Tuesday 28 July 2020

SIVAJI GANESAN HOROSCOPE





SIVAJI GANESAN HOROSCOPE

முந்திய கட்டுரையில் சிவாஜிகணேசன் ஒரு மிகச் சிறந்த கலைஞனாக உருவாக அவரது ஜாதகத்தில் என்னென்ன அம்சங்கள் இருந்தன என்பதையும் அவரது வாழ்க்கையில் 25-வது வயது ஏன் ஒரு முக்கியமான ஆண்டாக ஆகி மிகச் சிறந்த ஆரம்பத்தைக் கொடுத்தது என்பதையும் பற்றிப் பார்த்தோம். கால்நூற்றாண்டுக்கும் மேலாகக் கலைத்துறையில் நிலைத்து நின்று தமிழ்ச் சினிமாவின் வரலாற்றில் தவிர்க்க இயலாத பக்கங்களாக மாறிப் போன அவரது வாழ்க்கையில் 33 வயது முதல் 50 வயது முடிய உள்ள கால கட்டம் அவரது ஜாதகப்படி எவ்வாறு உள்ளது என்பதை இனி பார்ப்போம்.


நைசர்க்கிக தசைமுறைப்படி 33 வயது முதல் 50 வயது முடிய உள்ள 18 ஆண்டுகள் வியாழனுக்குச் சொந்தமானவை. வியாழன் ஒரு ஜாதகத்தில் ஆறுவிதமான பலங்களோடு நல்ல இடத்தில் இருக்குமானால் விசேஷமான நற்பலன்களையும், பலங்குன்றியவனாய்க் கெட்ட இடங்களில் இருக்குமானால் கெட்ட பலன்களையும் தருவான் என்பது பொதுவான கருத்தாகும். சிவாஜிகணேசன் ஜாதகத்தில் வியாழன் இயற்கை மித்ருவான செவ்வாயின் வீட்டில் இருந்து, இயற்கை சுபரான புதன் மற்றும் சுக்கிரனால் பார்க்கப்பட்டு நவாம்சத்திலும் இயற்கை மித்ருவான சூரியனின் வீட்டில் இருப்பதால் வியாழன் சுப பலன்களையே அதிகம் தருவான். மேலும் வியாழன் சொந்தத் திரிம்சாம்சத்தில் இருப்பதால் புத்திக் கூர்மையாலும், சுறுசுறுப்பாக இருப்பதாலும் பெருஞ்செல்வம் சேர்த்துப் புகழும், பெருமையும் கூடி வாழும் வாழ்க்கை இந்த ஜாதகருக்குக் கிடைக்கும்.

வியாழனின் சுபமான தசையில் ஒருவன் வித்தையாலும், புத்திக் கூர்மையாலும் வேதஞ் சொல்வதாலும், மந்திர உபதேசத்தாலும், அரசர்களாலும் திரவியங்கள் சேர்ப்பான் என சுலோகம் சொல்லுகின்றது. இந்த வேதஞ் சொல்லுதல், மந்திர உபதேசம் என்பவற்றை அப்படியே எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. வேத பாடங் கற்றவனும் உபநிஷத்துகளைக் கற்றவனும் மட்டுமே அவற்றைச் செய்ய இயலும். அதையே பிறரால் எழுதப்பட்ட கவிதைகள், கதைகள் இவற்றைச் சொல்வது, அவைகளை நாடகமாக்கி நடிப்பது என்று அர்த்தப்படுத்திக் கொண்டால் மொழியை அத்தனை அழகுகளோடு ஏன் சிவாஜிகணேசன் மட்டுமே பேசி நடித்தார் என்பதற்கு விடை கிடைக்கிறது. ஒரு கிரகத்தின் தசாபலன் ஜாதகத்தில் அது எந்த இடத்தில் இருக்கின்றது என்பதைப் பொறுத்து அமைவதைப் போலவே தசாப் பிரவேச காலத்தில் அது எவ்வாறு இருக்கின்றது என்பதைப் பொறுத்தும் அமைகின்றது.

ஒரு கிரகத்தின் தசை ஆரம்பிக்கும்போது அதற்கான ஜாதகம் எழுதப்பட்டு அதன் மூலமும் பலன்கள் கணிக்கப்படுகிறது. ஸ்ரீபதி பத்ததி என்ற கணித நூலுக்கு தமிழ் வியாக்கியானம் செய்த ஜோதிஷ மேதை பிரம்மஸ்ரீ ஸ்ரீநிவாஸ திருமலாச்சாரியார் (இவர் பழைய திருநெல்வேலி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள கீழப்புத்தனேரி என்ற தாமிரவர்ணி நதிக்கரைக் கிராமத்தைச் சேர்ந்தவர்) அவரது நூலில் இவ்வாறு குறிப்பிடுகின்றார்.

“தசாபதியானவன் மேற்படி தசாப் பிரவேச லக்கினத்திலாவது அல்லது தசாப் பிரவேச லக்கினத்திலிருந்து 3, 6, 10, 11 என்ற உபசய ஸ்தானங்களிலிருந்தாலும் அல்லது தசாப்ரவேச லக்கினமானது தசாநாதனுக்கு நைசர்க்கிக சம்பந்தமாயுள்ள மித்ர வீடாயிருந்தாலும், அல்லது தசாபதியானவன் சப்தவர்க்கங்களில் தற்காலம் மித்ரு வீட்டில் இருந்தாலும், அல்லது தசாப்பிரவேச லக்கினத்தில் நைசர்க்கிக சம்பந்தமாயுள்ள சுபர்களான புதன், குரு, சுக்கிரன் ஆகிய இம்மூவர்களுள் யாராவது ஒருவர் இருந்தாலும் மேற்படி சுபக்கிரகமானது தசாநாதனுக்குச் சத்ருவாக இருந்தாலுங்கூட மேற்படி தசையானது சுபதசை என்றும் சுபபலத்தையே கொடுக்கக் கூடியதென்றும் கூசாது சொல்லியே விடுக. அவ்வாறிலதேல் பாபதசை என்றும் அதன் பலமானது அசுப பலமே என்றுஞ் சொல்லியே விடுக.”

எனவே அவசியங்கருதி சிவாஜிகணேசனுக்கு வியாழதசை ஆரம்பிக்கும் 33-வது பிறந்தநாள் ஜாதகம் இங்கே கணிக்கப்பட்டு அதன் மூலமும் வியாழதசையின் பலன்கள் ஆய்வு செய்யப்படுகின்றன.

குரு தசாப்ரவேச நாள் 01.10.1960

தசாப்ரவேச நேரம் இரவு மணி 9.16

அதற்கான ஜாதகம் கீழ்க்கண்டவாறு அமைகிறது



table



sample horoscope

sample horosope



தசாநாதன் குரு தனது மூலத்ரிகோண வீட்டில் இருக்கிறார். ஜன்ம லக்ன கேந்திரத்தில் உள்ள நைசர்க்கிக சுபரான சுக்கிரனின் வீடான ரிசபம் தசாப்ரவேச லக்னமாக அமைகிறது. தசாப்ரவேச லக்னாதிபதி சுக்கிரன் தனது மூலத்ரிகோண வீட்டில் இருக்கிறார். எல்லாவற்றுக்கும் மேலாகச் சந்திரன் தசாப்ரவேச லக்னத்துக்குப் பத்தாமிடத்தில் இருக்கிறார். குரு மேஷநவாம்சத்தில் இருந்து உச்சம் பெற்ற செவ்வாயின் பார்வையைப் பெற்று தசம பாவ நவாம்சமான துலாத்துக்கு கேந்திரத்தில் அதிக பலத்துடன் திகழ்கின்றார். எனவே தசாப்ரவேச காலத்திலும் குரு நற்பலன்களைத் தரக்கூடியவராகவே இருக்கின்றார். எனவே 01.10.1960 முதல் 01.10.1978 வரையிலான 18 ஆண்டுகளும் சிவாஜிகணேசனின் பெருஞ்சாதனைகளை உள்ளடக்கிய ஆண்டுகளாகத் திகழ்வதில் வியப்பேதுமில்லை.

இந்தப் பதினெட்டு ஆண்டுகளிலும் ஏற்ற இறக்கமான காலங்கள் உண்டு. தசாபதி குரு நைசர்க்கிக மித்ரு வீட்டிலும், அஷ்டவர்க்கப்படி அதிக பிந்துள்ள ராசியிலும் சஞ்சரிக்கும் போது நற்பலன்களைக் கூடுதலாகவும் நைசர்க்கிக சத்ரு வீட்டிலும், அஷ்டவர்க்கப்படி அதிக பிந்தில்லாத ராசியிலும் சஞ்சரிக்கும் போது நற்பலன்கள் குறைவாகவும் நடக்கும். அதேபோல ஜன்ம லக்னாதிபதி ஜன்ம லக்னத்துக்கு உபசய ராசிகளில் அல்லது லக்னாதிபதிக்கு மித்ரு வீடுகளில் சஞ்சரிக்கும் போது நற்பலன்களும் 6, 8, 12 போன்ற துர்ஸ்தானங்களில் அல்லது சத்ரு வீட்டில் சஞ்சரிக்கும் போது கெட்ட பலன்களும் நடக்கும். ஒரு கிரகத்தின் தசாபலன்கள் பற்றிக் கூறுவதற்கு முன்னால் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இவை போன்று நிறைய இருக்கின்றன.

இனி இக்குரு தசாகாலத்தில் எந்த எந்த கிரகத்தின் அந்தர்த்தசை அல்லது புக்தி நடைபெறும் என்பதைப் பார்ப்போம். முதலில் குரு புக்தியும் அதன் பிறகு ஜாதகத்தில் குருவோடு சந்திரன் இருப்பதால் சந்திர புக்தியும், பின்னர் குருவுக்கு ஏழில் உள்ள புத சுக்கிரர்களில் பலவானான கிரகத்தின் புக்தியும், பின்னர் குருவுக்கு எட்டில் உள்ள சனி புக்தியும் நடைபெறும். புத சுக்கிரர்களில் புதன் ஷட்பலத்தில் அதிகம் பெற்றிருப்பதால் புதன் கணக்கிற்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. சுக்கிரன் மூலத்ரிகோண வீட்டில் இருந்தாலும் நவாம்சத்தில் சத்ரு வீட்டில் இருக்கின்றது. புதன் நவாம்சத்தில் அதி மித்ரு வீடான மகரத்திலிருந்து தனது சொந்தத் திரிம்சாம்சத்திலும் இருப்பதால் புதன் பலவானாகக் கருதப்பட்டு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

கிரக தசாபுக்திகள் கீழ்க்கண்டவாறு அமைகின்றன.



table

இந்தக் கணக்கில் 18 வருஷங்கள் என்பது 6480 சாவன தினங்கள். இதைச் சௌரமான நாட்களாக மாற்றினால் 6574 நாட்கள் 14 மணி 44 நிமிஷம் எனக் கிடைக்கும். அதை மேற்கண்ட விகிதாச்சாரத்தில் பங்கு வைத்தால்



table

எனவே தசாரம்ப காலமான 1-10-1960 21மணி 16 நிமிஷத்திலிருந்து கணக்கிட்டால்



table

எனவே சந்திர புக்தி எவ்வாறு நடக்கும் என்பதை 6.4.1970 தேதிய கிரகநிலைகள் மூலமும், புதபுக்தி எவ்வாறு நடக்கும் என்பதை 06.01.1975 தேதிய கிரக நிலைகள் மூலமும், சனி புக்தி எவ்வாறு பலன்களையளிக்கும் என்பதை 17.05.1976 தேதிய கிரகநிலைகள் மூலமும் கூற வேண்டும்.



sample horoscope

sample horosope

தசாநாதன் குரு துலாத்தில் இருந்து சுக்கிர புத பார்வையைப் பெறுவதாலும் சொந்த நவாம்சத்தில் இருப்பதாலும் கலைத்துறைச் சாதனைகளில் எள்ளளவும் குறைய வாய்ப்பில்லை. ஆனால் புக்தி நாதன் சந்திரன் சூர்யனோடு சேர்ந்து அஸ்தமனமாகி ஜன்மலக்னத்துக்கு இரண்டாம் பாவத்தில் இருப்பதும் ஜன்மகுரு சனி சேர்க்கையைப் பெறுவதும் ஆறுகிரகங்கள் லக்னம் இரண்டாமிடங்களில் அமைவதும் கஷ்ட பலன்களைக் கொடுக்கும். 1971 சட்டமன்றத் தேர்தலின் போது சிவாஜிகணேசன் ஸ்தாபன காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்காகத் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டது நினைவிருக்கலாம். இரண்டாமிடத்தில் சனி, செவ்வாய் சேர்க்கையும் சனியின் நீசத்துவமும் இரண்டுக்குடைய செவ்வாயின் நவாம்சபதி குரு வக்ரகதியில் இருப்பதும் சிவாஜியின் பிரச்சாரம் வீணாய்ப் போனதற்கான காரணங்கள் என்றால் அது தவறில்லை. முன்னமேயே நான் குறிப்பிட்டிருந்ததைப் போல ஜன்மலக்னத்துக்கு மூன்று ஒன்பதில் ஐந்து கிரகங்களின் சம்பந்தமிருப்பதால் அவரது நடிப்பில் பல புதிய பரிமாணங்களை நம்மால் தரிசிக்க முடிந்தது. இந்தக் காலகட்டத்தில் அவர் மூன்று வெள்ளிவிழாப் படங்களைத் தந்தார்.



sample horoscope

sample horosope

புதனது புக்தியில் புதனுடைய நவாம்சபதி சனி பத்தாமிடத்தில் வக்ரமாயிருப்பதாலும் சூர்யன் நான்காம் பாவத்தில் இருந்து சனியைப் பார்ப்பதாலும் அட்டமாதிபதி செவ்வாய் சனியை எட்டாம் பார்வையாகப் பார்ப்பதாலும் இவரது மரியாதைக்குரிய பெருந்தலைவர் மரணமும், அதைத் தொடர்ந்து இவருடைய இந்திரா காங்கிரஸ் பிரவேசமும் நிகழ்ந்து இவர் பெரும் விமர்சனத்துக்குள்ளானது இந்தக் காலத்தில்தான். ஒரு ஹிட் படம் கூட வராத காலம் இது.



sample horoscope

sample horosope

புக்திநாதன் சனி இயற்கை சத்ருவீடான கடகத்திலும் இயற்கை சத்ருவான சூர்யனின் அம்சத்திலும் இருந்து நீச செவ்வாயின் சேர்க்கை பெற்றிருப்பதால் 17.05.1976 முதல் 02.10.1978 முடிய உள்ள இந்தக் கால கட்டத்திலும் இவர் சூப்பர் ஹிட் படம் எதையும் தரவில்லை. சிவாஜிகணேசன் என்ற பெயரை நினைக்கும் போது கூடவே நினைவுக்கு வரும் அவரது மிகச்சிறந்த படங்கள் எல்லாம் 06.01.1975க்கு முற்பட்ட காலத்தில் வெளியான படங்களே.

இந்தக் கட்டுரை அவரது கலைவாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களுக்குக் கிரகங்கள் எவ்வாறு காரணமாக இருந்தன என்பது பற்றிய ஒரு ஆய்வு. அடுத்த கட்டுரையில் அவரது அரசியல் வாழ்க்கை ஏன் தோல்வியாகிப் போனது என்பதற்கான கிரகங்களின் சஞ்சாரங்களைப் பார்ப்போம்.



 ….. (தொடரும்)


ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம். 


.

No comments:

Post a Comment