A.M.RAJA ,SINGER BIOGRAPHY
வரலாற்று நிகழ்வானது எப்பொழுதும் திரும்ப நிகழ்வதில்லை.அப்படியே நிகழ்ந்தால் அது முதல் தடவை துன்பியல் நாடகமாகவும் இரண்டாவது தடவை கேலிக் கூத்தாகவும் மாறும் .கார்ல் மார்க்ஸின் இந்தத் தத்துவம் சினிமாவிற்கும் இசைக்கும்பொருந்தும்.முதல் முறை நிகழும் சம்பவங்களில் தான் அற்புதங்கள் நிகழும்.அப்படிப்பட்ட அற்புதங்களில் ஒன்று தான் திரையிசைப் பாடல்கள்.மனித வாழ்வின் சோகமான நேரங்களில் இதமாக வருடிச் செல்லும் தென்றலின் குளுமையை சில பாடல்கள் நமக்குத் தரும்.ஆயிரக்கணக்கான பாடல்கள் நம்மைக் கடந்து சென்றாலும் ஒரு குரல் மட்டும் ஆழமாக உள்ளே ஊடுருவி நம்மை என்னவோ செய்யும்.வெண்ணெயில் கத்தியைச் சொருகினால் எப்படி எளிதாக உள்ளே இறங்குமோ அப்படி இறங்கும் அற்புதமான குரல்.அதன் சொந்தக்காரர் ஏ.எம்.ராஜா.1929 இதே நாளில் இங்கே வந்தவர்.
ஏமல மன்மத ராஜூவின் மகனாகப் பிறந்த ராஜா பிள்ளைப் பிராயத்தில் ஒரு அபாக்கியசாலி.மன்மத ராஜூவின் முத்தங்கள் அவருக்கு முழுதாகக் கிடைக்கவில்லை.சித்தூர் மாவட்டத்தின் ராமச்சந்திரா புரம் சொந்த ஊர்.அப்பாவின் மரணத்தைத் தொடர்ந்து மாமா ஊரான ரேணுகா புரம்.அங்கே தான் பள்ளிப் படிப்பு.பள்ளியிலேயே தொற்றிவிட்ட பாட்டின் மீதான ஆர்வம்.கல்லூரியில் விஸ்வரூபம் எடுத்தது.கல்லூரிப் படிப்பு சென்னை பச்சையப்பாவில்.கல்லூரி கல்ச்சரல் விழாக்களில் ராஜாவின் குரல் இனிமையாக ஒலிக்கும்.அப்படித் தான் ஹெச்.எம்.வி.அழைப்பு.அங்கிருந்த இசைத் திலகத்திடம் ஓயாத நச்சரிப்பு.முதலில் இங்கே ஒழுங்காகப் பாடு.பக்குவமானதும் தானாகத் தேடி வரும் என்றார்.சொன்னபடியே வந்தது.இரவு உணவு முடிந்து பால்கனியில் ஹாயாக வாசன் விவிதபாரதி கேட்டுக்கொண்டிருந்தபோது தான் அந்தக் குரல் அவரை ஈர்த்தது.வித்தியாசமாக இருக்கிறதே.யாரப்பா அது.?. விசாரிக்க ராஜாவின் பெயரைச் சொன்னார்கள்.அந்தப் பையனைக் கூப்பிட்டு பார்த்தசாரதிகிட்ட அனுப்பு.அப்படித் தான் சம்சாரம் புக்கானது.
சாரம் சாரம் சம்சாரம்.சகல தர்ம தாரம்.கொத்தமங்கலம் எழுதிய அருமையான பாடல்.கணவன் மனைவி ஒன்றாய் இரு கண்ணும் மணியும் போலே இணை பிரியாது இரு பாலகர்கள் விளையாடும் சம்சாரம்.வித்தியாசமான குரலில் வந்து விழுந்தது.வாசன் அதை இந்திக்கும் கொண்டு போக அங்கும் இதே குரல்.தெளிந்த நீரோடையாக ராஜாவின் கலைப் பயணம்.இசைத் திலகத்திற்கு தெம்பு வந்து குமாரியில் வாய்ப்புத் தந்தார்.பிரகாசம் போலே பிரேமையினாலே பாரினில் இன்பம் காண்போம்.ஈருடல் இரு கரை போலே நாமும் இருப்போம்.அருமையான டூயட்.லீலாவின் குரலோடு ராஜா இணைய வானில் மேவும் வெண்ணிலாவின் வளரும் பிறையைப் போலே என இன்பமாக போகும் பாடல்.சிரித்த முகத்தோடு ஸ்ரீரஞ்சனியை இதில் காணலாம்.கு.சா.கியின் இன்னொரு பாடலான அழியாத காதல் வாழ்வில் அணையாத ஜோதியாய் ஒளி வீசுவாய் என்றென்றும் இள வானிலே. விழிதனில் மேவி விளையாடும் பாவையாம் எழில் மிகும் தேவி.மற்ற குரல்களிலிருந்து வித்தியாசமாக ஒலித்த குரல்.
ராஜாவின் குரலில் எப்போதும் ஒரு இந்துஸ்தானியின் சாயல் இருக்கும்.வடக்கே கோலோச்சிய முஹமது ரஃபி தலத் மெஹ்மூத்தின் பெண்மை கலந்த குரல்.சோகத்தில் அப்படியே நம்மை துடிக்க வைக்கும் குரல்.எதிர்பாராது படத்தில் நடிகர் திலகம் அப்படியே இந்த சோகத்தை பிழிந்து தருவார்.சிற்பி செதுக்காத பொற் சிலையோ?. எந்தன் சித்தத்தை நீ அறியாயோ?. அந்த அறியாயோ அவ்வளவு கலங்கிப்போய் வெளி வரும்.அற்பச் செயலுக்கு இப்படியும் மன அவஸ்தைப்பட வைப்பாயோ?. கற்கண்டு பாகும் கனி ரசம் தேனும் கசந்திடும் உன் மொழியாலே..அப்படியே உருக்கி எடுக்கும் இந்த ஆண் குரல்.உள்ளத்தின் அடித் தளத்திலிருந்து எழும் உணர்வுகளை இவ்வளவு சோகமாக எவரும் தந்திருக்க முடியாது.ஜிக்கியின் சுகமான பாடலை ராஜா அவ்வளவு சோகமாக்கியிருப்பார்.கூடவே வரும் வயலினை இதில் சொல்லியே ஆக வேண்டும்.சுந்தரும் சுமதியும் இணையும் இடத்தில் இவ்வளவு சோகம்.இதே சோகம் இன்னொரு பாடலில்.
அருகில் வந்தாள் உருகி நின்றாள் அன்பு தந்தாளே.அமைதியில்லா வாழ்வு தந்து எங்கு சென்றாளோ.?. களத்தூர் கண்ணம்மாவில் ஒரு கலங்கடிக்கும் கானம்.மலரே மலரே நீயாரோ வஞ்சனை செய்தது தான் யாரோ?. அப்படியே நொறுக்கிப் போடும் அந்தக் குரல்.சூடி முடித்ததும் பெண் தானோ பின்னர் தூக்கி எறிந்ததும் அவள் தானோ?. மயக்க நிலையில் ஒரு சோக கீதம்.இதய வானில் உதய நிலவே எங்கே போகிறாய் நீ எங்கே போகிறாய்?. பார்த்திபன் கனவில் பல்லவ குமாரியை விட்டுப் பிரியும் நாயகனாக ராஜா.வேதாவின் அருமையான இசையில்.கண்டும் காணாதேங்கும் கண்கள் காதல் கண்களோ காதல் கண்களோ?. எங்கே போகிறேன் நான் எங்கே போகிறேன்?. இசையரசியுடன் இணையும்போதெல்லாம் ராஜா சோகத்தை பிழிந்து தந்திருப்பார்.இன்னொரு சோகத்தைச் சொல்ல வேண்டுமென்றால் கல்யாணப் பரிசில் வந்த காதலிலே தோல்வியுற்றான் காளையொருவன்.அவரை தமிழுக்கு இசையமைப்பாளராக அழைத்து வந்த ஸ்ரீதரின் வெற்றிச் சித்திரம்.இருவரும் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் போகும்போது ரயில் சிநேகிதம்.என்றாவது ஒரு நாள் நான் இயக்குநரானால் நீ தான் இசையமைக்க வேண்டும் என்ற உறுதிமொழிக்கேற்ப இருவரும் இணைய அந்தப் படம் ஒரு மகத்தான வெற்றியைப் பெற்றது.ராஜாவோடு ஸ்ரீதரின் காதற் பயணம் தேனிலவில் முடிந்தது.
ராஜா ஒரு வித்தியாசமான கேரக்டர்.தனக்கு எது சரியென படுகிறதோ அதில் உறுதியாக இருப்பார்.இசையில் மற்றவர்களுக்காக எந்தவித காம்ப்ரமைஸூம் செய்துகொள்ளமாட்டார்.இசையென்றால் ஒரு ஒழுங்கு இருக்க வேண்டுமென நினைப்பவர். கல்யாணப் பரிசுக்கு முன்பே 58 ல் ஷோபா என்ற தெலுங்குப் படத்தில் தன்னை நிலை நிறுத்திக்கொண்டவர்.52ல் லோகநிதி என்ற மலையாளம் மூலம் அந்த மக்களின் அன்பைப் பெற்றவர்.வி.தட்சனா மூர்த்தி தொடங்கி தேவராஜன் மாஸ்டர் வரை அவரை அருமையாக பயன்படுத்தினார்கள்.சத்யனின் படங்களுக்கு ராஜாவின் குரல் பக்க பலமாக இருந்தது.ஐம்பதுகளில் தமிழ் தெலுங்கு மலையாளம் என மும்மொழிகளில் கொடிகட்டிப் பறந்த ஒரே ஆண் குரல் அவருடையது தான்.அதனால் இசையமைப்பதில் அவ்வளவாக ரிஸ்க் எடுக்கவில்லை.ஏதோ கடமைக்காக பணியாற்றியவரை யாராலும் கட்டுக்குள் கொண்டு வர இயலவில்லை.ஸ்ரீதருக்கு இது சிக்கலை உண்டு பண்ணியது.
அருமையான நண்பர்கள் அவரவர் துறைகளில் ஈகோவோடு இருக்க இந்த சிறப்பான ஜோடி இன்னும் பல படங்களில் பணியாற்றியிருக்கலாமோ என்று தோன்றியது.தேன் நிலவு ரீரெக்கார்டிங்கில் இருவருக்கும் முட்டிக்கொண்டது.வைஜயந்தியின் ஒரு க்ளோஸப் தேடிக் கிடைக்காத கடுப்பில் ஆளாளுக்கு வெட்டியா என்னடா பண்ணிக்கிட்டு இருக்கீங்க என மாதவனையும் சி.வி.ஆரையும் ஸ்ரீதர் காய்ச்ச தன்னைத் தான் குறி வைக்கிறார் என நினைத்த ராஜா ரெக்கார்டிங்கை பாதியிலேயே போட்டுவிட்டுப் போனார்.அது ரெக்கார்டிங் இழுத்துக்கொண்டு போன நேரம்.ரிலீஸ் தேதி நெருங்க நெருங்க சூடானார் ஸ்ரீதர்.பஞ்சாயத்து சங்கம் வரை சென்று ஒரு வழியாக முடித்துக் கொடுத்தார்.நெஞ்சில் ஓர் ஆலயத்திற்கு இருவரும் கற்பனைக் கோட்டைகள் கட்டியதெல்லாம் அப்படியே நின்றது.எம்.எஸ்.வி.உள்ளே நுழைந்தது இப்படித் தான்.அதைப் பற்றி துளி கூட அவர் கவலைப்படவில்லை.பாடகராக நுழைந்து அருமையான இசையமைப்பாளர் என்ற பெயரையும் பெற்று தன்னை நிரூபிக்கவும் செய்தார்.நடிகர் ராஜாவை நிறைய பேருக்குத் தெரியாது.தேவதாஸில் வந்திருக்கிறார்.அடுத்த வீட்டுப் பெண்ணின் தெலுங்கான பக்க இன்ட்டி அம்மாயியில் பாடகராக வருவார்.படோசானில் கிஷோர் இந்த வேடத்தைத் தான் செய்தார்.மீண்டும் இதே அம்மாயி வர எஸ்.பி.பி.அந்த வேடத்தைச் செய்தார்.
மகேஸ்வரியின் அழகு நிலவின் பவனியிலே பாடும்போது தான் காதல் ப்ரபோஸல்.பாட்டுப் பேப்பரிலேயே கிருஷ்ணவேணிக்கு தூது விட இந்த ஜோடி அப்போது இணைந்தது தான்.இறுதி வரை இந்த பந்தம் தொடர்ந்தது.ஆறு குழந்தைகள்.மகன் சந்திரசேகருக்கு அப்பாவின் அதே வாய்ஸ்.இந்திக்கு நுழைந்த முதல் தென்னக ஜோடி இது தான்.ராஜ்கபூரின் ஆஃஹ்.சங்கர் ஜெய்கிஷன் இசையில் தமிழ் தெலுங்கு டப்பாக அதிலும் இதே குரல்கள்.திரையில் காதலர்களுக்கு குரல் கொடுக்கிறார்களோ இல்லையோ தங்களது காதல் வாழ்க்கையை பாடல் பதிவில் அருமையாக வளர்த்தனர்.பாடலாசிரியர்கள் அவ்வளவு கச்சிதமாக வார்த்தைகளை வடித்துக் கொடுத்தனர்.என்ன படம் யார் பாடல் யார் இசையமைக்கிறார் என்பதெல்லாம் இரண்டாம் பட்சம்.அவ்வளவு இன்வால்வ்மெண்ட்.திரைக்கு அது அருமையாக கை கொடுத்தது.
பேசும் யாழே பெண் மானே வீசும் தென்றல் நீ தானே.ராஜா ஜாடையாக கடைக் கண்ணைக் காட்ட ஜிக்கியின் உள்ளம் பூரிப்படையும்.வீனே தன்னை மறந்து நிலவினைப் புகழ்ந்திடலாமோ?. என்பார்.அவள் யார் படத்தில் ஒரு பாடல்.பட்டுப் பூச்சி போலும் ராணி பக்கம் பார்த்து பேசும் வாணி.கலக்கலான பாடல்.பத்து வயதிலே பாவாடையுடனே சுற்றிய விஜயா நீயல்லவோ?. காதல் என்பது அற்புதங்களின் உலகம்.நோவுகள் இருந்தாலும் வியாதிகள் கிடையாது.பொறுப்புகள் உண்டு சுமைகள் கிடையாது.பலவீனம் உண்டு இயலாமை இருக்காது.திரை போட்டு நாமே மறைத்தாலும் காதலே தெளிவாக நாளை தெரியாமல் போகுமா?. குறும்பான கவிகள் புணையும் பாடல்கள் சில நேரங்களில் நமது வாழ்க்கையோடு ஒன்றித் தான் போகும்.ராஜா ராணியில் அந்த மாண்டலின் ஃப்ளூட் ரீங்காரத்தில் இனிமையாக ஒலிக்கும் இரு குரல்கள்.சரியான நேரம் கிடைக்காத போதிலே திரை போட்டுப் பார்ப்பதே முறையாகும் வாழ்விலே. பெண்மையின் பொய்க் கோபம் காதலின் அஸ்திவாரம்.அலை மோதும் நெஞ்சம் நிலை காணும் நேரமே அரும்பான காதல் மலராகுமோ?. குறும்பான கேள்வி இது நியாயமோ?. அரும்பாகப் பேசும் என் ஆசை ராஜா.நாயகன் நாயகி நளினம் பாப்பாவின் பக்குவமான இசையில் இந்தக் குரல்கள் அவ்வளவு அம்சமாக வந்திருக்கும்.
ஒரு நாள் இது ஒரு நாள் உனக்கும் எனக்கும் இது திருநாள்.அசத்தலான பாடல்.ஒரு மொழி பேசும் கிளிகளைப் போலே உன் பெயர் ஒன்றே என் மனம் பாடும்.படமென்ன இசை யார் என்பதெல்லாம் தேவையில்லாத வேலை. கற்பனைக் குதிரையில் இருவரும் ஏறி களிப்போடு கானம் பாடிய காலங்கள்.இன்பமே பொங்குமே ஒற்றுமை நெஞ்சிலே உறவிலே அன்பிலே எந்நாளும் இல்லறமே இனிதாகச் செல்லுமே அத்தனையும் அவர்களுக்காகவே பாடினார்கள்.வாராய் வாராய் என் மன்னா!.. படு வேகமா?. ஏழை உழவனில்.களங்கமில்லாக் காதலிலே காண்போம் இயற்கையெல்லாம்.நிலவிலே பேதமில்லை பிரிவென்றால் வாழ்வுமில்லை.இல்லற ஜோதியில்.ஃபுட்பாத்தில் தலத் மெஹ்மூத் தந்த அருமையான பாடலை இசை மேதை ராமநாதன் அற்புதமாக தந்திருப்பார்.ஜிக்கியின் எத்தனையோ பாடல்களைக் கேட்ட நாம் இனி வரும் பாடலில் இன்னொரு ஜிக்கியைக் காண்போம்.ஜாலியாக யாரோ எந்தன் சொப்பன மயக்கத்தில் கேலியாக என்னைப் பார்த்து காதல் உரையாடுவார்.இது என்ன மாயம் ஏன் பரிகாசம். சில பாடல்களை அனுபவிக்கும்போது தான் இனிமை கூடும்.அந்த வகையில் ராஜாவின் குரலைக் கேட்கும்போது தான் இனிமை புரியும்.
இளவேனில் சந்த்ரிகையாய் இன்றும் என்றும் எந்தன் முன்னே ஒளியாய் வீசும் கண்மணீ.நசீருக்காக மலையாள அச்சனில் வந்த பாடலை ராஜா தமிழுக்காக அழகாக தந்திருப்பார் தந்தை படத்திற்காக.லீலாவோடு இணைந்த அழகான குரல்.இதே ஜோடி கண்ணைப் பறிக்கும் வண்ணம் கால் பூட்சை தேய்க்கும் எண்ணம் என்ன?. என கேட்கும் பாடல் எல்லாம் இன்ப மயத்தில். மின்னல் இடியுடனே மழையும் வரப் போகுதே.வண்டுகள் எல்லாம் வான மழையில் வெண்ணிறமாகுதே.விண்ணில் மீது உலவும் மேகம் கண்டு மயிலும் மறைந்தாடுதே.கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட அருமையான பாடல்.காயிலே இனிப்பதென்ன கனியிலே கச்ப்பதென்ன வாயாடி வம்பு பேசும் மானே பதில் சொல்லு. வம்படியான ராஜாவை இந்தப் பாடலில் காணலாம்.காலத்தின் கோலத்தினால் கட்டழகு குலைவதனால் என கேள்வியும் பதிலுமாக போகும் பாடல் இன்னொரு பொக்கிஷம்.என்ன என்ன இன்பமே வாழ்வில் எந்நாளும் கண்ணிரண்டு பேசியே காதல் கொண்டாலே.பாப்பாவின் அருமையான பியானோ பிட்டில் அன்பு படத்திற்காக ராஜா ஜிக்கி.கற்பனை மேவும் காவியம் நீயே யார் பாரில் நம்மைப் போலே பாக்கியசாலி.அவ்வளவு ஆனந்தமான ஜோடி.கன்னியரின் வெள்ளை மனம் போல் காதல் தரும் நீரலை பார்.ஆடி வரும் ஓடமிதைப் போல் அன்பினிலே நீந்துகிறோம் நாம்.திரும்பிப் பாரில் ராமநாதன் இசையில் ராஜாவோடு இணையும் ராணி.
ஜாலியான ராஜா எப்போதும் நமது ஃபேவரெட்.வீணையின்ப நாதம் எழுந்திடும் விநோதம் .அந்த மாண்டலின் சிலுசிலுப்பில் வயலின் ஃப்ளூட்டோடு கலந்தடித்த தேன் உண்ணும் வண்டு மா மலரைக் கண்டு செமையான பாடல்.காற்றினிலே தென்றல் காற்றினிலே சலசலக்கும் பூங்கொடியே கேளாய்.புதுமை இதில் தான் என்னவோ ஓஓஓ.மறக்க முயாத கானம்.திருமணத்தில் இன்னொரு அழகான பாடல்.தங்க நிலவில் கெண்டை இரண்டு துள்ளித் திரிவதுண்டோ?. தேன் பொங்கித் தழும்பும் கோவைக் கனிகள் புன்னகை செய்வதுண்டோ?. சூப்பரான பாடல்.செம ஸ்பீடில் வந்த கொடுத்துப் பார் பார் பார் உண்மை அன்பை இன்னொரு அழகு.உயர்வு தாழ்வெனும் பேதத்தைப் போக்கும் இருவர் வாழ்வினில் இன்பத்தைத் தேக்கும்.மனதை அப்படியே தாலாட்டும் மாசிலா உண்மை காதலே மாறுமோ செல்வம் வந்த போதிலே.தட்ஷணாமூர்த்தியின் சிறப்பான இசைக் கோர்வையில் பானுமதியோடு ராஜாவின் பயணம்.கண்ணிலே மின்னும் காதலே கண்டுமா இன்னும் சந்தேகம் எந்தன் மீதிலே.
சிதாரின் அருமையான இசையோடு தொடங்கும் மயக்கும் மாலை பொழுதே நீ போ போ இனிக்கும் இன்ப இரவே நீ வாவா இன்னலை தீர்க்க வா. தெவிட்டாத தெள்ளமுதாக வந்த குலேபகாவலி.பன்னீர் தெளிக்க பனி பெய்யுமே பசும்புல் படுக்க பாய் போடுமே என சொக்க வைக்கும் அந்தக் குரல்.தென்றல் உறங்கியபோதும் திங்கள் உறங்கியபோதும் கண்கள் உறங்கிடுமா?. மறக்க முடியாத டூயட்.நீல இரவிலே தோன்றும் நிலவைப் போலவே நிலவைப் போலவே வாலைக் குமரியே நீயும் வந்தபோதிலே .இசையரசியோடு மன்னர்களின் மனம் மயக்கும் இசையில் ராஜாவின் குரல் தேனாக இனித்தது.இதே அழகு கண் மூடும் வேளையிலும் கலை என்ன கலையே கண்ணே உன் பேரழகின் விலை இந்த உலகே. அப்படியே அள்ளிக்கொண்டு போகும் பாடல்.அவரது இசையில் வாடிக்கை மறந்ததும் ஏனோ என்னை வாட்டிட ஆசை தானோ?. ஃப்ளூட்டும் வயலினும் தப்லாவின் தாளத்தோடு தளிராக ஆட சைக்கிளின் பயணத்தில் வரும் வயலின் அவ்வளவு அழகு.அந்தி நேரத்தின் ஆனந்த காற்றும் அன்பு மணக்கும் தேன் சுவைப் பாட்டும் அப்படியே உள்ளே இறங்கி வெளியேற மறுக்கிறது.கோடி மலர் அழகை மூடி வைத்து மனதை அப்படியே கொள்ளையடிக்கிறது.அவரது இன்னொரு மாஸ்டர் பீஸ் கலையே என் வாழ்க்கையில் திசை மாற்றினாய்.
மீண்ட சொர்க்கத்தில் அட்டகாசமான பாடல்.நீ இல்லையேல் நானில்லையே.இசையரசியின் வெறும் ஹம்மிங்கை வைத்தே அட்டகாசம் செய்த பாடல்.மாலையிலும் அதி காலையிலும் மலர் மேவும் சிலை மேனியிலும் சூடிடும் அழகே பாடப் பாட அந்த ஹம்மிங்கை அவ்வளவு அழகாக தந்திருப்பார்.கோயில் கண்டேன் அங்கு தெய்வமில்லை ஓடி வந்தேன் இங்கு நீயிருந்தாய்.பாவமும் ராகமும் தாளமும் நீயே.வாகீச்வரியின் நுணுக்கமான சங்கதிகளை பாடல் முழுவதும் கேட்கலாம்.அவ்வளவு உணர்வுப்பூர்வமாக பாடியிருப்பார்.ஹம்சத்வனியில் வந்த காலையும் நீயே மாலையும் நீயே அவரது இசை மேன்மையைக் காட்டிய பாடல்.ஆலய மணி வாய் ஓசையும் நீயே..காஷ்மீரின் குளிரை அப்படியே தந்த பாடல்.பாட்டுப் பாடவா இன்னொரு ரகம்.ஓஹோ எந்தன் பேபி கலக்கலான வெஸ்டர்ன் வெறைட்டி.மிஸ்ஸியம்மா பாடல்கள் மறக்க முடியாதவை.வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே கேட்கக் கேட்க இன்பம்.களத்தூரின் கண்களின் வார்த்தைகள் தெரியாதோ காத்திருப்பேன் என்று புரியாதோ ஒரு நாளில் ஆஷை அவ்வளவு அழகு.அதி மதுரா அனுராஹா எல்லா மொழியிலும் வெற்றிக்கொடி நாட்டிய பாடல்.தனிமையிலே இனிமை காண முடியுமா?. நல் இரவினிலே சூரியனும் தெரியுமா?. சங்கரின் ஆடிப் பெருக்கில் தனது சொந்த கம்போஸிங்கில் கலக்கிய பாடல்.
யாருக்காகவும் எதற்காகவும் கை கட்டி நிற்கத் தெரியாத மனிதர்.சுய மரியாதை இல்லாத இடத்தில் சுள்ளென பேசும் இடத்தில் கண நேரமும் நிற்கமாட்டார்.தன்னம்பிக்கை அதிகம்.அதற்காக தலைக்கனமெல்லாம் இல்லை.எவ்வளவு இறங்கியும் வருவார்.தெருவோர சின்னக் கோயிலுக்கும் தயங்காமல் வருவார்.பாடித் தான் பிழைக்க வேண்டும் என்ற அவசியமெல்லாம் இல்லை.கை நிறை வருமானம் தரும் தொழில்கள் அவருக்கு இருந்தது.ஏகப்பட்ட கார்கள் ட்ராவல்ஸில் ஓடிக்கொண்டிருந்தன.ஆனாலும் இசையென்றால் இறங்கி வருவார்.கூப்பிட்ட குரலுக்கு மதிப்பளிப்பார்.எழுபதுகளில் குமாரோ சங்கர் கணேஷோ தயங்காமல் பாடித் தந்தார்.முத்தாரமே உன் ஊடல் என்னவோ ?.ஐம்பதுகளின் அதே இனிமையை கொண்டுவந்திருப்பார்.ராசி நல்ல ராசி உன்னை மாலையிட்ட மன்னன் சுகவாசி.மனைவிக்குப் பாடியது போலவே பாடினார்.அந்த சுகவாசி வள்ளியூர் ஸ்டேஷனில் இப்படி கசங்கிப் போவார் என ஜிக்கி கனவிலும் நினைக்கவில்லை.ஒவ்வொரு உள்ளத்திற்கும் ஒத்தடம் தந்த அந்தக் குரல் இரு தண்டவாளங்களுக்கிடையே இப்படி ஓலக் குரலாக மாறுமென யார் தான் நினைத்தார்.?. மரண வேதனை கன நேரம்.அது இசை ரசிகர்களுக்குத் தந்த வலி இன்றும் தொடர்கிறது.அதை மறக்க வைக்க அந்த இனிய குரல் இப்போதும் நம் செவிகளை நிறைக்கிறது.
Image may contain: 1 person, selfie and closeup
No comments:
Post a Comment