும் கழுவேற்றினான். படைத் தளபதி ஹம்ஸா பே, தன் அந்தஸ்தைக் குறிக்கும் விதத்தில் உயர்ந்த கழுமரத்தில் கழுவேற்றப்பட்டார்.

அதன்பின் ஆட்டோமான் சாம்ராஜ்யத்தின் பகுதியான பல்கேரியாவில் இருந்து ஒரு பெரும் படையணி, விளாடைத் தாக்கலாம் என எதிர்பார்த்த விளாட், துருக்கிய சிப்பாய்களைப் போல் வேடமிட்டுத் தன் படையைப் பல்கேரியாவுக்கு நடத்திச் சென்றான். துருக்கிய படைகள் இரவில் உறங்குகையில் எதிர்பாராத வகையில் தாக்குதல் நடத்தி, ஒட்டுமொத்த பல்கேரியப் படையணிகளையும் தோற்கடித்துக் கழுவேற்றினான் விளாட். பல்கேரியாவெங்கும் பிடிபட்ட துருக்கிய வீரர்கள், ஆயிரக் கணக்கில் கழுவேற்றப்பட்டார்கள். சுமார் 24,000 துருக்கிய வீரர்களைக் கழுவேற்றியதாக விளாட், போப் பயஸுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டான்.

விளாட் இத்தனை பேரைக் கழுவேற்றியதால் அவனுடன் போரிடவே அன்றைய துருக்கிய படைகள் அஞ்சி நடுங்கின. பிடிபட்டால் கழுவேற்றம் என்பதால் போரிடாமலேயே பல தளபதிகள் ஓட்டம் பிடித்தார்கள். கடும் கோபமடைந்த சுல்தான் மஹமதுவே ஒரு படையைத் திரட்டிக்கொண்டு விளாடை எதிர்த்துப் போரிட வந்தார். வந்தபோது பள்ளத்தாக்கு ஒன்றில் விளாடால் கழுவேற்றப்பட்ட 24,000 துருக்கிய வீரர்களைப் பார்த்துக் கடும் அதிர்ச்சி அடைந்து, போரிடாமலேயே திரும்பிச் சென்றார்.

இந்தச் சூழலில் விளாட், ஒட்டுமொத்த டிரான்ஸில்வேனியா பகுதியையும் சுதந்திர நாடாக அறிவித்து ஆட்சி செய்தான். ஆனால் சிலுவைப் போர் முடிந்ததும் சுல்தான், விளாடை மறக்காமல் 90,000 பேர் அடங்கிய ஒரு மாபெரும் படையைத் தயார் செய்து விளாடின் சகோதரன் ராடின் தலைமையில் அனுப்பி வைத்தார். அண்ணன், தம்பிக்கு இடையே சகோதர யுத்தம் நடைபெற்றது.

அன்றைய வலேசியா ஜனத் தொகையை விட அதிக எண்ணிக்கையில் இருந்த ஆட்டொமான் படைகளை எதிர்த்து நேரடி யுத்தம் நடத்தினால் தோல்வி உறுதி என்ற நிலையில் கொரில்லா தாக்குதல்களில் இறங்கினான் விளாட். இரவு நேரத்தில் துருக்கியப் படைகள் உறங்கையில் பெரும் தாக்குதல் ஒன்றை நடத்தி 15,000 பேரைக் கொன்றான். இந்தக் கொரில்லா தாக்குதல்கள், அன்றைய கிறிஸ்துவ ஐரோப்பாவில் விளாடுக்கு மிகப் பெரும் புகழைப் பெற்றுத் தந்தன.

ஆனால் சளைக்காத சுல்தான் மஹமது, மேலும் மேலும் படையணிகளை வலேசியாவுக்கு அனுப்பினார். வெனிஸ், ஜெனோவா முதலிய குட்டி நாடுகள் பலவும் விளாடுக்கு எதிரான சுல்தானின் போரால் காப்பாற்றப்பட்டன. அங்கே போரிட்டுக் கொண்டிருந்த படைகள் பலவும், விளாடுக்கு எதிராகப் போரிட அனுப்பப்பட்டன.

இப்படி மேலும் மேலும் படைகளும் ஆயுதங்களும் வந்து இறங்க, துருக்கியப் படையணி மேலும் வலுவடைந்தது. இந்தச் சூழலில் ராட், வலேசியா கோட்டையைப் பிடித்து ஆட்சியையும் பிடித்தான். ஆதரவு இன்றி, பணம் இன்றி, படைகளும் இன்றி ஹங்கேரி மன்னனிடம் உதவி கேட்கச் சென்றான் டிராகுலா. ஆனால் ஹங்கேரி மன்னன், சுல்தானுக்கு அஞ்சி, டிராகுலாவைச் சிறையில் அடைத்தான். ராட், வலேசியாவின் புதிய மன்னனாகச் சுல்தானால் அறிவிக்கப்பட்டான்.

சுமார் 12 ஆண்டு சிறையில் இருந்த டிராகுலா, இறுதியில் ஹங்கேரி மன்னன் மரணத்துக்குப் பின் விடுதலை அடைந்தான். மீண்டும் ஒரு மிகச் சிறு படையைத் திரட்டிச் சென்று வலேசியா மேல் போர் தொடுத்தான். அதில் வெறும் 4000 வீரர்கள் மட்டுமே இருந்தார்கள். ஆனால் டிராகுலாவின் கொடூரம் உலகப் புகழ் பெற்று இருந்ததால், அவன் படை வருகிறது எனக் கேள்விப்பட்டவுடன் பாதி துருக்கிய வீரர்கள் ஓட்டம் பிடித்தார்கள். மீதிப் பேரை வென்று, ஆட்சியை மீண்டும் பிடித்து முடி சூடினான் டிராகுலா.
ஆனால் மீண்டும் படை எடுத்து வந்த துருக்கிய படைகளுடன் போரிடுகையில் போர்க்களத்தில் வீர மரணம் அடைந்தான் டிராகுலா. அவன் இறந்தபின் சில ஆண்டுகள் கழித்து, அன்றைய ஜெர்மனியில் திகில் நாவல்கள் சில எழுதப்பட்டன. அதில் டிராகுலாவின் கழுவேற்றங்களை வைத்து புனைகதைகளை எழுதத் தொடங்கினார்கள். கொஞ்சம், கொஞ்சமாக டிராகுலாவின் உண்மை வரலாறு மறைந்து அவன் குழந்தைகளைப் பிடித்துச் செல்வான், ரத்தத்தைக் குடிப்பான் என்பது போல் கதைகள் எழுதப்பட்டன.

இக்கதைகள் அன்றைய ஜெர்மனியில் மிகப் பிரபலம் ஆனதால், அவை ரஷ்யா, ஐரோப்பாவெங்கும் பரவின. இதனால் டிராகுலாவின் உண்மை வரலாறு மறைந்து, அவன் ரத்தக் காட்டேரியாக உலகெங்கும் அறியப்பட்டாலும் டிரான்ஸில்வேனியாவில் அவன் மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரனாகவும் தேச பக்தனாகவுமே பார்க்கப்படுகிறான். அவனது சிலைகளை இன்றும் ரொமேனியாவெங்கும் காணலாம்.

Comments

Popular posts from this blog

DACOITS OF CHAMBAL

List of Muhammad's Wives and Concubines

MAHARANI SITADEVI OF BARODA the "Indian Wallis Simpson" INTERESTING LIFE STORY OF HER