Friday 21 May 2021

S.A.ASOKAN ACTOR BORN 1931 MAY 20 - 1982 NOVEMBER 11

 



S.A.ASOKAN ACTOR BORN  

1931 MAY 20 - 1982 NOVEMBER 11

பிரபலங்கள் பிறந்த நாள்
குணசித்திர வேடத்திலும், வில்லன் வேடத்திலும் நடித்து புகழ் பெற்றவர் அசோகன். அலாவுதீனும் அற்புதவிளக்கும் படத்தில் பூதமாக நடித்தது இன்றளவும் ரசிக்கப்பட்டு வருகிறது. எம்.ஜி.ஆர் படம் என்றால் வில்லனாகவோ அல்லது குணச்சித்ர நடிகராக அசோகன் இருப்பார். எம்.ஜி.ஆர்., அரசியலுக்கு அழைத்தும் வராத ஒரே நடிகர் அசோகன். அவர் 5 படங்களில் ஹீரோவாக நடித்திருப்பது இன்றைய இளைய சமூகத்துக்கு அவ்வளவாகத் தெரியாது.
1963-ல் வெளிவந்த “இது சத்தியம்” படத்தில் அசோகன் கதாநாயகனாக நடித்தார். இதில் அவருக்கு ஜோடி சந்திரகாந்தா. இது வெற்றிப்படம். முதலில் இந்தப்படத்தில் எம்.ஜி.ஆர். நடிப்பதாக இருந்தது. அதன்பிறகு அசோகன் நடித்தார். சரவணா பிக்சர்ஸ் ஜி.என்.வேலுமணி தயாரித்தார். கே.சங்கர் இயக்கினார். இந்தப்படம் இந்தியில் “சேஷநா” என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அடுத்து 1964-ல் சின்னப்பதேவர் தயாரித்த “தெய்வத்திருமகள்” என்ற படத்திலும் அசோகன் கதாநாயகனாக நடித்தார். சந்திரகாந்தாதான் இந்தப்படத்திலும் கதாநாயகி.
1965-ம் ஆண்டில் அசோகன் கதாநாயகனாக நடித்து 3 படங்கள் வெளிவந்தன. அதில் ஒன்று சின்னப்பதேவர் தயாரித்த “காட்டு ராணி”. இதில் அசோகனுடன் கே.ஆர்.விஜயா நடித்திருந்தார். கதை வசனத்தை ஆரூர்தாஸ் எழுதினார். எம்.ஏ.திருமுகம் இயக்கினார். மற்றொரு படம் ஏ.காசிலிங்கம் தயாரித்து வெளிவந்த “கார்த்திகை தீபம்”. அசோகன் ஜோடியாக வசந்தா நடித்திருந்தார். மாடர்ன் தியேட்டர்ஸ் ஆர்.சுந்தரம் தயாரித்து இயக்கிய “வல்லவனுக்கு வல்லவன்” தான் அசோகன் ஹீரோவாக நடித்த கடைசி படம். இதில் அவர் ஜோடியாக மணிமாலா நடித்திருந்தார். இந்தப்படம் வெற்றி பெற்ற படம். ஆனாலும் என்னவோ தெரியவில்லை. இந்தப் படத்திற்கு பிறகு அசோகன், வில்லனாகவும், குணசித்ர வேடங்களிலும் தான் நடித்தார்.
இன்று இவர் பிறந்த நாள். குழுவின் சார்பில் வணங்குவோம்.





எஸ்.ஏ.அசோகன் [மறைவு-11.11.1982] கதாநாயகன், வில்லன், நகைச்சுவை, குணச்சித்திர வேடங்களில் நடித்து தமிழ்ப்பட உலகைக் கலக்கியவர் அசோகன்.
எம்.ஜி.ஆருடன் மட்டும் 88 படங்களில் சேர்ந்து நடித்தவர். அசோகன் திருச்சியைச் சேர்ந்தவர். திருச்சி ஜோசப் கல்லூரியில் படித்து “பி.ஏ” பட்டம் பெற்றார். கல்லூரி நாட்களிலேயே பேச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் பெற்றார்.



சினிமாவில்
பின்னர் சினிமாவில் நுழைந்த அவர், சில படங்களில் குணசித்திர வேடத்திலும், பெரும்பாலான படங்களில் வில்லன் வேடத்திலும் நடித்து புகழ் பெற்றார். அவ்வையார், மாயமனிதன், வீரத்திருமகன், உலகம் சுற்றும் வாலிபன், அன்பே வா, உயர்ந்த மனிதன், வல்லவனுக்கு வல்லவன், தாய்க்கு தலைமகன், தாய் சொல்லை தட்டாதே, குடும்பத் தலைவன், ரிக்ஷாக்காரன், நான், மூன்றெழுத்து, அடிமைப்பெண், அஞ்சாத நெஞ்சங்கள் உள்பட ஏராளமான படங்களில் நடித்தவர் அசோகன்.
எம்.ஜி.ஆர். படங்கள்
அசோகன் அதிகமாக நடித்தது எம்.ஜி.ஆர். படங்களில்தான். 88 எம்.ஜி.ஆர். படங்களில் அவர் நடித்துள்ளார். ஏ.வி.எம். மற்றும் தேவர் பிலிம்சார் தயாரித்த பெரும்பாலான படங்களில் முக்கிய வேடம் ஏற்று நடித்துள்ளார். திரை உலகத்தினர் அனைவருடனும் இனிமையாக பழகக்கூடியவர். அவருக்கு ஏராளமான நண்பர்கள் இருந்தார்கள்.
கதாநாயகன்
1963-ல் வெளிவந்த “இது சத்தியம்” படத்தில் அசோகன் கதாநாயகனாக நடித்தார். இதில் அவருக்கு ஜோடி சந்திரகாந்தா. இது வெற்றிப்படம். முதலில் இந்தப்படத்தில் எம்.ஜி.ஆர். நடிப்பதாக இருந்தது. அதன் பிறகு அசோகன் நடித்தார். சரவணா பிக்சர்ஸ் ஜி.என். வேலுமணி இப்படத்தை தயாரித்தார். டைரக்ஷன் கே.சங்கர். வசனம்: மா.லட்சுமணன். இசை: விசுவநாதன் ராமமூர்த்தி.
இந்தப்படம் இந்தியில் “சேஷநா” என்ற பெயரில் தயாரிக்கப்பட்டது. அடுத்த 1964-ல் சின்னப்பதேவர் தயாரித்த “தெய்வத்திருமகள்” என்ற படத்திலும் அசோகன் கதாநாயகனாக நடித்தார். சந்திரகாந்தாதான் இந்தப்படத்திலும் கதாநாயகி. அடுத்து 1965-ம் ஆண்டில் அசோகன் கதாநாயகனாக நடித்து 3 படங்கள் வெளிவந்தன. அதில் ஒன்று சின்னப்பதேவர் தயாரித்த (தண்டாயுதபாணி பிலிம்ஸ்) “காட்டு ராணி”.
இதில் அசோகனுடன் கே.ஆர்.விஜயா நடித்திருந்தார். கதை வசனத்தை ஆரூர்தாஸ் எழுதினார். டைரக்டர் எம்.ஏ.திருமுகம். மற்றொரு படம் ஏ.காசிலிங்கம் தயாரித்து வெளிவந்த “கார்த்திகை தீபம்”. அசோகன்- வசந்தா நடித்திருந்தனர்.
வல்லவனுக்கு வல்லவன்



மாடர்ன் தியேட்டர்ஸ் ஆர்.சுந்தரம் தயாரித்து இயக்கிய “வல்லவனுக்கு வல்லவன்” படத்தில் அசோகன்-மணிமாலா இணைந்து நடித்தார்கள். இது வெற்றிப்படமாகும். அதன் பின்னர் வில்லன் வேடங்களிலேயே ஏராளமான படங்களில் நடிக்கலானார்.
சொந்தப்படம்
அசோகன் தனது மூத்த மகன் பெயரில் “அமல்ராஜ் மூவிஸ்” என்ற படக்கம்பெனி தொடங்கினார். அதன் சார்பில் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்த “நேற்று இன்று நாளை” என்ற படம் தயாரித்து வெளியிட்டார்.
இரவும் பகலும் என்ற படத்தில் “இறந்தவனை சுமந்தவனும் இறந்துட்டான். அதை இருப்பவனும் எண்ணிப்பார்க்க மறந்துட்டான்” என்ற பாடலை சொந்தக் குரலில் பாடி நடித்தார்.
மாரடைப்பு
அசோகனுக்கு 1982-ம் ஆண்டு ஜுலை மாத இறுதியில் திடீர் என்று மாரடைப்பு ஏற்பட்டது. அவரை வடபழனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 3 மாதம் ஆஸ்பத்திரியிலேயே தங்கி சிகிச்சை பெற்றார்.
11-11-1982 அன்று மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டது. அதில் இருந்து அவரை டாக்டர்களால் காப்பாற்ற முடியவில்லை. அன்று இரவு 9.35 மணி அளவில் அசோகன் உயிர் பிரிந்தது. கிறிஸ்தவரான அசோகன் இந்து மதத்தைச் சேர்ந்த சரஸ்வதியை காதலித்து மணந்து கொண்டார்.
இந்தத் தம்பதிகளுக்கு அமல்ராஜ், வின்சென்ட் என்ற 2 மகன்கள். சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கிறிஸ்தவ கல்லறைத் தோட்டத்தில், கிறிஸ்தவ முறைப்படி அசோகனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
எம்.ஜி.ஆர். இரங்கல்
அசோகன் மரணம் அடைந்தபோது முதல்-அமைச்சர் எம்.ஜி. ஆர். டெல்லியில் இருந்தார். அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து எம்.ஜி. ஆர். வெளியிட்ட அனுதாப செய்தியில் கூறியிருந்ததாவது:-
“நடிகர் அசோகனின் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அவர் என்னுடைய இனிய நண்பர். கலை உலகம் ஒரு நல்ல கலைஞரை இழந்துவிட்டது. அசோகனின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேற்கண்டவாறு எம்.ஜி.ஆர். கூறி இருக்கிறார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி, தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் அனுதாப செய்தி வெளியிட்டார்கள். அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ப.உ.சண்முகம் ஆகியோர் அசோகன் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார்கள்.

No comments:

Post a Comment