Showing posts with label POLITICS. Show all posts
Showing posts with label POLITICS. Show all posts

Monday, 30 August 2021

CHO AND HIS CINEMA WITH POLITICS

 

 CHO AND HIS CINEMA WITH POLITICS

 


எமர்ஜென்ஸிக்குப் பின்னால் மொரார்ஜி பிரதமராக இருந்த ஜனதா ஆட்சி இந்திராவின் தொடர் ஆணவ, அராஜக, சர்வாதிகார, ஊழல் ஆட்சியைத் தொடர்ந்து இந்தியாவுக்கு ஒரு அருமருந்தாக அமைந்திருந்தது. விலைவாசிகள் கட்டுக்குள் வைக்கப் பட்டிருந்தன. ஒழுக்கத்திலும் ஊழல் அற்ற ஆட்சி தருவதிலும் மிகவும் கறாராக இருந்த மொரார்ஜி தேசாயின் தலமையை சோ வெகுவாக ஆதரித்தார்.
எமர்ஜென்சியின் பொழுதே டெல்லி அரசியல்வாதிகளில் சோ பிரபலமாகியிருந்தார். இளம் துருக்கியர் சந்திரசேகர், பிரதமர் மொரார்ஜி என்று பலரும் சோவின் நண்பர்களாக ஆகியிருந்தனர். ஆட்சி கவிழ்க்கப் பட்ட பிறகு மொரார்ஜி தேசாய் சென்னை வந்திருந்தார். அவரை வரவேற்க விமான நிலையத்திற்கு எவரும் வரவில்லை. பின்னர் முன்னாள் பிரதமர் மொரார்ஜி சோவுக்கு ஃபோன் செய்து தகவல் தெரிவித்த பின்னர் சோ வந்து அவரை அழைத்துச் சென்றார். டெல்லி அரசியல்வாதிகள் பலரையும் தமிழ் நாட்டு வாசகர்களுக்கு சோவின் துக்ளக் மூலமாகவே அறிமுகம் ஆனார்கள். வஞ்சனைகளும், சூதுகளும், சகுனித்தனங்களும், குழிபறித்தலும்,ஊழல்களும், விலை போதல்களும் நிறைந்த இந்தியாவின் மோசமான வருடங்கள் அவை. அனைத்தையும் ஒன்று விடாமல் தொடர்ந்து விரிவாக துக்ளக்கில் எழுதி வந்தார். சரண்சிங், ஜகஜீவன்ராம் போன்ற சந்தர்ப்பவாதிகளின் மோசமான பக்கங்கள் தெரிய வந்தன. ஜனதா கட்சியில் இருப்பவர்கள் எவரும் ஆர் எஸ் ஸில் இருக்கக் கூடாது என்ற பிரச்சினையை தூண்டி விட வைத்து மொரார்ஜி தலைமையிலான மத்திய அரசை இந்திரா கவிழ்க்க வைத்தார். மொரார்ஜி அரசின் வெளியுறவு அமைச்சராக வாஜ்பாயியும் தகவல் தொடர்பு அமைச்சராக அத்வானியும் இருந்தனர். இருவரும் ஆர் எஸ் எஸ்


உறுப்பினர்களாக இருப்பதைக் கை விட மாட்டோம் என்று பிடிவாதமாக மறுத்து விட்டனர். சரண்சிங்கின் பிடிவாதத்தினாலும் சரண்சிங், ஜகஜீவன்ராம் போன்றோர்களின் குடுமிப் பிடி சண்டைகளினாலும், அவசரப் பட்டு இந்திரா கைது செய்யப் பட்டதினாலும், சரண்சிங் இந்திராவின் சதித் திட்டங்களினாலும் ஒரு நல்ல ஆட்சியை மொரார்ஜி அளிக்க முயன்றும் அது முடியாமல் பாதியிலேயே கவிழ்ந்தது. வாராது வந்த ஒரு நல்ல ஆட்சி கவிழ்க்கப் பட்டது. இதனால் அளவிடாத விரக்திக்கு சோ உள்ளானார். இப்படியாக ஜனதா கட்சியின் அற்ப ஆயுள் முடிந்து பாரதிய ஜனதா கட்சி என்ற பெயரில் பழைய ஜனசங்கம் புது உருவம் எடுத்து இரண்டு எம்.பிக்களுடன் தன் கணக்கைத் துவக்கியது.
cho_thuglaq_cartoon_on_indira_gandhiஎண்பதுகளின் முற்பகுதியில் மத்தியில் இந்திராவின் ஊழல் ஆட்சியும் எண்பதுகளின் நடுவே மாநிலத்தில் எம் ஜி ஆரின் உடல் நலத்தால் நலிந்த ஆட்சியுமாக ஒட்டு மொத்த இந்தியாவுமே குழப்பத்தில் இருந்தது.
டெல்லியில் இந்திரா அரசின் ஊழல்களையும் சஞ்சய் காந்தியின் அடக்குமுறைகளையும் எதிர்த்து வந்தார். இந்திரா மாநிலத்தில் வென்று ஆட்சி நடத்திக் கொண்டிருந்த ஜனதா சர்க்கார்களையெல்லாம் சர்வாதிகாரமாகக் கலைத்தார். ஆந்திராவின் தன் சொந்த செல்வாக்கில் ஜெயித்திருந்த என் டி ராமாராவின் அரசாங்கத்தை பாஸ்கர ராவ் என்ற ஒரு அடியாள் மூலமாக கலைத்தார். என் டி ஆருக்கு நெஞ்சு வலி வந்தது. மீண்டும் கடும் போராட்டங்களுக்குப் பிறகு என் டி ஆரின் அரசு அமைய சோ கடுமையாகப் பாடு பட்டார். என் டி ஆருடன் கூடவே இருந்து அங்கு நடந்த அநியாயங்களை இந்திராவின் அக்கிரமங்களை எதிர்த்துப் போராடினார். என் டி ஆருக்கு மெஜாரிடி இருந்தும் கூட இந்திரா அவரது அரசை கலைக்க ஏற்பாடு செய்தார். அந்த போராட்டத்தில் சோவின் பங்கு முக்கியமானது. ஜனநாயகத்திற்காக சோ என் டி ஆருக்கு அளித்த ஆதரவுகள் மூலமாக சோவின் செல்வாக்கு வட இந்தியத் தலைவர்களிடம் வெகுவாக உயர்ந்தது
அதே சமயத்தில் ஜனதா கட்சியைத் தமிழ் நாட்டில் சோ பிரபலப் படுத்துவதில் மும்முரமாக இருந்தார். ஒரு கட்டத்தில் அந்தக் கட்சியில் சோ சேர்ந்தே விட்டார். அனேகமாக சோஉறுப்பினராக சேர்ந்த ஒரே கட்சி மொரார்ஜி தலமையிலான ஜனதா கட்சியாகவே இருக்கும். சோவைப் பின்பற்றி நானும் அதில் ஒரு உறுப்பினராகச் சேர்ந்தேன். இந்திரா சரண்சிங் சதியால் மொரார்ஜி தேசாய் கவிழ்க்கப் பட்ட பொழுது சோ ஜனதா ஆட்சியை மீட்க்க மிகவும் பாடு பட்டார். 1980ம் வருடம் தமிழ் நாட்டில் ஜனதா கட்சி தனித்துப் போட்டியிட்டது. அப்பொழுது சோ ஜனதா கட்சிக்காக கடும் பிரசாரம் செய்தார். கொஞ்சம் கொஞ்சமாக ஜனதா கட்சியில் இருந்து பா.ராமச்சந்திரன், குமரி அனந்தன் போன்ற பெரிய தலைவர்கள் யாவரும் அந்தக் கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் பக்கம் தாவி விட்டனர். அப்பொழுது பா.ராமச்சந்திரன் தன்னுடன் சத்தியமூர்த்தி பவனையும் காங்கிரஸுக்கு அர்ப்பணித்ததினால் அவருக்குக் கூலியாக கேரள மாநிலத்தின் ஆளுனர் பதவி வழங்கப் பட்டது. நெல்லை ஜெபமணி மற்றும் தமிழருவிமணியன் மட்டுமே தமிழக ஜனதாவில் மீதம் இருந்தனர். இறுதி வரை நெல்லை ஜெபமணி மட்டுமே அந்தக் கட்சியில் தொடர்ந்தார். பின்னர் அந்தக் கட்சியின் அருமையான சின்னமான ஏர் உழவன் சின்னத்தை சுப்ரமணிய சுவாமி எடுத்துக் கொண்டு இப்பொழுது அவரும் அந்தக் கட்சியை பாரதிய ஜனதாவில் இணைத்து விட்டார்.
தமிழ் நாட்டில் சோ தொடர்ந்து எம் ஜி ஆர், கருணாநிதி இருவரையுமே கடுமையாக எதிர்த்து வந்தார். மாற்றாக ஜனதா கட்சியை முன்னிறுத்தி வந்தார். எம் ஜி ஆரின் அனைத்து கோமாளித்தனங்களையும் சோ கடுமையாகவே விமர்சித்து வந்தார். மாநிலத்தில் எம் ஜி ஆரின் உடல் நிலை சீர்கெட்டு அவர் அமெரிக்காவிலும் மீண்டும் தமிழ் நாட்டில் மோசமான உடல்நிலையோடும் அதிகாரிகளால் நடத்தப் படும் ஒரு ஆட்சியாக பேருக்கு நடந்து கொண்டிருந்தது. அதற்கும் முன்பாகவே எம் ஜி ஆரின் இந்திராவின் ஆதரவு காரணமாக தமிழ் நாட்டில் விடுதலைப் புலிகளுக்கான ஆதரவு பெருகியிருந்தது. பிரபாகரனுக்கும் பத்மநாபாவுக்கும் துப்பாக்கி சண்டைகள் தமிழ் நாட்டில் நடக்கும் அளவுக்கு சென்னை விமான நிலையத்தில் குண்டு வெடிப்புகள் நடக்கும் அளவுக்கு அவர்கள் சுதந்திரமாக உலவி வந்தார்கள். தமிழகமெங்கும் புலிகள் வீடுகள் வாடகைக்கு எடுத்துத் தங்கி துப்பாக்கிகளுடன் சுதந்திரமாகத் திரிந்து வந்தனர்.சோ விடுதலைப் புலிகளைக் கடுமையாக எதிர்த்து வந்தார். அவர்களுக்கு அளிக்கப் படும் சுதந்திரம் தமிழ் நாட்டை ஒரு வன்முறை பூமியாக மாற்றி விடும் என்று கதறி வந்தார். அவர் ஒருவர் மட்டுமே புலிகளைத் துணிவாக எதிர்த்து எழுதி வந்தவர். ஒட்டு மொத்தத் தமிழ் நாடே ஈழத்தமிழர் ஆதரவு என்னும் மாய வலையில் சிக்கியிருந்தது.
மத்தியில் இந்திரா மறைவுக்குப் பின்னர் ராஜீவ் ஆட்சிக்கு வந்த பொழுது சோ அவரை இந்திரா அளவுக்கு எதிர்க்கவில்லை. ராஜீவும் சோவுடன் சுமுகமான உறவையே பேணி வந்தார். ஈழத்தமிழர் பிரச்சினை உட்பட சோவிடம் அவர் கலந்தாலோசித்தார். ராஜீவின் பிற்கால ஊழல்களை துக்ளக்கில் வெளியிட்ட போதிலும் ராஜீவிடம் ஓரளவுக்கு மென்மையாகவே சோநடந்து கொண்டார் என்றே சொல்ல வேண்டும். 1987ம் வருட இறுதியில் எம் ஜி ஆர் மறைவும் தொடர்ந்து ராஜீவின் தோல்வியும் மீண்டும் மத்தியிலும் மாநிலத்திலும் குழப்பமான ஒரு அரசியல் சூழலை ஏற்படுத்தின. அந்த சமயத்தில் போஃபர்ஸ் ஊழலுக்கு மத்தியிலும் மத்தியில் ராஜீவ் அரசு தொடர்வது நாட்டுக்கு நல்லது என்று சோ விரும்பினார். ராஜீவை எதிர்த்து தனிக் கட்சி துவங்கியிருந்த வி பி சிங்கை ஆரம்பம் முதலாகவே சோ கடுமையாக எதிர்த்து வந்தார். அவரை என்றுமே சோ நம்பியதில்லை. பல தலைவர்கள் மீதான சோவின் அவநம்பிக்கைகளும் எதிர்காலம் குறித்த் அச்சங்களும் சற்று காலம் தாழ்ந்தே மக்கள் உணர ஆரம்பித்தனர். அவர் ஒரு அரசியல் தீர்க்கதரிசி என்பதை மீண்டும் மீண்டும் அவர் நீரூபித்து வந்தார்.
“தமிழகத்தில் கூர்மையான அரசியல் விழிப்புணர்வையும் ஜனநாயக சிந்தனைகளையும் உருவாக்குவதில் பெரும் பங்காற்றிய பிதாமகர் சோ ராமசாமி மறைந்து விட்டார். இந்திய தேசிய உணர்வையும் இந்துமதப் பற்றையும் சமரசமின்றி ஊடகங்களில் வெளிப்படுத்தியவர். நவீன அரசியல் அங்கதத்தின் அரிச்சுவடியைத் தமிழனுக்குக் கற்றுக் கொடுத்தவர். பலதுறைகளில் புலமை பெற்றிருந்த அறிஞராக இருந்தும் சாமானியனுக்கும் புரியும்படியான எளிமையுடன் பேசியும் எழுதியும் தமிழ்ச் சமுதாயத்தின் சிந்தனைத் திறனை மேம்படுத்தியவர். சாணக்கியரும் நாரதரும் வசிஷ்டரும் விதுரரும் இணைந்தது போன்ற ஒரு மகத்தான ஆளுமை. அவரது மறைவுக்கு இதயபூர்வமான அஞ்சலி”.
– ஜடாயு, ஃபேஸ்புக்கில்.
ராஜீவ் ஆட்சிக்கு வந்தவுடன் ஷா பானு வழக்கு வந்தது. இந்திராவின் கொலையினால் ஏற்பட்ட அனுதாப அலையில் ராஜீவின் காங்கிரஸ் கட்சிக்கு 3/4 மெஜாரிட்டி இருந்தது. 1985ம் ஆண்டில் ஷா பானு வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஷா பானுவுக்கு ஆதரவாக ஷரியா சட்டம் செல்லாது என்று தீர்ப்பு அளித்தது. அலகாபாத் கோர்ட் தீர்ப்புக்குப் பின்னால் இந்திரா எமர்ஜென்சி கொண்டு வந்தது போன்ற ஒரு பெரும் தவறை பார்லிமெண்ட்டில் தன் அசுர பலத்தைக் கொண்டு ராஜீவும் செய்தார். இந்திய அரசியல் சட்டத்தில் முஸ்லீம் பெண் திருமண சட்டத்தில் மாற்றம் கொண்டு வந்து இஸ்லாமியப் பெண்களுக்கு ஜூவனாம்சம் வழங்க வேண்டும் என்ற தீர்ப்பை நிராகரித்தார். முஸ்லீம்களுக்கு ஆதரவாக அவர்களின் ஓட்டுக்காக அரசியல் சட்டத்தை அவர் மாற்றத் துணிந்தது இன்னும் இரு பெரும் பூதங்களை உருவாக்கி விட்டது. ஒன்று ராஜீவுக்கு எதிராக மண்டல் கமிஷன் சிபாரிசுகளை அமுல் படுத்தக் கோரி வி.பி.சிங் நாடு முழுவதும் பிற்பட்டவர்களைத் தூண்டி விட்டு ஒரு போராட்டத்தைத் தூண்டினார். அதை எதிர் கொள்ளவும் இந்துக்களின் ஓட்டுக்கள் ஜாதி ரீதியாகப் பிரிவதைத் தடுக்கவும் பாப்ரி கும்முட்ட பிரச்சினையை பி ஜே பி கையில் எடுத்தது. வலுவான மெஜாரிடி இருந்தும் தனது இஸ்லாமிய ஆதரவு அரசியலினாலும் பின்னாளில் பெரும் ஊழல்களை மேற் கொண்டதினாலும் ராஜீவ் செல்வாக்கை இழந்தார். இவை யாவும் 1986 – 89 கால கட்டங்களில் நடந்து கொண்டிருந்தன. மீண்டும் துக்ளக் ராஜீவின் சட்ட திருத்தத்தைக் கடுமையக எதிர்த்தது. முஸ்லீம் திருமண சட்டத்தில் மாற்றம் கொண்டு வந்து இந்துக்களைக் கிள்ளி விட்ட ராஜீவ் ராம ஜன்ம பூமியில் மீண்டும் சிலைகளை வைப்பதை அனுமதித்து அந்தப் பக்கம் தொட்டிலையும் ஆட்டிக் கொண்டிருந்தார்.
இரண்டு முடிவுகளுமே மிகப் பெரும் பிரச்சினைகளை உருவாக்கிக் கொண்டிருந்தன. ஒரு பூகம்பம் வெடிக்கக் காத்திருந்தது. ராஜீவ் மாலத் தீவில் நடந்த ஒரு ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியை இந்திய ராணுவம் கொண்டு அடக்கியதும் அமைதிப் படைகளை இலங்கைக்குள் அனுப்பியதும் புலிகளிடத்தில் அவருக்கு கடும் எதிர்ப்பை உருவாக்கியிருந்தது. இலங்கை அமைதி ஒப்பந்தம், அமைதிப் படையை அனுப்பியது, விமானங்கள் மூலம் தமிழர்கள் பகுதியில் உணவு போட்டது எல்லாம் உருவாக்கியிருந்த ஆரம்ப கால ஆதரவுகளை தமிழ் நாட்டின் பிரிவினைவாத திராவிட இயக்கங்களும் தி மு கவும் கலைத்தனர். ராஜீவின் இலங்கை முடிவுகளை சோ ஆதரித்து வந்தார். தமிழ் நாட்டின் பிரிவினைவாத சக்திகளை அடையாளம் காட்டி வந்தார். மத்தியில் வி பி சிங்கின் அரசியலைக் கடுமையாக எதிர்த்து வந்தார். 89ம் வருட தேர்தலில் ராஜீவ் தோல்வி அடைந்து இந்தியாவில் மீண்டும் ஒரு குழப்பமான சூழல் உருவாகியது. வி பி சிங் என்னும் சதிகாரனின் ஒரு தீய சக்தியின் தலைமையில் ஒரு கூட்டணி ஆட்சி அமைந்தது. இந்தக் காலக் கட்டங்களில் மத்திய அரசியலிலும் சரி மாநில பிரச்சினையிலும் சரி, இலங்கைப் பிரச்சினையிலும் சரி சோ தீவீரமாக செயல் பட்டு வந்தார். மாநிலத்தில் எம் ஜி ஆரின் மறைவு, மத்தியில் ராஜீவின் தோல்வி, வி பி சிங்கின் ஆட்சி என்று இந்தியா மீண்டும் ஒரு பெரும் புயலில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தது. அந்தக் குழப்பமான சூழலில் அரசியல் தெளிவு துக்ளக் மூலமாகவே அளிக்கப் பட்டுக் கொண்டிருந்தது. இந்த சமயங்களில் சோ அவரது உச்சத்தில் செயல் பட்டு வந்தார்.
1989 முதல் 90ம் வருடம் வரை இந்தியா மீண்டும் ஒரு பெரும் சூறாவளியில் சிக்கித் தவித்து வழி தெரியாத குழப்பத்தில் மூழ்கிக் கொண்டிருந்தது. அந்தக் குழம்பிய சூழலில் ஓரளவுக்கு அரசியல் குறித்தும் எதிர்காலம் குறித்தும் தொடர்ந்து தனது துக்ளக் மூலமாக சோ ஒரு தெளிவினை அளித்துக் கொண்டேயிருந்தார். பொருமிக் கொண்டிருந்த அனைத்து எரிமலைகளும் ராஜீவின் அனைத்து தவறுகளின் விளைவுகளும் ஒன்றின் பின் ஒன்றாக வெடிக்க ஆரம்பித்திருந்தன. சோவின் வேலை கூடுதலாகிக் கொண்டே போயிருந்தது. வி பி சிங்கின் சூழ்ச்சியினால் அமுல் படுத்தப் பட்ட ரிசர்வேஷனும், ராஜீவின் ஓட்டு ஆசையினால் ஷா பானு வழக்கினால் செய்யப் பட்ட சட்ட திருத்தமும் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கைக்க்கு உயிர் ஊட்டின. இவை எல்லாமே 89-91க்குள் கனன்று வெடித்தன. வி பி சிங்கின் சூழ்ச்சிகளைக் கண்டு பொறுக்காத பா ஜ க அவரது அரசுக்கான ஆதரவை வாபஸ் வாங்கியது. ராஜீவ் காங்கிரஸ் ஆதரவுடன் சந்திரசேகர் தலைமையிலான அரசு உருவானது. வி பி சிங்கின் பிரிவினைவாத அரசியலைக் கடுமையாக எதிர்த்து வந்த சோ சந்திரசேகர் தலைமையிலான அரசு உருவாவதில் உதவினார். சந்திரசேகர் சோவின் நண்பருமாவார். ராஜீவும் அந்தக் குழப்பமான சூழலில் சோவின் கருத்துக்களுக்கு செவி மடுத்தார். தமிழ் நாட்டில் எம் ஜி ஆர் மறைவுக்குப் பின்னர் நடந்த தேர்தலில் ஜெயலலிதாவும் ஜானகியும் பிரிந்து நிற்க மீண்டும் தி மு க ஆட்சிக்கு வந்தது. பல வருடங்களுக்குப் பின்னால் ஆட்சியை ருசிக்கும் கருணாநிதி பழைய ஊழல்களைத் தொடர்ந்தார். தமிழ் நாட்டை புலிகளிடம் அடகு வைத்தார். தமிழ் நாடு மற்றொரு காஷ்மீராகும் சூழலை அடைந்து கொண்டிருந்தது. சோ அதை மிகத் தீவீரமாக எதிர்த்து வந்தார். இந்தியாவின் ஒற்றுமைக்காக கருணாநிதி அரசு கலைக்கப் பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அந்த சமயத்தில்தான் தொடர்ந்து பல பயங்கரமான சம்பவங்கள் நடந்தன.
(தொடரும்)
1975ல் சோவின் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம். இதில் சோவும் ஜெயலலிதாவும் பிரதான கதாபாத்திரங்களாக நடித்தனர்.
1975ல் சோவின் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம். இதில் சோவும் ஜெயலலிதாவும் பிரதான கதாபாத்திரங்களாக நடித்தனர்.

Thursday, 29 July 2021

CINEMA AND TAMILNADU POLITICS

 


CINEMA AND TAMILNADU POLITICS

##எட்வர்டு மைபிரிட்ஸ் 1830-ல் அசைவுகளைப் படமாக்கினார். அதன் தொடர்ச்சியாகப் படச் சுருளை உருவாக்கினார் ஈஸ்ட்மென். படக் கருவியை உண்டாக்கினார் தாமஸ் ஆல்வா எடிசன். இப்படி மூவர் கூடிப் பெற்ற குழந்தையாய் சினிமா பிறந்தபோது உலகம் அறிந்திருக்காது, அத்தனை கலைகளையும் உள்ளிழுக்கப்போகும் ஆக்டோபஸ் கலை அதுவென்று. 1897-ல் சென்னை விக்டோரியா ஹாலில், தமிழர்கள் அதுவரை காணாத ஒரு கருவியினால் ‘அரைவல் ஆஃப் தி டிரெயின்’ (Arrival of the Train) படத்தை எட்வர்ட்ஸ் அறிமுகப்படுத்தியபோது, திகைப்பில் ஆழ்ந்த தமிழர்கள் அறிந்திருக்க மாட்டார்கள், அந்தக் கருவிக்குள் கருவாகித்தான் ஐந்து முதலமைச்சர்கள் தமிழகத்தை ஆளப்போகிறார்கள் என்று.
மெளன யுகம் முடிந்து பேசும் படம் பிறந்தபோது தமிழ் சினிமா பாடும் படமாகவே இருந்தது. தமிழின் முதல் பேசும் படமான ‘காளிதாஸ்’ 1931-ல் வெளிவந்தபோது அதில் 50 பாடல்கள் இடம்பெற்றிருந்தன. 1934-ல் வெளிவந்த ‘பவளக்கொடி’யிலும் 50 பாடல்கள். ‘சீதா கல்யாணம்’ படத்தில் பாடல்களின் எண்ணிக்கை 22. 1936-ல் வெளிவந்த ‘நவீன சாரங்கதாரா’வில் 41. 1944-ல் ‘ஹரிதாஸ்’ 20 பாடல்களோடு வெளியானது. நடிகர்களே பாடகர்களாகவும் பாடகர்களே நடிகர்களாகவும் இயங்கிவந்த மேடை நாடகங்கள் திரைப்படத் தேரேறியபோதும் பாடல்கள் என்ற பண்ட மூட்டைகளை விட்டெறியவோ குறைத்துக்கொள்ளவோ முடியவில்லை. பாடல்கள் பெரும்பாலும் சம்ஸ்கிருதம் கொண்டே சமைக்கப்பட்டன.



வெண்பொங்கலில் காணக் கிடைக்கும் மிளகுபோல சம்ஸ்கிருதத்துக்கு மத்தியில் தமிழ்ச் சொற்களும் ஆங்காங்கே தட்டுப்பட்டன. ‘வதனமே சந்த்ர பிம்பமோ - வசந்த ருது மன மோஹனமே - என் ஜீவப்ரியே ஷியாமளே - சாரசம் வசீகர கண்கள்’ என்றெல்லாம் இசைத்தன. வசனங்களிலோ பிராமண மொழியும் மணிப்பிரவாளமும் பின்னிப் பின்னிக் கொஞ்சிக் குலாவின.
எல்லிஸ் ஆர். டங்கன் இயக்கி 1940-ல் வெளிவந்த ‘சகுந்தலை’ படத்தில் அரசன் துஷ்யந்தனும் தோழனும் பேசிக்கொள்கிறார்கள்:
துஷ்யந்தன்: “ஒருபக்கம் ரிஷிகள் ஆக்ஞை; இன்னொரு பக்கம் தாயாரின் ஆக்ஞை. இரண்டும் முக்கியமான விஷயம். நேக்கு என்ன பண்றதுன்னுதெரியல...”
தோழன்: “நேக்கு ஒண்ணு தோண்றது. ஆஸ்ரமத்துக்கும் அரண்மனைக்கும் நடுவுல உக்காந்திருங்கோ” - இப்படி சத்திரிய மொழியும் பிராமண மொழியாகவே பேசப்பட்டது. உள்ளடக்கமெல்லாம் இதிகாசம் - புராணம். பேசும் மொழியெல்லாம் பெரும்பாலும் மணிப்பிரவாளம். இந்த நடையை உடைத்து, ஒரு மாற்றுமொழிக்குத் தோற்றுவாய் செய்தவர் இளங்கோவன் என்கிற செங்கல்பட்டு தணிகாசலம்.
1937-ல் வெளிவந்த ‘அம்பிகாபதி’, 1942-ல் வெளிவந்த ‘கண்ணகி’ இரண்டும் திரைத் தமிழை இளங்கோவன் நடைமாற்றம் செய்ததற்கான சாகாத சான்றுகளாகும். ஆனால், இளங்கோவனை விட, டி.வி.சாரியை விட, ‘கவியின் கனவு’ எழுதிய எஸ்.டி.சுந்தரத்தை விட, 1945-ல் வசனம் எழுதவந்த பாரதிதாசனை விட, ‘அமரகவி’க்கு வசனம் எழுதிய சுரதாவை விட, ‘வால்மீகி’க்கு வசனம் எழுதிய ஏ.எஸ்.ஏ.சாமியை விட அண்ணாவும் கருணாநிதியும் திரைத் தமிழில் எட்டாத உயரத்தை எட்டினார்களே!
ஏது காரணம்?
நடைமாற்றம் செய்தவர் இளங்கோவன். சமூகத்தையே மடைமாற்றம் செய்தவர்கள் அண்ணாவும் கருணாநிதியும்.
திரைத் துறையில் பழைய உள்ளடக்கங்களோடு பயணப்படுவது என்பது பிணத்துக்கு ரத்த தானம் செய்வது என்று புரிந்துகொண்டவர்கள், நிகழ்காலத்தின் மீது நெருப்பிட்டார்கள். பகுத்தறிவு மாட்சிக்கு, மூடநம்பிக்கை வீழ்ச்சிக்கு, இனமொழி மீட்சிக்கு, சுயமரியாதையின் ஆட்சிக்கு அவர்கள் திரைக் கலையைப் பயன்படுத்தியபோது ஒரு கற்பூர மலையில் தீப்பந்தம் எறிந்ததுபோல் நாடே பற்றி எரிந்தது.
அண்ணாவை விடப் பதினைந்து வயது இளையவர் கருணாநிதி எனினும், திரைத் துறையில் அண்ணாவை விடவும் அவர் இரண்டு வயது மூத்தவர். அண்ணாவின் முதல் படம் ‘நல்லதம்பி’ வெளிவந்தது 1949 பிப்ரவரி 4. அடுத்த மூன்று வாரங்களில் - பிப்ரவரி 25-ல் - ‘வேலைக்காரி’ வெளியானது. ஆனால், எம்.ஜி. ராமச்சந்தர் கதாநாயகன் என்றும், உதவி ஆசிரியர் மு.கருணாநிதி என்றும் எழுத்துகளைச் சுமந்த ‘ராஜகுமாரி’ அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே வெளிவந்துவிட்டது. கருணாநிதியின் பெயர் இடம்பெறாமலே வெளியான ‘அபிமன்யு’வில் இடம்பெற்ற ‘உடைந்த வாளேனும் ஒரு வாள் கொடுங்கள்’ என்ற நட்சத்திர வாக்கியமே “யாரய்யா இதை எழுதியது?” என்ற பேச்சை உருவாக்கிவிட்டிருந்தது.

திராவிடர் கழகம் உருவான 1944-க்கும் திமுக உருவான 1949-க்கும் இடைப்பட்ட ஐந்து ஆண்டுகளில் திரைத் துறையில் தன் அழுத்தமான சுவடுகளைப் பதிக்கத் தொடங்கிவிடுகிறார் கருணாநிதி. முதல் படத்துக்கு வசனம் தீட்டும்போது அவரது வயது 23. பயமறியாத வயது; தமிழின் நயமறிந்த மனது. திராவிடர் கழகம் அவர் கைகளில் ஒரு தீப்பிடித்த பேனாவைத் திணிக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஏறுமுகம் அந்தத் தீயின் மீது நெய் மழை பெய்கிறது. எரிகிறது; பற்றி எரிகிறது. மடமை எரிகிறது; மூடநம்பிக்கை எரிகிறது; வருணாசிரமம் எரிகிறது; சூழ்ச்சி எரிகிறது; ஆட்சி எரிகிறது; யுகக் குப்பை எரிகிறது; ஒடுக்கப்பட்டவர் மீது ஆண்டாண்டு காலம் செலுத்தப்பட்ட ஆதிக்கம் எரிகிறது; இடதுசாரிச் சிந்தனைகளால் அநியாயத்தின் அடிப்படை எரிகிறது. வற்றிக் கிடந்த வாழைத்தண்டு மனங்களிலும் லட்சியம் எரிகிறது.
அவர் எழுதிய சரித்திரப் படங்களிலும் சமூகமே பேசப்பட்டது. 1950-ல் அவர் வசனம் எழுதிய ‘மருதநாட்டு இளவரசி’யில் பலிபீடத்தின் முன்னே கடைசி வசனம் பேசுகிறார் காண்டீபனாகிய எம்.ஜி.ராமச்சந்தர்: “நீதியின் நிலைக்களமாய், நேர்மையின் உலைக்களமாய் வாழ்ந்த வண்டமிழ் வளநாடே!
நீ, சூதர்களின் உறைவிடமாய், சூழ்ச்சியின் இருப்பிடமாய் ஆனது ஏன்? இந்த மண்ணிலேதான் பிறந்தேன்! இந்த மண்ணிலேதான் மழலை மொழி பேசித் தவழ்ந்து விளையாடினேன்! இந்த மண்ணிலேதான் சவமாகச் சாயப்போகிறேன். வந்தாரை வாழ வைக்கும் இந்த மண்ணில் சொந்த நாட்டுக்காரன் அநியாயமாகச் சாவதா? குற்றமற்றவன் சாவதா?”
இறந்த காலத்தில் பேசப்பட்ட இந்த வசனம், நிகழ் காலத்தின் நெற்றி சுட்டது. “சிங்கத் திருநாடே நீ சிலந்திக் கூடாக மாறியது எப்போது? வந்தாரை வாழ வைக்கும் வளமிகு தமிழகமே நீ சொந்த நாட்டானையே சுரண்டுவது எத்தனை நாட்களாக?” என்று ‘பராசக்தி’யில் அறிமுகமான கணேசனின் காந்தக் குரலில் அக்கால அரசியல் நிர்வாணமாய் நிறுத்தப்பட்டுத் தோலுரிக்கப்பட்டது.
முன்னோடிகளின் உரையாடலுக்கும் கருணாநிதியின் உரையாடலுக்கும் என்ன வேறுபாடு என்று எண்ணிக் கிடந்தேன். ஏனையோர் எழுத்துகளெல்லாம் திரையோடு தேய்ந்தழிகின்றது; கருணாநிதியின் உரையாடலோ திரையைக் கிழித்தெறிந்து தெருவுக்கு வந்து விழுகிறது. அவர் மேடையின் உரையாடலும் திரையின் கலையாடலும் ஒன்றுக்கொன்று உறவு கொண்டிருந்ததால், கலை வேறு.. கட்சி வேறு என்றாகாதபடி இரண்டையும் ஒன்றென்று கொண்டான் கழகத்தின் இளந்தொண்டன்.
கதை வசனகர்த்தாவுக்கென்று ஒரு தனி அடையாளத்தை உருவாக்கினார் கருணாநிதி. அவரது திரை மதிப்பு உயர்ந்தது. ‘மருதநாட்டு இளவரசி’ வசனப் புத்தகத்தின் விலை 3 அணா. ‘மந்திரி குமாரி’ 4 அணா. ‘பராசக்தி’ வசனப் புத்தகத்தின் விலை 1 ரூபா என்பதே அவரது சந்தை மதிப்புக்கான சாட்சியாகும். பாடல்களை இசைத் தட்டுக்களாய்க் கேட்ட தமிழர்கள், வசனத்தை இசைத் தட்டுகளில் கேட்கும் புதிய கலாசாரத்தைத் தொடங்கிவைத்தவர் கருணாநிதி. “கோவிலிலே குழப்பம் விளைவித்தேன்.. கோவில் கூடாது என்பதற்காக அல்ல; கோவில் கொடியவரின் கூடாரமாய் இருக்கக் கூடாது என்பதற்காக’, ‘பூசாரியைத் தாக்கினேன்.. அவன் பக்தன் என்பதற்காக அல்ல. பக்தி பகல் வேஷமாகிவிட்டதைக் கண்டிப்பதற்காக” என்று தீப்பிடித்த வார்த்தைகளும்... “அம்பாள் எந்தக் காலத்திலடா பேசினாள்? அறிவு கெட்டவனே” என்ற அமில வாக்கியமும், “இட்லி சுட்டு விற்பதுதானே தமிழ்நாட்டிலே தாலி அறுந்தவர்களுக்கெல்லாம் தாசில் உத்தியோகம்” என்ற கண்ணீர் கொப்பளிக்கும் சொல்லாடல்களும் நீதிமொழிகள் பேசப்பட்ட தமிழ்நாட்டில் வீதிமொழிகளாய்ப் பேசப்பட்டன.
படத்துக்கு எழுதிய வசனம் பழமொழியாயிற்று. “பராசக்தி வசனத்துக்கு உங்களுக்கு வந்த உயர்ந்தபட்சப் பாராட்டு எது?” என்று கேட்டேன் கருணாநிதியிடம்.
“பக்கத்தில் உட்கார்ந்து படம் பார்த்த கண்ணதாசன் சொன்னது” என்றார்.
“என்னது?” என்றேன்.
“போய்யா! ஒம்மப் பாத்தா ரொம்பப் பொறாமையா இருக்கு.”
இங்கே பொறாமைக்குப் பொருள் பொறாமை அன்று!
கருணாநிதிக்குள் மிக அழகான ஒரு கவிஞரும் உண்டு. 1950-ல் தமது 26-வது வயதில் ‘மந்திரி குமாரி’யில் அவர் எழுதிய ஒரு காதல் உரையாடல் இது.
ஜீவரேகா: நேற்றிரவு நீங்கள் வராததால் என்னால் பெளர்ணமியின் அழகையே ரசிக்க முடியவி்ல்லை...
வீரமோகன்: எதற்கெடுத்தாலும் நிலவுதான். ஏன்? அமாவாசை அழகாயில்லை?
ஜீவரேகா: நீங்கள் இருட்டைக்கூட ரசிப்பீர்களா? (இங்கே வினைப்படுகிறது கலைஞரின் கவிதைக் குறும்பு).
வீரமோகன்: ஆம்! சித்திரத்தை அழகுபடுத்தும் நிழல்கோடுபோல, உன் கண்ணின் கடைக்கூட்டில், கனி இதழின் ஓரத்தில், கன்னத்துச் சரிவுகளில் ஒளிந்துகொண்டிருக்கும் இருளை நான் ரசிக்கிறேன் ஜீவா...
கவிதைகளைப் புறமுதுகிடச் செய்யும் வசனமல்லவா இது!
கருணாநிதியிடம் உள்ள தீர்க்க சிந்தனை என்னை எப்போதும் வியக்கச் செய்கிறது. 1950-களில் தமிழ்நாட்டின் மக்கள்தொகை 3.1 கோடி. அதில் கற்றவர்களின் விகிதாசாரம் 20.8%. பாரதி காலத்தில் பாமரராய், விலங்குகளாய்க் கிடந்தவர்கள் - கருணாநிதி காலத்தில் பொட்டுப்பூச்சிகளாய், புன்மைத் தேரைகளாய் இருந்தார்கள் என்று சொல்லலாம். இந்தக் கூட்டத்துக்கு இலக்கணத்தின் அருந்தமிழும் இலக்கியத்தின் பெரும்பொருளும் புரியுமா என்றெல்லாம் கருதாமல், புரிந்துகொள்வார்கள் அல்லது புரிந்துகொள்ளட்டும் என்று அவர் எடுத்த இலக்கிய முடிவு அற்புதமானது!
“எகிப்தியப் பேரழகி கிளியோபாட்ரா தமிழ்நாட்டு முத்துக்களைச் சாராயத்தில் போட்டுக் குடித்தாளாம்” - இது ‘பராசக்தி’.
“மிருக ஜாதியில் புலி மானைக் கொல்லுகிறது. மனித ஜாதியில் மான் புலியைக் கொல்லுகிறது” - இது ‘மருதநாட்டு இளவரசி’.
“வேலின் கூர்மையைச் சோதித்த விரல்கள் வஞ்சகியின் விரலை அல்லவா ரசித்துக்கொண்டிருக்கின்றன!” - இது ‘மனோகரா’.
“மனச்சாட்சி உறங்கும்போது மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்பிவிடுகிறது” - இது ‘பூம்புகார்’.
“அவள் அழகை வர்ணிக்க ஆயிரம் நாவு படைத்த ஆதிசேசன்கூட கம்பனிடம் ஒன்றிரண்டு கடன் வாங்க வேண்டும்” - இது ‘புதுமைப்பித்தன்’.
இப்படி கொட்டகைக்குள் கருணாநிதி கொட்டிய கோமேதகங்கள் பலப் பல!
என் பார்வையில் திரைத் துறையில் கருணாநிதியின் தீராத சாதனை இதுதான். தமிழர் இருந்த பள்ளத்துக்குத் தமிழைத் தாழ்த்தாமல், தமிழ் இருந்த உயரத்துக்குத் தமிழரை உயர்த்தியது.
ஒரு குறிப்பிட்ட கால எல்லை வரை கலைத் துறை என்பது கழகத்தை வளர்க்கும் அரசியல் மேடையாகப் பயன்படுத்தப்பட்டது. திராவிட முன்னேற்றக் கழகத்தில் தீவிரமாக இருந்தபோது, கவிஞர் கண்ணதாசன் தான் எழுதிய ஒரு பாடலில் கழகத்தின் முன்னணி ஏடுகளைப் பட்டியலிட்டார். திராவிட இயக்கத்துக்கென்று 375 ஏடுகள் தோன்றி வளர்ந்ததாக ஒரு இதழியல் குறிப்பு சொல்கிறது.
அண்ணாவின் ‘திராவிட நாடு’, ‘நம்நாடு’, நெடுஞ்செழியனின் ‘மன்றம்’, கருணாநிதியின் ‘முரசொலி’, கண்ணதாசனின் ‘தென்றல்’ போன்றவை திராவிட இயக்கங்களின் லட்சியம் பரப்பிய இதழ்களில் சில. இந்த ஏடுகளையெல்லாம் தன் பாடலில் ஒரு சரணத்தில் நுழைத்தார் கண்ணதாசன்.
“மன்றம் மலரும் முரசொலி கேட்கும்
வளர்ந்திடும் நம்நாடு - இளம்
தென்றல் தவழும் தீந்தமிழ் கேட்கும்
திராவிடத் திருநாடு!”
ஆனால், ‘சேரன் செங்குட்டுவன்’ ஓரங்க நாடக வசனத்தில் கலைஞர் செய்த தொண்டு இயக்கத் தலைவர்களுக்கே கிரீடம் சூட்டியது. அண்ணா, நெடுஞ்செழியன், ஆசைத்தம்பி, பி.எஸ்.இளங்கோ, கண்ணதாசன், என்.எஸ்.கிருஷ்ணன், திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரை முதன்முதலில் அறிஞர் அண்ணா எழுதுவதற்குத் தன் தாளைத் தந்தவர் என்று கருதப்படுகிற அரங்கண்ணல், இத்தனை தலைவர்களையும் ஒரே பத்தி வசனத்தில் உள்ளடக்கிய சாகசத்தை கருணாநிதியின் தமிழ் நிகழ்த்தியது:
“சிங்கத் திருவிடமே உன்னை இகழ்ந்தார்கள், ஈடற்ற புலவனே இளங்கோ! ஆசைத்தம்பி! உன்னை இகழ்ந்தார்கள், நீதிக்கு உயிர்தந்த பாண்டியனே ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியனே! உன்னை இகழ்ந்தார்கள், அரங்கின் அண்ணலே! உன்னை இகழ்ந்தார்கள், செந்தமிழ் வளங்குறையாச் சிங்க ஏறுகளே! அறிஞரே! கவிஞரே! கலைவாணரே! உம்மையெல்லாம் இகழ்ந்தார்கள். புறப்படுங்கள்! களத்திலே உங்கள் தலைகள் பறிபோகலாம். ஆனால், கனல் கக்கும் கண்களோடு அவை கொய்யப்படட்டும்!”
கருணாநிதியின் கலையும் - அரசியலும் இருப்புப் பாதையின் இணைகோடுகளாய் இயங்கின. படங்களில் நீதிமன்றக் காட்சிகளை நிறையப் புகுத்தினார். அவை வெறும் நீதிமன்றங்கள் அல்ல. தயாரிப்பாளர் செலவில் கருணாநிதி தனக்கு அமைத்துக்கொண்ட சொற்பொழிவு மேடைகள். அந்தப் பாத்திரங்களின் பின்புலத்தில், தோள்களில் துண்டை உரசிப் பேசும் கருணாநிதியையே தமிழ்ச் சமூகம் கண்டு மகிழ்ந்தது. சுதந்திர இந்தியாவில் ஓர் ஊராட்சி ஒன்றியமாய் வடிவமைக்கப்பட்ட தமிழ்நாடு, நிதியிலும் நீதியிலும் புறக்கணிக்கப்பட்டு வந்ததால் ‘வடக்கு வாழ்கிறது.. தெற்கு தேய்கிறது’ என்ற முழக்கத்தை அண்ணா முன்வைத்தார். இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில், தமிழகத்தில் 15 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படுவதாய்ப் பேச்சு. ஆனால், சற்றொப்ப 2லட்சம் பேருக்கு மட்டுமே வாய்ப்புக் கிட்டியது. காரணம் விதி அல்ல; நிதி. அன்று தமிழகம் கேட்டது ரூ. 394 கோடி. டெல்லி ஒதுக்கியதோ ரூ. 200 கோடி. அதில் தொழில் துறைக்கு ஒதுக்கப்பட்டதோ வெறும் ரூ.42 கோடி. தெற்கு தேயுமா தேயாதா?
இந்தப் பேதங்கள் எல்லாம் நீங்க, ஆளும் உரிமையை நாமே பெற வேண்டும் என்றுதான் திராவிட நாடு என்ற கருத்துருவம் உயர்த்திப் பிடிக்கப்பட்டது. இதையெல்லாம் உள்வாங்கிக்கொண்டுதான் காஞ்சித் தலைவனில் கலைஞர் பாட்டெழுதுகிறார்:
“மகிமை கொண்ட மண்ணின் மீது எதிரிகளின் கால்கள் / மலர் பறிப்பதில்லையடா வீரர்களின் கைகள்”
‘பராசக்தி’ படத்தில் பிச்சைக்காரர்களுக்குப் பரிந்தெழுதிய அதே பேனாவில் பிச்சைக்காரர் மறுவாழ்வுத் திட்டத்துக்குக் கையொப்பமிட்ட உரிமை கருணாநிதி என்ற படைப்பாளிக்கும் போராளிக்கும் கிடைத்த வரலாற்றுப் பெருமையாகும். கல்வியிலும் - பொருளாதாரத்திலும் தமிழர்கள் தலையெடுப்பதற்கு முன்பு மானமுள்ள சமுதாயமாய் வாழ வேண்டும் என்பதுதான் திராவிட இயக்கங்களின் உயிர்த் துடிப்பாக இருந்தது. அதற்காகத்தான் பகுத்தறிவு என்ற தத்துவம் தலையெடுத்தது.
ஊரறியாத ஓர் உண்மையைச் சொல்லி இந்தக் கட்டுரையின் கண் சாத்துகிறேன். முதுமையிலும் கலைஞரைப் பேணி வரும் அவரின் அணுக்கத் தொண்டர் நித்யானந்தம் என்னும் நித்யா ஓர் ஆத்திகர். கலைஞர் நலமுற வேண்டுமென்ற நல்லாசையிலும் அவருக்கிருந்த நம்பிக்கையிலும் அழுது தொழுது கலைஞர் நெற்றியில் திருநீறு பூசியிருக்கிறார். சற்று நேரத்தில் திரும்பிப் பார்த்தால் - நெற்றியிருக்கிறது; நீறு இல்லை. துடைக்கப்பட்ட திருநீறு கலைஞரின் கரத்தில் இருக்கிறது. பழுத்த முதுமையிலும் நினைவுகள் சற்றே நழுவும் கணங்களிலும் தான் பெரியார் வழிவந்த மானமிகு தொண்டன் என்பதை மறக்காத அந்தக் கலைஞரைத் தமிழ்நாடு மறக்காது; தலைமுறை மறக்காது!

Sunday, 11 July 2021

KANNADASAN IN POLITICS

 


KANNADASAN IN POLITICS

“அடிக்கடி கட்சி மாறுகிறீர்களே” என்று கவிஞர் கண்ணதாசன் அவர்களிடம் கேட்டபோது, “நான் மாறவில்லை! என் தலைவர்கள் மாறுகிறார்கள்!” என்று சொன்னார். அவருடைய மற்ற அரசியல் அறிவிப்புகளைப்போலவே தமிழகம் இதையும் வேடிக்கையாக எடுத்துக் கொண்டதுதான் வருத்தமான விஷயம்.


தாங்கள் வகுத்த கொள்கைகளிலிருந்து தலைவர்களே முரண்படுகையில் அந்தத் தலைவர்களுடன் கவிஞர் முரண்பட்டார் என்பதுதான் அந்த வாக்குமூலத்தின் பொருள். கவிஞர் கண்ணதாசன் மேற்கொண்ட அரசியல் மதிப்பீடுகளும், மாற்றிக்கொண்ட நிலைப்பாடுகளும் அவசரப்பட்டு எடுத்த முடிவுகள்போல் தோன்றக் கூடும். உணர்ச்சி வேகம் உந்தித் தள்ளி ஒவ்வொரு முடிவையும் அவர் எடுத்தார் என்று கருதுவதில் நியாயமிருக்கிறது. ஆனால் தீர யோசித்தால் அறஞ்சார்ந்த ஆவேசமும், மிகக் கூர்மையான உள்ளுணர்வுகளுமே அவரை அத்தகைய அதிரடி முடிவுகளுக்கு ஆற்றுப்படுத்தின என்று தோன்றுகிறது.


இயக்கங்களின் கோட்பாடுகளுடன் அவர்கொண்ட மோதல் தத்துவ அடிப்படையில் மட்டுமின்றி தனிமனித அடிப்படையிலும் நிகழ்ந்தவை. தாங்கள் பேசிய தத்துவங்களுக்கு, தலைவர்களே உண்மையாக இல்லாதபோது அவர் அவர்களை நேர்படச் சாடினார்.  கவிஞரின் அரசியல் வாழ்க்கை  பற்றிய  வெள்ளைப்பதிவுகள் அவரது  கட்டுரைகளில்  பெருமளவு காணக்கிடைக்கின்றன. மனவாசம், வனவாசம், நான்கண்ட அரசியல்  தலைவர்கள் போன்றவை அவற்றில் குறிப்பிடத்தக்கவை.

அவை ஓரளவு சமநிலையோடும் தர்க்கரீதியான பார்வையோடும் உருவானவை. ஆனால் அலைவீசும் உணர்ச்சி வேகத்தில் அவரது பொதுவாழ்க்கைப்பயணம் சுடச்சுடப் பதிவானதென்னவோ அவருடைய தனிக்கவிதைகளில்தான். அவரது கவிதைத் தொகுதிகளின் அடிப்படையில் பார்ப்பவர்களுக்கு, தத்துவங்களுக்கும் தலைவர்களுக்கும் நடுவே இருந்த முரண்பாடுகளே  கவிஞர்  கால்மாறி ஆடக்காரணம் என்பது தெரியும்.ஆம்.. அரசியல் அம்பலத்தில் கவிஞர் கால்மாறியவரே தவிர பால்மாறியவர் அல்லர்.





கவிஞரின் வாயில் விழுந்து புறப்பட்ட தலைவர்களை நாம் இவ்வாறு வகைப்படுத்திக் கொள்ளலாம். கவிஞரால் முதலில் இகழப்பட்டு, பிறகு புகழப்பட்டவர்கள் ஒருவகை. புகழப்பட்டு பின்னால் இகழப்பட்டவர்கள் இன்னொருவகை. வாழுங்காலம் முழுதும் இகழப்பட்டு மரணத்தின்போதுமட்டும் புகழப்பட்டவர் ஒருவர். கவிதைகளில் புகழ்மொழிகளுக்கு மட்டுமே ஆளானவர் ஒருவர். இதுதவிர  மாறிமாறி சிலரைச் சாடியும் பாராட்டியும் இருக்கிறார். அவர்கள் கவிஞருக்குத் தலைவர்களில்லை. சமகாலத் தோழர்கள்.

முதலில் இகழப்பட்டு பின்னால் புகழப்பட்டவர்,நேரு. தொடக்கத்தில் புகழப்பட்டு பிற்காலத்தில் இகழப்பட்டவர் அண்ணா.வாழும்போது மிகக் கடுமையாய் சாடப்பட்டு, அஞ்சலிக்  கவிதையில்  மட்டுமே  பாராட்டப்பட்டவர்   ராஜாஜி.  கவிதைகளைப் பொறுத்தவரை காமராஜர் பற்றிய புகழ்மொழிகளே பொங்கிப் பிரவகிக்கின்றன. ஆனால்பிற்காலத்தில் சில கட்டுரைகளில் கமராஜரை கவிஞர் விமர்சித்திருக்கிறார். அப்படி  விமர்சித்த இடங்களில் அண்ணாவுடன் ஒப்பிட்டு அண்ணாவின் உயர்குணங்களை  விவரித்திருக்கிறார்.தோழராக விளங்கிய ஈ.வெ.கி.சம்பத் சில கவியரங்கக கவிதைகளில் பாராட்டப்பட்டிருக்கிறார்.ஆனால் எந்த சம்பத்துக்காக அண்ணாவை விட்டு விலகினாரோ,அதே சம்பத்தின் பிற்கால நடவடிக்கைகளை மனவாசத்தில் குறிப்பிட்டு,” ஒருவகையில் சம்பத்தை விட அண்ணா உயர்ந்தவர்” என்று எழுதினார் கவிஞர்.




கலைஞர் அவரது சமகாலத்தோழர். கவிதைகளிலும் கட்டுரைகளிலும் பாராட்டும் விமர்சனமும் கதம்பம் போலக் கலந்தே வருகின்றன. எம்.ஜி.ஆர்.பற்றிய விமர்சனங்கள் கட்டுரைகளிலும்,புனைகதைகளிலும் காணப்பட்டாலும் வாழ்வின் இறுதிக்காலங்களில் எம்.ஜி.ஆரைத் தனது கவிதைகளில் பலவாறு புகழ்கிறார். அதற்கான காரணத்தைத் தமிழகம் அறியும் இந்தப் பின்னணியில் கவிஞரின் கவிதைகளையும்,அவற்றில் ஏற்றியும் இறக்கியும் வைக்கப்படுகிற தலைவர்களையும் பார்ப்பது சுவாரசியமாக இருக்கும்.


தன்னுடைய அரசியல் வாழ்வை திராவிட இயக்கச்சார்போடு தொடங்கிய கவிஞர்,இந்தி எதிர்ப்புக்கவிதைகளில் சன்னதம் கொண்டு சுழன்றாடுகிறார்.  அப்போது அவர் சுழற்றுகிற சாட்டையில் நேருவும் தப்பவில்லை.

“லம்பாடி லம்பாடி லம்பாடிப்பேய்

 தொங்குமொழி ஓசையிலே பிறந்த பாடை(பாஷை)” என்று இந்தியைச் சொல்கிறார் கவிஞர். மேலே போடப்பட்ட கோட்டில் எழுதுகிற எழுத்துக்கள் காரணமாய் இந்தியைத் தொங்குமொழி என்றார் கவிஞர். கோட்டைப்பிடித்துத் தொங்குவதால் இந்தி அவர்   கண்களில்  குரங்காகவும்  தெரிகிறது

“பொன்வீட்டில் குரங்குமொழி-பிறந்த காலம்

புரியாத தமிழ்மொழியோ கொல்லைமேட்டில்

 கண்மூடு தமிழ்மகனே உறங்கு நன்றாய்

கழுத்தறுந்து சாகும்வரை திறக்க வேண்டாம்” என்று  எழுதிய கவிஞர்

பிற்காலத்தில் இந்தப் பார்வையை மாற்றிக் கொள்கிறார். நேரு  இந்தித் திணிப்பை முன்னெடுக்கிறார் என்றதும்“பாதக்குறடெடுத்து பண்டித நேருவை பன்னூறு அடி அடிப்போம்” என்று பாடினார் கவிஞர்.

அப்போது சென்னை வந்த நேருவுக்கு திராவிட இயக்கத்தினர் கறுப்புக்கொடி காட்டினார்கள். அந்த நேரத்தில் நேருவின் முகம் எப்படியிருந்தது என்று கவிஞர் எழுதுகிறார்.


“கருங்குதிரை முகமென்பேனா -சுட்ட

கத்திரிக்காய் முகமென்பேனா” என்று கேலி செய்கிறார்.நேரு என்னதான் ஆணழகனென்றாலும் வந்த இடத்தில் வராதே என்று சொலும்போது முகம் வாடும். கறுத்தும் போகும்.இதைத்தான் சொல்கிறார் கவிஞர்.

ஆனால் 1963 ல் நேரு சென்னை வரும்போது கவிஞர் தேசீய நிரோட்டத்தில் கலக்கிறார்.நேருவை வரவேற்று கவிதை எழுதி அதன்ஆங்கில மொழிபெயர்ப்பை நேருவின் கைகளிலேயே தரும்விதமாய் காட்சிகளை மாற்றுகிறது காலம்.


“எங்கள் தலைவனே!இதயமே வருக!

 இனிய புன்னகைக் கலைஞனே வருக!

 சங்கத் தமிழின் சாரமே வருக!

  தர்ம தேவனின் தூதனே வருக!

கங்கை வெள்ளமே கருணையே வருக!

காந்தி நாயகன் செல்வமே வருக!

சுட்ட போதிலும் மாற்று விடாததோர்

தூய தங்கமே!தாய்மையே வருக!

பூமி முற்றிலும் போர் மறுத்திடும்

புத்த தேவனின் தத்துவம் வருக!

கண்ணில் மணியெனக் காத்த கொள்கையை

மண்ணில் ஊன்றிய மன்னனே வருக!

நாக்கு நீண்டவர் தாக்கும் வேளையும்

போக்கு மாறிடாப் பொறுமையே வருக!”

என்ரெல்லாம் அந்தக் கவிதை நேருவின் பெருமையை நீட்டி முழக்கும் .அதன் மொழிபெயர்ப்பை நேருவிடம் தந்த போது நேரு அதைத்தன்  ஷெர்வானியில்  பத்திரப்படுத்திக் கொண்டார். அவர் கால்களைத் தொட்டு வணங்கினார் கவிஞர்.நேரு மறைந்தபின் அந்த அனுபவத்தை ஒரு கவியரங்கில் கவிஞர் குறிப்பிட்டார்:

“சூடிக் கொடுத்த சுடர்க்கொடிபோல் பாட்டுப்

 பாடிக் கொடுத்தேன்; பண்டிதனின் கால்தொட்டேன்-கன்னியரின்

தோள்தொட்ட போதும் தோன்றாத சுகம்,அன்னான்

கால்தொட்ட போது கண்டேன் களிகூர்ந்தேன்” என்று பரவசப்படுகிறார் இந்த ஆண் ஆண்டாள். நேருவுக்கு அவர் எழுதிய அஞ்சலிக் கவிதைகள், அமரத்துவம் வாய்ந்தவை.அவறைப் பின்னால் காண இருக்கிறோம்.

அண்ணா அவர்களின் உரைகளால் ஈர்க்கப்பட்டு திராவிட இயக்கத்தில் ஈடுபட்டவர் கவிஞர். இன்னா நாற்பது ,இனியவை நாற்பது போல

“அண்ணா நாற்பது”பாடியவர் கவிஞர்.


 (அண்ணா, காமராஜர், கண்ணாதாசன்)

“முகம்பார்த்தே அகங்காணும் மூடாத விழிகள்


  முதலாளி கண்டஞ்சும் நிறங்கண்ட இதழ்கள்

 செகங்கண்டு சிலிர்ப்பேறும் சீரான கைகள்

 தென்னாட்டின் அன்பெல்லாம் துயில்கொள்ளும் நெற்றி

அகம்பற்றி உரைத்தற்கோர் அழகான வார்த்தை

அய்யய்யோ உலகத்தில் இனுந்தோன்றவில்லை

யுகந்தேய்ந்து போனாலும் பெயர்நிற்குமென்றால்

ஒருவர்க்கே அண்ணாவென் றுரைநாற்பதென்ப” என்று பாடினார்.இராமனின் அழகைப்பாட வார்த்தை கிடைக்காத கம்பன் “அய்யோ” என்றான்.கவிஞர் “அய்யய்யோ’என்கிறார்.

 “செம்பொன் மணியாரத்தொடு செல்வம் பலதரலாம்

 தம்பிப்படை யாவும்பல தங்கத் திரள்தரலாம்

 நம்பித்தமிழ் முறைபாடிடும் நலமேநிறை அண்ணன்

 தெம்புக்கது குறைவே அவர் திறனுக்கது சிறிதே” என்றும் பாடினார் கவிஞர்.

அண்ணாவின் சொல்வன்மை,மாற்றுக் கருத்துடையவரையும் பிணிக்க வல்லது. இதைச் சொல்ல ஓர் அருமையான உத்தியைக் கைக்கொள்கிறார் கவிஞர்.பகுத்தரிவு இயக்கத்தால் கடும் சாடலுக்குள்ளான இரண்டு

பிராமணர்கள் அண்ணாவின் பேச்சு பற்றிப் பேசிக்கொள்கிறார்களாம்:

“சாஸ்திரிவாள்!தெரியுமோ?சூத்திரன்தான்

  தமிழினிலே அழகாகப் பேசுகிறான் ஓய்

 நாஸ்திகந்தான் பேசுகிறான் என்றாலும் ஓய்

 நன்னாவே பேசுகிறான்!என்னங்காணும்..

 ஆஸ்திகத்தை அவன்தாக்கும்முறையைப்பார்த்தால்

ஆபத்து தான்காணும் எதிர்காலத்தில்

  வாஸ்தவத்தில் அவன்நல்ல மூளைக்காரன்

  மகதேவன் அவதாரம் என்பார் ஐயர்!”


 (கண்ணதாசன் ஈ.வெ.கி.சம்பத்துடன்)

இப்படி ஆராதிக்கப்பட்ட அண்ணாவை, கடுமையாக  சாடி  பின்னாளில்  கவிதை  படைக்கிறார் கவிஞர்.ஈ.வெ.கி.சம்பத்துடன் இணைந்து  தி.மு.க.விலிருந்து  வெளியேறுகிறார் கவிஞர்.திராவிட நாடு கொள்கையை அண்ணா  கைவிட்டதும் அதைக் கிண்டல் செய்து ஊரூராய்  கவியரங்கம்  நடத்தினார். இதைத்தான் நாங்கள் முன்பே சொன்னோம் என்று ஏகடியம் பேசினார்.”திண்ணையிலே படுத்தாவது திராவிடம் காண்பேனே தாவிர கண்ணதாசன்,சம்பத்தைப்போல் விலகிச்செல்ல மாட்டேன் என்று அண்ணா முன்பு சொன்னார்.அதை நினைவுபடுத்தி..


“சொன்னோம் ஒருநாள்!தூயவரே;அண்ணாவே:

எந்நாள் பிறந்தாலும் இன்பத் திராவிடத்தின்

பொன்னாள் பிறக்காது!பொழுதென்றும் விடியாது!

செத்த பிணத்தைச் சிரந்தூக்கி வலம்வருதல்

 புத்தியுள்ளார் செய்கையல்ல;புதைத்துக் குடமுடைப்போம்

சக்தியுளமட்டும் ஜனநாயக வழியில்

பக்தியுடன் செல்வோம் பாராளும் நிலைபெறுவோம்

கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்

செந்தமிழும் சேர்ந்து திராவிட நாடாவதென்றால்

பட்டப் பகலில் படுத்துறங்குவோன் காணும்

வெட்டிக் கனவு!விட்டுவிட்டு வாருமென்றோம்

முக்கண்ணன் போல முகத்திலொரு கண்திறந்து

அக்கண்ணன் தம்பியரின் அறிவுக்கோர் அண்ணனவன்

திக்கெட்டும் நடுநடுங்க தீயோய் சிறுமதியோய்

திண்ணையிலே காண்பேன் திராவிடநாடென்றானே!

திண்ணையிலே காண்பதற்கு திராவிட நாடென்பதென்ன

தொன்னையிலே நெய்யா?சோற்றுப்புளிக்குழம்பா?

போட்டுப் புரட்டிப் பொழுதை செலவழிக்கும் 

சீட்டு விளையாட்டா சிறுபிள்ளைத் தனமில்லையா.. “

இது, பானை பானையாய் கவிஞர் வடித்த பகடிச்சோற்றின் சில பருக்கைகள் மட்டுமே!! ஆனால் அண்ணா மீது அவருக்கு அந்தரங்கத்தில் தனியான பாசமும், அவரது மேடைத்தமிழில் ஒரு மயக்கமும் கடைசிவரை இருந்தது. காங்கிரஸில் சேர்ந்த பிறகு, 1964ல் அழகப்பா கல்லூரியில் “மறுமலர்ச்சி’ என்றொரு கவியரங்கில் தலைமையேற்றுப் பாடினார் கவிஞர். எவையெல்லாம் மறுமலர்ச்சி என்று பட்டியலிட்டுவிட்டு

“தண்ணார்ந்த பூந்தமிழை மேடைக்கே தந்தவர்யார்?

 அண்ணாதுரை என்றால் அணுவளவும் குற்றமில்லை!

 தட்டுகிறான் தம்பி,அவர் தலைவரென நான்நம்பி

வளர்ந்திருந்த காலத்தை மறக்கவில்லை பாடிவிட்டேன்”  என்று குறிப்பிட்டார்

தமிழ்த்தேசியக்கட்சியை ஈ.வெ.கி.சம்பத்துடன் இணைந்து உருவாக்கியவர்களில்  கவிஞரும் ஒருவர்.திராவிட முன்னேற்றக் கழகத்தைப்

பார்த்து, “தடை எங்கே படை இங்கே இன்று கேட்ட

               தானையிளந் தலைவர்களே நானுரைப்பேன்

                தடை இங்கே படை எங்கே தலைவரெங்கே

                தமிழ்ச்சேனை வெள்ளத்தின் தன்மை எங்கே?

                தொடையின்று நடுங்குவதேன்”        


என்றெல்லாம் எக்காளமிட்டார்.தமிழ்த்தேசியக் கட்சி செம்மையும் நீலமும் கலந்த கொடியொன்றினைக் கொண்டிருந்தது. நிலம் சிவப்பு, கடல்நீலம் என்று அதற்கும் ஒரு விளக்கக் கவிதை எழுதினார் கவிஞர்.தமிழன் மண்ணை செம்மையாக்கினான்.நாவாயேறிக் கடலில் நான்கு திசைகளும் போனான் என்பது கவிஞர் தந்த விளக்கம்.கட்சியின் விளக்கமும் அதுதானா என்று தெரியவில்லை. காலப்போக்கில் கட்சி தடுமாறியது.காங்கிரஸில் இணைந்தது.அங்கே போய்ச் சேர்ந்தபோது கவிஞரின் கவிதைகளுக்குக் கிடைத்த காவிய நாயகனே…காமராஜர்!!

Monday, 12 October 2020

KUSHPOO , ACTRESS POLITICAL HISTORY - DMK TO BJP VIA CONGRESS

 

KUSHPOO , ACTRESS POLITICAL HISTORY 

- DMK TO BJP VIA CONGRESS




`காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பா.ஜ.க-வில் இணையப்போகிறார் குஷ்பு' என்ற வதந்தியை உண்மையாக்கியிருக்கிறார் நடிகை குஷ்பு. திரையுலகிலிருந்து தமிழக அரசியல் வரையிலான அவரது பயணங்கள் குறித்த மீள்பார்வை இந்தக் கட்டுரை. ``காங்கிரஸ் கட்சியில் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை; மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஆனால், ஒரு ட்வீட்டுக்கு 2 ரூபாய் வாங்கிக்கொண்டு, `நான் பா.ஜ.க-வில் சேரப்போவதாக’ச் சிலர் வதந்தி பரப்பிக்கொண்டிருக்கிறார்கள்’’ என்று கடந்த வாரம் டெல்லியில் பேட்டி கொடுத்த குஷ்பு, இப்போது அதே டெல்லியில், பா.ஜ.க-வில் இணைந்திருக்கிறார்.


.

தமிழ்த் திரையுலகில், 80-களின் இறுதியில் இளம் கதாநாயகியாக அறிமுகமான குஷ்பு, 90-களில் முன்னணிக் கதாநாயகியாக வலம்வந்தார். கோயில் கட்டும் அளவுக்கு, கதாநாயகர்களுக்கு ஈடான ரசிகர்களைக்கொண்டிருந்தவர். திரையுலகில் பிரபலமாக இருந்தபோதே, அ.தி.மு.க ஆதரவு தொலைக்காட்சியான ஜெயா டி.வி-யில் 'ஜாக்பாட்' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியதோடு, சின்னத்திரை தொடர்களிலும் பிஸியான நடிகையாக வலம்வந்தார்.இந்த நிலையில்தான், தமிழக அரசியலுக்குள்ளும் காலடி எடுத்துவைக்க நினைத்தார். ஜெயா டி.வி-யில் நிகழ்ச்சித் தொகுப்பு, ஜெயலலிதாவின் துணிச்சலைப் பாராட்டிப் பேசிய பேச்சுகள் என குஷ்புவின் செயல்பாடுகளைவைத்து அவரது அரசியல் ஈர்ப்பை கணித்தவர்கள், `அ.தி.மு.க-வில் இணைவார் குஷ்பு' என்று ஆரூடம் எழுதினர். ஆனால், அவரோ யாருமே எதிர்பாராதவகையில், தடாலடியாக தி.மு.க-வில் தன்னை இணைத்துக்கொண்டார்.

.




அங்கேயும்கூட, 2013-ம் ஆண்டில், கட்சியின் தலைமை குறித்து அவர் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததாகக் கூறி, தி.மு.க தொண்டர்களாலேயே கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இதையடுத்து கட்சியிலிருந்து விலகியவர், 2014-ம் ஆண்டு ராகுல் காந்தி, சோனியா காந்தி முன்னிலையில் தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக்கொண்டார். தமிழ்நாட்டில், அப்போது மாநிலத் தலைவராக பொறுப்பு வகித்துவந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் தீவிர ஆதரவாளராகவும் தன்னைக் காட்டிக்கொண்டார். இந்தநிலையில், தமிழக காங்கிரஸ் தலைவராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்குப் பிறகு பொறுப்பேற்றவர்கள், தன்னைப் பெரிதாக மதிக்கவில்லை என்ற மனக்குறை அவருக்குள் எழ ஆரம்பித்தது. இதை வெளிப்படுத்தும்விதமாக, ``காங்கிரஸ் கட்சியை நம்பி நான் இல்லை'', ``தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியினர் என்னை மதிப்பதில்லை'' என்று தனது அதிருப்திகளை அவ்வப்போது பேட்டியாகக் கொடுத்துவந்தார்.ஆனால், கட்சித் தரப்பிலோ, ``கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்தாலும்கூட, மாநில அளவிலான கட்சிச் செயல்பாடுகளில் அவர் பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை. தேர்தல் சமயங்களில் மட்டுமே தலைகாட்டுகிறார். மக்கள் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான போராட்டக் களங்களில் கலந்துகொள்வதையே தவிர்க்கிறார்'' என்று குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டன. ஆனால், குஷ்புவோ ``ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் முன்னாள் தலைவர் அல்ல... அவர்தான் எந்நாளும் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர்!'' என்றார் அதிரடியாக. மேலும், கட்சிக் கொள்கைகளுக்கு மாறான தனது தனிப்பட்ட கருத்துகளையும் ட்விட்டரில் தொடர்ந்து பதிவிட்டு வந்தார்.



.

`முத்தலாக் முறையால் முஸ்லிம் பெண்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுகிறார்கள். இனியும் அதைப் பொறுத்துக்கொள்ள முடியாது' என்று கூறி `முத்தலாக் தடைச் சட்டத்தை'க் கொண்டுவந்தது மத்திய பா.ஜ.க அரசு. இந்தச் சட்டத்தை காங்கிரஸ் கட்சி மிகக் கடுமையாக எதிர்த்துவந்தபோதும், ``பெண்களின் உரிமையைக் காக்குவிதத்தில், முத்தலாக் முறையில் மாற்றம் கொண்டுவர வேண்டும்'' என்று கூறி முத்தலாக் தடைச் சட்டத்தை ஆதரித்தார் குஷ்பு. இது குறித்து, கடந்த 2017-ம் ஆண்டு விகடன் டிஜிட்டல் தளத்தில், ``முத்தலாக் விவகாரத்தில், காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிரான உங்களது கருத்தில் இப்போதும் உறுதியாக இருக்கிறீர்களா?’’ என்ற கேள்விக்கு பதிலளித்தவர்,``நான் எப்போதும் கட்சிக்கு எதிராகப் பேசியதே கிடையாது. `மாற்றங்கள் வர வேண்டும். அந்த மாற்றங்களும் அந்தந்த மதங்களைச் சார்ந்தவர்களை அழைத்துப் பேசியே கொண்டுவரப்பட வேண்டும்’ என்றுதான் நாங்கள் எல்லோருமே சொல்லிவருகிறோம். இந்த விவகாரத்தைப் பொறுத்தவரையில் ஏற்கெனவே அம்பேத்கர் தனியாக ஒரு சட்டத்தைக் கொண்டுவந்திருக்கிறார். அதாவது, அவரவர் மத நம்பிக்கைகள் சார்ந்து முடிவு எடுக்கக்கூடிய உரிமைகள் மக்களுக்கு இருக்கின்றன. காலங்கள் மாறும்போது, மாற்றங்களும் வரும். அது எந்தவிதமான மாற்றம் என்பதை அவர்கள்தான் முடிவெடுக்க வேண்டும்'' என்றார்.


பா.ஜ.க-வின் அடிப்படைக் கொள்கைகளின் ஒன்றான, `பொது சிவில் சட்டம் சிறுபான்மையினரின் உரிமையைப் பறிக்கும் செயல்' எனக் கூறி எதிர்க்கட்சிகள் ஒருசேர எதிர்ப்பு குரல் எழுப்பிவந்த வேளையிலும், ஆதரவுக் குரல் கொடுத்து அனைவரையும் அதிரவைத்தார் குஷ்பு.

2019 தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சியின் தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்தார் ராகுல் காந்தி. ஆனாலும் `தலைவராக ராகுல் காந்திதான் மீண்டும் பொறுப்பேற்க வேண்டும்' என்ற ஆதரவுக் குரல்கள் கட்சிக்குள் பெரும்பான்மையாக இருந்துவரும் சூழலிலும், ``அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஜோதிராதித்ய சிந்தியா அல்லது சச்சின் பைலட் ஆகிய இருவரில் ஒருவரைத் தேர்ந்தெடுக்கலாம்’' என்று அதிரடியாகக் கருத்து தெரிவித்து கட்சியின் அகில இந்தியத் தலைமையின் வெறுப்பையும் சம்பாதித்தார்.அண்மையில், பா.ஜ.க கொண்டுவந்திருந்த `புதிய கல்விக் கொள்கை'யின் மும்மொழித் திட்டம் தமிழ்நாட்டில் கடும் கொந்தளிப்பு சூழலை உருவாக்கியிருக்கும் நிலையிலும்கூட, புதிய கல்விக் கொள்கை, மும்மொழித் திட்டத்தை வரவேற்று ட்விட்டரில் பதிவிட்டார் வட இந்தியரான குஷ்பு. காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளுக்கு மாறான அவரது கருத்துகள் மாநிலத் தலைமைக்கு கடும் கோபத்தை வரவழைத்தது. `காங்கிரஸில் கருத்து சுதந்திரம் உண்டு. கட்சியின் அமைப்புக்குள் பேசினால் அதற்கு வரவேற்பு உண்டு. வெளியில் பேசினால், அதன் பெயர் முதிர்சியின்மை. விரக்தி, ஒழுக்கமின்மையிலிருந்து வருகிறது. விரக்திக்குச் சிறந்த மருந்து யோகா!' என்று ட்விட்டரிலேயே காரசார பதிலடி கொடுத்தார் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி. ஆனால், இப்படிச் சொந்தக் கட்சிக்குள்ளாகவே அவர் தெரிவித்துவரும் எதிர்க் கருத்துகள் குறித்த கேள்விகள் எழும்போதெல்லாம், `அது என்னுடைய நேரடியான கருத்து இல்லை' என்றோ அல்லது `இது என்னுடைய தனிப்பட்ட கருத்து' என்றோ வார்த்தை ஜாலங்களினால் தன் நிலைப்பாட்டை நியாயப்படுத்திவந்தார் குஷ்பு.



சொந்தக் கட்சிக்குள்ளாகவே கலகக் கருத்துகளை வெளியிட்டுவந்தவர், எதிர்க்கட்சியான பா.ஜ.க-வை விட்டுவைப்பாரா என்ன... பா.ஜ.க-வையும் அதன் தலைவர்களையும் மிகக் கடுமையான வார்த்தைகளால் வதம் செய்தார்.``தாம்பரத்தைத் தாண்டினா தாமரைன்னா என்னன்னு யாருக்கும் தெரியாது'' என்று சில வருடங்களுக்கு முன்னர் கிண்டலடித்தவர், பா.ஜ.க-வின் தேசியச் செயலாளரான ஹெச்.ராஜாவைப் பற்றிக் குறிப்பிடும்போது, ``ஹெச்.ராஜா லெவலுக்குப் பேச வேண்டுமென்றால், பாதாளச் சாக்கடையில் இறங்கி நின்றுதான் பேச வேண்டும்'' என்று நேரடியாகப் போட்டுத் தாக்கியிருந்தார். அண்மையில், ஜூனியர் விகடனுக்கு அவர் அளித்திருந்த பேட்டியில், ``ஹெச்.ராஜாவுக்கு பதில் கொடுப்பது என் கௌரவத்துக்கு இழுக்கு” என்று `கெத்து' காட்டியிருந்தார்.



பிரதமர் நரேந்திர மோடி குறித்துப் பேசும்போது, ``பிரதமர் மோடி, ஆடம்பரமாக 10 லட்சம் ரூபாய் செலவில் ஆடை அணிகிறார்; உலகம் சுற்றும் வாலிபராக இருக்கிறார். மோடி மஸ்தான் வேலை காட்டி, ஆட்சியைப் பிடித்தவர் நரேந்திர மோடி'' என்றெல்லாம் கடந்த காலங்களில், மிகக் கடுமையான வார்த்தைகளில் விளாசியிருக்கிறார் குஷ்பு.இவை எல்லாவற்றுக்கும் மேலாக, இதுநாள்வரை தன்னை ஒரு பகுத்தறிவாளராகக் காட்டிவந்தவர் குஷ்பு. மேலும், `நான் ஒரு பெரியாரிஸ்ட்' என்று வெளிப்படையாகவே அறிவித்துக்கொண்டவர். `பெரியார்' திரைப்படத்தில் மணியம்மை பாத்திரத்தில் தான் நடித்திருந்ததைப் பற்றிப் பேசும்போது, அதைத் தனது திரையுலக வாழ்வின் பெருமையாகக் குறிப்பிட்டிருக்கிறார்.



காங்கிரஸ் கட்சிக்கு எதிரான கருத்துகளை அவர் தெரிவித்தபோதெல்லாம், `பா.ஜ.க-வில் இணைகிறார் குஷ்பு' என்ற செய்திகள் படபடக்கும். ஆனால், `காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளுக்கு மாறாக எனது தனிப்பட்ட கருத்துகளை நான் தெரிவிப்பதாலேயே பா.ஜ.க-வில் நான் இணையப்போவதாக எண்ணிவிடாதீர்கள். அது ஒருபோதும் நடக்காது' என்று திட்டவட்டமாகப் பேசிவந்தவர் குஷ்பு..


இயல்பாகவே முற்போக்குச் சிந்தனைகளைக்கொண்டிருந்த குஷ்பு, இந்துத்துவா அரசியலை முன்னிறுத்தும் பா.ஜ.க-வில் தற்போது அடைக்கலமாகியிருப்பது, பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது.இப்போதும்கூட, 'குஷ்புவின் கணவர் சுந்தர்.சி-க்கு பணப் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. கணவர் கொடுத்த அழுத்தத்தினாலேயே அவர் பா.ஜ.க-வில் இணைந்திருக்கிறார்' என்றெல்லாம் காங்கிரஸ் தலைவர்களே பேச ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால், உண்மை என்னவென்பதை குஷ்புதான் வாய் திறந்து சொல்ல வேண்டும்!


.