MY TURNING POINTS IN MY CAREER -MGR
.என் சினிமா வாழ்க்கையில், எத்தனையோ திருப்பங்கள் ஏற்பட்டதுண்டு.
முதலாவது பெரிய திருப்பம், நான் கதாநாயகனாக நடித்த, ராஜகுமாரி என்ற படம், மிகப்பெரிய வெற்றி பெற்றது தான்!
இரண்டாவது திருப்பம், மருதநாட்டு இளவரசி; குறைந்த வசதிகள் மற்றும் பல்வேறு நெருக்கடிகளுக்கு இடை யில் படமாக்கப்பட்டு, கதாநாயகன் வேடத்திற்கு நான் ஏற்றவன் என்ற எண்ணத்தை தயாரிப்பாளர்களுக்கு ஏற்படுத்திய, வெற்றிப் படம் இது.
மூன்றாவது திருப்பம், மர்மயோகி; 'கதாநாயகர்களின் வரிசையில் நான், இரண்டாவதா, முதலாவதா...' என்ற ரசிகர்களின் குழப்பத்தை போக்கி, குறிப்பிடத்தக்க கதாநாயகர்கள் வரிசையில் எனக்கும் ஒரு இடத்தை பெற்று தந்த படம்.
நான்காவது, மலைக்கள்ளன்; இப்படம் என்னை முதலிடத்துக்கு உயர்த்தியது.
ஐந்தாவது திருப்பம், நானே தயாரித்து, இயக்கி, இரட்டை வேடங்களில் நடித்த, நாடோடி மன்னன்; இப்படம், மாபெரும் வெற்றிப் படமாக அமைந்து, கலையுலக நண்பர்கள் மற்றும் ரசிகர்களின் இதயத்தில் சிறப்பான இடத்தை பெற்றுத் தந்தது.
ஆறாவது திருப்பம், என் இடது கால் முறிந்த பின் வெளி வந்த சமூகப் படமான, திருடதே! 'சமூகப் படங்களுக்கு நான் பொருத்தமற்றவன்...' என்ற எண்ணம் பலருக்கு ஏற்பட்டிருந்த நேரத்தில், இந்த படம் வெளி வந்து, மிகப்பெரிய வெற்றியை பெற்று, அந்த எண்ணத்தை பொய்யாக்கியது.
ஏழாவது திருப்பம், தேவர் பிலிம்சாரின், தாய் சொல்லை தட்டாதே! திருடாதே படம் வெளி வந்த பின், வெளியான சமூகப் படம் இது. சமூகப் படங்களில் நான் நடிக்க தகுந்தவனே என்பதோடு, என்னை ஒப்பந்தம் செய்தால் படம் முடிய பல மாதங்கள் ஆகும் என்றிருந்த அவப் பெயரையும் நீக்கிய படம்.
எட்டாவது திருப்பம், எங்க வீட்டுப் பிள்ளை; ஒரே மாதிரியான கதாபாத்திரங்கள் மற்றும் கதைகளில் நடிப்பதாக சிலர் குறை கூறிய நேரத்தில், புதுமையான வேடத்தில் நடித்ததாக புகழும், மகத்தான வெற்றியும் பெற்றுத் தந்த படம்.
ஒன்பதாவது திருப்பம், காவல்காரன்; துப்பாக்கியால் சுடப்பட்டு, கோபமாகவோ, உரக்கவோ பேசினால், ஒரு பக்கம் நரம்புகளால் இழுக்கப்பட்டு, பேசவே முடியாத நிலையில், மக்கள் என்னை ஏற்றுக்கொள்கின்றனரா, இல்லையா என்பதை அறிந்து கொள்ள உதவிய படம். முந்தைய வசூல்களின் சாதனையை, பல இடங்களில் பின் தங்க செய்த, குறிப்பிட தக்க திருப்பத்தை
தந்த படம் இது.
பத்தாவது திருப்பம், குடியிருந்த கோயில்; இரட்டையராக வேடமணிந்து நடித்ததற்காக, முதன் முதலாக, தமிழக அரசின் சார்பில் பரிசு பெற காரணமாயிருந்த படம்.
பதினோராவது திருப்பம், ஜெமினி நிறுவனத்தின், ஒளி விளக்கு; புதுமையானதொரு பாத்திரத்தை ஏற்று, நடிக்க கிடைத்த அரிய வாய்ப்பு. 'குடிகாரன் மற்றும் கொடுமைக்காரன் கதாபாத்திரத்தில் நான் நடிப்பதை ரசிகர்கள் ஏற்று கொள்வரா...' என்ற அச்சத்தோடு, படம் வெளியிடப்படும் வரை, தவித்து கொண்டிருந்தனர். ஆனால், படம் வெ ளியாகி, 'இது, வெற்றிப்பட வரிசை யில் சேர்க்கப்பட வேண்டியது...' என்று, மக்களால் தீர்ப்பு கூறப்பட்ட பின் தான், நிம்மதி பெருமூச்சு விட்டனர். இது, என் நூறாவது படம். ஆனால், கொடுமைக்கார கதாபாத்திரத்தை ஏற்று, வெற்றி பெற்றேன் என்ற முறையில், முதற் படம்!
பன்னிரண்டாவது திருப்பம், அடிமைப்பெண்; வரலாறோ, சமூகமோ, மந்திர ஜால கதையோ அல்ல; மனிதன் தன்னைத்தானே பலவீனமாக்கி கொள்கிறானே தவிர, இயற்கை, அவனுக்கு பலமுள்ள முதுகெலும்பை தான் கொடுத்திருக்கிறது என்ற கருத்தையும், அவன் நிமிர்ந்தால் நிமிரலாம்; வளைந்தால் வளையலாம்; அது, அவனுடைய தன்னம்பிக்கையை அடிப்படையாக கொண்டதே தவிர, பிறருடைய முடிவால் ஆக்கப்ப டுவதல்ல என்பதை விவரிக்கும் கதை. இப்படத்தில், சிங்கத்தோடு மோதி வெல்லும் வலிமையை, தாய்ப் பாசத்தால் பெற்ற ஒருவன் தான், கதாநாயகன்.
ஆணாயினும், பெண்ணாயினும் நன்மை, தீமை இவை இரண்டும் ஒவ்வொருவரிடத்தும் இருந்தே தீரும். ஆனால், ஒருவர் எதற்கு ஊக்கமும், உற்சாகமும் தருகின்றனரோ அது முழுமை பெற்று, முன்னின்று, அந்த மனிதனை ஆட்டி படைக்கும் என்ற கருத்தை மையமாக வைத்து, உருவாக்கப்பட்ட கதாபாத்திரம் தான், கதாநாயகியின் இரட்டை வேடம்.தன் குடிமக்கள், அடிமைகளாயிருப்பின், தான் அவற்றிலிருந்து விடுதலை பெற்றிருப்பினும், தானும் அடிமையே என்று எண்ணும் தலைவி கதாபாத்திரம் தான், கதாநாயகன் தாயின் கதாபாத்திரம். அந்த கதாபாத்திரத்தின் பெயரை தாங்கி நிற்பது தான், அடிமைப்பெண் என்ற தலைப்பு.
இப்படிப்பட்ட கதாபாத்திரங்களை கொண்ட இப்படம், வெற்றி பெற்றது மிகப் பெரிய திருப்பம் தான்.
இப்படம், பிலிம் பேர் பத்திரிகையின் பரிசை பெற்றது
.
பதிமூன்றாவது திருப்பம், மாட்டுக்கார வேலன்; ப.நீலகண்டன் இயக்கத்தில் உருவான இப்படம், அதற்கு முந்தைய சாதனைகளையெல்லாம் முறியடித்து, புதியதொரு சாதனையை படைத்தது.
பதினான்காவது மிகப்பெரிய திருப்பம், ரிக் ஷாக்காரன்; 'இப்படம் வெற்றி பெறாது; ஓடாது...' என்றெல்லாம் ஆரூடம் சொன்ன அனைவரும், படம் வெளிவந்ததும், 'இது மிகப் பெரிய வெற்றிப்படம் தான்...' என்றனர்.
இதுவரை, நான் நடித்த அத்தனை படங்களின் எல்லா சாதனைகளையும் முறியடித்ததோடு மட்டுமின்றி, 'தமிழக சினிமா வரலாற்றிலேயே இப்படி ஒரு வசூலை பெற்ற படம் கிடையாது...' என்று சொல்ல வைத்த பெருமை, ரிக் ஷாக்காரன் படத்திற்கே உரியது!
எத்தனையோ எதிர்ப்புகள், கேலிகள், இடைஞ்சல்கள்... அத்தனையும் தாங்கி, மனம் தளராது, துணிவோடு, எதிர்நீச்சல் போட்டு, படத்தை சிறப்பாக எடுத்தாரே ஆர்.எம்.வீரப்பன்... அவரே எல்லா பாராட்டுக்கும் உரியவர்.
எனக்கு அனைத்திந்திய சிறப்பு கிடைக்க, பெரிதும் காரணமாயிருந்தவர், ஆர்.எம்.வீரப்பன். அவருடைய சரியான சிந்தனை, என்னை, ரிக் ஷாக்காரனாக்கியது. அந்த, ரிக் ஷாக்காரன் எனக்கு அனைத்திந்திய புகழை வாங்கி தந்திருக்கிறான்.தமிழக அரசின் சிறப்பு பரிசை பெற்ற என்னை, இந்திய அரசின் பரிசையும் பெற செய்த, ரிக் ஷாக்காரன் படம், என் வாழ்வில் மிகப்பெரிய திருப்பத்தை தந்த படம்
No comments:
Post a Comment