Wednesday 19 May 2021

S.N.PARVATHI ,TAMIL ACTRESS BIOGRAPHY

 



S.N.PARVATHI ,TAMIL ACTRESS BIOGRAPHY

#தினம்ஒரு_திரைபிரபலம்-226 

அறிந்த முகமும்.!

அறியாத செய்திகளும்.!!

🗽🗽🗽🗽🗽🗽🗽🗽🗽🗽🗽🗽🗽🗽🗽


#S_N_பார்வதி-பழம்பெரும் தமிழ் நடிகை.

இவருடைய முதல் படம் “பணம் தரும் பரிசு’. முதல் படத்திலேயே அம்மாவாதான் நடித்தார். அந்தப் படத்துல ஹீரோ திருச்சி சௌந்தரராஜன். ஹீரோயின், கவிஞர் வாலி அண்ணனோட மனைவி ரமணதிலகம்.அதோடு அம்மா கேரக்டர்ன்னு முத்திரைக் குத்திவிட்டார்கள் திரையுலகில். 

அம்மா நடிகையாக திரையுலகில் நுழைந்தவர்.அதிலிருந்து இதுவரை  அம்மாவாக நடித்துவிட்டார். மாந்தோப்புக்கிளியே, பாலைவனச்சோலை, வாழையடி வாழை, நவாப் நாற்காலி, கண்ணே பாப்பா, பிராயச்சித்தம், ஜஸ்ரிஸ் விஸ்வநாத், மீண்டும் கோகிலா, உயர்ந்த மனிதன், கலாட்டா கல்யாணம், தெய்வம் பேசுமா, எங்க மாமா, சத்யா, சுமதி என் சுந்தரி, சொந்தம் போன்ற இருநூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் வில்லி, குணச்சித்திரம், நகைச்சுவை என பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்தவர்.

நகைச்சுவையென்றால் அக்கதாபாத்திரமாகவே மாறிவிடுவதும் வில்லியென்றால் அக்கதாபாத்திரமாகவே மாறிவிடுவதும் இவரது நடிப்பின் சிறப்பு. ‘சகலகலா வல்லவன்’, ’சுமை’, ‘பசி’, ‘பாலைவனச்சோலை’ போன்ற படங்களில் இவருக்கு நல்லக் கதாபாத்திரங்கள்.

13 வயதில் நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தவர். ஏவி.எம்.ராஜன் ட்ரூப்பிலேயிருந்து காத்தாடி ராமமூர்த்தியின் ட்ரூப் வரை பல நாடகங்களில் நடித்தவர். முதன் முதலாக ‘பணம் தரும் பரிசு’ படத்தில் அம்மாவாக நடித்தார். அப்போது அவரது வயது 17. இந்த 17 வயதில் அம்மாவாக நடித்திருப்பவர் இவர் ஒருவராகத் தான் இருப்பார். ‘பசி’ படத்தில் நடிக்கும் வரை இவரது வாழ்க்கைக் கஷ்டத்துடந்தான் கழிந்தது. அதன்பின் இவர் பிசியான ஒரு நடிகையாகிவிட்டார். சுமார் 200 படங்கள் வரை நடித்துவிட்டார்.




நாடகத்தில் நடிக்கும்பொழுதே 1961-இல் இவருக்குத் திருமணம் ஆகிவிட்டது. என் கணவர் பேரு சாரங்கன்.எனக்கு ஒரு மகன், ஒரு மகள். மகன் பொறியியலாளராக இருக்கிறார். மகள் பிஸியோதெரபி டாக்டரா இருக்கிறார். இரண்டு பேருக்கும் திருமணமாகிவிட்டார்கள்.

சினிமா எக்ஸ்பிரஸ் இதழில் வெளியாகியிருந்த கட்டுரை.

⬇⬇⬇⬇

பசிதான் என்னை பிஸியாக்கியது! – எஸ்.என். பார்வதி

எல்லா படத்திலும் கதாநாயகியாகவே நடித்தவர் என்று வைஜெயந்தி மாலாவைச் சொல்லுவார்கள். வைஜெயந்திமாலா கதாநாயகி என்றால், அறிமுகமான முதல் படத்திலிருந்து இப்போது வரை அம்மா வேடத்துக்கென்றே முத்திரை குத்தப்பட்டவர் எஸ்.என். பார்வதி. சுமார் 150 வகை அம்மாக்களாக நடித்து முடித்திருக்கிறார் இவர்.””எங்க அப்பா பேரு நாகசுந்தரம். அம்மா பேரு வள்ளியம்மாள். எங்களுக்கு பூர்விகம் பரமக்குடி. ஆனால் நான் பிறந்தது பர்மாவில். பிழைப்பைத் தேடி எங்கப்பா பர்மாவுக்குப் போன நேரத்தில் பிறந்தேன். நான் பிறந்தது பர்மாவில்தான் என்றாலும் ஒரு வயது குழந்தையாக இருந்தபோதே சென்னைக்கு வந்துவிட்டோம். அப்போ, அப்பா அங்கே நகை வியாபாரியா இருந்ததால வரும்போது அம்மா கழுத்துல எவ்வளவு பிடிக்குமோ அவ்வளவு நகை போட்டுக்கிட்டு வந்தாங்களாம். இங்க வந்த பிறகு அந்த நகைகள்தான் ரொம்ப நாள் எங்களைக் காப்பாற்றியதாம்.சென்னை வந்ததுக்கு அப்புறம், எனக்குப் பிறகு மூன்று குழந்தைகள். குடும்பம் பெரிசாச்சு. சென்னையில பல தொழில்கள் செய்தார் அப்பா. ஆனால், எதுவும் சரியா வரலை. இதனால ஆறு மாசம்தான் ஒரு பள்ளியில் படிப்பேன். அடுத்த ஆறு மாசம் வேறு பள்ளியில் படிப்பேன். இப்படியே காடு ஆறு மாசம், நாடு ஆறு மாசம் என்பது போல பல பள்ளியில் படிச்சேன். அதன் பிறகு பர்மாவுக்கு போறதுக்கு நிறைய கெடுபிடி ஆகிடுச்சு. அதனால அப்பாவால போக முடியாம போச்சு. இங்கேயும் எந்த தொழில் செய்தாலும் அது சரியா வராமல் வறுமை வாட்ட ஆரம்பிச்சது.அந்த நேரத்துலதான் அப்பாவோட நண்பர் சண்முகம் என்பவர் நாடகங்களில் பாட்டு பாடிக்கிட்டு இருந்தாரு. எங்க கஷ்டத்துக்கு உதவலாமேன்னு, “பாப்பாவை நாடகத்துக்கு அனுப்புறீங்களா?’ன்னு எங்கம்மாகிட்ட கேட்டார். அம்மா அதிர்ந்து போய்ட்டாங்க. மெல்ல மெல்ல அம்மா மனசைக் கரைச்சு நான் கூட இருந்து பாத்துக்குறேன்னு சமாதானம் சொல்லி சம்மதிக்க வெச்சுட்டார். ஆனா அப்பா முடியவே முடியாதுன்னு சொல்லிட்டாரு. இருந்தாலும் சண்முகம் அண்ணன்தான் மெதுவா பேசி, “நீங்களும் இப்போ வறுமையில இருக்கீங்க.பாப்பா நடிச்சதுன்னா உங்களுக்கும் கொஞ்சம் உதவியா இருக்கும், நீங்க பயப்படாதீங்க. என் பொண்ணைப் போல பத்திரமா பார்த்துக்கிறேன்’னு சொல்லியிருக்கார். அப்பா சம்மதமும் சொல்லலை, மறுக்கவும் இல்லை. வீட்டு நிலைமை அப்படி.அதன்பிறகு 1958-லதான் நாடகத்துல நடிக்க வந்தேன். நான் நடித்த முதல் நாடகம் “தீர்ப்பு கூறுங்கள்’. அடுத்து பி.ஏ.கிருஷ்ணன் நாடகங்களில் நடித்தேன். அவர்தான் என் நாடக குரு. என்னை எப்படி நடிக்கணும்னு மோல்ட் பண்ணினவர் அவர்தான். அதன் பிறகு ஓ.ஏ.கே. தேவர், சிவாஜி அண்ணன் ட்ரூப்ன்னு நடிக்க ஆரம்பிச்சேன்.கணேசன் அண்ணன் ட்ரூப்ல பக்கிரி சாமி அண்ணன் ஒருத்தர் ஒரு டயலாக் சொல்லி கொடுத்தார். “காட்டு சந்தையில மாட்டுச் சண்டை போட்ட நாட்டு முத்துக் கோனாரு வீடு இதனாய்யா’னு கேட்கணும்.இதுதான் என் டயலாக். இந்த ரெண்டு வரி டயலாக்கை ரெண்டு மாசம் மனப்பாடம் பண்ணேன்னா பாருங்க. இப்போ இத்தனை வருஷம் ஆகியும் அந்த டயலாக் மறக்கல. அந்தளவுக்கு மனப்பாடம் பண்ணியிருக்கேன். இப்படி நாடகத்துல நடிக்கும்பொழுதே 1961ல எனக்குத் திருமணம் ஆகிடுச்சு. என் கணவர் பேரு சாரங்கன். அவருகிட்ட, “எனக்கு நடிக்கறதுல ரொம்ப ஆர்வம் இருக்கு. அதனால என்னை நடிக்க விடுவீங்களா?’ன்னு கேட்டேன். அவரும் என் ஆர்வத்தைப் பார்த்துட்டு என் மீது இருந்த நம்பிக்கையினால அனுமதி கொடுத்தாரு.அதன் பிறகு தொடர்ந்து நாடகங்களில் நடிக்க ஆரம்பிச்சேன். ஏவி.ஏம்.ராஜன், காத்தாடி ராமமூர்த்தி, சேஷாத்திரி, ஸ்ரீகாந்த், வி.எஸ்.ராகவன், ஃப்ரண்ட் ராமசாமி, எம்.ஜி.ஆர்னு எல்லாரோட ட்ரூப்லயும் நடிச்சேன். எம்.ஜி.ஆர். ட்ரூப்ல “மனிதருள் மாணிக்கம்’ என்ற நாடகம், அதேபோல கணேசன் அண்ணன் ட்ருப்ல “என் தங்கை’ நாடகம் குறிப்பா சொல்லணும். ஜெயசங்கர் ட்ரூப்ல நடிக்கும்போது அவர்தான் “எஸ்.என்.பி. அம்மா’ன்னு கூப்பிட ஆரம்பித்தார். அதன் பிறகு நாடக உலகத் தந்தை டி.கே. சண்முக அண்ணாச்சியோட 5000 நாடகங்களுக்கு மேல் நடிச்சிருக்கேன். ஒரே நாள் ஏழு நாடங்கள் கூட நடிச்சிருக்கேன்ன்னா பார்த்துக்கோங்களேன். அப்ப எல்லாம் எங்களுக்கு சம்பளம் பார்த்தீங்கன்னா 50 ரூபா அல்லது 60 ரூபாதான். ஆனால் அப்போ அதுவே பெரிய சம்பளம்.அப்போ எல்லாம் ஊர் ஊராகப் போய் கிராமங்களில் அரசு தரப்புல ஐந்தாண்டு திட்ட விழிப்புணர்வு நாடகங்கள் நிறைய போடுவோம்.ரங்கசாமி அண்ணன் ட்ரூப்ல தஞ்சாவூர் பக்கம் நாடகத்துக்காகப் போகும்போது ஒரு ஆக்ஸிடெண்ட் ஆகிடுச்சு. அப்போது நான் நிறைமாத கர்ப்பிணி. ஒரு ஆத்துப் பாலத்து மேல வண்டி போய்கிட்டு இருக்கும்போது திடீர்னு வண்டி நிலை தடுமாறி பாலத்து சுவர்ல போய் மோதி தலை கீழே தொங்குது. ஒருத்தர் அசைஞ்சாலும் வண்டி ஆத்துல விழுந்துடும். எல்லாரும் பயந்து போய்ட்டோம். அவ்வளவுதான். நாம இனி பிழைக்க மாட்டோன்னு நான் அழ ஆரம்பிச்சுட்டேன். வி.கே.ஆர். அண்ணன், “அழாதம்மா..’ன்னு சொல்லி சமாதானம் செய்யறாரு. அதுக்குள்ள பக்கத்துல இருந்த ஊர்க்காரங்க எல்லாம் வந்து காப்பாற்றினார்கள்.கோலார் தங்கவயல்ல சுருளி ராஜனோடு நடித்த நாடகம் எல்லாம் மறக்கவே முடியாது. டயலாக்கே தெரியாது. அடுத்து என்ன வசனம் பேசணும்னு கேட்டால் தெரியாது. ஏதாவது கவுன்டர் கொடும்மான்னு சொல்லுவார். என்ன செய்யறதுன்னு யோசிச்சுட்டே இருப்பேன். ஆனா தன்னாலேயே கவுன்டர் வந்துடும். பாய்ஸ் கம்பெனியில் நடித்த நாடகங்கள்தான் கடைசியா நான் நடித்த நாடகம். அந்த நேரத்துல சினிமாவுல நடிக்க வாய்ப்பு வந்தது. என் கணவர் என்ன சொல்லுவாரோன்னு பயந்தேன். ஏன்னா அவுட்டோர் எல்லாம் போகணும். நான் போய்ட்டா அவருக்கு யார் சமைக்கிறதுன்னு யோசிச்சேன். ஆனா, அவர் சினிமாவில் நடிக்க ஒத்துக்கிட்டாரு. என்னுடைய முதல் படம் “பணம் தரும் பரிசு’. முதல் படத்திலேயே அம்மாவாதான் நடிச்சேன். அந்தப் படத்துல ஹீரோ திருச்சி சௌந்தரராஜன். ஹீரோயின், கவிஞர் வாலி அண்ணனோட மனைவி ரமணதிலகம்.அதோடு அம்மா கேரக்டர்ன்னு முத்திரை குத்திட்டாங்க. அதிலிருந்து இதுவரை   அம்மாவா நடிச்சுட்டேன். அந்தப் படத்துல நடிக்கும்பொழுது எனக்கு 18 வயசுதான். அப்பவே அம்மா கேரக்டரில் நடிச்சுட்டேன். அடுத்து கணேசன் அண்ணனோட படம், “கலாட்டா கல்யாணம்’. நாகேஷோட காம்பினேஷன். அதுல ஒரே ஒரு சீன்தான் நடிச்சேன். இன்னமும் அந்த காமெடி டிவியில அடிக்கடி போட்டுகிட்டு  இருக்காங்க. நீங்க கூட பாத்திருப்பீங்க. “கலாட்டா கல்யாணம்’ படத்துல கணேசன் அண்ணன் (நடிகர் திலகம் #சிவாஜிகணேசன்)  நாகேஷ் சாருக்கு என்னை மாமியாராக நடிக்க கூட்டிட்டுப் போவார். அப்ப “நீ நல்லா நடிச்சா உனக்கு என்ன வேணும்’னு கேட்பார். நான் அதைப் புரிஞ்சிக்காம, “என்ன ஒரு  “சிங்கள் சாயா’ன்னு சொல்வேன். படம் வந்த பிறகு நாகேஷ் சார் விளையாட்டாச் சொல்லுவாரு. “படம் முழுக்க வந்த எனக்குப் பேர் வரல. நீ ஒரு சீன்ல எல்லோரையும் சிரிக்க வெச்சிட்டியே’ம்பார்.  அந்த காமெடியை நினைவு வெச்சி என்னை  “சாயா’ன்னுதான் கணேசன் அண்ணன் கூப்பிடுவாரு. அதன் பிறகு அவரோட “சுமதி என் சுந்தரி’, “இமயம்’.. இப்படி பத்து படங்கள் அவரோட பண்ணினேன்.எம்.ஜி.ஆர் அண்ணனோடு “நான் ஏன் பிறந்தேன்’, “கணவன்’ இப்படி நாலைந்து படங்கள் நடித்தேன். அவரோட நாடக ட்ரூப்ல நிறைய நாடகங்கள் நடிச்சிருக்கேன்.   அதேபோல “சுமதி என் சுந்தரி’, “சூரிய காந்தி’ இப்படி நிறைய படத்தில் ஜெயலலிதாம்மாவோட நடித்தேன். ஷூட்டிங் ஸ்பாட்ல ஜெயலலிதாம்மாவை அம்முன்னுதான் கூப்பிடுவாங்க. அதைப் பார்த்து ஆசைப்பட்டுதான் என் மகளுக்கு அம்முன்னு பேர் வெச்சேன்.வி.கே. ராமசாமி அண்ணனோட நிறைய படங்கள் நடிச்சிருக்கேன். ஜெய்சங்கர், முத்துராமன். இவங்களோட படங்களும் நிறைய நடிச்சிருக்கேன். பாலசந்தர் சார் படங்கள், “அனுபவி ராஜா அனுபவி’, “பாமா விஜயம்’ போன்ற படங்கள் நடிச்சிருக்கேன். பானுமதியம்மாவோட ஒரே ஒரு படம்தான் நடிச்சிருக்கேன். பானுமதியம்மா டேலண்ட் பார்த்து நான் வியந்து போயிருக்கேன்.அதன்பிறகு 1985-ல் “சுமை’ படம் பண்ணதுலதான் எனக்கு கலைமாமணி விருது கிடைச்சது. அப்போ எம்.ஜி.ஆர் உடல்நிலை சரியில்லாமல் அமெரிக்காவில இருந்ததால கவர்னர் அந்த விருதை கொடுத்தார். அதன் பிறகு ஆதித்தனார். கலைச்செல்வம், குணச்சித்திர நடிகை விருதெல்லாம் வாங்கினேன்.எனக்கு ரொம்ப பேர் வாங்கிக் கொடுத்தது “பசி’ படம். அது எனக்கு பெரிய பிரேக் கொடுத்தது. “பசி’ வந்த பிறகுதான் பிஸி ஆனேன். அதுக்கு துரை சாருக்குதான் நன்றி சொல்லணும். அடுத்து தம்பி கமல்ஹாசனோடு நிறைய படங்கள் நடிச்சிருக்கேன். “சகலகலா வல்லவன்’, “சத்யா’. அதேபோல ரஜினி தம்பியோடவும் “அதிசய பிறவி’, “நான் அடிமை இல்லை’, “ஊர்க்காவலன்’ போன்று நிறைய படங்கள் நடிச்சிருக்கேன். ஜெயராம்-குஷ்பு நடிச்ச “மனசு ரெண்டும் புதுசு’ போன்ற படங்கள் எல்லாம் நடிச்சிருக்கேன். மொத்தம் 150 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறேன். அதன் பிறகு டிவியில் பொதிகை சேனல் எப்போ ஆரம்பித்தார்களோ அன்றிலிருந்தே டிவி  தொடர்களில் நடித்து வருகிறேன். “சொந்தம்’, “கணவருக்காக’, “அகல்யா’ நிறைய தொடர்களில் நடித்திருக்கிறேன். தற்போது “முந்தானை முடிச்சு’ தொடரில் நடித்து வருகிறேன்.  எனக்கு ஒரு மகன், ஒரு மகள். மகன் என்ஜினீயராக இருக்கிறார். மகள் பிஸியோதெரபி டாக்டரா இருக்காங்க. இரண்டு பேருக்கும் திருமணமாகி செட்டிலாகிட்டாங்க. பர்மா உணவான மோங்கா, மோலேசா இப்பவும் பர்மா பஜாரில் கிடைக்குது. இங்க நான்-ரொட்டி சொல்லுவோமே அதை அங்கே டீயில் தொட்டு சாப்பிட்ட சுவை இன்னுமும் என் நாவில் இனிக்கிறது. இன்னமும் என் சொந்தக்காரர்கள் நிறைய பேர் அங்கேதான் இருக்கிறார்கள். பர்மாகாரர்கள் நட்புக்கு நிறைய முக்கியத்துவம் கொடுப்பார்கள். வாய்ப்புக் கிடைத்தால் ஒரு முறை மறுபடியும் பர்மா போய் பார்க்க வேண்டும் என்று ஆசை இருக்கிறது!”

🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯


No comments:

Post a Comment