Monday 6 July 2020

CHINA DOMINATES INDIAN DIGITAL MARKET ,HOW ?



CHINA DOMINATES INDIAN 
    DIGITAL MARKET ,HOW ?



இந்திய டிஜிட்டல் தளங்களில் சீனா எவ்வாறு ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது?
2016ம் ஆண்டு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், மலிவான டேட்டா பிளான்களை அறிமுகப்படுத்தியபோது, ​சீனா நிறுவனங்களின் வருகை உச்சநிலையை அடைந்தது.
July 5, 2020 by WebDesk
இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு, நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குக்கு பாரபட்சம் காட்டும் நோக்கில் உள்ள 59 மொபைல் செயலிகளுக்கு மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், தகவல் தொழில்நுட்பச் சட்டம் 69A பிரிவின் கீழ் தடைவிதித்தது.
இந்திய டிஜிட்டல் தளங்களில் சீனா தனது ஆதிக்கத்தை எவ்வாறு கட்டமைத்தது என்பது குறித்த விரிவான தகவலை இங்கே காண்போம்.
2018 ஆம் ஆண்டில், இந்தியாவில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட 100 செயலிகளில், 44 செயலிகள் சீன நிறுவனங்களால் வடிவமைக்கப்பட்டது. 2017 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 18-ஆக இருந்ததென observer Research Foundation தெரிவித்தது. இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், “சீனாவின் மொபைல் செயலிகள் இந்திய சந்தையில் மிகப்பெரிய முன்னேற்றம் கண்டதாக” தெரிவிக்கப்பட்டது.
இந்தியாவில் 611 மில்லியன் பயனர்கள் டிக்டோக் செயலி பதிவிறக்கம் செய்ததை அடுத்து, கடந்த ஆண்டு பேஸ்புக் செயலியை டிக்டாக் பின்னுக்குத் தள்ளியதாக சந்தை பகுப்பாய்வு நிறுவனமான சென்சார் டவர் தெரிவித்துள்ளது.
ஒரு மூலோபாய இலக்காக தொழில்நுட்பம்
வன்பொருள்(ஹார்டுவேர்) உற்பத்தி தொடங்கி மென்பொருள் வரை, சீன நிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் டிஜிட்டல் தொழில்நுட்ப தளங்களில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
உலகளாவிய சந்தையில் அதன் மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கான ஒரு உந்துதலாக சீன பொதுவுடைமைக் கட்சி (சிபிசி) தொழில்நுட்பத்தை பார்க்கிறது. 2015 இல் வெளியிடப்பட்ட ‘டிஜிட்டல் சில்க் ரோடு’ என்று அதன் அதிகாரப்பூர்வ ஆவணத்தில், 65 நாடுகளில் அதன் தொழில் நுட்பத்தை வணிகமயமாக்குதல், வளர்ந்து வரும் தொழில்நுட்ப களங்களான செயற்கை நுண்ணறிவை (Artificial interlligence AI) உபயோகப்படுத்துதல் குறித்து விவரிக்கப்பட்டது
2016 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட , ‘தேசிய சைபர் பாதுகாப்புக் கொள்கை ஆவணத்தில் “வலுவான இணைய சக்தி”ஒரு அவசியத் தேவை என்று ஏற்றுக்கொண்டது.
2015 இன் இன்டர்நெட் பிளஸ், 2006-2020 ஆண்டிற்கான தேசிய தகவல் மேம்பாட்டு கொள்கை போன்ற பிற ஆவணங்கள் கூட பைடு (Baidu), அலிபாபா, டென்சென்ட் ஆகிய நாட்டின் மிகப்பெரிய நிறுவனங்களை சர்வதேச சந்தைகளில் கால்பதிக்குமாறு வெளிப்படையாக அழைப்பு விடுக்கின்றன.
இந்தியாவில், சீன நிறுவனங்கள் வேரூன்றுவதற்கான களம் 2014 ஜூலையில் அமைக்கப்பட்டது என்று சொல்லலாம். பெரும்பாலும் ‘ஆப்பிள் ஆஃப் சீனா’ என்று அழைக்கப்படும் சியோமி நிறுவனம் அந்த காலத்தில் தான் இந்தியாவுக்குள் நுழைந்தது. ஒப்போ, விவோ, ஒன்பிளஸ், ரியல்மி முதலியன சீன நிறுவனங்கள் அதன்பின் ஒவ்வொன்றாக வர ஆரம்பித்தன. 2016ம் ஆண்டு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மலிவான டேட்டா பிளான்களை அறிமுகப்படுத்தியபோது, ​சீனா நிறுவனங்களின் வருகை உச்சநிலையை அடைந்தது.
சர்வதேச தரவுக் கழகத்தின் சமீபத்திய அறிக்கையின் படி, இந்தியாவின் முதல் ஐந்து ஸ்மார்ட்போன் விற்பனையாளர்களில், சீன நிறுவனங்கள் நான்கு இடங்களை பிடித்திருந்தன. இந்தியா ஸ்மார்ட்போன் பங்குகளில் 31.2% சந்தை பங்கை சியோமி நிறுவனம் தக்கவைத்து முதலிடத்தில் உள்ளது. 21% சந்தை பங்கைக் கொண்ட விவோ நிறுவனம் தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
சீனாவில் இருந்து மின்னணு உபகரணங்கள் இறக்குமதி அதிகரிப்பதை உணர்ந்த மத்திய அரசு, ஸ்மார்ட்போன்களின் உள்நாட்டில் உற்பத்தித் திறன்களை அதிகரிக்க பல கட்ட உற்பத்தித் திட்டத்தை ஏப்ரல் 2017 இல் அறிவித்தது.
2017-18 ஆம் ஆண்டில் மின்னணு உபகரணங்களின் இறக்குமதி 53 பில்லியன் டாலர் அளவில் இருந்தது. (அதாவது, சுமார் ரூ. 3,44,500 கோடி). மேலும், 2025 ஆம் ஆண்டளவில் எலக்ட்ரானிக்ஸ் வன்பொருட்களுக்கான தேவை சுமார் 400 பில்லியன் டாலர்களாக (ஏறக்குறைய ரூ. 26,00,000 கோடி) உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மின்னணு உபகரணங்களின் இறக்குமதியால் அந்நிய செலாவணி கையிருப்பில் அழுத்தம் ஏற்படுகிறது” என்று 2017ம் ஆண்டு தேசிய மின்னணு கொள்கையை வெளியிடும்போது மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் தெரிவித்தார்.
மின்னணு உபகரணங்களில் இந்தியாவை உற்பத்தி மையமாக மாற்றுவதற்கான முயற்சிகளின் விளைவாக சீன நிறுவனங்கள் ஒப்பந்த அடிப்படையில் உற்பத்தி அல்லது குத்தகைத் திட்ட ஏற்பாட்டின் கீழ் மகாராஷ்டிரா, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா, உத்தரப்பிரதேசம் மற்றும் பிற இடங்களில் தங்கள் உற்பத்தி தளங்களை அமைத்தனர்.
சீன மின்னணு உபகரண விற்பனையாளர்களான ஹவாய் இசட்.டி. இ, ஆகிய நிறுவனங்கள் இந்தியாவில் தொலைத் தொடர்பு உபகரணங்களில் குறிப்பிடத்தக்க இருப்பைக் கொண்டுள்ளன. எரிக்சன், நோக்கியா போன்ற ஐரோப்பிய பெரு நிறுவனங்களோடு போட்டியிட, இந்தியா தொழில் தொடர்பு நிறுவனங்கள் சீன மின்னணு சாதனங்கள் உற்பத்தி தொழில்நுட்பங்களை நம்பியுள்ளன.
இந்தியாவில் ஸ்மார்ட்போன் அசெம்பிளி, டெஸ்ட்டிங் , மார்க்கிங், பேக்கிங் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப் படுகிறது என்றாலும், அதற்குத் தேவையான சர்க்யூட் போர்டுகள், மெமரி கார்டு சாதனங்கள், ஸ்டோராஜ் யூனிட்ஸ், ப்ரோசசர் போன்ற பெரும்பாலான உயர் மதிப்புள்ள கூறுகள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.
மைக்ரோமேக்ஸ் போன்ற இந்திய பிராண்டுகள் கூட ஆரம்பத்தில் சீனாவில் இருந்து செமி நாக்-டவுன் மொபைல் போன் யூனிட்களை (Semi- Knoxk down Mobile Units) இறக்குமதி செய்து, உள்நாட்டில் அசெம்பிளி செய்தது. குருகிராம் நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்த நிறுவனம், ஒரு காலத்தில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையை வழிநடத்தியது. சாம்சங், நோக்கியா போன்ற உலகளாவிய நிறுவனங்களை சொல்லி அடித்தது. ஆனால், தற்போது சந்தையில் தனது இருத்தலைக் கூட தக்க வைத்துக்கொள்ள முடியாமல் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் திணறி வருகிறது. உதரணாமாக, 2019 ஆம் ஆண்டில் இந்தியாவில் கிடைத்த 158 மில்லியன் ஸ்மார்ட்போன்களில், 114 மில்லியன் போன்கள் சீன நிறுவனத்தை சேர்ந்தது.
சீன நிறுவனங்கள் மின்னணு உபகரணங்களைத் தாண்டி, நுண் கடன் வசதி சேவைகள் மூலமாகவும் இந்தியா சந்தைகளில் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஒப்போ நிறுவனம், Oppo Kash எனும் செயலி மூலம் நுண் கடன் வசதி நிதி சேவையை அளித்து வருகிறது. ரியல்மி மற்றும் சியோமி நிறுவனம் முறையே PaySa,Mi Credit எனும் வெப் போர்டல் மூலம் கடன்கள் பெறுதல், முதலீடு திரட்டுதல் போன்ற நிதி உதவி சேவைகளை அளித்து வருகிறது.
இந்தியாவின் நிதி சேவைகளுக்கான தொழில்நுட்பத் துறையிலும் சீனா ஆதிக்கம் அதிகரித்துக் கொண்டு வருகிறது. சீன இ-காமர்ஸ் நிறுவனமான அலிபாபா ‘பணத்தை பெறும் மற்றும் செலுத்தும் செயலியான Paytm’ நிறுவனத்தில் மிகப்பெரிய முதலீட்டாளராக உள்ளது. ஈக்விட்டி வடிவத்தில் இன்று வரை ரூ .236 கோடியை திரட்டிய ஜெஸ்ட்மோனி, சியோமியை அதன் முதலீட்டாளர்களிடையே கணக்கிடுகிறது.
பென்பொருள் சந்தையில் ஆதிக்கம்:
வன்பொருள் சந்தையில் தங்கள் ஆதிக்கத்தை நிலை நிறுத்திய சீனா, மென்பொருள் பக்கத்திலும் தங்கள் வேகத்தினை அதிகப்படுத்தின. இணைய தேடல் நிறுவனமான பைடு (Baidu), இ- காமர்ஸ் சந்தை நிறுவனமான அலிபாபா, விச்சாட் டெவலப்பர் டென்சென்ட் ஆகிய மூன்று சீன ஜாம்பவான்களும் இந்தியாவில் ஸ்விக்கி, சோமாடோ, ஓலா, ஸ்னாப்டீல், பிக்பாஸ்கெட் , பைஜு உள்ளிட்ட யூனிகார்ன் நிறுவனங்களில் (அதாவது, குறைந்தது 1 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்) முதலீடுகளை செய்துள்ளன.
அதேசமயம் ஆப் ஸ்டோர், கூகுள் பிளே ஆகியவற்றில் நூற்றுக்கணக்கான சீனா மொபைல் செயலிகள் கால் பதிக்க தொடங்கின. சீன நிறுவனங்களின் ஒருங்கிணைந்த உந்துதல் காரணமாக சில செயலிகள் குறைவான நேரத்தில் மிகவும் பிரபல மடைந்தது. உதாரணமாக, கேம்ஸ்கேனர் செயலியை எடுத்துக் கொள்வோம். இந்திய அரசின் மூத்த அதிகாரிகள் கூட தங்கள் மொபைல் போன்களில் உள்ள ஆவணங்களை ஸ்கேன் செய்து பகிர்ந்து கொள்ள இந்த செயலியை பயன்படுத்தி வந்தனர். கடந்த வாரம் தடைசெய்யப்பட்ட 59 மொபைல் செயலிகள் பட்டியலில் கேம்ஸ்கேனர் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
“சந்தைக்கு விரைவாக எடுத்து செல், விரைவாக பிரச்சனையை சரிசெய்” எனும் ஷென்ஜென் உற்பத்தி மாதிரியை சீனா நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. டிக்டாக் செயலியை சொந்தமாகக் கொண்ட பைட் டான்ஸ், “மொபைல் செயலிகளின் தொழிற்சாலை” என்று அழைக்கப்படுகிறது. 2012 இல் நிறுவப்பட்டதிலிருந்து குறைந்தது 21 தயாரிப்புகளை சந்தைக்கு கொண்டு வந்துள்ளது.
“சீனாவில் செயல்படும் பெரும்பாலான நிறுவனங்கள் தங்களை எப்போதும் உலகளாவியதாக கருதுகின்றன. சீனாவில் அவர்கள் பெற்ற வெற்றியை, உலகில் எந்த மூலையிலும் பிரதிபலிக்க முடியும் என்பது அவர்களின் ஆழ்ந்த நம்பிக்கை,” என்று மென்பொருள் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
2017 டோக்லாம் சம்பவத்தில் கூட , 42 சீன மொபைல் செயலிகளை தவிர்க்குமாறு பாதுகாப்பு அமைச்சகம் ஆயுதப்படை வீரர்களைக் கேட்டுக்கொண்டது. மிக சமீபத்தில், சீன தொழில்நுட்ப நிறுவனமான ஹவாய் புவிசார் அரசியலில் சிக்கியுள்ளது. ஏனெனில் ‘Quad’ குழுமத்தில் (இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா அமெரிக்கா) இந்தியாவைத் தவிர மற்ற உறுப்பினர்கள் 5 ஜி உள்கட்டமைப்பில் ஹவாய் நிறுவனத்தை தடை செய்ய முடிவு செய்துள்ளனர். இந்தியா, இதுகுறித்து அதிகாரப் பூர்வ முடிவை எதையும் இதுவரை எடுக்கவில்லை .
கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்
2015 ஆம் ஆண்டு வுஷெனில் நடந்த உலக இணைய மாநாட்டில் பேசிய சீன அதிபர் ஜி ஜின்பிங், “சைபர் ஸ்பேஸ் ஒருவருக்கொருவர் போட்டியிடும் போர்க்களமாக மாறக்கூடாது” என்று தெரிவித்தார்.
ஆனால் தற்போது, ஒரு புதிய யுத்தக் களம் திறக்கப்பட்டதாக தோன்றுகிறது. களம் மெய்நிகராக உள்ளது.
⁦தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்

No comments:

Post a Comment