Showing posts with label KANNADASAN. Show all posts
Showing posts with label KANNADASAN. Show all posts

Saturday, 4 September 2021

KANNADASAN ,A REVOLUTION

 

KANNADASAN  ,A REVOLUTION 


கவியரசர் கண்ணதாசனுக்கு முன்னதாகவும் எத்தனையோ கவிஞர்கள் சினிமாவில் பாட்டெழுதியிருக்கிறார்கள்.


 



ஆனால், கண்ணதாசனைத்தான் அவரவர்

தன் மனதில் ஆசனம் போட்டு அமரவைத்து சீராட்டினார்கள். காரணம்... 


சினிமாப் பாட்டுக்குள் வாழ்க்கையைத் தேன் கலந்து கொடுத்த சித்தமருத்துவ

க்காரன் கண்ணதாசன்.


‘எங்க ஊர் ராஜா’ படத்தில்,


 ‘யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க’ என்று சிவாஜியின் கேரக்டருக்கு பாட்டெழுதியிருப்பார் கண்ணதாசன். ஆனால்,


 அதை தனக்கான பாட்டு என கேட்டவர்கள் மொத்தபேரும் வரித்துக்கொண்டதுதான்


, கண்ணதாசன் வரிகளின் செப்படிவித்தை.


‘காலமகள் கண் திறப்பாள் சின்னய்யா’ என்ற பாடலைக் கேட்டு ஆறுதலும் நம்பிக்கையும் அடைந்தார்கள். ‘


நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடந்த இளந்தென்றலே’ என்ற பாட்டைக் கேட்டுவிட்டு,

 தங்கை இல்லாதவர்கள் கூட அழுதார்கள். தங்கை இல்லையே என்றும் அழுதார்கள்.


‘எண்ணங்களாலே பாலம் அமைத்து இரவும்பகலும் நடக்கவா - இத்தனை காலம் பிரிந்ததை எண்ணி இரு கை கொண்டு வணங்கவா இரு கை கொண்டு வணங்கவா’ என்று பிரிவுத்துயரத்துக்கு இந்த சிறகை இணைத்துக் கொண்டு ஆறுதலாகப் பறந்தார்கள்.


காதலின் அர்த்தமோ ஆழமோ தெரியாமல் இன்றைக்குத் தத்தளித்து தவித்து மருகிக் கொண்டிருக்கும் சமூகத்துக்கு, அன்றைக்கே காதலைச் சொன்னார் கவியரசர். ‘


இளமையிலே காதல் வரும் எது வரையில் கூடவரும், 

முழுமை பெற்ற காதலெல்லாம் முதுமை வரை கூட வரும்’ என்று 


காதலின் ஆயுசைச் சொன்னார். வாழ்க்கையின் சிக்குகளுக்குள் சிக்கித்தவித்து விழுந்து கிடந்தவர்களை 


‘மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா’ பாடல் தண்ணீர் தெளித்து எழுப்பியது.


 ’மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி’ என்ற பாடலைக் கேட்டு, துக்கித்துப் பாடிய கேரக்டருக்கு தோழியானவர்கள் தோழமையானவர்கள் பலர் உண்டு. 


‘நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா’ காதலின் சோககீதம்; தேசியகீதம். 


‘நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை’ பாடலைக் கேட்டு, வலியை மென்று தின்றவர்கள் ஏராளம்.


காதலியை வெட்டு, குத்து, கொல்லு என்றெல்லாம் பாடப்பட்டு வரும் இந்தக் காலத்தில், 


‘எங்கிருந்தாலும் வாழ்க’ என்பதை தாரக மந்திரமாகவும் காதலின் மந்திரமாகவும் ஆக்கிய கவிஞரின் வரிகள், வாழ்ந்துகொண்டேதான் இருக்கிறது இன்னமும்.


எம்ஜிஆருக்கு ‘ஹலோ ஹலோ சுகமா, ஆமாம் நீங்க நலமா?’ என்று போனிலேயே பாட்டுப்பாட எழுதிக்கொடுத்தார் அன்றைக்கு. 


‘வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும், வாசல் தோறும் வேதனை இருக்கும்’ என்று வாழ்வின் யதார்த்தம் சொல்லி பந்தி வைத்த பாட்டுக்காரன். 


‘கங்கையிலே ஓடமில்லையோ?’ என்றும் பாட்டெழுதினார். 


‘குடிமகனே பெருங்குடிமகனே’ என்று ’வசந்தமாளிகை’ ஜமீன் போதையில் நம்மைத் தள்ளாடவைத்தார். 


‘புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே’ என்று கண்ணனுக்கு புல்லாங்குழல் கொடுத்தார். 


‘இரண்டு மனம் வேண்டும்’ என்று இறைவனிடம் கேட்டார். 


‘வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் இந்த மண்ணில் நமக்கு இடமேது?’ என்று ஜனன மரணத்தை யோசிக்கவைத்தார்.


‘பாரப்பா பழநியப்பா பட்டணமாம் பட்டணமாம்’ என்றும் பாடிவைத்தார். 


‘மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்’ என்றும் சொல்லிவைத்தார். 


‘காலங்களில் அவள் வசந்தம்’ என்று காதல் காவியமாக்கினார். 


‘எட்டடுக்கு மாளிகையில் ஏற்றிவைத்த என் தலைவன்’ என்று துயரம் சொல்லி அவரின் பேனா அழுதது.


 ‘அட சின்னாளப்பட்டியிலே கண்டாங்கி எடுத்து என் கையாலே கட்டிவிடவா?’ என்று கொஞ்சினார். 


’காய்காய்காய்’ என்று இனிக்க இனிக்க பாடல் தந்தார்.


 ‘தேன் தேன் தேன்’ என்று திகட்டத்திகட்ட பாடல் தந்தார்.


 ‘நிலா லா லாலா என்று’ பாடினார்.


அண்ணன் இருக்கிறாரா? 

அந்த உறவுடன் பொருந்திப்போகும் கண்ணதாசனின் பாட்டு. 


தம்பி இருக்கிறாரா? ‘அம்மம்மா தம்பி என்று நம்பி’ என்று அதற்குப் பொருந்துவதற்கும் ஒரு பாட்டு.


 தங்கை உண்டா? பாட்டு உண்டு. 


அக்கா இருக்கிறாரா? அவருக்கும் உண்டு பாட்டு. 


சகோதரிகளுக்குள்ளான உறவா? அதைச் சொல்லவும் பாட்டு. 


சகோதரர்களுக்குள் இருக்கும் உறவா? அவர்களுக்கும் எழுதியிருக்கிறார் பாட்டு.


’பிள்ளைக்கு தந்தை ஒருவன் நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்’ என்றும் 


‘ஏன் பிறந்தாய் மகனே’ என்றும் பிள்ளையை வைத்துக்கொண்டு பாடியிருக்கிறார். 


‘சொந்தம் ஒருகைவிலங்கு நீ போட்டது அதில் பந்தம் ஒருகால்விலங்கு நான் போட்டது’ என்றும் குமுறியிருக்கிறார்.


கல்யாணத்துக்கு, 


வளைகாப்புக்கு, 


காதலின் வெற்றிக்கு, 


காதலின் தோல்வி சொல்ல, 


நட்பின் ஆழம் சொல்ல, 


உத்தியோகம் கிடைக்க, 


வியாபாரத்தில் செழித்ததையும் நொடித்ததையும் சொல்ல,


 எத்தனை பாட்டுகள்? 


‘கடவுள் மனிதனாகப் பிறக்கவேண்டும்’ என்று கடவுளுக்கே சாபம் கொடுப்பார். 


‘தெய்வம் இருப்பது எங்கே?’என்று கேள்வியும் கேட்பார். 


’தெய்வமே தெய்வமே...’ என்பார். 


‘கண்ணா கருமைநிறக்கண்ணா’ என்பார். ‘


கண்ணன் வந்தான் எங்கள் கண்ணன் வந்தான்’ என்று கிருஷ்ண தரிசனத்தில் திளைப்பார்.


‘உன்னை அறிந்தால்’ என்பார். 


‘சட்டிசுட்டதடா’ என்பார்.


 ‘என்ன நினைத்து என்னை படைத்தாயோ?’ என்று கேட்பார். 


’சிறு இன்பம் போன்ற துன்பத்திலே இருவருமே நடந்தோம்’ என்பார். 


‘காலம் செய்த கோலமடி கடவுள் செய்த குற்றமடி’ என்று கடவுளை கூண்டுக்குள் ஏற்றுவார்.


 ’ஆறு மனமே ஆறு’ என்று வாழ்வின் தத்துவத்தை எளிமையாக எடுத்துரைப்பார்.


‘பாதை வகுத்தபின் பயந்தென்ன லாபம், பயணம் நடத்திவிடு விலகிடும் பாவம்’ என்பார்.


 ‘கொன்றால் பாவம் தின்றால் போச்சு போடி தங்கச்சி... தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு’ என்பார். 


‘ஒருபுறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி மறுபுறம் பார்த்தால் காவிரி மாதவி, முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி முழுவதும் பார்த்தால் அவளொரு பைரவி’ என்பார்.


ஒரு மனிதனின் மொத்த வாழ்க்கையில் எத்தனையெத்தனை சம்பவங்கள், 


தோல்விகள், 


சந்தோஷங்கள், 


வெற்றிகள், 


காயங்கள். 


அத்தனைக்கும் மருந்து போட்ட காரைக்குடி மருத்துவன் கண்ணதாசன். காலக்கணிதக்காரன் கண்ணதாசன்.


எம்ஜிஆர்- சிவாஜி காலத்தில், இவர்களையும் தாண்டி எல்லோராலும் நேசிக்கப்பட்ட கவிஞன் கண்ணதாசன்.


வீடுவரை உறவு வீதிவரை மனைவி காடுவரை பிள்ளை கடைசிவரை யாரோ என்று எழுதிவைத்தார் கவியரசர்.


ஆனால், கடைசி வரை மனித வாழ்வில் உடன் வரும் கண்ணதாசனின் வரிகள்... சாகாவரம் பெற்ற வரிகள். காரணம்... சாகாவரம் பெற்ற கவிஞன்!


 சிறுகூடல்பட்டியில் பிறக்கும்போது முத்தையா என்றும் 


பிறகு கண்ணதாசன் என்றும்... 


பிறக்கும் அந்த வீட்டுக்கும் ஊருக்கும் சொந்தம்... 


பிறகு இந்த உலகுக்கே... தமிழ் உலகுக்கே சொந்தம் என்று எழுதிவைக்கப்பட்டிருக்கிறது போலும்!


Sunday, 11 July 2021

KANNADASAN IN POLITICS

 


KANNADASAN IN POLITICS

“அடிக்கடி கட்சி மாறுகிறீர்களே” என்று கவிஞர் கண்ணதாசன் அவர்களிடம் கேட்டபோது, “நான் மாறவில்லை! என் தலைவர்கள் மாறுகிறார்கள்!” என்று சொன்னார். அவருடைய மற்ற அரசியல் அறிவிப்புகளைப்போலவே தமிழகம் இதையும் வேடிக்கையாக எடுத்துக் கொண்டதுதான் வருத்தமான விஷயம்.


தாங்கள் வகுத்த கொள்கைகளிலிருந்து தலைவர்களே முரண்படுகையில் அந்தத் தலைவர்களுடன் கவிஞர் முரண்பட்டார் என்பதுதான் அந்த வாக்குமூலத்தின் பொருள். கவிஞர் கண்ணதாசன் மேற்கொண்ட அரசியல் மதிப்பீடுகளும், மாற்றிக்கொண்ட நிலைப்பாடுகளும் அவசரப்பட்டு எடுத்த முடிவுகள்போல் தோன்றக் கூடும். உணர்ச்சி வேகம் உந்தித் தள்ளி ஒவ்வொரு முடிவையும் அவர் எடுத்தார் என்று கருதுவதில் நியாயமிருக்கிறது. ஆனால் தீர யோசித்தால் அறஞ்சார்ந்த ஆவேசமும், மிகக் கூர்மையான உள்ளுணர்வுகளுமே அவரை அத்தகைய அதிரடி முடிவுகளுக்கு ஆற்றுப்படுத்தின என்று தோன்றுகிறது.


இயக்கங்களின் கோட்பாடுகளுடன் அவர்கொண்ட மோதல் தத்துவ அடிப்படையில் மட்டுமின்றி தனிமனித அடிப்படையிலும் நிகழ்ந்தவை. தாங்கள் பேசிய தத்துவங்களுக்கு, தலைவர்களே உண்மையாக இல்லாதபோது அவர் அவர்களை நேர்படச் சாடினார்.  கவிஞரின் அரசியல் வாழ்க்கை  பற்றிய  வெள்ளைப்பதிவுகள் அவரது  கட்டுரைகளில்  பெருமளவு காணக்கிடைக்கின்றன. மனவாசம், வனவாசம், நான்கண்ட அரசியல்  தலைவர்கள் போன்றவை அவற்றில் குறிப்பிடத்தக்கவை.

அவை ஓரளவு சமநிலையோடும் தர்க்கரீதியான பார்வையோடும் உருவானவை. ஆனால் அலைவீசும் உணர்ச்சி வேகத்தில் அவரது பொதுவாழ்க்கைப்பயணம் சுடச்சுடப் பதிவானதென்னவோ அவருடைய தனிக்கவிதைகளில்தான். அவரது கவிதைத் தொகுதிகளின் அடிப்படையில் பார்ப்பவர்களுக்கு, தத்துவங்களுக்கும் தலைவர்களுக்கும் நடுவே இருந்த முரண்பாடுகளே  கவிஞர்  கால்மாறி ஆடக்காரணம் என்பது தெரியும்.ஆம்.. அரசியல் அம்பலத்தில் கவிஞர் கால்மாறியவரே தவிர பால்மாறியவர் அல்லர்.





கவிஞரின் வாயில் விழுந்து புறப்பட்ட தலைவர்களை நாம் இவ்வாறு வகைப்படுத்திக் கொள்ளலாம். கவிஞரால் முதலில் இகழப்பட்டு, பிறகு புகழப்பட்டவர்கள் ஒருவகை. புகழப்பட்டு பின்னால் இகழப்பட்டவர்கள் இன்னொருவகை. வாழுங்காலம் முழுதும் இகழப்பட்டு மரணத்தின்போதுமட்டும் புகழப்பட்டவர் ஒருவர். கவிதைகளில் புகழ்மொழிகளுக்கு மட்டுமே ஆளானவர் ஒருவர். இதுதவிர  மாறிமாறி சிலரைச் சாடியும் பாராட்டியும் இருக்கிறார். அவர்கள் கவிஞருக்குத் தலைவர்களில்லை. சமகாலத் தோழர்கள்.

முதலில் இகழப்பட்டு பின்னால் புகழப்பட்டவர்,நேரு. தொடக்கத்தில் புகழப்பட்டு பிற்காலத்தில் இகழப்பட்டவர் அண்ணா.வாழும்போது மிகக் கடுமையாய் சாடப்பட்டு, அஞ்சலிக்  கவிதையில்  மட்டுமே  பாராட்டப்பட்டவர்   ராஜாஜி.  கவிதைகளைப் பொறுத்தவரை காமராஜர் பற்றிய புகழ்மொழிகளே பொங்கிப் பிரவகிக்கின்றன. ஆனால்பிற்காலத்தில் சில கட்டுரைகளில் கமராஜரை கவிஞர் விமர்சித்திருக்கிறார். அப்படி  விமர்சித்த இடங்களில் அண்ணாவுடன் ஒப்பிட்டு அண்ணாவின் உயர்குணங்களை  விவரித்திருக்கிறார்.தோழராக விளங்கிய ஈ.வெ.கி.சம்பத் சில கவியரங்கக கவிதைகளில் பாராட்டப்பட்டிருக்கிறார்.ஆனால் எந்த சம்பத்துக்காக அண்ணாவை விட்டு விலகினாரோ,அதே சம்பத்தின் பிற்கால நடவடிக்கைகளை மனவாசத்தில் குறிப்பிட்டு,” ஒருவகையில் சம்பத்தை விட அண்ணா உயர்ந்தவர்” என்று எழுதினார் கவிஞர்.




கலைஞர் அவரது சமகாலத்தோழர். கவிதைகளிலும் கட்டுரைகளிலும் பாராட்டும் விமர்சனமும் கதம்பம் போலக் கலந்தே வருகின்றன. எம்.ஜி.ஆர்.பற்றிய விமர்சனங்கள் கட்டுரைகளிலும்,புனைகதைகளிலும் காணப்பட்டாலும் வாழ்வின் இறுதிக்காலங்களில் எம்.ஜி.ஆரைத் தனது கவிதைகளில் பலவாறு புகழ்கிறார். அதற்கான காரணத்தைத் தமிழகம் அறியும் இந்தப் பின்னணியில் கவிஞரின் கவிதைகளையும்,அவற்றில் ஏற்றியும் இறக்கியும் வைக்கப்படுகிற தலைவர்களையும் பார்ப்பது சுவாரசியமாக இருக்கும்.


தன்னுடைய அரசியல் வாழ்வை திராவிட இயக்கச்சார்போடு தொடங்கிய கவிஞர்,இந்தி எதிர்ப்புக்கவிதைகளில் சன்னதம் கொண்டு சுழன்றாடுகிறார்.  அப்போது அவர் சுழற்றுகிற சாட்டையில் நேருவும் தப்பவில்லை.

“லம்பாடி லம்பாடி லம்பாடிப்பேய்

 தொங்குமொழி ஓசையிலே பிறந்த பாடை(பாஷை)” என்று இந்தியைச் சொல்கிறார் கவிஞர். மேலே போடப்பட்ட கோட்டில் எழுதுகிற எழுத்துக்கள் காரணமாய் இந்தியைத் தொங்குமொழி என்றார் கவிஞர். கோட்டைப்பிடித்துத் தொங்குவதால் இந்தி அவர்   கண்களில்  குரங்காகவும்  தெரிகிறது

“பொன்வீட்டில் குரங்குமொழி-பிறந்த காலம்

புரியாத தமிழ்மொழியோ கொல்லைமேட்டில்

 கண்மூடு தமிழ்மகனே உறங்கு நன்றாய்

கழுத்தறுந்து சாகும்வரை திறக்க வேண்டாம்” என்று  எழுதிய கவிஞர்

பிற்காலத்தில் இந்தப் பார்வையை மாற்றிக் கொள்கிறார். நேரு  இந்தித் திணிப்பை முன்னெடுக்கிறார் என்றதும்“பாதக்குறடெடுத்து பண்டித நேருவை பன்னூறு அடி அடிப்போம்” என்று பாடினார் கவிஞர்.

அப்போது சென்னை வந்த நேருவுக்கு திராவிட இயக்கத்தினர் கறுப்புக்கொடி காட்டினார்கள். அந்த நேரத்தில் நேருவின் முகம் எப்படியிருந்தது என்று கவிஞர் எழுதுகிறார்.


“கருங்குதிரை முகமென்பேனா -சுட்ட

கத்திரிக்காய் முகமென்பேனா” என்று கேலி செய்கிறார்.நேரு என்னதான் ஆணழகனென்றாலும் வந்த இடத்தில் வராதே என்று சொலும்போது முகம் வாடும். கறுத்தும் போகும்.இதைத்தான் சொல்கிறார் கவிஞர்.

ஆனால் 1963 ல் நேரு சென்னை வரும்போது கவிஞர் தேசீய நிரோட்டத்தில் கலக்கிறார்.நேருவை வரவேற்று கவிதை எழுதி அதன்ஆங்கில மொழிபெயர்ப்பை நேருவின் கைகளிலேயே தரும்விதமாய் காட்சிகளை மாற்றுகிறது காலம்.


“எங்கள் தலைவனே!இதயமே வருக!

 இனிய புன்னகைக் கலைஞனே வருக!

 சங்கத் தமிழின் சாரமே வருக!

  தர்ம தேவனின் தூதனே வருக!

கங்கை வெள்ளமே கருணையே வருக!

காந்தி நாயகன் செல்வமே வருக!

சுட்ட போதிலும் மாற்று விடாததோர்

தூய தங்கமே!தாய்மையே வருக!

பூமி முற்றிலும் போர் மறுத்திடும்

புத்த தேவனின் தத்துவம் வருக!

கண்ணில் மணியெனக் காத்த கொள்கையை

மண்ணில் ஊன்றிய மன்னனே வருக!

நாக்கு நீண்டவர் தாக்கும் வேளையும்

போக்கு மாறிடாப் பொறுமையே வருக!”

என்ரெல்லாம் அந்தக் கவிதை நேருவின் பெருமையை நீட்டி முழக்கும் .அதன் மொழிபெயர்ப்பை நேருவிடம் தந்த போது நேரு அதைத்தன்  ஷெர்வானியில்  பத்திரப்படுத்திக் கொண்டார். அவர் கால்களைத் தொட்டு வணங்கினார் கவிஞர்.நேரு மறைந்தபின் அந்த அனுபவத்தை ஒரு கவியரங்கில் கவிஞர் குறிப்பிட்டார்:

“சூடிக் கொடுத்த சுடர்க்கொடிபோல் பாட்டுப்

 பாடிக் கொடுத்தேன்; பண்டிதனின் கால்தொட்டேன்-கன்னியரின்

தோள்தொட்ட போதும் தோன்றாத சுகம்,அன்னான்

கால்தொட்ட போது கண்டேன் களிகூர்ந்தேன்” என்று பரவசப்படுகிறார் இந்த ஆண் ஆண்டாள். நேருவுக்கு அவர் எழுதிய அஞ்சலிக் கவிதைகள், அமரத்துவம் வாய்ந்தவை.அவறைப் பின்னால் காண இருக்கிறோம்.

அண்ணா அவர்களின் உரைகளால் ஈர்க்கப்பட்டு திராவிட இயக்கத்தில் ஈடுபட்டவர் கவிஞர். இன்னா நாற்பது ,இனியவை நாற்பது போல

“அண்ணா நாற்பது”பாடியவர் கவிஞர்.


 (அண்ணா, காமராஜர், கண்ணாதாசன்)

“முகம்பார்த்தே அகங்காணும் மூடாத விழிகள்


  முதலாளி கண்டஞ்சும் நிறங்கண்ட இதழ்கள்

 செகங்கண்டு சிலிர்ப்பேறும் சீரான கைகள்

 தென்னாட்டின் அன்பெல்லாம் துயில்கொள்ளும் நெற்றி

அகம்பற்றி உரைத்தற்கோர் அழகான வார்த்தை

அய்யய்யோ உலகத்தில் இனுந்தோன்றவில்லை

யுகந்தேய்ந்து போனாலும் பெயர்நிற்குமென்றால்

ஒருவர்க்கே அண்ணாவென் றுரைநாற்பதென்ப” என்று பாடினார்.இராமனின் அழகைப்பாட வார்த்தை கிடைக்காத கம்பன் “அய்யோ” என்றான்.கவிஞர் “அய்யய்யோ’என்கிறார்.

 “செம்பொன் மணியாரத்தொடு செல்வம் பலதரலாம்

 தம்பிப்படை யாவும்பல தங்கத் திரள்தரலாம்

 நம்பித்தமிழ் முறைபாடிடும் நலமேநிறை அண்ணன்

 தெம்புக்கது குறைவே அவர் திறனுக்கது சிறிதே” என்றும் பாடினார் கவிஞர்.

அண்ணாவின் சொல்வன்மை,மாற்றுக் கருத்துடையவரையும் பிணிக்க வல்லது. இதைச் சொல்ல ஓர் அருமையான உத்தியைக் கைக்கொள்கிறார் கவிஞர்.பகுத்தரிவு இயக்கத்தால் கடும் சாடலுக்குள்ளான இரண்டு

பிராமணர்கள் அண்ணாவின் பேச்சு பற்றிப் பேசிக்கொள்கிறார்களாம்:

“சாஸ்திரிவாள்!தெரியுமோ?சூத்திரன்தான்

  தமிழினிலே அழகாகப் பேசுகிறான் ஓய்

 நாஸ்திகந்தான் பேசுகிறான் என்றாலும் ஓய்

 நன்னாவே பேசுகிறான்!என்னங்காணும்..

 ஆஸ்திகத்தை அவன்தாக்கும்முறையைப்பார்த்தால்

ஆபத்து தான்காணும் எதிர்காலத்தில்

  வாஸ்தவத்தில் அவன்நல்ல மூளைக்காரன்

  மகதேவன் அவதாரம் என்பார் ஐயர்!”


 (கண்ணதாசன் ஈ.வெ.கி.சம்பத்துடன்)

இப்படி ஆராதிக்கப்பட்ட அண்ணாவை, கடுமையாக  சாடி  பின்னாளில்  கவிதை  படைக்கிறார் கவிஞர்.ஈ.வெ.கி.சம்பத்துடன் இணைந்து  தி.மு.க.விலிருந்து  வெளியேறுகிறார் கவிஞர்.திராவிட நாடு கொள்கையை அண்ணா  கைவிட்டதும் அதைக் கிண்டல் செய்து ஊரூராய்  கவியரங்கம்  நடத்தினார். இதைத்தான் நாங்கள் முன்பே சொன்னோம் என்று ஏகடியம் பேசினார்.”திண்ணையிலே படுத்தாவது திராவிடம் காண்பேனே தாவிர கண்ணதாசன்,சம்பத்தைப்போல் விலகிச்செல்ல மாட்டேன் என்று அண்ணா முன்பு சொன்னார்.அதை நினைவுபடுத்தி..


“சொன்னோம் ஒருநாள்!தூயவரே;அண்ணாவே:

எந்நாள் பிறந்தாலும் இன்பத் திராவிடத்தின்

பொன்னாள் பிறக்காது!பொழுதென்றும் விடியாது!

செத்த பிணத்தைச் சிரந்தூக்கி வலம்வருதல்

 புத்தியுள்ளார் செய்கையல்ல;புதைத்துக் குடமுடைப்போம்

சக்தியுளமட்டும் ஜனநாயக வழியில்

பக்தியுடன் செல்வோம் பாராளும் நிலைபெறுவோம்

கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்

செந்தமிழும் சேர்ந்து திராவிட நாடாவதென்றால்

பட்டப் பகலில் படுத்துறங்குவோன் காணும்

வெட்டிக் கனவு!விட்டுவிட்டு வாருமென்றோம்

முக்கண்ணன் போல முகத்திலொரு கண்திறந்து

அக்கண்ணன் தம்பியரின் அறிவுக்கோர் அண்ணனவன்

திக்கெட்டும் நடுநடுங்க தீயோய் சிறுமதியோய்

திண்ணையிலே காண்பேன் திராவிடநாடென்றானே!

திண்ணையிலே காண்பதற்கு திராவிட நாடென்பதென்ன

தொன்னையிலே நெய்யா?சோற்றுப்புளிக்குழம்பா?

போட்டுப் புரட்டிப் பொழுதை செலவழிக்கும் 

சீட்டு விளையாட்டா சிறுபிள்ளைத் தனமில்லையா.. “

இது, பானை பானையாய் கவிஞர் வடித்த பகடிச்சோற்றின் சில பருக்கைகள் மட்டுமே!! ஆனால் அண்ணா மீது அவருக்கு அந்தரங்கத்தில் தனியான பாசமும், அவரது மேடைத்தமிழில் ஒரு மயக்கமும் கடைசிவரை இருந்தது. காங்கிரஸில் சேர்ந்த பிறகு, 1964ல் அழகப்பா கல்லூரியில் “மறுமலர்ச்சி’ என்றொரு கவியரங்கில் தலைமையேற்றுப் பாடினார் கவிஞர். எவையெல்லாம் மறுமலர்ச்சி என்று பட்டியலிட்டுவிட்டு

“தண்ணார்ந்த பூந்தமிழை மேடைக்கே தந்தவர்யார்?

 அண்ணாதுரை என்றால் அணுவளவும் குற்றமில்லை!

 தட்டுகிறான் தம்பி,அவர் தலைவரென நான்நம்பி

வளர்ந்திருந்த காலத்தை மறக்கவில்லை பாடிவிட்டேன்”  என்று குறிப்பிட்டார்

தமிழ்த்தேசியக்கட்சியை ஈ.வெ.கி.சம்பத்துடன் இணைந்து உருவாக்கியவர்களில்  கவிஞரும் ஒருவர்.திராவிட முன்னேற்றக் கழகத்தைப்

பார்த்து, “தடை எங்கே படை இங்கே இன்று கேட்ட

               தானையிளந் தலைவர்களே நானுரைப்பேன்

                தடை இங்கே படை எங்கே தலைவரெங்கே

                தமிழ்ச்சேனை வெள்ளத்தின் தன்மை எங்கே?

                தொடையின்று நடுங்குவதேன்”        


என்றெல்லாம் எக்காளமிட்டார்.தமிழ்த்தேசியக் கட்சி செம்மையும் நீலமும் கலந்த கொடியொன்றினைக் கொண்டிருந்தது. நிலம் சிவப்பு, கடல்நீலம் என்று அதற்கும் ஒரு விளக்கக் கவிதை எழுதினார் கவிஞர்.தமிழன் மண்ணை செம்மையாக்கினான்.நாவாயேறிக் கடலில் நான்கு திசைகளும் போனான் என்பது கவிஞர் தந்த விளக்கம்.கட்சியின் விளக்கமும் அதுதானா என்று தெரியவில்லை. காலப்போக்கில் கட்சி தடுமாறியது.காங்கிரஸில் இணைந்தது.அங்கே போய்ச் சேர்ந்தபோது கவிஞரின் கவிதைகளுக்குக் கிடைத்த காவிய நாயகனே…காமராஜர்!!

Monday, 31 May 2021

SUJATHA TOLD ABOUT LYRICS KANNADASAN

 


SUJATHA TOLD ABOUT LYRICS KANNADASAN 



கவிஞர் கண்ணதாசனைப் பற்றி சுஜாதா சொல்கிறார்:
(Narayanan Krishnan)
1978 -ல், ‘நினைத்தாலே இனிக்கும்’ பாடல் பதிவின் போது அவரை நேரில் சந்தித்துக் கொஞ்சநேரம் பேசும் மறக்க முடியாத வாய்ப்பு கிடைத்தது.
அதற்கு முன், ‘இதயம் பேசுகிறது’ பத்திரிகை ஏற்பாடு செய்திருந்த விழா மேடையில், ஆசிரியர் மணியன் என்னைக் கவியரசுக்கு மாலை அணிவிக்கச் சொன்னார்.
அந்த விழாவில், கண்ணதாசனின் தெளிவான பேச்சைக் கேட்டு ரசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
'நினைத்தாலே இனிக்கும்’ படத்துக்கு நான் வசனம் எழுதினேன்.
சங்கீதக் கச்சேரி செய்ய சிங்கப்பூர் செல்லும் இரண்டு இளைஞர்களின் ஆர்க்கெஸ்ட்ரா ட்ரூப்பைப் பற்றிய கதை.
கே.பாலசந்தர் இயக்கிய அந்தப் படத்தில் கமல், ரஜினி இருவரும் நடித்தனர்.எம். எஸ்.விஸ்வநாதன் இசைக்கு கண்ணதாசன் பாடல்கள் எழுதினார்.
முதல் பாட்டின் கம்போசிங் சென்னை, ப்ரெசிடென்ட் ஹோட்டல் அறையில் நடைபெற்றது.
“நீங்களும் வாருங்கள். கண்ணதாசனும் விஸ்வநாதனும் சேர்ந்து பணிபுரிவதைப் பார்ப்பதே ஒரு சுவாரஸ்யமான அனுபவமாக இருக்கும்” என்றார் பாலசந்தர்.
சென்றேன்.முதலில் ஆர்மோனியப் பெட்டி வந்தது. பின் எம்.எஸ்.வி வந்தார். பட்டனை அழுத்தி, டிபன் வந்தது.
அதன்பின், கசங்கல் இல்லாத தூய வெள்ளை உடையில் வந்தார் கண்ணதாசன்.
அகலமான நெற்றியில் குங்குமப்பொட்டு. மெலிதான, அழுந்த வாரிய தலைமுடி. தாராளமான புன்னகை.
‘பெனடிக்ட் சொல்யூஷன்’ (Benedict Solution) வைத்து சர்க்கரை இருக்கிறதா என்று பார்த்துவிட்டுத்தான், காபிக்கு சர்க்கரை போடச் சொன்னார்.
எம்.எஸ்.வீயும், கவிஞரும் அன்யோன்யமாகப் பழகிக்கொண்டார்கள்.
“விசு, என்ன ட்யூன் ?”
“அண்ணே! சங்கீதத்தைப் பற்றிய உற்சாகமான ட்யூன்!”
“வாசி! ”
விஸ்வநாதனின் விரல்கள் ஆர்மோனியத்தில் உலவ, அவருக்கே உரிய வசீகரமான குரலில், “தன் னானே தன்னானே தன்னானே தன்னானே” என்று பாடினார். உடனேயே கவிஞர், “எங்கேயும் எப்போதும் சங்கீதம், சந்தோஷம் ” என்றார்.
“பாடிப் பாரு !”
“கச்சிதமாக இருக்கு, கவிஞரே !”
”அடுத்த அடி. ?””தானனன்னே தானனன்னே தானனன்னே தானனன்னே…!””தன்னானேக்கு பதில் தான னன்னேயா ?
சரி கொஞ்சம் தத்துவம் பேசலாமா ?” என்று டைரக்டரைப் பார்த்தார், கவிஞர்.
பாலசந்தர், “தாராளமா! உங்களுக்குச் சொல்லணுமா கவிஞரே ! ”
“ராத்திரிகள் வந்துவிட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்…!” “சரியா ?”
“Perfect !”
விஸ்வநாதன் பாடப் பாட, கண்ணதாசன் அத்தனை சரணங்களையும் (“காலை ஜப்பானில் காபி…. மாலை நியூயார்க்கில் காபரே… அவங்க ஊரூரா போறாங்கல்ல ? “)
உடனுக்குடன் உதிர்த்ததை பஞ்சு அருணாசலம் அழகான கையெழுத்தில் எழுதித்தர, சில மணி நேரங்களில் முழுப் பாட்டும் எழுதப்பட்டது.
இடையிடையே, கண்ணதாசனுடன் பேச்சுக் கொடுத்தேன். “எப்படி இவ்வளவு சரளமா வார்த்தைகள் வருது ? ”
“தமிழ்ல ஆதார சந்தத்தைப் பிடிச்சுட்டாப் போதும்! பாருங்க, சீதைக்கு எத்தனை பெயர்கள் ?
சீதா — நேர் நேர்;
ஜானகி — நேர்நிரை;
மைதிலி — நிரைநேர்;
வைதேகி — நேர் நேர் நேர்
(இது புரிவதற்கு தமிழ் இலக்கணம் கொஞ்சமாவது தெரிய வேண்டும்.
தமிழில் பேசவே / தமிழ் தெரிந்து கொள்ளவே விரும்பாத இன்றைய ஆண்டிராய்ட் தலைமுறையினருக்குப் புரிய வாய்ப்பில்லை)
இப்படி எந்தச் சந்தம் வேணுமோ அந்தச் சந்தத்துக்கு வார்த்தைகள் போட்டுக்கலாம். என்ன, எல்லா வார்த்தையும் தெரியணும்… அவ்வளவு தான்.
கம்ப இராமாயணத்தில் ஒவ்வொரு படலத்திலும், பாடலிலும் ஒரு புது வார்த்தை கிடைக்கும் !”
மறுநாள் ரிக்கார்டிங்குங்கு கண்ணதாசன் வந்து தலையைக் காட்டிவிட்டுப் போனார். அவர் வேலை முதல் நாளே முடிந்துவிட்டது .
அதன்பின் கண்ணதாசனை நான் சந்திக்கவில்லை.
அவர் உடல்நலம் குன்றி, சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றதும், தாய் நாட்டுக்குத் திரும்பிய நிலையும், இளம் வயதில் மறைந்ததும் என் மனத்தை உருக்கிய நிகழ்ச்சிகள்.
ஏறத்தாழ 40 ஆண்டுகளாகியும் அந்தப் பாடல் இன்றும்கூட எல்லா மெல்லிசை நிகழ்ச்சிகளிலும் கட்டியம் கூறும் பாடலாகப் பாடப்படுகிறது.
கண்ணதாசன் அதைத்தான் செய்தார்… எங்கேயும் எப்போதும் சங்கீதத்தையும், சந்தோஷத்தையும் பரப்பினார்.
உலகில் தமிழர்கள் வாழும் ஏதாவது ஒரு மூலையில் பயணிக்கும் கார்களிலும், இல்லங்களிலும் அவரது ஏதாவது ஒரு வரி ஒலிக்காத நேரமே இல்லை.
May be a black-and-white image of 1 person and sitting
Solaiappan Sundaram and 257 others
12 Comments
53 Shares

Monday, 26 April 2021

M.S.VISWANATHAN VS KANNADASAN

 

M.S.VISWANATHAN VS KANNADASAN



கண்ணதாசனைக் கொஞ்சுவார் எம்.எஸ்.விஸ்வநாதன் 

கண்ணதாசனோ, எம்.எஸ்.வி.யைக் கெஞ்சி மிஞ்சுவார்.

இருவருக்கும் அப்படியொரு பந்தம்.

கண்ணதாசனும் எம்.எஸ்.வி.யும் இணைந்துவிட்டால், அந்த வருடத்தின் சூப்பர்ஹிட் பாடல்களின் பட்டியல் நீண்டுவிடும் என்பார்கள்.

🌹அன்று ஊமைப் பெண்ணல்லோ’ பாட்டில், ‘அ ஆ இ ஈ’ சொல்லித்தருவது போல் பாடல் அமைந்திருக்கும். அதில் ஒரு வயலினை இழையவிட்டிருப்பார்.

நம்மையும் பாடம் படிக்க வைத்துவிடுவார்.

🌹மாலைப் பொழுதின் மயக்கத்திலே’ பாட்டில், ‘மா...லைப் பொழுதின்’ என்று சொல்லும்போதே அந்தப் பாடலுக்குள் இருக்கிற சோகம் நமக்குள்ளேயும் வந்துவிடும்.

🌹ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது’ பாட்டிலும் மங்கலகரமான இசையைத் தவழவிட்டிருப்பார்.

விஜயகுமாரியின் எதிர்காலம் நன்றாக வேண்டும், சிவாஜி நினைத்தது நடக்கவேண்டும் எனும் பிரார்த்தனை நமக்குள்ளே ஓடும்.

டி.எம்.எஸ்.சையும் பிபிஸ்ரீநிவாஸையும் சேர்ந்து பாட வைக்கும் போது, ரொம்பவே குஷியாகிவிடுவார் எம்.எஸ்.வி.

🌹பொன்னொன்று கண்டேன் பெண் அங்கு இல்லை’ ஆகச்சிறந்த பாடல் 

🌹பாடினாள் ஒரு பாட்டு பால்நிலாவினில் நேற்று...’ என்ற பாடல் துள்ளவைத்துவிடும்.

பி.பி.எஸ். தனியே பாடுகிறார் என்றால் ஒரு விசில் சத்தத்தை துணைக்கு அனுப்பிவிடுவார்.

🌹’நான் பேச நினைப்பதெல்லாம்’ பாட்டுக்கு ‘ம்...ம்ம்ம்.. ம்ம்ம்ம்ம்ம்’ என்று ஹம் செய்யவைத்திருப்பார்.

அந்த ‘ஹம்’தான் பாடலுக்கு இன்னும் ஜீவனைக் கொடுத்து, நம் தூக்கத்தையெல்லாம் விரட்டிவிடும். துக்கத்தையும்தான்!

🌹தாழையாம்பூமுடிச்சு’ பாட்டுக்கு முன்னே ஒரு ஹம்மிங்.

🌹பூமாலையில் ஓர் மல்லிகை’ பாட்டுக்கு முன்னதாக, ஒரு ஹம்மிங்.

🌹நல்லவன் எனக்கு நானே நல்லவன்’ பாடலின் இடையே ஓர் ஹம்மிங்.

🌹‘கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா? கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா?’

பாடலை டி.எம்.எஸ். பாட,

நடுநடுவே எல்.ஆர்.ஈஸ்வரியை விட்டு, ஓர் ஹம்மிங் இசைத்திருப்பார்.

அது நம்மை கட்டிப்போட்டுவிடும்.

🌹நெஞ்சம் மறப்பதில்லை’ என்றொரு பாடல். அந்த ஹம்மிங், உயிரைக் கரைத்துவிடும்.

🌹வாராதிருப்பானோ

வண்ண மலர்க் கண்ணன் அவன்

சேராதிருப்பானோ

சித்திரப் பூம் பாவை தன்னை

🌹உங்கள் பொன்னான கைகள் புண்ணாகலாமா?’, ‘

🌹கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா’,

🌹துள்ளுவதோ இளமை’

🌹என்ன பார்வை உந்தன் பார்வை’,

🌹ரோஜாமலரே ராஜகுமாரி...’,

🌹சொல்லத்தான் நினைக்கிறேன்’, ‘

🌹கேள்வியின் நாயகனே’, ‘

🌹வான் நிலா நிலா அல்ல...’, ‘

🌹மலர்ந்தும் மலராத பாதிமலர் போல...’,

🌹’அவளுக்கென்ன அழகிய முகம்...’ என்று எத்தனை பாடல்கள்; எவ்வளவு வெரைட்டிகள்!

🌹அவளுக்கென்ன’ பாடலுக்கு டிரிபிள் பேங்கோஸில் அதகளம் பண்ணியிருப்பார்.

🌹 ‘என்னடி ராக்கம்மா’வுக்கு சோழவந்தான் அலப்பறையை இசையால் தந்து அசத்தியிருப்பார்.

🌹சிப்பி இருக்குது முத்து இருக்குது’ பாடலெல்லாம் எம்.எஸ்.விக்காகவும் கண்ணதாசனுக்காகவும் கே.பாலசந்தர் வைத்த ஆடுகளம் மாதிரி இருக்கும்.

🌹‘முத்துக்களோ கண்கள்’ என்பார். ஏகப்பட்ட கருவிகளையும் மெட்டுகளையும் இணைத்து, ‘

🌹ஒரு ராஜா ராணியிடம் வெகுநாளாக ஆசைகொண்டான்’ என்று மிரட்டுவார்.

அதுதான் மெல்லிசை மன்னர்; அதனால்தான் மெல்லிசை மன்னர்

இந்தக் கால பாஷையில்... கெமிஸ்ட்ரி! ‘ஏழு ஸ்வரங்களுக்குள்’ எத்தனையோ பாடல்களைத் தந்தார். ஸ்வரம் பிரித்துப் பரிமாறினார்.

எம்.எஸ்.வி.யின் பாடல்கள் தனித்துவமும் மகத்துவமும் வாய்ந்தவை. அதுவும் வாத்தியக் கருவிகள் குறைவாக வைத்துக்கொண்டுதான்சாதனை

செய்தவர் 

Saturday, 17 October 2020

KANNADASAN ,POET,LYRICS DIED OCTOBER 17,1981

 



KANNADASAN ,POET,LYRICS

 DIED OCTOBER 17,1981



"காலமெனும் ஆழியிலும்
காற்று, மழை, ஊழியிலும்
சாகாது கம்பனவன் பாட்டு...
அது தலைமுறைக்கு எழுதி வைத்த சீட்டு...!

கண்ணதாசன், கம்பனுக்கு எழுதிய கவிதை இது. கம்பனுக்கு மட்டுமின்றி, கண்ணதாசனுக்கும் இது பொருந்தும்.
ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள், நான்காயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகள், 20க்கும் மேற்பட்ட நாவல்கள் என காலத்தால் அழிக்க முடியாத படைப்புகளைத் தந்த மாபெரும் படைப்பாளி... சங்க இலக்கிங்களின் செழுமையையும், தத்துவங்களையும், அனுபவங்களையும், சமூக, அரசியல் விழிப்புணர்வையும் பாமர மனிதனுக்கும் புரியும் எளிய மொழியில் எழுதிய இந்த மாபெரும் கவிஞனுக்கு இன்று (அக்டோபர் 17ம் தேதி) 35வது ஆண்டு நினைவு நாள்.




சிவகங்கை மாவட்டம், காரைக்குடிக்கு அருகில் உள்ள சிறுகூடல்பட்டி என்ற கிராமத்தில் பிறந்தவர் கண்ணதாசன். இயற்பெயர் முத்தையா. அப்பா பெயர் சாத்தப்ப செட்டியார். அம்மா பெயர் விசாலாட்சி. உடன் பிறந்தவர்கள், ஆறு சகோதரிகள், மூன்று சகோதரர்கள்.

செட்டிநாட்டில், நிறைய குழந்தைகளைப் பெற்ற தம்பதி, குழந்தைகள் இல்லாத தம்பதிக்கு பிள்ளையை சுவீகாரம் கொடுக்கும் நடைமுறையாக இருக்கிறது. கண்ணதாசனும் அவ்விதம் காரைக்குடியைச் சேர்ந்த பழனியப்ப செட்டியார்-சிகப்பி ஆச்சி தம்பதிக்கு சுவீகாரம் தரப்பட்டார். சுவீகாரம் சென்ற வீட்டில் அவருக்கு வைக்கப்பட்ட பெயர் நாராயணன். எட்டாவதாகப் பிறந்ததாலோ என்னவோ, கண்ணதாசனுக்கு எட்டாம் வகுப்பு வரைக்கும் தான் பள்ளிக்கல்வி வாய்த்தது.




சிறு வயதிலேயே எழுத்தின் மீது தீராத ஆர்வம். சிறு சிறு புத்தகங்கள் வாசிக்கக் கிடைத்தன. பத்திரிகைகளில் கதை எழுத வேண்டும் என்பது அவரது கனவாக இருந்தது. 16 வயதில் வீட்டுக்குத் தெரியாமல் சென்னைக்கு கிளம்பி வந்தார். சந்திரசேகரன் என்று புனைப் பெயர் சூடிக்கொண்டு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புத் தேடினார்.

ஆனால், சென்னை அவருக்கு பல கொடுமையான அனுபவங்களைத் தந்தது. பசியும், எதிர்காலம் குறித்த பயமும் வாட்டியது. திருவொற்றியூரில் உள்ள பட்டினத்தார் கோவிலிலேயே படுத்துக் கிடந்தார். ஒரு நிறுவனத்தில் உதவியாளராக வேலை கிடைத்தது. அந்நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டே கதைகள் எழுதத் தொடங்கினார். கிரகலட்சுமி என்ற பத்திரிகையில் ”நிலவொளியிலே” என்ற அவரது முதல் கதை வெளிவந்தது. முதல் கதையை அச்சில் கண்ட உத்வேகத்தில், இன்னும் தீவிரமாக எழுதத் தொடங்கினார். பத்திரிகை துறையின் மீது பெரும் நாட்டம் ஏற்பட்டது.

ஒரு நண்பரின் பரிந்துரையோடு, புதுக்கோட்டையில் இருந்து வெளிவந்த திருமகள் என்ற பத்திரிகையில், "ப்ரூப் திருத்துனர்" வேலை கேட்டு வந்தார். நேர்க்காணலில், பத்திரிகையின் அதிபர், உங்கள் பெயரென்ன? என்று கேட்டார். அந்த நேரத்தில் எழுத்தாளர்கள் புனைப்பெயர் வைத்து எழுதுவது ஃபேஷனாக இருந்தது. அதிலும் ”தாசன்” என்று முடியும் பெயரை வைத்திருப்பவர்களுக்கு தனி மரியாதை கிடைத்தது. கிடைத்த சில நொடிகளில் ”கண்ணதாசன்” என்று பதில் சொன்னார். முத்தையா, கண்ணதாசனாக மாறியது அந்தத் தருணத்தில் தான்.

கண்ணதாசனின் திறமையைத் தொடர்ந்து கவனித்த பத்திரிகையின் அதிபர், ஒருநாள் இதழுக்கு தலையங்கம் எழுதச் சொன்னார். இந்திய தேசிய ராணுவம் பற்றி கண்ணதாசன் எழுதிய தலையங்கம், பத்திரிகை அதிபரை பெரிதும் கவர்ந்தது. உடனடியாக பத்திரிகையின் ஆசிரியராக பணி அமர்த்தப்பட்டார். அப்போது அவருக்கு வயது 17.

பிறகு திரை ஒலி, சண்டமாருதம், தென்றல், தென்றல் திரை உள்ளிட்ட பத்திரிகைகளில் பணியாற்றினார். கண்ணதாசன் என்ற பத்திரிகையை அவரே நடத்தினார். அனைத்து பத்திரிகைகளிலும் அவரது கவிதைகள், கதைகள், கட்டுரைகள், நாடகங்கள் வெளிவந்தன. அவை அப்போதைய இலக்கிய ஆளுமைகள் மத்தியில் பெரிதும் கவனம் பெற்றன.

கவிதைகள் மூலம் அடையாளம் கிடைத்த பிறகு, திரைப்படங்களுக்கு பாடல் எழுத வேண்டும் என்ற எண்ணம் கண்ணதாசனுக்கு ஏற்பட்டது. சண்டமாருதம் பத்திரிகை நிறுத்தப்பட்ட பிறகு, மாடர்ன் தியேட்டர்ஸ் கதை இலாகாவில் கண்ணதாசனும் சேர்க்கப்பட்டார். கதை இலாகா சந்திப்புகளில் கருணாநிதியின் நட்பு கிட்டியது. அதன் வழி திராவிட இயக்கத்தின் மீது ஆர்வம் அதிகமானது.
பிறகு பத்திரிகை பணிகளை உதறிவிட்டு முழுமூச்சாக திரைப்படங்களுக்கு பாடல் எழுத வாய்ப்புத் தேடினார். ஜூபிடர் நிறுவன தயாரிப்பில், தான் இயக்கிய கள்வனின் காதலி படத்தில் பாடல் எழுத வாய்ப்புக் கொடுத்தார் கே.ராம்நாத். ”கலங்காதிரு மனமே... உன் கனவெல்லாம் நினைவாகும் ஒரு தினமே” என்ற பாடல் தான் கண்ணதாசனின் முதல் பாடல். அதன்பிறகு, அடுத்த 30 ஆண்டுகள் திரைத்துறையை முற்றுமுழுதாக ஆளுமை செய்தார் கண்ணதாசன். திரையுலகமே அவர் எழுதும் கவிக்காக காத்துக் கிடந்தது.
ஆசுகவி என்பார்களே... அதைப்போல, கண்ணதாசனிடம் அருவியெனக் கொட்டியது தமிழ். கதை, வசனம், தயாரிப்பு என சகல துறைகளிலும் இயங்கினார் இசையமைப்பாளர்கள் எல்லாம் தங்கள் இசையில் அவருடைய பாடல் இடம் பெறுவதை பெருமையாகக் கருதினர்.

பன்மொழிப் புலவர் அப்பாத்துரையாரிடம் கற்ற இலக்கிய வளமை, திராவிட இயக்கத்தின் தீவிரம், பாரதிதாசன் பால் ஏற்பட்ட ஈர்ப்பு எல்லாம் சேர்ந்து கண்ணதாசனை தனித்துவமிக்க படைப்பாளியாக நிலை நிறுத்தியது.

அரசியலிலும் தீவிர ஆர்வம் காட்டினார். திமுகவில் தொடங்கிய அவருடைய அரசியல் காங்கிரசில் முடிவுற்றது. ஒருமுறை தேர்தலில் நின்று தோற்றார். அவரின் இயல்புக்கு அரசியல் பொருத்தமாக இல்லை. வெளிப்படையான பேச்சு, ஒரு கொள்கை தவறெனப் படும்போது தயக்கமில்லாமல் மாற்றிக்கொள்ளும் நேர்மை, எதற்கும் அஞ்சாத விமர்சனங்கள்... இதெல்லாம் அரசியலுக்கு சரிப்படவில்லை.
பாடலில் கொடிகட்டிப் பறந்த காலங்களில் கண்ணதாசன் செல்வத்தில் திளைத்தார். ஆனால், சேமித்து வைக்கும் வழக்கமில்லை. சொந்தப்படங்கள் எடுத்தார். அவை கடனில் தள்ளின.

”பிர்லாவைப் போல சம்பாதித்தேன். ஊதாரியைப் போல செலவழித்தேன். பல நேரங்களில் பிச்சைக்காரனைப் போல ஏங்கி நின்ற வாழ்க்கை தான் எனக்கு வாய்த்திருக்கிறது..” என்று ஒரு கட்டுரையில் பதிவு செய்திருக்கிறார் கண்ணதாசன்.

தொடக்கத்தில் திராவிட இயக்கத்தில் தீவிரமாக இயங்கிய கண்ணதாசன் பிற்காலத்தில் இந்து மதத்தில் பற்றுடையவரானார். இந்து மதம் சார்ந்து எழுப்பப்படும் பல்வேறு கேள்விகளுக்கு எளிய மொழில் பதில்களையும், அனுபவங்களையும் உள்ளடக்கி அவர் எழுதிய ”அர்த்தமுள்ள இந்துமதம்” தொகுப்பு இன்றளவும் அதிகம் விற்பனையாகும் நூல்களின் பட்டியலில் இடம் பிடிக்கிறது.
கண்ணதாசனுடைய வாழ்க்கை திறந்த புத்தகம். தனக்கு சரியெனப் பட்டத்தை அவர் செய்யத் தயங்கியதே இல்லை. அது தவறென்று உணரும்பட்சத்தில் அதை ஒப்புக்கொள்ளத் தயங்கியதும் இல்லை. தன்னுடைய வாழ்க்கையை கண்ணதாசன் அளவுக்கு வெளிப்படையாக பகிர்ந்து கொண்ட ஆளுமைகள் யாருமில்லை. வனவாசம், மனவாசம், எனது வசந்தகாலங்கள், எனது சுய சரிதம் ஆகிய 4 நூல்களும் கண்ணதாசனின் சுய சரிதைகள்.

கண்ணதாசனுக்கு மூன்று மனைவியர். 15 பிள்ளைகள்.

“கண்ணதாசன் எப்போதுமே பாக்கெட்டில் பணம் வைத்துக் கொள்ள மாட்டார். ஒருநாள் மௌண்ட்ரோடு பக்கமாக காரில் போகும்போது அவரது பாக்கெட்டில் பணம் இருந்தது. உடனடியாக ஒரு துணிக்கடையில் காரை நிறுத்தச் சொல்லி உள்ளே நுழைந்து, ”குழந்தைகளுக்கான உடை வேண்டும்” என்று கேட்டார். கடைகாரர் ”குழந்தைக்கு என்ன வயது?” என்று கேட்டார். கவிஞர் திகைத்து விட்டார். பிறகு சுதாரித்துக் கொண்டு, ”நம்ம வீட்டில் எல்லா வயதிலும் குழந்தைகள் உண்டு. எல்லா வயசுக்கும் ஒன்னொன்னு குடுப்பா” என்று சிரித்துக்கொண்டே வாங்கிச் சென்றார்...” என்று கண்ணதாசன் பற்றிய தன் நினைவுகளை சிரிப்போடு பகிர்ந்து கொள்கிறார் அவரிடம் உதவியாளராக இருந்தவரும் மூத்த இயக்குனருமான எஸ்பி, முத்துராமன்.

கண்ணதாசன் எழுதிய பெரும்பாலான பாடல்கள் அவரின் அனுபவத்தில் விளைந்தவை. அந்தந்த சூழலுக்கேற்ப பாடல் புனைவதில் அவருக்கு இணை யாருமில்லை.

ஒருமுறை, நெஞ்சில் ஓர் ஆலயம் படத்துக்காக இசையமைப்பாளர் விஸ்வநாதன் ஒரு பாடல் எழுத கண்ணதாசனை அழைத்திருந்தார். கண்ணதாசன் வரத் தாமதமாகி விட்டது. நெடுநேரம் காத்திருந்த விஸ்வநாதன், ”இனிமேல் கண்ணதாசனிடம் பாடல் கேட்கப் போவதில்லை” என்று நண்பர்களிடம் வருத்தமாக சொன்னார். இதைக் கேள்விப்பட்டு உடனடியாக விஸ்வநாதனைச் சந்தித்த கண்ணதாசன், பாடலை கொடுத்தார்.

”சொன்னது நீதானா? சொல்... சொல்.., என்னுயிரே” என்ற அந்தப் பாடலைப் படித்ததும் கண்கலங்கி கண்ணதாசனை கட்டி அணைத்துக் கொண்டாராம் விஸ்வநாதன். இப்படி பெரும்பாலான கதைகள் கண்ணதாசன் வாழ்க்கையில் உண்டு.

இன்றைக்கும் பலருக்குத் தாலாட்டாக, பலரின் துயரங்களுக்கு ஆறுதலாக, மனம் தொய்ந்து கிடக்கும் பலருக்கு உத்வேகமாக இருப்பவை கண்ணதாசனின் பாடல்கள். வாழ்வின் அனுபவத்தில் இருந்து எழும், உண்மையான ஒரு படைப்பு காலத்தை வென்று தலைமுறைகளைக் கடந்தும் நீடித்து வாழும் என்பதற்கு கண்ணதாசனின் பாடல்களும், படைப்புகளும் மிகச்சிறந்த உதாரணம்.

”எப்படியெல்லாம் வாழக்கூடாதோ, அப்படியெல்லாம் வாழ்ந்தவன் நான். அதனால் இப்படித்தான் வாழ வேண்டும் என்று அறிவுரை சொல்லும் தகுதி எனக்கு இருக்கிறது..” என்றார் அவர்.

காலமாகி 35 ஆண்டுகள் கடந்தும் கண்ணதாசன் இன்னும் நம் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கக் காரணம் இந்த நேர்மையும், உண்மையும் தான்..!
கண்ணதாசன் பற்றிய சில தகவல்கள்

* கண்ணதாசன் பாடல்களை தானே எழுதுவதில்லை. சொல்லச் சொல்ல அவரது உதவியாளர்கள் எழுதுவார்கள். இயக்குனர் எஸ்பி.முத்துராமன், பஞ்சு அருணாசலம், இராம.கண்ணப்பன் ஆகியோர் கண்ணதாசனிடம் உதவியாளர்களாக பணியாற்றினார்கள்.

* ”இவ்வளவு சிறப்பாக பாடல் எழுதுகிறீர்களே... உங்களுக்கு ஆதர்சமாக இருந்தது யார்?” என்று கண்ணதாசனிடம் கேட்கப்பட்டது. ”என் தாய் வாசாலாட்சி பாடிய தாலாட்டு தான் என் பாடல்களுக்கு ஆதர்சம்” என்றார் கண்ணதாசன்.

* மெட்டுக்கு இசையமைப்பதையே விரும்புவார் கண்ணதாசன். பெரும்பாலும், வெறும் சூழ்நிலையை மட்டும் கேட்காமல் படத்தின முழுக்கதையையும் கேட்டு, அக்கதையை முழுமையாக பிரதிபலிக்கும் வகையில் பாடல்கள் எழுதுவார். அப்படி அவர் எழுதிய பாடல்கள் இன்றும் உயிர்ப்போடு இருக்கின்றன. இயக்குனர் பீம்சிங் இயக்கிய பெரும்பாலான ”பா” வரிசைப் படங்களின் பாடல்கள் அப்படி எழுதப்பட்டவை தான்.

* கண்ணதாசன் எப்போதும் மதுவில் திளைத்துக்கிடப்பார் என்றொரு கருத்து உண்டு. ஆனால் கண்ணதாசன் பாடல்கள் எழுதும்போது மது அருந்தமாட்டார்.

*மிகவும் ரசித்து ருசித்து சாப்பிடுவார் கண்ணதாசன். குறிப்பாக அசைவ உணவுகள். கண்ணதாசனின் மனைவி பார்வதி ஆச்சி மிகச்சிறப்பாக அசைவ உணவுகளை சமைப்பார். அவரது மகள் ரேவதி சண்முகம் சமையல் நிபுணராக இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

* சேரமான காதலி படைப்புக்காக கண்ணதாசனுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது.

Image may contain: 2 people, selfie and closeup
Image may contain: 2 people, including Tagi Dada, people smiling
Image may contain: 3 people, including கார்த்திக் ருத்ரன், people smiling
Image may contain: 2 people, people smiling