Monday 27 July 2020

KARUNANIDHI GAVE NEW TAMIL BLOOD TO TAMIL CINEMA



KARUNANIDHI GAVE NEW TAMIL BLOOD TO TAMIL CINEMA

.தீப்பொறி தெறிக்க வசனங்களில் புது ரத்தம் பாய்ச்சிய கருணாநிதி! - ‘பல்கலை’ஞர் கருணாநிதி

தமிழ் சினிமாவுக்குப் புதுத் தமிழ் ரத்தம் பாய்ச்சிய பெருமை, கலைஞருக்கு உண்டு. சுவாமி, நாதா, தேக பரிபாலனம், சொப்பனம் என மணிப்பிரவாளம் பேசிக்கொண்டிருந்த தமிழ் சினிமாவின் சட்டையைப் பிடித்து உலுக்கி, ‘அம்பாள் எந்தக் காலத்துலடா பேசினாள்?!’ என்றது கலைஞரின் தமிழ். ‘நீதிமன்றம், பல விசித்திரமான வழக்குகளைச் சந்தித்திருக்கிறது’ என சிவாஜி கணேசன் முழக்கத்தில் வெளியான ‘பராசக்தி’யின் நீதிமன்றக் காட்சி 65 ஆண்டுகள் கடந்த பிறகும் உயிர்ப்புடன் இருக்கிறது.

அந்த நீதிமன்றக் காட்சியில், சிவாஜி ஆவேசமாகப் பேசும்போது ஒரு வழக்குரைஞர் குறுக்குக் கேள்வி கேட்க எழுவார். சிவாஜியோ அவர் பேசுவதற்கு இடம் தராமல், ‘‘உனக்கேன் அவ்வளவு அக்கறை... உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை?’’ என்பார். `என்ன இப்படி ஒரு வழக்குரைஞரைப் பார்த்து இப்படிக் கேட்கிறாரே... கோர்ட்டில் அப்படிக் கேட்க முடியுமா, அது நீதிமன்றத்தை அவமதிப்பது ஆகாதா?' என்றெல்லாம் பல எண்ணங்கள் ஒரு விநாடி நமக்குள் ஓடும். ஆனால், சிவாஜி அந்த வாக்கியத்தை இப்படி முடிப்பார், ‘‘என்று கேட்பீர்கள். என் சுயநலத்திலே பொது நலமும் கலந்திருக்கிறது. ஆகாரத்துக்காக அழுக்கைச் சாப்பிட்டு தடாகத்தைச் சுத்தப்படுத்துகிறதே மீன், அதைப்போல!’’ என அந்த வசனத்தின் ஒவ்வொரு வரியும் தீப்பொறியாகத் தெறிக்கும். ஆகாரத்துக்காக அழுக்கை உண்பது என்ன மாதிரியான சுயநலம்? ஆடம்பரமான ஒன்றை அனுபவித்தாலும் அதனால் பொதுமக்களுக்கு நன்மையே கிடைத்தது எனச் சொல்லாமல், எவ்வளவு ஜாக்கிரதையாக வார்த்தையைப் பிரயோகித்தார் என்பது கவனிக்கத்தக்கது.

ஒருமுறை நடிகர் கமல்ஹாசனைப் பேட்டி கண்டபோது, ஒரு தகவலைச் சொன்னார். ‘‘மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டூடியோவில், கலைஞர் வசனம் எழுதிய காகிதங்களைப் பாதுகாத்து வைத்திருக்கிறார்கள். அவர் வசனம் மட்டும் எழுதவில்லை; வசனப் பக்கங்களின் ஓரத்தில் அந்தக் காட்சிக்கு எப்படி ஷாட் வைக்கவேண்டும் என்பதையும் எழுதியிருந்தார். அப்போதுதான் அவருக்குள் ஒளிந்திருக்கும் இயக்குநர் எனக்குத் தெரிந்தார்’’ என்றார் நடிகரும் இயக்குநருமான கமல்ஹாசன். தான் செய்யும் பணிகளில் அதிகபட்ச கவனம் அவருக்கு இருந்தது என்பதற்குச் சான்று இது.

கருணாநிதி

கருணாநிதி போகிற போக்கில் சில திருத்தங்களைச் செய்ததைப் பலரும் பதிவுசெய்திருக்கிறார்கள்.

பூம்புகார் படத்தில் கவுந்தி அடிகளாக நடித்த கே.பி.சுந்தராம்பாள் ஒரு பாடல் வரியைப் பாட மாட்டேன் எனச் சொல்லிவிட்டார். கோவலன் கொல்லப்பட்டதும் கண்ணகி மதுரையை எரிக்கிறாள். அப்போது சுந்தராம்பாள் பாடுவதாகக் காட்சி. அந்த வரி இப்படி இருந்தது...

‘அன்று கொல்லும் அரசின் ஆணை வென்றுவிட்டது,

நின்று கொல்லும் தெய்வம் எங்கே சென்றுவிட்டது?’

``தெய்வம் எங்கே சென்றுவிட்டது எனக் கடவுளையே கேள்வி கேட்கும் பாடலை நான் பாட மாட்டேன்'' எனச் சொல்லிவிட்டார். விஷயம் கலைஞரிடம் வந்தது. ஒரு விநாடி யோசித்தார். ‘‘நின்று கொல்லும் தெய்வம் இங்கே வந்துவிட்டது’’ என மாற்றினார். `தெய்வம் வந்துவிட்டது' எனச் சொன்னதில் சுந்தராம்பாளுக்கு மகிழ்ச்சி. கண்ணகியை `தெய்வம்' எனச் சொல்லிவிட்டதில் கலைஞருக்கும் மகிழ்ச்சி. இதுதான் சாதுர்யம்.

‘எங்கள் தங்கம்’ படத்தில் எம்.ஜி.ஆருக்காக கவிஞர் வாலி ஒரு பாட்டு எழுதினார். பாடலின் முதல் வரி... ‘நான் அளவோடு ரசிப்பவன்...’ என எழுதியிருந்தார்.

கலைஞர் முதல் வரியைப் பார்த்தார். ``அடுத்த வரி?'' என்றார்.

``இனிமேல்தான் எழுத வேண்டும்'' என்றார் வாலி.

‘‘ ‘எதையும் அளவின்றிக் கொடுப்பவன்’ எனப் போடுங்கள்’’ என்றார் கலைஞர். அது கலைஞரின் தயாரிப்பு நிறுவனமான மேகலா பிக்சர்ஸ் தயாரிப்பு. எம்.ஜி.ஆர் தம் தயாரிப்பு நிறுவனத்துக்குக் கால்ஷீட் கொடுத்ததற்கு நன்றி சொன்னது மாதிரியும் அந்த வரிகள் அமைந்தன.

74 திரைப்படங்களுக்கு வசனம் எழுதிய கலைஞர், பாடல் எழுதுவதிலும் குறைவைக்கவில்லை. பூம்புகார் படத்தில் அவர் எழுதிய பாடல் இது:

‘வாழ்க்கை என்னும் ஓடம்

வழங்குகின்ற பாடம்

மானிடரின் மனதினிலே

மறக்கவொண்ணா வேதம்

வாழ்க்கை என்னும் ஓடம்

வழங்குகின்ற பாடம்...

வாலிபம் என்பது கலைகின்ற வேடம்... அதில்

வந்தது வரட்டும் என்பவன் முழு மூடன்

வருமுன் காப்பவன்தான் அறிவாளி - அது

வந்த பின்னே தவிப்பவன்தான் ஏமாளி...

துடுப்புகள் இல்லா படகு

அலைகள் அழைக்கின்ற திசையெலாம் போகும்..

தீமையைத் தடுப்பவர் இல்லா வாழ்வும்

அந்தப் படகின் நிலை போல ஆகும்’’ என கோவலனுக்கு அறிவுரை சொல்வதுபோல அமைந்திருக்கும்.

சினிமாவே தன் பணி என வாழ்ந்தவர்களுக்கும் மேலாகவே திரைத் துறையில் பங்காற்றியவர் கலைஞர் கருணாநிதி என்பதுதான் தமிழ் சினிமா சொல்லும் செய்தி!
.

No comments:

Post a Comment