Showing posts with label karunanidhi. Show all posts
Showing posts with label karunanidhi. Show all posts

Friday, 21 May 2021

KARUNANIDHI LAUGHTERS

 

KARUNANIDHI LAUGHTERS




முதல்வரோடு முதல் மேடை !
சென்னை, சேப்பாக்கம் - மாநகராட்சிப் பள்ளி வளாகம் !
கழகம் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டவுடன் 2006, ஜூலை 15 ம் நாள் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி தினமாக அறிவித்து அன்றே சத்துணவில் வாரம் ஒரு முட்டை வழங்கும் திட்டமும் துவக்கப்பட்டது .
முதல்வர் கலைஞர், காமராஜர் அரங்கத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் கலந்து கொண்டுவிட்டு நேரே சேப்பாக்கம் வந்தார். அவரோடு பல மேடைகளில் அதற்கு முன்னர் பங்கு பெற்றிருக்கிறேன் என்றாலும் அவருடைய அமைச்சரவையில் ஒருவன் என்ற வகையில் எனக்கு அதுதான் முதல் மேடை ! உள்ளூர ஒரு சிறு நடுக்கம் பரவிக் கிடந்தது .
தமிழ்த்தாய் வாழ்த்து முடிந்ததும் முதல்வரின் முந்தைய அறிவிப்புக்கு இணங்க சால்வைக்குப் பதில் புத்தகம் அளித்தார்கள் . முதல்வருக்கு வழங்கப்பட்ட புத்தகத்தின் மேலட்டையை எதேச்சையாகப் பார்த்தேன்.
ராகுல்ஜியின் " வால்காவில் இருந்து கங்கை வரை " ! 🙂
அதே நொடியில் முதல்வர் என்னை நோக்கித் திரும்பினார் .
"இந்தப் புத்தகத்தைப் படிச்சுருக்கியா ?"
"படிச்சுருக்கேன் ,ஐயா ! "
முதல்வரின் முகத்தில் சட்டென்று ஒரு மின்னல் கீற்றுத் தோன்றி மறைவதைக் கண்டேன் .
" வேறென்ன படிச்சுருக்க ?"
பேச்சு ,ராகுல்ஜியின் " ஊர்சுற்றிப் புராணத்தில் " துவங்கி,காண்டேகரின் " கிரௌஞ்ச வதம் " , கார்க்கியின் "தாய் ". ஹிட்லரின் " மெய்ன் காம்ப் " என்று பயணித்து இறுதியில் அவருடைய " காலப் பேழையும் கவிதைச் சாவியும் " புத்தகத்துக்கே வந்து சேர்ந்தது .கையை மடித்து உதட்டோரம் வைத்துக் கேட்டுக்கொண்டிருந்தார். இடையிடையே கேள்விகள் ! சுற்றி இருந்தவர்களோ, ' இளைய அமைச்சர் ஒருவரோடு அப்படி என்னதான் பேசிக்கொண்டு இருக்கிறார் ', என்று பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
நேரம் ஓடிக்கொண்டிருந்தது . அடுத்த நிகழ்வுக்குப் போக வேண்டிய அவசரம் . இருந்தாலும் ,முதல்வரின் லேசானத் தலையாட்டலுக்குப் பின்னரே நிகழ்ச்சித் தொகுப்பாளர் தன் கடமையை ஆற்ற வேண்டி இருந்தது . பயனாளிகளுக்கு நலத்திட்டம் வழங்குவதே அடுத்த கட்டம் . ஒவ்வொருவராகப் பெயர் சொல்லி அழைத்தார்கள் .
" சாமுண்டீஸ்வரி ! "
" ஹேமாவதி ! "
அடுத்த வினாடி, 'பளிச் ' என்று முதல்வர் கலைஞர் சொன்னார் .
" ஏன்யா ? அடுத்த ஆள் " காவேரி " யா ? பயனாளிகள் எல்லாத்தையும் கர்நாடகாவில் இருந்து கூட்டிட்டு வந்துட்டாங்க போல இருக்கே ?! "
முதல்வரோடு இருக்கிறோம் என்பதைக் கூட மறந்து சட்டென்று சிரித்துவிட்டேன் .
முதல்வர் முகத்திலோ புன்னகை பூரணமாகப் பூத்திருந்தது ! 🙂

Wednesday, 7 October 2020

NAZIST KARUNANIDHI ATTEMPT TO ASSASSINATE CHO

 


NAZIST KARUNANIDHI ATTEMPT 

TO ASSASSINATE CHO



தமிழ் நாட்டில் புலிகளின் ஆதிக்கம் உச்சத்தில் இருந்த சூழலில் மதுரையில் ஒரு பொதுக்கூட்டம் நடத்த அப்பொழுதைய ஜனதா கட்சி ஏற்பாடு செய்திருந்தது. சோ தன்னை உறுப்பினராக இணைத்துக் கொண்ட ஒரே அரசியல் கட்சி மொரார்ஜி தேசாயின் ஜனதா கட்சி மட்டுமே.


அன்றைய பொதுக் கூட்டம் மதுரை மேலமாசி வீதி வடக்குமாசி வீதி சந்திப்பில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. நானும் ஜனதா கட்சியின் உறுப்பினராக இருந்தேன். மிகவும் குறைவான நபர்களே இருந்த கட்சி அது என்பதினால் நிகழ்ச்சி ஏற்பாட்டு உதவிக்காக சீக்கிரமே நானும் பொதுக்கூட்டம் நடந்த இடத்திற்கு சென்றிருந்தேன்.


மாநிலத்தில் கருணாநிதியின் காட்டுமிராண்டி ஆட்சி உச்சத்தில் இருந்தது. கருணாநிதியை எதிர்ப்பவர்கள் எல்லாம் கடுமையாகத் தாக்கப் பட்டனர். கொல்லவும் பட்டனர். புலிகளின் ஆதரவில் தான் தனித் தமிழ் நாட்டின் அதிபர் ஆகி விடும் கனவில் கருணாநிதி மிதந்து கொண்டிருந்தார். அந்தப் பொதுக்கூட்டம் நடைபெறும் அன்று காலையிலேயே தினமலர் நிருபர்கள் மாலையில் சோ தாக்கப் படுவார் என்றும் கொலை கூடச் செய்யப் படலாம் என்றும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்த என் நண்பர்களை எச்சரித்திருந்தார்கள். மாலையில் போலீஸ் பாதுகாப்பு திட்டமிட்டு விலக்கப்பட்டு தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள் என்றும் எச்சரித்திருந்தார்கள்.


அதை மீறியே கூட்டம் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. மேடையின் இடது புறம் நின்று கொண்டிருந்தேன். கூட்டத்தில் நெல்லை ஜெபமணி, தமிழருவிமணியன் ஆகியோர் முதலில் பேசினார்கள். கடைசியாக சோ மைக் பிடித்தார். தன் கணீரென்ற குரலில் எடுத்தவுடனேயே பிரபாகரனைத் தொட்டு விட்டார். பத்தாயிரம் பேர்களுக்கு மேலாகக் கூடியிருந்த கூட்டத்தைக் கட்டுப்படுத்த ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் கூட அங்கு இல்லை. அப்பொழுது டி எஸ் பி யாக இருந்த சிவணாண்டி என்பவரின் உத்தரவின் பேரில் போலீஸ்பாதுகாப்பு திட்டமிட்டு விலக்கப் பட்டிருப்பதை நாங்கள் உணர முடிந்தது. கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது.



சோ பிரபாகரன் பேரைச் சொன்னவுடனேயே சரமாரியாக முன் வரிசையில் இருந்து ஆசிட் பாட்டில்கள் ஆசிட் நிரப்பப் பட்ட பல்புகள் அவர் மீது வீசப் பட்டன. சோ ஒரு கிரிக்கெட் விளையாட்டுக்காரர் ஒரு கிரிக்கெட் விமர்சகரும் கூட என்பது அவரது பன்முகத் திறனைப் பற்றி பேசும் பலருக்கும் தெரியாததொரு விஷயம். மேடையில் வீசப் பட்ட பல பாட்டில்களை அவர் லாவகமாகப் பிடித்துக் கொண்டேயிருந்தார்.


தினமலரில் அவர் ஆசிட் பாட்டிலைப் பிடிக்கும் ஒரு ஃபோட்டோ வெளியாகியிருந்தது. தொடர்ந்து ஆசிட் வீசப் பட்டன. பெரும் குழப்பம், களேபரம் ஏற்பட்டது. அது வரை அங்கு வராமல் மறைந்து இருந்த போலீஸ்காரர்கள் கூட்டத்தினரை அடிக்க ஆரம்பித்தார்கள். நெடுமாறன், கருணாநிதி, புலிகள், போலீஸ்காரர்கள் கூட்டணியில் அந்த தாக்குதல் மேற் கொள்ளப் பட்டது. சோவையும் பிறரையும் மேடையின் பின்னால் தள்ளி விட்டார்கள். மேடை முழுக்க ஆசிட் வீச்சினால் புகை மண்டியது. தமிழருவிமணியனின் கண்களில் ஆசிட் பட்டிருந்தது. நான் அவரை ஒரு ரிக்‌ஷாவில் ஏற்றிக் கொண்டு வடக்குமாசி வீதியில் இருந்த ஒரு டாக்டரின் வீட்டைத் தட்டி உள்ளே கொண்டு போய் சிகிச்சை அளித்து விட்டு அதே ரிக்‌ஷாவில் சோ இருந்த சுப்ரீம் ஹோட்டலுக்கு அழைத்துச் செனறேன்.


அங்கு அறைக்குள் நண்பர்களுடன் ஜெபமணி அவர்களும் பிறரும் சோவுடன் கூடியிருந்தனர். கொதி மன நிலையில் இருந்த நான் கருணாநிதியைக் கடுமையாக வசை பாடினேன். சோ எந்தவித பதட்டமும் அச்சமும் இல்லாமல் நிதானமாக இருந்தார். சற்று முன் அவர் மீது கொலைவெறி தாக்குதல் நடந்ததன் அடையாளம் ஏதும் இல்லாமல் அமைதியாக இருந்தார்.


ஜெபமணி என்னை தன் நண்பரின் பேரன் என்று சொல்லி சோவிடம் அறிமுகம் செய்து வைத்தார். டெல்லியில் அப்பொழுது சந்திரசேகர் பிரதமராக இருந்தார். நாடு முழுவதும் குழப்பமான சூழலில் இருந்தது. தமிழ் நாட்டைச் சுடுகாடாக ஆக்க நீங்கள் அனுமதிக்கக் கூடாது டெல்லியில் உங்கள் நண்பரிடம் இதை எடுத்துச் சொல்லி உடனடியாகக் கருணாநிதி அரசை டிஸ்மிஸ் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என்று நான் ஆக்ரோஷமாகச் சொல்லிக் கொண்டிருந்தேன். தான் அடுத்த வாரம் டெல்லி செல்ல இருப்பதாகவும் அதற்கான முழு ஏற்பாடுகளையும் தான் கட்டாயம் எடுப்பேன் என்று சோ கூறினார்.


அந்தக் கொடூரமான இரவு காலை வரை நீண்டது. சோ தன் எழுத்தில் மட்டும் அச்சமில்லாதவராக இல்லை நிஜ வாழ்விலும் தன் மீது ஒரு கொடூரமான கொலைகாரக் கும்பல் தாக்குதல் நடத்திய தருணத்திலும் அச்சமின்றி துணிவுடன் நடுங்காமல் அதை எதிர் கொண்டதை அன்று என்னால் நேரடியாக உணர முடிந்தது. அஞ்சா நெஞ்சன் என்று எவர் எவரையோ அழைக்கிறார்கள் தான் கொண்ட கருத்துக்களிலும் அதற்கான எதிர்ப்புகள் வன்முறையாக வந்த போதிலும் அச்சமின்றி எதிர் கொண்ட அஞ்சா நெஞ்சன் சோ.


மறுநாள் காலை சோ கொடைக்கானல் செல்வதாக இருந்தது. நாங்கள் துணைக்குக் கூட வருவதாகச் சொன்னதை மறுத்து விட்டார். அவர் தனியாகவே காரில் கொடைக்கானல் சென்றார். திமுக அரசின் போலீஸின் உடந்தையை அனுபவித்த அவர் அரசின் போலியான போலீஸ் பாதுகாப்பை மறுத்து விட்டார். தன் வீட்டுக்கு அளிக்கப் பட்ட காவலையும் திருப்பி எடுத்துக் கொள்ளுமாறு சொல்லி விட்டார். அதன் பிறகு கடைசி வரை எந்தவிதப் பாதுகாப்பும் இன்றியே செயல் பட்டு வந்தார்..


பின்னர் அவர் டெல்லி சென்று ராஜீவ் மற்றும் சுவாமியின் வற்புறுத்தலுடன் சேர்ந்து எடுத்த முயற்சிகளினால் கருணாநிதி அரசாங்கம் மத்தியில் ஆண்ட ஒரு மைனாரிடி அரசாங்கத்தினால் டிஸ்மிஸ் செய்யப் பட்டது. ராஜீவ் காந்தி சோ மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார். அவர் சோவிடம் பல விஷயங்களைக் கலந்தாலோசித்துக் கொண்டிருந்தார். ராஜீவின் ஆதரவுடனான மைனாரிடி அரசை நடத்திக் கொண்டிருந்த சந்திரசேகர் ஒரு மாநில அரசை டிஸ்மிஸ் செய்த ஒரே காரணம் சோவும், சுப்ரமணியம் சுவாமியும் கொடுத்த அழுத்தம் மட்டுமே. அதற்கான காரணங்களை ராஜீவிடம் எடுத்துக் கூறி அவரது ஆதரவுடன் சந்திரசேகரை வைத்து திமுக அரசை டிஸ்மிஸ் செய்ய வைத்தார்கள்.


எமர்ஜென்சி காலத்தில் இந்திரா காந்தி கூடத் தொடத் துணியாத சோ வின் மீது நடந்த ஒரே வன்முறைத் தாக்குதல் அந்த மதுரைத் தாக்குதலே. அதன் பின்பும் முன்பும் சோ மீது கை வைக்க எவரும் துணிந்ததில்லை. அவர் போலீஸ் பாதுகாப்பை ஏற்றுக் கொள்ள மறுத்து தனியாகவே எங்கும் சென்று வந்தார். அவர் மீதான ஒரே கொலை முயற்சி வன்முறைத் தாக்குதல் அது மட்டுமே. அந்த ஒரே ஒரு கொலை முயற்சி வன்முறைத் தாக்குதல் இந்தியாவின் வரலாற்றையே தீர்மானிப்பதில் முடிந்தது. அதற்கு ஒரு சாட்சியாக நான் அந்த இரவில் இருந்தேன்.


நன்றி திருமலை...


.

Saturday, 8 August 2020

KARUNANIDHI`S BULLET DIALOGUES






KARUNANIDHI`S BULLET DIALOGUES


டாக்டர் கலைஞரின் கனல் தெறிக்கும்வசனங்கள்.

"கோவில் கொடியவர்களின் கூடாரமாகி விடக்கூடாது": அனல் பறந்த கலைஞரின்  வசனங்கள்!

கலைஞர் முதன் முதலில் மாணவர் நேசன்,முரசொலி,
துண்டுப் பத்திரிக்கைகளை ஆரம்பித்து தனது எழுத்தாற்றலை வளர்த்துக் கொண்டார்.இவர் முதலில் வசனம் எழுதிய படம் அபிமன்யு.

முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர்  அனல் பறக்கவிட்ட சில வசனங்களைப் பார்க்கலாம்.

மந்திரிகுமாரி படத்தில் குண்டலகேசியின் ஒரு பகுதியை படமாக மாற்றினார் கலைஞர்.

அப்படத்தில் ‘போன்னா போறே வான்னா வாறே நீ போக்குவரத்து மந்திரி,

மந்திரி பதவி வந்ததும் தெரியலை போனதும் தெரியலை.’ உள்ளிட்ட வசனங்கள் எக்காலத்திற்கும் பொருந்தக் கூடியது.

பராசக்தி:
பின் பராசக்தி படத்தில்,கதாநாயகன் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் "ஓடினாள், ஓடினாள்..வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள்". "என் செயலை சுயநலம் என்பீர்கள், ஆம்.. சுயநலம் தான்.ஆகாரத்திற்காக அழுக்கைத் தின்று தடாகத்தை சுத்தம் செய்கிறதே மீன். அதுபோல என் சுயநலத்தில் பொதுநலமும் கலந்திருக்கிறது'‘

பகுத்தறிவு:

"கோவில் கூடாது என்பதல்ல. அது கொடியவர்களின் கூடாராமாகி விடக்கூடாது"...... உள்ளிட்ட வசனங்கள் கருணாநிதிக்கு பெரும் புகழ் பெற்றுத் தந்தது

மனோகரா:
பொறுத்தது போதும்.. பொங்கியெழு' என்கிற தாய் கண்ணாம்பாவும், ‘என் தாயைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடேன்"சிவாஜியும் கலைஞரின் வசனத்தில் போட்டி போட்டு நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார்கள்.

அரசர்: மனோகரா! உன்னை எதற்காக அழைத்திருக்கிறேன் தெரியுமா?

மனோகரன்: திருத்திக் கொள்ளுங்கள் அரசே! அழைத்து வரவில்லை என்னை. இழுத்து வரச் செய்திருக்கிறீர்கள்.

அரசர்: என் கட்டளையைத் தெரிந்து கொண்டிருப்பாய் நீ.

மனோகரன்: கட்டளையா இது? கரை காண முடியாத ஆசை! பொன்னும், மணியும், மின்னும் வைரமும் பூட்டி மகிழ்ந்து கண்ணே முத்தே என்றெல்லாம் குலவிக் கொஞ்சி, தந்தத்தால் ஆன கட்டிலிலே, சந்தனத் தொட்டிலிலே, `வீரனே! என் விழி நிறைந்தவனே!' என்று யாரைச் சீராட்டி பாராட்டினீர்களோ அவனை அந்த மனோகரனை சங்கிலியால் பிணைத்து, சபை நடுவே நிறுத்தி சந்தோஷம் கொண்டாட வேண்டும் என்ற தங்கள் தணியாத ஆசைக்குப் பெயர் கட்டளையா தந்தையே?

அரசர்: நீ நீதியின் முன்னே நிற்கும் குற்றவாளி! தந்தையின் முன் தனயனல்ல இப்போது!

மனோகரன்: குற்றவாளி! நான் யாருக்கு என்ன தீங்கிழைத்தேன்?

என்னால் பாதிக்கப்பட்டவர்கள் யார்?

அரசே! தந்தையின் முன் தனயனாக அல்ல,

பிரஜைகளில் ஒருவனாக கேட்கிறேன். கொலை செய்தேனா?

கொள்ளையடித்தேனா?

நாட்டைக் கவிழ்க்கும் குள்ளநரி வேலை நான் செய்தேனா?

குற்றம் என்ன செய்தேன் கொற்றவனே, குற்றம் என்ன செய்தேன்?கூறமாட்டீர்களா? நீங்கள் கூற வேண்டாம்.

இதோ அறங்கூறும் அமைச்சர்கள் இருக்கிறார்கள்.

மறவர் குடிப்பிறந்த மாவீரர்கள் இருக்கிறார்கள்!

மக்களின் பிரதிநிதிகள் இந்த நாட்டின் குரல்கள் இருக்கிறார்கள். அவர்கள் கூறட்டும்... என்ன குற்றம் செய்தேன்?

சபையோர்: குற்றத்தை மகாராஜா கூறத் தான் வேண்டும்.*

அரசர்: இது உங்களுக்கு சம்பந்தம் இல்லாதது.

மனோகரன்: சம்பந்தம் இல்லாதது சபைக்கு வருவானேன்?

குடும்பத் தகராறு கொலு மண்டபத்துக்கு வரும் விசித்திரத்தை சரித்திரம் இன்று தான் முதன் முதலாகச் சந்திக்கிறது மகாராஜா!

அரசர்: போதும் நிறுத்து... வசந்த விழாவில் நீ செய்த தவறுக்காக வசந்தசேனையிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.

மனோகரன்: அதற்குத் தான் காரணம் கேட்கிறேன்!

அரசர்: எதிர்த்துப் பேசுபவர்களுக்கு ராஜசபையில் என்ன தண்டனை தெரியுமா?

மனோகரன்: முறைப்படி மணந்த ராணிக்கு சிறைத்தண்டனை அளித்து விட்டு, மூலையில் கிடந்ததற்கு முடிசூட்டியவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனையை விடக் குறைவானது தான்.

அரசர்: ஆத்திரத்தைக் கிளப்பாதே! நிறைவேற்று. அரசன் உத்திரவு.

மனோகரன்: அரசன் உத்திரவென்ன?

ஆண்டவனின் உத்திரவுக்கே காரணம் கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.

அரசே! சிறைச்சாலைக்குச் செல்ல வேண்டும் தாய் என்று கேள்விப்பட்ட பின்னும் அடங்கிக் கிடப்பவன் ஆமை!

அரசன்: தாய்க்கும், தந்தைக்கும் வேற்றுமை அறியா மூடனே! தந்தையின் ஆணை கேட்டு தாயாரின் தலையை வெட்டி எறிந்த பரசுராமனைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறாயா நீ?

மனோகரன்: பரசுராமன் அவதாரம். மனோகரன் மனிதன்!"



பூம்புகார்:

யார் கள்வன் ?

என் கணவன் கள்வனா?

அவரைக் கள்வனென்று சொன்ன இந்த அவையோரே கள்வர் நல்லான் வகுத்ததா நீதி

இந்த வல்லான் வகுத்ததே நீதி

இதுகோப்பேருந்தேவியின் சிலம்பு இல்லை

இது கோவலன்தேவியின் சிலம்பு நீதி தவறிய பாண்டியன் நெடுஞ்செழியனே உனக்கு செங்கோல் எதற்கு மணிமுடி எதற்கு

வெண்கொற்றக் குடை எதற்கு? என்ற பூம்புகார் வசனம் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது.


பகிர்வு

KARUNANIDHI HAD REAL RESPECT WITH KAMARAJ





KARUNANIDHI HAD REAL 
RESPECT WITH KAMARAJ



1975 - காமராசரைக் கைது செய் என்றது நெருக்கடி கால மத்திய அரசு.
”ஒரு போதும் கைது செய்ய மாட்டேன்” உறுதியாக நின்றார் அன்றைய முதல்வர் கலைஞர்.
நெருக்கடி நிலையில், நெருப்பின் மீது ஆட்சி நடத்தக்கூடியவராகக் கலைஞர். காமராசரைக் கைது செய்ய மறுத்து, எமர்ஜென்சியை எதிர்க்கும் கலைஞரின் துணிச்சலை மனந்திறந்து பாராட்டினார் காமராசர்.
இந்நிலையில், அக்டோபர் 2, 1975 - பெருந்தலைவர் காமராசர் மறைந்தார். முதல்வர் பொறுப்பைவிட்டு இறங்கி 13 ஆண்டுகள் ஆன பிறகு மறைகிறார் காமராசர்.
மறைந்த காமராசரை மெரினாவில் புதைக்கச் சொல்லி எந்தக் குரலும் அன்றைக்கு எழவில்லை என்பதை இன்றைய அரைகுறைகள், வதந்தி கிளப்புவோருக்கு செவிட்டில் அறைந்து சொல்லுங்கள். மாறாக, தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் எரியூட்டத் தான் அன்றைய காங்கிரஸ் சார்பில் ஏற்பாடாகியிருந்தது.
ஆனால், அதை மாற்றி, அரசு இடத்தை ஒதுக்கி, அதுவும் அக்டோபர் 2 காந்தியார் பிறந்தநாளில் மறைந்த காமராசருக்கு மரியாதை தரும் வகையில் காந்தி மண்டபத்துக்கு அருகில் நினைவிடம் அமைக்க ஏற்பாடு செய்தவர் தலைவர் கலைஞர்.
மத்திய அரசின் எதிர்ப்பை மீறித் தான் எல்லாம் நடந்தது. கொட்டும் மழையில், தலையில் முண்டாசைக் கட்டிக் கொண்டு, தானும் களத்தில் நின்று அந்த இடத்தை சுத்தம் செய்து தயார் செய்தார். அரசு மரியாதையுடன் இறுதி நிகழ்ச்சியை நடத்தினார்.
மத்திய ஆட்சியில் சர்வாதிகாரியாகவே மாறி இந்திரா காந்தி ஆண்டு கொண்டிருந்த காலத்தில், இந்திரா காங்கிரசின் சின்னம் காளை மாடு. காமராசரின் ஸ்தாபனக் காங்கிரசின் சின்னம் இராட்டை.
மத்திய அரசை எதிர்த்து, ஸ்தாபனக் காங்கிரசின் சின்னமான இராட்டையை, காமராஜர் நினைவிடத்தின் உச்சியில் பொறித்தவர் கலைஞர்.
இதெல்லாமும் சேர்த்துத் தான் 1976-இல் கலைஞர் ஆட்சி கலைக்கப்பட காரணம். பதவியைக் குறித்து கவலைப்படாமல் தன் மூத்தவர்களை மதித்தவர் கலைஞர்.
காமராஜ் என்றே அழைக்கப்பட்டுவந்தனை அர் விகுதி சேர்த்து காமராஜர் என்று மரியாதை செய்தவரும் அவரே!
2010-ஆம் ஆண்டு காமராஜர் நினைவிடத்தில் அணையா ஜோதியை ஏற்றியவரும் அவரே!
இன்றும் காமராஜரை நினைவூட்டி, மாணவர்களுக்குக் கொண்டு சேர்க்கும் வண்ணம் காமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்துக் கொண்டாடச் செய்தவரும் அவரே!
கலைஞர் முதல்வராக வேண்டும், திமுக தலைவராக வேண்டும் என்று பெரிதும் விரும்பித் துணை நின்ற, வழிகாட்டிய தலைவர் பெரியாருக்கும் மெரினாவில் இடம் ஒதுக்கவில்லையே கலைஞர். காரணம் அதே தான். கோரிக்கை எழவில்லை... செய்யவில்லை. அதே தான் காமராஜர் விசயத்திலும்!
காமராஜரைக் காட்டி கலைஞரைக் குறைத்து மதிப்பிடச் செய்யும் குழப்பவாதிகளுக்கு வரலாற்றின் அடித்தளத்தில் நின்று அடித்துச் சொல்வோம்.....
Image may contain: 4 people, including Sai Sathyan, sunglasses



Monday, 27 July 2020

KARUNANIDHI - 95 QUOTES



KARUNANIDHI - 95  QUOTES

”மனசாட்சி உறங்கும் சமயத்தில்தான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது.”
திமுக தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான கருணாநிதி
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@22

திமுக தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான கருணாநிதி கடந்த ஜூன் மாதம் தனது 95 வயது பிறந்தநாளை இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடுகிறார்.
95 தகவல்களை இங்கே
நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன் 3 ம் தேதி அன்று, முத்துவேலருக்கும் அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாக பிறந்தார். இவரது இயற்பெயர் தட்சிணாமூர்த்தி ஆகும்.
கருணாநிதி தம் பெற்றோருக்கு மூன்றாவது குழந்தை. அவருக்கு முன்பாக பெரியநாயகம், சண்முகசுந்தரம் என இரு சகோதரிகள் உண்டு. சண்முகசுந்தரம் அம்மாளின் மகன்கள்தான் முரசொலி மாறனும் முரசொலி செல்வமும். பெரியநாயகம் அம்மாளின் மகன் அமிர்தம்.
கிரிக்கெட் காதலர் கருணாநிதி என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், சிறு வயதில் அவருக்கு பிடித்தமான விளையாட்டாக இருந்தது ஹாக்கி. போர்ட் ஸ்கூல் ஹாக்கி டீமிற்காக விளையாடி இருக்கிறார் கருணாநிதி.
கருணாநிதியின் முதல் மேடை பேச்சு 'நட்பு' குறித்து. எட்டாம் வகுப்பு மாணவராக இருந்த போது (1939) பள்ளியில் நடந்த பேச்சுப் போட்டியில் 'நட்பு' என்ற தலைப்பில் பேசினார்.
கருணாநிதி முதன்முதலில் துவங்கிய பத்திரிகையின் பெயர் மாணவ நேசன். 1941ல் வெளியான மாணவ நேசன் ஒரு மாத இதழ்.
முதன் முதலில் கருணாநிதி தொடங்கிய அமைப்பு தமிழ் மாணவர் மன்றம்.
நீதிக்கட்சியை சேர்ந்த அழகிரிசாமியால் தன் சிறுவயதில் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்தவர் கருணாநிதி. அதன் காரணமாகவே தம் மகனுக்கு அழகிரி என்று பெயர் சூட்டினார்.
தான் திராவிட சிந்தனையால் ஈர்க்கப்படாமல் இருந்தால் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்திருப்பேன் என்று ஒரு முறை கருணாநிதி கூறினார்.
படத்தின் காப்புரிமைFACEBOOK/PG/KALAIGNAR89
9. எம்.ஜி.ஆருக்கும் கருணாநிதிக்கும் நட்பு ஏற்பட்டது சேலம் மாடர்ன் தியேட்டரில்தான்.
10. மூன்று முறை திருமணம் செய்துகொண்டவர் கருணாநிதி . முதல் மனைவி பத்மாவதி. அவகுப் பிறந்தவர், மு.க.முத்து. திருமணமான சில ஆண்டுகளிலேயே மரணமடைந்தார் பத்மாவதி. கலைஞரின் இரண்டாவது மனைவியான தயாளு அம்மாளுக்கு பிறந்தவர்கள் அழகிரி, ஸ்டாலின், செல்வி மற்றும் தமிழரசு. அவரது மூன்றாவது மனைவியான ராஜாத்தியம்மாளுக்குப் பிறந்தவர் கனிமொழி.
11. கருணாநிதி எழுதி முதன் முதலில் அரங்கேற்றப்பட்ட நாடகம், 'பழனியப்பன்'. திருவாரூர் பேபி டாக்கீஸில் 1944ல் அரங்கற்றப்பட்டது.
12. 50களிலிருந்து 70கள் வரை தமிழ்த் திரையுலகில் கோலோச்சிய சிவாஜி கணேசன், எம்.ஜி. ராமச்சந்திரன் ஆகிய இருவருக்கும் மிகப் பெரிய வெற்றிப்படங்களை அளித்தவர் கருணாநிதி. சிவாஜிக்கு பராசக்தி, மனோகரா. எம்.ஜி.ஆருக்கு மந்திரி குமாரி, மலைக்கள்ளன்.
.
13. கருணாநிதி முதன் முதலில் வசனம் எழுதிய திரைப்படம் 1947ல் வெளியான ராஜகுமாரி. இந்தப் படம்தான் முதன் முதலில் எம்.ஜி.ஆர் முன்னணி வேடத்தில் நடித்த படம்.
14. 1947ல் வெளியான ராஜகுமாரி தொடங்கி, 2011ல் வெளியான பொன்னர் - சங்கர் வரை சுமார் 64 வருடங்கள் திரையுலகில் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் என பல்வேறு துறைகளிலும் பணியாற்றியிருக்கிறார் கருணாநிதி.
15. பராசக்தி படம் வெளிவந்தபோது, அந்தப் படத்தை கிண்டல் செய்து ஒரு இதழில் பரப்பிரம்மம் என்ற பெயரில் கார்ட்டூன் வெளியிடவே, அதே பெயரில் ஒரு நாடகத்தை எழுதி மாநிலம் முழுவதும் நடத்தினார் கருணாநிதி.
16. கருணாநிதி கடைசியாக வசனம் எழுதிய தொடர் கலைஞர் தொலைக்காட்சியில் வெளியான ஸ்ரீ ராமானுஜர் - மதத்தில் புரட்சி செய்த மகான். அந்தத் தொடருக்கு அவர் எழுத ஆரம்பித்தபோது அவரது வயது 92. எழுதிவந்தபோதே அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது.
17. கருணாநிதி பத்து சமூக நாவல்களையும் 6 சரித்திர நாவல்களையும் எழுதியிருக்கிறார்.
படத்தின் காப்புரிமைFACEBOOK/PG/KALAIGNAR89
18. 21 நாடகங்களை கருணாநிதி எழுதியிருக்கிறார். 1957ல் தி.மு.கவுக்குக் கிடைத்த உதயசூரியன் சின்னத்தைப் பிரபலபடுத்துவதற்காக உதயசூரியன் என்ற நாடகத்தை எழுதினார்.
படத்தின் காப்புரிமைFACEBOOK/PG/KALAIGNAR89
19.இனியவை 20 என்ற பெயரில் பயண நூல் ஒன்றையும் கருணாநிதி எழுதியிருக்கிறார்.
20. கருணாநிதி பணியாற்றிய படங்களின் எண்ணிக்கை 69.
21. கருணாநிதி கதை - வசனம் எழுதி எம்.ஜி.ஆர். நடித்த படங்களின் எண்ணிக்கை 9.
22. கருணாநிதியை ஆரம்பகாலத்தில் எம்.ஜி.ஆர் 'ஆண்டவரே' என்று அழைத்திருக்கிறார்.
23. கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன், 1969ல் கருணாதியிடம் பணியில் சேர்ந்தவர். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக உதவியாளராக இருந்துவருகிறார். இரண்டு முறை கோபித்துக்கொண்டு வெளியேறி, மீண்டும் கருணாநிதியிடம் சேர்ந்திருக்கிறார்.
#தமிழ்தேசியம்: சம்ஸ்கிருத எதிர்ப்பில்தான் வாழ்கிறதா தமிழ்த் தேசியம்?
கருணாநிதிக்கு ஆ. ராசா உருக்கமான கடிதம்
தமிழ்த்தாய் வாழ்த்து: கருணாநிதி நிற்காதது போல விடியோ பதிவிட்ட எச். ராஜா
24. கருணாநிதிக்கு 'கலைஞர்' என்ற அடைமொழியை வழங்கியது நடிகவேள் எம்.ஆர்.ராதா தான். கருணாநிதி எழுதிய, 'தூக்குமேடை' என்ற நாடகத்தை பார்த்து இந்த பட்டத்தை வழங்கினார்.
25.இதுவரை 13 சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டிருக்கும் கருணாநிதி, இதுவரை ஒரு தேர்தலில்கூட தோல்வியடைந்ததில்லை.
26.சென்னை சேப்பாக்கம் தொகுதியில்தான் அதிகபட்சமாக மூன்று முறை தேர்வுசெய்யப்பட்டுள்ளார் கருணாநிதி. சைதாப்பேட்டை, அண்ணாநகர், திருவாரூர், துறைமுகம் ஆகிய பகுதிகளில் தலா இரண்டு முறை தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.
27.1957லிருந்து தற்போதுவரை 60 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துவரும் கருணாநிதி மிகக் குறுகிய காலத்திற்கு சட்ட மேலவை உறுப்பினராக இருந்திருக்கிறார்.
28. 33 வயதில் முதன் முதலாக சட்டமன்ற உறுப்பினரானார் கருணாநிதி.
படத்தின் காப்புரிமைFACEBOOK/PG/KALAIGNAR89
29. கருணாநிதி 45 வயதில் முதலமைச்சராகப் பதவியேற்றார்.
30. கருணாநிதி சட்டமன்றக் கன்னிப் பேச்சே மிகவும் கவனிக்கப்பட்டது. அதில் நங்கவரம் பண்ணை விவசாயிகளுக்காகப் பேசினார் கருணாநிதி. பிறகு இதற்காக 20 நாட்கள் போராட்டமும் நடத்தி, பிரச்சனைக்குத் தீர்வு கண்டார்.
31. தமிழக சட்டப்பேரவையில் தி.மு.க. சட்டமன்றக் கட்சிக் கொறடா, எதிர்க் கட்சி துணைத் தலைவர், பொதுப் பணித் துறை அமைச்சர், முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய பதவிகளை கருணாநிதி வகித்திருக்கிறார்.
32. முதல்முதலாக (1957) குளித்தலை தேர்தலில் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி தன்னை எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளர் கே.ஏ. தர்மலிங்கத்தைவிட 8,296 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.
33. இரண்டாவது முறையாக அவர் வெற்றி பெற்றது தஞ்சாவூர் தொகுதியில். 1962 சட்டமன்ற தேர்தலில் அவரை எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளர் பரிசுத்த நாடாரை 1,928 வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தினார் கருணாநிதி.
34. இந்த 1962 சட்டமன்ற தேர்தல் குறித்து சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று உண்டு.தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய கருணாநிதி முதல் முதலாக வாக்கு சேகரிக்க சென்றது அவரை எதிர்த்து நின்ற பரிசுத்த நாடார் வீட்டிற்குதான் என்ற தகவலை தருகிறார் தஞ்சாவூரை சேர்ந்த முதியவர் ஒருவர்.
35. 1967 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுதான் திமுக முதல்முதலாக ஆட்சியை பிடித்தது. சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டார் கருணாநிதி. தன்னை எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளர் விநாயக மூர்த்தியைவிட 20, 484 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.
படத்தின் காப்புரிமைFACEBOOK/PG/KALAIGNAR89
36. 1971 ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் அவர் சைதாப்பேட்டை தொகுதியிலிருந்துதான் போட்டியிட்டார். தம்மை எதிர்த்த ஸ்தாபன காங்கிரஸ் வேட்பாளர் ராமலிங்கத்தை விட சுமார் 13 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் கருணாநிதி வென்றார். கருணாநிதி பெற்ற வாக்குகள் 63,334.
37. 1971ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வரை, திமுக மற்றும் காங்கிரஸ் இடையே இருந்த போட்டி, 1977 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக - அதிமுக என்று மாறியது. ஆம், எம்.ஜி ஆர் அதிமுக என்ற கட்சியை தோற்றுவித்து, தனது நீண்டகால நண்பரான கருணாநிதிக்கு எதிராக அரசியல் களத்தில் நின்றார். எம்.ஜி.ஆர் ஆதரவு அலை கடுமையாக வீசியது. இந்த அலையிலும் துடுப்பு போட்டு வென்றார் கருணாநிதி. அண்ணா நகர் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி தன்னை எதிர்த்து போட்டியிட்ட கிருஷ்ணமூர்த்தியைவிட 16, 438 வாக்குகள் அதிகம் பெற்று வென்றார். ஆனால், திமுக ஆட்சியை இழந்தது.
38. கருணாநிதி மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்ற தேர்தல் 1980ஆம் ஆண்டு தேர்தல். அண்ணா நகர் தொகுதியில் எச்.வி. ஹண்டேவை எதிர்த்துப் போட்டியிட்ட கருணாநிதி வெறும் 699 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
39. எம்.ஜி.ஆர் மரணத்திற்கு பின் நடந்த 1989 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டார் கருணாநிதி. அதிமுக இரண்டாக உடைந்து ஜெயலலிதா அணி, ஜானகி அணி என்று நின்றது. இந்த தேர்தலில் கருணாநிதி பெற்ற வாக்குகள் 41,632. அவரை எதிர்த்து நின்ற முஸ்லீம் லீக்கின் வஹாப் பெற்ற வாக்குகள் 9641. அதாவது 31,991 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார் கருணாநிதி.
40. ஜெயலலிதா முதல்முதலாக முதல்வரானது 1991 சட்டமன்றத் தேர்தலில்தான். ராஜீவ் மரணத்தினால் ஏற்பட்ட அனுதாப அலையினால் அதிமுக - காங்கிரஸ் கூட்டணி மாபெரும் வெற்றி கண்டது. துறைமுகம் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதியும், எழும்பூர் தொகுதியில் போட்டியிட்ட பரிதி இளம்வழுதியும் மட்டும்தான் வெற்றி பெற்றனர். கருணாநிதி பெற்ற வாக்குகள் 30932. அவரை எதிர்த்து போட்டியிட்ட இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுப்பு பெற்ற வாக்குகள் 30042.
41. 'ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது' என்ற ரஜினி சொன்னது 1996 சட்டமன்றத் தேர்தல் சமயத்தில்தான். அதிமுகவுடனான கூட்டணி தொடர்பாக முரண்பட்ட காங்கிரஸ் தலைவர் ஜி. கே. மூப்பனார் கட்சியை விட்டு வெளியேறி தமிழ் மாநில காங்கிரஸ் என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். தி.மு.க மற்றும் த.மா.க கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. இந்த தேர்தலில், சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி, காங்கிரஸ் வேட்பாளர் நெல்லை கண்ணனை 35,784 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார். மீண்டும் முதல்வரானார்.
42. தி.மு.கவும் பா.ஜ.கவும் 2001 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்தன. இந்த தேர்தலிலும் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி 4834 வாக்கு வித்தியாசத்தில் வென்றார்.
படத்தின் காப்புரிமைFACEBOOK/PG/KALAIGNAR89
43. தி.மு.க 2006 சட்டமன்ற தேர்தலில் வலுவான கூட்டணி அமைத்தது. திமுக அணியில் காங்கிரஸ், பா.ம.க மற்றும் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் இருந்தன. கருணாநிதி சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு 34,188 வாக்குகள் பெற்று வென்றார்.
44. 2011 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், திமுக 31 இடங்களில் மட்டுமே வென்றாலும், திருவாரூர் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி 50, 249 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
45. 2016ஆம் தேர்தலில்தான் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். திருவாரூர் தொகுதியில் 68366 வாக்கு வித்தியாசம். மாநிலத்திலேயே இது அதிக அளவு.
46. சட்டசபை விவாதங்களிலும் எப்போதும் சிறப்பாக செயல்பட கூடியவர் கருணாநிதி. ஒரு முறை, "தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கருவறைக்குள் செல்ல உரிமை இல்லையே" என்று பேசிக்கொண்டிருந்த கருணாநிதியைப் பார்த்து, "கோயிலுக்கே போகாத கருணாநிதிக்கு இதுபற்றி எதற்குக் கவலை?" என்றார் இந்திய தேசிய காங்கிரஸை சேர்ந்த டி.என்.அனந்தநாயகி. "கொலை செய்தவர்கள் மட்டுமா கோர்ட்டுக்குப் போகிறார்கள். வாதாடுபவர்களும் தானே போக வேண்டும்?" என்றவர் கருணாநிதி.
47. கருணாநிதி முதன்முறையா சட்டமன்றத்தில் பேசிவிட்டு அமர்ந்ததும், அப்போது சட்டப்பேரவை தலைவராக இருந்த யு. கிருஷ்ணாராவ் ஒரு காகிதத்தில், 'Very Good Speech' என்று எழுதி கொடுத்தார்.
48. 1974க்கு முன்பாக முதலமைச்சர்கள் சுதந்திர தினம், குடியரசு தினங்களில் கொடியேற்ற முடியாது. ஆளுனர்தான் அதைச் செய்வார். 1974ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியிடம் இது குறித்துப் பேசிய கருணாநிதி, முதல்வர்கள் சுதந்திர தினத்தன்று கொடியேற்றும் வழக்கத்தை உருவாக்கினார். 1974 ஆகஸ்ட் 15ஆம் தேதி புனித ஜார்ஜ் கோட்டையில் கொடியேற்றிய கருணாநிதி, சுதந்திர தினத்தன்று கொடியேற்றிய முதல் முதலமைச்சர்.
49. மனிதர்களை மனிதர்களே இழுத்துச் செல்லும் கை ரிக்ஷா வழக்கம் இந்தியாவின் சில மாநிலங்களி்ல் இன்னும் உள்ள நிலையில், 1973லேயே தமிழகத்தில் அதைத் தடை செய்தார்.
50. 1953ல் திருப்பத்தூரில் நடந்த கார் விபத்தில்தான் கருணாநிதியின் இடது கண் பார்வை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அடுத்தடுத்த விபத்துகளிலும் அதே கண்ணில் அடிபட்டது.
படத்தின் காப்புரிமைFACEBOOK/PG/KALAIGNAR89
51. அண்ணா மறைவுக்குப் பிறகு முதல்வரான போதுதான் "உடன்பிறப்பே" என முரசொலியில் கடிதம் எழுதத் துவங்கினார் கருணாநிதி. 1971 முதல் "உயிரினும் மேலான உடன்பிறப்பே" என்று பேசவும் துவங்கினார்.
52. கருணாநிதி முரசொலியில் எழுதிவந்த "உடன்பிறப்பே" என்ற கடிதத் தொடர், உலகின் நீண்ட தொடர்களில் ஒன்று. முரசொலி துவங்கியதிலிருந்து, 2016ல் உடல்நலம் குன்றும்வரை இதனை எழுதிவந்தார் கருணாநிதி.
53. உடன்பிறப்பே என விளித்து கருணாநிதி எழுதிய கடிதங்களின் எண்ணிக்கை 7,000க்கும் மேல்.
54. `சங்­கத்­தமிழ்', `தொல்­காப்­பிய உரை', `இனி­யவை இரு­பது', `கலை­ஞரின் கவிதை மழை',உட்­பட 150-க்கும் மேலான நூல்­களை கரு­ணா­நிதி எழு­தி­யி­ருக்­கிறார்.
55. உடன்­பி­றப்­பு­க­ளுக்கு இவர் எழு­திய கடி­தங்கள் தொகுக்­கப்­பட்டு 12 தொகு­தி­க­ளாக வெளி­யி­டப்­பட்­டுள்­ளன.
56. முதல்வராக இருக்கும்போதும், இல்லாதபோதும் அதிகாலையிலேயே பத்திரிகைகளைப் படித்துவிட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு தொலைபேசியில் பேசுவது கருணாநிதியின் வழக்கம்.
57. 'நெஞ்சுக்கு நீதி' என்ற தலைப்பில் தன் வாழ்க்கை வரலாற்றை முரசொலி மற்றும் குங்குமம் இதழில் எழுதினார் கருணாநிதி.
58. ஒரு சினிமா வசனகர்த்தாவாக கருணாநிதியை உச்சத்திற்கு கொண்டு சென்றது 'பராசக்தி` திரைப்படம்தான். இத்திரைப்படம் வசனத்திற்காகவே திரும்ப திரும்ப பார்க்கப்பட்டது.
59. கல்லக்குடி போராட்டம்தான் அவரை அரசியல் தளத்தில் முக்கிய தலைவராக பரிணமிக்க செய்தது. இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, கல்லக்குடியில் ரயில் தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்து, ரயில் மறியலில் இறங்கினார்.
படத்தின் காப்புரிமைFACEBOOK/PG/KALAIGNAR89
60. இந்தி என்பது உணவு விடுதியிலிருந்து எடுத்துச் செல்லும் உணவு, ஆங்கிலம் என்பது ஒருவர் சொல்ல அதன்படி சமைக்கப்பட்ட உணவு, தமிழ் என்பது குடும்பத் தேவையறிந்து, விருப்பமறிந்து, ஊட்டமளிக்கும் தாயிடமிருந்து பெறப்பட்ட உணவு" என்று அக்டோபர் 13, 1957 ஆம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பேசினார் கருணாநிதி.
61. சென்னையின் மிகப் பிரபலமான ஜெமினி மேம்பாலம் எனப்படும் அண்ணா மேம்பாலம் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் 21 மாதங்களில் கட்டப்பட்டு, 1973 ஜூலை 1ஆம் தேதி போக்குவரத்துக்குத் திறக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் நாட்டிலேயே இம்மாதிரி கட்டப்பட்ட மூன்றாவது பாலம் அது.
62. தன் மூளையே தனக்கு டைரி என்பார் கருணாநிதி. அந்தளவுக்கு ஞாபக சக்தி கொண்டவர் அவர்.
63. சி.என். அண்ணாதுரையின் முதலாவது நினைவு நாளின்போது, மத்திய அரசு அவரது புகைப்படத்துடன் தபால் தலை வெளியிட விரும்பியபோது, அவரது கையெழுத்தையும் அந்த புகைப்படத்தின் மீது இடம்பெறச் செய்தார் அப்போது முதல்வராக இருந்தார் கருணாநிதி. "அப்போதுதான் தமிழ் எழுத்துகள் அந்த தபால்தலையில் இருக்கும்" என்றார்.
64. மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை எழுதிய "நீராடும் கடலுடுத்த" பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாக அரசு விழாக்களில் பாடும் வழக்கத்தை 1970ல் கருணாநிதி ஏற்படுத்தினார். முதன் முதலாக திரைப்பட விருது வழங்கும் விழாவில் இந்தப் பாடல் பாடப்பட்டது.
65. சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் கருவூலத்தில், கருணாநிதி குறித்த அனைத்து தகவல்களும் தொகுக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.
66. 1970ல் லண்டனில்கூட ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தி இருக்கிறார் கருணாநிதி. பாரீசில் நடந்த மூன்றாவது உலகத் தமிழ் மாநாட்டிற்குச் செல்லும் வழியில் இந்த செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட்டது.
67. தமிழக முதலமைச்சர்களில் அதிக அளவில் வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணங்களை மேற்கொண்டவர் கருணாநிதி. அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் அவர் பயணங்களை மேற்கொண்டிருக்கிறார்.
68. எம்.ஜி.ஆருக்கு புரட்சி நடிகர் என்ற பட்டத்தைக் கொடுத்தது கருணாநிதிதான்.
படத்தின் காப்புரிமைFACEBOOK/PG/KALAIGNAR89
69. சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டத்திற்கு காரணகர்த்தாவாக இருந்தது கருணாநிதிதான்.ஆசியாவின் மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றான சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தை உருவாக்கியதும் கருணாநிதிதான்.
70. நாட்டிலேயே முதல் முறையாக 1997லேயே தகவல்தொழில் நுட்பத் துறைக்கென ஒரு கொள்கையை அறிவித்தது கருணாநிதி தலைமையிலான அரசுதான். அந்தத் தருணத்தில் தரமணியில் கட்டப்பட்ட டைடல் பார்க், தமிழகத்தின் வளர்ச்சியில் பெரும் பாய்ச்சலையே நிகழ்த்தியது.
71. 1959ஆம் ஆண்டு நடந்த சென்னை மாநகராட்சித் தேர்தலில் 100ல் 45 இடங்களைப் பிடித்தது தி.மு.க. இதற்காக மோதிரம் ஒன்றை கருணாநிதிக்கு பரிசளித்தார் சி.என். அண்ணாத்துரை.
72. 1967ல் முதன் முதலில் சி.என். அண்ணாதுரை முதல்வரானபோது, அண்ணா, நெடுஞ்சழியன் ஆகியோருக்குப் பிறகு அமைச்சரவையில் மூன்றாவது இடத்தில் பொதுப்பணித்துறை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பதவியேற்றார்.
73. நெருக்கடி நிலை காலகட்டத்தில் பத்திரிகைகளுக்கு தணிக்கை முறை அமலில் இருந்ததால், கைதுசெய்யப்பட்ட தி.மு.கவினரின் பட்டியலை வெளியிட யுக்தி ஒன்றைக் கடைப்பிடித்தார் கருணாநிதி. 1976 பிப்ரவரி 3ஆம் தேதி அண்ணா நினைவு நாளன்று அண்ணா சதுக்கத்திற்கு மலர் வளையம் வைக்க வர இயலாதோர் பட்டியல் என்று ஒரு பட்டியலை வெளியிட்டார். அதில் மாவட்டவாரியாக கைதுசெய்யப்பட்டவர்களின் பெயர் இடம்பெற்றிருந்தது.
74. உடல்நலம் நன்றாக இருந்தவரை, காலை 4.30 மணிக்கு எழுந்து, எல்லாப் பத்திரிகைகளையும் படித்துவிடும் பழக்கம் கொண்டவர் கருணாநிதி. சில சமயங்களில் சம்பந்தப்பட்ட பத்திரிகை அலுவலகங்களுக்கும் அதிகாலையிலேயே அழைத்துப் பேசுவார்.
படத்தின் காப்புரிமைFACEBOOK/PG/KALAIGNAR89
75. கருணாநிதியை மிகவும் பாதித்த மரணங்களில் முரசொலி மாறனின் மரணம் முக்கியமானது. "அவனுக்கு முன்னாடி நான் போயிருக்கனும்" என்று கருணாநிதி அடிக்கடி கூறுவதாக அவரது உதவியாளர் சண்முகநாதன் சொல்கிறார்.
76. கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்திற்கு யாரும் தொலைபேசியில் அழைத்து தகவல் பெறமுடியும். தொலைபேசி ஒலித்தவுடன், "வணக்கம், தலைவர் இல்லம்" என்ற குரல் ஒலிக்கும்.
77. கருணாநிதியின் கோபாலபுரம் இல்லம் வாங்கப்பட்டது, 1955ல். சரபேஸ்வரய்யர் என்பவர் இந்த வீட்டை விற்றார்.
78. கருணாநிதியின் வீட்டில் உள்ள தனி நூலகத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் உண்டு.
79. தன்னுடைய கோபாலபுரம் இல்லம் தயாளு அம்மாளின் காலத்திற்குப் பிறகு மருத்துவமனையாக இயங்க வேண்டுமென்று கூறி, அன்னை அஞ்சுகம் அறக்கட்டளைக்கு எழுதிக் கொடுத்துள்ளார்.
80. தன் வீட்டை ஒட்டியுள்ள வேணுகோபலா சுவாமி கோவிலுக்கு இதுவரை சென்றதில்லை என்கிறார் கருணாநிதி.
81. தமிழ் ஆண்டு வரிசைக்கு திருவள்ளுவர் ஆண்டு என்ற பெயரை அளித்தவர் கருணாநிதிதான்.
82. உடல் நலம் நன்றாக இருந்த காலகட்டத்தில் பெரும்பாலான நாட்களில் கட்சி அலுவலகத்திற்கு காலை, மாலை என இரு வேளையும் சென்றுவிடுவார் கருணாநிதி.
83. 2018ல்தான் இந்தியாவின் அனைத்து கிராமங்களுக்கும் மின் இணைப்பு என்ற இலக்கு எட்டப்பட்டது. ஆனால், 1969லேயே இதற்கான முயற்சிகளைத் துவங்கி, நாட்டிலேயே முதலிடம் வகித்தது தமிழ்நாடு.
திமுக நாளேடான முரசொலி இணையதளத்தை ஊடுருவிய மர்ம நபர்
2017: தமிழ்நாட்டின் கலக்கல் அமைச்சர்கள்
84. பல காலகட்டங்களில் தேசிய அரசியலில் கருணாநிதி செல்வாக்கு செலுத்தியிருந்தாலும் ஒரு போதும் நாடாளுமன்றத் தேர்தலில் கருணாநிதி போட்டியிட்டதில்லை.
85. நேரம் தவறாமை கருணாநிதியின் முக்கியப் பண்புகளில் ஒன்று. எந்த ஒரு நிகழ்வுக்கும் குறித்த நேரத்திற்கு முன்பே வந்துவிடுவார் கருணாநிதி.
86. கருணாநிதி செயல்படுத்திய திட்டங்களில் அவருக்கு மிகவும் பிடித்த திட்டங்களில் ஒன்று பெரியார் நினைவு சமத்துவபுரத் திட்டம். 1998ல் மதுரை மாவட்டம் மேலக்கோட்டையில் முதல் சமத்துவபுரம் துவங்கப்பட்டது. 237 சமத்துவபுரங்கள் தமிழகத்தில் அமைக்கப்பட்டன. இதில் தலித்துகளுக்கு 40 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டன.
87. ராஜாஜியில் துவங்கி, டி பிரகாசம், ஓ.பி. ராமசாமி ரெட்டியார், பி.எஸ். குமாரசாமி ராஜா, காமராஜர், பக்தவத்சலம், சி.என். அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஜானகி ராமச்சந்திரன், ஜெயலலிதா, ஓ. பன்னீர்செல்வம் என 11 முதல்வர்களின் ஆட்சிக்காலத்தில் அரசியல் செய்திருக்கிறார் கருணாநிதி.
படத்தின் காப்புரிமைFACEBOOK/PG/KALAIGNAR89
88. கருணாநிதி தலைவராக இருந்த காலத்தில் இரு முறை கட்சியில் பெரும் பிளவு ஏற்பட்டது. முதல் முறை எம்.ஜி.ஆரால். இரண்டாவது முறை வைகோவால். இரு முறையும் கட்சியை மீட்டெடுத்தார் கருணாநிதி.
89. உணவுப் பாதுகாப்பிற்காக, இந்திய உணவுக் கழகத்தைப்போல தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தை உருவாக்கி வளர்த்தெடுத்தார் கருணாநிதி.
90. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் கருணாநிதியால் கொண்டுவரப்பட்டதுதான். ஆனால், வீடுகளுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டி வழங்கும் அவரது திட்டம் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.
91. ஒரு முறை சட்டமன்றத்தில், மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி. சாமி பேச எழுந்த போது, அவரை சுருங்க பேச சொல்வதற்காக, ' அயிரை மீன் அளவுக்குப் பேசவும்' என்று துண்டு சீட்டு எழுதி கொடுத்தார் கருணாநிதி.
92. 2001-ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த அடுத்த மாதமே கருணாநிதியை கைது செய்யப்பட்டார். ஜூன் 30 - ஆம் தேதி நள்ளிரவு மேற்கொள்ளப்பட்ட அந்த கைது தேசிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டது. மூத்த தலைவரை கண்ணியமாக நடத்தவில்லை என்று கண்டனங்களும் எழுந்தன.
படத்தின் காப்புரிமைFACEBOOK/PG/KALAIGNAR89
93. எம்.ஜி.ஆர் ஆட்சியில், தமிழக சட்டசபை சபாநாயகராக க.ராஜாராம் இருந்தார். அப்போது ஒரு விவாதத்தின் போது, எதிர்க்கட்சியான தி.மு.க உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து முழக்கமிடுகின்றனர். கூச்சலை கட்டுப்படுத்த முயற்சிக்கிறார் சபாநாயகர். ஆனால் கூச்சல் குறையவில்லை. "எப்படியோ போங்க. இனி உங்களை அந்த ஆண்டவன்தான் காப்பாத்தணும்" என்று கூறிவிட்டு அமைதியாகி விட்டார் சபாநாயகர். அதன்பின் எழுந்த கருணாநிதி "இவங்களை எல்லாம் ஆண்டவன்தான் காப்பாத்தணும்னு நீங்க சொன்னீங்க. அதான் நான் எல்லோரையும் அமைதிப்படுத்தினேன். ஏன்னா, இதற்கு முன்பு ஆண்டவன் (ஆட்சியில் இருந்தவன்) நான்தானே" என்கிறார். இது போன்ற பல நகைச்சுவையான தருணங்கள் அவரது சட்டமன்ற வரலாற்று பக்கத்தில் உள்ளது.
94. அரசியல் விமர்சனங்களை எள்ளலுடன் எதிர்கொள்ளக் கூடியவர் கருணாநிதி. டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரத்தை ஒரு மணி நேரம் குறைத்தது குறித்து கருத்து தெரிவித்து இருந்த பா.ம.க நிறுவனர் ராமதாஸ், "நான் கேட்டது அறுவை சிகிச்சை... கருணாநிதி செய்ததோ முதலுதவி" என்று கூறி இருந்தார். இது தொடர்பாக பதில் அளித்த கருணாநிதி, "அறுவை சிகிச்சைக்கு முன்னர் முதலுதவிதான் அவசியம். சாதாரணமாக எல்லாருக்கும் தெரிந்த விஷயம் மருத்துவம் படித்த மருத்துவருக்கு புரியாமல் இருப்பது ஆச்சர்யம்" என்றார்.
95. ”மனசாட்சி உறங்கும் சமயத்தில்தான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது.” - இது அவர் அடிக்கடி மேற்கோள்காட்டிய வரி.

KARUNANIDHI GAVE NEW TAMIL BLOOD TO TAMIL CINEMA



KARUNANIDHI GAVE NEW TAMIL BLOOD TO TAMIL CINEMA

.தீப்பொறி தெறிக்க வசனங்களில் புது ரத்தம் பாய்ச்சிய கருணாநிதி! - ‘பல்கலை’ஞர் கருணாநிதி

தமிழ் சினிமாவுக்குப் புதுத் தமிழ் ரத்தம் பாய்ச்சிய பெருமை, கலைஞருக்கு உண்டு. சுவாமி, நாதா, தேக பரிபாலனம், சொப்பனம் என மணிப்பிரவாளம் பேசிக்கொண்டிருந்த தமிழ் சினிமாவின் சட்டையைப் பிடித்து உலுக்கி, ‘அம்பாள் எந்தக் காலத்துலடா பேசினாள்?!’ என்றது கலைஞரின் தமிழ். ‘நீதிமன்றம், பல விசித்திரமான வழக்குகளைச் சந்தித்திருக்கிறது’ என சிவாஜி கணேசன் முழக்கத்தில் வெளியான ‘பராசக்தி’யின் நீதிமன்றக் காட்சி 65 ஆண்டுகள் கடந்த பிறகும் உயிர்ப்புடன் இருக்கிறது.

அந்த நீதிமன்றக் காட்சியில், சிவாஜி ஆவேசமாகப் பேசும்போது ஒரு வழக்குரைஞர் குறுக்குக் கேள்வி கேட்க எழுவார். சிவாஜியோ அவர் பேசுவதற்கு இடம் தராமல், ‘‘உனக்கேன் அவ்வளவு அக்கறை... உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை?’’ என்பார். `என்ன இப்படி ஒரு வழக்குரைஞரைப் பார்த்து இப்படிக் கேட்கிறாரே... கோர்ட்டில் அப்படிக் கேட்க முடியுமா, அது நீதிமன்றத்தை அவமதிப்பது ஆகாதா?' என்றெல்லாம் பல எண்ணங்கள் ஒரு விநாடி நமக்குள் ஓடும். ஆனால், சிவாஜி அந்த வாக்கியத்தை இப்படி முடிப்பார், ‘‘என்று கேட்பீர்கள். என் சுயநலத்திலே பொது நலமும் கலந்திருக்கிறது. ஆகாரத்துக்காக அழுக்கைச் சாப்பிட்டு தடாகத்தைச் சுத்தப்படுத்துகிறதே மீன், அதைப்போல!’’ என அந்த வசனத்தின் ஒவ்வொரு வரியும் தீப்பொறியாகத் தெறிக்கும். ஆகாரத்துக்காக அழுக்கை உண்பது என்ன மாதிரியான சுயநலம்? ஆடம்பரமான ஒன்றை அனுபவித்தாலும் அதனால் பொதுமக்களுக்கு நன்மையே கிடைத்தது எனச் சொல்லாமல், எவ்வளவு ஜாக்கிரதையாக வார்த்தையைப் பிரயோகித்தார் என்பது கவனிக்கத்தக்கது.

ஒருமுறை நடிகர் கமல்ஹாசனைப் பேட்டி கண்டபோது, ஒரு தகவலைச் சொன்னார். ‘‘மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டூடியோவில், கலைஞர் வசனம் எழுதிய காகிதங்களைப் பாதுகாத்து வைத்திருக்கிறார்கள். அவர் வசனம் மட்டும் எழுதவில்லை; வசனப் பக்கங்களின் ஓரத்தில் அந்தக் காட்சிக்கு எப்படி ஷாட் வைக்கவேண்டும் என்பதையும் எழுதியிருந்தார். அப்போதுதான் அவருக்குள் ஒளிந்திருக்கும் இயக்குநர் எனக்குத் தெரிந்தார்’’ என்றார் நடிகரும் இயக்குநருமான கமல்ஹாசன். தான் செய்யும் பணிகளில் அதிகபட்ச கவனம் அவருக்கு இருந்தது என்பதற்குச் சான்று இது.

கருணாநிதி

கருணாநிதி போகிற போக்கில் சில திருத்தங்களைச் செய்ததைப் பலரும் பதிவுசெய்திருக்கிறார்கள்.

பூம்புகார் படத்தில் கவுந்தி அடிகளாக நடித்த கே.பி.சுந்தராம்பாள் ஒரு பாடல் வரியைப் பாட மாட்டேன் எனச் சொல்லிவிட்டார். கோவலன் கொல்லப்பட்டதும் கண்ணகி மதுரையை எரிக்கிறாள். அப்போது சுந்தராம்பாள் பாடுவதாகக் காட்சி. அந்த வரி இப்படி இருந்தது...

‘அன்று கொல்லும் அரசின் ஆணை வென்றுவிட்டது,

நின்று கொல்லும் தெய்வம் எங்கே சென்றுவிட்டது?’

``தெய்வம் எங்கே சென்றுவிட்டது எனக் கடவுளையே கேள்வி கேட்கும் பாடலை நான் பாட மாட்டேன்'' எனச் சொல்லிவிட்டார். விஷயம் கலைஞரிடம் வந்தது. ஒரு விநாடி யோசித்தார். ‘‘நின்று கொல்லும் தெய்வம் இங்கே வந்துவிட்டது’’ என மாற்றினார். `தெய்வம் வந்துவிட்டது' எனச் சொன்னதில் சுந்தராம்பாளுக்கு மகிழ்ச்சி. கண்ணகியை `தெய்வம்' எனச் சொல்லிவிட்டதில் கலைஞருக்கும் மகிழ்ச்சி. இதுதான் சாதுர்யம்.

‘எங்கள் தங்கம்’ படத்தில் எம்.ஜி.ஆருக்காக கவிஞர் வாலி ஒரு பாட்டு எழுதினார். பாடலின் முதல் வரி... ‘நான் அளவோடு ரசிப்பவன்...’ என எழுதியிருந்தார்.

கலைஞர் முதல் வரியைப் பார்த்தார். ``அடுத்த வரி?'' என்றார்.

``இனிமேல்தான் எழுத வேண்டும்'' என்றார் வாலி.

‘‘ ‘எதையும் அளவின்றிக் கொடுப்பவன்’ எனப் போடுங்கள்’’ என்றார் கலைஞர். அது கலைஞரின் தயாரிப்பு நிறுவனமான மேகலா பிக்சர்ஸ் தயாரிப்பு. எம்.ஜி.ஆர் தம் தயாரிப்பு நிறுவனத்துக்குக் கால்ஷீட் கொடுத்ததற்கு நன்றி சொன்னது மாதிரியும் அந்த வரிகள் அமைந்தன.

74 திரைப்படங்களுக்கு வசனம் எழுதிய கலைஞர், பாடல் எழுதுவதிலும் குறைவைக்கவில்லை. பூம்புகார் படத்தில் அவர் எழுதிய பாடல் இது:

‘வாழ்க்கை என்னும் ஓடம்

வழங்குகின்ற பாடம்

மானிடரின் மனதினிலே

மறக்கவொண்ணா வேதம்

வாழ்க்கை என்னும் ஓடம்

வழங்குகின்ற பாடம்...

வாலிபம் என்பது கலைகின்ற வேடம்... அதில்

வந்தது வரட்டும் என்பவன் முழு மூடன்

வருமுன் காப்பவன்தான் அறிவாளி - அது

வந்த பின்னே தவிப்பவன்தான் ஏமாளி...

துடுப்புகள் இல்லா படகு

அலைகள் அழைக்கின்ற திசையெலாம் போகும்..

தீமையைத் தடுப்பவர் இல்லா வாழ்வும்

அந்தப் படகின் நிலை போல ஆகும்’’ என கோவலனுக்கு அறிவுரை சொல்வதுபோல அமைந்திருக்கும்.

சினிமாவே தன் பணி என வாழ்ந்தவர்களுக்கும் மேலாகவே திரைத் துறையில் பங்காற்றியவர் கலைஞர் கருணாநிதி என்பதுதான் தமிழ் சினிமா சொல்லும் செய்தி!
.

KARUNANIDHI - RAMA.GOPALAN MEET


KARUNANIDHI - RAMA.GOPALAN MEET




செப்டம்பரில் ஒரு நாள் திடீரென திமுக தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டு வாசலில் வந்திறங்கினார் இந்து முன்னணி நிறுவனர் இராம.கோபாலன். அதற்கு முதல் நாள்தான் பகவத் கீதையை விமர்சித்திருந்தார் கருணாநிதி. முன் தகவல் சொல்லாமல் வந்தாலும் இராம.கோபாலனை வாசல் வரை வந்து வரவேற்று கருணாநிதியின் அறைக்கு அழைத்துச் சென்றார் உதவியாளர் சண்முகநாதன். இருவரும் பரஸ்பரம் உடல்நலம் விசாரித்துக்கொண்டனர்.
‘‘பகவத் கீதை பற்றிய உங்கள் விமர்சனத்துக்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்’’ என நேருக்கு நேர் கூறிய இராம.கோபாலன், ராமகிருஷ்ண மடம் வெளியிட்ட ‘பகவத் கீதை’ நூலை அவருக்குப் பரிசளித்தார். புன்னகையுடன் பெற்றுக்கொண்டார் கருணாநிதி. பதிலுக்கு, திராவிடர் கழக் தலைவர் கி.வீரமணி எழுதிய ‘கீதையின் மறுபக்கம்’ நூலை எடுத்து இராம.கோபாலனுக்கு வழங்கினார். இருவரும் சிரித்துக்கொண்டார்கள். இதுதான் கருணாநிதி.
கொள்கை ரீதியாக எதிரெதிர் முனையில் இருப்பவர்கள்கூட அவரை எப்போதும் எளிதில் சந்திக்க முடியும். நேருக்கு நேர் விமர்சிக்க முடியும்.
தட்சிணாமூர்த்தி என்ற இயற்பெயர் கொண்ட கருணாநிதி 1924-ல் திருவாரூர் மாவட்டம், திருக்குவளை கிராமத்தில் பிறந்தார். தந்தை முத்துவேலர். தாய் அஞ்சுகம். தனது 14-வது வயதில் நீதிக் கட்சி தலைவர்களில் ஒருவரான அழகிரிசாமியின் பேச்சால் ஈர்க்கப்பட்ட கருணாநிதி, அரசியலில் அடியெடுத்து வைத்தார். அன்று முதல் கடந்த 78 ஆண்டுகளாக தமிழகத்தில் தவிர்க்க முடியாத அரசியல் ஆளுமையாக இருக்கிறார்.

கருணாநிதியின் முதல் அவதாரம் பத்திரிகையாளர். 14 வயதிலேயே திருவாரூரில் ‘நேசன்’ என்ற கையெழுத்துப் பத்திரிகை மூலம் மாணவர்களை ஒருங்கிணைக்கத் தொடங்கினார். அப்போது அவர் உருவாக்கிய இயக்கம் ‘தமிழ்நாடு மாணவர் மன்றம்’. தனது 18-வது வயதில், 1942-ல் ‘முரசொலி’யைத் தொடங்கினார். இன்றைக்கு 92 வயதிலும் அதன் ஆசிரியர் அவரே.
1925-ல் காங்கிரஸிலிருந்து வெளியேறிய பெரியார், சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார். பின் ‘நீதிக் கட்சி’யின் தலைவரானார். 1944-ல் நீதிக் கட்சி ‘திராவிடர் கழக’மானது. இதில் தன்னை இணைத்துக்கொண்ட கருணாநிதி… பெரியார், அண்ணாவுக்கு மிக நெருக்கமானார். பெரியாருடனான கருத்து வேறுபாட்டால் திகவிலிருந்து விலகிய அண்ணா, 1949 செப்டம்பர் 17-ல் ‘திராவிட முன்னேற்றக் கழக’த்தைத் தொடங்கினார். 1952 முதல் பொதுத்தேர்தலைப் புறக்கணித்த திமுக, 1957 தேர்தலில் முதல் முறையாகக் களம் புகுந்து 15 இடங்களில் வெற்றிபெற்றது. குளித்தலையில் நின்ற கருணாநிதியும் அதில் ஒருவர். அன்று தொடங்கி கருணாநிதி இதுவரை சட்டப்பேரவைத் தேர்தல் எதிலும் தோற்றதில்லை.
மேடைப் பேச்சு, எழுத்து, பத்திரிகைப் பணி, போராட்டங்கள் என திராவிடர் கழகத்திலும், திமுகவிலும் தீவிரமாக இயங்கிய கருணாநிதியை மக்களிடம் கொண்டு சேர்த்தது அவரது திரைப்பட வசனங்கள்தான். ‘பராசக்தி’, ‘மந்திரிகுமாரி’, ‘மனோகரா’, ‘பூம்புகார்’ உள்ளிட்ட திரைப்படங்களில் அவர் எழுதிய வசனங்கள் சொல் அம்புகளாகி தமிழர்களின் இதயத்தைத் தாக்கின. ‘பராசக்தி’ படத்தில் அவரது வசனம் சிவாஜி கணேசன் என்ற மாபெரும் நடிகரை தமிழகத்துக்கு அடையாளம் காட்டியது. அந்நாட்களில் பெரிய சம்பளம் வாங்கிய வசனகர்த்தா என்பதோடு, வசனகர்த்தாவுக்கு நட்சத்திர அந்தஸ்து உருவாகவும் காரணமாக இருந்தவர் கருணாநிதி.
ஒருபுறம் திரைத் துறையில் இருந்தபோதும், மறுபுறம் அரசியலிலும் தொடர்ந்து பங்கெடுத்தார். இடைவிடாத பயணங்கள் மூலம் தமிழகத்தின் எங்காவது ஒரு மூலையில் அவர் பேசிக்கொண்டே இருந்தார். ‘கல்லக்குடி ரயில் மறியல்’அவரது அரசியல் வாழ்வில் முக்கியமான திருப்புமுனையானது. 1963, 1965-ம் ஆண்டுகளில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் மூலம் கருணாநிதி திமுகவின் முக்கிய தலைவராக உருவானார். 1967-ல் திமுக வென்றபோது, அண்ணா அமைச்சரவையில் பொதுப்பணித் துறை அமைச்சரானார். நெடுஞ்செழியன், அன்பழகன் எனப் பலர் வரிசை கட்டி நின்றாலும், அண்ணா மறைவுக்குப் பிறகு 1969-ல் எம்.ஜி.ஆர். ஆதரவுடன் முதல்வரானார் கருணாநிதி. அப்போது அவருக்கு வயது 44.
1971 தேர்தலை கருணாநிதி தலைமையில் சந்தித்த திமுக, 184 இடங்களில் வென்றது. தமிழகத்தில் ஒரு கட்சி பெற்ற அதிகமான இடங்கள் இவை. இந்நாள் வரை முறியடிக்கப்படாத சாதனை.
அரசியல் வாழ்வில் ஏணிப்படிகளில் ஏறிக்கொண்டிருந்த கருணாநிதிக்கு மிகப் பெரிய சறுக்கலை ஏற்படுத்தியவர் எம்ஜிஆர். திமுகவில் இருந்து நீக்கப்பட்ட அவர், 1972-ல் அதிமுகவைத் தொடங்கி 1977-ல் ஆட்சியைப் பிடித்தார். அதன் பிறகு, எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகுதான் மீண்டும் கருணாநிதியால் ஆட்சியைப் பிடிக்க முடிந்தது என்றாலும், போர்க் குணமிக்க எதிர்க்கட்சியாக அந்நாட்களில் திமுகவை அவர் நடத்திக்கொண்டிருந்தார்.
1989-ல் வி.பி.சிங், 1997-ல் தேவகவுடா, ஐ.கே.குஜ்ரால், 1999-ல் வாஜ்பாய், 2004 முதல் 2014 வரை மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசில் திமுக அங்கம் வகித்தது. 1996 முதல் 2013 வரையிலான 17 ஆண்டுகளில் 13 மாதங்கள் தவிர மத்திய அரசில் செல்வாக்கோடு திமுக திகழ்ந்தது. இதற்கு கருணாநிதியின் அரசியல் ஆளுமையும், ராஜதந்திர நடவடிக்கைகளுமே காரணம்.
பத்திரிகையாளர், வசனகர்த்தா, திரைக்கதை ஆசிரியர், எழுத்தாளர், பேச்சாளர், கவிஞர், அரசியல் தலைவர் எனப் பன்முகங்களைக் கொண்டவர் கருணாநிதி. கடந்த 70 ஆண்டுகளின் தமிழக வரலாற்றைக் கருணாநிதியின் வரலாற்றைப் பிரித்துவிட்டு எவராலும் எழுத முடியாது. இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, வி.பி.சிங், சந்திரசேகர், நரசிம்ம ராவ், தேவகவுடா, ஐ.கே.குஜ்ரால், வாஜ்பாய், மன்மோகன் சிங், நரேந்திர மோடி என அனைத்துப் பிரதமர்களுடனும், பெரியார், ராஜாஜி, காமராஜர், பக்தவத்சலம், ஆர்.வெங்கட்ராமன், அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என எல்லா அரசியல் தலைவர்களுடனும் அரசியல் செய்தவர் கருணாநிதி. ஒருபுறம், ராஜாஜி, காமராஜர், பக்தவத்சலம், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என அவரது அரசியல் எதிரிகள் மாறிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால், மறுபக்கத்தில் கருணாநிதி கடந்த 70 ஆண்டுகளாக அப்படியே நிற்கிறார்.
இன்றைக்கு 92-வது வயதில் 13-வது முறையாகத் தேர்தலில் போட்டியிடத் தயாராகிவிட்டார் கருணாநிதி. இப்போதும் அவர்தான் திமுகவின் முதல்வர் வேட்பாளர். திமுகவின் பலமும் அதுதான்.. பலவீனமும் அதுதான்!