Monday 27 July 2020

KARUNANIDHI GAVE LIFE TO TAMIL CINEMA BY TAMIL



KARUNANIDHI GAVE LIFE TO TAMIL CINEMA BY TAMIL


எட்வர்டு மைபிரிட்ஸ் 1830-ல் அசைவுகளைப் படமாக்கினார். அதன் தொடர்ச்சியாகப் படச் சுருளை உருவாக்கினார் ஈஸ்ட்மென். படக் கருவியை உண்டாக்கினார் தாமஸ் ஆல்வா எடிசன். இப்படி மூவர் கூடிப் பெற்ற குழந்தையாய் சினிமா பிறந்தபோது உலகம் அறிந்திருக்காது, அத்தனை கலைகளையும் உள்ளிழுக்கப்போகும் ஆக்டோபஸ் கலை அதுவென்று. 1897-ல் சென்னை விக்டோரியா ஹாலில், தமிழர்கள் அதுவரை காணாத ஒரு கருவியினால் ‘அரைவல் ஆஃப் தி டிரெயின்’ (Arrival of the Train) படத்தை எட்வர்ட்ஸ் அறிமுகப்படுத்தியபோது, திகைப்பில் ஆழ்ந்த தமிழர்கள் அறிந்திருக்க மாட்டார்கள், அந்தக் கருவிக்குள் கருவாகித்தான் ஐந்து முதலமைச்சர்கள் தமிழகத்தை ஆளப்போகிறார்கள் என்று.
மெளன யுகம் முடிந்து பேசும் படம் பிறந்தபோது தமிழ் சினிமா பாடும் படமாகவே இருந்தது. தமிழின் முதல் பேசும் படமான ‘காளிதாஸ்’ 1931-ல் வெளிவந்தபோது அதில் 50 பாடல்கள் இடம்பெற்றிருந்தன. 1934-ல் வெளிவந்த ‘பவளக்கொடி’யிலும் 50 பாடல்கள். ‘சீதா கல்யாணம்’ படத்தில் பாடல்களின் எண்ணிக்கை 22. 1936-ல் வெளிவந்த ‘நவீன சாரங்கதாரா’வில் 41. 1944-ல் ‘ஹரிதாஸ்’ 20 பாடல்களோடு வெளியானது. நடிகர்களே பாடகர்களாகவும் பாடகர்களே நடிகர்களாகவும் இயங்கிவந்த மேடை நாடகங்கள் திரைப்படத் தேரேறியபோதும் பாடல்கள் என்ற பண்ட மூட்டைகளை விட்டெறியவோ குறைத்துக்கொள்ளவோ முடியவில்லை. பாடல்கள் பெரும்பாலும் சம்ஸ்கிருதம் கொண்டே சமைக்கப்பட்டன. வெண்பொங்கலில் காணக் கிடைக்கும் மிளகுபோல சம்ஸ்கிருதத்துக்கு மத்தியில் தமிழ்ச் சொற்களும் ஆங்காங்கே தட்டுப்பட்டன. ‘வதனமே சந்த்ர பிம்பமோ - வசந்த ருது மன மோஹனமே - என் ஜீவப்ரியே ஷியாமளே - சாரசம் வசீகர கண்கள்’ என்றெல்லாம் இசைத்தன. வசனங்களிலோ பிராமண மொழியும் மணிப்பிரவாளமும் பின்னிப் பின்னிக் கொஞ்சிக் குலாவின.
எல்லிஸ் ஆர். டங்கன் இயக்கி 1940-ல் வெளிவந்த ‘சகுந்தலை’ படத்தில் அரசன் துஷ்யந்தனும் தோழனும் பேசிக்கொள்கிறார்கள்:
துஷ்யந்தன்: “ஒருபக்கம் ரிஷிகள் ஆக்ஞை; இன்னொரு பக்கம் தாயாரின் ஆக்ஞை. இரண்டும் முக்கியமான விஷயம். நேக்கு என்ன பண்றதுன்னுதெரியல...”
தோழன்: “நேக்கு ஒண்ணு தோண்றது. ஆஸ்ரமத்துக்கும் அரண்மனைக்கும் நடுவுல உக்காந்திருங்கோ” - இப்படி சத்திரிய மொழியும் பிராமண மொழியாகவே பேசப்பட்டது. உள்ளடக்கமெல்லாம் இதிகாசம் - புராணம். பேசும் மொழியெல்லாம் பெரும்பாலும் மணிப்பிரவாளம். இந்த நடையை உடைத்து, ஒரு மாற்றுமொழிக்குத் தோற்றுவாய் செய்தவர் இளங்கோவன் என்கிற செங்கல்பட்டு தணிகாசலம்.
1937-ல் வெளிவந்த ‘அம்பிகாபதி’, 1942-ல் வெளிவந்த ‘கண்ணகி’ இரண்டும் திரைத் தமிழை இளங்கோவன் நடைமாற்றம் செய்ததற்கான சாகாத சான்றுகளாகும். ஆனால், இளங்கோவனை விட, டி.வி.சாரியை விட, ‘கவியின் கனவு’ எழுதிய எஸ்.டி.சுந்தரத்தை விட, 1945-ல் வசனம் எழுதவந்த பாரதிதாசனை விட, ‘அமரகவி’க்கு வசனம் எழுதிய சுரதாவை விட, ‘வால்மீகி’க்கு வசனம் எழுதிய ஏ.எஸ்.ஏ.சாமியை விட அண்ணாவும் கருணாநிதியும் திரைத் தமிழில் எட்டாத உயரத்தை எட்டினார்களே!
ஏது காரணம்?
நடைமாற்றம் செய்தவர் இளங்கோவன். சமூகத்தையே மடைமாற்றம் செய்தவர்கள் அண்ணாவும் கருணாநிதியும்.
திரைத் துறையில் பழைய உள்ளடக்கங்களோடு பயணப்படுவது என்பது பிணத்துக்கு ரத்த தானம் செய்வது என்று புரிந்துகொண்டவர்கள், நிகழ்காலத்தின் மீது நெருப்பிட்டார்கள். பகுத்தறிவு மாட்சிக்கு, மூடநம்பிக்கை வீழ்ச்சிக்கு, இனமொழி மீட்சிக்கு, சுயமரியாதையின் ஆட்சிக்கு அவர்கள் திரைக் கலையைப் பயன்படுத்தியபோது ஒரு கற்பூர மலையில் தீப்பந்தம் எறிந்ததுபோல் நாடே பற்றி எரிந்தது.
அண்ணாவை விடப் பதினைந்து வயது இளையவர் கருணாநிதி எனினும், திரைத் துறையில் அண்ணாவை விடவும் அவர் இரண்டு வயது மூத்தவர். அண்ணாவின் முதல் படம் ‘நல்லதம்பி’ வெளிவந்தது 1949 பிப்ரவரி 4. அடுத்த மூன்று வாரங்களில் - பிப்ரவரி 25-ல் - ‘வேலைக்காரி’ வெளியானது. ஆனால், எம்.ஜி. ராமச்சந்தர் கதாநாயகன் என்றும், உதவி ஆசிரியர் மு.கருணாநிதி என்றும் எழுத்துகளைச் சுமந்த ‘ராஜகுமாரி’ அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே வெளிவந்துவிட்டது. கருணாநிதியின் பெயர் இடம்பெறாமலே வெளியான ‘அபிமன்யு’வில் இடம்பெற்ற ‘உடைந்த வாளேனும் ஒரு வாள் கொடுங்கள்’ என்ற நட்சத்திர வாக்கியமே “யாரய்யா இதை எழுதியது?” என்ற பேச்சை உருவாக்கிவிட்டிருந்தது.
திராவிடர் கழகம் உருவான 1944-க்கும் திமுக உருவான 1949-க்கும் இடைப்பட்ட ஐந்து ஆண்டுகளில் திரைத் துறையில் தன் அழுத்தமான சுவடுகளைப் பதிக்கத் தொடங்கிவிடுகிறார் கருணாநிதி. முதல் படத்துக்கு வசனம் தீட்டும்போது அவரது வயது 23. பயமறியாத வயது; தமிழின் நயமறிந்த மனது. திராவிடர் கழகம் அவர் கைகளில் ஒரு தீப்பிடித்த பேனாவைத் திணிக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஏறுமுகம் அந்தத் தீயின் மீது நெய் மழை பெய்கிறது. எரிகிறது; பற்றி எரிகிறது. மடமை எரிகிறது; மூடநம்பிக்கை எரிகிறது; வருணாசிரமம் எரிகிறது; சூழ்ச்சி எரிகிறது; ஆட்சி எரிகிறது; யுகக் குப்பை எரிகிறது; ஒடுக்கப்பட்டவர் மீது ஆண்டாண்டு காலம் செலுத்தப்பட்ட ஆதிக்கம் எரிகிறது; இடதுசாரிச் சிந்தனைகளால் அநியாயத்தின் அடிப்படை எரிகிறது. வற்றிக் கிடந்த வாழைத்தண்டு மனங்களிலும் லட்சியம் எரிகிறது.
அவர் எழுதிய சரித்திரப் படங்களிலும் சமூகமே பேசப்பட்டது. 1950-ல் அவர் வசனம் எழுதிய ‘மருதநாட்டு இளவரசி’யில் பலிபீடத்தின் முன்னே கடைசி வசனம் பேசுகிறார் காண்டீபனாகிய எம்.ஜி.ராமச்சந்தர்: “நீதியின் நிலைக்களமாய், நேர்மையின் உலைக்களமாய் வாழ்ந்த வண்டமிழ் வளநாடே!
நீ, சூதர்களின் உறைவிடமாய், சூழ்ச்சியின் இருப்பிடமாய் ஆனது ஏன்? இந்த மண்ணிலேதான் பிறந்தேன்! இந்த மண்ணிலேதான் மழலை மொழி பேசித் தவழ்ந்து விளையாடினேன்! இந்த மண்ணிலேதான் சவமாகச் சாயப்போகிறேன். வந்தாரை வாழ வைக்கும் இந்த மண்ணில் சொந்த நாட்டுக்காரன் அநியாயமாகச் சாவதா? குற்றமற்றவன் சாவதா?”
இறந்த காலத்தில் பேசப்பட்ட இந்த வசனம், நிகழ் காலத்தின் நெற்றி சுட்டது. “சிங்கத் திருநாடே நீ சிலந்திக் கூடாக மாறியது எப்போது? வந்தாரை வாழ வைக்கும் வளமிகு தமிழகமே நீ சொந்த நாட்டானையே சுரண்டுவது எத்தனை நாட்களாக?” என்று ‘பராசக்தி’யில் அறிமுகமான கணேசனின் காந்தக் குரலில் அக்கால அரசியல் நிர்வாணமாய் நிறுத்தப்பட்டுத் தோலுரிக்கப்பட்டது.
முன்னோடிகளின் உரையாடலுக்கும் கருணாநிதியின் உரையாடலுக்கும் என்ன வேறுபாடு என்று எண்ணிக் கிடந்தேன். ஏனையோர் எழுத்துகளெல்லாம் திரையோடு தேய்ந்தழிகின்றது; கருணாநிதியின் உரையாடலோ திரையைக் கிழித்தெறிந்து தெருவுக்கு வந்து விழுகிறது. அவர் மேடையின் உரையாடலும் திரையின் கலையாடலும் ஒன்றுக்கொன்று உறவு கொண்டிருந்ததால், கலை வேறு.. கட்சி வேறு என்றாகாதபடி இரண்டையும் ஒன்றென்று கொண்டான் கழகத்தின் இளந்தொண்டன்.
கதை வசனகர்த்தாவுக்கென்று ஒரு தனி அடையாளத்தை உருவாக்கினார் கருணாநிதி. அவரது திரை மதிப்பு உயர்ந்தது. ‘மருதநாட்டு இளவரசி’ வசனப் புத்தகத்தின் விலை 3 அணா. ‘மந்திரி குமாரி’ 4 அணா. ‘பராசக்தி’ வசனப் புத்தகத்தின் விலை 1 ரூபா என்பதே அவரது சந்தை மதிப்புக்கான சாட்சியாகும். பாடல்களை இசைத் தட்டுக்களாய்க் கேட்ட தமிழர்கள், வசனத்தை இசைத் தட்டுகளில் கேட்கும் புதிய கலாசாரத்தைத் தொடங்கிவைத்தவர் கருணாநிதி. “கோவிலிலே குழப்பம் விளைவித்தேன்.. கோவில் கூடாது என்பதற்காக அல்ல; கோவில் கொடியவரின் கூடாரமாய் இருக்கக் கூடாது என்பதற்காக’, ‘பூசாரியைத் தாக்கினேன்.. அவன் பக்தன் என்பதற்காக அல்ல. பக்தி பகல் வேஷமாகிவிட்டதைக் கண்டிப்பதற்காக” என்று தீப்பிடித்த வார்த்தைகளும்... “அம்பாள் எந்தக் காலத்திலடா பேசினாள்? அறிவு கெட்டவனே” என்ற அமில வாக்கியமும், “இட்லி சுட்டு விற்பதுதானே தமிழ்நாட்டிலே தாலி அறுந்தவர்களுக்கெல்லாம் தாசில் உத்தியோகம்” என்ற கண்ணீர் கொப்பளிக்கும் சொல்லாடல்களும் நீதிமொழிகள் பேசப்பட்ட தமிழ்நாட்டில் வீதிமொழிகளாய்ப் பேசப்பட்டன.
படத்துக்கு எழுதிய வசனம் பழமொழியாயிற்று. “பராசக்தி வசனத்துக்கு உங்களுக்கு வந்த உயர்ந்தபட்சப் பாராட்டு எது?” என்று கேட்டேன் கருணாநிதியிடம்.
“பக்கத்தில் உட்கார்ந்து படம் பார்த்த கண்ணதாசன் சொன்னது” என்றார்.
“என்னது?” என்றேன்.
“போய்யா! ஒம்மப் பாத்தா ரொம்பப் பொறாமையா இருக்கு.”
இங்கே பொறாமைக்குப் பொருள் பொறாமை அன்று!
கருணாநிதிக்குள் மிக அழகான ஒரு கவிஞரும் உண்டு. 1950-ல் தமது 26-வது வயதில் ‘மந்திரி குமாரி’யில் அவர் எழுதிய ஒரு காதல் உரையாடல் இது.
ஜீவரேகா: நேற்றிரவு நீங்கள் வராததால் என்னால் பெளர்ணமியின் அழகையே ரசிக்க முடியவி்ல்லை...
வீரமோகன்: எதற்கெடுத்தாலும் நிலவுதான். ஏன்? அமாவாசை அழகாயில்லை?
ஜீவரேகா: நீங்கள் இருட்டைக்கூட ரசிப்பீர்களா? (இங்கே வினைப்படுகிறது கலைஞரின் கவிதைக் குறும்பு).
வீரமோகன்: ஆம்! சித்திரத்தை அழகுபடுத்தும் நிழல்கோடுபோல, உன் கண்ணின் கடைக்கூட்டில், கனி இதழின் ஓரத்தில், கன்னத்துச் சரிவுகளில் ஒளிந்துகொண்டிருக்கும் இருளை நான் ரசிக்கிறேன் ஜீவா...
கவிதைகளைப் புறமுதுகிடச் செய்யும் வசனமல்லவா இது!
கருணாநிதியிடம் உள்ள தீர்க்க சிந்தனை என்னை எப்போதும் வியக்கச் செய்கிறது. 1950-களில் தமிழ்நாட்டின் மக்கள்தொகை 3.1 கோடி. அதில் கற்றவர்களின் விகிதாசாரம் 20.8%. பாரதி காலத்தில் பாமரராய், விலங்குகளாய்க் கிடந்தவர்கள் - கருணாநிதி காலத்தில் பொட்டுப்பூச்சிகளாய், புன்மைத் தேரைகளாய் இருந்தார்கள் என்று சொல்லலாம். இந்தக் கூட்டத்துக்கு இலக்கணத்தின் அருந்தமிழும் இலக்கியத்தின் பெரும்பொருளும் புரியுமா என்றெல்லாம் கருதாமல், புரிந்துகொள்வார்கள் அல்லது புரிந்துகொள்ளட்டும் என்று அவர் எடுத்த இலக்கிய முடிவு அற்புதமானது!
“எகிப்தியப் பேரழகி கிளியோபாட்ரா தமிழ்நாட்டு முத்துக்களைச் சாராயத்தில் போட்டுக் குடித்தாளாம்” - இது ‘பராசக்தி’.
“மிருக ஜாதியில் புலி மானைக் கொல்லுகிறது. மனித ஜாதியில் மான் புலியைக் கொல்லுகிறது” - இது ‘மருதநாட்டு இளவரசி’.
“வேலின் கூர்மையைச் சோதித்த விரல்கள் வஞ்சகியின் விரலை அல்லவா ரசித்துக்கொண்டிருக்கின்றன!” - இது ‘மனோகரா’.
“மனச்சாட்சி உறங்கும்போது மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்பிவிடுகிறது” - இது ‘பூம்புகார்’.
“அவள் அழகை வர்ணிக்க ஆயிரம் நாவு படைத்த ஆதிசேசன்கூட கம்பனிடம் ஒன்றிரண்டு கடன் வாங்க வேண்டும்” - இது ‘புதுமைப்பித்தன்’.
இப்படி கொட்டகைக்குள் கருணாநிதி கொட்டிய கோமேதகங்கள் பலப் பல!
என் பார்வையில் திரைத் துறையில் கருணாநிதியின் தீராத சாதனை இதுதான். தமிழர் இருந்த பள்ளத்துக்குத் தமிழைத் தாழ்த்தாமல், தமிழ் இருந்த உயரத்துக்குத் தமிழரை உயர்த்தியது.
ஒரு குறிப்பிட்ட கால எல்லை வரை கலைத் துறை என்பது கழகத்தை வளர்க்கும் அரசியல் மேடையாகப் பயன்படுத்தப்பட்டது. திராவிட முன்னேற்றக் கழகத்தில் தீவிரமாக இருந்தபோது, கவிஞர் கண்ணதாசன் தான் எழுதிய ஒரு பாடலில் கழகத்தின் முன்னணி ஏடுகளைப் பட்டியலிட்டார். திராவிட இயக்கத்துக்கென்று 375 ஏடுகள் தோன்றி வளர்ந்ததாக ஒரு இதழியல் குறிப்பு சொல்கிறது.
அண்ணாவின் ‘திராவிட நாடு’, ‘நம்நாடு’, நெடுஞ்செழியனின் ‘மன்றம்’, கருணாநிதியின் ‘முரசொலி’, கண்ணதாசனின் ‘தென்றல்’ போன்றவை திராவிட இயக்கங்களின் லட்சியம் பரப்பிய இதழ்களில் சில. இந்த ஏடுகளையெல்லாம் தன் பாடலில் ஒரு சரணத்தில் நுழைத்தார் கண்ணதாசன்.
“மன்றம் மலரும் முரசொலி கேட்கும்
வளர்ந்திடும் நம்நாடு - இளம்
தென்றல் தவழும் தீந்தமிழ் கேட்கும்
திராவிடத் திருநாடு!”
ஆனால், ‘சேரன் செங்குட்டுவன்’ ஓரங்க நாடக வசனத்தில் கலைஞர் செய்த தொண்டு இயக்கத் தலைவர்களுக்கே கிரீடம் சூட்டியது. அண்ணா, நெடுஞ்செழியன், ஆசைத்தம்பி, பி.எஸ்.இளங்கோ, கண்ணதாசன், என்.எஸ்.கிருஷ்ணன், திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரை முதன்முதலில் அறிஞர் அண்ணா எழுதுவதற்குத் தன் தாளைத் தந்தவர் என்று கருதப்படுகிற அரங்கண்ணல், இத்தனை தலைவர்களையும் ஒரே பத்தி வசனத்தில் உள்ளடக்கிய சாகசத்தை கருணாநிதியின் தமிழ் நிகழ்த்தியது:
“சிங்கத் திருவிடமே உன்னை இகழ்ந்தார்கள், ஈடற்ற புலவனே இளங்கோ! ஆசைத்தம்பி! உன்னை இகழ்ந்தார்கள், நீதிக்கு உயிர்தந்த பாண்டியனே ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியனே! உன்னை இகழ்ந்தார்கள், அரங்கின் அண்ணலே! உன்னை இகழ்ந்தார்கள், செந்தமிழ் வளங்குறையாச் சிங்க ஏறுகளே! அறிஞரே! கவிஞரே! கலைவாணரே! உம்மையெல்லாம் இகழ்ந்தார்கள். புறப்படுங்கள்! களத்திலே உங்கள் தலைகள் பறிபோகலாம். ஆனால், கனல் கக்கும் கண்களோடு அவை கொய்யப்படட்டும்!”
கருணாநிதியின் கலையும் - அரசியலும் இருப்புப் பாதையின் இணைகோடுகளாய் இயங்கின. படங்களில் நீதிமன்றக் காட்சிகளை நிறையப் புகுத்தினார். அவை வெறும் நீதிமன்றங்கள் அல்ல. தயாரிப்பாளர் செலவில் கருணாநிதி தனக்கு அமைத்துக்கொண்ட சொற்பொழிவு மேடைகள். அந்தப் பாத்திரங்களின் பின்புலத்தில், தோள்களில் துண்டை உரசிப் பேசும் கருணாநிதியையே தமிழ்ச் சமூகம் கண்டு மகிழ்ந்தது. சுதந்திர இந்தியாவில் ஓர் ஊராட்சி ஒன்றியமாய் வடிவமைக்கப்பட்ட தமிழ்நாடு, நிதியிலும் நீதியிலும் புறக்கணிக்கப்பட்டு வந்ததால் ‘வடக்கு வாழ்கிறது.. தெற்கு தேய்கிறது’ என்ற முழக்கத்தை அண்ணா முன்வைத்தார். இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில், தமிழகத்தில் 15 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படுவதாய்ப் பேச்சு. ஆனால், சற்றொப்ப 2லட்சம் பேருக்கு மட்டுமே வாய்ப்புக் கிட்டியது. காரணம் விதி அல்ல; நிதி. அன்று தமிழகம் கேட்டது ரூ. 394 கோடி. டெல்லி ஒதுக்கியதோ ரூ. 200 கோடி. அதில் தொழில் துறைக்கு ஒதுக்கப்பட்டதோ வெறும் ரூ.42 கோடி. தெற்கு தேயுமா தேயாதா?
இந்தப் பேதங்கள் எல்லாம் நீங்க, ஆளும் உரிமையை நாமே பெற வேண்டும் என்றுதான் திராவிட நாடு என்ற கருத்துருவம் உயர்த்திப் பிடிக்கப்பட்டது. இதையெல்லாம் உள்வாங்கிக்கொண்டுதான் காஞ்சித் தலைவனில் கலைஞர் பாட்டெழுதுகிறார்:
“மகிமை கொண்ட மண்ணின் மீது எதிரிகளின் கால்கள் / மலர் பறிப்பதில்லையடா வீரர்களின் கைகள்”
‘பராசக்தி’ படத்தில் பிச்சைக்காரர்களுக்குப் பரிந்தெழுதிய அதே பேனாவில் பிச்சைக்காரர் மறுவாழ்வுத் திட்டத்துக்குக் கையொப்பமிட்ட உரிமை கருணாநிதி என்ற படைப்பாளிக்கும் போராளிக்கும் கிடைத்த வரலாற்றுப் பெருமையாகும். கல்வியிலும் - பொருளாதாரத்திலும் தமிழர்கள் தலையெடுப்பதற்கு முன்பு மானமுள்ள சமுதாயமாய் வாழ வேண்டும் என்பதுதான் திராவிட இயக்கங்களின் உயிர்த் துடிப்பாக இருந்தது. அதற்காகத்தான் பகுத்தறிவு என்ற தத்துவம் தலையெடுத்தது.
ஊரறியாத ஓர் உண்மையைச் சொல்லி இந்தக் கட்டுரையின் கண் சாத்துகிறேன். முதுமையிலும் கலைஞரைப் பேணி வரும் அவரின் அணுக்கத் தொண்டர் நித்யானந்தம் என்னும் நித்யா ஓர் ஆத்திகர். கலைஞர் நலமுற வேண்டுமென்ற நல்லாசையிலும் அவருக்கிருந்த நம்பிக்கையிலும் அழுது தொழுது கலைஞர் நெற்றியில் திருநீறு பூசியிருக்கிறார். சற்று நேரத்தில் திரும்பிப் பார்த்தால் - நெற்றியிருக்கிறது; நீறு இல்லை. துடைக்கப்பட்ட திருநீறு கலைஞரின் கரத்தில் இருக்கிறது. பழுத்த முதுமையிலும் நினைவுகள் சற்றே நழுவும் கணங்களிலும் தான் பெரியார் வழிவந்த மானமிகு தொண்டன் என்பதை மறக்காத அந்தக் கலைஞரைத் தமிழ்நாடு மறக்காது; தலைமுறை மறக்காது!
Image may contain: Sai Sathyan, selfie and closeup
Comments
Write a comment...

No comments:

Post a Comment