Sunday 17 March 2019

வனப்பேச்சி by சித்ரா தேவி






வனப்பேச்சி
Posted on 11/03/2019
 by சித்ரா தேவி

வருசத்துக்கு ஒரு முறை பங்குனி உத்திரத்துக் கோடைக் கொடை விழாவில் தன் சந்ததியை எல்லாம் பார்த்து பரவசம் கொண்டு மேனி சிலிர்த்து உள்ளம் குளிரும் வனப்பேச்சி இடுப்பில் சிவப்பு அரைப்பாவடையும் மேலுக்கு மஞ்சள் சட்டையும் அணிந்து நெற்றிச் சந்தனக்கீற்றில் ரத்தக் குங்குமம் வைத்து கன்னங்களில் சந்தனக் காப்பிட்டபடி உக்கிர விழிகளின் தீட்சண்யத்தைக் குறைத்துக் கொண்டு, அல்லம்பட்டிக் கண்மாய் தாண்டி அடர்ந்திருந்த வனாந்திரத்து ஊடே, ஒற்றைச் சிலையாய் ஆவலோடு காத்திருந்தாள் தன் பிள்ளைகளின் வருகையை எதிர்பார்த்து ……

சிவகாசி – திருவேங்கடம் சாலையில் வழுக்கிக் கொண்டு சென்ற ட்ரவேராவை அப்பா அல்லம்பட்டி ஊரின் மண்சாலைக்கு திருப்பியதும் டொமக் டொமாக் என்று வண்டி குதியாட்டாம் போட்டது. குழந்தைகள் ஓஓஓஓ வென குதியாட்டத்திற்கேற்ப கும்மாளித்தார்கள்.
உள்ளே இருந்த பெரியாத்தா “பேதிலோவான்… ஊருக்கெல்லாம் நல்ல ரோடு போடுதான். இந்த ரோட்டுக்கு மட்டும் என்னைக்குதான் நல்ல காலம் பெறக்குமோ” என்று அங்கலாய்த்தாள்.

பெரியம்மாவும் சித்தியும் அம்மாவும் முகத்தை சுழித்துக் கொண்டு தங்கள் பெருத்த உடலை சமாளிக்க முடியாமல் “யாத்தி எங்கள வேணா இறக்கி விட்டுருங்க சாமி. நாங்க பொடிநடையா நடந்தே வந்திருதோம்..” என்று திக்கித் திணறி சொன்னதில் வார்த்தைகள் துண்டு துண்டாக வந்து விழுந்தது.
“நடக்கவா? .யாரு… நீங்க? அதும் இந்த வெயில்ல… “ நக்கலடித்த அப்பா “ந்தா வந்திருச்சு. ஒரு கா மணி நேரந்தான்.. “ என்று சொல்லியபடி, முடிந்த வரை வண்டியை மெதுவாக அலுங்காமல் குலுங்காமல் செலுத்த முயற்சி செய்தாலும், சாலையின் மேடு பள்ளங்கள் வாகனச்சக்கரங்களின் அழுத்தம் தாங்க முடியாமல் புழுதியும் சிறுகல்லுமாய் சிதறடித்துத் தங்கள் எதிர்ப்பைக் காட்டின.
அல்லம்பட்டி ஊருக்குள் நுழையாமல், கிளைச்சாலை திரும்பி சோலைவனத்துக்கு நடுவே தெரிந்த கோவிலருகே அப்பா வண்டியை நிறுத்தியதும் குழந்தைகள் துள்ளிக் குதித்து இறங்கி, உற்சாகக் கூச்சலோடு கோவில் நோக்கி ஓடினார்கள். அம்மா பெரியம்மா காரின் மறைவில் தங்கள் பட்டுச் சேலைகளை சரி செய்து கொண்டிருக்க அப்பா சித்தப்பாவிடம் “ நூறுகுடிசனம்னுதாண்டா பேரு… இப்ப பாரு பாதிப்பேரு கூட சேர்ந்தாப்ல வர்றதில்ல. நம்ம தலைமுறைக்கப்புறம் நம்ம புள்ளைகளே நம்ம கொடிவேர மறந்திரும் போலயேடா…” என்றார் ஏக்கத்துடன் .
சித்தப்பா சிரித்தார். “காலம் போற வேகத்துக்கு உசுரு பொழைக்கிறதே பெரும்பாடா போன இந்தக் காலத்துல, நின்னு நிதானிச்சுப் போக யாருக்குண்ணே நேரமிருக்கு? பழைய கொத்தில ரெண்டு மூணு குடும்பம்தான் இங்கே தங்கிருச்சு. நம்மள மாதிரி பல பேரு பொழைக்க சென்னை கோவைன்னு பெருவூரா பார்த்து நகர்ந்துட்டோம். கொஞ்சப் பேரு வெளிநாடு போய்ட்டாங்க, எதோ நாமளாவது வருசத்துக்கு ஒரு தடவையாவது வந்து கூடி, குலங்காத்த தாய கும்பிட்டுப் போறோமே.. அத நினைச்சு சந்தோசப் பட்டுக்க வேண்டியதுதாண்ணே. நம்ம புள்ளைகளே நாளைப்பின்னே வருமாங்கறது சந்தேகம்தா“

அப்பா ஆமோதிப்பாய் தலை அசைத்தார். “இருந்தாலும் குடி பொறந்த மண்ணையும், குடிகாத்த ஆத்தாளையும் கும்பிட வருசத்துக்கு ஒரு தடவையாவது நூறுகூடிசனமும் வந்துற வேண்டாமா ? ஏற்பாடு பண்ணனும்டா. அடுத்த வருசத்துக்குள்ளே எல்லாப் பேரையும் தேடிப் பிடிச்சாவது கொண்டாந்து அம்மாளுக்கு பெருந்திருழா ஒன்னு நடத்திப்போடனும்டா பாண்டி.. என்றவர் பின்னால் திரும்பி “ஏ ராசு…அந்த தண்ணிக்கேனை தூக்கிட்டு வந்திருல..” என்றபடி, வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு கோவிலை நோக்கி நடந்தார்கள் அண்ணனும் தம்பியுமாய்.
இதற்குள் நூறுகூடிசனத்தில் ஊரிலேயே தங்கி விட்ட பெரும்பூட்டி கைகம்பை ஊணிக்கொண்டு தட்டுத் தடுமாறி எதிரே வந்து விட்டாள்.

“யய்யா.. முத்துராசு .. வந்துடிட்டியாயா.. என் தலைச்சன் வாரிசு தங்கம்ல நீ?நல்லாருக்கியாயா.” அப்பாவின் உடல் பூராவும் தன் நடுங்கிய கைகளால் தடவி இழுத்து, கன்னத்தில் முத்தமிட்ட கிழவியையும், அவள் கைக்குள் தன் பெருத்த உடலைக் குழந்தை போல குழைத்துக் கொண்டு ஒடுங்கிச் சிரித்த அப்பாவையும் பார்க்கையில் தாயின் கைகளுக்குள் புரளும் சின்னஞ்சிறு குழந்தையைப் பார்ப்பது போல அதிசயித்துப் பார்த்தபடி நின்ற என்னை அங்கிருந்தே கை காட்டி அழைத்தார் அப்பா.
“ வாத்தா …பேச்சி… வந்து அம்மை கால்ல விழுந்து கும்பிட்டுக்கல..”
நான் மெல்ல நடந்து தயக்கமாய் ஆச்சியின் கால் தொட்டேன்.
ஆச்சி தொட்டால் பொடிப்பொடியாய் நொறுங்கி விடுவது போலத்தான் இருந்தாள். தோலெல்லாம் சுருங்கி மூன்றடிக்குள் முதுகு வளைந்திருந்தாள். ஆச்சியை அப்பா சித்தப்பாவும் கைத்தாங்கலாய்த் தாங்கிக் கொள்ள, அப்படியே மெல்ல சரிந்து நடைமேடையில் உட்கார்ந்தவள், என்னை இழுத்து முத்தமிட்டதில் வெற்றிலையும் புகையிலையும் கலந்த வாசம் மூச்சு முட்டியது. கன்னமும் நெற்றியும் எச்சில் பட்டது. அப்பாவுக்குத் தெரியாமல் துடைத்துக் கொண்டேன்.
எனக்கு இதெல்லாம் புதிதாகவும் கூச்சமாகவும் இருந்தது. ஆச்சியின் கைப்பிடிக்குள் இருந்து நழுவ முயன்றேன். வலுவாய் இருந்தது ஆச்சியின் பிடி. மெல்ல நாடி பிடித்து தூக்கி முகத்தையே உற்றுப் பார்த்தாள் ஆச்சி.. சுற்றிலும் அம்மாவைத் தேடி அருகே வரவழைத்து “ உக்காருத்தா.. “ என அம்மாவையும் பக்கத்தில் இருத்திக் கொண்டாள்.
“ஆளாயிட்டாளா ? “ என்று கேட்ட பூட்டியிடம் “ ஒன்பது மாசம் ஆச்சு “என்றாள் அம்மா பூரிப்பாய்.

ஆச்சி என்னையே உற்று உறுத்துப் பார்ப்பது கண்டு எனக்கு வியப்பும் பயமும் கலந்து வந்தது. அம்மாவைப் பார்த்தேன். அம்மா மட்டுமில்லை அம்மத்தா அப்பா சித்தப்பா சித்தி என்று எல்லோருமே பூட்டியின் காலடியில் அன்பால் கனிந்த வாழைப்பழம் போல மிருதுவாகத் தெரிந்தார்கள். அவர்கள் பார்வையில் ஆச்சி என்பவள் மனித உயிர் என்பதையும் தாண்டி பேரன்பும் பெருங்கனிவும் குடிப்பெருமையும் குலத்தின் மூத்த உயிர் என்ற பெருமிதமும் பொங்கி வழிந்து கொண்டிருந்தது.
இது எதையும் கவனிக்காமல் என்னையே பார்த்துக் கொண்டிருந்த ஆச்சி “ என்ன பேருத்தா ? “ என்றாள்.
“ நம்ருதாஸ்ரீ “
ஆச்சி சிரித்தாள். “அது ஊருக்குல்லா.. ஊட்ல அம்மையும் அப்பாவும் உன்ன எப்படி கூப்பிடுதாக? “
“பேச்சி.. “ வனப்பேச்சி “ என்றேன் மெல்லிய குரலில்.
இந்தப் பெயர் சொல்வதில் எனக்கு வெட்கமாக இருக்கும். யாரிடமும் இந்தப் பெயரை சொல்வதில்லை நான். ஆரம்பத்தில் தெரியாமல் பிரெண்ட்ஸ் கிட்ட சொல்லி விட்டேன். பெயரைக் கேட்டதும் வாயைப் பொத்திக் கொண்டு சிரித்தார்கள்…
“வ்வ்வ்வாட் பூச்சியா ?” என்று நக்கலாகக் கேட்ட ஹருணியின் கிண்டலுக்கு மொத்தப் பள்ளியும் சிரித்தது.
கோவிலுக்கு வந்திருந்தவர்கள் உற்சாகமாய் கும்பல் கும்பலாய் அமர்ந்திருக்க .. தம்பிகள் எல்லோரும் தோப்புக்குள் மாங்காய் அடிக்கப் போய்விட்டார்கள்.
கோவில் முன்னே கூடியிருக்கிற எல்லோருமே ஒண்ணுக்குள்ளே ஒண்ணு என்று கொடிகொடியாய்க் கிளைத்து வந்த ஒரே கொடிவழி மக்கள்தான். . நல்லது பொல்லது என்றால் பார்த்துக் கொள்வது போக, பங்குனி உத்திரத்துக்கு வனப்பேச்சியைக் கும்பிட எங்கிருந்தாலும் வந்து ஒண்ணு கூடி விடுவார்கள். விடியல்ல கொடி கால் நாட்டி, கருப்பனின் ஊர்விளாட்டு ஆரம்பிக்கும்.
அதுவரை விடிய விடிய கதைதான். ஊர்க்கதை சொந்தக்கதை எல்லாம் பேசி ஓய்ந்த பின் பூட்டி பழைய ஊர்க்கதைகள் சொல்வாள். குழந்தைகளை எல்லாம் மடியில் கிடத்திக் கொண்டு மொத்த சனமும் ஆர்வமாய் கதை கேட்கும்.
இருநூறு முன்னூறு வருசத்துக்கு முந்திய கதை. வனப்பேச்சி தேவதை ஆன கதை. ஊர்விட்டு ஊர் பிழைக்கப் போனாலும் அல்லும் பகலுமாய் தன் மக்களைக் காத்து நிற்கும் குல தெய்வம் உயிர்ப்பாய் உண்மையாய் ரத்தமும் சதையுமாய் உதிர்ந்து இந்த மண்ணில் புரண்ட உண்மைக் கதை. எத்தனை தடவை கேட்டாலும் நாடி நரம்பு நடுங்க கண்ணில் நீர் வழிய கேட்கப்படும் கதை.
“யாத்தே..எத்தனை வீரமும் வைராக்கியமும் பேச்சிட்ட இருந்திருக்கணும் என்று ஊரே வாய்ப்பரிந்து போகும். தன் குல வீட்டுப் பெண்டுகளின் ரத்தத்தில் வீறிட்டுப் பாயும் ஒரு தன்மானச் சரித்திரத்தின் கதை அது. . ஒட்டு மொத்த நூறு சனக் குடியும் தன் வீட்டு பெண்டுகளையே வனப்பேச்சியாக வரித்துக் கொண்டு மனதுக்குள் கைகூப்பி வெளிச் சொல்லும் கதை.
பூட்டி ஒரு கை வெற்றிலை எடுத்து நரம்பு கீறி சுண்ணாம்பும் பாக்கும் வைத்து மடித்து வாய்க்குள் திணித்துக் கொண்டு விட்டால் கதை சொல்லத் தயாராகி விட்டாள் என்று அர்த்தம். அங்கங்கே நிக்கிற சனம் கூட ஓடி வந்து வாய் பிளந்து காத்திருக்கும் கதை கேட்க.
கதை சொல்லும் போது பூட்டி வேறு மனுசி ஆகி விடுவாள். அமைதியும் தன்மையும் அழகும் கோபமும் வைராக்கியமும் ஆளறுத்துப் போட்ட சீற்றமும் உக்கிரமும்.. அய்ய்யோ..அத்தனையையும் பூட்டியின் முகத்தில் பார்ப்பதே ஒரு பரவசம். அதை பார்க்க வேண்டுமென்றே கீழ் வானத்தில் முழுசாய் நிலா மஞ்சளாய் உருண்டு திரண்டு கதை கேக்க வந்து விடும்.
இப்போது எல்லோரும் பெரும்பூட்டி பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டார்கள். எப்போது அவள் கதையைத் துவங்குவாள் என்று ஆவலுடன் காத்திருந்தார்கள்.
ஆனால் பாட்டி உடனே கதையை ஆரம்பித்து விடவில்லை. அந்தக் கூட்டத்தில் பூட்டியின் கண்கள் என்னைத் தேடியது. மாலை மசங்கும் இருட்டிலும் என்னைப் பார்த்து விட்ட பாட்டி இங்கே வா என்பது போல சைகை காட்டினாள். அப்பாவும் அம்மாவும் என்னை எழுப்பிக் கூட்டிக்கொண்டு பூட்டியின் அணைப்பில் விட்டுவிட்டு பக்கத்திலேயே உட்கார்ந்து கொண்டார்கள்.
பூட்டி சுற்றிலும் உட்கார்ந்திருந்த தன் குடிக்கொத்துகளைப் பார்த்தாள். இருட்டிலும் அவள் கண்கள் நாகப்பாம்பின் மேனி வெளிச்சம் போல் மின்னியது. உடல் தளர்ந்தாலும் இன்னும் சத்தம் உடையாத வலிய குரல் பூட்டிக்கு.
“ஏலேய் எம் மக்கா… யாருக்காச்சும் நம்ம ஆத்தா வனப்பேச்சி எப்படி இருப்பான்னு பார்க்க ஆசையா இருக்கால ? “
கூட்டத்தில் மெல்ல ஒரு சலசலப்பு எழுந்து அடங்கியது. பூட்டி என்னைக் கை பிடித்து எழுப்பி, கைகம்பை ஊன்றி நடுவே எழுந்து நின்றாள். குரல் அதிர்ந்து வெடித்தது. “பாருங்க மக்கா .. நல்லா பார்த்துக்கோங்க. நம்ம நூறுகுடி சனத்தின் குலசாமி இவதாம்ல. இந்தா நிக்காளே இதே மாதிரிதான் அன்னிக்கும் நின்னாளாம் நம்ம ஆத்தா. மேலெல்லாம் மஞ்சப்பூசி பட்டுப் பாவாடையுஞ்சட்டையுமா முழு அலங்காரத்துல ” என்று சன்னதம் வந்தவளாய் அலறி, உடல் நடுங்க நின்றவளைப் பார்த்து கூடியிருந்த சனமே கையெடுத்துக் கும்பிட்டது.
அந்த கும்பிடுகை எனக்கும் சேர்த்துதான் என்று புரிகையில் உள்ளங்காலில் இருந்து ஒரு நடுக்க ரேகை உச்சந்தலை வரை விர்ரென பாய்ந்து இறங்க என்னுடல் மெல்லிதாய் உதற …..கண்ணெதிரே காட்சிகள் கலங்கலாய் மயங்க ஆரம்பிக்க.. “எலேய் எம் மக்கா ….” என்று என் வாயிலிருந்து வார்த்தைகள் என்னையும் அறியாமல் ஆங்காரக் கூச்சலாய் வெளியே வந்து விழுந்தது. பூட்டி வெறி கொண்டு அருள் வந்து கலகலவென சிரித்தாள். பக்கலில் உடுக்கோடு இருந்தவனின் உடுக்கை தூதும் துதும் என அதிர அதிர….
“ கேளுங்க மக்கா. கேளுங்க .. அவ கதைய அவ வாயாலேயே கேக்க நூறு சென்மம் தவமிருந்திருக்கனும் … சொல்லு ஆத்தா… சொல்லு.. உன் புள்ளைக கிட்ட யாரு நீ ? எப்படி தெய்வமானன்னு நீயே சொல்லு “ என்று பிடி நீரெடுத்து முகத்தில் சுளீர் என அடித்தாள். நீட்டப்பட்ட தட்டில் இருந்து திருநீறும் குங்குமமும் கொத்தாய் எடுத்து நெத்தியில் அப்பி விட்டாள். அப்படியே இரு கை உயரே தூக்கி நெடுஞ்சாண்கிடையாக பூட்டி என் காலில் விழுந்த வரைதான் நான் என் நினைவில் இருந்தேன்.
“ வீரவா..எலேய் எந்திரில.. வாயத் திற .. “ ன்னு முத்திருளாயி வீர வளவன் வாயத் திறந்து ஒரு பிடி நாட்டு சக்கரையைத் திணித்தாள்.
தூக்கம் முழுசாய்க் கலையாத வீரவன் “என்னாத்தா கொத்துக்கு போய் திரும்பி வந்து செத்த அசரலாம்னா எழுப்பி விட்டுட்ட “ என்று அலுத்துக் கொண்டான்.
முத்திருளாயி “முட்டாப்பய மவனே..உன் அய்த்த மவ பேச்சி பெரிய மனுசி ஆயிட்டால…மாமன் நீதான குச்சி கட்டணும். ஏழாயிரம்பண்ணை சந்தைக்கு போயி பட்டுச்சீல பழம் வெத்தில பாக்குல்லாம் வாங்கிட்டு வரணும்ல. அடேய் எவ்வள வேல இருக்கு, ஊர் சொல்லி விடணும். பெத்த புள்ளைய கைல குடுத்த கையோட என் மவ சன்னி வந்து போய் சேர்ந்துட்டா. அப்பன்காரன் சேதுக் கோட்டைல குடி காவல் கைதியா கெடக்கான். பொழச்சு வருவானா அங்கேயே பொசுங்கிப் போயிருவானா ? ஆருக்குத் தெரியும். மூஞ்சக் கழுவிட்டு கிளம்புல .. ராசா படம் போட்ட நோட்டுத்தாளும் காசும் அடுக்குப் பானையடில வச்சிருக்கேன். எடுத்துட்டு கிளம்பு. இன்னிக்கே நல்ல நாளா இருக்கு. தலைக்கு தண்ணி ஊத்தி சடங்கு சாத்தி குச்சில்ல உக்கார வச்சிருவோம். “
பதினாறு வயது வீரவன் சன்னல் வழியே பேச்சியைப் பார்த்தான். பேச்சி வீட்டுக்குப் பெறவாசல்ல உலக்கை தாண்டி தலை கவுந்திருந்தாள். இவனை நிமிர்ந்து ஒரு மின்வெட்டுப் பார்வை பார்த்து தலை தாழ்த்திக் கொண்டாள். நேத்து வரை மாமா மாமான்னு கிளித்தட்டு விளாட்டுக்கும் கடிபுளியங்காவுக்கும் தன் பின்னாடி சுத்தி வந்த இவளா ? பிரமித்துப் பார்த்தான். கன்னமும் மேலும் கன்னிமை தளும்ப, கருங்காயாய்ச் செழித்திருந்த பேச்சியைப் பார்த்து மனதுக்குள் குதியாட்டம் போட்டபடி சந்தைக்கு கிளம்பினான் வீர வளவன்.
கொஞ்ச நேரத்தில் வீட்டு வாசலில் “யாத்தே “ என்ற ஊர்சாட்டி சத்தம் கேட்டு வந்த முத்திருளாயி வெளியே வந்து “ என்னப்பே ..காலைலேயே கடன்காரன் மாதிரி வாசல்ல வந்து நிக்க ? என்னவாம் சேதி ?”என்றாள் மதர்ப்பாய்.
ஊர்சாட்டி மென்னு முழுங்கினான். “ க்ராமுன்சீப்தான் இருளாயி வீட்ல விசேசமாம்ல. பூ ஒன்னு பூத்திருக்காம். . சமீன் சீர் குடுத்து உன் பேத்தி சமீன் பிரசாதம் வாங்கி வரணும்ல… “குளியாட்டி சடங்கு சுத்த அப்பனும் ஆத்தாளும் இல்லாத வீடு. சமீன் சீர எப்ப குடுத்தாரட்டும்?” னு கேட்டு உட்டாரு “ என்றான் எனக்கேதும் இதில் சம்பந்தம் இல்லை என்கிற மாதிரி.
இருளாயி விலாவுக்குள் ஈட்டி ஒன்னு இடதுல குத்தி வலதுல வெளி வந்த மாதிரி இருந்தது. “அப்பனாத்தா இல்லனா… அம்மத்தாக்காரி நான் இருக்கேன்.சீர் சாமான் வாங்க அவ மாமங்காரன் சந்தைக்கு போயிருக்கான். எசமான் எங்கள நினைச்சதே பெருசு. அதே போதும். எங்க சத்திக்கு தகுந்தாப்ல …”
முடிக்க விடாமல் மறித்தான் ஊர்சாட்டி. “ என்னாத்தா நூறுகுடிசனத்தோட பழக்கவழக்கம் தெரியாத மாதிரி பேசுற.. குடிக்குள்ள பொண்ணு பூத்தா சமீன் சீர் வாங்கி பொண்ண பத்து நாள் அரமணைக்கு அனுப்பி சமீன் பிரசாதம் வாங்கிட்டு வரணும்கிற மொறம தெரியாதா உனக்கு ? “
“ ஆறு போட்ட சட்டமுல ? சேத்தூர் சமீன்ட்ட உங்க எசமான் மேல நாங்க குடுத்த பிராது தெரியாதோ உனக்கு. அவுக உங்க எசமான கூப்டு வச்சு முதுகோட வச்சுக் குடுத்து விட்டதும் எங்களுக்கு தெரியாதுன்னு நினைச்சியா.. நூறுகுடி சனம்னாலும் அரமனைக்கு வெளியே இருக்கதும் உள்ளே இருக்கதும் ஒரே குடிதாம்ல. அதோட இவ அப்பன் இருந்தான்னா இப்ப உந்தல வேற முண்டம் வேறன்னு இந்த வாசல்ல கிடக்கும்.”
“உங்க சமீனுக்காகத்தான எம் மருமவன் கொத்துக்குப் போய் பிடி ஆளாகி ராம்நாடு கோட்டை செயில்ல கிடக்கான். கவுர்மண்டுக்கு மனு போட்டிருக்கோம். மருவாதியா ஓடிப் போயிரு.. வேல்கம்பால ஒரு ஏந்து ஏந்துனேன்.. குடலு குந்தானில்லாம் வெளில வந்திரும். பார்த்துக்கோ “ என்றபடி சுவரில் சாய்த்திருந்த வேல்கம்பை எடுத்துக் கொண்டு முன்னேறி ஒரு அடி எடுத்து வைத்தாள் முத்திருளாயி.
“யாத்தே… என்கிட்டே ஏன் சண்ட பிடிக்க..? நீயாச்சு சாமி சமீனாச்சு. “ நீ சொன்னத அப்படியே சொல்லிட்டு என் சோலியப் பார்க்க போறேன். எனக்கெதுக்கு உங்கூட்டு வம்பு ..? என்று கள்ளமாக நகர்ந்தான் ஊர்சாட்டி.
அடுத்து என்ன நடக்கும்னு இருளாயிக்கு தெரிஞ்சு போச்சு.
இருளாயி தைரியக்காரிதான். நாலு ஆம்பள வந்தாலும் ஒத்த ஆளா நின்னு கம்பு சுத்தி விழுத்தாட்டிருவாதான். ஆனா இப்ப எதிரி ஊராள் இல்ல. உள்ளாள். அரமனைக்கு வெளியே குச்சு போட்டு சேவுகம் பண்ற குடியாளுக கூட்டம்தேன். ஆனா மருமகன் வீரவத்திரன் அரமனைல கொத்துக்காரனா இருக்கறதால நம்ம பக்கம் திரும்ப மாட்டாங்கன்னு நம்பினது தப்பாப் போச்சு. வீரவத்திரன் இருந்தா அரமனைக்குள்ளே போய் பார்க்க வேண்டிய ஆள பார்த்து குடுக்க வேண்டியது குடுத்து சரிக்கட்டிருவான். என்ன பரம்பர பெரிய சமீன் பரம்பர.. சேத்துரு சிவகிரி பக்கமெல்லாம் இந்த வழக்கத்த ஒழிச்சுக் கட்டிட்டாக. இந்த அல்லம்பட்டியாந்தான் பழைய நினப்புலயே அரிப்பெடுத்து திரியுறான்.
சொல்லப்போனா இந்த சமீந்தாரும் சிவகிரி சமீனோட கொண்டான் கொடுத்தான் சம்பந்தம் உள்ள ஆளுதான். ஆனாலும் இந்த ஒரு கட்ட வச்சு ஊர்ப் பொண்ணுங்களை எல்லாம் ஒரு வாரம் வச்சு பெண்டாண்டு அனுப்பி வைக்கிறதெல்லாம் என்ன குடிப்பிறப்பு ச்சீய்..!
உள்ளே இருந்து அம்மத்தாவையே பார்த்துக் கொண்டிருந்த பேச்சி .. “ அம்மத்தா இங்க வா “ என்றாள். அம்மத்தாவுக்கு தங்கச் சிலையா நிக்கிற பேச்சிய பார்த்து அழுகதான் வந்தது.. “யாத்தா …உங்கப்பன் இல்லாத நேரமா நமக்கு வந்திருக்கிற சோதனையா பார்த்தியாத்தா… “ என்று அரற்றினாள்.
பேச்சி அம்மத்தாவை கூர்மையாய்ப் பார்த்தாள். “எதுக்குத்தா நீ இப்ப அழுவுற ? “
“ஏத்தா எதுக்கு அழுகறேன்னு கேக்காளே என் பேத்தி .. பச்சப் புள்ளைடி நீ இதெல்லாம் ஒரு சடங்குன்னு பெருமை பேசி வரானுவளே..இவனுவள பாம்பு புடுங்காதா ? முழிச்சிருக்க வேலைல கண்ணு வெந்து போகாதா ? “ அர்த்தமற்று அழுத அம்மத்தாவைப் பார்த்த பேச்சி.. “ நம்ம வீட்லதான் புதுசா நடக்குதா இது ? இதுக்கு முன்னாடி நம்ம சனத்துக்குள்ள உக்காந்த மறுநாளே அரமனைக்கு போயி கன்னி கழிஞ்சு வந்த யாருக்காவது அழுதிருக்கியா நீ ? “
“என்னாத்தா சொல்ற ? என் ஊட்டுக்குன்னு வரும்போதுதான எனக்கு வலிக்குது ? என் குலக்கொழுந்துல்லடி நீயு ? “ அம்மத்தா தாங்கமாட்டாமல் அழுது புலம்பினாள்.
வயதுக்கு மீறிப் பேசினாள் பேச்சி. “ஊர்க்கட்டுக்கு ஒத்துத்தான் அம்மத்தா போகணும். எதுத்தா வலுக்கட்டி தூக்கிட்டுதான போவாக. நாம சாதாரண சனங்க.. அது ஆள் அம்பு சேனைன்னு இருக்குற பட்டாளம் “
“ என்ன பெரிய ஆளுகத்தா… வாரிசு இல்லாத சமீனு..அப்படியே வாரிட்டு போக? உங்காத்தா வன்னியடி சாஸ்தா கோவிலுக்கு நடையா நடந்து எட்டு வருஷம் தவமா தவமிருந்து பெத்த புள்ளத்தா நீயு. அந்த வன்னியடி சாஸ்தா பெயரதாம்மா உனக்கு வனப்பேச்சின்னு வச்சது. அந்த அய்யந்தான் உன்னக் காப்பாத்தனும்.“ ..எதோ யோசித்த அம்மத்தா “ இப்பவே கிளம்பி தெம்மலை போயிருவோம்தா. உன் மாமனை அப்பிடியே அங்க வரச் சொல்லிருவோம். இந்த ஊரே நமக்கு வேனாம்தா…” என்று சொல்ல பேச்சி வெறுமையாய்
பேச்சி சிரித்தாள்.
“எதுக்காத்தா சிரிக்க ? “
“வெளியே எதோ சத்தம் கேக்குது …போய் என்னன்னு பாரு ? “
குச்சிலை விட்டு வெளியே வந்து பார்த்த இருளாயி கதறிக் குமுறினாள்.
மவன் வீரவனை தாம்புக் கயிறால் குதிரை பின்னால் கட்டி இழுத்துப் போய்க் கொண்டிருந்தார்கள். உடலெல்லாம் சவுக்கு விளாரலில் ரத்தம் மேலு பூரா வழிந்தது. “ யாத்தே என் புள்ள… “ என்று கையில் கழிகம்புடன் ஓடிய இருளாயியை வேல்கம்பு வைத்திருந்த குடிகாவல்காரன் ஒருத்தன் அடிவயிற்றில் ஓங்கி மிதிக்க தெருப்புழுதியில் மல்லாந்து விழுந்தாள் இருளாயி.
மறித்துப் போட்டிருந்த உலக்கையைத் தாண்டி வெளியே வந்து குச்சில் வாசலில் நின்று அமைதியாய் பார்த்துக் கொண்டிருந்த பேச்சி அரமனைக்கு போவது என்று முடிவு கட்டி அரமனையை தீர்க்கமாய் நோக்கினாள்.
மூணாவது நாளில் வனப்பேச்சியை முழுதாய் அலங்காரம் செய்திருந்தார்கள். சிவப்பு பட்டுப்பாவாடையும் மஞ்சள் ரவிக்கை, நெத்திச் சுட்டி சடையலங்காரம்லாம் செய்து வாசலுக்கு கூட்டி வந்த போது அவள் கண்களில் பேரொளி ஒன்று சுடர் விட்டுக் கொழுந்தென எரிந்து கொண்டிருந்தது.
அம்மத்தாளும் வீரவனும் அழுது அழுது சோர்ந்து போயிருக்க இருவர் காலிலும் விழுந்து வணங்கினாள் பேச்சி. இருளாயி தலையிலடித்துக் கொண்டு அழுதாள். வீரவன் தன் கையாலாகத்தனத்தை எண்ணிக் குமுறி, அப்படியே எழுந்து வேலங்காட்டுக்குள் மேலும் காலும் முள் கிழிக்க ஓடி மறைந்தான்.
தேவதாசிப் பெண்டிர் குலவையிட்டு அழைத்துச் செல்ல பேச்சி சலனமின்றி நேர்ப்பார்வை பார்த்தபடி ராசபிரசாதம் வாங்கப் போகிறவளாய் அரண்மனை நோக்கி தைரியமாய் நடந்தாள்.
……………..
நடுநிசியில் கூகை ஓன்று அலறியது. சமீன் அரண்மனையின் பின்பக்க காட்டில் இருந்து கூட்டமாய் நரிகள் ஊளையிட்டது. தடதடவென்று பந்தங்களில் வெளிச்சங்கள் ஏற்றப்பட்டது. சேத்தூர் சமீனுக்கும் சிவகிரி சமீனுக்கும் செய்தி போய்ச் சேர்ந்து குதிரைப் பட்டாளம் அரமணைக்கு வந்து சேர்ந்து விட்டது.
சமீனின் அந்தப்புரமே ஆள் கொள்ளா அளவுக்கு கூட்டம் கூடிக் கிடந்தது.
சமீன் உடம்பு உதற உதற கதறிக் கொண்டிருந்தார். அவர் அரையைச் சுற்றிக்கட்டியிந்த வெண்பட்டு வேட்டி முழுதும் ரத்தத்தில் நனைந்து சிவந்து கொண்டிருக்க, பேச்சியின் விழிகள் அதை விடவும் ரத்தமாய் சிவந்திருந்தன. சமீன் படுத்திருந்த வெண்பட்டுப்படுக்கையில் ரத்தம் சித்திரமாய் பரவிக் கொண்டிருந்தது.
சேத்தூர் சிவகிரி சமீன்கள் அயர்ந்து போய், பிரமிப்புடன் பேச்சியைப் பார்த்தபடி இருந்தார்கள்.
பேச்சியின் குரல் மணி கொண்டு அடித்தது போல் கணீரென்று அறை முழுதும் கர்ச்சித்தது.
“ சமீன் சாமிகள்லாம் என்னை மன்னிக்கணும். என் மேல தப்பு இருந்தா.. நீங்கல்லாம் எங்கள காக்க வந்த சாமியா எங்க குடிமக்கள் நினைக்கிறாங்க. ஆனா இவரு எங்க குடிப்பெண்டுகளை பெண்டாளவும் எதுத்தா சனங்களை சவுக்கால அடிச்சு சாகடிக்கவும் செய்றாரு. பிறப்பால அரமனைக்கு உள்ள இருக்குற நீங்களும் நாங்களும் ஒரே குடிதான். பாளயப்பட்டுக உங்களுக்கு தந்த பதவியால உசந்த சனங்க நீங்க, அரமனையில் ராசபோகம் பண்றீக. அதே குடிப்பிறந்த எங்காளுக வெளியே உங்களுக்காக காடு வெட்டி களனி பாச்சி ஆடு மாடு மேச்சு காலம் தள்றாக. சில பேரு உங்களுக்குத் தேவைன்னா கொத்துக்கும் போயி பொண்ணு பொருளு கொண்டு வரவுகளும் உண்டு. சமயத்துல பிடிபட்டு செயிலுக்குப் போய் சாகுறதும் உண்டு. உங்கள தெய்வமா பார்க்கற எங்கள நீங்க பதிலுக்கு மனுச சென்மம்னாவது பார்க்க வேண்டாம்?. ராச பிரசாதம்னு சீர் தந்து நீங்க பெண்டாண்டு அனுபவிச்ச பொண்ணு பிள்ளைகள எங்க ஆம்பளக கட்டிக்கிட்டு காலத்துக்கும் குடும்பம் நடத்தனும். இதெல்லாம் எந்த சாத்திரத்தில எழுதி வச்சிருக்கு ராசாக்கமாருகளே…?” அக்கினிச் சீறலாய் உஷ்ணம் கக்கின பேசியின் சீறல்.
சேத்தூர் சமீன் எதோ சொல்ல வாயெடுத்தார். பேச்சி கையிலிருந்த குறுவாளால் நிறுத்தி.. “ இதோ கிடக்காரே இவரு உங்க வம்சந்தானே இவங்கள நீங்க தடுத்திருக்க வேணாமா?. நீங்க தடுக்கல.. அதான் எங்கூரு அல்லம்பட்டி சமீந்தார் இனி எந்தப் பொண்ணையும், ஏன் கட்டுன பொண்டாட்டியவும் இனித் கூடக் தொட முடியாதபடி தண்டனைய நா கொடுத்தேன். “ பேச்சியின் குரலில் சன்னதம் வந்த சாமியின் ஆங்காரம் இருந்தது
இதற்குள் வைத்தியர் வந்து சமீனின் இடுப்புக்குக் கீழே அரைக்குள் கை விட்டு துழாவிப் பார்த்து விட்டு உதட்டைப் பிதுக்கினார். சமீன் கொஞ்சம் கொஞ்சமாக உயிர் பிரிந்து கொண்டிருந்தார். “அத எங்கன்னாவது கேக்க சொல்லுங்க ராசா …பொழைக்க வைக்க முடியுமான்னு பார்ப்போம் ” பரிதாபமாகக் கேட்டார் வைத்தியர்.
“இன்னேரம் நாயோ நரியோ தூக்கிட்டுப் போய் ..தின்னு தீர்த்திருக்கும் ” என்று இகழ்ச்சியாய் வெறி கொண்டவள் போல சிரித்தாள் பேச்சி.
சிவகிரி சமீந்தார் எழுந்தார். தொண்டையைக் கனைத்துக் கொண்டார். “கவர்மண்டும் பாளையப்பட்டுகளும் எங்களை சமீனா பட்டம் கொடுத்து வச்சிருக்கிருக்கிறது நாங்க ராச வாழ்க்கை வாழ மட்டுமல்ல. உங்கள மாதிரி குடிகளை பத்திரமா பாதுகாக்கவும்தான். பலமுறை இவரை கண்டிச்சும் இவர் திருந்தல. அதுனால இன்னிக்கு திகதியிட்டு எங்குடிமக்க உங்க முன்னாடி நான் பிறப்பிக்கிற உத்தரவு என்னன்னா… இப்பவே இந்த சமீன் கலைக்கப்பட்டு சேத்தூர் சிவகிரி சமீனோட இணைக்கப்படுது. அரமணைக்கு வெளியே இருக்குற பேச்சியின் நூறுகுடி சனங்கள் அந்த அரமணைக் கட்டுல இருந்து விடுதலயாவுதாக. அவக விருப்பம் எங்கயோ அங்கே குடியேறிப் பிழைச்சுக்கலாம். அவர்கள் இனி எந்த சமீனுக்கும் கட்டுப்பட்டவக இல்லை….இதை உடனடியா பாளயப்பட்டுக்கும் கவ்ருமெண்டாருக்கும் உடனடியா சேதி சொல்ல இந்த ஷணமே ஆள் அனுப்புறேன்” என்று நிறுத்திய சமீந்தார்..
“ ஒழுக்கமாய் வாழும் தலைவன் குடி கீழே வாழும் சனங்க எந்த குறையும் இல்லாம வாழ்வாங்க..பெருந்தலைக்கட்டு சமீனாவே இருந்தாலும் ஒழுக்கம் தவறி நடந்த இவரு எங்க வம்சத்தாளாவே இருந்தாலும் ஒரு சமீனுக்குண்டான எந்த மரியாதையும் இல்லாமல் அடக்கம் செய்யப்படுவார். இவர நம்ம வழிவந்த எந்த சமீன் எல்லைக்குள்ளும் அடக்கம் செய்யக்கூடாது. சாமானிய குடிக்குண்டான எந்த மருவாதியும் இல்லாமல் இந்த ராத்திரிக்கே இவர் உடல தூக்கிட்டுப் போயி மேலக்காட்டுக்குள்ளே அடையாளம் தெரியாத இடத்துல புதைச்சிட்டு வந்திருங்க . இந்த அரண்மனை இன்னும் ஒரு வாரத்துக்குள் காலி செய்யப்படும். இதிலுள்ள சொத்தும் பணமும் காசும் பாத்திர பண்டங்க எல்லாம் வெளியே குடியிருக்கும் நூறு குடி சனங்களுக்கு பகிர்ந்து கொடுக்கப்படும். ஓலையில் இப்போதே எழுதப்பட்டு இங்கே உங்க முன்னுக்கு நாங்களிருவரும் ஒப்பம் செய்கிறோம் என்று சொல்லிவிட்டு நிமிர்ந்த போது…..
பேச்சியால் பிறப்புறுப்பு அறுக்கப்பட்ட அல்லம்பட்டிசமீன் செத்துப் போயிருந்தார்.
சிவகிரி சமீன் முன்னே அங்கேயே முழந்தாள் மண்டியிட்டு வணங்கிய பேச்சி…
“இது எனக்காக செய்த கொலை இல்லை மகாராஜா… எங்கள் நூறுகுடி சனத்தில நடக்குற இந்த அநியாயம் இனி எந்தப் பெண்ணுக்கும் நடக்கக் கூடாதுன்னுதான் செஞ்சேன். இந்தக் கொலைக்கு நானே பொறுப்பு. அதுனாலபடிக்கு ..” அவள் என்ன செய்கிறாள் என்று யோசிக்கும் முன்பே கையில் இருந்த குறுவாளால் கழுத்தினை ஆழமாகக் கீறிக் கொண்டு சரிந்து விழுந்து ஒரு கணத்துக்குள் உடல் உதற உயிர் அடங்கினாள் வனப்பேச்சி.
பேச்சியின் உயிரற்ற உடலம் பார்த்து கையெடுத்து கும்பிட்டார்கள் சமீனும் கூடியிருந்த குடிபடையும்.
“உங்க குலம் காத்த பேச்சிக்கு எங்க சிலவில் கல்லுக்கோவில் கட்டப்படும். உங்கள் நூறுகூடிசனங்களும் இன்னிக்கு திகதியான பங்குனி உத்திரத்துக்கு வருசந்தோறும் வந்து வழிபட்டுச் செல்ல என்ன சிலவுத் தொகையோ அதை இந்த இரண்டு சமீன்களும் கூட்டாக ஏத்துக் கொள்ளும். இப்போது நூறுகுடிசனங்களிடம் எங்கள் குலக் கோடாரிக் காம்பு செய்த செய்கைக்காக இந்த கன்னி தெய்வத்துகிட்ட முழங்கால் போட்டு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். “ என்றபடி சமீன்கள் இருவரும் வனப்பேச்சி கால்மாட்டில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினார்கள்.
அதிர்ந்து அடித்துத் தூக்கிப் போடப்பட்டவளாக நான் கண் விழித்தேன்.
அங்கே கூடியிருந்த அனைவரின் கண்களிலும் கண்ணீர் தளும்பியிருந்தது. எல்லோரும் இருந்த வாக்கில் என்னை நோக்கி கைகூப்பியபடி இருந்தார்கள். நான் வனப்பேச்சி சிலையைப் பார்க்க..
எல்லோரும் வனப்பேச்சி சிலை நோக்கி கை தொழுதார்கள். அவர்கள் பார்த்த பார்வையில் பயமும் பக்தியும் மரியாதையும் நன்றி உணர்ச்சியும் இருந்தது.
நான் பூட்டியை கேள்வியுடன் பார்த்த்தேன்.
பூட்டி தன் பொக்கை வாயைத் திறந்து என்னைப் பார்த்துக் கும்பிட்டுச் சிரித்தாள். அம்மா அப்பா கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது .
கூடி நின்ற ஊர்ச் சனங்களின் விழிகளில் இருந்தும்…..

No comments:

Post a Comment