PONAM FESTIVAL CELEBRATED IN HYDERABAD /SECUNDERABAD ON ACCOUNT OF AADI 18
.‘போனம்’ என்னும் சொல், போஜனம் என்பதிலிருந்து தெலுங்குக்குச் சென்றதாகும். இது சாப்பாட்டைக் குறிக்கும். ‘பொனலு’ என்றும் ‘போனாலு’ என்றும் அழைக்கப்படும் இந்தத் திருவிழா, ஆந்திராவில் தெலுங்கானா பகுதியில், குறிப்பாக ஹைதராபாத், செகந்திராபாத் பகுதியிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் கொண்டாடப்படும் திருவிழாவாகும்.
இத்திருவிழா சமீப காலமாகத்தான் நடைமுறையில் உள்ளது. இருந்தாலும் எல்லாத் தரப்பு மக்களும் கொண்டாடும் திருவிழாவாகவே இது உள்ளது. கி.பி. 1813-ல் ஹைதராபாத், செகந்திராபாத் நகரங்களில் உள்ள மிலிட்டரி காலனியில் காலராவும், அம்மை நோயும் தோன்றி லட்சக்கணக்கில் மக்கள் மாண்டனர். அப்போது அங்கு முகாமிட்டிருந்த ஒரு படைப்பிரிவு, உஜ்ஜயினிக்குப் பாதுகாப்புக்காகச் சென்றது.
அவர்கள் உஜ்ஜயினி மகாகாளியிடம், ‘எங்கள் மக்களை இக்கொடிய நோயிலிருந்து காப்பாற்றினால் உனக்குக் கோயில் கட்டி
வழிபடுகிறோம்’ என்று வேண்டினர். மகாகாளியின் அருளால் நோய்கள் நீங்கி மக்கள் காப்பாற்றப்பட்டனர். அதற்கு நன்றி கூறும் வகையில் உஜ்ஜயினியிலிருந்து ஒரு காளி சிலையைக் கொண்டுவந்து இங்குப் பிரதிஷ்டை செய்து, கோயில் கட்டி வழிபட ஆரம்பித்தார்கள். காளிக்கு, புதுப்பானையில் புது அரிசியிட்டு, பால், வெல்லம் கலந்து பொங்கல் நைவேத்யம் படைத்தார்கள். இப்படி ஏற்பட்டதுதான் இந்த ‘போனாலு’ திருவிழா.
இத்திருவிழா ஆடி மாதம் முதல் ஞாயிறு அன்று ஆரம்பமாகிறது. கோல்கொண்டா மகாகாளி கோயிலில் ஆரம்பித்து, இரண்டாம் ஞாயிறு பால் கம்பட் எல்லம்மாள் கோயிலிலும், லால்தர் வாஜாவில் உள்ள மாதேஸ்வரி கோயிலில் மூன்றாம் ஞாயிறும், நிறைவாக அப்பண்ணா மாதண்ணா கோயிலில் நான்காம் ஞாயிறு அன்றும் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவில் பல லட்சம் மக்கள் கலந்து கொள்கிறார்கள்.
அன்று பெண்கள் புத்தாடை புனைந்து, நகைகள் அணிந்து, அலங்காரமாகப் பொங்கல் பானையைத் தலையில் சுமந்து வரிசையாகக் கோயிலுக்குச் செல்வர். அப்போது மகாகாளியின் சகோதரர் எனக் கருதப்படும் போத்திராஜ் அங்கு வருவார். இவர் காவி உடை உடுத்தி, கால்களில் சலங்கை பூட்டி, நெற்றியில் செந்தூரமும் உடலில் மஞ்சளும் பூசியபடி பறை வாத்தியங்களுக்கு ஏற்றபடி நடனமாடுவார். இவர்தான் இத்திருவிழாவைத் தொடங்கி வைப்பார். பின்பு, வரிசையில் நிற்கும் பெண்களை காளியின் சன்னிதிக்கு அழைத்துச் செல்வார். இதற்கு அடுத்த நாளாக ‘ரங்கம்’ என்னும் குறி சொல்லுதல் நிகழ்ச்சி நடைபெறும்.
ஒரு பெண்மணி மயங்கிய நிலையில் மண் குடத்தின் மீது ஏறி நிற்கிறார். காளி அவள் உடலில் புகுந்து குறி சொல்வதாக மக்கள் நம்புகின்றனர். பொதுவாக, வரும் வருட விளைச்சல், திருமணம், மகப்பேறு போன்ற பக்தர்களின் கேள்விகளுக்கு உரிய பதில் கிடைக்கும். இந்நிகழ்ச்சி முடிந்தவுடன் பூசாரி, ஒரு அலங்கரித்த பித்தளைக் குடத்தில் வேப்பிலை தோரணம் கட்டி, மந்திரம் ஜபித்த நீர் நிரப்பி அதை ஊர்வலமாக எடுத்துச் சென்று அந்த நீரை நதியில் கலப்பார்.
இத்துடன் இத்திருவிழா நிறைவு பெறும். நம் ஊர்களில் 18-ம் பெருக்கில் வண்ண காகிதங்களால் அலங்கரித்த சிறிய தேர்கள் இழுக்கப்படுவதுபோல அங்கும் சிறிய அலங்கரித்த தேர்கள் இழுக்கப்படுவது இன்னொரு சிறப்பு.
பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்று மத்தியப் பிரதேச மாநிலத்திலுள்ள உஜ்ஜயினி. இங்கு மிகப்பிரபலமான உஜ்ஜயினி ஸ்ரீமஹாகாளி ஆலயம் அமைந்துள்ளது. ஸ்ரீமஹாகாளேஸ்வரரின் தேவி, ஸ்ரீமஹாகாளேஸ்வரேஸ்வரி என்று வழிபடப்படுகிறாள். உஜ்ஜயினி மஹாகாளியின் ஆலயங்கள் பின்னாளில் இந்தியாவின் பிற மாநிலங்களில் கட்டப்பட்டதோடு, தசமஹாவித்யா தேவிகளில் முதல் தேவியான காளி வழிபாடும் பிரபலமடைந்தது.
தமிழ்நாட்டிலும் உச்சினி (உஜ்ஜயினி) மாகாளி என்ற பெயரில் பல ஆலயங்களில் தேவி எழுந்தருளி அருட்பாலிக்கிறாள். ஆந்திர மாநிலத்தில் நிஜாம் மன்னர் ஆட்சியின்போது, 1813ம் ஆண்டு மத்தியப் பிரதேசத்திற்கு அனுப்பப்பட்ட ராணுவப் படையில் பணியாற்றிய சுருதி அப்பய்யா என்பவர் உஜ்ஜயினி காளிதேவியின் பரம பக்தரானார்.
அக்கால கட்டத்தில் ஐதராபாத், செகந்திராபாத் பகுதிகளில் காலரா மாதிரியான ஒரு கொள்ளை நோய் ஏற்பட்டு மக்கள் மடியவே, அப்பய்யா காளிதேவியிடம் மக்களைக் காப்பாற்றுமாறு மனதாற வேண்டிக் கொண்டார். தேவியின் அருளால் நோய் அகன்று மக்கள் சுபிட்சமடைந்தனர். அப்பய்யா ஐதராபாத் திரும்பியவுடன் செகந்திராபாத்தில் ஸ்ரீஉஜ்ஜயினி மஹாகாளிக்கு சிறிய ஆலயம் ஒன்று எழுப்பினார்.
இதன் பின்னர் இப்பகுதிகளில் பல காளிதேவி ஆலயங்கள் எழுந்தன. அவற்றுள் ஒன்றுதான் லால் தர்வாஜா ஸ்ரீசிம்மவாஹினி மஹாகாளி ஆலயம். லால் தர்வாஜா என்றால் செந்நிறக் கதவு என்பது பொருள். நிஜாம் ஆட்சியின்போது பழைய ஐதராபாத் நகரின் ஒரு பகுதி இது. இந்தப் பகுதியின் நுழைவாயிலாக பெரிய செந்நிற மரக்கதவுகள் இருந்தனவாம்.
அந்தக் கதவுகளின் நினைவாகவே இப்பகுதிக்கு லால் தர்வாஜா என்ற பெயர் ஏற்பட்டது. ஐதராபாத் நகரின் பிரதான அடையாளமாகத் திகழும் சார்மினாரிலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் லால் தர்வாஜா அமைந்துள்ளது. ஒருமுறை கனமழையால் ஐதராபாத் நகரமே தண்ணீரில் மூழ்கி மக்கள் தத்தளித்தபோது நிஜாம் ஆட்சியில் பிரதம மந்திரியாக இருந்த கிஷான் பிரசாத், தேவியிடம் மக்களைக் காப்பாற்றுமாறு வேண்டிக் கொண்டார்.
தேவியின் அருளால் வெள்ளநீர் வடிந்து நகரம் பேராபத்திலிருந்து தப்பியது. தேவிக்கு நன்றி தெரிவிக்கும்வகையில் கிஷான் பிரசாத் 1907ம் ஆண்டு இந்த லால் தர்வாஜா தேவி ஆலயத்தில் போனாலு எனப்படும் பொங்கல் பண்டிகையைத் துவக்கி வைத்ததாகக் கூறப்படுகிறது. ஐதராபாத் நிஜாம் மீர் மெஹ்பூப் கான் இந்த ஆலயத்திற்கும், சுற்றிலுமுள்ள பல ஆலயங்களுக்கும் தாராளமான நிதி உதவிகள் செய்துள்ளார்.
வடக்கு திசையை நோக்கி அமைந்துள்ள இந்த லால் தர்வாஜா மஹாகாளி ஆலயத்தின் நுழைவாயிலின் மேல், நின்ற கோலத்தில், பத்து கரங்களில் பல ஆயுதங்களை ஏந்தி மகிஷனை வதம் செய்யும் ஸ்ரீதுர்க்கையின் சுதைச்சிற்பம் அழகுற வடிக்கப்பட்டுள்ளது. தேவியின் இரண்டு புறங்களிலும் மாலைகளை ஏந்திய பெண்கள் உள்ளனர்.
மூன்றுநிலை விமானத்துடன் கூடிய கருவறையில் மஹாகாளி சிம்மத்தின் மீது அமர்ந்த கோலத்தில், நான்கு கரத்தினளாக, பின்னிரு கரங்களில் சங்கு, சக்கரம், முன் வலக்கையில் திரிசூலம், முன் இடக்கையில் குங்கும பரணி என ஏந்தி, சாந்த துர்க்கையாக, கம்பீரமாக அருட்பாலிக்கிறாள். மிக நுணுக்கமாக வடிக்கப்பட்ட இந்த கருங்கல் விக்கிரகத்தில் தேவியை தரிசனம் செய்வது மெய்மறக்கச் செய்யும் அனுபவமாக பக்தர்கள் கருதுகின்றனர்.
ஒவ்வோர் ஆண்டும் ஆஷாட (ஆனி) மாதம் (ஜூன் - ஜூலை) ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை அன்றும் ஐதராபாத், செகந்திராபாத் பகுதிகளில் உள்ள ஸ்ரீமஹங்காளியம்மன் ஆலயம், ஸ்ரீஎல்லம்மாதேவி ஆலயம், கோல்கொண்டா காளி ஆலயம், லால் தர்வாஜா சிம்மவாகினி ஆலயம் ஆகியவற்றில், போனாலு எனப்படும் பொங்கல் சமர்ப்பிக்கும் விழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
போனம் (போஜனம் என்பதே போனம் என்றும் போனாலு என்றும் மருவியிருக்கிறது) எனப்படும் சர்க்கரைப் பொங்கலை பெண்கள் தயாரிக்கிறார்கள். இதை மஞ்சள், குங்குமம் மற்றும் மலர்மாலைகளால் அலங்கரித்து மஞ்சள் இலைகளால் மூடப்பட்ட பானையில் இட்டு, தங்கள் தலைகளில் ஏந்தி பக்தியுடன் ஊர்வலமாக ஆலயத்திற்கு எடுத்துவந்து, தேவிக்கு சமர்ப்பிக்கின்றனர்.
நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் இந்த லால் தர்வாஜா போனாலு ஜாத்ராவில், தெலுங்கானா பிரமுகர்கள் பலர் ஏராளமாகக் கலந்து கொள்கின்றனர். லால் தர்வாஜா ஸ்ரீமஹாகாளியின் பேரருளால்தான் தெலுங்கானா தனி மாநிலம் உருவானது என்றும் அவர்கள் நம்புகின்றனர். மாநில அரசின் சார்பில் முதலமைச்சர் ‘பங்காரு போனாலு’ (இரண்டு தங்கக் குடங்களில் இடப்பட்ட பொங்கல்) மற்றும் தேவிக்கு புது பட்டு வஸ்திரங்கள், மங்கலப் பொருட்கள் ஆகியவற்றை எடுத்து வந்து சமர்ப்பிக்கிறார்.
ஒரு லட்சம் பக்தர்கள்வரை பங்கேற்கும் போனாலு ஜாத்ராவில், சமூக முக்கியஸ்தர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் என்று பலரும் கலந்து கொள்கின்றனர். தெலுங்கானா கலாசாரத்தின் ஒரு முக்கியமான அடையாளமாக இந்த போனாலு பண்டிகையை அனைவரும் கருதுகின்றனர். இஸ்லாமிய மக்கள் நிறைந்திருக்கும் பகுதிகள் வழியாகச் செல்லும் போனாலு ஊர்வலத்திற்கு அம்மக்கள் முழுமையான ஒத்துழைப்புக் கொடுப்பதோடு இப்பண்டிகையின்போது எந்த ஒரு சிறு சலசலப்பும் ஏற்படுவது இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
லால் தர்வாஜா போனாலு விழாவின் முதற்கட்டமாக தேவியின் அம்சமாக நன்கு அலங்கரிக்கப்பட்ட ஒரு கடம் (பானை) தெருக்களில் யானைமீது வைத்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு இறுதியாக மோசி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்படுகிறது. சிம்மவாஹினி ஸ்ரீமஹாகாளி போனாலு விழாவினையொட்டி, சுற்றிலும் உள்ள அக்கண்ணா மாதண்ணா மஹங்காளி, உப்புகுடா, அலியாபாத், கௌலிபுரா, புராண பூல்போன்ற பல இடங்களிலும் போனாலு கொண்டாடப்படுகிறது.
போனாலு நாளன்று தேவிக்கு மஹாபிஷேகம் முடிந்த பின்னர், தேவியின் சகோதரராகக் கருதப்படும் போத்தராஜு உருவத்தில் வேடமிடும் ஒருவரின் தலைமையில் சாரி சாரியாக ஆயிரக்கணக்கான பெண்கள் போனாலு பானைகளைத் தலையில் சுமந்தபடி ஆலயத்தை நோக்கி வருகின்றனர். காலையில் துவங்கும் போனாலு ஊர்வலம் அந்திவேளைவரை தொடர்ந்து நடைபெறுகிறது.
ரங்கம் எனப்படும் நிகழ்ச்சி, போனாலுவின் ஒரு முக்கியச் சடங்காகும். கன்னிப்பெண் ஒருவர் தேவி சந்நதிக்கு முன்பாக நின்றுகொண்டு தேவியின் ஆவேசம் பெற்று, வரும் ஆண்டில் நடைபெறவிருக்கும் முக்கியமான நிகழ்வுகள் பற்றி குறி சொல்வதோடு, போனாலு விழாவில் தனக்கு ஏற்பட்ட மனநிறைவு குறித்தும் தெரியப்படுத்துகிறார்.
அவர் சொல்வதைக் கேட்க எண்ணற்ற மக்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு அமைதியாகக் கவனிக்கின்றனர். காலை 6.30 முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 6 முதல் 8 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.
- விஜயலட்சுமி சுப்பிரமணியம்
Image may contain: one or more people
No comments:
Post a Comment