வனப்பேச்சி by சித்ரா தேவி
வனப்பேச்சி Posted on 11/03/2019 by சித்ரா தேவி வருசத்துக்கு ஒரு முறை பங்குனி உத்திரத்துக் கோடைக் கொடை விழாவில் தன் சந்ததியை எல்லாம் பார்த்து பரவசம் கொண்டு மேனி சிலிர்த்து உள்ளம் குளிரும் வனப்பேச்சி இடுப்பில் சிவப்பு அரைப்பாவடையும் மேலுக்கு மஞ்சள் சட்டையும் அணிந்து நெற்றிச் சந்தனக்கீற்றில் ரத்தக் குங்குமம் வைத்து கன்னங்களில் சந்தனக் காப்பிட்டபடி உக்கிர விழிகளின் தீட்சண்யத்தைக் குறைத்துக் கொண்டு, அல்லம்பட்டிக் கண்மாய் தாண்டி அடர்ந்திருந்த வனாந்திரத்து ஊடே, ஒற்றைச் சிலையாய் ஆவலோடு காத்திருந்தாள் தன் பிள்ளைகளின் வருகையை எதிர்பார்த்து …… சிவகாசி – திருவேங்கடம் சாலையில் வழுக்கிக் கொண்டு சென்ற ட்ரவேராவை அப்பா அல்லம்பட்டி ஊரின் மண்சாலைக்கு திருப்பியதும் டொமக் டொமாக் என்று வண்டி குதியாட்டாம் போட்டது. குழந்தைகள் ஓஓஓஓ வென குதியாட்டத்திற்கேற்ப கும்மாளித்தார்கள். உள்ளே இருந்த பெரியாத்தா “பேதிலோவான்… ஊருக்கெல்லாம் நல்ல ரோடு போடுதான். இந்த ரோட்டுக்கு மட்டும் என்னைக்குதான் நல்ல காலம் பெறக்குமோ” என்று அங்கலாய்த்தாள். பெரியம்மாவும் சித்தியும் அம்மாவும் முகத்தை சுழித்துக்...