Monday 31 May 2021

FREEDOM FIGHTER DR.D.V.SWAMINATHA SHASTRIGAL BIOGRAPHY

 



FREEDOM FIGHTER 

DR.D.V.SWAMINATHA SHASTRIGAL BIOGRAPHY



சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத் தியாகிகள்.

45. திருச்சி டாக்டர் டி.வி.சுவாமிநாத சாஸ்திரி.

தொகுப்பு: வெ. கோபாலன்.


ஒரு காலத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் அலுவலகம் திருச்சியில்தான் இருந்தது என்பது பலருக்கு இன்று தெரிந்திருக்க நியாயமில்லை. கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி கூட முதன் முதலில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஆபீசில் திருச்சியில்தான் பணிசெய்து கொண்டிருந்தார் என்பதும் புதிய செய்தியாக பலருக்கு இருக்கும். தமிழ்நாடு காங்கிரசின் தலைமை அகமாகத் திகழ்ந்த திருச்சி மாநகரில் அப்போது காங்கிரஸ் கட்சியைக் கட்டிக் காத்து வளர்த்த தியாகச் செம்மல்கள் பலரில் குறிப்பிடத்தக்கவர் டாக்டர் டி.வி.சுவாமிநாத சாஸ்திரி ஆவார்.


இவர் தொழில் முறையில் மருத்துவராக இருந்து திருச்சி நகர மக்களின் பேரன்புக்கு பாத்திரமானவர். இவரது தந்தையார் வாசுதேவ சாஸ்திரியார். இவர் 1887ஆம் ஆண்டு பிறந்தார். திருச்சி சிங்காரத் தோப்பில் "சத்தியாக்கிரக விலாஸ்" எனப் பெயரிடப்பட்ட வீட்டில் இவரது வாசம். பள்ளிக்கூடத்தில் படிக்கும் காலத்திலேயே நாடு சுதந்திரம் பெற வேண்டும் எனும் பேரவா இவருக்கு உண்டு. மருத்துவப் பட்டப்படிப்பு படித்து புகழ்மிக்க மருத்துவராக இவர் பிராக்டீஸ் செய்து வந்த போதும் தேச சேவையையே பெரிதும் விரும்பி செய்யத் தொடங்கினார். 1912இல் இவர் சுதேச இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 1921இல் நடந்த ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டு IPC செக்ஷன் 123யின் கீழ் தண்டிக்கப்பட்டு ஒரு வருஷம் சிறைவாசம் இருந்தார். 1930இல் நடந்த உப்பு சத்தியாக்கிரகத்தில் இவர் மட்டுமல்ல இவரது குடும்பம் முழுவதுமே ஈடுபட்டு அடிபட்டு சிறை புகுந்து சகல கஷ்டங்களையும் பட நேர்ந்தது. இந்த தியாக வரலாற்றில் இடம் பிடித்துவிட்ட இவர் குடும்பத்தின் மற்றவர்கள், இவரது மனைவி கல்யாணி, சாஸ்திரியாரின் சகோதரன் மகன் கணபதி சாஸ்திரி, மகள் சுப்பலக்ஷ்மி, சுப்பலக்ஷ்மியின் கணவர் ராமரத்தினம், இவரது சகோதரரும் பிரபல வக்கீலுமான டி.வி.பாலகிருஷ்ண சாஸ்திரி ஆகியோரும் சிறைசென்ற தியாக சீலர்கள். குடும்பமே நாட்டுக்காக சிறைசென்ற வரலாறு வேறு எங்கேயாவது, எவராலாவது நடத்தப்பட்டதா என்பது நமக்குத் தெரியவில்லை, நேரு குடும்பத்தைத் தவிர. இவர்கள் அனைவரும் கைதாகி கண்ணனூர் சிறையில் ஆறு மாத காலம் வைக்கப்பட்டிருந்தனர்.


சுவாமிநாத சாஸ்திரியார் அழகான தோற்றமுடையவர். நடுவகிடு எடுத்து வாரப்பட்ட கிராப்புத் தலை. சிவந்த மேனி, எப்போதும் சிரித்த முகம், கலகலப்பான பேச்சு இவை சாஸ்திரியாரின் முத்திரைகள். ரத்தினவேல் தேவருக்கு இவர் மிகவும் நெருங்கிய நண்பர். கதர் பட்டு சட்டை அணிந்து, அங்கவஸ்திரம் தரித்து பார்ப்பதற்கு எப்போதும் கண்ணியமான தோற்றத்தோடு விளங்குவார். கையில் ஒரு ஓலைப்பெட்டி. அதில் நூல் நூற்பதற்கான பஞ்சு பட்டைகள், கையில் ஒரு தக்ளி இவை சகிதமாகத்தான் அவர் எப்போதும் இருப்பார். ஏழை மக்களுக்கு அவர் அந்தக் காலத்திலேயே இலவசமாக சிகிச்சை அளித்து வந்தார்.


திருச்சி ஜில்லா காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இவர் இருந்தார். அதுமட்டுமல்ல திருச்சி ஜில்லா ஹரிஜன சேவா சங்கத்தின் தலைவர் பதவியும் இவரிடம்தான் இருந்தது. இவை இரண்டிலும் இவர் ஆற்றிய பணிகள் இன்றும்கூட நினைவு கூரத் தக்கவையாகும். அவருக்குச் சொந்தமான பிரம்மாண்டமான "சத்தியாக்கிரக விலாஸ்" எனும் மாளிகையைவிட்டு நீங்கி தென்னூரில் தாழ்த்தப்பட்டவர்கள் வசிக்கும் சேரிப்பகுதியில் ஒரு குடிசையை அமைத்துக் கொண்டு அந்த ஏழை ஜனங்களுக்கு மருத்துவ உதவியையும் செய்து கொண்டு, தேசப்பணியாற்றினார்.


சிறையில் சுவாமிநாத சாஸ்திரியாரின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. அதுமுதல் அவர் உடல் நலம் கெட்ட நிலையில்தான் பொதுத் தொண்டிலும் கவனம் செய்து வந்தார். இந்த காரணத்தினால் 1942 ஆகஸ்ட்டில் நாடு முழுவதும் எழுச்சியுற்ற "ஆகஸ்ட் புரட்சியில்" இவரால் ஈடுபடமுடியவில்லை. டாக்டர் சுவாமிநாத சாஸ்திரி ஒரு தமிழ் எழுத்தாளர். இவரது எழுத்துக்கள் படித்தவர்கள் மத்தியில் ஓர் எழுச்சியை ஏற்படுத்தியது. இவர் சில சிறுகதைகளையும் எழுதியிருக்கிறார். அந்தக் கதைகளின் மையக் கரு ஒத்துழையாமை இயக்கம்தான். இலக்கியத்திலும் அவரது நாட்டுப் பற்று, சமுதாயப் பற்று வெளிப்பட்டிருப்பதைக் காணமுடிகிறது. இவர் ஒரு பத்திரிகை ஆசிரியரும்கூட. இவர் நடத்திய பத்திரிகையின் பெயர் "களி ராட்டை" என்பதாகும். இந்த பத்திரிகையின் மூலம் மகாத்மா காந்தியடிகளின் தேச நிர்மாணப் பணிகளைப் பரப்பி வந்தார். தீரர் சத்தியமூர்த்தி இவரது நெருங்கிய நண்பர். சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட இந்த பெருமகன் சுதந்திரம் பெறுவதற்கு ஓராண்டுக்கு முன்பாக 13-7-1946இல் காலமானார். இவர் காலமானபோது மகாத்மா காந்தி தன் கைப்பட இரங்கல் கடிதமொன்றை இவர் மனைவி கல்யாணி அம்மாளுக்கு எழுதியிருந்தார். தனது தூய வாழ்க்கையாலும், உயர்ந்த தியாகத்தாலும், தேசபக்தி ஒன்றையே செல்வமாகத் தனது குடும்ப வாரிசுகளுக்கு விட்டுச் சென்ற இந்த தியாக சீலரின் புகழ் வாழ்க!

திருச்சி – டாக்டர் சுவாமிநாத சாஸ்திரி சாலை


திருச்சி தென்னூர் சாஸ்திரி சாலையில்  (அருகில் தில்லைநகர் )அந்த சாலையில் அடிக்கடி வண்டியில் சென்று இருக்கிறேன். அப்போது அவ்வளவு போக்குவரத்து இல்லை. அவ்வாறு செல்லும் போதெல்லாம் “சாஸ்திரி சாலை என்பது, மறைந்த பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி பெயரில் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன். 

சாஸ்திரி சாலை:

தென்னூர்  வியாபார நிறுவனங்களிலும், சில கடைகளிலும் இருந்த பெயர்ப் பலகைகளில் சாஸ்திரி சாலை  அல்லதுS.S.சாலை என்று இருப்பதைக் கண்டேன். அதாவது சுவாமிநாத சாஸ்திரி சாலை என்ற பெயரை அவ்வாறு சுருக்கி எழுதி உள்ளனர். சுவாமிநாத சாஸ்திரி  என்பவர் யார் என்று என்னோடு பணிபுரிந்த நண்பர்களிடம் கேட்டதில் அவர்களுக்கும் தெரியவில்லை. தென்னூரும் அருகில் உள்ள தில்லைநகரும் டாக்டர்களும் கிளினிக்குகளும் நிரம்பிய பகுதியாகும். எனவே யாராவது ஒரு டாக்டர் பெய்ராக இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன்.

அண்மையில் மூத்த பத்திரிகையாளர் கே.சி. லட்சுமி நாராயணன் அவர்கள் எழுதியதலித்துகளும் பிராமணர்களும் என்ற நூலைப் படிக்க நேர்ந்தது. அதில் சுவாமிநாத சாஸ்திரி அவர்களைப் பற்றிய குறிப்புகளைப் படிக்க முடிந்தது. அவர் ஒரு டாக்டர். மேலும் இண்டர்நெட்டில் தேடியதிலும் சில குறிப்புகள் கிடைத்தன. அவற்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

சிறந்த காந்தியவாதி (ஹரிஜன சேவா சங்கம் )

மகாத்மா காந்தி அவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சேவை செய்வதற்காக ஹரிஜன சேவா சங்கம் “ என்ற அமைப்பை தொடங்கினார். அதில் காங்கிரசார் பலர் இணைந்து கொண்டு சேவை செய்தனர். அவர்களுள் ஒருவர் திருச்சி டாக்டர் டி.வி.சுவாமிநாத சாஸ்திரி அவர்கள். இவர் திருச்சி ஜில்லா காங்கிரஸ் கமிட்டிதலைவராகவும்,  திருச்சி ஜில்லா ஹரிஜன சேவா சங்கத்தின் தலைவராகவும் இருந்தவர்.

இவருடைய சொந்த ஊர் கும்பகோணம். இவருடைய தந்தையின் பெயர் வாசுதேவ சாஸ்திரி. தாயார் இலட்சுமி அம்மாள். இவர் சென்னையில் மருத்துவக் கல்லூரியில் படித்தபோதே காந்திய கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவராய் இருந்தார். திருச்சியில் இருந்தபோது ஹரிஜன சேவா சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தீண்டாமையை எதிர்த்து பிரச்சாரம் செய்தார். சொன்னதோடு இல்லாமல் திருச்சி தென்னூரில் மல்லிகைபுரம், சங்கிலிச்சேரி ஆகிய இரு தாழ்த்தப்பட்ட குடியிருப்புகளுக்கு மத்தியில் தனது மருத்துவமனையைக் கட்டினார். இவரை சிலர் சம்பாதிக்கத் தெரியாதவர் என்றும் பைத்தியம் என்றும் கிண்டல் செய்தனர். இவர் பிராமணர் என்பதால், இவருடைய உறவினர்கள் இவரை சாதிவிலக்கும் செய்தனர். ஆனால் டாக்டர் சுவாமிநாத சாஸ்திரி அவர்கள் எதனைப் பற்றியும் கவலைப்படாது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இலவசமாக மருத்துவ உதவிகள் செய்தார்.

மேலும் சாதி ஒழிப்பு, பெண்ணுரிமை, விதவைகள் மறுமணம் போன்ற சமூக சீர்திருத்தங்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 1921 இல் நடந்த ஒத்துழையாமை இயக்கப் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஒரு ஆண்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். 1930 இல் நடைபெற்ற உப்பு சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டதால் இவரது மனைவி உட்பட குடும்பமே ஜெயிலுக்கு போனது. ஆஸ்பத்திரியில் தன்னிடம் வரும் நோயாளிகளை பார்க்கும்போதும் கூட ராட்டையில் நூல் நூற்றுக் கொண்டிருந்தார். 1934 இல் இவர் தொடங்கிய பத்திரிகையின் பெயர் “களிராட்டைஎன்பதாகும்.

தொண்டின் நினைவாக:

டாக்டர் சுவாமிநாத சாஸ்திரி அவர்கள் செய்த ஹரிஜன சேவையைப் பாராட்டி, டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்கள் தங்கத்தினால் ஆன நூல் நூற்கும் தக்ளியையும், தங்க பதக்கத்தையும் கொடுத்து கௌரவப்படுத்தினார்.

1961 இல் திருச்சியில் நடைபெற்ற காங்கிரஸ் கமிட்டி மாநாட்டு பந்தலுக்கு டாக்டர் சுவாமிநாத சாஸ்திரியின் பெயர் காமராஜரின் உத்தரவுப்படி வைக்கப்பட்டது.

சாஸ்திரிக்கு பெரியார், காமராஜர், சத்தியமூர்த்தி, டாக்டர் டி.எஸ்.எஸ். ராஜன், கல்கி, எஸ்.எஸ்.வாசன், சதாசிவம் ஆகியோருடன் நல்ல தொடர்பு இருந்தது.

1887இல் பிறந்த டாக்டர் சுவாமிநாத சாஸ்திரி அவர்கள் சிறைவாசத்தின் போது ஏற்பட்ட காசநோயின் காரணமாக 1946 ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 19 ஆம் நாள் மரணம் அடைந்தார் பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் விடுதலை பத்திரிகையில் அவரது சேவையைப் பாராட்டி ” டாக்டர் சுவாமிநாத சாஸ்திரியின் வாழ்க்கை, மக்கள் அனைவருக்கும் ஓர் எடுத்துக்காட்டாகத் திகழும் “ என்று குறிப்பிட்டு, ஒரு தலையங்கம் எழுதினார்.  

சாஸ்திரி அவர்களின் தொண்டினை நினைவு கூறும் வண்ணம், அவர் வசித்த தென்னூர் பகுதியில் உள்ள ஒரு நீண்ட சாலைக்கு (திருச்சி கோகினூர் தியேட்டலிருந்து தென்னூர் மேம்பாலம் வரை (சிப்பி தியேட்டர் இருக்கும் சாலை) சுவாமிநாத சாஸ்திரி சாலை என்று பெயர் சூட்டப்பட்டது. திருச்சிராப்பள்ளியை திருச்சி என்றும், புதுக்கோட்டையைப் புதுகை என்றும் ஊர்ப் பெயர் முதலானவற்றை சுருக்குவது வழக்கம். அதே போல டாக்டர் சுவாமிநாத சாஸ்திரி சாலையின் பெயரை மக்கள் குறிப்பிடும் போது சாஸ்திரி சாலை என்றும் கடைக்காரர்கள்S.S.சாலை என்றும் சுருக்கிவிட்டார்கள்.

( இந்த பதிவினில் டாக்டர் டி.வி.சுவாமிநாத சாஸ்திரி அவர்களது படத்தினை வெளியிட ஆசைப்பட்டேன். எவ்வளவோ முயற்சி செய்தும் கிடைக்காதது எனக்கு பெரிய குறைதான்.)

நன்றி!  இந்த கட்டுரையை எழுத துணை நின்றவை:
தலித்துகளும் பிராமணர்களும்  நூலாசிரியர் கே.சி. லட்சுமி நாராயணன்
தமிழ் நாட்டுச் சுதந்திரப் போராட்ட தியாகிகள்  கட்டுரை
ஆசிரியர் வெ.கோபாலன்
Chitti recollects...  An Article  

No comments:

Post a Comment