Tuesday 4 May 2021

M.S.VISWANATHAN

 


M.S.VISWANATHAN

தமிழ்த் திரையிசை உலகில், நீங்காத புகழுக்குச் சொந்தக்காரர் மற்றும் பல இசைமையப்பாளர்களுக்கு முன்னோடி, மறைந்த `மெல்லிசை மன்னர்' எம்.எஸ்.விஸ்வநாதன். இவரின் ஏழு பிள்ளைகளில் ஒருவர், தொழிலதிபர் லதா மோகன். அப்பாவின் பசுமையான நினைவுகளை, இனிமையாக நினைவுகூர்கிறார் லதா மோகன்.
``அப்பா மிக எளிமையான மற்றும் ஜாலியான மனிதர். அவர் பிஸியாக இருந்த காலத்துல, தன் இசைப் பணிகளை முடிச்சுட்டு வீட்டுக்கு வர இரவு 10.30 மணிக்கு மேலாகிடும். அப்போ நாங்க தூங்கியிருப்போம். அம்மாகிட்ட, `பிள்ளைங்க சாப்பிட்டாங்களா?'னுதான் முதலில் கேட்பார். அதனால, அவர் எங்களையும் நாங்க அவரையும் ரொம்பவே மிஸ் பண்ணுவோம். அப்பா வீட்டுக்கு வந்துவிட்டால், ஹார்மோனிய பெட்டியை பூஜை ரூம்ல வச்சுடுவார். பிறகு, எங்களோடுதான் சிரிச்சுப் பேசுவார்.
அப்பாவின் பிஸியான சூழலை அம்மா சரியா புரிஞ்சுவச்சு, அவருக்குப் பக்கபலமா இருந்தாங்க. பரபரப்பான பணிகளுக்கு நடுவே, அப்பா வருஷத்துக்கு ஒருமுறை எங்களோடு அவுட்டிங் வருவார். அப்போ, எங்களோடு அவர் குழந்தையைப்போல செயல்படுவார். குதிரைச் சவாரி போவார்; எங்களோடு மீன் பிடிப்பார்; சீட்டுகட்டு விளையாடுவார். பெண் குழந்தைங்கமேல அப்பாவுக்கு அதிக பாசம். அவர் ஒருமுறைக்கூட எங்களை, `டா, டீ'னு சொன்னதேயில்லை. `வாங்கம்மா, போங்கப்பா'னுதான் கூப்பிடுவார்.
அப்பாவுக்கு எல்லா நடிகர்களும் இயக்குநர்களும் சமம்தான். சிவாஜி, எம்.ஜி.ஆர், முத்துராமன், ஜெய்சங்கர்னு எல்லா ஹீரோக்களின் படங்களுக்கும் எந்தப் பாகுபாடும் இல்லாமதான் இசையமைத்தார். நடிகர் சந்திரபாபு அப்பாவின் மிகச் சிறந்த நண்பர். அவர்தான் அப்பாவுக்கு டை மற்றும் ஷூ அணிவதுனு நிறைய சின்னச் சின்ன விஷயங்களையும் சொல்லிக்கொடுத்தார். சந்திரபாபு சாரின் கடைசிக்காலத்துல அவருக்கு அப்பா நிறைய உதவி செய்து, நண்பராகத் தன் கடமையை நிறைவாகச் செய்தார். இயக்குநர் ஶ்ரீதர் எங்க வீட்டுக்கு அடிக்கடி வருவார். அவரால் மாடிப்படி ஏற முடியலைனு, அப்பாவுடன் காரில் இருந்தபடியே நீண்டநேரம் பேசுவார். நாகேஷ் சாரும் அப்பாவின் நல்ல நண்பர். அவர் எங்க வீட்டுக்கு அவ்வப்போது வருவார். பாய் மற்றும் தலையணை வாங்கிட்டுப்போய், பீச்சில் தூங்குவார். கவிஞர் கண்ணதாசன் ஐயாவுக்கும் எங்கப்பாவுக்கும் சிறந்த நட்பு இருந்துச்சு. ஒருமுறை அப்பாவுக்கு மஞ்சள் காமாலை வந்துச்சு. அப்போ அடம்பிடித்த அப்பாவை, கவிஞர் ஐயாதான் வலியுறுத்தி ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப்போனார். கவிஞர் இறந்த பிறகு, `கவிஞர் ஐயா என் கனவுல வந்தார்; ஏதேதோ சொன்னார்; என்னை மிரட்டினார்'னு எங்கப்பா அடிக்கடி சொல்வார்
ஒருநாள் டிவியில, `நாட்டாமை' படத்துல வரும் `கொட்டப்பாக்கு' பாடலைக் கேட்டார். அந்தப் பாடல் அவருக்குப் பிடிச்சுப்போச்சு. அப்போ இரவு 9.30 மணி. உடனே அப்படத்தின் இசையமைப்பாளர் சிற்பிகிட்ட பேசணும்னு சொன்னார். நாங்களும் போன் பண்ணிக் கொடுத்தோம். சிற்பியை மனதாரப் பாராட்டினார். இப்படி ரொம்ப யதார்த்தமான மனிதர் எங்கப்பா. `கொஞ்சம் பந்தாவா நடந்துக்கோங்கப்பானு சொல்வேன். `அப்படின்னா என்னம்மா?'னு கேட்பார். அப்பாவுக்குப் பத்ம விருதுகள் கிடைக்கலைனு பலரும் வருத்தப்பட்டதுண்டு. அதைப்பத்தி அவர்கிட்ட கேட்டா, `யாரும்மா அந்த பத்மா?'னு கேட்பார். விருதுக்காக அவர் ஏங்கியதுமில்லை; எதிர்பார்த்ததுமில்லை; வருத்தப்பட்டதுமில்லை. `என் பாடல் ரசிகர்கள் மனசுல இருந்தால் போதும்'னு சொல்லுவார். 1970-களின் இறுதியில இளையராஜா புகழ்பெற ஆரம்பிச்சார். அப்போ அதுகுறித்து அப்பாகிட்ட பலரும் பேசினாங்க. `நான் மட்டுமே புகழ் பெற்றால் போதுமா? புதிய நபர்கள் வரணும். போட்டி இருக்கிறது நல்லதுதான். என்னால முடிஞ்ச இசையைக் கொடுக்கிறேன்'னு சொல்வார்" என்கிற லதா, எம்.எஸ்.விஸ்வநாதனின் புகைபிடிக்கும் பழக்கம் பற்றிய சுவாரஸ்யமான தகவலைக் கூறுகிறார்.
``அப்பா செயின் ஸ்மோக்கர்னு சொல்வாங்க. அது உண்மையில்லை. ஒரு சிகரெட்டில் மூன்றில் ஒரு பங்குதான் அப்பா பிடிப்பார். `சிகரெட் பிடிக்க வேண்டாம் அச்சா'னு சொல்வோம். ஆனா, அதை மட்டும் அவரால் நிறுத்த முடியலை. நாங்களும் அப்பாவுக்கு சிகரெட் வாங்கிக் கொடுத்த கதைகளும் உண்டு. 75 வயசுல அப்பாவுக்கு இருதய பிரச்னை ஏற்பட்டுச்சு. அப்போ ஆஸ்பத்திரியில சிகிச்சையில் இருந்த அப்பாவை, `இனி சிகரெட் பிடிக்கக் கூடாது'னு டாக்டர் சொல்லிட்டார். ஒருநாள், எங்களை ரூமுக்கு வெளிய போகச் சொல்லிட்டு, `நான் ரெடியாகிட்டுக் கூப்பிடுறேன்'னு சொன்னார். ஆனா, ரூமுக்குள்ள `காதல் மன்னன்'ல அவர் நடிச்ச மாதிரி சிகரெட் பிடிக்க, அதைக் கண்டுபிடிச்சுட்டோம். அப்போ, `இனிமேல் சிகரெட் பிடிக்க மாட்டேன்மா'னு குழந்தையைப் போலச் சொன்னார்.
அப்பா தன் கைப்பையை எப்போதும் தன்னுடனே வச்சிருப்பார். அதில், நிறைய சாமி படங்களும், விபூதி, குங்குமமும்தான் இருக்கும். அப்பாவின் மேனேஜர்தான் அப்பாவின் வருமானம் மற்றும் செலவு விஷயங்களைப் பார்த்துப்பார். வீட்டுல பலர் முன்னிலையில, `பேபிம்மா... எனக்கு ஐந்நூறு ரூபாய் கொடு'ன்னு எங்கம்மாகிட்ட கேட்பார். அப்பா, தன் கையில பணமே வெச்சுக்கமாட்டார். 500 ரூபாய் நோட்டை புதுசா பார்த்து ஆச்சர்யமா கேட்பார். அப்பா சினிமாவில் பிஸியா இல்லாத காலகட்டம். அவர்கூட நானும் மாலையில பீச்சுக்கு வாக்கிங் போவேன். அங்க வழியில் ஆர்.எம்.வீரப்பன் சார் வருவார். உடனே தன் செருப்பைக் கழற்றிவிட்டுட்டு அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவார். `இவர் எனக்குச் சம்பளம் கொடுத்த முதலாளி. காலத்துக்கும் அவருக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கேன்'னு சொல்வார். இப்படியே அவரைச் சந்திக்கும்போதெல்லாம் அவர் செய்தார். இப்படியான மனிதரை இந்தக் காலத்தில் பார்க்க முடியுமா? தன் ஓய்வுக்காலத்துல அவர் இசையமைத்தப் பாடல்களை ரசிச்சுக் கேட்டு மகிழ்ந்தார். அப்போ, `பரவாயில்லையே! நான் ஓரளவுக்கு நல்லாதான் இசையமைச்சு இருக்கேன்போல. எனக்கு இப்போ நிறைய ஐடியாஸ் இருக்கு. இப்போ எனக்கு வாய்ப்புக் கிடைச்சா, நல்லா இசையமைப்பேன்'னு கொஞ்சலா சொல்வார்.
அப்பா ஞானக் குழந்தையைப்போல. அவருக்கு இசைத்திறன் இயல்பாவே வளர்ந்துச்சு. அதைத் திறம்பட பயன்படுத்திகிட்டு, கடுமையா உழைச்சு, உயர்ந்த நிலைக்கு வந்தார். ஆனால், அவருடைய பிள்ளைகளான எங்களுக்கு இசை ஆர்வம் வரலை. ஆனா, பெரியவங்களை மதிக்கணும், அனுசரிச்சுப்போகணும், மத்தவங்களுக்கு உதவணும், செய்ற தொழிலைத் தெய்வமா மதிக்கணும்னு சொல்லிக்கொடுத்தார். `வாழ்க்கையில கீழ இறங்குறது ரொம்ப ஈஸி. ஆனா, மேல உயர்வது ரொம்பக் கஷ்டம். ஆனாலும், நீங்க நேர்மையான வழியில வாழ்க்கையில உயரணும்'னு நிறைய ஆலோசனை கொடுத்திருக்கார். அடுத்த ஜென்மத்திலும் அப்பாவுக்கு நான் மகளா பிறக்கணும் அல்லது எனக்கு அவர் மகனா பிறக்கணும். தினமும் பலமுறையாவது அப்பாவை நினைப்பேன். அவரை ரொம்பவே மிஸ் பண்றோம்" என உருக்கமாகக் கூறுகிறார் லதா மோகன்.
Aman Tamilan, Ayyakutty and 10 others
2 Shares
Share

No comments:

Post a Comment