KUNDRAKUDI ADIGAL , PHILOSOPHER
BORN 1925 JULY 11-1995 APRIL 15
குன்றக்குடி அடிகள் (சூலை 11, 1925 - ஏப்ரல் 15, 1995) சமயம், இலக்கியம், மட்டுமன்றி பேச்சுத்திறன், எழுத்துத்திறன், இசை போன்று பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர்.வாழ்க்கைக் குறிப்பு[தொகு]
நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்துள்ள திருவாளப்புத்தூருக்கு அருகிலுள்ள நடுத்திட்டு என்னும் சிற்றூரில் சீனிவாசப் பிள்ளை - சொர்ணத்தம்மாள் தம்பதிக்கு குன்றக்குடி அடிகளார் பிறந்தார். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் அரங்கநாதன். அவருக்கு முந்திப் பிறந்த சகோதரர் இருவர்; சகோதரி ஒருவர்.
அப்போது அவன், நான்காம் வகுப்பு பயிலும் சிறுவன். வழக்கறிஞரும், தமிழ்ப்பேராசிரியருமான ரா. பி. சேதுப்பிள்ளையின் வீட்டில், அவரது அறையின் ஜன்னல் முன் நின்று தினம் ஒரு திருக்குறள் ஒப்பித்துக் காலணா பெறுவது அரங்கநாதனின் வழக்கம். இவ்வாறு அரங்கநாதனின் வாழ்வை உயர்த்திய திருக்குறள், பின்னாளில் அடிகளாரான அவருக்குப் பொதுநெறி ஆகியது. இதே போல, அரங்கநாதனின் பிஞ்சு உள்ளத்தில் தீண்டாமை விலக்கு உணர்வும், மனிதநேயப் பண்பும் குறிக்கோள்களாகப் பதியக் காரணமானவர் விபுலானந்த அடிகள் ஆவார்.
பள்ளி இறுதி வகுப்புவரை படித்த அரங்கநாதன், தருமபுர ஆதீனத்தில் கணக்கர் வேலை இருப்பதை அறிந்து 1944 ஆம் ஆண்டு அப்பணியில் சேர்ந்தார். 1945-48 கால இடைவெளியில் முறைப்படி தமிழ் கற்று வித்துவான் ஆனதும் அங்கேதான். அத்திருமடத்தின் 25ஆவது பட்டமாக வீற்றிருந்த தவத்திரு சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், அரங்கநாதனைத் துறவுக்கு ஆட்படுத்திக் கந்தசாமித் தம்பிரான் ஆக்கினார்கள்.
1945ஆம் ஆண்டு தருமபுர ஆதீனத்தின் கட்டளைத் தம்பிரானாக நியமனம் பெற்ற கந்தசாமித் தம்பிரான், சமயம் தொடர்பான பல பணிகளைத் திறம்பட ஆற்றினார். அவர் தருமையாதீனத்தின் சார்பில், குன்றக்குடித் திருவண்ணாமலை ஆதீன குருபூஜை விழாவொன்றில் பங்கேற்றுச் சொற்பொழிவாற்ற நேர்ந்தது. கந்தசாமித் தம்பிரானின் நாவன்மையால் கவரப்பட்ட குன்றக்குடித் திருமட ஆதீனகர்த்தர் திருப்பெருந்திரு ஆறுமுக தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முறைப்படி தருமையாதீனத்திடம் இசைவுபெற்றுத் தமது திருமடத்துக்கு ஆதீன இளவரசராகக் கந்தசாமித் தம்பிரானை ஆக்கினார்.
அப்போது தெய்வசிகாமணி "அருணாசல தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்" என்ற திருப்பெயரும் அவருக்குச் சூட்டப்பட்டது.
1949 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 இல் ஆதீன இளவரசராகிய அவர், 1952 ஜூன் 16 ஆம் தேதி முதல் அத்திருமடத்தின் தலைமைப் பொறுப்பேற்று, 45ஆவது குருமகா சந்நிதானமாக விளங்கினார். பின்னர் தம் பணிகளால், அடிகளார் ஆகி, ஊர்ப்பெயர் இணைய, குன்றக்குடி அடிகளார் என்று மக்களால் சிறப்புடன் அழைக்கப்பட்டார். அடிகளார் ஆதீனப் பொறுப்பேற்ற காலம், இந்து மதத்திற்கு மிகவும் சோதனையான காலம். இறைமறுப்புப் பிரசாரங்களால் தாக்குதலுக்கும், கண்டனத்துக்கும் உரியதாக இந்து மதம் ஆயிற்று. இதன் எதிர்கால விபரீதங்களை மனதில் எண்ணிய அடிகளார், காலத்திற்கேற்ப, இந்து மதத்தின் உன்னத சீலங்களைப் புரியவைக்கும் முயற்சியில் இறங்கினார். இதன்பொருட்டு 1952 ஆகஸ்ட் 11 ஆம் நாள் சமயச் சான்றோர்களையும், பெருந் தமிழறிஞர்களையும் குன்றக்குடியில் ஒன்றுதிரட்டிப் பெரும் மாநாடு ஒன்றை நடத்தினார். அதன்விளைவாகத் தோன்றியதே "அருள்நெறித் திருக்கூட்டம்".
1954 ஜூலை 10 ஆம் நாள் இதன் முதல் மாநாடு தேவகோட்டையில் மூதறிஞர் இராஜாஜி தலைமையில் நடைபெற்றது. பின்னர் முழு வீச்சோடு செயல்பட்ட இவ்வியக்கத்தின் கிளைகள் தமிழகம் மட்டுமல்லாது, இலங்கையிலும் கிளைத்தன. அதன் செயலாக்கப்பிரிவாக "அருள்நெறித் திருப்பணி மன்றம்" எனும் அமைப்பும் 1955 ஜூன் 10 ஆம் நாள் கிளைத்தது. அப்போதைய தமிழக அரசின் துணையோடு தமிழ்நாடு "தெய்வீகப் பேரவை" எனும் அமைப்பு, 1966 இல் ஆரம்பிக்கப்பட்டது. தருமை ஆதீன குருமகா சந்நிதானம் தலைமையேற்ற இப்பேரவையில் அவருக்குப்பின், 1969 முதல் 1976 வரை அடிகளார் தலைமையேற்று அரும்பணிகள் பல ஆற்றினார்.
வெளிநாடுகள் பயணம்[தொகு]
வெளிநாடுகள் பலவற்றுக்கும் சென்று வந்தார் அடிகளார். அவர் மேற்கொண்ட அந்த மேலைநாட்டுப் பயணங்கள், அவரைத் தமிழ்நாட்டின் பண்பாட்டுத் தூதுவராகவும், அங்குள்ள தமிழ் மக்களின் வளர்ச்சிக்குத் துணைபுரிபவராகவும் ஆக்கின. இவ்வாறு, அவர் 1972 இல் சோவியத் ஒன்றியத்தில் மேற்கொண்ட பயணத்தின் விளைவாக தோன்றியது தான் "குன்றக்குடி கிராமத்திட்டம்".
இதழ்கள் வெளியிடல்[தொகு]
பேச்சுக்கு நிகராக, எழுத்திலும் வல்லவரான அடிகளார், தம் வாழ்நாளில் ஏராளமான நூல்களை எழுதியதோடு, மணிமொழி, தமிழகம், அருளோசை முதலிய இதழ்களையும் நடத்தினார். அவர் ஆரம்பித்து, இன்றளவும் வந்துகொண்டிருக்கும் மக்கள் சிந்தனை, அறிக அறிவியல் ஆகிய இதழ்களும் குறிப்பிடத்தக்கன.
விருதுகள்[தொகு]
தமிழ்நாடு அரசின் முதல் திருவள்ளுவர் விருது 1986ல் வழங்கப்பட்டது.
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் (D.Litt) 1989ல் வழங்கிச் சிறப்பித்தது.
இந்திய அரசின் அறிவியல் செய்தி பரப்பும் தேசியக்குழு, 1991ல் தேசிய விருது வழங்கிச் சிறப்பித்தது.
எழுதிய நூல்கள்[தொகு]
சமய இலக்கியங்கள்[தொகு]
அப்பர் விருந்து
அப்பர் சுந்தரர் மாணிக்கவாசகர்
திருவாசகத்தேன்
தமிழமுது
சமய இலக்கியங்கள்
நாயன்மார் அடிச்சுவட்டில்
ஆலய சமுதாய மையங்கள் (தமிழக அரசின் முதற்பரிசு பெற்றது)
நமது நிலையில் சமயம் சமுதாயம்
திருவருட்சிந்தனை
தினசரி தியான நூல்
இலக்கியங்கள்[தொகு]
திருவள்ளுவர்
திருவள்ளுவர் காட்டும் அரசியல்
திருவள்ளுவர் காட்டும் அரசு
குறட்செல்வம்
வாக்காளர்களுக்கு வள்ளுவர் தொடர்பான அறிவுரை
திருக்குறள் பேசுகிறது
குறள்நூறு
சிலம்பு நெறி
கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்
பாரதி யுக சந்தி
பாரதிதாசனின் உலகம்
கவியரங்கில் அடிகளார் (கவிதைகள்)
மண்ணும் மனிதர்களும் (தன்வரலாறு)
அடிகளார் எழுதிய சிறுகதைகள், அறிவொளி இயக்கத்தின் மூலமாக மக்களைச் சென்றெய்தியது. சில நாடகங்களும் அடிகளாரால் எழுதப்பெற்று அரங்கேறியுள்ளன. அவரது இறுதிக்காலத்தில் தினமணியில் எங்கே போகிறோம்? என்ற தலைப்பில் கட்டுரைகள் எழுதி வந்தார்.
1950களில் பல கருத்துகளில் மாறுபட்டிருந்தாலும் ஜாதி ஒழிப்பில் ஒன்றிணைந்தனர் பெரியாரும், குன்றக்குடி அடிகளாரும்.
பகுத்தறிவுவாதியும் தீவிரக் கடவுள் மறுப்பாளருமான தந்தை பெரியார் மற்றும் பழுத்த ஆன்மீகவாதியான குன்றக்குடி அடிகளார் இருவருக்குமிடையே ஆத்மார்த்தமான நட்புணர்வு இருந்தது என்றால் நம்புவதற்கு சிரமமாகத்தான் இருக்கும். ஆனால் ஜாதி ஒழிப்புக் களத்தில் இருவரும் இணைந்தே பணிபுரிந்தனர். குன்றக்குடி அடிகளார் 1945ஆம் ஆண்டு தர்மபுரம் சைவ மடத்தில் துறவியாக சேர்ந்து துறவறத்தை மேற்கொண்டார். சைவ சித்தாந்தங்கள் தொடர்பான நீண்ட பயிற்சியுடன் தமிழ், சமஸ்கிருதம் போன்றவற்றையும் கற்றார். அப்போது குன்றக்குடி திருவண்ணாமலை சைவ மடம் தகுந்த ஒரு இளம் துறவியை தேடிக்கொண்டு இருந்தது, அந்த சமயத்தில் மிகச்சிறிய வயதில் குன்றக்குடி அடிகளார் சைவமடத்தின் ஆதீனப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.தான் சைவமடத்தின் தலைமைப் பொறுப்பேற்றதும் தன்னுடைய சிந்தையில் உள்ள சீர்திருத்தங்களை செயலில் காட்டினார். வேறு எந்த மடாதிபதியும் செய்யத் துணியாத பல சீர்திருத்தங்களை அடிகளார் முதல் முறையாக நடைமுறைப்படுத்தினார் முக்கியமாக, ஆதி திராவிடர்களை கோவிலில் வழிபாட்டிற்கு அனுமதித்தல், சமஸ்கிருத வேதமந்திரங்களுக்குப் பதிலாக தமிழில் வழிபாடு, பூசைகள் இருக்கவேண்டும் என்று வலியுறுத்தினார். கோவில்களில் அர்ச்சகர்கள் பின்பற்றி வந்த ஜாதியக் கட்டுப்பாடுகளை தகர்த்து ஒழித்த வீரராகத் திகழ்ந்து வந்தார். 1925 முதல் 1995ஆம் ஆண்டு வரை குன்றக்குடி மடத்தின் ஆதீனமாக அடிகளார் விளங்கினார்.
தன்னுடைய ஆரம்ப காலத்தில் சுதந்திரப் போராட்டத்தில் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றார். அவர் பூமிதான இயக்கத்தில் பங்குகொண்டு நிலமில்லாத ஏழைகளுக்கு நிலங்களை வழங்கினார். மக்களின் மத்தியில் இவர் குன்றக்குடி அடிகளார் என்ற சிறப்புப் பெயருடன் அழைக்கப்பட்டார். பழுத்த சைவத்துறவியான அடிகளாரும், பார்ப்பனர் அல்லாத அமைப்பின் தலைவரும் தீவிர கடவுள் மறுப்புக் கொள்கையைக் கொண்டவருமான தந்தை பெரியாரும் ஆரம்ப காலத்தில் எதிரெதிர் கருத்து கொண்டவர்களாக இருந்தனர்.
தந்தை பெரியார் 1950ஆம் ஆண்டின் மத்தியில் பிள்ளையார் சிலை உடைப்பு மற்றும் ராமர் படம் எரிப்புப் போராட்டத்தை முன்னெடுத்தார். இந்தப் போராட்டத்திற்கு குன்றக்குடி அடிகளார், அருள்நெறித் திருக்கூட்டம் என்ற அமைப்பை ஏற்படுத்தி கடுமையான எதிர்ப்பு தெரிவித்திருந்தார். பெரியாரின் இந்தப் போராட்டங்களை எதிர்த்துத் துண்டறிக்கைகளை வெளியிட்டார்.
மேலும், பல்வேறு மடங்களை ஒன்றிணைத்து பெரும் போராட்டம் ஒன்றை நடத்தத் திட்டமிட்டார். தொடக்கத்தில் காஞ்சி மடம் இவரது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தாலும் இறுதியில் தனது ஆதரவை விலக்கிக் கொண்டது.
1955ஆம் ஆண்டு பெரியார் மலேசிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார், அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சில நாட்களுக்குப் பிறகு குன்றக்குடி அடிகளாரும் மலேயா நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பெரியாரின் நாத்திகக் கருத்துக்களை எதிர்க்கும் விதமாக குன்றக்குடி அடிகளார் மலேசிய நாட்டிற்குச் செல்ல திட்டமிட்டார்.
பொதுவாக மதத் துறவிகள் கடல் கடப்பது மத நிந்தனை செய்வதாக கருதப்பட்ட காலம் அது. ஆனால் அடிகளார் இது குறித்துக் கூறும்போது, மலேசியாவில் தமிழர்களிடையே பெரியார் தூவிய நாத்திகக் கருத்துக்கு எதிர் கருத்துக் கூறவே தான் கடல் கடக்க வேண்டியதாயிற்று என்று கூறினார். மத ரீதியினாலான விதிமுறைகளை மீறுவது நாத்திகம் என்ற கருத்தின்படி ஒருவிதத்தில் குன்றக்குடி அடிகளாரும் பெரியாரும் கருத்து ரீதியில் ஒரு புள்ளியில் இணைந்தனர்.
மலேசியப் பயணத்தில் குன்றக்குடி அடிகளார், நாத்திகக் கருத்துக்களைப் பரப்பும் பெரியாரின் பிரச்சாரம் குறித்து கடுமையான விமர்சனம் தெரிவித்திருந்தார். மேலும், சைவத்தில் ஜாதி பிரிவினைக்கு இடமில்லை என்று கூறியிருந்தார்.
இது குறித்து தமிழகம் திரும்பிய பெரியார் கருத்து தெரிவித்தபோது, “ஒரு சைவச் சாமியார் மலேசியா நாட்டிற்கு என்னைப் பின்தொடர்ந்து வருகை புரிந்தார். நான் அவர் குறித்து நண்பர்களிடம் சொன்னபோது, அவரும் நம்முள் ஒருவர்தான் என்று தோழர்களிடம் கூறினேன். அவர் பின்பற்றிய கொள்கையை குறித்து பிரச்சாரம் செய்ய வந்துள்ளார், நான் என்னுடைய கடமையை செய்துவிட்டு வந்தேன், நமது தோழர்கள் அவருக்கு எதிராக எந்த கருத்தையும் கூற வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டார்.
இதிலிருந்தே பெரியார் மற்றும் குன்றக்குடி அடிகளாருக்கு இடையே கருத்துப்போர் துவங்கியது. இந்த நிலையில் பெரியாரின் ஊரான ஈரோட்டில் பெரியார், அடிகளார் இருவருக்கும் பொதுவானவர்கள் இருவரையும் சந்திக்க வைக்க முயன்றனர். ஈரோட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
பெரியார், அடிகளாரைச் சந்திக்க வரும்போது, அடிகளார் ஈரோடு இல்லத்தின் முதல் மாடியில் அமர்ந்திருந்தார். பெரியார் வீட்டிற்குள் நுழையும்போது அடிகளாரின் உதவியாளர், அடிகளார் முதல் மாடியில் தங்கியிருப்பதாக கூறினார். பெரியார் வந்த தகவல் அடிகளாரிடம் தெரிவிக்கப்பட்டதும், அவர் கீழே இறங்கி வருவதற்கு முன்பாகவே, அவர் இறங்கிவருவது முறையல்ல என்று கூறி, தம்மை விட வயதில் அயம்பது வயது குறைவாக இருந்த போதிலும் பெரியார் தாமாகவே முதல் மாடிக்கு அடிகளாரைச் சந்திக்கச் சென்றார்.
அடிகளார் பெரியாரை வாசல் வரை வந்து வரவேற்றார். அடிகளார் பற்றி பெரியார் கூறும்போது எப்போதும் ‘மகாசன்னிதானம்’ என்றே மதிப்புடன் குறிப்பிட்டு வந்தார். அதனாலேயே இருவரிடமும் நட்புறவு நீண்டகாலமாக தொடர்ந்தது.
பெரியார் தன்னுடைய தடியை ஊன்றிக்கொண்டு அடிகளார் இருந்த அறைக்குச் சென்றார். அடிகளார் தன்னுடைய பெரிய இருக்கையில் தனக்கு அருகே பெரியாரையும் அமரப் பணித்தார், ஆனால் பெரியார் அதை மறுத்துவிட்டு “உங்களது சம்பிரதாயங்கள் எப்படியோ அப்படியே நடக்கட்டும்” என்று கூறி விருந்தினர்களுக்கான இருக்கையில் அமர்ந்தார். பெரியாரைவிட மிகச் சிறிய வயதுடைய அடிகளார் பெரியாரின் இந்தப் பணிவைக் கண்டதும் மனமுருகி விட்டார்.
அதன்பிறகு பெரியாருக்கும் அடிகளாருக்குமிடையே உரையாடல்கள் துவங்கின பெரியார் கடவுள், மூடநம்பிக்கை, ஜாதிப்பிரிவினை, தீண்டாமை குறித்து தொடர்ந்து பேசினார். பெரியாரின் பேச்சைக் கேட்டுக்கொண்டே இருந்த குன்றக்குடி அடிகளார், பேச வார்த்தைகள் இன்றி அமைதியாக இருந்தார். இது வரை ஆன்மீக பெரியோர்களின் சொற்பொழிவைக் கேட்டு அப்பர், சுந்தரர், ராமானுஜர், ராமலிங்க அடிகள் போன்றவர்களின் நூல்களைப் படித்த அடிகளார், பகுத்தறிவு பகலவனிடமிருந்து அருவி போல் தொடர்ந்து பொழிந்துகொண்டிருந்த கருத்துகளை எதிர் வாதம் செய்யாமல் அமைதியாகக் கேட்டுக் கொண்டு உள்வாங்கிக் கொண்டிருந்தார்.
பேச்சின் முடிவில் பெரியார் நகைச்சுவையாக, “எனக்கும் கடவுளுக்கும் எந்த ஒரு சச்சரவும் இல்லை. என்று நான் கடவுளைக் கண்களால் காண்பேனோ அன்று நான் நம்பிக் கொள்கிறேன்” என்று கூறினார். “அதுவரை மனிதகுலத்திற்கு தொண்டாற்றுவேன்” என்று பெரியார் கூறினார். இதைக் கேட்ட அடிகளார், “நான் ஆன்மீக வழியில் மனித குலத்திற்கு நன்மையைச் செய்கிறேன். நீங்கள் நாத்திக வழியில் இருந்துகொண்டு தொண்டாற்றுகிறீர்கள்” என்று கூறிவிட்டு, “நாம் இருவருமே ஒரு செயலைத்தான் செய்கிறோம், நமது இருவர் செயலிலும் மனிதகுல நன்மையே மிளிர்கிறது” என்று கூறினார். உரையாடலின் இறுதியில் இருவருக்குமிருந்த இறுக்கம் விலகி நல்ல நட்பு மலர்ந்திருந்தது.
1956ஆம் ஆண்டு திருச்சியில் பெரியாரின் பிறந்த நாள் விழாக் கொண்டாட முடிவு செய்யப்பட்டது. இதற்கு அடிகளாரும் அழைக்கப்பட்டிருந்தார். அடிகளார் எந்த ஒரு மறுப்பும் தெரிவிக்காமல் உடனடியாக பிறந்த நாள் விழாவில் கலந்துகொள்ள வருவதாக கூறினார்.. பொதுமேடையில் இருவரும் கலந்துகொண்ட முதல் கூட்டமும் இதுவே ஆகும். பொது மேடையில் கடுமையான கடவுள் மறுப்புக்கொள்கையுடைய பெரியாரும், பழுத்த ஆன்மீகவாதியான குன்றக்குடி அடிகளாரும் இணைந்து உரையாடினர். இருவரையும் காண பிறந்த நாள் விழா மக்கள் வெள்ளத்தில் நிறைந்திருந்தது. கூட்டம் முடிந்ததும் புகைப்படக் கலைஞர் ஒருவர், “நீங்கள் இருவரும் எங்கள் ஸ்டூடியோ வந்தால் நல்ல முறையில் இருவரையும் புகைப்படம் எடுக்க ஏதுவாக இருக்கும்” என்று கூறினார். ஆனால் பெரியார், குன்றக்குடி அடிகளாரை அவ்வாறு அழைப்பது தவறு என்று கூறி, புகைப்படக் கலைஞரைக் கண்டித்தார். மேடையில் பேசிய ஒரு திராவிடர் கழக பேச்சாளர் கடவுள் மறுப்புப் பற்றி மிகவும் தீவிரமாக பேச ஆரம்பித்தார். அப்போது பெரியார், தன்னுடைய கைத்தடியால் பேச்சாளரைத் தட்டி, “நமது விருந்தினரை வைத்துக்கொண்டு அவரைச் சங்கடப்படுத்தும் செயலில் ஈடுபடக் கூடாது” என்று கூறினார். அதே மேடையில் பெரியாருக்கு அடிகளார் பயனாடை அணிவித்து மகிழ்ந்தார்.
இந்த நிகழ்ச்சி பெரியாரின் தொண்டர்களுக்கும், ஆன்மீகவாதிகளுக்கும் இன்ப அதிர்ச்சியாக அமைந்தது. அந்த மேடையில் பேசிய அடிகளார், பெரியார் ஜாதி ஒழிப்புப் போராட்டம் குறித்தும், சமூகநீதி களத்தில் பெரியாரின் தொண்டு குறித்தும் வரிசையாக பட்டியலிட்டு உரையாற்றினார். “நாம் ஆன்மீகவாதிகளாக இருக்கிறோம். ஆனால் நாம் பேசும் தமிழை சூத்திர மொழி என்று பார்ப்பனர்கள் கூறுகிறார்கள். ஆனால் கடவுள் மறுப்பாளராக இருக்கும் பெரியார், கோவில்களில் தமிழ் மந்திரம் வேண்டும் என்று கூறி போராடுகிறார்” என்று பெரியாரின் தொண்டுகள் பற்றி உரை யாற்றினார். அதன்பிறகு நெல்லையில் நடந்த பொதுக் கூட்டம் ஒன்றிற்கு பெரியாரும் அடிகளாரும் இணைந்தே பயணித்தனர். அப்போது ஜாதி ஒழிப்பு, தமிழ் மொழிப்பற்று குறித்து இருவரும் உரையாடினர்.இரண்டு துருவங்கள் மனிதநேயத் தொண்டில் ஒன்றிணைந்து பயணித்தன. பெரியார் 1973ஆம் ஆண்டு மறையும் வரை இருவருக்கிடையேயான நட்பு ஆன்மீகவாதிகள் மற்றும் பகுத்தறிவாளர்களே வியக்கும் வண்ணம் தொடர்ந்தது.
பேராசிரியர் ஏ.ஆர்.வெங்கடாசலபதி
No comments:
Post a Comment