Saturday 11 July 2020

SIVAJI GANESAN HELPED KAKKAN AND DISCUSSION



                     SIVAJI GANESAN  HELPED 
                     KAKKAN AND DISCUSSION



எழுபதுகளின் துவக்கத்தில் வறுமையின் பிடியில் சிக்கி வாடிய கக்கன் மற்றும் அவரது குடும்பத்துக்கு நிதியளித்து உதவ எண்ணிய நடிகர்திலகம் சிவாஜி, அதற்காக, தான் அப்போது நடத்திவந்த 'தங்கப்பதக்கம்' நாடகத்தினை சென்னைக்கு வெளியே பெரிய நகரமொன்றில் நடத்த திட்டமிட்டு அதற்கான முயற்சிகளில் இறங்கினார்

தான் சார்ந்திருந்த காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைவர்களில் ஒருவரும், பல ஆண்டுகளாக அமைச்சராக இருந்தவருமான கக்கன் ( இன்று வரை கக்கன் போல் ஒரு சிறந்த அமைச்சர் தமிழகம் பார்க்கவில்லை என்பது அரசியல் ஆய்வாளர்கள் கருத்து ) அவர்களுக்காக நடத்தப்படும் நாடகத்துக்கு பெருந்தலைவர் காமராஜர் தலைமையேற்றால் சிறப்பாக இருக்கும் என்று எண்ணி அவரை அணுக, சாதாரணமாக இதுபோன்ற நாடக விழாக்களில் கலந்துகொள்ளும் பழக்கமில்லாத பெருந்தலைவர், கக்கன் அவர்களுக்காகவும் நடிகர்திலகத்துக்காகவும் வேண்டுகோளை ஏற்றார். நாடகம் கோவையில் நடந்ததாக நினைவு.

நாடகக்கலைஞர்களை சென்னையிலிருந்து அழைத்துச்சென்று திரும்பக் கொண்டு வந்து சேர்ப்பது, அவர்களின் சம்பளம், அரங்க வாடகை, நாடக செட்களுக்கான லாரிவாடகை, விளம்பரச்செலவு என அனைத்துச் செலவுகளையும் நடிகர்திலகமே ஏற்றுக்கொண்டார்.

அபூர்வமாக தங்கள் நகரில் நடிகர்திலகம் பங்கேற்று நடிக்கும் நாடகம், அதுவும் பெருந்தலைவர் தலைமையில் நடக்க இருப்பதையறிந்த ரசிகர்களும் பொதுமக்களும், இந்த அரிய வாய்ப்பைத்தவற விடக்கூடாதென்று பெரும் கூட்டமாகத் திரண்டு வந்தனர். வசூல் குவிந்தது.

நாடகத்துக்கான மொத்தச்செலவையும் நடிகர்திலகம் ஏற்றுக்கொண்டதால், நாடகத்தில் வசூலான தொகை முழுவதும் கக்கன் அவர்களின் குடும்பத்துக்காக, மேடையிலேயே தலைவர் கரங்களால் வழங்கப்பட்டது. நடிகர்திலகத்தின் இந்த சீரிய சேவையைப்பாராட்டி அவருக்கு பெருந்தலைவர் காமராஜ் அவர்கள் ஒரு தங்கப்பதக்கத்தினை பரிசாக அளித்தார். தலைவர் அளித்த அந்தப்பதக்கத்தையும் நடிகர்திலகம் விழாவில் ஏலம் விட்டார். அங்கிருந்த உள்ளூர் காங்கிரஸ் பிரமுகர் அதை 10,000 ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தார். (அன்றைய தினம் ஒரு சவரன் தங்கம் எழுநூறு ரூபாய்). ஏலத்தில் கிடைத்த பத்தாயிரத்தையும் கூட கக்கன் அவர்களுக்கே வழங்கிவிட்டார் நடிகர்திலகம்.

நன்றி தெரிவித்துப்பேசிய கக்கன், "பதக்கம் மட்டும் தங்கம் அல்ல, சிவாஜியின் மனமும் சொக்கத்தங்கம்" என்று மனம் நெகிழ்ந்து சொன்னார்.
நன்றி. தொகுப்பு ராஜகோபாலன் ...
இணைய பகுதியிலிருந்து ....




மும்பை அரோரா தியேட்டரில் ஒரு தமிழ்ப் படம் 61ல் ரிலீஸானது.இரு சகோதரிகள் அந்தப் படத்தைப் பார்க்க இருட்டில் மெதுவாக வருகிறார்கள்.இருட்டில் வரக் காரணம் இருவருமே புகழ் பெற்ற பிரபலங்கள்.படம் ஓட ஓட அதிலேயே ஒன்றிப் போன சகோதரிகள் இமை கொட்டாமல் பார்க்கிறார்கள்.இடைவேளை விடுகிறது.விளக்குகள் ஒளிர அருகிலிருந்த சகோதரியை எதேச்சையாகப் பார்க்க அவரது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடுகிறது.என்னாச்சு என பதறிய சகோதரியிடம் ரஹீம் என்னை மிகவும் கலங்க வைத்துவிட்டார் என்கிறார்.எனக்கும் தான் என்கிறார் இன்னொரு சகோதரி.யார் இந்த ரஹீம்?. கலங்கிய சகோதரிகள் கடைசி வரை ரஹீமோடு உறவாட காரணமான படம் எது?.
கலங்கிய சகோதரிகள் லதா ஆஷா.இந்திப் படவுலகின் புகழ் பெற்ற சகோதரிகள்.ரஹீம் நமது நடிகர் திலகம்.பாதித்த படம் பாவ மன்னிப்பு.நேராக சென்னை சென்று அன்றைய ரக்ஷாபந்தன் தினத்தில் அந்த ரஹீமை தங்களது அண்ணனாக ஏற்றுக்கொண்டது தான் இந்தப் படத்தின் வெற்றி.நடிகர் திலகம் ரஹீமாகவே வாழ்ந்து காட்டிய படம்.இந்தப் படத்தின் கதை உருவான வரலாறு சுவாரசியமானது.
இது சந்திரபாபுவின் கதை என்றால் நம்புவது கொஞ்சம் கடினம்.அவரது வாழ்க்கைக் கதையல்ல.தான் நாயகனாக நடிக்க அவர் தயாரித்து வைத்திருந்த கதை.கதையின் பெயர் அப்துல்லா.பீம்சிங்கை அணுகி அவரிடம் கதை சொன்ன சந்திரபாபு படம் எடுத்துத் தருமாறு கேட்க பீம்சிங்கும் ஒரு இரண்டாயிரம் அடி எடுத்து போட்டுப் பார்க்க சந்திரபாபுவிற்கு இது செட்டாகாது இன்னும் கொஞ்சம் டெவலப் செய்தால் சூப்பரான படமாக மாறும் என்ன செய்யலாம் என யோசிக்க படத்தின் பைனான்ஸியரான சரவணன் கதையில் இம்ப்ரஸாகி எங்களையும் இணை தயாரிப்பாளராகப் போட்டு நடிகர் திலகத்தை வைத்து எடுக்கலாம் என ஐடியா கொடுக்க சந்திரபாபுவிற்கு இன்னொரு வேடம் கொடுக்கலாமா?. அதுவும் செட்டாகாதே.பாவம் பாபு கதையைக் கொடுத்து பணம் வாங்கிக்கொண்டு போக பீம்சிங்கின் புத்தா பிக்சர்ஸ் கதையை இன்னும் கொஞ்சம் மெருகேற்றினார்கள்.
நடிகர் திலகத்தை நாயகனாக ஒப்பந்தம் செய்தார்கள்.அவரது தம்பி சண்முகத்தின் திருமணத்திற்கு வந்திருந்த காதல் மன்னனிடம் கதை சொல்லி இன்னொரு முக்கிய கேரக்டருக்கு அவரையும் ஒப்பந்தம் செய்தார்கள்.அவருக்கு ஜோடியாக அவரது மனைவியைப் போட நடிகர் திலகத்திற்கு அன்றைய புதுமுகமான தேவிகாவைப் போட முக்கிய கேரிக்டருக்கு நடிகவேள் ஒப்பந்தமாகி அப்படியே படம் ரெடியாகத் தொடங்கியது.அப்படி என்ன தான் அந்தக் கதை என்று பார்க்கலாம்.
ஆளவந்தான் ஒரு அடாவடிப் பேர்வழி.பணத்தாசை பிடித்தவர்.தங்க வியாபாரத்தில் பணம் கொட்ட அவரிடம் வைரம் விற்க வந்தவரை கொலை செய்து வைரத்தை அபகரிக்க கொலைப்பழியைத் தூக்கி தன்னிடம் வேலை செய்யும் மாணிக்கம் பிள்ளை மேல் போடுகிறார்.ஆளவந்தானின் மனைவி மரகதம் இரு மகன்கள் ராமு ராஜன்.மாணிக்கம் பிள்ளைக்கு மனைவி மகள் தங்கம்.கர்ப்பிணி மனைவி தனது கணவன் சிறை செல்ல அந்த அதிர்ச்சியில் பெண் குழந்தை ஒன்றை பெற்றுப் போட்டு விட்டு கண்ணை மூட குழந்தையை எடுத்து பக்கத்து வீட்டுப் பெண் ஜேம்ஸ் என்ற பணக்காரரிடம் ஒப்படைத்து இன்னொரு பெண்ணை தானே வளர்க்கிறார்.மாணிக்கம் பிள்ளை தனது எஜமான் செய்த துரோகத்திற்காக அவரது ஒரு மகனான ராமுவை தூக்கி வந்து ரெயில்வே டிரக்கில் போட ஒரு முஸ்லீம் வைத்தியர் கண்ணில் பட்டு அங்கேயே வளர்கிறான்.எல்லோருமே பெரியவர்களாகி எப்படி இணைந்தார்கள் என்பது தான் மீதிக்கதை.
இந்தப் படம் ஒரு அருமையான மெஸ்ஸேஜை மக்களுக்குச் சொன்னது.மனிதன் படைத்த மதத்தை இறைவன் படைத்ததாகக் கூறிக்கொண்டு அடித்துக்கொள்ளும் அறியாமைக்கு ஒரு சம்மட்டி அடி கொடுத்தது.பெயரில் தான் வித்தியாசமே தவிர அனைவருமே இறைவனின் குழந்தைகள் தான்.எங்கு பிறந்தும் எங்கு வளர்ந்தும் எல்லாம் ஒரு தாய் பிள்ளைகள் என்ற உண்மையை இந்தப் படம் எடுத்துச் சொன்னது.
எல்லாத் தளத்திலும் வெற்றி வாகை சூடிய படம்.நடிப்பா? . யாருமே நடிக்கவில்லை.வாழ்ந்துவிட்டே போனார்கள்.இசையா? . இன்னொரு படம் இப்படி அமையுமா என்றது.இயக்கமா? . என்ன குறை என்றது.பாடலா? . சத்தியமாக எவருமே இப்படி எழுத முடியாது என்றது.அத்தனைக்கும் சேர்த்து படம் வெள்ளி விழாக் கண்டது.
நடிகர் திலகம் தனது தியேட்டரான சாந்தியில் தனது முதல் படமாக இந்தப் படத்தை பதிவு செய்தார்.ஜி.உமாபதியோடு இணைந்து தான் தியேட்டரைக் கட்டினார்.போகப்போக மொத்த பங்குகளையும் தனதாக்கி சென்னையின் அடையாளமாக இந்தத் தியேட்டரை ஜனவரி 12 ,1961ல் அப்போதைய முதல்வர் காமராஜர் தலைமை தாங்க இந்திய நிதி அமைச்சர் சி.எஸ்.தியேட்டரை திறந்து வைத்தார்.ஓப்பனிங் ஷோ ஸ்ரீனிவாச கல்யாணம்.அடுத்த ஷோ நாகேஸ்வரராவ் சாவித்திரி நடித்த தூய உள்ளம்.அடுத்து அசோக் குமார் நடித்த கல்பனா.அதற்குள் பாவ மன்னிப்பு ரெடியாக மார்ச் 16ல் தனது திரையில் நடிகர் திலகம் தோன்றினார்.மொத்தம் 82 அவரது படங்கள் பிற் காலத்தில் ஓடியது.பாவ மன்னிப்போடு சேர்த்து திருவிளையாடல் வசந்த மாளிகை தங்கப் பதக்கம் திரிசூலம் முதல் மரியாதை ஆகியவை வெள்ளி விழாவை இங்கு தான் கொண்டாடின
பாவ மன்னிப்பிற்கு ஏ.வி.எம்.பிரிமியர் நடத்தியது சித்ரா தியேட்டரில்.பிறகு தான் சாந்திக்குப் போனது.விளம்பர யுக்தியாக ஜப்பானிலிருந்து மிகப் பெரிய ஹீலியம் பலூன் வரவழைத்து தியேட்டர் மொட்டை மாடியில் பறக்கவிட்டார் செட்டியார்.எங்கிருந்து பார்த்தாலும் ஏ.வி.எம்.பாவமன்னிப்பு லெட்டர் தெரிந்தது.விமான போக்குவரத்து நோட்டீஸூம் வந்தது.சரவணன் முதன்முதலாக புரடக்ஷன் எக்ஸிகியூட்டாவாக பணியாற்றிய படம்.
பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் பட்டையைக் கிளப்ப ஏ.வி.எம்.பத்தாயிரம் பரிசொன்றை அறிவித்தார்.சூப்பரான பாடல்களை நாங்கள் வரிசைப்படிதேர்வு செய்து வைத்துள்ளோம்.யார் சரியாக சொல்கிறார் பார்க்கலாம்?. நாலு லட்சம் பேர் கலந்து கொள்ள பானுமதி என்ற பெண் பரிசுப் பணம் பத்தாயிரத்தை தட்டிச் சென்றார்.
பாடல்களைப் பற்றி சொல்லவே வேண்டாம்.மெல்லிசை மன்னர்கள் புகுந்து விளையாடினார்கள்.கவியரசு அதை விட விளையாடினார்.வந்த நாள் முதல் இந்த நாள் வரை காலம் மாறவில்லை.அட்டகாசமான மோகன ராகத்தில் மன்னர்கள் மெட்டுப் போட பூரித்துப் போனார்கள் இசை ரசிகர்கள்.59ல் வெளியான நயா சன்சார் படத்திலும் இதே ஸ்டைலில் ஒரு பாடல் ஹிட்டானது.ராஜேந்திர கிஷன் எழுதி சித்ரகுப்த் இசையமைத்த தின் ராத் பதல்தேஹைன் சாத் சாத் மௌஸம்கீ என்ற பாடல்.பகல் இரவு மாறுது பக்கச் சூழல் மாறுது பருவம் மாறுது என அந்தப் பாடல் போகும்.ஐயா டி.எம்.எஸ்.ரசித்துப் பாட நடிகர் திலகம் அந்தப் பாடலை எங்கேயோ கொண்டு போவார்.
அத்தான் என்னத்தான் அவர் என்னைத் தான் என கவியரசு வியக்க வைத்த இன்னொரு பாடல்.காலங்களில் அவள் வசந்தம் காலம் கடந்தும் பேசும்.பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது பாடல் காமெடிக்கும் பயன்படுத்தப்பட்டது.எல்லோரும் கொண்டாடுவோம் இன்னிசை மட்டுமல்ல கவிஞரின் அக்கறையான அறிவுரையும் கொண்ட பாடல்.சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் நடிகர் திலகம் நடிப்பில் மிளிர்ந்த பாடல்.சாய வேட்டி சலசலங்க என்ற ஜாலியான பாடல் இன்றும் இனிக்கிறது.
படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் பங்கேற்ற மேதைகள்.அவர்களது பாத்திரப் படைப்பு அசத்தலானது.நடிகர் திலகம் ராமு மற்றும் ரஹீமாக வாழ அவரது ஜோடி மேரியாகவே காட்சியளித்தார்.நடிகவேளின் ஆளவந்தானை இனி யாருமே தொட முடியாது.மனிதர் அப்படியே ஆளவந்தாராக மாறியே போனார்.முஸ்லீம் பெரியவரைக் கண்டவர் நாகையாவை மறந்தே போனார்கள்.ஜேம்ஸைக் கண்டவர்கள் சுப்பையாவை மறந்தே போனார்கள்.மாணிக்கம் பிள்ளை நம்மையெல்லாம் கலங்க வைக்க பாலையா காணாமல் போனார்.பணக்கார படித்த இளைஞனாக காதல் மன்னன் அசத்த அவரது ஜோடி சாவித்திரி கலக்க தாயார் ராஜம்மா ஜொலித்தார்.ஆரம்பத்தில் இந்தக் கேரக்டருக்கு கண்ணாம்பாவையே ஒப்பந்தம் செய்தார்கள்.அவரது உடல் நிலை ஒத்துழைக்க மறுக்க ராஜம்மா மரகதமாக மாறினார்.
சில படங்களைப் பற்றி பேசத் தொடங்கினால் முடிவில்லாமல் நீண்டு கொண்டே போகும்.ஏகப்பட்ட தகவல்கள் இனியும் உண்டு இந்தப் படத்தைப் பற்றி.பல பரிசுகளை வென்ற படம்.4,500 ரூபாய் சம்பளம் பெற்ற தேவிகா பிற்காலத்தில் ஏகப்பட்ட படங்கள் மூலம் புகழ் பெற்றார்.கொத்த மங்களம் சுப்புவின் கடைசிப் படம் என்ற தகவலும் இந்தப் படத்திற்கு உண்டு.பத்து லட்சத்தில் தயாராகி ஏகப்பட்ட லட்சங்களை வாரிக் குவித்த இந்தப் படத்தை இன்று பார்த்தாலும் வியப்பாக இருக்கும்.
-
.உயர்ந்த மனிதன் படத்தில் இருந்து ஒரு ஹைலைட்டான காட்சி. இந்தக் காட்சியைப் பற்றி அய்யன் ஒரு பத்திரிக்கையின் பேட்டியில் 35 வருடங்களுக்கு முன் கூறியது .இந்தக் காட்சியில் நானும் அசோகனும் நடிக்கும் பொழுது நான் மிகவும் கவனமாக நடித்தேன்.காரணம் இந்தக் காட்சி என்னைவிட அசோகனுக்கு சிறப்பாக அமைந்ததாக நினைத்தேன். இறுதியில் நான் நினைத்தது போல இந்தக் காட்சியில் அசோகன் அவர்கள் சிறப்பாக நடித்தது கண்டு நானே வியந்தேன். அத்தனை பாராட்டுக்களையும் அசோகன் அவர்கள் பெற்றுவிட்டார். தன் கூட நடிப்பவர்கள் நடிப்பு மிகவும் அருமையாக இருந்தால் அதை அய்யன் பாராட்ட தவறியதே இல்லை .இதுதான் அய்யனின் பரந்த மனம்

#நடிகர் சிவாஜி கணேசன் குறித்து அரிய தகவல்கள் ..

⚘மனோரமாவின் அம்மா இறந்தபோது, உடனிருந்து ஆறுதல் சொல்லி, எல்லா ஏற்பாடுகளையும் செய்ததுடன், மனோரமாவின் சகோதர ஸ்தானத்தில் நின்று, ஈமக்காரியங்கள் உட்பட அனைத்தையும் செய்தார் சிவாஜி.

⚘ஆச்சி மனோரமாவுக்கும் சிவாஜிக்குமான அண்ணன் தங்கை பாசம் போலவே, லதாமங்கேஷ்கருக்கும் சிவாஜிக்கும் எந்த ஜென்மத்து பந்தமோ... சிவாஜியின் பெயரைச் சொன்னாலே, அண்ணா என உருகிவிடுவார் லதாமங்கேஷ்கர் என்கிறார்கள்.
சிவாஜி இறந்தபோது, ஓடோடி வந்த லதாமங்கேஷ்கர், ’சென்னைக்கு வந்தா எங்கியும் தங்கக்கூடாது. இங்கே உன் அண்ணன் வீடு இருக்குன்னு பிரியமா சொல்லுவீங்களேண்ணா’ என்று கதறியழுதார்.

⚘தமிழ் சினிமா உலகில் முதன்முதலாக மிகப் பெரிய கட்-அவுட் வைக்கப்பட்டது சிவாஜி கணேசனுக்குத்தான் என்பார்கள். 1957-ல் வெளிவந்த அந்தப் படம் 'வணங்காமுடி'

⚘சிவாஜிக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் உண்டு. எல்லோரிடமும் சிகரெட் பிடித்தபடியே பேசுகிற சிவாஜி, இரண்டுபேருக்கு முன்னே சிகரெட் பிடிக்கமாட்டார். அவர்கள்... 'பராசக்தி' படத்தின் இயக்குநர்கள் கிருஷ்ணன் - பஞ்சு.
⚘சிவாஜிக்கு, கடிகாரங்கள் என்றால் அப்படியொரு ஆசை. விதவிதமான கடிகாரங்களை எங்கு போனாலும் வாங்கிவிடுவார். ஸ்டைலாக அணிந்துகொள்வார். ஒமேகா, ரோலக்ஸ் போன்ற வாட்சுகளை ஏராளமாக வாங்கி வைத்திருந்தார்!

⚘அம்மாவின் மீது அளப்பரிய அன்பு. வீட்டின் பெயர் அன்னை இல்லம். தன் தாய் ராஜாமணி அம்மாளுக்கு சிவாஜி கார்டனில் சிலை ஒன்றை அமைத்தார் சிவாஜி. அந்தச் சிலையைத் திறந்துவைத்தவர் எம்.ஜி.ஆர்!

⚘'ஸ்டேனிஸ் லா வோஸ்கி தியரி' என்கிற நடிப்புக் கல்லூரி மாணவர்களுக்கான பாடப் புத்தகத்தில் 64 வகையான முகபாவங்களைப் பிரதிபலிக்கும் திறமை பெற்றவர் என்று குறிப்பிட்டு, சிவாஜியின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன!

⚘அவரது தீவிரமான ஆசைகளில் ஒன்று தந்தை பெரியார் வேடத்தில் நடிப்பது. கடைசி வரை அது நிறைவேறவே இல்லை! நாம் கொடுத்துவைத்தது அவ்வளவுதான்!




அந்த ஊர் கோவில்பட்டி என்று ஞாபகம். அங்கு நடந்த ஒரு பொருட்காட்சியில் நாடகம் நடத்த சிவாஜியை அழைத்திருந்தார்கள்.
அப்போதெல்லாம் சிவாஜி சினிமாவில் பிஸியாக இருந்தாலும் நாடகங்களிலும் நடித்துக் கொண்டிருந்தார்.
ஏதோ ஒரு நல்ல காரியத்துக்கு நன்கொடை திரட்டுவதற்காக சிறப்பு நாடகம் போடுகிறோம் என்று சொன்னவுடன் சரி எனச் சொல்லி விட்டார் சிவாஜி.
குறிப்பிட்ட நாள் வந்தது.
கோவில்பட்டி பொருட்காட்சி திடலில் சரியான கூட்டம்.
சிவாஜி வந்து விட்டார். கூடவே மேஜர் சுந்தரராஜனும் வந்திருந்தார்.
பலத்த கரகோஷத்துக்கு நடுவில் மேடைக்கு வந்தார் சிவாஜி.
வீர சிவாஜி வேடம்.
கை தட்டலும் விசிலும் காதை பிளந்தது.
மேடையில் அங்கும் இங்கும் நடந்தபடி சிம்மக் குரலில் கர்ஜிக்க ஆரம்பித்தார் சிவாஜி.
அப்போதுதான் மேடைக்கு பின்னால் அந்த கிசு கிசு நடந்தது.
அந்த நாடகத்தை ஏற்பாடு செய்திருந்த ஊர் பெரியவர்கள் மேஜர் சுந்தரராஜனை தேடி அலைந்து கொண்டிருந்தார்கள்.
"அதோ மேடைக்குப் பின்னால் நிற்கிறார் மேஜர் !"
அங்கே மேடையில் சிவாஜி முழங்கிக் கொண்டிருக்க, இங்கே மேஜர் சுந்தரராஜனிடம் கிசு கிசுத்த குரலில்
"எங்களுக்கு ஒரு உதவி செய்யணும்."
'என்ன' என்று கேட்டார் மேஜர்.
சொன்னார்கள்.
ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. நாடகம் முடிந்து புறப்படுவதற்கு முன், சிவாஜியிடம் ஒன்றிரண்டு வார்த்தைகள் பேச வேண்டுமாம்.
"அவ்வளவுதானே ?அதற்கென்ன ? நான் அறிமுகம் செய்து பேச வைக்கிறேன்" என்றார் மேஜர். ஊர்ப் பெரியவர்களுக்கு ஒரே சந்தோஷம்.
ஆனால் இன்னும் கொஞ்ச நேரத்தில் அங்கே நடக்கப் போவது என்னவென்று அப்போது யாருக்கும் தெரியாது.
நாடகத்தின் உச்ச கட்டம்.
சிவாஜியின் உரத்த குரல் ஒரு பக்கம். ரசிகர்களின் உற்சாக ஆரவாரம் மறு பக்கம்.
முடிந்தது நாடகம்.
விழுந்தது திரை.
ஆர்வத்துடன் சிவாஜியின் வருகைக்காக மேக்கப் ரூமுக்கு அருகே காத்திருந்தார்கள் ஊர் பெரியவர்கள்.
மேக்கப்பை கலைத்து விட்டு வெளியே வந்த சிவாஜி வேக வேகமாக தனது காரை நோக்கி நடந்து சென்றார்.
காருக்கு பக்கத்தில் நின்ற டிரைவரிடம் புறப்படலாம் என சைகையிலேயே சொன்னார்.
மேஜர் குறுக்கே புகுந்து பேச முயற்சிக்க, அவரிடமும் காரில் ஏறச் சொல்லி சைகை.
ஊர் பெரியவர்கள் தவிப்போடு மேஜரை பார்க்க ...
மேஜர் அவர்களை தடுமாற்றத்தோடு பார்த்துக் கொண்டே சிவாஜியுடன் காரில் ஏறிக் கொள்ள...
கார் நகர்ந்து வேகம் பிடித்தது.
கன்னத்தில் கை வைத்தபடி எதுவும் பேசாமல் சிவாஜி.
மேஜர் மெதுவாக பேச்சை ஆரம்பித்தார். "இருந்தாலும் ஒரு ரெண்டு வார்த்தையாவது அவங்களோட பேசிட்டு வந்திருக்கலாம்."
சிவாஜி மௌனம்.
தொடர்ந்தார் மேஜர். "எவ்வளவு நேரமா அவங்க காத்துக்கிட்டு இருந்தாங்க தெரியுமா ?"
சிவாஜி தன் கன்னத்தில் வைத்த கையை எடுக்காமலே
"யாரு ?"
"அங்கே நின்னுக்கிட்டு இருந்தாங்களே. ஊர் பெரியவங்க. அவங்கதான். உங்க மேல எவ்வளவு மரியாதை வச்சுருக்காங்க தெரியுமா? உங்க கிட்டே பேசணும்னு எவ்வளவு நேரம் அங்கேயே காத்துக்கிட்டு இருந்தாங்க தெரியுமா ?"
மௌனம்.
மேஜர் : "ஒரு நிமிஷம் நின்னு பேசியிருந்தா ..."
சிவாஜி: "சுந்தரராஜா... ஒரு நிமிஷம் என்னை கொஞ்சம் பாக்கறியா ?"
திரும்பி சிவாஜியை பார்த்த மேஜர் திடுக்கிட்டு போனார்.
சிவாஜி கையில் கர்சீப்.
கர்சீப் முழுவதும் ரத்தம்.
இவ்வளவு நேரம் சிவாஜி தன் கன்னத்தில் கையை மட்டும் வைத்திருக்கவில்லை. கர்சீஃபையும் சேர்த்து வைத்து உதட்டோடு அழுத்திப் பிடித்துக் கொண்டு வந்திருக்கிறார்.
"என்ன இது இவ்வளவு ரத்தம் ?" பதறினார் மேஜர்.
"அது ஒண்ணும் இல்லைப்பா.
நாடகத்தில கொஞ்சம்
உணர்ச்சி வசப்பட்டு வசனம் பேசினேனா ? தொண்டையில இருந்து என்னை அறியாமல் ..."
ரத்தத்தை அழுத்தி துடைத்துக் கொண்டார் சிவாஜி.
மேஜர் இன்னமும் பதறினார்.
"இதை ஏன் அங்கே வச்சே சொல்லலை ? டாக்டரை பாத்துட்டு வந்திருக்கலாமே."
"விடப்பா , இது எப்பவாவது வர்றதுதானே."
மேஜர் மௌனம்.
சிவாஜி சொன்னார்.
"அங்கே மேடைக்கு பக்கத்திலே நின்னுட்டு இருந்தாங்களே,
முக்கியஸ்தர்கள். அவங்க கிட்ட நான் நின்னு பேசலைன்னு உனக்கு வருத்தம், இல்லையா ?"
மௌனமாக தலை அசைத்தார் மேஜர்.
"இப்படி ரத்தம் வழிய நான் அவங்க முன்னாடி வந்து நின்னுருந்தா...? யோசிச்சுப் பாரு. பதறிப் போவாங்களா மாட்டாங்களா ?"
மௌனம்.
"சிவாஜி நம்ம ஊருக்கு வந்து அவனுக்கு இப்படி ஆயிடுச்சேன்னு அவங்களுக்கு மனசு கஷ்டப்பட்டு போகுமா இல்லையா ?"
"அதனாலதான் ஒரு வார்த்தை கூட அவங்க கிட்ட பேசாம, வழியற ரத்தத்தை அவங்க பாத்துடாம அவசரமா கார்ல ஏறினேன். இது தப்பா ?"
மேஜர் தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தார்.
சற்று நேர மௌனத்துக்கு பின் சிவாஜி சொன்னார்.
"என்ன, நாம புறப்பட்டு வந்தப்புறம் அவங்க பேசியிருப்பாங்க.
சிவாஜி மரியாதை தெரியாதவன். திமிர் பிடிச்சவன்.
இப்படியெல்லாம் பேசியிருப்பாங்க.
அவ்வளவுதானே ?
நான் எவ்வளவுதான் நல்லது செய்தாலும், நிறைய பேர்
என்னை தப்பாவேதான் பேசறாங்க.
என்ன செய்யறது ? நான் வாங்கி வந்த வரம் அப்படி."
சிவாஜி சொன்ன அந்த வார்த்தைகளை கேட்ட மேஜருக்கு வலித்தது.
கார் நிதானமாக சென்று கொண்டிருந்தது.
சிவாஜி வாயிலிருந்து இன்னமும் ரத்தம் வழிந்து கொண்டே இருந்தது.
கலைக்காகவே தன்னை அர்ப்பணித்த சிவாஜி என்ற நடிகனின் வாழ்க்கை சரித்திரத்தில் எழுதப்பட்டுக் கொண்டிருந்தது.

ஜூலை 21.
இன்று சிவாஜி நினைவு தினம்.


No comments:

Post a Comment