Sunday 26 July 2020

VANNATHIRAI ,READERS REVIEW






VANNATHIRAI ,READERS REVIEW

வண்ணத்திரை - வாசிப்பனுபவம்

ஒவ்வொரு பத்திரிக்கைக்கும் ஒரு நோக்கம் இருக்கும். தன் வாசகர்கள் யார்? அவர்களுக்கு என்ன கொடுக்கவேண்டும்? அவர்கள் எதிர்பார்ப்பு என்ன? என்கிற தெளிவு. இதில் தெளிவாக இல்லையெனில் பத்திரிக்கை அதுவாகவே பொல்லையாகிரும். சிறுபத்திரிக்கையாக இருந்தாலும். இலக்கியப்பத்திரிக்கையில் நடுப்பக்க கவர்ச்சிப்படம் போடுவதோ அல்லது சினிமா எக்ஸ்ப்ரெசில் சமூக அவலங்களை சாடுவதோ நேர்மையான செயலாக கருதலாம்தான். ஆனால் வாங்கிப்படிக்கும் வாசகனுக்கு அது நேர்மையாக விற்கப்பட்ட பொருளல்ல.

இந்த தெளிவு குழப்பதின் உச்சியில்தான் பெரிய பெரிய பத்திரிக்கைகளே இன்றைக்கு திணறிக்கொண்டு இருக்கின்றன. விகடனைப்படித்தால் சினிமா எக்ஸ்பிரஸ் படித்த கடுப்பு. குமுதத்தை புரட்டி முடிக்கையில் விளம்பர கேட்டலாக் படிக்கும் வெறுமை. இவையிரண்டுக்கும் நடுவில் இருக்கும் கேப்புல கல்லா கட்டிறமுடியுமான்னு ரெண்டுசைடு கண்டெட்டுகளை ஒப்பேத்தி இரண்டுங்கெட்டான் நகலாக நிற்கும் குங்குமம். பெரிய பத்திரிக்கைகளே இப்படி தனக்கென இருந்த அடையாளங்களை இழந்து தமக்கும் வாசகர்களுக்கும் இருந்த பிணைப்பை அலட்சியப்படுத்தி எப்படியாவது விற்பனை ஏத்தறதுக்கு சினிமா விட்டா கதியில்லைன்னு உங்க எல்லோருக்கும் தேவை சினிமாதானேன்னு கரைச்சுக்கரைச்சு எனிமா கணக்கா வாராவாரம் ஊத்திக்கிட்டே இருக்காங்க. இலக்கிய பத்திரிக்கைகளே தவறாமல் கோடம்பாக்க சினிமா ஆய்வுக்கட்டுரை வெளியிடும் காலம் இது.

ஒரு எடுத்துக்காட்டுக்கு கல்கண்டு இப்படித்தான் இருக்கும்னு யாரும் முதன்முதலில் முடிவெடுத்து வாங்கி படிச்சிருக்க மாட்டோம். ஆனால் வாராவாரம் படிக்கையில் அதில் நாம் என்ன எதிர்பார்க்கிறோம் நமக்கு என்ன கிடைக்கும் அது தோதுப்படுமா என்கிற புரிதல் செட்டாகிரும். அதுகொண்டே தொடர்ந்து வாங்குவதா இல்லையாங்கற முடிவு. இப்படி முடிவெடுக்கும் வாசகர்களின் எண்ணிக்கையை உயர்த்தும் முயற்சியில் அந்த பத்திரிக்கை ஏற்கனவே உருவாக்கி வைத்திருக்கும் குணநலன்களின் எல்லையை உயர்த்துவதிலேயே வெற்றி கிட்டக்கூடும். வேறொரு ஜானரில் நன்கு விற்கும் பத்திரிக்கை செய்யும் வேலையை காப்பியடித்து இங்கு திணிப்பது அல்ல. இன்னைக்கு நாலு பத்திரிக்கையை ஒரு வாரம் வாங்கிப்படித்தால் அந்த நாலுமே இந்த திணறலில் இருப்பதை எந்த எளிய வாசகனும் சிரமின்றி கண்டுபிடித்துவிட முடியும். அதுவே அந்த நாட்பட்ட வாசகனுக்கு திருப்தியின்மையை கொடுக்கிறது.

அன்றைக்கு வாசனுக்கும் எஸ்.ஏ.பிக்கும் தமிழ்வாணனுக்கும் எதற்காக யாருக்காக பத்திரிக்கை நடத்தனும் என்ற தெளிவு இருந்திருக்கும். அதில் கிடைத்த உறுதியில்தான் பத்திரிக்கை அதன் வாசகர்கள் இரண்டுபேருமே பலன் பெற்றார்கள். அவர்களுக்கு என்ன கொடுக்கவேண்டுமென்ற தெளிவு இருந்தது. வாசகர்களுக்கு என்ன கேட்கவேண்டும் எங்கு வாசிப்பு ரசனை லெவலை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்கிற முனைப்பு இருந்தது. அதனால்தான் இன்னமும் நினைவில் வைத்திருக்கும் தொடர்கதைகளையும் சித்திரங்களையும் ஓவியங்களையும் பேட்டிகளையும் சிறுகதைகளையும் நகைச்சுவை கட்டுரைகளையும் நாம் பெற்றோம்.

இன்றைக்கு அவசர வியாபார உலகில் பத்திரிக்கைக்கு படிக்கும் வாசகர் பற்றிய அக்கறையும் அவர்கள் வேண்டுவன சிறப்பாக கொடுக்கும் பொறுமையும் இல்லை. காசுகொடுத்து வாங்கும் நமக்கும் என்ன எதிர்பார்க்கிறோம் எங்கிற தெளிவில்லை. இதில் வாசகர்கள் என்றைக்குமே வழிநடத்தப்படும் ஆட்கள்தான். ஆகவே நான் பழியை அன்றைய ஜாம்பவான்களின் இன்றைய வாரிசு ஆசிரியர்கள் மீதுதான் போடுவேன். அவர்களுக்கு அவர்கள் முன்னோர் கட்டிவைத்த கோட்டையை எப்படியாவது விற்பனையில் கட்டிக்காத்தால் போதுங்கறதே உயரிய லட்சியமா இருக்கும்போல. முன்னோர் எந்த அளவுக்கு வாசிக்கும் அளவில் பழக்கத்தில் தாக்கத்தையும் உயர்வையும் ஏற்படுத்தினார்கள் என்பதெல்லாம் ஒரு பொருட்டோ கவலையோ அல்ல. விற்பனை பிரதிநிதிகளும் ஆராய்ச்சி எம்பியே குழுவும் மார்க்கெட் அனாலிசிஸ் முடிவுகளுமே இன்றைக்கு ஒவ்வொரு பக்கத்தின் கண்டெண்ட்டை தீர்மானிக்கின்றன. ஆசிரியரின் நம்பிக்கையும் திறனும் அல்ல. அதனால்தான் எல்லா பத்திரிக்கைகளும் நடிகநடிகைகளின் கலர்ப்படங்களையும் பேத்தல் பேட்டி கட்டுரைகளையும் சினித்துணுக்குகளையும் பக்கம்பக்கமாக நிரப்பி சினிமா எக்ஸ்பிரஸ்களின் நகலாக தொங்கிக்கொண்டுள்ளன. அதற்குள் கழுகாரும் சுவாமியானந்தாவும் வாரம் இருமுறை கரைச்சதையே கழுவியூத்தி பல்லிளித்து உங்களுக்கு இதுபோதுண்டேன்னு கடுப்படிக்கிறார்கள்.இவ்வளவு ஏன், திருமாவேலனே அம்மாவுக்கு "சர்க்கரைசத்து"ன்னு பம்பி இதுவரை சுயமாக கொண்டுவந்த நம்பகத்தன்மையை ஒருவரியில் இழந்து பத்தோடு பதினொன்றாகிறார். நாம் வாசிப்பில் திருப்தியுறாத வெறுப்பாளியாகி அடுத்தவார பிரதிக்கு வழக்கம்போல காத்திருக்கிறோம். பத்திரிக்கைக்கு ஆசிரியர் என்பது ஒரு ஆளுமை. இப்பொழுது பெரும்பாண்மை வியாபார மேலாண்மையாளர்கள் மட்டுமே.



ஏன் இப்படி தலைப்புக்கு சம்பந்தமில்லாம பெனாத்துறேன்னா வண்ணத்திரையை எப்படி அனுகுகிறேன் என புரிந்துகொள்ளத்தான். வண்ணத்திரையில் எனக்கு என்ன வேண்டும் என்பதோ என் எதிர்பார்ப்புகள் என்ன என்பதோ மிக குழப்பத்திற்குரிய விடயமெல்லாம் இல்லை. ஜஸ்ட் அரைமணிநேர சினிசெய்திகள் மீதான இலகுவாசிப்பு மற்றும் கவர்ச்சிப்படங்கள். அதை எவ்வாறு சுவாரசியப்படுத்திக்கொடுக்கிறோம் என்பதில்தான் சினிமா எக்ஸ்பிரசும் வண்ணத்திரையும் சினிக்கூத்தும் விஜய்ரசிகனும் வேறுபடுகின்றன.

** சீசனுக்கான எம்மெஸ்வி நினைவுகூறல் கட்டுரை நன்றாக இருந்தது. விசயங்களில் முழுநிறைவுவில்லையெனினும்.

** பாகுபலியின் விமர்சனம் சரிவிகித கலவை. எந்த பில்டப்புமில்லா பத்தி. நன்று

** நெல்லைபாரதியின் பாட்டுச்சாலை மிக நிறைவான கட்டுரை. புத்தகத்தின் முக்கிய கண்டெண்ட்.



** லட்சுமிமேனனின் மூன்று புகைப்படங்களுடனான பேட்டி. கோடிரூவாய் கொடுத்தாலும் கவர்ச்சி காட்டமாட்டேன் என சொல்லியிருந்தார். செய்யும் தொழில் மீதான அவர் சுயகட்டுப்பாடுகள் வாழ்க. புகைப்படங்கள் ஹோம்லியாக இருந்தன. ஆனால் எடுக்கப்பட்ட கோணங்கள் அவர் சிறுபெண் என்பதையும் அவர் ப்ளஸ் பாயிண்ட்டுகளான கண்களின் சிறப்பையும் வெளிப்படுத்த தவறிவிட்டன. பெரியபெண் போல தோன்றுகிறார். புகைப்படக்காரர் கவனிக்கவேண்டும்

** நிறைய ஒருபக்க புகைப்படங்கள் மற்றும் அதுசார்ந்த துணுக்குகள். துணுக்குகளில் அவ்வளவு சாரமில்லையாதலால் பக்கத்தை நிரப்பும் முயற்சியாகவே தெரிகின்றன. புகைப்படங்கள் பெரிதாக இருப்பது அழகுதான். ஆனால் கூடச்சொல்லும் சேதிகளின் சுவாரசியம் மேலும் அழகூட்டும்



** கவர்ச்சி காப்ஷன்கள் கொண்ட ஒருபக்க வண்ணப்படங்கள். ப்ரிண்ட் துல்லியம் அழகு. ஆனால் படங்களில் கில்மா மிகக்குறைவு. ஏப்பைசாப்பையான படங்கள் காணும் சுவாரசியத்தைக்கூட குறைக்கின்றன. 'வெறி'த்து பகபகன்னு அடுப்பு இடுப்பெல்லாம் முழுசா எடுபடலை. நெட்டுக்குத்தல் மறைக்கும் நிலவு பேனைப்போடாதிங்க போன்ற காப்சன்கள் படங்களோடு இணையாக கவர்ச்சியை வெளிப்படுத்த திணறுகின்றன. புகைப்படத்தை மேம்படுத்தத்தான் காப்ஷன்கள். பெரும்பான்மை தலைகீழான வேலையை செய்வதால் கிடைக்கும் கில்மா கிடைக்கவில்லை. வருங்காலத்தில் நல்ல படங்களை தேர்வுசெய்து பார்த்து ஆவன செய்யவும்.

** சரோஜாதேவி பதில்கள் - மிகச்சிறப்பான பிராண்டிங் முயற்சி. ஆனால் ஒரு நுணுக்கம் மிஸ்சாவதாக சம்சயம். குருவியாரின் பதில்கள் பார்க்க மிக இலகுவான சொல்லிச்செல்வதாக இருப்பதாக இருப்பவை. ஆனால் கேள்வி கேட்டவருக்கு அவர் கற்பனைக்கான இடத்தை மறக்காமல் கொடுத்து பட்டும்படாமல் சொல்பவை. "என் உயரம் ஐந்தடிதான் நான் லட்சுமிமேனனை பெண் கேட்கலாமா குருவியாரே? சுரேஷ், கரம்பைப்பட்டி - எட்டாக்கனிக்கு கொட்டாவி விடாதீர் கரம்பையாரே! " இந்த கேள்விபதிலில் இருக்கும் சுவாரசியமே படிக்கையில் சுரேஷை வெக்கப்படவைக்கும் முயற்சியில் வெற்றிதான். ஆனால் சரோஜாதேவி பச்சையாக போட்டுடைக்கிறார். சட்டென வாசகரின் ஒட்டாமை சரோஜாதேவியின் திறமையை மட்டுமே வெளிச்சத்தில் காட்டி நம்மை விலக்கிவைக்கிறது. அதுவும் ராமராஜன் ஷகிலா கேள்விக்கான பதில் வெறுப்பின் உச்சத்துக்கே கொண்டுசென்றது. அதில் வெளிப்பட்டது சரோஜாதேவியின் ஆபாசம் மட்டுமே. அதில் வேறெந்த சுவாரசியமும் கிட்டவில்லை. ஆரம்பகால அதிர்ச்சிமதிப்பீடு கவன ஈர்ப்பு முயற்சி. பலனுக்குப்பதில் தவறான முத்திரையை ஆரம்பத்திலேயே பெற்றுவிட்டதுதான் குறை. நாட்பட செம்மைப்பட்டால் நிச்சயம் அரசு குருவியார் ரேஞ்சில் பிராண்டாகும். கேள்விபதில் விளையாட்டு சமாச்சாரமில்லை. நுணுக்கங்கள் நிறைந்தது. வாத்தியாரே சோபிக்காத ஏரியா!



** வாசகர் கடிதம் ஒரு பிணைப்பு ஏரியா. சின்ன தவறுகளும் பெரிதான விலகல் கொடுக்கும். ரீடர்ஸ் க்ளாப்ஸ்சில் படப்பெயர் "நேற்று இன்று நாளை" என தவறாக வெளியாகியுள்ளது. திருப்பூர் சங்கரே தவறாக எழுதியிருந்தாலும் ஆசிரியர் சுட்டிக்காட்டியிருந்தால் சங்கர் வண்ணத்திரையோடு வாழ்நாளெல்லாம் பச்சக்கென ஒட்டியிருப்பாப்ல :)








மற்றபடி, யுவகிருஷ்ணாவின் டச் ஆங்காங்கே தெரிகின்றன. ஆனால் லக்கிக்கு என ஒரு தொனி உண்டு. மிக எளிமையான சினேக நக்கல். வண்ணத்திரை ஜானர்

பத்திரிக்கைகளுக்கு மிகத்தோதான குணம். அது முதன்மை ஆசிரியர் யுவகிருஷ்ணாவுக்கும் வாய்க்குமானால் வாசக நமக்கு லக்கு. ஆரம்ப நிர்வாக அழுத்தங்கள் சமனப்பட்டு சீக்கிரம் லக்கியின் முத்திரையை அழுத்தமாக வண்ணத்திரை பெறட்டும் 

No comments:

Post a Comment