Monday 31 May 2021

FREEDOM FIGHTER DR.D.V.SWAMINATHA SHASTRIGAL BIOGRAPHY

 



FREEDOM FIGHTER 

DR.D.V.SWAMINATHA SHASTRIGAL BIOGRAPHY



சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத் தியாகிகள்.

45. திருச்சி டாக்டர் டி.வி.சுவாமிநாத சாஸ்திரி.

தொகுப்பு: வெ. கோபாலன்.


ஒரு காலத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் அலுவலகம் திருச்சியில்தான் இருந்தது என்பது பலருக்கு இன்று தெரிந்திருக்க நியாயமில்லை. கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி கூட முதன் முதலில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஆபீசில் திருச்சியில்தான் பணிசெய்து கொண்டிருந்தார் என்பதும் புதிய செய்தியாக பலருக்கு இருக்கும். தமிழ்நாடு காங்கிரசின் தலைமை அகமாகத் திகழ்ந்த திருச்சி மாநகரில் அப்போது காங்கிரஸ் கட்சியைக் கட்டிக் காத்து வளர்த்த தியாகச் செம்மல்கள் பலரில் குறிப்பிடத்தக்கவர் டாக்டர் டி.வி.சுவாமிநாத சாஸ்திரி ஆவார்.


இவர் தொழில் முறையில் மருத்துவராக இருந்து திருச்சி நகர மக்களின் பேரன்புக்கு பாத்திரமானவர். இவரது தந்தையார் வாசுதேவ சாஸ்திரியார். இவர் 1887ஆம் ஆண்டு பிறந்தார். திருச்சி சிங்காரத் தோப்பில் "சத்தியாக்கிரக விலாஸ்" எனப் பெயரிடப்பட்ட வீட்டில் இவரது வாசம். பள்ளிக்கூடத்தில் படிக்கும் காலத்திலேயே நாடு சுதந்திரம் பெற வேண்டும் எனும் பேரவா இவருக்கு உண்டு. மருத்துவப் பட்டப்படிப்பு படித்து புகழ்மிக்க மருத்துவராக இவர் பிராக்டீஸ் செய்து வந்த போதும் தேச சேவையையே பெரிதும் விரும்பி செய்யத் தொடங்கினார். 1912இல் இவர் சுதேச இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 1921இல் நடந்த ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டு IPC செக்ஷன் 123யின் கீழ் தண்டிக்கப்பட்டு ஒரு வருஷம் சிறைவாசம் இருந்தார். 1930இல் நடந்த உப்பு சத்தியாக்கிரகத்தில் இவர் மட்டுமல்ல இவரது குடும்பம் முழுவதுமே ஈடுபட்டு அடிபட்டு சிறை புகுந்து சகல கஷ்டங்களையும் பட நேர்ந்தது. இந்த தியாக வரலாற்றில் இடம் பிடித்துவிட்ட இவர் குடும்பத்தின் மற்றவர்கள், இவரது மனைவி கல்யாணி, சாஸ்திரியாரின் சகோதரன் மகன் கணபதி சாஸ்திரி, மகள் சுப்பலக்ஷ்மி, சுப்பலக்ஷ்மியின் கணவர் ராமரத்தினம், இவரது சகோதரரும் பிரபல வக்கீலுமான டி.வி.பாலகிருஷ்ண சாஸ்திரி ஆகியோரும் சிறைசென்ற தியாக சீலர்கள். குடும்பமே நாட்டுக்காக சிறைசென்ற வரலாறு வேறு எங்கேயாவது, எவராலாவது நடத்தப்பட்டதா என்பது நமக்குத் தெரியவில்லை, நேரு குடும்பத்தைத் தவிர. இவர்கள் அனைவரும் கைதாகி கண்ணனூர் சிறையில் ஆறு மாத காலம் வைக்கப்பட்டிருந்தனர்.


சுவாமிநாத சாஸ்திரியார் அழகான தோற்றமுடையவர். நடுவகிடு எடுத்து வாரப்பட்ட கிராப்புத் தலை. சிவந்த மேனி, எப்போதும் சிரித்த முகம், கலகலப்பான பேச்சு இவை சாஸ்திரியாரின் முத்திரைகள். ரத்தினவேல் தேவருக்கு இவர் மிகவும் நெருங்கிய நண்பர். கதர் பட்டு சட்டை அணிந்து, அங்கவஸ்திரம் தரித்து பார்ப்பதற்கு எப்போதும் கண்ணியமான தோற்றத்தோடு விளங்குவார். கையில் ஒரு ஓலைப்பெட்டி. அதில் நூல் நூற்பதற்கான பஞ்சு பட்டைகள், கையில் ஒரு தக்ளி இவை சகிதமாகத்தான் அவர் எப்போதும் இருப்பார். ஏழை மக்களுக்கு அவர் அந்தக் காலத்திலேயே இலவசமாக சிகிச்சை அளித்து வந்தார்.


திருச்சி ஜில்லா காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இவர் இருந்தார். அதுமட்டுமல்ல திருச்சி ஜில்லா ஹரிஜன சேவா சங்கத்தின் தலைவர் பதவியும் இவரிடம்தான் இருந்தது. இவை இரண்டிலும் இவர் ஆற்றிய பணிகள் இன்றும்கூட நினைவு கூரத் தக்கவையாகும். அவருக்குச் சொந்தமான பிரம்மாண்டமான "சத்தியாக்கிரக விலாஸ்" எனும் மாளிகையைவிட்டு நீங்கி தென்னூரில் தாழ்த்தப்பட்டவர்கள் வசிக்கும் சேரிப்பகுதியில் ஒரு குடிசையை அமைத்துக் கொண்டு அந்த ஏழை ஜனங்களுக்கு மருத்துவ உதவியையும் செய்து கொண்டு, தேசப்பணியாற்றினார்.


சிறையில் சுவாமிநாத சாஸ்திரியாரின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. அதுமுதல் அவர் உடல் நலம் கெட்ட நிலையில்தான் பொதுத் தொண்டிலும் கவனம் செய்து வந்தார். இந்த காரணத்தினால் 1942 ஆகஸ்ட்டில் நாடு முழுவதும் எழுச்சியுற்ற "ஆகஸ்ட் புரட்சியில்" இவரால் ஈடுபடமுடியவில்லை. டாக்டர் சுவாமிநாத சாஸ்திரி ஒரு தமிழ் எழுத்தாளர். இவரது எழுத்துக்கள் படித்தவர்கள் மத்தியில் ஓர் எழுச்சியை ஏற்படுத்தியது. இவர் சில சிறுகதைகளையும் எழுதியிருக்கிறார். அந்தக் கதைகளின் மையக் கரு ஒத்துழையாமை இயக்கம்தான். இலக்கியத்திலும் அவரது நாட்டுப் பற்று, சமுதாயப் பற்று வெளிப்பட்டிருப்பதைக் காணமுடிகிறது. இவர் ஒரு பத்திரிகை ஆசிரியரும்கூட. இவர் நடத்திய பத்திரிகையின் பெயர் "களி ராட்டை" என்பதாகும். இந்த பத்திரிகையின் மூலம் மகாத்மா காந்தியடிகளின் தேச நிர்மாணப் பணிகளைப் பரப்பி வந்தார். தீரர் சத்தியமூர்த்தி இவரது நெருங்கிய நண்பர். சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட இந்த பெருமகன் சுதந்திரம் பெறுவதற்கு ஓராண்டுக்கு முன்பாக 13-7-1946இல் காலமானார். இவர் காலமானபோது மகாத்மா காந்தி தன் கைப்பட இரங்கல் கடிதமொன்றை இவர் மனைவி கல்யாணி அம்மாளுக்கு எழுதியிருந்தார். தனது தூய வாழ்க்கையாலும், உயர்ந்த தியாகத்தாலும், தேசபக்தி ஒன்றையே செல்வமாகத் தனது குடும்ப வாரிசுகளுக்கு விட்டுச் சென்ற இந்த தியாக சீலரின் புகழ் வாழ்க!

திருச்சி – டாக்டர் சுவாமிநாத சாஸ்திரி சாலை


திருச்சி தென்னூர் சாஸ்திரி சாலையில்  (அருகில் தில்லைநகர் )அந்த சாலையில் அடிக்கடி வண்டியில் சென்று இருக்கிறேன். அப்போது அவ்வளவு போக்குவரத்து இல்லை. அவ்வாறு செல்லும் போதெல்லாம் “சாஸ்திரி சாலை என்பது, மறைந்த பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி பெயரில் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன். 

சாஸ்திரி சாலை:

தென்னூர்  வியாபார நிறுவனங்களிலும், சில கடைகளிலும் இருந்த பெயர்ப் பலகைகளில் சாஸ்திரி சாலை  அல்லதுS.S.சாலை என்று இருப்பதைக் கண்டேன். அதாவது சுவாமிநாத சாஸ்திரி சாலை என்ற பெயரை அவ்வாறு சுருக்கி எழுதி உள்ளனர். சுவாமிநாத சாஸ்திரி  என்பவர் யார் என்று என்னோடு பணிபுரிந்த நண்பர்களிடம் கேட்டதில் அவர்களுக்கும் தெரியவில்லை. தென்னூரும் அருகில் உள்ள தில்லைநகரும் டாக்டர்களும் கிளினிக்குகளும் நிரம்பிய பகுதியாகும். எனவே யாராவது ஒரு டாக்டர் பெய்ராக இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன்.

அண்மையில் மூத்த பத்திரிகையாளர் கே.சி. லட்சுமி நாராயணன் அவர்கள் எழுதியதலித்துகளும் பிராமணர்களும் என்ற நூலைப் படிக்க நேர்ந்தது. அதில் சுவாமிநாத சாஸ்திரி அவர்களைப் பற்றிய குறிப்புகளைப் படிக்க முடிந்தது. அவர் ஒரு டாக்டர். மேலும் இண்டர்நெட்டில் தேடியதிலும் சில குறிப்புகள் கிடைத்தன. அவற்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

சிறந்த காந்தியவாதி (ஹரிஜன சேவா சங்கம் )

மகாத்மா காந்தி அவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சேவை செய்வதற்காக ஹரிஜன சேவா சங்கம் “ என்ற அமைப்பை தொடங்கினார். அதில் காங்கிரசார் பலர் இணைந்து கொண்டு சேவை செய்தனர். அவர்களுள் ஒருவர் திருச்சி டாக்டர் டி.வி.சுவாமிநாத சாஸ்திரி அவர்கள். இவர் திருச்சி ஜில்லா காங்கிரஸ் கமிட்டிதலைவராகவும்,  திருச்சி ஜில்லா ஹரிஜன சேவா சங்கத்தின் தலைவராகவும் இருந்தவர்.

இவருடைய சொந்த ஊர் கும்பகோணம். இவருடைய தந்தையின் பெயர் வாசுதேவ சாஸ்திரி. தாயார் இலட்சுமி அம்மாள். இவர் சென்னையில் மருத்துவக் கல்லூரியில் படித்தபோதே காந்திய கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவராய் இருந்தார். திருச்சியில் இருந்தபோது ஹரிஜன சேவா சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தீண்டாமையை எதிர்த்து பிரச்சாரம் செய்தார். சொன்னதோடு இல்லாமல் திருச்சி தென்னூரில் மல்லிகைபுரம், சங்கிலிச்சேரி ஆகிய இரு தாழ்த்தப்பட்ட குடியிருப்புகளுக்கு மத்தியில் தனது மருத்துவமனையைக் கட்டினார். இவரை சிலர் சம்பாதிக்கத் தெரியாதவர் என்றும் பைத்தியம் என்றும் கிண்டல் செய்தனர். இவர் பிராமணர் என்பதால், இவருடைய உறவினர்கள் இவரை சாதிவிலக்கும் செய்தனர். ஆனால் டாக்டர் சுவாமிநாத சாஸ்திரி அவர்கள் எதனைப் பற்றியும் கவலைப்படாது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இலவசமாக மருத்துவ உதவிகள் செய்தார்.

மேலும் சாதி ஒழிப்பு, பெண்ணுரிமை, விதவைகள் மறுமணம் போன்ற சமூக சீர்திருத்தங்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 1921 இல் நடந்த ஒத்துழையாமை இயக்கப் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஒரு ஆண்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். 1930 இல் நடைபெற்ற உப்பு சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டதால் இவரது மனைவி உட்பட குடும்பமே ஜெயிலுக்கு போனது. ஆஸ்பத்திரியில் தன்னிடம் வரும் நோயாளிகளை பார்க்கும்போதும் கூட ராட்டையில் நூல் நூற்றுக் கொண்டிருந்தார். 1934 இல் இவர் தொடங்கிய பத்திரிகையின் பெயர் “களிராட்டைஎன்பதாகும்.

தொண்டின் நினைவாக:

டாக்டர் சுவாமிநாத சாஸ்திரி அவர்கள் செய்த ஹரிஜன சேவையைப் பாராட்டி, டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்கள் தங்கத்தினால் ஆன நூல் நூற்கும் தக்ளியையும், தங்க பதக்கத்தையும் கொடுத்து கௌரவப்படுத்தினார்.

1961 இல் திருச்சியில் நடைபெற்ற காங்கிரஸ் கமிட்டி மாநாட்டு பந்தலுக்கு டாக்டர் சுவாமிநாத சாஸ்திரியின் பெயர் காமராஜரின் உத்தரவுப்படி வைக்கப்பட்டது.

சாஸ்திரிக்கு பெரியார், காமராஜர், சத்தியமூர்த்தி, டாக்டர் டி.எஸ்.எஸ். ராஜன், கல்கி, எஸ்.எஸ்.வாசன், சதாசிவம் ஆகியோருடன் நல்ல தொடர்பு இருந்தது.

1887இல் பிறந்த டாக்டர் சுவாமிநாத சாஸ்திரி அவர்கள் சிறைவாசத்தின் போது ஏற்பட்ட காசநோயின் காரணமாக 1946 ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 19 ஆம் நாள் மரணம் அடைந்தார் பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் விடுதலை பத்திரிகையில் அவரது சேவையைப் பாராட்டி ” டாக்டர் சுவாமிநாத சாஸ்திரியின் வாழ்க்கை, மக்கள் அனைவருக்கும் ஓர் எடுத்துக்காட்டாகத் திகழும் “ என்று குறிப்பிட்டு, ஒரு தலையங்கம் எழுதினார்.  

சாஸ்திரி அவர்களின் தொண்டினை நினைவு கூறும் வண்ணம், அவர் வசித்த தென்னூர் பகுதியில் உள்ள ஒரு நீண்ட சாலைக்கு (திருச்சி கோகினூர் தியேட்டலிருந்து தென்னூர் மேம்பாலம் வரை (சிப்பி தியேட்டர் இருக்கும் சாலை) சுவாமிநாத சாஸ்திரி சாலை என்று பெயர் சூட்டப்பட்டது. திருச்சிராப்பள்ளியை திருச்சி என்றும், புதுக்கோட்டையைப் புதுகை என்றும் ஊர்ப் பெயர் முதலானவற்றை சுருக்குவது வழக்கம். அதே போல டாக்டர் சுவாமிநாத சாஸ்திரி சாலையின் பெயரை மக்கள் குறிப்பிடும் போது சாஸ்திரி சாலை என்றும் கடைக்காரர்கள்S.S.சாலை என்றும் சுருக்கிவிட்டார்கள்.

( இந்த பதிவினில் டாக்டர் டி.வி.சுவாமிநாத சாஸ்திரி அவர்களது படத்தினை வெளியிட ஆசைப்பட்டேன். எவ்வளவோ முயற்சி செய்தும் கிடைக்காதது எனக்கு பெரிய குறைதான்.)

நன்றி!  இந்த கட்டுரையை எழுத துணை நின்றவை:
தலித்துகளும் பிராமணர்களும்  நூலாசிரியர் கே.சி. லட்சுமி நாராயணன்
தமிழ் நாட்டுச் சுதந்திரப் போராட்ட தியாகிகள்  கட்டுரை
ஆசிரியர் வெ.கோபாலன்
Chitti recollects...  An Article  

KUMUDHINI ALIAS RANGANAYAGI WRITER BORN 1905 NOVEMBER 5 -1986

 


KUMUDHINI  ALIAS RANGANAYAGI 

WRITER BORN 1905 NOVEMBER 5 -1986



சிலநாட்களுக்கு ஒரு நண்பர் ஒரு கட்டுரையின் பகுதியை எனக்கு அனுப்பி, இது யார் எழுதினார் எந்த வருடம் என்று தெரியுமா என்று எழுதியிருந்தார்:


“நான் சென்னைக்குப் போகும் சமயமெல்லாம் அதற்கு இரண்டு நாட்கள் முன்பாகவே என்னுடைய பாட்டி எனக்குப் புத்திமதி சொல்ல ஆரம்பிப்பார். அவற்றில் ஒன்று ‘கதவை எப்போதும் தாளிட்டு வா.. இல்லாவிட்டால், ‘அதை வாங்கு, இதை வாங்கு’ என்று தொந்திரவு செய்து கொண்டே இருப்பார்கள்’ என்பது.

நானும் அவள் சொல்லுகிற விதமே செய்வது வழக்கம். அப்படிச் செய்தும் கூட சிற்சில சமயம் கதவைத் தட்டி உள்ளே இருப்பவர்களைக் கூப்பிட்டுத் தங்களுடைய போலிச் சரக்குகளை விற்கப்பார்க்கும் பலரிடம் அகப்பட்டுக் கொண்டிருக்கிறேன். ஆகையால், இந்த முறை ஒருதினம் பகல் வேளையில் வாசற்கதவை யாரோ தட்டின சமயம் நான் மிக ஜாக்கிரதையாக கதவை அரை அங்குலத்திற்குத் திறந்து எட்டிப்பார்த்தேன்.

அங்கு யாரோ புது மனிதன் நிற்பதைக் கண்டு, ‘ஏதாவது விற்க வந்திருக்கிறாயென்றால் எனக்கு ஒன்றும் வேண்டாம்’ என்றேன்.

நான் விற்க வந்திருப்பது சாமான்களல்ல.. சௌகரியத்தையே விற்க வந்திருக்கிறேன்.. உங்களுக்குத் திருப்தி இல்லாவிட்டால் ஒரு பைசா கூட கொடுக்கவேண்டாம். நான் சில்லறைச் சங்கதிகள் லிமிடெட் கம்பெனியின் ஏஜெண்ட்.’ என்றான் வந்தவன்.

நான் கதவை மற்றோர் அரை அங்குலம் திறந்து ‘என்ன?’ என்று கேட்டேன்.

‘ஒவ்வொரு மாதமும் ஒரு சொற்பத் தொகையை நீங்கள் எங்களுடைய கம்பெனிக்குக் கட்டினால் போதும்.. உடனே எங்களுடைய கம்பெனி ஆட்கள் ஒருவன் மூலமாக உங்களுடைய சில்லறை விஷயங்களை எல்லாம் கவனித்துக் கொள்ளும். குழாயிலே ஜலம் வீணாகக் கொட்டாமல் அவ்வப்போது பார்த்துக் குழாயை மூடி, அநாவசியமாக எரியும் எலெக்ட்ரிக் விளக்குகளை அணைத்து, எண்ணெய் தேய்த்து ஸ்நானம் செய்பவர் மிகுதியாய் ‘வைத்துவிட்டு’ப் போகும் சீயக்காய் ஜலத்தை மோட்டார் டிரைவருக்குக் கை கழுவக் கொடுத்து, பல் தேய்க்கும் பேஸ்ட் உலர்ந்து போகாமல் அதனுடைய டியூப் மூடியைத் தேடிப் பார்த்து அதை எப்போதும் இறுக மூடிவைத்து, ஸோப்புக் கிண்ணத்தின் அடியில் தங்கும் ஜலத்தை வடித்து, வாடின வாழை இலைகளைப் பொறுக்கி முன்னால் செலவிற்கு எடுத்துக் கொடுப்பார்கள்’

‘இவ்வித தொண்டு செய்கிற கம்பெனி ஒன்று வேண்டியதுதான்’ என்றேன்.

உங்களுடைய வீட்டை ஒழுங்காக வைத்துக் கொள்வதற்கு வேண்டிய உதவியெல்லாம் நாங்கள் செய்யத் தயார். வீட்டில் மளிகை சாமான்கள் முற்றிலும் தீர்ந்து போவதற்கு இருபத்துநான்கு மணி நேரத்திற்கு முன்பே, புதுச் சரக்கு வாங்கி வைப்பதற்கு உத்தரவாதம் தருகிறோம். புருஷர்களின் வேஷ்டி, ஷர்ட்டு முதலியவைகளைக் கிரமமாக உபயோகிக்க எடுத்துக் கொடுத்து, ஜதையில் ஒன்று மாத்திரம் முன்னாடியே கிழிந்துவிடாமல் பார்த்துக் கொள்வோம். இது மெத்தை உறை, தலையணை உறைகளுக்கும் சேர்ந்ததாகும். நாளடைவில் எங்கள் கம்பெனியால் உங்களுக்கு ஏற்படும் பண லாபத்தைக் கவனித்தால், எங்கள் கம்பெனிக்குக் கொடுக்கும் சொற்பத் தொகையைப் பொருட்படுத்தமாட்டீர்கள். பெண்களுக்கு அவர்கள் பழைய ரவிக்கைகளைக் கண்டு அலுப்பு ஏற்படுவதற்கு இரண்டு நாள் முன்பாகவே அவற்றை எடுத்துத் தூர எறிந்து விடுவோம். சாவிக்கொத்தை அடிக்கடிப் பார்த்து உபயோகமற்ற சாவிகள் பல அதில் சேர்ந்து கனமாகிவிடாமல் பார்த்துக் கொள்வோம். எந்தச் சாவி அநாவசியமோ அதை உடனே எடுத்து எறிந்து விடுவோம்’

“அவ்விதம் செய்ய இதுவரை ஒருவரும் துணிந்ததே கிடையாதே!” என்றேன்.

“ஆமாம். மற்றும் நாங்கள் கவனிக்கும் சில்லறை விஷயங்களாவன: தினசரிப் பத்திரிகையின் பக்கங்களைச் சரியாகப் பார்த்து மடித்து வைப்போம். அஞ்சனப் பெட்டி, எண்ணெய் ஜாடி, நெய், சர்க்கரை ஜாடிகளை அவ்வப்போது பார்த்து மூடுவோம். அலமாரி, பீரோக்களின் கதவுகளை மூடுவோம்.. சீப்பில் தங்கும் மயிர், அழுக்கு முதலியவற்றை நீக்குவோம்..”

“ஆச்சரியமாயிருக்கிறதே! உங்களுடைய கம்பெனிக்கு மாதம் எவ்வளவு கட்டவேண்டும்?” என்று நான் கேட்டேன்.

“இத்துடன் இன்னும் முதல் கிளாஸ் மெம்பரானால் அதற்கு வேறு பிரத்யேகத் தொண்டு செய்வோம். அவை, உங்கள் வீட்டில் யாராவது உங்களைப் பார்க்கவந்தால் அச்சமயம் எங்களுடைய கம்பெனியின் ஆட்கள் ஒருவர் கூட இருப்பார். உங்களில் ஒருவர் ‘அன்றைக்கு நான் ஏதோ கேள்விப்பட்டேன்.. ..’ என்றாவது, ‘ஏதோ படித்தேனே.. ..’ என்றாவது சொல்லிவிட்டு, கேள்விப்பட்டதும், படித்ததும் என்னவென்று ஞாபகத்திற்கு வராமல் கஷ்டப்படும் சமயம், எங்கள் கம்பெனிக்காரர் உடனே, ‘நீங்கள் அன்றைக்குக் கேள்விப்பட்டது கோடி வீட்டுச் சுப்பம்மாளின் தம்பி மனைவிக்கு சீமந்தம் என்பதே’ என்றும், ‘நீங்கள் படித்தது முந்தாநாள் பத்திரிகையில் அடுத்தவாரம் சென்னையில் மழை அதிகமாயிருக்கும் என்ற செய்தியே’ என்றும் ஞாபகப்படுத்துவார்.”

“நிஜமாகவே இதெல்லாம் செய்வீர்களா?” என்று நான் கேட்டேன்.

“இது மாத்திரமா.. இன்னும் எவ்வளவோ செய்வோம். உங்கள் சிரமமெல்லாம் போய்விடும். சந்தோஷமாய், கவலையில்லாமல் ஜீவிக்கலாம்!” என்றான்.

நான் கதவை நன்றாகத் திறந்தேன். “உள்ளே வந்து உங்கள் கம்பெனியின் விலாசத்தையும் சந்தா விகிதத்தையும் உடனே சொல்லுங்கள்” என்றேன்.”

 

 


“தற்போது தினசரிகளில் வரும் ஹ்யூமர் பத்தியில்  யாராவது எழுதியிருப்பார். அதன் மொழிபெயர்ப்போ? என்றைக்கு வந்தது? யார் எழுதியது? நல்ல ஐடியாதான், இப்படி ஒரு கம்பெனி இருக்கிறதா என்ன?” என்றேன்.

“அம்மணி இது எழுதப்பட்டது 1940களில்”. என்றதும் “யார் தேவனா, கல்கியா, எஸ்விவி யா? என்றேன். இல்லை இது ஒரு பெண் எழுத்தாளர், பெயர் ரங்கநாயகி  என்று அவருடைய ஒரு போட்டோவுக்குச் சுட்டியும் அனுப்பியிருந்தார்.

1940களில் இந்தக் கட்டுரையை எழுதியவர் ஒரு பெண் என்றதும் ஆங்கிலக் கல்வி பயின்ற சரோஜினி நாயுடு போன்ற ஒரு உருவத்தைக் கற்பனை செய்திருந்த எனக்கு போட்டோவைப் பார்த்ததும் ஆச்சரியம், கொஞ்சம் அதிர்ச்சியும் கூடத்தான்.  ஒன்பதுகஜக் கைத்தறிப் புடவை, சாந்தமான முகம், ஒரு அன்பான அத்தை போல, அடுத்தவீட்டு மாமி போல.

kumudini

1905 –ம் ஆண்டு ஸ்ரீரங்கத்தில் பிறந்த ரங்கநாயகி, செல்வாக்கான குடும்பத்தில் பிறந்திருந்தபோதும், ஆசாரமான பிராம்மணக் குடும்பங்களில் பெண்களைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்புவதற்குத் தயங்கிய காலத்தில் பிறந்ததால், வீட்டிலேயே தமிழும் சமஸ்க்ருதமும் கற்பிக்கப்பட்டார். படிப்பில் அபாரமான ஆர்வமும் புத்திகூர்மையும் உள்ளவராய் இருந்தார் ரங்கநாயகி. ஆனால் அக்கால வழக்கப்படி 10 வயதில் மணமுடித்து வைக்கப்பட்டு 13 வயதில் புக்ககம் புகுந்து, பதினைந்து வயதில் தாயானவர். பெரிய குடும்பம், ஆசாரமான நியம நிஷ்டைகள் பூஜை பரம்பரைகள் உறவினர்கள் விருந்தாளிகள் என்று எப்பொழுதும் வீட்டு வேலை.

ரங்கநாயகியின் சொற்களில்:


“அப்பொழுதெல்லாம் உட்கார்ந்து படிப்பதற்கு என்று நேரம் ஒதுக்க முடியாது. எப்பொழுதும் வீட்டு வேலைதான். குழந்தைகள் கூட்டம்தான். கறிகாய் திருத்துவதும், அப்பளம் இடுவதும், பிரசாதத்தை பங்கீடு செய்வதுமாக நேரம் ஓடிக்கொண்டிருக்கும். அந்த நாட்களை நினைக்கும்போது பின்புறக் கூடத்தில் சதா ஆடிக்கொண்டிருந்த தொட்டில்களும், தூளிகளுமே என் கண்முன் தோன்றுகின்றன.”


எனினும் அரிதாய் கிடைத்த ஓய்வுநேரங்களிலும், இரவிலும் கணவர் மற்றும் தந்தை முலம் கிடைத்த புத்தகங்களை படித்துத் தன் மொழியாற்றலை வளர்த்துக் கொண்டார். வீட்டுக் குழந்தைகளுக்கு சாப்பாடு போடுகையில் கதை சொல்லும் அனுபவமே அவருக்கு ஒரு எழுத்துப்பட்டறை போலானது.

அன்பான குடும்பம், கணவர், இரண்டு குழந்தைகள் என்றிருந்த ரங்கநாயகிக்கு 22 வயதில்  காதுகேட்கும் திறன் குறைய ஆரம்பித்தது. இது முதலில் அவரை உள அளவில் பாதித்த போதும் பின் தடைகளை மீறி சாதிக்கும் அவருடைய இயல்பான குணத்தால் அவர் இன்னும் முனைப்போடு தன் படிப்பில் ஈடுபட்டதோடு எழுதவும் ஆரம்பித்தார்.

ஆசாரக் குடும்பத்துப் பெண் கதை எழுதுவதற்கு அவருடைய மாமியார் ஒப்பமாட்டார் என ரங்கநாயகியின் தந்தையார் அஞ்சினார். இத்தனைக்கும் அவருடைய சகோதரிதான். ஆகையால் முதலில் சில வருடங்களுக்கு இவர் கதைகள் பத்திரிகைகளில் வெளியாவது அவருடைய குடும்பத்தாருக்கே தெரியாது. கணவரும், தந்தையும் மட்டுமே அறிந்திருந்தனர். இலக்கிய இதழ்களுடன் கடிதப்போக்குவரத்து தந்தையின் விலாசத்தை உபயோகித்து நடந்துவந்தது. ஆனால் விஷயம் வெளியானபோது வீட்டில் எல்லோருக்கும் பெருமையே..sv-ws-logo copyதம் குடும்பத்தில் பரம்பரையாக வந்த  ஆச்சார நியமங்களில், பெண்களுக்கான கடமைகளில் மனப்பூர்வமாக ஈடுபட்டவர் என்றாலும், இவருடைய சிந்தனை பிற்போக்கானதாகவோ பழமையானதாகவோ இருக்கவில்லை. பெண் கல்வி, பெண் சுதந்திரம் போன்றவற்றின் அவசியத்தை வலியுறுத்தி எழுதியவர். இவரே அவற்றுக்கு உதாரணமாக தன் சுயமுயற்சியாலேயே பலமொழிப் புத்தகங்களையும் படித்து தன் அறிவையும், உலகஞானத்தையும் வளர்த்துக் கொண்டவர். இவருடைய சூழலையோ, பள்ளிப்படிப்பின்மையையோ, காது கேளாமையையோ தன் சுயமுன்னேற்றத்துக்கு ஒரு தடையாகவே இவர் கருதவில்லை. இவரது கதைகளிலும் கட்டுரைகளிலும் பெண்கள் அறியாமையினின்று தம்மை விடுவித்து சுதந்திரம் பெற வேண்டியதின் அவசியத்தை சமயம் கிடைக்கும் போதெல்லாம் வற்புறுத்தி வந்தார். அவர் தாய்மையைப் போற்றுபவர் என்றாலும், அதுவே பல சமயங்களில் பெண்களின் விடுதலைக்கும் முன்னேற்றத்துக்கும் தடையாகிவிடுகிறது என்பதை அவர் மறுக்கவில்லை. இந்த நிலையை மாற்ற தாய்மை, பெண்மை என்று பெண்ணுக்கென விதிக்கப்பட்டப் பொறுப்புக்களை விட்டுக்கொடுக்காமலேயே ஒரு பெண் அறிவுஜீவியாக, ஆற்றல் நிறைந்தவளாக , தேசத்துக்கு ஒரு நல்ல பிரஜையாகத் தன்னை உயர்த்திக் கொள்ள முடியும், வேண்டும் என்பதை அவரது எழுத்துக்களில் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.  அவற்றுக்கு ஒரு உதாரணமாகவும் வாழ்ந்தார்.

இந்தி மொழியிலிருந்து இவர் மொழிபெயர்த்த தாகூரின் யோகாயோக் என்ற நாவல் ஆனந்தவிகடனில் வெளியானது. வாழ்வின் உயர் லட்சியங்களை மதிக்கும் மென்மையான பெண் குமுதினி. இவள் கணவனோ பணத்தை மதிப்பவன், தன் பணபலத்தில் கர்வம் உடையவன். குடும்பப்பகை காரணமாய் சாட்டர்ஜி குடும்பத்தை பழி வாங்குவதற்காக தன் பணபலத்தால் குமுதினியை மணந்து அவள் உணர்வுகளைச் சற்றும் மதிக்காமல் அவளையும் தன் உடைமைகளில் ஒன்று என்பதுபோல் கருதுபவன். இவற்றுக்கும் மேல் குடி, பிற பெண்களுடன் (ஏன் தன் அண்ணியுடனேயே) தொடர்பு போன்ற வெறுக்கத்தக்க பழக்கங்கள் உடையவன். இத்தகையவனை விட்டு ஒரு கட்டத்தில் குமுதினி பிரிய முயன்றாலும் அவனுடைய குழந்தையைக் கருவுற்றிருப்பதால் அவனுடனே போய் வாழ வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகிறாள். ஒரு பெண்ணுக்கு தைரியம், தெய்வபக்தி, உழைப்பு இவை அனைத்தும் இருப்பினும் சமூகக் கட்டுப்பாடுகள், இயற்கையின் விதி இவை அவள் விரும்பும் வாழ்வுக்கு, அவளின் விடுதலைக்குக் குறுக்கே நிற்கின்றன என்ற கதையின் கரு ரங்கநாயகியை மிகவும் பாதித்திருக்க வேண்டும். அக்கதையை திறமையாய் மொழிபெயர்த்துத் தமிழ் வாசகர்களுக்கு அளித்தார். அதுவரை காதம்பரி, நந்தினி என்ற பெயர்களில் எழுதியவர் இந்த மொழிபெயர்ப்புக்குப் பின் அந்நாவலின் கதாநாயகியான குமுதினி என்ற புனைப்பெயரிலேயே எழுத ஆரம்பித்தார்.

இவரே எழுதி வெளியான ஒரு தொடர்கதை திவான் மகள். இது பெற்றோர் எதிர்ப்புடன் கலப்புத் திருமணம் செய்த ஒரு பிராம்மணப் பெண்ணைப் பற்றிய கதை. எழுதியது 1940களில். குடும்பத்திலேயே இதற்கு எதிர்ப்பு இருந்திருக்கும். ஆயினும் அன்றைய பிராம்மண சமூகத்தில் நிலவி வந்த குழந்தைத் திருமணம், பெண்களின் ஆர்வங்களையும் அவரது அறிவு விருத்தியையும் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல் நிச்சயிக்கப்பட்ட திருமண முறைகள் இவை எல்லாம் அவருக்குப் பிடிக்கவில்லை. அதை வெளிப்படையாக இப்படிப் பதிவும் செய்தார். சொன்னதுடன் நிற்காமல் பிற்காலத்தில் அவரது பேரன் ஒரு கிருத்துவப் பெண்னை மணந்த போது அதை முழுமனதோடு ஏற்றுக்கொண்டார்.

இப்படிப்பட்ட சிந்தனைகள் இவருக்கு வரக் காரணம் இவருடைய தேசப் பற்றும், காந்தியடிககள் மேலிருந்த பற்றும். 1930-ல் உப்பு சத்தியாக்கிரகத்தின் போது ரங்கநாயகியும், அவரது கணவரும் கதராடையே அணிவது என்று தீர்மானித்தனர். இதைக் குமுதினி இறுதிவரை கைவிடவில்லை. இதில் குறிப்பிடப்படவேண்டிய விஷயம் இவருடைய மாமனார் ராவ்பகதுர் பட்டம் பெற்றவர். அவர்கள் வீட்டு முகப்பிலேயே பிரிட்டிஷ் சின்னம் பதிக்கப்பட்டிருந்தது. ஆயினும், குமுதினிக்கு இவையெல்லாம் தாம் நம்புவதில் முழுமனதோடு ஈடுபட ஒரு தடையாகவே இருக்கவில்லை. தனது கொளகைப்படி 25ம் வயதிலிருந்து இறுதி வரை கதராடையே அணிந்து வந்தார். கைக்குத்தலரிசி, ராட்டையில் நூல் நூற்பது, கதராடை அணிவது என்பவை இவரது வாழ்க்கைமுறைகள் ஆயின. தேசபக்தியும், காந்தீயமும் அவரது எழுத்துக்களிலும் பெரும்பங்கு வகித்தன. ஏற்கனவே தமிழ், ஆங்கிலம் மற்றும் சமஸ்க்ருதத்தில் தேர்ந்திருந்தவர், காந்திய தாக்கத்தால் இந்தியும் கற்றுத் தேர்ந்தார்.

காந்தியிடம் கொண்ட ஈடுபாட்டின் காரணமாக மூன்று முறை வார்தா ஆசிரமம் சென்றிருக்கிறார். காந்தியடிகள் குமுதினியைத் தன் பெண் என்றே குறிப்பிடுவாராம். பெரும் அரசியல் தலைவர்களே காந்தியடிகளின் ஆன்மபலத்தில் ஆகர்ஷிக்கப்பட்டு அவர்முன் வாயடைத்துப் போகையில், நாட்டின் தெற்குமூலையில் ஒரு சிறு ஊரில் இருந்த பெண்ணுக்கு அவரிடம் இருந்த உரிமையைப் பாருங்கள்! ஏதோ ஒரு விஷயத்தில் காந்தியடிகள் சொன்னதை ஏற்காத குமுதினி கோபமாய் “ பின் என்ன காந்தாரியைப் போல் கண்ணைக் கட்டிக்கொண்டு இருக்கச் சொல்கிறீர்களா?” என்று பதில் எழுதினாராம். அதற்கு காந்தியடிகள் தமக்கே உரிய அமைதியுடனும் பொறுமையுடனும் 13. 12.1940ல் எழுதிய கடிதத்தை ரங்கநாயகியின் மருமகள் Dr.பிரேமா நந்தகுமார் நம்முடன் பகிர்கிறார்:


“என் அன்புள்ள ரங்கநாயகி,

நீ.எழுதுவது புரிகிறது. மெச்சுகிறேன். மகாபாரதத்தில் வருவதை எல்லாம் அப்படியே எடுத்துக் கொள்ளக் கூடாது. தன் கண்களை உபயோகிப்பதன் மூலம் காந்தாரியால் தன் கணவனுக்கு நிச்சயம் உயர்ந்த சேவை செய்திருக்க முடியும். அதனால் கண்ணைக் கட்டிக் கொள்வதை ஒரு உருவகமாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்….பதி சேவை என்றால் குருட்டு வழிபாடல்ல, தன் கணவன்மார்கள் பலகீனர்களாக முழித்தபோது, திரௌபதி அவர்களைக் கோபித்தாள் அல்லவா? – அன்பு பாபு.”


குமுதினியின் காது கேளாமையைப் பற்றிக் கவலைப்பட்ட பாபு அதற்காக பல வைத்திய முறைகளையும் சொல்வாராம். எப்படிப்பட்ட உயரிய நட்பு, இதற்குத் அவரைத் தகுதியாக்கியவை ரங்கநாயகியின் அறிவும், சீலமும், நாட்டுப்பற்றும்.

காந்தியடிகளின் மறைவால் மிகவும் பாதிக்கப்பட்டு வார்தாவுக்குச் சென்று அஞ்சலி செலுத்தி வந்த உடனேயே, கைவிடப்பட்ட பெண்களுக்கும் கைம்பெண்களுக்கும் சேவை செய்வதற்காக திருச்சி சேவா சங்கத்தை ஆரம்பித்தார். தையல் தட்டச்சு வகுப்புகள் தவிர ஒரு ஆங்கிலவழிக் கல்விப் பள்ளியையும் ஆரம்பித்து நடத்தினார். அதற்கு நிதி திரட்ட நாடகங்களும் எழுதியிருக்கிறார்.

பயணங்களில் ஆர்வமுள்ள அவர் பல நாடுகளுக்கும் சென்று வந்ததைப் பற்றிப் பயணக்கட்டுரைகளும் எழுதியிருக்கிறார். போன இடங்களின் சரித்திரம், கலாச்சாரம், தம் மனதில் எழுப்பிய எண்ணங்கள் இவற்றை தமக்கே உரிய நகைச்சுவை உணர்வுடன் பதிவு செய்திருக்கிறார். ஒருமுறை உறவினர் பெண்மணிகளை இலங்கைக்கு அழைத்துப் போக பாஸ்போர்ட் ஏற்பாட்டிலிருந்து எல்லாப் பொறுப்பையும் ஏற்றுத் தலைமைதாங்கி அழைத்துப் போன அனுபவத்தைப் பதிவு செய்கையில் இப்படி எழுதுகிறார்:


“பிரயாணம் தொடங்கியது முதல் ரசமான பேச்சு. ஒரே விஷயத்தைப் பற்றின பேச்சு: என்ன என்ன சாமான்கள் வாங்குவது, வீட்டில் இருக்கும் யார் யாருக்கென்று என்ன வாங்கி வருவது என்பதே. ஆசியா, ஐரோப்பா, இரண்டு கண்டங்களில் செய்யப்படும் பண்டங்கள் அனைத்தும் கொழும்பில் வந்து குவிகின்றன. இவைகளைப் பார்க்கப் போகிறோம் என்று நினைக்கையிலேயே எல்லோருடைய கண்களும் பளபளவென்று ஒளி பெற்ற கண்களாயின”.


மூன்றே வாக்கியங்கள்தான். அவற்றிலேயே பெண்களின் உளவியல், அதைப் பற்றிய ஒரு சுய எள்ளல், சம்பவத்தில் இழையோடும் முரண்நகை, அவற்றோடு அன்றைய காலக்கட்டத்தில் அந்நியப் பொருள்களின் மேலிருந்த மோகம் அனைத்தையும் அநாயாசமாகக் கைப்பற்றிவிடுகிறார்.

வார்தா ஆசிரமத்துக்குப் போன ஒரு அனுபவப் பதிவில்:


FREEDOM FIGHTER TRICHY P.R.RATHINAVEL THEVAR BIOGRAPHY

 

FREEDOM FIGHTER TRICHY  P.R.RATHINAVEL THEVAR  BIOGRAPHY



திருச்சி P.R.ரத்தினவேல் தேவர்

சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத் தியாகிகள்.

44. திருச்சி P.R.ரத்தினவேல் தேவர்.

தொகுப்பு: வெ. கோபாலன்.



திருச்சி நகருக்கு அடையாளச் சின்னங்களாக விளங்கும் மலைக்கோட்டை, தெப்பக்குளம் போன்ற பல இடங்களில் 'தேவர் ஹாலும்' ஒன்று. பழைமை வாய்ந்த அந்த அரங்கம் இப்போது புதுப்பித்து கட்டப்பட்டுள்ளது. முன்பு அதில் நடைபெறாத நாடகங்களோ, பொதுக்கூட்டங்களோ இல்லையெனலாம். நவாப் ராஜமாணிக்கம் இங்கு முகாமிட்டிருந்த காலத்தில் இங்குதான் அவரது நாடகங்கள் நடைபெற்றன. பிரச்சினைக்குரிய எம்.ஆர்.ராதாவின் நாடகங்களும் இங்குதான் நடைபெற்றன. இது ஒரு சரித்திர முக்கியம் வாய்ந்த இடமாக இருந்தது. அது சரி! இந்த 'தேவர் ஹால்' என்பது எவர் பெயரால் அப்படி அழைக்கப்படுகிறது. அவர்தான் திருச்சியில் நகர்மன்றத் தலைவராகவும், ஜில்லா போர்டு தலைவராகவும், புகழ்மிக்க காங்கிரஸ் தலைவராகவும் விளங்கிய பி.ஆர்.ரத்தினவேல் தேவர் பெயரால் அழைக்கப்படும் இடம் இது.


'தேவர்' என்ற இவரது பெயரையும், இவருக்கு அன்று திருச்சியில் இருந்த செல்வாக்கையும், மக்கள் ஆதரவையும் பார்க்கும்போது ஒரு ஆஜானுபாகுவான முரட்டு தலைவரை கற்பனை செய்து கொள்ளத் தோன்றுகிறதல்லவா? அதுதான் இல்லை. இவர் மெலிந்த உடலும், வைர நெஞ்சமும், மனதில் இரும்பின் உறுதியும் ஆண்மையும் நிறைந்த ஒரு கதாநாயகன் இவர். இப்போது திருச்சியில் இவருக்கு நிறுவப்பட்டுள்ள சிலையைப் பார்க்கும்போதுதான் நம் கற்பனை சிதறிப் போகிறது. இவ்வளவு சிறிய ஆகிருதியை வைத்துக் கொண்டா அவர் அன்று திருச்சியை மட்டுமல்ல, தமிழக அரசியலையே ஒரு கலக்கு கலக்கினார் என்ற எண்ணம் தோன்றுகிறது.


பி.ஆர். தேவர் என்று அழைக்கப்படும் அந்த ரத்தினவேல் தேவர் திருச்சியின் ஒரு பகுதியான உறையூரில் வசித்து வந்தார். இவரது அரசியல் பிரவேசத்துக்குப் பின் அதிகம் வெளியில் தெரியாவிட்டாலும், உள்ளூர் அளவில் திருச்சி முனிசிபாலிடியில் அதன் தலைவராகவும் ஆகியிருந்தார். 1933இல் மகாத்மா காந்தியடிகள் திருச்சிக்கு விஜயம் செய்தார். அப்போது அவருக்கு திருச்சி நகர் மன்றத்தின் சார்பாக ஒரு வரவேற்புக்கு தேவர் ஏற்பாடு செய்தார். பிரிட்டிஷ் ஆட்சிக்குட்பட்ட நகர்மன்றம் மகாத்மாவுக்கு வரவேற்பளிப்பதை ஆளும் வர்க்கமும் அதன் ஜால்ராக்களான ஜஸ்டிஸ் கட்சியும் கடுமையாக எதிர்த்தன. அந்த எதிர்ப்பையெல்லாம் முறியடித்து தேவர் அளித்த வரவேற்பு அவரது துணிச்சலை வெளிக்காட்டியது. அந்தக் காலத்தில் திருச்சி நகரம் குடி தண்ணீர் வசதியின்றி மிகவும் சிரமப்பட்ட காலம். தேவர் மிகத் திறமையோடு திருச்சியின் குடிநீர் பிரச்சினைக்கு ஒரு தீர்வு கண்டதோடு மக்களின் பேராதரவையும் பெற்றார். இவரது இந்த செயல்பாட்டை அப்போதிருந்த மாநில நீதிக்கட்சி அரசாங்கம் எதிர்த்தது. மக்களின் துணையோடு அவர் அரசாங்கத்தின் எதிர்ப்பையும் மீறி செயல்பட்டு புகழ் பெற்றார்.


அநீதிக்குத் தலைவணங்குவது என்பது தேவரின் அகராதியிலேயே கிடையாது. இதன் காரணமாக இவர் பல நெருக்கடிகளைச் சந்திக்க நேர்ந்தது. மகாத்மா காந்தி துவக்கிய தனி நபர் சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டதற்காக இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அப்படியொரு முறை இவர் தஞ்சாவூர் சிறையில் இருந்த போது நடந்த ஒரு நிகழ்ச்சியை அப்போது சிறை அதிகாரியாக இருந்த கோபாலகிருஷ்ண நாயுடு என்பவர் ஒரு கட்டுரையில் விவரித்திருக்கிறார்.


தேவர் தஞ்சாவூர் சிறையில் இருந்த காலத்தில் அங்கு ராஜாஜி போன்ற பல பெரிய தலைவர்களும் இருந்திருக்கிறார்கள். ஒவ்வொருநாளும் சிறை அதிகாரி பேரேடு நடத்தும்போது கைதிகள் தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருக்குமானால் தங்கள் கையை முன்புறம் நீட்டவேண்டும். உடனே அதிகாரி அவரிடம் விசாரிப்பார். அதுபோல ஒருமுறை ராஜாஜி அவர்கள் தன் கையை நீட்டவும், ஜெயிலராக இருந்த ஒரு வெள்ளைக்கார அதிகாரி அவர் கையைத் தன் கைத்தடியால் தட்டிவிட்டு அவரை கேவலமாகவும் பேசிவிட்டான். அப்போது அவரோடு உடன் இருந்த தேவருக்கு தாங்க முடியாத ஆத்திரம் வந்து விட்டது. அந்த அதிகாரி மீது பாய்ந்து தாக்க முயன்றபோது ராஜாஜியும் மற்றவர்களும் தடுத்து விட்டனர். பிறகு சில ஆண்டுகள் கழிந்தபின் ராஜாஜி சென்னை மாகாண பிரதான அமைச்சராக பதவி ஏற்றார். அப்போது அவர் திருச்சிக்கு விஜயம் செய்து பி.ஆர்.தேவர் அவர்கள் இல்லத்தில் தங்கி இருந்தார். பல அரசாங்க அதிகாரிகளும் முதலமைச்சரை அங்கு வந்து சந்தித்தனர். அப்போது திருச்சி சிறையின் உயர் அதிகாரியாக இருந்தவர் முன்பு தஞ்சாவூரில் ராஜாஜியை அவமரியாதை செய்த வெள்ளைக்கார அதிகாரி. அவரும் ராஜாஜி கூப்பிட்டு அனுப்பியிருந்ததால் பார்க்க வந்திருந்தார். அவர் மனதில் ராஜாஜி பழைய நிகழ்ச்சியை மனதில் வைத்துக் கொண்டு தன்னை பழிவாங்கி விடுவாரோ என்ற பயத்தில் இருந்தார். இறுதியாக அந்த வெள்ளை அதிகாரி அழைக்கப்பட்டார். அவர் ராஜாஜியின் முன்பு வந்தபோது ராஜாஜி எதுவுமே நடைபெறாதது போல, சிறையில் செய்ய வேண்டிய சில சீர்திருத்தங்களைச் சொல்லி அவற்றையெல்லாம் செய்து வசதி செய்து கொடுக்கும்படி சொல்லிவிட்டு, நீங்கள் போகலாம் என்றார். அதிகாரிக்கு ஏமாற்றம். முன்பு நடந்த நிகழ்ச்சி பற்றி நினைவில் இருப்பது போல கூட காட்டிக் கொள்ளவில்லையே என்று வெளியே வந்து ராஜாஜியின் பெருந்தன்மையை புகழ்ந்து தள்ளினாராம். அன்று அவரை அடிக்கப் பாய்ந்த பி.ஆர்.தேவர் இந்த நிகழ்ச்சியின் மூலம் ராஜாஜி, அந்த அதிகாரிக்கு தான் அடித்திருந்தால் ஏற்பட்டிருக்கக்கூடிய வலியைக் காட்டிலும் அதிகமாகவே கொடுத்ததாக நினைத்து மகிழ்ந்தாராம். இப்படியொரு செய்தி அவரைப் பற்றி. இவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நெருங்கிய நண்பராகவும் விளங்கினார். வாழ்க பி.ஆர்.தேவரின் புகழ்!

POSTED BY THANJAVOORAAN AT 6:43 AM 0 COMMENTS   

FREEDOM ,FIGHTER ,VEDARANYAM , K.VAIRAPPAN, BIOGRAPHY

 


FREEDOM FIGHTER ,VEDARANYAM , K.VAIRAPPAN BIOGRAPHY


வேதாரண்யம் தியாகி வைரப்பன்

சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத் தியாகிகள்.

46. வேதாரண்யம் தியாகி வைரப்பன்.

தொகுப்பு: வெ. கோபாலன்.



1930 ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி தமிழ் வருஷப் பிறப்பு நாளன்று திருச்சியில் டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜன் இல்லத்திலிருந்து ராஜாஜி தலைமையில் சுமார் நூறு தொண்டர்கள் கிளம்பி பதினைந்து நாட்கள் நடைப் பயணம் செய்து வேதாரண்யம் சென்றடைந்து அங்கே அகஸ்தியம்பள்ளி எனும் இடத்தில் உப்பு எடுத்து, மகாத்மா காந்தியடிகள் தண்டியில் செய்த உப்பு சத்தியாக்கிரகத்தை இங்கே தமிழ்நாட்டில் அரங்கேற்றிய நிகழ்ச்சி அனைவருக்கும் தெரிந்திருக்கும். அதில் ராஜாஜி, சந்தானம், சர்தார் வேதரத்தினம் உள்ளிட்ட ஏராளமான தலைவர்களும் தொண்டர்களும் போலீஸ் அடக்குமுறைக்கு ஆளாகி புளியம் மிளாறினால் அடிபட்டு, உதைபட்டு சிறை சென்று செய்த தியாகம் வரலாற்றின் ஏடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இப்படி இவர்கள் ஒருபக்கம் உப்பு சத்தியாக்கிரகப் போர் நடத்தினார்கள் என்றால், சாதாரண பொதுமக்கள் நேரடியாக இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லையாயினும், தங்கள் சக்திக்கு உட்பட்டு ஆங்கில ஏகாதிபத்திய ஆட்சிக்கும், அவர்களது அடக்குமுறைகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கே சில அரிய காரியங்களையும் செய்திருக்கிறார்கள். அப்படிப் பட்ட நிகழ்ச்சிகளில் வேதாரண்யத்தில் நாவிதராக இருந்த ஓர் இளைஞர் செய்த அரிய காரியமும், அதன் விளைவாக அவர் சிறை சென்று தியாகியான விதமும் சற்று வித்தியாசமானது, ஏன்? வேடிக்கையானதும் கூட. அந்த நிகழ்ச்சியை இப்போது பார்ப்போம்.


வேதாரண்யம் புகழ்மிக்க புண்ணிய ஸ்தலம். இங்குள்ள ஆலயத்தில் அடைபட்டுக் கிடந்த கதவை பார்வதி தேவியாரின் தாய்ப்பால் அருந்திய திருஞானசம்பந்த சுவாமிகள் திருப்பதிகம் பாடி திறந்த வரலாறு அனைவருக்கும் தெரியும். திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் ஒருசேர இத்தலத்துக்கு விஜயம் செய்து பாடியிருக்கிறார்கள்.


அதுமட்டுமல்ல தாயுமானவ சுவாமிகளின் எட்டாவது வாரிசாக வந்த சர்தார் வேதரத்தினம் பிள்ளை ஏற்பாடு செய்து அவ்வூரில் உப்பு சத்தியாக்கிரகம் நடைபெற்றது. வேதரத்தினம் பிள்ளையின் குடும்பத்தாருக்கும், ஊரில் பலருக்கும் முடிவெட்டும் நாவிதராக வைரப்பன் என்றொரு இளைஞர் இருந்தார். இவருக்கு பிள்ளை அவர்களின் மீது மரியாதை, அன்பு, ஏன் பக்தி என்றுகூட சொல்லலாம். அப்படிப்பட்ட மரியாதைக்குரிய பிள்ளை அவர்களை போலீசார் கைவிலங்கு கால் விலங்கிட்டு வீதி வழியே இழுத்துச் சென்ற காட்சியைக் கண்டு ஊரே அழுதது. பிள்ளை அவர்களின் மனைவியும், அவரது ஒரே மகனான அப்பாக்குட்டி குழந்தையாக இருந்து இந்த காட்சியைக் கண்டு வருந்தியிருக்கிறார்கள்.





போலீசார் விலங்கிட்டு வேதரத்தினம் பிள்ளையைத் தெருவோடு அழைத்துச் செல்வதைப் பார்த்து அக்கம்பக்கத்துப் பெண்கள், பிள்ளையவர்களின் மனைவியிடம் ஓடிச்சென்று, ஐயோ, ஐயாவை இப்படி அடித்து இழுத்துச் செல்கிறார்களே அண்ணி, நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களே என்று அலறி அழுதனர். கையில் மகன் அப்பாக்குட்டியை வைத்துக் கொண்டு இந்த காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த அந்த பெருமைக்குரிய தாய், ஐயா என்ன குற்றம் செய்தார்? திருடினாரா, பொய் சொன்னாரா? இல்லையே. இந்த நாட்டு ஜனங்கள் எல்லோரும் சுதந்திரம் பெற வேண்டுமென்றுதானே போராடினார். இதோ இழுத்துச் செல்கிறார்களே இந்த போலீஸ்காரர்களுக்கு உட்பட. பிறகு நான் ஏன் வருத்தப்பட வேண்டும் என்று 'வந்தேமாதரம்' என்று முழங்க, இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டிருந்த குழந்தையும் எல்லாம் தெரிந்தது போல கையைத் தூக்க, அத்தனைப் பெண்களும் ஒருமுகமாக வந்தேமாதரம் என்று முழங்கினர். பிள்ளை அவர்களிடம் பக்தி விஸ்வாசம் கொண்ட நாவிதர் வைரப்பன் இந்தக் காட்சியைக் கண்டு உள்ளம் கொதித்து, ஆத்திரமடைந்து, இந்த வெள்ளை அரசாங்கத்துக்கும், அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டிருக்கும் போலீசாருக்கும் ஏதாவதொரு வகையில் பாடம் கற்பிக்க வேண்டுமென்று மனதில் உறுதி பூண்டார். அதை உடனே செயல் படுத்தவும் துணிந்தார்.


போராடவும், கோஷம் போட்டு போலீசாரின் தடியடிக்கு ஆளாகி சிறைக்குச் செல்லும் நூற்றுக் கணக்கான தொண்டர்களின் தியாகம் இவரையும் போராடத் தூண்டியது. இவர் ஓர் சபதம் மேற்கொண்டார். தனது தொழிலை போலீசாருக்கோ, அடக்குமுறைக்கு துணை போகும் அரசாங்க அதிகாரிகளுக்கோ செய்வதில்லை, அதாவது அவர்களுக்கு சவரம் செய்வதில்லை என்று உறுதி பூண்டார். அதை மிகக் கட்டுப்பாட்டோடு கடைபிடிக்கவும் செய்தார். அது போராட்ட காலமல்லவா? வெளியூரிலிருந்து பல போலீஸ்காரர்கள் பணியின் நிமித்தம் அவ்வூருக்கு வந்திருந்தனர். அப்படி முகம் தெரியாத ஒரு புதிய போலீஸ்காரர் சாதாரண உடையில் வந்து வைரப்பனிடம் முகச் சவரம் செய்து கொள்ள விரும்பினார். வைரப்பனும் அவரைப் பலகையில் உட்கார வைத்து முகத்தில் நீர் தடவி, சோப்பின் நுரை போட்டு கத்தியைத் தீட்டி பாதி சவரம் செய்து கொண்டிருந்தார். அந்த நேரம் பார்த்து வைரப்பனுக்குத் தெரிந்த ஒரு நபர் அங்கு வந்தார். அவர் சும்மாயிராமல், "என்ன வைரப்பா! போலீஸ்காரங்களுக்கு சவரம் செய்ய மாட்டேன்னு சத்தியம் பண்ணியிருந்தியே! இப்போ என்ன ஆச்சு? போலீஸ்காரர் ஒருவருக்கு சவரம் செய்து கொண்டிருக்கியே!" என்று கேட்டு விட்டார்.




வைரப்பனுக்கு அதிர்ச்சி. உடனே எழுந்து கொண்டார். "ஐயா! நான் உங்களுக்கு முகச் சவரம் செய்ய முடியாது. நீங்கள் வேறு இடம் பாருங்கள்" என்று சொல்லிவிட்டார். பாதி முகச் சவரம் செய்துகொண்ட நிலையில் முகத்தில் சோப் நுரையுடன் நிற்கும் அந்த போலீஸ்காரர் கெஞ்சிப் பார்த்தார். வைரப்பன் அசைந்து கொடுக்கவில்லை. தன் போலீஸ் தோரணையில் மிரட்டிப் பார்த்தார். அதற்கும் வைரப்பன் அஞ்சவில்லை. "என்னால் செய்ய முடியாது, நீங்கள் என்ன வேணுமானாலும் செய்து கொள்ளுங்கள்" என்று சொல்லிவிட்டார். ஆத்திரமடைந்த போலீஸ்காரர் வைரப்பனை கைப்பிடியாக அழைத்துக் கொண்டு போய் அவர் மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் நிறுத்தினார். வழக்கை விசாரித்த நீதிபதி "தம்பி! ஒழுங்காக அந்த போலீஸ்காரருக்கு மீதி சவரத்தையும் செய்துவிடு! இல்லாவிட்டால் தண்டிக்கப் படுவாய்" என்றார்.


வைரப்பனுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. தான் மேற்கொண்ட விரதம் சந்திக்கு வந்து விட்டது. இது எல்லோருக்கும் தெரிந்து விட்டது என்பது ஒரு புறம். மற்றொரு புறம் தனது எஜமான் வேதரத்தினம் பிள்ளையவர்கள் "வைரப்பா! நீயெல்லாம் போராட்டத்தில் கலந்து கொண்டால், உன்னைப் பிடித்து ஜெயிலில் போட்டு விடுவார்கள். அப்புறம் உன்னை நம்பியிருப்பவர்கள் திண்டாடுவார்கள், நீ வெளியே இருந்து கொண்டு உன்னால் முடிந்த ஆதரவைக் கொடுத்துக் கொண்டிரு" என்று சொல்லியிருந்தாரே, இப்போது தானும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு நீதிபதியின் முன்பு நிற்கிறோமே என்று மகிழ்ச்சி.


நீதிபதியைப் பார்த்து வைரப்பன் சொன்னார், "ஐயா! எஜமானே! போலீஸ்காரருக்கு மிச்சம் சவரத்தை நம்மாலே செய்ய முடியாதுங்க! அப்படி செய்துதான் ஆகணும்னா, ஐயாவே செய்து விட்டுடுங்க!" என்று சொல்லிக் கொண்டே தனது சவரச் சாதனங்கள் கொண்ட தகரப் பெட்டியை நீதிபதியின் மேஜை மீது வைத்து விட்டார். கோர்ட்டே கொல்லென்று சிரித்தது. நீதிபதிக்கு வந்ததே கோபம். வைரப்பனுக்கு ஆறுமாத சிறை தண்டனை விதித்து தீர்ப்புக் கூறிவிட்டார். வைரப்பனுக்கு ஏக மகிழ்ச்சி. தானும் போராடி ஜெயிலுக்குப் போகப் போகிறோம். நம் தலைவர் பிள்ளை அவர்களை அவமானப் படுத்திய இந்த போலீஸ்காரர்களுக்கும் அதிகாரிகளுக்கும் நல்லதொரு பாடம் புகட்டி விட்டோம் என்ற மகிழ்ச்சி. அவர் அப்போது இளைஞர்தான், பிறகு சிறை வாசம் முடித்து வெளியே வந்து தியாகி வைரப்பன் என்று மற்றவர்களால் அழைக்கப்பட்டு நீண்ட காலம் உயிரோடு இருந்தார். அவர் வாழ்நாள் முழுவதும் அவரிடம் இந்த நிகழ்ச்சி பற்றி கேட்டு விட்டால் போதும். அவர் உற்சாகம் கரைபுரண்டு ஓட அதை வர்ணிப்பார். தானும் தன் தலைவரைப் போல ஜெயிலுக்குப் போய் தியாகியாகி விட்டதைச் சொல்லிச் சொல்லி மகிழ்ச்சியடைந்தார். ஸ்ரீ இராமபிரானுடைய அணை கட்டும் பணியில் உதவியதாகச் சொல்லப்படும் அணில் போல தானும் இந்த நாட்டு விடுதலைப் போரில் தன் பங்கைச் செலுத்திவிட்ட மகிழ்ச்சி அவருக்கு. அவருடைய நூற்றாண்டு விழா சமீபத்தில் வேதாரண்யத்தில் நடைபெற்றது. அவரது தியாகத்தை நினைவுகூரும் வகையில் வேதாரண்யத்தில் அவருக்கு ஓர் நினைவுத் தூண் நிறுவப்பட்டிருக்கிறது. வாழ்க தியாகி வைரப்பன் புகழ்!



வேதாரண்யம் தியாகி வைரப்பன்

1930 ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி தமிழ் வருஷப் பிறப்பு நாளன்று திருச்சியில் டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜன் இல்லத்திலிருந்து ராஜாஜி தலைமையில் சுமார் நூறு தொண்டர்கள் கிளம்பி பதினைந்து நாட்கள் நடைப் பயணம் செய்து வேதாரண்யம் சென்றடைந்து அங்கே அகஸ்தியம்பள்ளி எனும் இடத்தில் உப்பு எடுத்து, மகாத்மா காந்தியடிகள் தண்டியில் செய்த உப்பு சத்தியாக்கிரகத்தை இங்கே தமிழ்நாட்டில் அரங்கேற்றிய நிகழ்ச்சி அனைவருக்கும் தெரிந்திருக்கும். அதில் ராஜாஜி, சந்தானம், சர்தார் வேதரத்தினம் உள்ளிட்ட ஏராளமான தலைவர்களும் தொண்டர்களும் போலீஸ் அடக்குமுறைக்கு ஆளாகி புளியம் மிளாறினால் அடிபட்டு, உதைபட்டு சிறை சென்று செய்த தியாகம் வரலாற்றின் ஏடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இப்படி இவர்கள் ஒருபக்கம் உப்பு சத்தியாக்கிரகப் போர் நடத்தினார்கள் என்றால், சாதாரண பொதுமக்கள் நேரடியாக இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லையாயினும், தங்கள் சக்திக்கு உட்பட்டு ஆங்கில ஏகாதிபத்திய ஆட்சிக்கும், அவர்களது அடக்குமுறைகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கே சில அரிய காரியங்களையும் செய்திருக்கிறார்கள். அப்படிப் பட்ட நிகழ்ச்சிகளில் வேதாரண்யத்தில் நாவிதராக இருந்த ஓர் இளைஞர் செய்த அரிய காரியமும், அதன் விளைவாக அவர் சிறை சென்று தியாகியான விதமும் சற்று வித்தியாசமானது, ஏன்? வேடிக்கையானதும் கூட. அந்த நிகழ்ச்சியை இப்போது பார்ப்போம்.


வேதாரண்யம் புகழ்மிக்க புண்ணிய ஸ்தலம். இங்குள்ள ஆலயத்தில் அடைபட்டுக் கிடந்த கதவை பார்வதி தேவியாரின் தாய்ப்பால் அருந்திய திருஞானசம்பந்த சுவாமிகள் திருப்பதிகம் பாடி திறந்த வரலாறு அனைவருக்கும் தெரியும். திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் ஒருசேர இத்தலத்துக்கு விஜயம் செய்து பாடியிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல தாயுமானவ சுவாமிகளின் எட்டாவது வாரிசாக வந்த சர்தார் வேதரத்தினம் பிள்ளை ஏற்பாடு செய்து அவ்வூரில் உப்பு சத்தியாக்கிரகம் நடைபெற்றது. வேதரத்தினம் பிள்ளையின் குடும்பத்தாருக்கும், ஊரில் பலருக்கும் முடிவெட்டும் நாவிதராக வைரப்பன் என்றொரு இளைஞர் இருந்தார். இவருக்கு பிள்ளை அவர்களின் மீது மரியாதை, அன்பு, ஏன் பக்தி என்றுகூட சொல்லலாம். அப்படிப்பட்ட மரியாதைக்குரிய பிள்ளை அவர்களை போலீசார் கைவிலங்கு கால் விலங்கிட்டு வீதி வழியே இழுத்துச் சென்ற காட்சியைக் கண்டு ஊரே அழுதது. பிள்ளை அவர்களின் மனைவியும், அவரது ஒரே மகனான அப்பாக்குட்டி குழந்தையாக இருந்து இந்த காட்சியைக் கண்டு வருந்தியிருக்கிறார்கள்.


போலீசார் விலங்கிட்டு வேதரத்தினம் பிள்ளையைத் தெருவோடு அழைத்துச் செல்வதைப் பார்த்து அக்கம்பக்கத்துப் பெண்கள், பிள்ளையவர்களின் மனைவியிடம் ஓடிச்சென்று, ஐயோ, ஐயாவை இப்படி அடித்து இழுத்துச் செல்கிறார்களே அண்ணி, நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களே என்று அலறி அழுதனர். கையில் மகன் அப்பாக்குட்டியை வைத்துக் கொண்டு இந்த காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த அந்த பெருமைக்குரிய தாய், ஐயா என்ன குற்றம் செய்தார்? திருடினாரா, பொய் சொன்னாரா? இல்லையே. இந்த நாட்டு ஜனங்கள் எல்லோரும் சுதந்திரம் பெற வேண்டுமென்றுதானே போராடினார். இதோ இழுத்துச் செல்கிறார்களே இந்த போலீஸ்காரர்களுக்கு உட்பட. பிறகு நான் ஏன் வருத்தப்பட வேண்டும் என்று ‘வந்தேமாதரம்’ என்று முழங்க, இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டிருந்த குழந்தையும் எல்லாம் தெரிந்தது போல கையைத் தூக்க, அத்தனைப் பெண்களும் ஒருமுகமாக வந்தேமாதரம் என்று முழங்கினர். பிள்ளை அவர்களிடம் பக்தி விஸ்வாசம் கொண்ட நாவிதர் வைரப்பன் இந்தக் காட்சியைக் கண்டு உள்ளம் கொதித்து, ஆத்திரமடைந்து, இந்த வெள்ளை அரசாங்கத்துக்கும், அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டிருக்கும் போலீசாருக்கும் ஏதாவதொரு வகையில் பாடம் கற்பிக்க வேண்டுமென்று மனதில் உறுதி பூண்டார். அதை உடனே செயல் படுத்தவும் துணிந்தார்.


போராடவும், கோஷம் போட்டு போலீசாரின் தடியடிக்கு ஆளாகி சிறைக்குச் செல்லும் நூற்றுக் கணக்கான தொண்டர்களின் தியாகம் இவரையும் போராடத் தூண்டியது. இவர் ஓர் சபதம் மேற்கொண்டார். தனது தொழிலை போலீசாருக்கோ, அடக்குமுறைக்கு துணை போகும் அரசாங்க அதிகாரிகளுக்கோ செய்வதில்லை, அதாவது அவர்களுக்கு சவரம் செய்வதில்லை என்று உறுதி பூண்டார். அதை மிகக் கட்டுப்பாட்டோடு கடைபிடிக்கவும் செய்தார். அது போராட்ட காலமல்லவா? வெளியூரிலிருந்து பல போலீஸ்காரர்கள் பணியின் நிமித்தம் அவ்வூருக்கு வந்திருந்தனர். அப்படி முகம் தெரியாத ஒரு புதிய போலீஸ்காரர் சாதாரண உடையில் வந்து வைரப்பனிடம் முகச் சவரம் செய்து கொள்ள விரும்பினார். வைரப்பனும் அவரைப் பலகையில் உட்கார வைத்து முகத்தில் நீர் தடவி, சோப்பின் நுரை போட்டு கத்தியைத் தீட்டி பாதி சவரம் செய்து கொண்டிருந்தார். அந்த நேரம் பார்த்து வைரப்பனுக்குத் தெரிந்த ஒரு நபர் அங்கு வந்தார். அவர் சும்மாயிராமல், “என்ன வைரப்பா! போலீஸ்காரங்களுக்கு சவரம் செய்ய மாட்டேன்னு சத்தியம் பண்ணியிருந்தியே! இப்போ என்ன ஆச்சு? போலீஸ்காரர் ஒருவருக்கு சவரம் செய்து கொண்டிருக்கியே!” என்று கேட்டு விட்டார்.


வைரப்பனுக்கு அதிர்ச்சி. உடனே எழுந்து கொண்டார். “ஐயா! நான் உங்களுக்கு முகச் சவரம் செய்ய முடியாது. நீங்கள் வேறு இடம் பாருங்கள்” என்று சொல்லிவிட்டார். பாதி முகச் சவரம் செய்துகொண்ட நிலையில் முகத்தில் சோப் நுரையுடன் நிற்கும் அந்த போலீஸ்காரர் கெஞ்சிப் பார்த்தார். வைரப்பன் அசைந்து கொடுக்கவில்லை. தன் போலீஸ் தோரணையில் மிரட்டிப் பார்த்தார். அதற்கும் வைரப்பன் அஞ்சவில்லை. “என்னால் செய்ய முடியாது, நீங்கள் என்ன வேணுமானாலும் செய்து கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டார். ஆத்திரமடைந்த போலீஸ்காரர் வைரப்பனை கைப்பிடியாக அழைத்துக் கொண்டு போய் அவர் மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் நிறுத்தினார். வழக்கை விசாரித்த நீதிபதி “தம்பி! ஒழுங்காக அந்த போலீஸ்காரருக்கு மீதி சவரத்தையும் செய்துவிடு! இல்லாவிட்டால் தண்டிக்கப் படுவாய்” என்றார்.


வைரப்பனுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. தான் மேற்கொண்ட விரதம் சந்திக்கு வந்து விட்டது. இது எல்லோருக்கும் தெரிந்து விட்டது என்பது ஒரு புறம். மற்றொரு புறம் தனது எஜமான் வேதரத்தினம் பிள்ளையவர்கள் “வைரப்பா! நீயெல்லாம் போராட்டத்தில் கலந்து கொண்டால், உன்னைப் பிடித்து ஜெயிலில் போட்டு விடுவார்கள். அப்புறம் உன்னை நம்பியிருப்பவர்கள் திண்டாடுவார்கள், நீ வெளியே இருந்து கொண்டு உன்னால் முடிந்த ஆதரவைக் கொடுத்துக் கொண்டிரு” என்று சொல்லியிருந்தாரே, இப்போது தானும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு நீதிபதியின் முன்பு நிற்கிறோமே என்று மகிழ்ச்சி.


நீதிபதியைப் பார்த்து வைரப்பன் சொன்னார், “ஐயா! எஜமானே! போலீஸ்காரருக்கு மிச்சம் சவரத்தை நம்மாலே செய்ய முடியாதுங்க! அப்படி செய்துதான் ஆகணும்னா, ஐயாவே செய்து விட்டுடுங்க!” என்று சொல்லிக் கொண்டே தனது சவரச் சாதனங்கள் கொண்ட தகரப் பெட்டியை நீதிபதியின் மேஜை மீது வைத்து விட்டார். கோர்ட்டே கொல்லென்று சிரித்தது. நீதிபதிக்கு வந்ததே கோபம். வைரப்பனுக்கு ஆறுமாத சிறை தண்டனை விதித்து தீர்ப்புக் கூறிவிட்டார். வைரப்பனுக்கு ஏக மகிழ்ச்சி. தானும் போராடி ஜெயிலுக்குப் போகப் போகிறோம். நம் தலைவர் பிள்ளை அவர்களை அவமானப் படுத்திய இந்த போலீஸ்காரர்களுக்கும் அதிகாரிகளுக்கும் நல்லதொரு பாடம் புகட்டி விட்டோம் என்ற மகிழ்ச்சி. அவர் அப்போது இளைஞர்தான், பிறகு சிறை வாசம் முடித்து வெளியே வந்து தியாகி வைரப்பன் என்று மற்றவர்களால் அழைக்கப்பட்டு நீண்ட காலம் உயிரோடு இருந்தார். அவர் வாழ்நாள் முழுவதும் அவரிடம் இந்த நிகழ்ச்சி பற்றி கேட்டு விட்டால் போதும். அவர் உற்சாகம் கரைபுரண்டு ஓட அதை வர்ணிப்பார். தானும் தன் தலைவரைப் போல ஜெயிலுக்குப் போய் தியாகியாகி விட்டதைச் சொல்லிச் சொல்லி மகிழ்ச்சியடைந்தார். ஸ்ரீ இராமபிரானுடைய அணை கட்டும் பணியில் உதவியதாகச் சொல்லப்படும் அணில் போல தானும் இந்த நாட்டு விடுதலைப் போரில் தன் பங்கைச் செலுத்திவிட்ட மகிழ்ச்சி அவருக்கு. அவருடைய நூற்றாண்டு விழா சமீபத்தில் வேதாரண்யத்தில் நடைபெற்றது. அவரது தியாகத்தை நினைவுகூரும் வகையில் வேதாரண்யத்தில் அவருக்கு ஓர் நினைவுத் தூண் நிறுவப்பட்டிருக்கிறது. வாழ்க தியாகி வைரப்பன் புகழ்!


 Previous: திருச்சிLICENSE




SUJATHA TOLD ABOUT LYRICS KANNADASAN

 


SUJATHA TOLD ABOUT LYRICS KANNADASAN 



கவிஞர் கண்ணதாசனைப் பற்றி சுஜாதா சொல்கிறார்:
(Narayanan Krishnan)
1978 -ல், ‘நினைத்தாலே இனிக்கும்’ பாடல் பதிவின் போது அவரை நேரில் சந்தித்துக் கொஞ்சநேரம் பேசும் மறக்க முடியாத வாய்ப்பு கிடைத்தது.
அதற்கு முன், ‘இதயம் பேசுகிறது’ பத்திரிகை ஏற்பாடு செய்திருந்த விழா மேடையில், ஆசிரியர் மணியன் என்னைக் கவியரசுக்கு மாலை அணிவிக்கச் சொன்னார்.
அந்த விழாவில், கண்ணதாசனின் தெளிவான பேச்சைக் கேட்டு ரசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
'நினைத்தாலே இனிக்கும்’ படத்துக்கு நான் வசனம் எழுதினேன்.
சங்கீதக் கச்சேரி செய்ய சிங்கப்பூர் செல்லும் இரண்டு இளைஞர்களின் ஆர்க்கெஸ்ட்ரா ட்ரூப்பைப் பற்றிய கதை.
கே.பாலசந்தர் இயக்கிய அந்தப் படத்தில் கமல், ரஜினி இருவரும் நடித்தனர்.எம். எஸ்.விஸ்வநாதன் இசைக்கு கண்ணதாசன் பாடல்கள் எழுதினார்.
முதல் பாட்டின் கம்போசிங் சென்னை, ப்ரெசிடென்ட் ஹோட்டல் அறையில் நடைபெற்றது.
“நீங்களும் வாருங்கள். கண்ணதாசனும் விஸ்வநாதனும் சேர்ந்து பணிபுரிவதைப் பார்ப்பதே ஒரு சுவாரஸ்யமான அனுபவமாக இருக்கும்” என்றார் பாலசந்தர்.
சென்றேன்.முதலில் ஆர்மோனியப் பெட்டி வந்தது. பின் எம்.எஸ்.வி வந்தார். பட்டனை அழுத்தி, டிபன் வந்தது.
அதன்பின், கசங்கல் இல்லாத தூய வெள்ளை உடையில் வந்தார் கண்ணதாசன்.
அகலமான நெற்றியில் குங்குமப்பொட்டு. மெலிதான, அழுந்த வாரிய தலைமுடி. தாராளமான புன்னகை.
‘பெனடிக்ட் சொல்யூஷன்’ (Benedict Solution) வைத்து சர்க்கரை இருக்கிறதா என்று பார்த்துவிட்டுத்தான், காபிக்கு சர்க்கரை போடச் சொன்னார்.
எம்.எஸ்.வீயும், கவிஞரும் அன்யோன்யமாகப் பழகிக்கொண்டார்கள்.
“விசு, என்ன ட்யூன் ?”
“அண்ணே! சங்கீதத்தைப் பற்றிய உற்சாகமான ட்யூன்!”
“வாசி! ”
விஸ்வநாதனின் விரல்கள் ஆர்மோனியத்தில் உலவ, அவருக்கே உரிய வசீகரமான குரலில், “தன் னானே தன்னானே தன்னானே தன்னானே” என்று பாடினார். உடனேயே கவிஞர், “எங்கேயும் எப்போதும் சங்கீதம், சந்தோஷம் ” என்றார்.
“பாடிப் பாரு !”
“கச்சிதமாக இருக்கு, கவிஞரே !”
”அடுத்த அடி. ?””தானனன்னே தானனன்னே தானனன்னே தானனன்னே…!””தன்னானேக்கு பதில் தான னன்னேயா ?
சரி கொஞ்சம் தத்துவம் பேசலாமா ?” என்று டைரக்டரைப் பார்த்தார், கவிஞர்.
பாலசந்தர், “தாராளமா! உங்களுக்குச் சொல்லணுமா கவிஞரே ! ”
“ராத்திரிகள் வந்துவிட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்…!” “சரியா ?”
“Perfect !”
விஸ்வநாதன் பாடப் பாட, கண்ணதாசன் அத்தனை சரணங்களையும் (“காலை ஜப்பானில் காபி…. மாலை நியூயார்க்கில் காபரே… அவங்க ஊரூரா போறாங்கல்ல ? “)
உடனுக்குடன் உதிர்த்ததை பஞ்சு அருணாசலம் அழகான கையெழுத்தில் எழுதித்தர, சில மணி நேரங்களில் முழுப் பாட்டும் எழுதப்பட்டது.
இடையிடையே, கண்ணதாசனுடன் பேச்சுக் கொடுத்தேன். “எப்படி இவ்வளவு சரளமா வார்த்தைகள் வருது ? ”
“தமிழ்ல ஆதார சந்தத்தைப் பிடிச்சுட்டாப் போதும்! பாருங்க, சீதைக்கு எத்தனை பெயர்கள் ?
சீதா — நேர் நேர்;
ஜானகி — நேர்நிரை;
மைதிலி — நிரைநேர்;
வைதேகி — நேர் நேர் நேர்
(இது புரிவதற்கு தமிழ் இலக்கணம் கொஞ்சமாவது தெரிய வேண்டும்.
தமிழில் பேசவே / தமிழ் தெரிந்து கொள்ளவே விரும்பாத இன்றைய ஆண்டிராய்ட் தலைமுறையினருக்குப் புரிய வாய்ப்பில்லை)
இப்படி எந்தச் சந்தம் வேணுமோ அந்தச் சந்தத்துக்கு வார்த்தைகள் போட்டுக்கலாம். என்ன, எல்லா வார்த்தையும் தெரியணும்… அவ்வளவு தான்.
கம்ப இராமாயணத்தில் ஒவ்வொரு படலத்திலும், பாடலிலும் ஒரு புது வார்த்தை கிடைக்கும் !”
மறுநாள் ரிக்கார்டிங்குங்கு கண்ணதாசன் வந்து தலையைக் காட்டிவிட்டுப் போனார். அவர் வேலை முதல் நாளே முடிந்துவிட்டது .
அதன்பின் கண்ணதாசனை நான் சந்திக்கவில்லை.
அவர் உடல்நலம் குன்றி, சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றதும், தாய் நாட்டுக்குத் திரும்பிய நிலையும், இளம் வயதில் மறைந்ததும் என் மனத்தை உருக்கிய நிகழ்ச்சிகள்.
ஏறத்தாழ 40 ஆண்டுகளாகியும் அந்தப் பாடல் இன்றும்கூட எல்லா மெல்லிசை நிகழ்ச்சிகளிலும் கட்டியம் கூறும் பாடலாகப் பாடப்படுகிறது.
கண்ணதாசன் அதைத்தான் செய்தார்… எங்கேயும் எப்போதும் சங்கீதத்தையும், சந்தோஷத்தையும் பரப்பினார்.
உலகில் தமிழர்கள் வாழும் ஏதாவது ஒரு மூலையில் பயணிக்கும் கார்களிலும், இல்லங்களிலும் அவரது ஏதாவது ஒரு வரி ஒலிக்காத நேரமே இல்லை.
May be a black-and-white image of 1 person and sitting
Solaiappan Sundaram and 257 others
12 Comments
53 Shares