Tuesday 11 May 2021

P.V.NARASIMMA BHARATHY BORN 1923 MARCH 24 -1978 MAY 11

 P.V.NARASIMMA BHARATHY  

BORN 1923 MARCH 24 -1978 MAY 11




சிவாஜி எனும் மாபெரும் கலைஞனைத் தந்த படம் ‘பாரசக்தி’ (1952). அந்தப் படத்தை விஞ்சும் முயற்சியாக அடுத்த வருடமே கலைஞர்-சிவாஜி கூட்டணியில் வெளியான மற்றொரு திராவிட சினிமா ‘திரும்பிப்பார்’(1953). புராணக் கதையான ‘அகலிகை’யைத் தழுவி, அதைச் சமகாலத்தின் சமூக, அரசியல் நையாண்டிக் கதையாக்கினார் கலைஞர். ‘பராசக்தி’யில் கதையின் நாயகனாக நடித்த சிவாஜி, ‘திரும்பிப்பார்’ படத்தில் வில்லனாக நடித்தார்.


வில்லன் என்றால் மிக மோசமான, முழுமையான வில்லன். பெண் பித்தர் கதாபாத்திரம். இந்தப் படத்தின் படப்பிடிப்பில் சிவாஜியின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார் ஒருவர். அவர் அந்தப் படத்தின் கதாநாயகன் பி.வி. நரசிம்ம பாரதி. நாயகன் என்றால் ‘பொன்முடி’, ‘என் தங்கை’, ‘மாப்பிள்ளை’, ‘ மதன மோகினி’ என வரிசையாக வெற்றிகளைக் கொடுத்துவந்த நாயகன். மார்டன் தியேட்டர் அதிபர் டி.ஆர். சுந்தரத்துக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் ஒருவர். எல்லீஸ் ஆர். டங்கன் விரும்பித் தேர்ந்தெடுத்த ஹீரோ.


நானொரு சிங்கம்





புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் ‘எதிர்பாராத முத்தம்’ குறுங்காவியத்தை நாடகமாக நடத்திக்கொண்டிருந்தார் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். பாரதிதாசனுடன் நல்ல நட்புகொண்டிருந்த மார்டன் தியேட்டர் சுந்தரம் அதைப் படமாகத் தயாரிக்க விரும்பினார். பாரதிதாசனே கதை, வசனம் எழுதிக் கொடுத்தாலும் கதைக்கு மட்டும் பெயர் போட்டால் போதும் என்று கூறிவிட்டார். இயக்குநராக எல்லீஸ் ஆர். டங்கனை அமர்த்தினார் சுந்தரம். திரைக்கதையைப் படித்த டங்கன், தனக்கு அழகான கதாநாயகன் தேவை என்றார். எம்.ஜி.ஆர், சிவாஜி, பி.வி. நரசிம்மபாரதி உள்ளிட்ட பத்துக்கும் அதிகமான நடிகர்களை ஸ்டூடியோவில் திரட்டி வரிசையாக நிற்கவைத்தார் சுந்தரம். டங்கன் ஒவ்வொருவரையும் கூர்ந்து நோட்டமிட்டபடியே நரசிம்ம பாரதியின் அருகில் வந்து நின்றார். நரசிம்ம பாரதியைப் பார்த்து “யார் நீ?” என்றார் ஆங்கிலத்தில். அதற்கு “நானொரு சிங்கம்” என்று கம்பீரமாக ஆங்கிலத்தில் பதில் சொன்னார் நரசிம்ம பாரதி. “சிங்கத்தால் காதல் வசனம் பேச முடியுமா?” என்று டங்கன் கேட்க, “காதல் வசனம் பேசும்போது நான் ஜோடியைப் பிரியாத பொன்மான்” என்றார் நரசிம்ம பாரதி. “இவர்தான் என் ஹீரோ” என்றார் டங்கன்.





‘பொன்முடி’யின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்தது. சேலம் மார்டன் தியேட்டர் ஸ்டுடியோவில் வண்டி வண்டியாக மணலைக் கொட்டி பிரம்மாண்ட கடற்கரை செட்டை உருவாக்கினார் தயாரிப்பாளர் சுந்தரம். அதில் நாயகன் நரசிம்ம பாரதி, நாயகி மாதூரி தேவி இருவரும் மணலில் ஓய்வாகப் படுத்திருந்தபடியே டூயட் பாடி காதல் செய்யும் பாடல் காட்சியை நெருக்கமாகப் படமாக்கினார் டங்கன். படம் வெளியாகி பெரும் பரபரப்பையும் பதைபதைப்பையும் உருவாக்கியது. “ஒரு வெள்ளைக்கார இயக்குநர், மேற்கத்திய கலாச்சாரத்தில் உள்ளதுபோல காதல் காட்சிகளைப் படமாக்கி தமிழ்க் கலாச்சாரத்தைக் கெடுக்கிறார்” என்று கண்டனக் குரல்கள் எழுந்தன. பல பத்திரிகைகள் காதலர்களின் நெருக்கத்தைப் படமாக்கிய விதம் ‘அபசாரம்’ எனக் கண்டித்தன. ஆனால் படம் மிகப் பெரிய வெற்றிபெற்றது. “நரசிம்ம பாரதியும் மாதூரி தேவியும் நிஜக் காதலர்கள் போலவே நடித்திருக்கிறார்கள்” என்ற பாராட்டு மழையும் கண்டனத்துக்கு நடுவே கொட்டியது. நரசிம்ம பாரதி மாதுரிதேவியை இணைத்துக் கிசுகிசுக்களும் கிளம்பின. படத்தின் நாயகன் நரசிம்ம பாரதி பெண்கள் விரும்பும் நடிகராக மாறினார்.


நடிகர் திலகத்துடன் மட்டுமல்ல எம்.ஜி.ஆர்., கலைஞர், என்.டி.ராமாராவ் ஆகிய மூன்று முதல்வர்களோடும் கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரோடும், மாதுரிதேவி, ஜமுனா, பண்டரிபாய் போன்ற அன்றைய முன்னணிக் கதாநாயகிகளுடன் நடித்துப் புகழ்பெற்ற நரசிம்ம பாரதி மதுரையின் மைந்தர். 9 படங்களில் கதாநாயகனாகவும் 15 படங்களில் இணை, துணைக் கதாபாத்திரங்களிலும் நடித்திருந்தாலும் மறக்கப்பட்ட நடிகர்களில் ஒருவர்.


பெயருடன் ஒட்டிக்கொண்ட பாரதி


பட்டுநெசவு செய்யும் ஏழை சௌராஷ்ட்ரா குடும்பத்தில் வெங்கடாஜலபதி ஐயர் – பாக்கியலட்சுமி தம்பதிக்கு 24 – 03 1923-ல் பிறந்தார். அதே நாளில், நரசிம்மன் பிறந்து ஒரு மணிநேரம் கழித்து, பக்கத்து வீட்டில் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைதான் தமிழ்த் திரையிசையில் பிற்காலத்தில் தன் கம்பீரக் குரலால் கோட்டை கட்டிய டி.எம். சௌந்தர்ராஜன். பால்யம் முதலே நரசிம்மனும் சௌந்தர்ராஜனும் நண்பர்கள். மதுரை சௌராஷ்ட்ரா தொடக்கப் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த 11 வயது நரசிம்மனை வள்ளிக்குன்றம் ஜமீன்தார் ‘பாய்ஸ்’ கம்பெனி நாடகக் குழுவில் சேர்த்துவிட்டார் அவருடைய தந்தையார். நரசிம்மனின் அழகைக் கண்ட ஜமீன்தார் 12 வயது முதல் அவரைச் சிறுமி வேடங்களில் நடிக்கவைத்தார். நரசிம்மனுக்கு ஜமீன்தார் ஓய்வுகொடுக்கும் நாட்களில் மாலை 5 மணிக்கெல்லாம் காணாமல் போய்விடுவார். எங்கே போகிறார் என்று யாருக்கும் தெரியாது. அது மவுனப் படங்கள் வந்துகொண்டிருந்த காலம். மதுரை தெற்குமாசி வீதியில் திருமலை நாயக்கர் மன்னரின் இசை மன்றமாக இருந்து பள்ளிக்கூடமாக மாறிய ‘நவபத் கானா’ மண்டபத்தை அடுத்து அமைக்கப்பட்டிருந்த ‘டெண்டு கொட்டகையில்’ மவுனப் படங்கள் திரையிடப்பட்டு வந்தன. என்றாலும் நாடகங்களுக்குத்தான் மவுசு.


பாய்ஸ் கம்பெனி அப்போது ‘பதி பக்தி’ என்ற சௌராஷ்ட்ரா நாடகத்தை நடத்திக்கொண்டிருந்தது. சரஸ்வதியாக நடித்தவர் கடும் காய்ச்சல் கண்டு படுத்துவிட்டார். அப்போது கொஞ்சமும் யோசிக்காமல் நரசிம்மனைக் கூப்பிட்டார் ஜமீன்தார். ஆனால் ஆளைக் காணோம். நரசிம்மனை அழைத்துவரக் கணக்குப் பிள்ளை மிதி வண்டியில் பறந்தார். வீட்டிலும் ஆள் இல்லை. தெருவில் விளையாடிக்கொண்டிருந்த டி.எம். சௌந்தர்ராஜனிடம் “உன் சினேகிதன் எங்கே?” என்று கணக்குப் பிள்ளை கேட்க, யோசிக்காமல் “டெண்டு கொட்டாய்” என்று சௌராஷ்ட்ர மொழியில் பதிலளித்தார் சிறுவனாக இருந்த சௌந்தர்ராஜன். நிம்மதிப் பெருமூச்சுடன் டிக்கெட் வாங்கிக்கொண்டு கொட்டகைக்குள் நுழைந்த கணக்குப் பிள்ளைக்கு நரசிம்மனின் பிசிறில்லாத பிஞ்சுக்குரல் காதுகளில் வந்து விழுந்தது. அங்கே திரையில் ஓடிக்கொண்டிருந்த மவுனப் படத்தின் காட்சிகளுக்கு வர்ணனை செய்துகொண்டிருந்தார் நரசிம்மன்.


கணக்குப் பிள்ளை ஆச்சரியப்பட்டுப்போனார்! நாடகத்தில் வேஷம் கட்டாத நாட்களில் நரசிம்மனுக்கு விரும்பமான வேலை மவுனப் படங்களுக்கு வர்ணனை செய்து இரண்டனா சம்பாதிப்பதுதான். வாத்தியார் அழைக்கிறார் என்றதும் பதறியடித்து ஓடிவந்த நரசிம்மனை, அன்றைய நாடகத்தில் சரஸ்வதி வேடம் போடச் சொன்னார். வாத்தியாரின் பேச்சுக்கு மறுபேச்சு ஏது? சரஸ்வதியாக (பாரதி) வேடம் போட்டு நரசிம்மன் நடித்ததைப் பார்த்த ஊரின் தலைக்கட்டுகளும் தனவந்தர்களும் “சரஸ்வதியின் வேடத்தில் சிறப்பாக நடித்த நரசிம்மனுக்கு ‘பாரதி’ என்ற பட்டத்தை அதே மேடையில் கொடுத்தார்கள். அன்றுமுதல் பி. வி. நரசிம்மன், நரசிம்ம பாரதியானார்.


திரையுலகுக்கு டி.எம். சௌந்தர்ராஜனை அறிமுகப்படுத்திய நரசிம்ம பாரதி, என்.டி. ராமராவுக்கே ஒருகட்டத்தில் போட்டியாக மாறினார்.

கட்டுடலும், கவர்ச்சியான முகமும் கொண்ட நரசிம்ம பாரதி, பதினைந்து வயதில் தேர்ந்த ஸ்திரீ பார்ட் நடிகராகப் பெயர்பெற்றிருந்தார். எகிப்து நடனம், குறத்தி நடனம் ஆடி நாடக ரசிகர்களை மகிழ்விப்பதிலும் வல்லவராக இருந்தார். இவரது திறமையைக் கண்ட புளியம்பட்டி ஜமீன்தார் நாடக சபா ஆறு மாதக் குத்தகையில் அவரை மலேசியக் கலைப் பயணத்துக்கு அழைத்துச் சென்றது.


அங்கே ‘பாமா விஜயம்’ நாடகத்தை 100 நாட்கள் நடத்தினார் புளியம்பட்டியார். அதில் கர்வமும் மிடுக்கும் நிறைந்த ‘பாமா’வாகப் பெண் குரலில் பேசிப் பாடி, ஆடி நடித்தார் நரசிம்ம பாரதி. ஆடியதும் பாடியதும் பெண்ணா இல்லை ஆணா என்று மலேசியத் தமிழ் ரசிகர்கள் பலருக்கும் சந்தேகம். நாடகம் முடிந்ததும் மாலையுடன் மேடையேறிவிட்டார்கள் ரசிகர்கள். வேஷம் கலைக்காமல் சதுர் நடை நடந்துவந்து வந்து கழுத்தை நீட்டி ரசிகர்களிடம் மாலையை வாங்கிக்கொண்டார் நரசிம்ம பாரதி. பாமாவுக்கே மாலையிட்ட சந்தோஷம் ரசிகர்களுக்கு,


நடுக்கடலில் நாடகம்


பர்மிட் காலம் முடிந்து கப்பலில் நாகப்பட்டினம் துறைமுகம் நோக்கிப் புறப்பட்டனர் புளியம்பட்டியார் குழுவினர். உயர் வகுப்புப் பயணிகளுக்காகக் கப்பலில் ‘கிருஷ்ண லீலா’ நாடகத்தை நிகழ்த்தினார்கள். நாகப்பட்டினத்தில் பயணிகளை இறக்கிவிட்ட பின் மதராஸ் செல்லும் அந்தக் கப்பலில் பயணித்தார் தமிழ் சினிமாவின் அன்றைய சூப்பர் ஹிட் இயக்குநரான ஒய்.வி. ராவ். நாடகக் கலையின் தாய்வீடான மதுரையைச் சேர்ந்த ‘மதுரை ராயல் டாக்கீஸ்’ நிறுவனத்தின் தயாரிப்பில் எம்.கே.டி நடித்த ‘சிந்தாமணி’ திரைப்படத்தை இயக்கியவர் ஒய்.வி.ராவ்.


அந்தப் படம் அப்போது மதுரையில் ஆறு மாதங்களைத் தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது. அப்படிப்பட்டவர் தங்கள் நாடகத்தைப் பார்க்கிறார் என்றால் எத்தனை உற்சாகமாக நடித்திருப்பார்கள்! அந்த நாடகத்தில் வாலிப கிருஷ்ணாகவும் இரண்டாம் பாதியில் பெரிய கிருஷ்ணருக்கு மனைவியாக ருக்மணி வேடமும் ஏற்று நடித்த நரசிம்ம பாரதியைக் கண்டு ஆச்சரியப்பட்ட ராவ், அவரை அருகே அழைத்தார்.. “உன் வயதில் நானும் கிருஷ்ணன் வேஷங்களில் நடிப்பேன். உன்னைப் பார்த்தது என்னைப் பார்ப்பதுபோல் இருக்கிறது” என்று பாராட்டினார். நரசிம்ம பாரதிக்குத் தலைகால் புரியவில்லை. அந்தக் கணமே சினிமாவில் நடிக்கும் ஆர்வம் தொற்றிக்கொண்டது.


16 வயதில் மதராஸ் வந்தவருக்கு மயிலாப்பூரில் அடைக்கலம் கிடைத்தது. 1938-ல் வெளியான ‘பக்த மீரா’ படத்தில் நரசிம்ம பாரதிக்குச் சிறிய வேடம் ஒன்றை அளித்தார் ராவ். படத்தில் வரும் சில காட்சிகளுக்கு ‘வாய்ஸ் ஓவர்’ கொடுக்கவும் அவரைப் பயன்படுத்திக்கொண்டார். தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் 18 வயதில் ராஜபார்ட் நடிகராக உயர்த்தப்பட்டார் நரசிம்ம பாரதி. சுமார் 6 ஆண்டுகள் ராமர், கிருஷ்ணர், நாரதர், முருகர் என பிஸியான ராஜபார்ட் நாடக நடிகராக வலம் வந்தவரை கோவையிலும் சேலத்திலும் மையங்கொண்டிருந்த தமிழ் சினிமா காந்தமாய் மீண்டும் சுண்டி இழுத்தது.


‘கஞ்சன்’ படத்தில் கதாநாயகன்


விடிய விடிய நாடகங்களில் நடித்துக்கொண்டு பகலில் ஓய்வெடுக்காமல் சினிமாவில் வாய்ப்பு தேடிக்கொண்டிருந்த நரசிம்ம பாரதியை ஜுபிடர் சோமுவிடம் அறிமுகப்படுத்தினார் 50களின் புகழ்பெற்ற கதை, வசனகர்த்தாவான இளங்கோவன். அப்போது ஜுபிடர் தயாரித்து வெளியிட்ட ‘கண்ணகி’ (1942) படத்துக்கு இளங்கோவன் எழுதிய வசனங்களில் சிலவற்றை நரசிம்ம பாரதி செந்தமிழில் பேசி நடித்துக்காட்ட வியந்துபோனார் சோமு.


ஏற்கெனவே ஜுபிடர் பிக்ஸாரின் ‘ஸ்ரீமுருகன்’ படத்தில் சிறு வேடம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் தீவிர காங்கிரஸ்காரரும் எழுத்தாளருமான கோவை சி.ஏ. ஐய்யாமுத்துப் பிள்ளை, ஜுபிடர் நிறுவனத்துக்காக எழுதி இயக்கிய ‘கஞ்சன்’ (1947) படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார் நரசிம்ம பாரதி. இலக்கிய நயமும் இனிய பாடல்களும் சீர்திருத்தக் கருத்துக்களும் கொண்ட இந்தப் படம் சிறந்த பாடமாக வெளியாகித் தோல்வியடைந்து. தராள மனம் கொண்ட தமிழர்களைக் ‘கஞ்சன்’என்ற தலைப்பு ஈர்க்கவில்லைபோலும். எனினும், அடுத்து வந்த ‘திகம்பர சாமியார்’(1950) நரசிம்ம பாரதியைக் கைதூக்கிவிட்டது.


தேடி வந்த தெய்வ வேடங்கள்


ஜுபிடர் நிறுவனத்துக்காகப் புகழ்பெற்ற படங்களை உருவாக்கிய சுந்தர்லால் நட்கர்னி இயக்கத்தில் வெளியான படம் ‘வால்மீகி’ (1946). அதில் நரசிம்ம பாரதியை ராமராகவும் மகாவிஷ்ணுவாகவும் தோன்ற வைத்தார் நட்கர்னி. பிறகு ‘கன்னிகா’ (1947) என்ற படத்தில் நாரதராக நடித்துப் புகழ்பெற்றார். டி.இ. வரதன் ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில் நரசிம்ம பாரதி ஏற்ற நாரதர் வேடம்தான் பிரதான பாத்திரம். இந்தப் படத்தில்தான் நாட்டியத் தாரகையராக லலிதா பத்மினி சகோதரிகள் அறிமுகமானார்கள். இதன் பிறகு நான் கண்ட சொர்க்கம் (1960), தக்ஷயக்ஞம் (1962) ஆகிய படங்களில் நாரதராகத் தோன்றியவரை விடாப்பிடியாகத் துரத்திய தெய்வ வேடம் கிருஷ்ண அவதாரம்.


தமிழ், தெலுங்கு மொழிகளில் கிருஷ்ண அவதாரமாக நடிப்பதென்றால் அது என்.டி.ராமராவாகத்தான் இருக்க வேண்டும் என்று அந்த வேடத்தை அவருக்குப் பட்டா போட்டுக் கொடுத்திருந்த காலகட்டம் அது. நரசிம்ம பாரதியின் வாட்ட சாட்டமான வசீகரத் தோற்றம் அதை மாற்றிக்காட்டியது. ஜுபிடர் நிறுவனம் மிகுந்த பொருட்செலவில் தயாரித்த ‘அபிமன்யூ’ (1948) படத்தில் கிருஷ்ணராக நடித்து ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றிருந்தார் நரசிம்ம பாரதி.


அந்தப் படத்தின் மிகப் பெரிய வெற்றியைத் தொடந்து இயக்குநர் சுந்தர் ராவ் நட்கர்னி ‘கிருஷ்ண விஜயம்’ (1950) படத்தை இயக்கினார். அதில் ராதாகிருஷ்ணராக நடிக்கப் பட முதலாளிகள் என்.டி.ராமராவைப் பரிந்துரைத்த நிலையில் நரசிம்ம பாரதியை விடப்பிடியாகத் தேர்வு செய்தார் இயக்குநர். அதிக தந்திரக் காட்சிகளோடு மிக பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்பட்டு வெளிவந்தது இந்தப் படம்.


நண்பனுக்கு உதவி


அந்தப் படத்தில் ராதா கிருஷ்ண லீலையைச் சித்தரிக்கும் காதல் பாடலைப் பாட, காதல் ரசமும் கம்பீரக் குரலும் இணைந்த ஒரு பின்னணிப் பாடகரைத் தேடிக்கொண்டிருந்தார்கள் நட்கர்னியும் அந்தப் படத்தின் இசையமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையாவும். பல புதிய பாடகர்களின் குரல்களைச் சோதனை செய்து பார்த்தும் திருப்தி வரவில்லை. அப்போது நட்கர்னியிடம் தனது நண்பன டி.எம்.சௌந்தர்ராஜனைப் பற்றி எடுத்துக் கூறினார் நரசிம்ம பாரதி.


உடனே அவரைக் கிளம்பிவரச் சொல்லுங்கள் என்றார் நட்கர்னி. சௌந்தர்ராஜனுக்கு உடனே தந்தி கொடுத்தார் நரசிம்ம பாரதி. மறுநாள் கோவை வந்து சேர்ந்த சௌந்தர்ராஜனை வைத்து ‘ராதே நீ என்னை விட்டுப் போகாதடி…’ என்ற பாடலைப் பாடச் சொன்னார் இசையமைப்பாளர் சுப்பையா. கோவை சென்ட்ரல் ஸ்டுடியோ ஒலிப்பதிவுக் கூடத்தில் ஆர்கெஸ்ட்ரா இல்லாமல் கம்பீரமாகப் பாடினார் டி.எம்.எஸ். அதன்பிறகு இசையுடன் அன்றே அந்தப் பாடல் பதிவு செய்யப்பட்டு இறுதி செய்யப்பட்டதோடு படத்தில் ஆண் குரலில் அமைந்த மற்ற பாடல்களையும் டி.எம்.எஸ்.ஸுக்கே கொடுத்தனர். முதல் வாய்ப்பைப் பெற்றுத் தந்த நரசிம்ம பாரதிக்கே டி.எம். எஸ். பாடிய அந்த முதல் பாடல் பின்னணியாக அமைந்துபோனது.


கிருஷ்ண விஜயம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறாவிட்டாலும் “கிருஷ்ணா கிருஷ்ணா” என்று அழைக்கும் அளவுக்கு இயக்குநர் நட்கர்னியின் நெருக்கமான நண்பரானர் நரசிம்ம பாரதி. எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகியோருக்கு இணையாக வளர்ந்து நின்றிருக்க வேண்டிய நரசிம்ம பாரதி, யாரிடமும் வாய்ப்புக்காக இறைஞ்சி நின்றதில்லை. நாயகனுக்கான வாய்ப்புகள் இல்லாதபோது துணைவேடங்களில் நடிக்கவும் அவர் தயங்கியதில்லை.


பாரதி நாடக மன்றம்


ஒரு கட்டத்தில் திரையிலிருந்து மெல்ல ஒதுக்கப்பட்ட நரசிம்ம பாரதி, மன வருத்தம் ஏதுமின்றித் தனது தாய்வீடான நாடக மேடையை நேசிக்க ஆரம்பித்தார். அந்நாளின் இசையமைப்பாளர் கோவிந்தராஜுலு நடத்திவந்த நாடகக் குழுவுடன் இணைந்து தமிழகம் முழுவதும் பிரமாண்ட செட் அமைப்புகளுடன் 300க்கும் அதிகமான ‘ஸ்பெஷல்’ நாடகங்களை நடத்தியிருக்கிறார். பிறகு ‘பாரதி நாடக மன்றம்’ என்ற பெயரில் சொந்த நாடகக் குழுவைத் தொடங்கி ‘உலகம் அறியாத புதுமை’ உள்ளிட்ட பல சமூக நாடகங்களைத் தொடர்ந்து மேடையேற்றி நடத்திவந்த நரசிம்ம பாரதி 1978-ம் ஆண்டு தனது 55-வது வயதில் மறைந்தார். அவர் மறைவுக்கு ஓராண்டுக்கு முன் தமிழக அரசு 1977-ம் ஆண்டு கலைமாமணி விருது வழங்கி அவரைக் கவுரவித்தது.





No comments:

Post a Comment