Monday 27 July 2020

KARUNANIDHI - RAMA.GOPALAN MEET


KARUNANIDHI - RAMA.GOPALAN MEET




செப்டம்பரில் ஒரு நாள் திடீரென திமுக தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டு வாசலில் வந்திறங்கினார் இந்து முன்னணி நிறுவனர் இராம.கோபாலன். அதற்கு முதல் நாள்தான் பகவத் கீதையை விமர்சித்திருந்தார் கருணாநிதி. முன் தகவல் சொல்லாமல் வந்தாலும் இராம.கோபாலனை வாசல் வரை வந்து வரவேற்று கருணாநிதியின் அறைக்கு அழைத்துச் சென்றார் உதவியாளர் சண்முகநாதன். இருவரும் பரஸ்பரம் உடல்நலம் விசாரித்துக்கொண்டனர்.
‘‘பகவத் கீதை பற்றிய உங்கள் விமர்சனத்துக்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்’’ என நேருக்கு நேர் கூறிய இராம.கோபாலன், ராமகிருஷ்ண மடம் வெளியிட்ட ‘பகவத் கீதை’ நூலை அவருக்குப் பரிசளித்தார். புன்னகையுடன் பெற்றுக்கொண்டார் கருணாநிதி. பதிலுக்கு, திராவிடர் கழக் தலைவர் கி.வீரமணி எழுதிய ‘கீதையின் மறுபக்கம்’ நூலை எடுத்து இராம.கோபாலனுக்கு வழங்கினார். இருவரும் சிரித்துக்கொண்டார்கள். இதுதான் கருணாநிதி.
கொள்கை ரீதியாக எதிரெதிர் முனையில் இருப்பவர்கள்கூட அவரை எப்போதும் எளிதில் சந்திக்க முடியும். நேருக்கு நேர் விமர்சிக்க முடியும்.
தட்சிணாமூர்த்தி என்ற இயற்பெயர் கொண்ட கருணாநிதி 1924-ல் திருவாரூர் மாவட்டம், திருக்குவளை கிராமத்தில் பிறந்தார். தந்தை முத்துவேலர். தாய் அஞ்சுகம். தனது 14-வது வயதில் நீதிக் கட்சி தலைவர்களில் ஒருவரான அழகிரிசாமியின் பேச்சால் ஈர்க்கப்பட்ட கருணாநிதி, அரசியலில் அடியெடுத்து வைத்தார். அன்று முதல் கடந்த 78 ஆண்டுகளாக தமிழகத்தில் தவிர்க்க முடியாத அரசியல் ஆளுமையாக இருக்கிறார்.

கருணாநிதியின் முதல் அவதாரம் பத்திரிகையாளர். 14 வயதிலேயே திருவாரூரில் ‘நேசன்’ என்ற கையெழுத்துப் பத்திரிகை மூலம் மாணவர்களை ஒருங்கிணைக்கத் தொடங்கினார். அப்போது அவர் உருவாக்கிய இயக்கம் ‘தமிழ்நாடு மாணவர் மன்றம்’. தனது 18-வது வயதில், 1942-ல் ‘முரசொலி’யைத் தொடங்கினார். இன்றைக்கு 92 வயதிலும் அதன் ஆசிரியர் அவரே.
1925-ல் காங்கிரஸிலிருந்து வெளியேறிய பெரியார், சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார். பின் ‘நீதிக் கட்சி’யின் தலைவரானார். 1944-ல் நீதிக் கட்சி ‘திராவிடர் கழக’மானது. இதில் தன்னை இணைத்துக்கொண்ட கருணாநிதி… பெரியார், அண்ணாவுக்கு மிக நெருக்கமானார். பெரியாருடனான கருத்து வேறுபாட்டால் திகவிலிருந்து விலகிய அண்ணா, 1949 செப்டம்பர் 17-ல் ‘திராவிட முன்னேற்றக் கழக’த்தைத் தொடங்கினார். 1952 முதல் பொதுத்தேர்தலைப் புறக்கணித்த திமுக, 1957 தேர்தலில் முதல் முறையாகக் களம் புகுந்து 15 இடங்களில் வெற்றிபெற்றது. குளித்தலையில் நின்ற கருணாநிதியும் அதில் ஒருவர். அன்று தொடங்கி கருணாநிதி இதுவரை சட்டப்பேரவைத் தேர்தல் எதிலும் தோற்றதில்லை.
மேடைப் பேச்சு, எழுத்து, பத்திரிகைப் பணி, போராட்டங்கள் என திராவிடர் கழகத்திலும், திமுகவிலும் தீவிரமாக இயங்கிய கருணாநிதியை மக்களிடம் கொண்டு சேர்த்தது அவரது திரைப்பட வசனங்கள்தான். ‘பராசக்தி’, ‘மந்திரிகுமாரி’, ‘மனோகரா’, ‘பூம்புகார்’ உள்ளிட்ட திரைப்படங்களில் அவர் எழுதிய வசனங்கள் சொல் அம்புகளாகி தமிழர்களின் இதயத்தைத் தாக்கின. ‘பராசக்தி’ படத்தில் அவரது வசனம் சிவாஜி கணேசன் என்ற மாபெரும் நடிகரை தமிழகத்துக்கு அடையாளம் காட்டியது. அந்நாட்களில் பெரிய சம்பளம் வாங்கிய வசனகர்த்தா என்பதோடு, வசனகர்த்தாவுக்கு நட்சத்திர அந்தஸ்து உருவாகவும் காரணமாக இருந்தவர் கருணாநிதி.
ஒருபுறம் திரைத் துறையில் இருந்தபோதும், மறுபுறம் அரசியலிலும் தொடர்ந்து பங்கெடுத்தார். இடைவிடாத பயணங்கள் மூலம் தமிழகத்தின் எங்காவது ஒரு மூலையில் அவர் பேசிக்கொண்டே இருந்தார். ‘கல்லக்குடி ரயில் மறியல்’அவரது அரசியல் வாழ்வில் முக்கியமான திருப்புமுனையானது. 1963, 1965-ம் ஆண்டுகளில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் மூலம் கருணாநிதி திமுகவின் முக்கிய தலைவராக உருவானார். 1967-ல் திமுக வென்றபோது, அண்ணா அமைச்சரவையில் பொதுப்பணித் துறை அமைச்சரானார். நெடுஞ்செழியன், அன்பழகன் எனப் பலர் வரிசை கட்டி நின்றாலும், அண்ணா மறைவுக்குப் பிறகு 1969-ல் எம்.ஜி.ஆர். ஆதரவுடன் முதல்வரானார் கருணாநிதி. அப்போது அவருக்கு வயது 44.
1971 தேர்தலை கருணாநிதி தலைமையில் சந்தித்த திமுக, 184 இடங்களில் வென்றது. தமிழகத்தில் ஒரு கட்சி பெற்ற அதிகமான இடங்கள் இவை. இந்நாள் வரை முறியடிக்கப்படாத சாதனை.
அரசியல் வாழ்வில் ஏணிப்படிகளில் ஏறிக்கொண்டிருந்த கருணாநிதிக்கு மிகப் பெரிய சறுக்கலை ஏற்படுத்தியவர் எம்ஜிஆர். திமுகவில் இருந்து நீக்கப்பட்ட அவர், 1972-ல் அதிமுகவைத் தொடங்கி 1977-ல் ஆட்சியைப் பிடித்தார். அதன் பிறகு, எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகுதான் மீண்டும் கருணாநிதியால் ஆட்சியைப் பிடிக்க முடிந்தது என்றாலும், போர்க் குணமிக்க எதிர்க்கட்சியாக அந்நாட்களில் திமுகவை அவர் நடத்திக்கொண்டிருந்தார்.
1989-ல் வி.பி.சிங், 1997-ல் தேவகவுடா, ஐ.கே.குஜ்ரால், 1999-ல் வாஜ்பாய், 2004 முதல் 2014 வரை மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசில் திமுக அங்கம் வகித்தது. 1996 முதல் 2013 வரையிலான 17 ஆண்டுகளில் 13 மாதங்கள் தவிர மத்திய அரசில் செல்வாக்கோடு திமுக திகழ்ந்தது. இதற்கு கருணாநிதியின் அரசியல் ஆளுமையும், ராஜதந்திர நடவடிக்கைகளுமே காரணம்.
பத்திரிகையாளர், வசனகர்த்தா, திரைக்கதை ஆசிரியர், எழுத்தாளர், பேச்சாளர், கவிஞர், அரசியல் தலைவர் எனப் பன்முகங்களைக் கொண்டவர் கருணாநிதி. கடந்த 70 ஆண்டுகளின் தமிழக வரலாற்றைக் கருணாநிதியின் வரலாற்றைப் பிரித்துவிட்டு எவராலும் எழுத முடியாது. இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, வி.பி.சிங், சந்திரசேகர், நரசிம்ம ராவ், தேவகவுடா, ஐ.கே.குஜ்ரால், வாஜ்பாய், மன்மோகன் சிங், நரேந்திர மோடி என அனைத்துப் பிரதமர்களுடனும், பெரியார், ராஜாஜி, காமராஜர், பக்தவத்சலம், ஆர்.வெங்கட்ராமன், அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என எல்லா அரசியல் தலைவர்களுடனும் அரசியல் செய்தவர் கருணாநிதி. ஒருபுறம், ராஜாஜி, காமராஜர், பக்தவத்சலம், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என அவரது அரசியல் எதிரிகள் மாறிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால், மறுபக்கத்தில் கருணாநிதி கடந்த 70 ஆண்டுகளாக அப்படியே நிற்கிறார்.
இன்றைக்கு 92-வது வயதில் 13-வது முறையாகத் தேர்தலில் போட்டியிடத் தயாராகிவிட்டார் கருணாநிதி. இப்போதும் அவர்தான் திமுகவின் முதல்வர் வேட்பாளர். திமுகவின் பலமும் அதுதான்.. பலவீனமும் அதுதான்!

No comments:

Post a Comment