FRIENDSHIP BETWEEN MGR WITH KALAIGNAR
மதுரையிலிருந்து கலைஞர் திருச்செந்தூருக்கு நடைப்பயணம் சென்றார்.
அன்றைக்கு அவர் எதிர்க்கட்சித் தலைவர். அந்தப் பயணம் அண்ணா தி.மு.க அரசுக்குத் தற்காலிகத் தலைவலி தான்.
விருதுநகரைக் கடந்து செல்லும்போதே கலைஞருக்குக் காலில் கொப்புளங்கள் என்று தகவல்கள் வந்தது. மருத்துவர்கள் சிகிச்சை அளித்ததாகவும் ஆனாலும் காலில் கட்டுப்போட்டு நடைப் பயணத்தை கலைஞர் தொடர்கிறார் என்றும் சேதிகள் வந்தன.
அப்போது மாம்பலத்தில் உள்ள தமது அலுவலகத்தில் எம்.ஜி.ஆர் இருந்தார். அவருக்கு மதிய உணவு பரிமாற முத்தண்ணன் தயாராக இருந்தார். ஆனால் எம்.ஜி.ஆர் தனது அறையை விட்டு வெளிவரவில்லை.
எம்.ஜி.ஆருடைய அழைப்பின் பேரில் நானும் காத்திருந்தேன். முத்தண்ணன் தைரியம் சொன்னார்.
“லேசாகக் கதவைத் தட்டிவிட்டு நீங்கள் அறையைத் திறங்கள்” என்றார்.
அச்சத்தோடு அவ்வாறே செய்தேன்.
“உள்ளே வாருங்கள்” என்று எம்.ஜி.ஆர் அழைத்தார்.
“மணி ஒன்றரை. இன்னும் நீங்கள் சாப்பிட வில்லையே?” என்றேன்.
“அதை விட முக்கியமான ஒரு வேலை. நடைப்பயணம் சென்ற கலைஞரின் காலில் ரத்தம் கசிகிறதாம். தற்போது அவர் எங்கு தங்கியிருக்கிறார் என்று தேடிக் கொண்டிருக்கிறேன்.
சிவகாசியில் தங்கப் போகிறாராம். அவருடன் பேசிய பிறகு தான் உணவு. உங்களுக்குப் பசி தாங்காது. நீங்கள் சாப்பிடுங்கள்” என்றார் எம்.ஜி.ஆர்.
சற்று நேரத்தில் கலைஞருடன் தொலைபேசித் தொடர்பு கிடைத்ததுமே உடல்நலம் பற்றி கரகரத்த குரலில் விசாரித்தார்.
” டாக்டர்களை உடனே அனுப்பி வைக்கிறேன்.” என்றார்.
தம்முடன் டாக்டர்களும் பயணம் செய்வதாகக் கூறினார் கலைஞர்.
நடைப்பயணத்தை விடுத்து வேறு விதமாக கலைஞர், தமது பயணத்தைத் தொடரலாம் என்பது எம்.ஜி.ஆரின் கருத்து. ஆனால் அதைச்சொல்ல அவருக்கு வாய் வரவில்லை. வார்த்தைகளும் வரவில்லை.
“சோலை.. நான் கலைஞரிடம் உடல்நலம் பற்றி விசாரித்தது உங்கள் ஒருவருக்குத் தான் தெரியும். எந்தக் காரணத்தைக் கொண்டும் ஏடுகளில் இப்போது இது செய்தியாக வந்து விடக்கூடாது. எங்களுடைய நட்பு அத்தகையது. என்னுடைய இந்த முன்னேற்றத்திற்கு கலைஞரும் ஒரு காரணம்”. என்றார்.
– மூத்த பத்திரிகையாளரான சோலை எழுதிய கட்டுரையில் இருந்து ஒரு பகுதி.
நன்றி : 27.12.1998 ஆனந்தவிகடன் வார இதழ்
No comments:
Post a Comment