Sunday 30 May 2021

MGR BIOGRAPHY

 


MGR BIOGRAPHY




நானும் நீயுமா - 5 : எம்ஜிஆர் ‘வரலாறு முக்கியம் அமைச்சரே’ என்பதில் ஏன் கவனமாக இருந்தார்?!
சினிமா மற்றும் அரசியல் ஆகிய இரண்டு துறைகளிலும் பயணம் செய்த காலகட்டங்களில் தன்னுடைய பிம்பத்தை எம்.ஜி.ஆர் தொடர்ச்சியாக வளர்த்துக் கொண்ட விதத்தை அறிந்தால் பிரமிப்பாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது. ஆம், பொது வெளியில் தன்னுடைய தோற்றமும் ஒவ்வொரு அசைவும் எப்படித் தெரிய வேண்டும் என்பதில் அவர் மிக மிக கவனமாக இருந்திருக்கிறார்.
பத்திரிகை புகைப்படக்கலைஞரான எஸ்.எஸ்.ராமகிருஷ்ணன், எம்.ஜி.ஆருடனான தன் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் ஒரு நூலில் ஒரு சம்பவத்தை விவரிக்கிறார். அது அவர் அமெச்சூர் புகைப்படக்காரராக இருந்த காலக்கட்டம். எம்.ஜி.ஆர் நடித்து வெளியான 'எங்க வீட்டுப் பிள்ளை' திரைப்படம், நூறு நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த சமயத்தில், அதன் வெற்றி விழாவிற்காக, ஒரு திரையரங்கிற்கு எம்.ஜி.ஆர் உள்ளிட்ட நடிக, நடிகையர்கள் வந்திருக்கிறார்கள். விழா மேடையின் பின்புறம் அவர்கள் ஓய்வாக காத்துக் கொண்டிருந்த போது ஆர்வக்கோளாறில் இந்த இளம் புகைப்படக்காரர் போட்டோ ஒன்றை எடுத்து விட்டார். அது எம்.ஜி.ஆர் இயல்பாக தன் தலையைச் சொறிந்து கொண்டிருந்த தருணமாக அமைந்து விட்டது.
இதை கவனித்து விட்ட எம்.ஜி.ஆர், அந்த இளம் போட்டோகிராஃபரை முதலில் முறைத்துப் பார்த்தாலும், பிறகு அருகில் அழைத்து அமர வைத்து ‘’நடிகர்களின் தனிப்பட்ட தருணங்களை புகைப்படம் எடுப்பதால் யாருக்கு என்ன பிரயோசனம்? முன்னமே சொல்லியிருந்தால் நானே நன்றாக போஸ் கொடுத்திருப்பேனே?!" என்று சொல்லி அச்சத்தில் இருந்த புகைப்படக்காரரை ஆசுவாசப்படுத்தி உணவு அளித்து அனுப்பியிருக்கிறார்.
பிரபலங்கள் மட்டுமல்ல, எந்தவொரு தனிநபரையும் கூட அவருடைய அனுமதியில்லாமல் புகைப்படம் எடுப்பதும், பரப்புவதும் அடிப்படையான மனித உரிமை மீறல். கேமரா வசதி கொண்ட மொபைல் போன்கள் பெருகி விட்ட இந்தக் காலத்தில் இப்படி ஒருவரின் அந்தரங்கத்தை ஊடுருவும் போக்கு பெருகி விட்டது. தன்னுடைய தோற்றம் ஊடகங்களிலும் சரி, பொதுவெளியிலும் சரி, எப்படி அமைந்திருக்க வேண்டும் என்பதில் எம்.ஜி.ஆர் மிக கவனமாக இருந்திருக்கிறார் என்பதற்கு இந்தச் சம்பவம் ஓர் உதாரணம்.
அதே சமயத்தில் புகைப்படக்கலை பற்றிய சிறந்த ஞானமும் எம்.ஜி.ஆருக்கு உண்டு. எனவே பத்திரிகையாளர்கள் போட்டோ எடுக்கும்போது அவர்களுக்கு வசதியாக இருக்கும்படி பல காரியங்களைச் செய்வார். யாராவது தனக்கு மாலை அணிவிக்கும்போது தோளுக்கு கீழாக அவரது கைகளை சற்று இறுகப்பற்றிக் கொண்டு விடுவார். இதனால் இருவரின் முகங்களும் மறைக்கப்படாமல் புகைப்படத்தில் கச்சிதமாக பதிவாகும். இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் நடைமுறையில் கவனமாக கவனித்த எம்.ஜி.ஆரின் மேதமை குறித்து ஆச்சரியமாக இருக்கிறது.
எம்.ஜி.ஆர் தனது பிரத்யேக பாணியிலிருந்து பெரிதும் விலகி நடித்த படங்களுள் ஒன்று 'அன்பே வா'. ‘Come September’ என்கிற ஆங்கில திரைப்படத்தைத் தழுவி எடுக்கப்பட்டது. ஏவிஎம் என்கிற பெரிய நிறுவனத்தில் தான் நடித்த திரைப்படம் வெளியாக வேண்டும் என்று எம்.ஜி.ஆர் ஆசைப்பட்டதால் இது சாத்தியமானது. இந்தப் படத்தின் தயாரிப்பு அனுபவங்களை ஏவிஎம் சரவணன் அவர்கள் பகிர்ந்துகொண்டதின் மூலம் சில விஷயங்களை அறிய முடிகிறது.
சண்டைக்காட்சிகள் படமாக்கப்படும்போது படக்குழுவின் மிக முக்கியமான நபர்கள் தவிர வேறு எவரும் படப்பிடிப்புத் தளத்தில் இருப்பதை எம்.ஜி.ஆர் விரும்புவதில்லை. இதைப் போலவே பொதுவெளிகளில் நடனக்காட்சிகள் படமாக்கப்படுகிறது என்றால் படப்பிடிப்பு நாளிற்கு முன்பே டான்ஸ் மாஸ்டரிடம் நடன அசைவுகளை கற்றுக் கொண்டு ஒத்திகை பார்த்து விடுவார் எம்.ஜி.ஆர். பொதுமக்களின் முன்பாக படப்பிடிப்பு நடக்கும்போது டான்ஸ் மாஸ்டர் தனக்கு சொல்லித் தருவதை அவர் எப்போதுமே விரும்பியதில்லை.
ஒருவரின் பிரமாண்டமான வெற்றியும் செல்வாக்கும் ஏதோ ஒரு இரவில் நிகழ்ந்து விடும் மாயாஜாலமல்ல. அந்தப் பயணத்திற்காக அவர் ஒவ்வொரு விஷயத்தையும் கவனத்துடன் திட்டமிட வேண்டியிருக்கிறது என்பதற்கு எம்.ஜி.ஆரின் வாழ்க்கை சம்பவங்கள் நல்ல உதாரணம். சுருக்கமாகச் சொன்னால் 'வரலாறு முக்கியம் அமைச்சரே'.
அதே சமயத்தில் சினிமா என்னும் சாதனத்தின் மீது மக்கள் கொண்டிருந்த அபாரமான பிரியத்தையும் அறியாமையையும் எம்.ஜி.ஆர் போன்றவர்கள் நன்றாக பயன்படுத்திக் கொண்டார்கள் எனலாம். ஒரு சினிமா ஹீரோ சண்டைக்காட்சியில் நடிக்கும் போது, அது படமாக்கப்பட்ட விதம், தொகுக்கப்பட்ட விதம் போன்றவற்றால் அவர் நிஜமாகவே சண்டையிடுவது போன்ற பிரமையை ஏற்படுத்தி விடுவார்கள். இவற்றை உண்மை என்று மக்கள் நம்பிக் கொண்டிருந்த காலக்கட்டம் ஒன்றிருந்தது.
எனவே பொதுவெளிகளில் படப்பிடிப்பை நடத்தினால் சினிமா உருவாக்கப்படும் ரகசியங்கள் குறித்து மக்கள் அறிந்து கொள்வார்கள்; அதன் மூலம் சினிமாவின் மீதிருக்கும் பிரேமையும் கற்பனையும் அவர்களிடம் கலைந்து விடும் என்று சினிமாத்துறையினர் ஒரு காலத்தில் நம்பினார்கள். இந்த வரிசையில் எம்.ஜி.ஆரும் இருந்திருக்கிறார் என்பதை உணர முடிகிறது. மக்களின் மிகையான ரசிக மனோபாவம் எந்த அளவிற்கு இருந்ததென்றால், ஒரு சண்டைக்காட்சியில் எம்.ஜி.ஆரும், நம்பியாரும் ஆக்ரோஷமாக கத்திச் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் போது, எம்.ஜி.ஆரின் கத்தி கீழே தவறி விழ, இதை திரையரங்கில் பார்த்துக் கொண்டிருந்த ஒரு ஆவேச ரசிகர் உணர்ச்சிவசப்பட்டு தன்னிடமிருந்த கத்தியை திரையை நோக்கி வீசி 'வாத்தியாரே… இதை வெச்சு சண்டை போடுங்க’’ என்று கத்தினாராம். அவர் வீசிய கத்தி பட்டு திரை இரண்டாக கிழிய அன்றைய ஷோ 'பணால்'.
கருணாநிதி, எம்ஜிஆர்
ஆக நிஜத்திற்கும் நிழலிற்குமான வித்தியாசங்களை அறியாமலிருந்த காலக்கட்டம் ஒன்றிருந்தது. அந்தப் போக்கு இப்போது சற்று மட்டுப்பட்டிருந்தாலும் ஏறத்தாழ அப்படியே நீடிக்கிறது என்பதைத்தான் சமகால நிகழ்வுகள் காட்டுகின்றன. 'தங்களுடைய துயரங்களில் இருந்து விடுவிக்க எந்த அவதார நாயகனாகவது வரமாட்டானா?’ என்கிற ஏக்கம் அடித்தட்டு மக்களிடம் எப்போதுமே இருக்கும். இந்த நெடுங்கால உணர்வைத்தான் திரை நாயகர்கள் நிழல் அவதாரங்களின் மூலம் உணர்வுச்சுரண்டலாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். தங்களின் செல்வாக்கிற்கான முதலீடாக மாற்றிக் கொள்கிறார்கள்.
எம்.ஜி.ஆர் தனது பிம்பத்தை இத்தனை துல்லியமாக பராமரித்த இந்தக் காலக்கட்டத்தில் சிவாஜி என்ன செய்தார்?
அது பற்றி அடுத்த வாரத்தில் பார்ப்போம்!

No comments:

Post a Comment