Friday 21 May 2021

KARUNANIDHI LAUGHTERS

 

KARUNANIDHI LAUGHTERS




முதல்வரோடு முதல் மேடை !
சென்னை, சேப்பாக்கம் - மாநகராட்சிப் பள்ளி வளாகம் !
கழகம் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டவுடன் 2006, ஜூலை 15 ம் நாள் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி தினமாக அறிவித்து அன்றே சத்துணவில் வாரம் ஒரு முட்டை வழங்கும் திட்டமும் துவக்கப்பட்டது .
முதல்வர் கலைஞர், காமராஜர் அரங்கத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் கலந்து கொண்டுவிட்டு நேரே சேப்பாக்கம் வந்தார். அவரோடு பல மேடைகளில் அதற்கு முன்னர் பங்கு பெற்றிருக்கிறேன் என்றாலும் அவருடைய அமைச்சரவையில் ஒருவன் என்ற வகையில் எனக்கு அதுதான் முதல் மேடை ! உள்ளூர ஒரு சிறு நடுக்கம் பரவிக் கிடந்தது .
தமிழ்த்தாய் வாழ்த்து முடிந்ததும் முதல்வரின் முந்தைய அறிவிப்புக்கு இணங்க சால்வைக்குப் பதில் புத்தகம் அளித்தார்கள் . முதல்வருக்கு வழங்கப்பட்ட புத்தகத்தின் மேலட்டையை எதேச்சையாகப் பார்த்தேன்.
ராகுல்ஜியின் " வால்காவில் இருந்து கங்கை வரை " ! 🙂
அதே நொடியில் முதல்வர் என்னை நோக்கித் திரும்பினார் .
"இந்தப் புத்தகத்தைப் படிச்சுருக்கியா ?"
"படிச்சுருக்கேன் ,ஐயா ! "
முதல்வரின் முகத்தில் சட்டென்று ஒரு மின்னல் கீற்றுத் தோன்றி மறைவதைக் கண்டேன் .
" வேறென்ன படிச்சுருக்க ?"
பேச்சு ,ராகுல்ஜியின் " ஊர்சுற்றிப் புராணத்தில் " துவங்கி,காண்டேகரின் " கிரௌஞ்ச வதம் " , கார்க்கியின் "தாய் ". ஹிட்லரின் " மெய்ன் காம்ப் " என்று பயணித்து இறுதியில் அவருடைய " காலப் பேழையும் கவிதைச் சாவியும் " புத்தகத்துக்கே வந்து சேர்ந்தது .கையை மடித்து உதட்டோரம் வைத்துக் கேட்டுக்கொண்டிருந்தார். இடையிடையே கேள்விகள் ! சுற்றி இருந்தவர்களோ, ' இளைய அமைச்சர் ஒருவரோடு அப்படி என்னதான் பேசிக்கொண்டு இருக்கிறார் ', என்று பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
நேரம் ஓடிக்கொண்டிருந்தது . அடுத்த நிகழ்வுக்குப் போக வேண்டிய அவசரம் . இருந்தாலும் ,முதல்வரின் லேசானத் தலையாட்டலுக்குப் பின்னரே நிகழ்ச்சித் தொகுப்பாளர் தன் கடமையை ஆற்ற வேண்டி இருந்தது . பயனாளிகளுக்கு நலத்திட்டம் வழங்குவதே அடுத்த கட்டம் . ஒவ்வொருவராகப் பெயர் சொல்லி அழைத்தார்கள் .
" சாமுண்டீஸ்வரி ! "
" ஹேமாவதி ! "
அடுத்த வினாடி, 'பளிச் ' என்று முதல்வர் கலைஞர் சொன்னார் .
" ஏன்யா ? அடுத்த ஆள் " காவேரி " யா ? பயனாளிகள் எல்லாத்தையும் கர்நாடகாவில் இருந்து கூட்டிட்டு வந்துட்டாங்க போல இருக்கே ?! "
முதல்வரோடு இருக்கிறோம் என்பதைக் கூட மறந்து சட்டென்று சிரித்துவிட்டேன் .
முதல்வர் முகத்திலோ புன்னகை பூரணமாகப் பூத்திருந்தது ! 🙂

No comments:

Post a Comment