Friday 21 May 2021

KI. RAJ NARAYANAN WRITER 1923 SEPTEMBER 16 -2021 MAY 17

 

KI. RAJ NARAYANAN WRITER 

1923 SEPTEMBER 16 -2021 MAY 17



வெய்யில்-.                                           

"ஆனந்த விகடன்" 

   கரிசல் மக்களின் துயரங்களையும் கொண்டாட்டங்களையும், அவர்களின் அசல் மொழியிலேயே பதிவு செய்த தமிழின் மூத்த எழுத்தாளர் கி.ராவுக்கு வயது 95. 

அவரைப் பற்றிய குறிப்புகளும், அவரது சில கருத்துகளும் இங்கே...

* கி.ரா என்கிற கி.ராஜநாராயணன். (முழுப்பெயர், ராயங்குல ஸ்ரீ கிருஷ்ண ராஜ நாராயணப் பெருமாள் ராமானுஜ நாயக்கர்.) 1923-ம் ஆண்டு செப்டம்பர் மாதம்  16-ம் தேதி  பிறந்தார். ஸ்ரீகிருஷ்ண ராமானுஜம், லட்சுமி அம்மாள் தம்பதியரின் ஐந்தாவது பிள்ளை கி.ரா.

* “மழைக்குத்தான் பள்ளிக்கூடம் ஒதுங்கினேன். பள்ளிக்கூடத்தைப் பார்க்காமல் மழையைப் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டேன்” இப்படிச் சொல்லும் கி.ரா 8-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தார்.

* “அசட்டுத்தனங்கள் பல கொண்டதுதான் இந்த உலகமாக இருக்கிறது; அதில்தான் சுவாரஸ்யமும் இருக்கிறது”, “காதல் ஒரு தடவை மட்டும் வந்து போவதில்லை; வந்துகொண்டே இருப்பது” என்று வாழ்க்கையைப்பற்றி சுவாரஸ்யமான கருத்துகளைக் கொண்டிருப்பவர். கி.ரா துணைவி கணவதி அம்மாள் தனக்கு அமைந்தது பெரும்பேறு என்கிறார். திவாகரன், பிரபாகரன் என கி.ராவுக்கு இரண்டு மகன்கள்.


* இப்போது, புதுச்சேரி பல்கலைக்கழக வளாகக் குடியிருப்பில் தன் மனைவியுடன் வசித்து வருகிறார்.

*   “நான் என்பது முக்கால் பங்கு இசை; கால் பங்குதான் இலக்கியம்” இதுதான் கி.ரா. மிகுந்த ஆசையோடு வயலின் கற்றுக்கொண்டார். ஆனால், பயிற்சியை முழுமையாக முடிக்கவில்லை. நாயன இசை என்றால் கி.ராவுக்குக் கொள்ளைப் பிரியம். “ஒரு கைதி ஜன்னல் வழியாக ஆகாயத்தைப் பார்ப்பதுபோல இலக்கியத்திலிருந்து நான் இசை உலகத்தைப் பார்க்கிறேன்” என்பார்.

* தி.ஜானகிராமனின் ‘பாயசம்’ கி.ராவுக்கு பிடித்த சிறுகதை. ரஷ்ய எழுத்தாளர் ஆண்டன் செகாவ் கி.ராவின் விருப்பத்திற்குரிய எழுத்தாளர்.

* 30 வயதுக்கு மேல்தான் எழுதத் தொடங்கினார் கி.ரா. கோவிந்தன் நடத்திய ‘சக்தி’ இதழில் ‘சொந்தச் சீப்பு’ எனும் முதல் சிறுகதை வெளியானது.




* ‘கரிசல் இலக்கியத்தின் முன்னத்தி ஏர்’ என்று எழுத்தாளர்களால் புகழப்படுகிறார். தமிழின் குறிப்பிடத்தக்க எழுத்தாளரான கு.அழகிரிசாமி, கி.ராவின் உற்ற நண்பர். பக்கத்து வீட்டுக்காரர். இருவரின் கடித உறவு தமிழ் இலக்கிய உலகில் மிகப் பிரபலம்.

* “நான் பேனாவை எடுத்ததே கதை எழுதுவதற்காக அல்ல. கடிதங்கள் எழுதத்தான். எப்படியோ ஒரு சுவாரஸ்யம் எழுத்தில் பற்றிக்கொண்டது’’ என்பார். 

*  அம்ஷன் குமார் எடுத்த ‘ஒருத்தி’ திரைப்படம், கி.ராவின் ‘கிடை’ குறுநாவலை அடிப்படையாகக்கொண்டது.

* இயக்குநர் கே.பாலசந்தரின் ‘அச்சமில்லை அச்சமில்லை’ திரைப்படத்திற்கான வசனத்தி்ன் வட்டாரச் சொற்களுக்கு கி.ரா தொகுத்த வட்டார வழக்குச் சொல் அகராதி பயன்படுத்தப்பட்டது.

* “ஒரே நேரத்தில் கதையை எழுதி முடிக்கும் வழக்கம் என்னிடம் இல்லை. அடிச்சு அடிச்சுத் திருத்தித் திருத்தி எழுதுகிற ஆள் நான்” என்பார் தன்னடக்கத்தோடு.

*  ‘கோபல்லபுரத்து மக்கள்’ ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்து வாசகர்களிடம் பெரிதும் கவனம் பெற்றது. கூடவே, சாகித்ய அகாடமி விருதும் கிடைத்தது.

* இவரது ‘கதவு’ சிறுகதை வாசகர்களால் பெரிதும் கொண்டாடப்படுவது. பலர் அதைக் குறும்படமாக எடுத்திருக்கிறார்கள்.

* பிடித்த தலைவர் எனக் கேட்டால், `காந்தி பாதி; பெரியார் மீதி’ என்பது கி.ரா பதில்.

* 60 வருடங்களாகத் தினமும் ‘இனிமா’ எடுத்துக்கொள்கிறார். மருத்துவர்கள் இதைக் கேட்டு ஆச்சர்யப்படுகிறார்கள். “சிறு வயது முதலே பெரும் நோயாளி நான். எனக்கு வந்ததுல ஒரே ஒரு வியாதி கண்டாலே அவனவன் செத்துருவான்” என்கிறார் ஜாலியாக.

* படுத்தால் இருமல் வந்துவிடும் என்பதால், ஈ.சி சேரில் சாய்ந்தபடியே பல காலம் தனது தூக்கத்தைக் கழித்திருக்கிறார் கி.ரா.

* இடதுசாரி இயக்கங்களில் உறுப்பினராக இருந்து செயல்பட்டவர். தோழர் ஜீவா, எழுத்தாளர் ஜெயகாந்தன் போன்றோருடன் நெருங்கிப் பழகியவர்.

* “தமிழ்க் கவிதைகள்ல எல்லா வழிமுறைகள்லேயும் சொல்ல வேண்டியதைச் சொல்லியாச்சு. புதுசா சொல்றதுக்கு ஒண்ணுமில்லை. என்னைக் கேட்டா, தமிழ்ல கவிதையைத் தடை செய்யணும்பேன்” என்பது  கவிதைகள் பற்றிய கி.ராவின் கருத்து.

* “மனிதனுக்கு வைத்தியம் செய்யணும்னா, அதைக் கதைகளைக் கொண்டுதான் செய்ய முடியும்” என்று சொல்லும் கி.ரா தமிழில், வட்டார மொழியிலுள்ள வசவுச் சொற்களைத் தொகுத்துக்கொண்டிருக்கிறார். தேடல் இன்னும் முடியவில்லை. “மனிதனுக்கு சந்தோசம் வந்துவிட்டால் போதும்; அதன் வெளிப்பாடே வசவாகத்தான் வரும். வசவு இல்லாமல் மொழியில்லை. வசவு இல்லாமல் வாழ்க்கையில்லை” என்பார்.

* “ஒரு மொழியைப் பயன்படுத்தி ஒருத்தனைப் பார்த்து ‘நீ கோயிலுக்குள்ள வரக் கூடாது’ன்னு சொல்ல முடியுதுன்னா, அந்த மொழிமீது எனக்கென்ன வியப்பு வேண்டிக்கிடக்கு” என்கிற கடுமையான விமர்சனங்களும் கி.ராவிடம் உண்டு.

* பாண்டிச்சேரிப் பல்கலைக்கழகத்தில் நாட்டார் வழக்காற்றியல் துறையின் வருகைதரு பேராசிரியராக இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தார். பாண்டிச்சேரிக்கு இடம்பெயர்ந்தது குறித்துக் கேட்டால், ‘அகழியில் விழுந்த முதலைக்கு அதுவே சொர்க்கம்’ என்று சிரிப்பார். மதுவை ஒரே ஒருமுறை நாக்கில் தொட்டுவைத்து ருசித்துப் பார்த்திருக்கிறார். பிடிக்கவில்லையாம். பிறகு தொட்டதே இல்லை.

* தங்கர்பச்சானின் ‘சொல்ல மறந்த கதை’ திரைப்படத்தில் ஒரு காட்சியில் தலை காட்டியிருக்கிறார் கி.ரா. தங்கர்பச்சான் கி.ராவிற்கு ஒரு செல்போன் வாங்கிக் கொடுத்திருக்கிறார். ஆனாலும், அதை முறையாகப் பயன்படுத்துவதில்லை. “இங்கனதான் எங்கயோ கிடக்கும்” என்கிறார் புன்னகையோடு.

* இசையமைப்பாளர் இளையராஜாமீது மிகுந்த அன்புடையவர். அவர் பாடல்களுக்கு மெட்டமைக்கும் விதத்தை ஒருநாள் முழுக்க அருகிலிருந்து பார்த்து ரசித்திருக்கிறார்.

* “என்னுடைய வாசகர்களில், என் கதைகளைக்கொண்டு பி.ஹெச்.டி செய்தவர்களில் அதிகம் பெண்கள்தான். இப்போதும்கூட எங்கிருந்தோ தொலைபேசியில் அழைக்கும் குரல் ஒரு பெண்ணினுடையதாகத்தான் இருக்கிறது.”

* “என் வாழ்வில் மருத்துவமனையில் செலவழித்த நாள்கள் அதிகம். இடதுசாரிப் போராட்டங்களில் கலந்துகொண்டதால் ஜெயிலில் கழித்த நாள்களையும் இன்னும் நான் எழுதவே இல்லை. எழுத ஆசை” என்பார் கி.ரா.

* கி.ராவின் பகல்பொழுதுகளில் அவரை விளையாட்டுக்கு அழைத்துக் காலைச் சுற்றிச் சுற்றி வரும் வெள்ளை நிறப் பூனையின் பெயர் `சங்கு பாஸ்.’

* ‘கதைசொல்லி’ என்றொரு இதழை நடத்தி வருகிறார். ‘நாட்டுப்புறப் பாலியல் கதைகள்’ என்றொரு நூலைக் கழனியூரனுடன் சேர்ந்து தொகுத்து வெளியிட்டார்.

* கி.ராவின் கதைகள் வங்காளம், இந்தி, ஆங்கிலம், பிரெஞ்சு, தெலுங்கு ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

* இட்லி, எள்ளுப்பொடி, அக்கினிச் சட்னி, நாட்டுக்கத்திரிக்காய் கொத்சு, புளிப்பில்லாத தயிர், சுக்கு காபி - மிகப் பிடித்த உணவு வகைகள். பருத்தி நூல் வேட்டி, ஈரிழை சிட்டித்துண்டு பிடித்த உடை. இப்போது சட்டைமீது விருப்பமில்லை என்கிறார்.

* கி.ரா. அடிக்கடி சொல்கிற பழமொழி: “பூனை வாழ்ந்துகொண்டிருக்கிற வீட்டில்தான் எலிகள் பேரன் பேத்திகள் எடுக்கிறதாம்.”

* சிறுவர்களுக்குக் கதை எழுதுவதிலும் விருப்பமுடையவர் கி.ரா. அவரது ‘பிஞ்சு’ சிறார் குறுநாவலுக்கு இலக்கிய சிந்தனை விருது கிடைத்தது. “சிறார்களுக்குக் கதை எழுதுவது நாமும் சிறுவர்களாவதற்கான நல்வாய்ப்பு” என்கிறார் உற்சாக கி.ரா.

* எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், வைரமுத்து உள்ளிட்ட பலர், கி.ராவிற்கு ‘ஞானபீடம்’ விருது வழங்கப்பட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர். கி.ராவை ‘இனக்குழு அழகியலின் முன்னோடி’ என்கிறார் ஜெயமோகன்.

* “எழுதுகிறவனுக்கு பேனா செங்கோல்போல. எழுதாவிட்டாலும்கூட ‘செங்கோல்’ மனசுக்குள் வேலை பண்ணிக்கொண்டேயிருக்கும்” என எழுத்தாளர்கள் பற்றி பெருமையுடன் குறிப்பிடுவார் கி.ரா. 

* ``அரசியலில் இருந்திருக்கிறேன்; அரசியலைப் பற்றி சரியாகத் தெரியாது. சங்கீதத்தில் இருந்திருக்கிறேன்; ஒரு கீர்த்தனைக்குச் சரியாகத் தாளம் போடத் தெரியாது. பேனாவுக்குச் சொந்தக்காரன்; என்றாலும் பிழையில்லாமல் எழுதத் தெரியாது’’ என்பது கி.ரா தன்னைப்பற்றி முன்வைக்கும் சுய விமர்சனம். 

* கி.ராவைப் புகைப்படம் எடுக்கச் செல்கிறவர்கள் எதிர்கொள்ளும் முதல் கேள்வி, “பிரசோன் எடுத்த காந்தி புகைப்படங்களைப் பார்த்திருக்கிறீர்களா?”

* “நினைவுகூறப்படணும் என்கிற பேராசையெல்லாம் எனக்கு கிடையாது.

படித்தது



கதவு.. சிறுகதையிலிருந்து ஆரம்பித்த கதை...
'கரிசல் குயில்' கி.ரா அவர்களின் மறைவால் தமிழ்த்தாய் தன் அடையாளங்களுள் ஒன்றை இழந்து தேம்புகிறாள்!
கரிசல் இலக்கியமும், இந்த மண்ணும், தமிழும் உள்ளவரை அவரது புகழ் வாழும்!
அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறும்.
குடும்பத்தினர் - வாசகர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்!..
தமிழக முதல்வர்.
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.
கணவதி அம்மாளின் வார்த்தைகளில் சில...
“எங்க திருமண நாளும் அவரது (கிரா) பிறந்தநாளும் ஒரே நாளில்தான் வரும். செப்டம்பர் 16-ம் தேதியை மறக்கவே முடியாது” என்கிறார் கணவதி. “எனக்குக் கல்யாணம் ஆனப்போ 19 வயசுன்னு நினைக்கிறேன். ரொம்ப செல்லமா வளர்ந்த பொண்ணு.
கல்யாணத்தின்போதே அவரு சீக்காளி. டி.பி. இருந்ததால் அவர் ரொம்ப நாள் உயிரோடு இருக்க மாட்டாருன்னு என் காது படவே எங்க வீட்டில் சிலர் பேசிக்கிட்டாங்க. நான் வைராக்கியமா அவரைக் கட்டிக்கிட்டேன். முதலில் எங்களுக்குப் பெண் குழந்தை பிறந்தவுடன் ‘மல்லிகா’ன்னு பேர் வைத்தோம். நான் அம்மா வீட்டில் இருந்தேன். குழந்தைக்கு உடம்பு முடியாம போய், சரியான கவனிப்பு இல்லாததால இறந்து போச்சு. அதனால மனசுக்கு ரொம்பக் கஷ்டமாயிடுச்சு.
அடுத்து இரு ஆண் குழந்தைகள் பிறந்தாங்க. திவாகர், பிரபாகர் என பெயர் வைத்தோம். இரண்டு பிரசவத்துக்கும் என் தாய் வீட்டுக்குப் போகல. நானே பார்த்துக்கிட்டேன்” என்று பழைய நினைவுகளை அசைபோடுகிறார் கணவதி அம்மாள்.
நோயின் காரணமாகத் தன் கணவரால் வயலில் வேலை செய்ய முடியாது என்பதால் விவசாயத்தையும் கணவதி அம்மாளே பார்த்துக்கொண்டார்.
“அப்பல்லாம் இரவில்தான் தண்ணீர் பாய்ச்ச முடியும். நள்ளிரவு ஒரு மணிக்குக் குழந்தைகளுடன் வயலுக்குப் போய் தண்ணீர் பாய்ச்சுவேன். மூத்தவன் கையில் விளக்கு எடுத்துக்கொண்டு என்னுடன் வர, சின்னவனை ஓரிடத்தில உக்காத்தி வச்சுட்டுப் போவேன். வயல் வேலை எல்லாமே நல்லாத் தெரியும். வேலையாட்களுடன் சேர்ந்து நானும் வயலில் எல்லா வேலையையும் செய்வேன். அதே நேரம், நான் லேசா இருமினால்கூட டாக்டர்கிட்டே போலாமான்னு கேட்பார்” என்று கணவரின் அக்கறை குறித்துச் சொல்கிறார்.
கி.ரா.வின் முதல் வாசகியும் இவர்தான். “அவர் எழுத்தை முதலில் நான் படிச்சிடுவேன். வாசிக்கிறப்ப அதில் இருக்கும் எழுத்துப் பிழையையும் திருத்திடுவேன். அதைச் சொன்னா அவர் சரின்னு ஏத்துக்கிடுவார். எங்களுக்குள் சண்டை வந்ததில்லை. அவர் கோபமா சொன்னாலும் சரின்னு போயிடுவேன். அவர் கோபமும் ரொம்ப நேரம் இருக்காது. அவருக்கு நண்பர்கள் அதிகம். வீட்டுக்கு வந்து பேசிட்டே இருப்பாங்க” என்கிறார் புன்னகையோடு.
திருமண வாழ்க்கை பற்றி எழுத்தாளர் கி.ரா.விடம் கேட்டால், “அமைந்தது என ஒன்று இருக்கு. விதின்னு சொல்ல மாட்டேன். தற்செயலாக அமைந்தது இது. ‘கொக்கு வந்த நேருக்கும் கல் எறிந்த சீருக்கும் சரியாக அமைந்தது’னு கிராமத்துல சொல்லுவாங்க. அதுபோல் சில காரியம் நடக்கும். திட்டமிடல் ஏதுமில்லை” என்றார் இயல்பாக.
தனது பெற்றோர் பற்றி அவர்களது இளையமகன் பிரபாகர் கூறுகையில், "அம்மா பெண்களிலேயே ரொம்ப வித்தியாசம். சின்ன வயசில் அம்மா காட்டு வேலைக்கு போய் வேலை செஞ்சுட்டு வீட்டுக்கு வந்து சமைப்பாங்க. சாதாரண சமையலே தேவாமிர்தமா இருக்கும். அப்பாவும் எது கொடுத்தாலும் சாப்பிடுவார். எதையும் மறுக்க மாட்டார். அப்பாவும்-அம்மாவும் சண்டை போட்டு நான் பார்த்ததே இல்லை" என்றார்.

Arul Arulroy and 30 others
10 Comments
1 Share
Like
Comment
Share



No comments:

Post a Comment