Showing posts with label அ.முத்துலிங்கம். Show all posts
Showing posts with label அ.முத்துலிங்கம். Show all posts

Wednesday, 21 March 2018

என்னைத் திருப்பி எடு அ.முத்துலிங்கம்





என்னைத் திருப்பி எடு
அ.முத்துலிங்கம்

ஒரு பேச்சுக்குத்தான் அவன் அப்படிக் கேட்டான். மிதிலாவுக்கு அது பிடிக்கவில்லை. அவள் வழக்கம்போல ஒன்றுமே பேசவில்லை. ஆனால் முகம் வேறு யாருடையவோ முகம் போல நாலு கோணத்தில் மாறிவிட்டது. மேல் கோட்டின் நாலாவது பட்டனை வலது கையால் போட்டுக்கொண்டு, இடது கையால் கைப்பையை தூக்கினாள். அவள் வெளியே போனால் இந்தச் சண்டை முடிவுக்கு வராது. இரண்டு நாள் இப்படியே இழுக்கும்.

அவன் ஒன்றுமே கேட்கக்கூடாது. ஆனால் அவன் பற்றிய விசயம் எல்லாம் அவளுக்குத் தெரியும். ஒரு தடவை அவளிடம் கேட்டான். ‘நீ பல்கலைக்கழகத்தில் என்ன படிக்கிறாய்?’ சாதாரண கேள்விதான். அவளுடன் கடந்த ஆறு மாதகாலம் ரொறொன்ரோ நடு மையத்தில் உயர்ந்து நிற்கும் 21 மாடிக் கட்டடத்தில் ஏழாவது மாடியில் 716ம் எண் வீட்டில்  ஓர் அறையில் இருவரும் ஒன்றாக சேர்ந்து வசிக்கிறார்கள்.
நீ என்ன படிக்கிறாய் என்று அவன் கேட்கக்கூடாதா? அவள் பதில் சொன்னாள். ’தண்ணீரின் ஈரத்தன்மை பற்றி ஆராய்ச்சி செய்கிறேன்.’ அவனை அவள் கேலி செய்கிறாள். அவன் மேல்படிப்பு படிக்காமல் சுப்பர்மார்க்கெட்டில் சாதாரண எடுபிடியாக வேலை செய்வது அவளுக்கு அவமானமாக இருந்தது. அதை இப்படித்தான் அவனுக்கு உணர்த்துவாள். ஆனால் அந்த வீட்டு முழு வாடகையையும் அவன் சம்பளத்தில்தான் கட்டுகிறான். வீட்டுச் செலவுக்கும், உணவுக்கும் மட்டும் அவள் பாதி பணம் தருகிறாள்.

சரி, சமையல் வேலையில் சரிசமமாக இருவரும் பங்கேற்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. அவனுக்குத் தெரிந்த மாதிரி சமைத்து வைப்பான். அவளுக்கு  என்ன மாதிரி உணவு பிடிக்கும் என்று அவனுக்கு எப்படி தெரியும்? தினம் புதிதாக ஏதாவது செய்வான். பழைய உணவு அவனுக்குப் பிடிக்காது. அது மிதிலாவுக்குத் தெரியும். அவனுடைய அம்மா முதல்நாள் சமைத்த உணவை தந்ததற்கு கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு ஓடியவன். ஒரு 19 வயதுப் பையன் வீட்டைவிட்டு வெளியேறுவதற்கு அது போதிய காரணம் இல்லை என்று அவனுக்கு இப்போதுதான் தெரிகிறது.


கதவுக் கைபிடியில் அவள் கையை வைத்துவிட்டாள். முதுகுப்பை முதுகிலே தொங்கியது. ‘நான் இப்ப என்ன சொன்னேனென்று இத்தனை கோபம். பதில் சொல்லிவிட்டு போனால் நல்லது. எப்போவோ வாங்கிய ’பேகிளை’ சிப்லொக் பையில் போட்டு, அதை இன்னொரு சிப்லொக் பையில் போட்டு மீண்டும் இன்னொரு பையில்  மூடி குளிர் பெட்டியில் வைப்பதில் என்ன பிரயோசனம்? இந்தச் சின்னக் கேள்விக்கு பதில் சொல்வதில் என்ன கஷ்டம். எங்கள் சிறிய வருமானத்தில் சிப்லொக் பை விற்பனையை ஏன் கூட்டவேண்டும்?’

அவர்கள் ஆறுமாதமாக ஒன்றாக வாழ்கிறார்கள். முதல் மாதம் அதி இன்பம் தந்த மாதம். அவள் கையை உயர்த்தி சொறிந்தபோதும் ,கொட்டாவி விட்டபோதும், பல் துலக்கியபோதும் அபூர்வ அழகுடன் இருந்தாள். இரண்டாவது மாதம் முதல் சண்டை வந்தது. மூன்றாவது மாதம் மூன்று சண்டை. சண்டை முடிந்து சமாதானம் ஆனபோது பெரிய கொண்டாட்டமாக இருந்தது. நாலாவது மாதம் வாரத்துக்கு இரண்டாக உயர்ந்தது. இப்போதெல்லாம் தினம் தினம் சண்டைதான். அவன் ஏதாவது சொன்னால் அவள் ஏதாவது உடனே சுருக்கென்று சொல்லிவிடுவாள். ஒரு சண்டை  முடிந்து சமாதானம் ஆவதற்கிடையில் இன்னொன்று தொடங்கிவிடும்.

யார் என்ன செய்யவேண்டும் என்று பட்டியல் போட்டுக்கொண்டுதான் ஆரம்பித்தார்கள். அவன் சமையல் செய்வது. அவள் பாத்திரம் கழுவுவது. வீட்டுக் கணக்குகள் பார்ப்பது அவன். சாமான்கள் வாங்குவது  அவன். சலவை  அவள் பொறுப்பு. குப்பை அகற்றுவது  அவன். வீடு துப்புரவாக்குவது அவள். துடைப்பக்கட்டையின்  பத்து பயன்பாடுகளை அவள் கண்டுபிடித்திருக்கிறாள். இப்படி பங்கு போட்டு காரியங்கள் செய்தாலும்  சண்டை வந்தது. இரவில் யார் கடைசியாக விளக்கை அணைப்பது?  யார் சுட்டுப்போன பல்ப்பை மாற்றுவது? யார் பூக்கன்றுக்கு  தண்ணீர் ஊற்றுவது? கதவு மணி அடித்தால் யார் திறப்பது?

கதவைத் திறந்து வெளியே போகுமுன்னர் அவள் தன் செல்பேசியை பார்த்தபடியே சொன்னாள் ’நான் போகிறேன்.’ ’எங்கே?’  ’வெளியேதான்.’ ’திரும்பிவர மாட்டீரா?’ ’இரவு வருவேன். என் சாமான்களை எடுத்துப் போவதற்கு.’ ’நிரந்தரமாகப் பிரிகிறீரா?’ ’நிரந்தரமாகத்தான்.’ ‘மூன்று சிப்லொக் பைகளில் எதற்காக ’பேகிளை’ சேமித்து வைக்கிறீர் என்று கேட்தற்காகவா? இது சரியான காரணமா? தண்ணீரில்தான் ஈரத்தன்மை குறைந்தது என்று நினைத்தேன். உம்முடைய இதயத்திலும்  ஈரத்தன்மை போய்விட்டதா?’ ’இரவு சொல்கிறேன். எட்டு மணிக்கு என்னை கொண்டுபோய் விடவேண்டும்.’ ’ஏன் நான் கொண்டுபோய் விட வேண்டும்? வாடகைக்காரில் போகலாம்தானே.’ ’அது எனக்குத் தெரியாதா? என்னை எங்கே, எந்த இடத்திலிருந்து அழைத்து வந்தீர்களோ அதே இடத்தில் என்னை கொண்டுபோய் இறக்கிவிடவேண்டும்.’ அவன் ஏதோ சொல்வதற்கு வாயை திறந்தான். கதவு படக் என்று சத்தம் செய்து மூடியது. அவனும் மூடினான்.

சுப்பர்மார்க்கெட்டில் அவனுடைய மேலாளரை அவனுக்கு பிடிக்காது. அவருக்கும் அவனைப் பிடிக்காது என்றே நினைத்தான். மனேஜர் பேசத் துடங்கினால் நிறுத்தமாட்டார். வார்த்தைகள் மந்திரக்காரனின் வாயிலிருந்து ரிப்பன் வருவதுபோல நிறுத்தாமல் வந்து  வசனம் நீண்டுகொண்டேயிருக்கும். அவன் ஆச்சரியத்துடன் அவருக்கு ஓர் அடி பின்னால் பார்ப்பான். முற்றுப்புள்ளி இளைக்க இளைக்க அவருக்கு பின்னால் ஓடிவருவது அவன் கண்களுக்கு மட்டுமே தெரியும்.  ஐந்து நட்சத்திர கட்டளைத் தளபதி என்று மனேஜர் தன்னை நினைத்திருந்தார். கேள்விகளை யூகித்து பதில்களை  யோசித்து தயாராக அவன் வைத்திருக்கவேண்டும். மணித்தியாலத்துக்கு அவனுக்கு டொலர் 11.40 சம்பளம். அதனிலும் குறைய அவனுக்கு சம்பளம் தர மனேஜருக்கு விருப்பம்தான். ஆனால் முடியாது. ரொறொன்ரோவில் இதுதான் ஆகக் கடைசியான சட்டம் அனுமதித்த சம்பளம். அவனை ’அரை மூளை’ என்றும் அவர் சமயாசமயங்களில் அழைத்திருக்கிறார். அதையும் சட்டம் அனுமதித்தது.


பழைய கால ஆங்கில பேய்ப்படங்களில் உயரமாக ஒருவர் வருவார். போரிஸ் கார்லொஃவ் என்று பெயர். பல்லுக்கொதி வந்து கன்னம் ஒரு பக்கம் வீங்கினால் போரிஸ் கார்லொஃவ் எப்படி தோற்றமளிப்பாரோ அப்படியே மனேஜர் இருந்தார். இரண்டு வருடகாலமாக அவருடன் வேலை செய்கிறான். இந்த இரண்டு வருடங்களில் நாலு தடவை வீட்டிலிருந்து துப்பாக்கி கொண்டுவந்து அவரை சுட்டுவிடவேண்டும் என்று அவனுக்கு தோன்றியிருக்கிறது. ஆனால் அவன் செய்யவே இல்லை.

அந்த சுப்பர்மார்க்கெட்டில் 12 காசாளர்கள் ஒரே சமயத்தில் வேலை செய்வார்கள். ஒவ்வொரு காசாளர் முன்பும் வண்டில்களுடன் நிறையப் பேர் வரிசையில் நிற்பார்கள். ஓடும் பெல்ட்டில் சாமான்கள் வரும். அதன் கோடுகளை மந்திரக் கண்கள் கண்டுபிடித்து விலைகளை தானாகவே பதியும். சாமான்களை பைகளில் போட்டு வாடிக்கையாளருக்கு கொடுத்து பணம் பெறவேண்டும். சிலர் தங்கள் செல்பேசிகளை நீட்டி கணக்கை தீர்ப்பார்கள். சிலர் கடன் அட்டையோ உடன் அட்டையோ பாவிப்பார்கள். சிலர் காசுத்தாள்களை கொடுப்பார்கள். அப்போதுதான் பிரச்சினை முளைக்கும். அவனுக்கு கணக்கு அப்படி இப்படி. சிலவேளைகளில் கணக்கு ஒப்புவிக்கும் சமயம் காசு குறைந்திருக்கும். சொந்தப் பணத்தை கட்டி சமாளித்திருக்கிறான்.

ஒருநாள் வண்டிலைத் தள்ளிக்கொண்டு பச்சைக் கண் அழகி ஒருத்தி வந்தாள். அன்று மட்டும்தான் பச்சைக் கண். சிலவேளைகளில் அவளுக்கு சாம்பல் கண். ஒருநாள் நீலக் கண்ணுடன் வந்திருந்தாள். அத்தனை அழகு. பார்த்தபின் கண்ணை விலக்கமுடியாது. கண் நிறத்துக்கு ஏற்ப உடை அணிவதுதான் அவளில் விசேஷம். அன்று நிறையப் பொருட்கள் வாங்கியிருந்தாள். அவன் சாமான்களை பையிலே அடுக்கும்போது பிழை நேர்ந்துவிட்டது  அது அதற்கு ஒரு முறை உண்டு. ஒழுகக்கூடிய சாமான்களை தனிப்பையில் வைக்கவேண்டும். குளிரூட்டப்பட்ட பொருட்களை வேறு குளிரூட்டப்பட பொருட்களுடன்தான் இடவேண்டும். வீடு சுத்தமாக்கும் வேதியல் பொருட்களை  உணவுகளுடன்  கலக்கக்கூடாது. இப்படி பல விதிகள். சிலவேளை நினைவில் இருக்கும். பல வேளை மறந்துவிடுவான்.  அவள் நன்றி என்று அழகாக உச்சரித்துவிட்டு சாமான்களைத் தள்ளிக்கொண்டு போனாள். வீட்டுக்குப்போய் சரி பார்த்தபோது ஒரேயொரு முட்டை உடைந்துவிட்டது. அவள் 20 மைல் தூரம் காரை ஓட்டிவந்து முட்டை உடைந்துவிட்டது என்று முறைப்பாடு செய்தாள். பல்லுக்கொதி பிசாசு மனேஜர் அவனைத் திட்டினார். அடுத்த நாள் அவனுக்குத் தண்டனை என்று சொன்னார்.

அப்படித்தான் வாடிக்கையாளர் சேவையில் அவன் வேலை செய்ய நேர்ந்தது. அதைவிட பெரிய தண்டனை கிடையாது. வாங்கிய பொருளை திருப்புவதற்காக நீண்ட வரிசை நிற்கும். ’எதற்காக சாமானை திருப்புகிறீர்கள்?’ என்று கேட்டு பதிலை கணினியில் பதிவு செய்த பின்னரே காசை திருப்பிக் கொடுக்க முடியும். அல்லது புதிய சாமான் எடுத்துப்போக அனுமதி கிடைக்கும். வாடிக்கையாளர்கள்  சொல்லும் காரணங்கள் வேடிக்கையாக இருக்கும். ’முடிவுதேதி முடிந்துவிட்டது.’ ’அழுகிவிட்டது.’ ’உடைந்துவிட்டது.’ ’பூசணிக்காய் வேலைசெய்யவில்லை.’ ’பழுதானது.’ ’மணக்கிறது.’ ’ருசி சரியில்லை.’  காதலிக்கு பிடிக்கவில்லை என பாதி சாப்பிட்ட பீட்சாவை காதலியின் பல் அடையாளத்துடன் ஒருவன் கொண்டுவந்திருக்கிறான். ’சேர், இந்தரக வெண்ணெய் நாங்கள் விற்பதில்லை. வேறு எங்கோ வாங்கியிருக்கிறீர்கள்.’ ‘இல்லையே இங்கேதான் வாங்கினேன்.’ ‘நாங்கள் இங்கே இவ்வளவு மோசமான மலிவான வெண்ணெய் விற்பதில்லை.’ சிலர் எரிச்சல் படுத்துவார்கள். சத்தமிடுவார்கள். ஆனால் அவன் வாயை சிரித்தமாதிரியே வைத்திருக்கவேண்டும். சமயங்களில் வீட்டிலிருந்து துப்பாக்கியை எடுத்து வந்து  இந்தப் பொய்யர்களை சுடத் தோன்றும். பின்னர் அவனிடம் துப்பாக்கி இல்லை என்பது நினைவுக்கு வரும்.

சுப்பர்மார்க்கெட்டில் 6340 பொருட்கள் தத்தமது மந்திரக்கோடுகளுடன் இருந்தன. சனங்கள் இரவும் பகலும் வந்து வாங்கிப் போனார்கள். அதிகமான உணவு வகைகள் சமைக்கவே தேவையில்லை. அவற்றை இரண்டு நிமிடம் நுண்ணலை அடுப்பில் வேகவைத்தால் உணவு தயார். பத்தாயிரம் வருடங்களுக்கு முன்னர் மனிதன் காலை எழும்பியதும் உணவைத் தேடத் துடங்குவான். சூரியன் மறையும் வரைக்கும் தேடுவான். அன்று உணவு கிடைத்தால் உண்பான். கிடைக்காவிட்டால் பட்டினிதான். இப்பொழுது அவசர அவசரமாக வந்து ஐந்து நிமிட உணவை வாங்கிக்கொண்டு ஓடுகிறார்கள்.  எத்தனை வசதி. ஆனாலும் முறைப்பாடுகளுக்கு குறைவில்லை.

இரண்டு வாரம் முன்பு மிதிலா  இரவு எட்டு மணிக்கு வந்து தன் சாமான்களை எடுத்துப்போனாள். அவள் அவனுடன் சேர்ந்து வாழ வந்தபோது அவளிடம் ஒரு மெலிந்த சூட்கேஸ்தான் இருந்தது. திரும்பிப் போகும்போது இரண்டு சூட்கேசுகள், நாலு அட்டைப்பெட்டிகள் சேர்ந்துவிட்டன. ஆறு மாதத்தில் அவன் அவளுக்கு நிறையப்  பரிசுகள் கொடுத்தான். உடுப்புகள் வாங்கினான். அவை பெட்டிகளை நிரப்பிக் கிடந்தன. பெட்டிகளை எடுத்துப் போக அவன் உதவிசெய்தான். வேலைக்காரனுக்கு காட்டும் மரியாதை அவனுக்கு கிடைத்தது. காரிலே ஏறியதும் எங்கே என்றான். ’அந்த உணவகம்’ என்றாள்.  ’எந்த உணவகம்?’ ’நான் எங்கேயிருந்து உன் காரில் ஏறி உன் வீட்டுக்கு வந்தேனோ அந்த உணவகம்.’ ’உணவகத்திலா நீ இனிமேல் தங்கப் போகிறாய்?’ அவள் பதில் கூறவில்லை.

உணவகம் வந்தது. நெருப்பில் இருந்து தப்பி ஓடுவதுபோல காரில் இருந்து பாய்ந்து இறங்கி கைப்பையை எடுக்காமல், கதவை சாத்தாமல் வீதியை கடந்து மறுபக்கம் ஓடினாள். அங்கே ஒருவன் நின்றான். மூன்று நாள் சாப்பிடாததுபோல முகம்.  தலை வாரியிருக்கவில்லை. ஒருவாரம் முன்பு சுத்தமாயிருந்த சேர்ட்.  அவன் விரித்த கைகளுக்குள் ஒரு கோழிக்குஞ்சு ஓடுவதுபோல நுழைந்து அவனைக் கட்டிக்கொண்டாள். மிதிலா ஒருநாளும் அவனிடம் அப்படி ஓடிவந்தது கிடையாது.  கட்டிப்பிடித்ததும் இல்லை. அவன் அதிர்ச்சியில் உறைந்துபோய் நின்றான். பின்னர் அவனாகவே சாமான்களை இறக்கிவைத்துவிட்டு காரை கிளப்பினான். அவள் பாய்ந்து கடந்த அந்தக் காட்சி சினிமா போல பலதடை மீண்டும் மீண்டும் அவன் மனதில் ஓடியது.

மனேஜர் அவனைக் கூப்பிட்டபோது அவனுக்கு விசயம்  ஓர் அளவுக்கு விளங்கிவிட்டது. இன்னொரு முறைப்பாடு வந்திருக்கிறது. வேறு எதற்கு கூப்பிடுவார்? உன்னுடைய அர்ப்பணிப்பான, புத்திசாலித்தனமான, கடும் உழைப்புக்கு மாட்சிமை பொருந்திய கனடிய ஆளுநர் உனக்கு  விருதளிக்கப் போகிறார்  என்று சொல்லப் போகிறாரா? மனேஜரின் கதவிலே அவர் பெயர் எழுதியிருந்தது. உள்ளே நுழைந்து கொலை செய்தவன் தீர்ப்புக்கு காத்து நிற்பதுபோல தலையைக் குனிந்துகொண்டு நின்றான். மனேஜர் அவன் முகத்தை பார்க்காமல் மேசையில் கிடந்த கண்ணாடி உருண்டையை உருட்டியபடி நீண்டநேரம்பேசினார். இரண்டு நிமிடம் கழித்து விசயத்துக்கு வந்தார். அவன் வாடிக்கையாளருடைய பையிலே தக்காளியை கீழே போட்டு அதற்குமேல் கனமான பொருளைப் போட்டதால் தக்காளி நசுங்கிவிட்டது. இந்த சுப்பர்மார்க்கெட்டில் வாடிக்கையாளர்தான் முக்கியம். அவனல்ல. தக்காளியுமல்ல. ‘இனிமேல் நீ வீட்டுக்கு போகலாம்’ என்றார். ’வீட்டுக்கா?’ ’ஆமாம்.’ ’இப்போதா?’ ’இப்போதுதான்.’ அவனால் நம்ப முடியவில்லை. இரண்டு டொலர் பெறுமதியான தக்காளிக்காக அவனை வீட்டுக்கு அனுப்புகிறார்கள். தன் சேர்ட்டிலே குத்தியிருந்த ’மாயன்’ என்ற பெயர் அட்டையை கழற்றி மேசையில் வைத்தான். இனிமேல் பெயர் அட்டை இல்லாமலே அவன் தன் பெயரை ஞாபகத்தில் வைக்கவேண்டும். போரிஸ் கார்லொஃவ் எழும்பி நின்று கைநீட்டினார். அவன் கவனிக்காமல் வெளியே வந்தான்.

அவன் அம்மா சொல்லுவார். ’உன் பெயர் உன் சேர்ட்டிலே குத்தியிருக்கக் கூடாது. கழுத்திலே மாலையாக  தொங்கக்கூடாது.  கதவிலே உன் பெயர் இருக்க வேண்டும்.’ அம்மாவுக்கு அவன் சுப்பர்மார்க்கெட்டில் வேலை செய்வது பிடிக்கவே இல்லை. ’உன்னுடைய தகுதிக்கு நீ ஓர் அறையில் உட்கார்ந்து வேலை செய்யவேண்டும். வீட்டுக்கு வா. மறுபடியும் படி’ என்று பலதடவை சொல்லிவிட்டார். அம்மாவை உடனே அழைக்கவேண்டும் போல இருந்தது. அவர் அடிக்கடி சொல்வார். ’இந்த உலகத்தில் எல்லோரும் உன்னை கைவிட்டாலும் கடைசிவரை கைவிடாத ஒரே ஆத்மா உன் அம்மாதான். அதை மறக்காதே.’

காரை வேகமாக ஓட்டினான். அவனுக்கு முன்னால் இன்னொரு பெரிய வாகனம் போனது. பின்னால் இப்படி எழுதியிருந்தது. ’இந்த எழுத்துக்களை உன்னால் வாசிக்க முடியும் என்றால் நீ அளவுக்கு அதிகமாகக் கிட்ட வந்துவிட்டாய் என்று அர்த்தம். தூர விலகு.’ வாகனம் மிக மெதுவாக நகர்ந்தது. அவனால் முன்னேற முடியவில்லை. எரிச்சல் எரிச்சலாக வந்தது. திடீரென்று யோசனை எழுந்தது. ’வேகமாகப் போய் என்ன சாதிக்கப் போகிறேன். வீட்டிலேதான் மிதிலா இல்லையே. அவளுக்கு சமைக்கத் தேவையில்லை. மூன்று சிப்லொக் பைகளில் சேமித்துவைத்த ’பேகிளை’ அவள் தன் காதலுனுடன் பகிர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருப்பாள்.’

லோரன்ஸ் வீதியில் அவன் பிறந்த மருத்துவமனை எதிர்ப்பட்டது. எப்பொழுது அந்த வழியால் போனாலும் அவனுடைய அம்மா அவன் பிறந்த மருத்துவமனையை சுட்டிக்காட்ட தவறுவதில்லை. எட்டு மாடிகள் கொண்ட உயர்ந்த நீலக் கட்டடம். திடீரென்று மருத்துவ மனைக்குள் காரை வெட்டித் திருப்பினான். வரவேற்பறையில் இரண்டு பெண்கள் சீருடையில் உட்கார்ந்திருந்தார்கள். இன்னொரு பெண் சற்று தள்ளி அமர்ந்து ஏதோ கணினியில் தட்டச்சு செய்தாள். சும்மா உட்கார்ந்திருந்த பெண்ணின் முன் சென்று நின்றான். அவள் நிமிர்ந்து பார்த்து மருத்துவமனைப் புன்னைகை ஒன்று செய்தாள். 

‘நான் என்னை திருப்பிக் கொடுக்க வந்திருக்கிறேன்.’

’மன்னிக்கவும். புரியவில்லையே.’

’நான் இங்கேதான் பிறந்தேன். நான் என்னைத் திருப்பிக் கொடுக்கவேண்டும்.’

’ஏன்?’

’பழுதான சாமானைத் திருப்பிக் கொடுக்கலாம்தானே.’

எல்லோருடைய கவனமும் அவன் மீது விழுந்தது. ஒன்றும் பேசாமல் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.

கம்புயூட்டரில் தட்டச்சு செய்த பெண் திரும்பி அவனைப் பார்த்து ‘கொடுக்கலாம். ஆனால் உங்கள் தாயார் வந்துதான் திருப்பிக் கொடுக்கவேண்டும்’ என்று சிரிப்பை அடக்கிக்கொண்டு கூறினாள். பெண்கள் ரகஸ்யமாக ஒருவரை ஒருவர் பார்த்தனர்.

அவனுக்கு என்ன நடந்தது? ஏன் இப்படி ஆவேசம் வந்ததுபோல உள்ளே நுழைந்தான். யாரோ சிரித்தது அவனுக்கு கேட்டது. வெட்கமாகிவிட்டது. அவனுடைய அம்மா ‘உனக்கு விசர் பிடித்துவிட்டது’ என்று திட்டுவது நினைவுக்கு வந்தது. அம்மாவை அழைத்து வேலை போனதைச் சொல்வோமா என்று நினைத்தான். அவன் எப்பொழுது அம்மாவை அழைத்தாலும் அது ஏதாவது சோகச் செய்தியை சொல்வதற்காகவே இருக்கும். ஒரு நல்ல செய்தி வந்த பிறகு அழைக்கலாம். விரைவில் அவன் ஒரு வேலையை தேடிவிட்டு அழைத்தால் எத்தனை சந்தோசப்படுவார். அப்படி நினைத்தபோதே அம்மாவிடம் இருந்து அழைப்பு வந்தது. அவன் அம்மாவை நினைத்தாவே அவருக்கு எப்படியோ தெரிந்துவிடும். அப்படி பலமுறை நடந்திருக்கிறது.

’என்ன அம்மா?’

’நீ ஏன் கூப்பிடவில்லை.’

’செல்போன் தண்ணீரில் விழுந்து சில நம்பர்கள் கரைந்துவிட்டன.’

’என்னுடைய நம்பர் உனக்கு ஞாபகம் இல்லையா?’

’இல்லையே. இப்போது கிடைத்துவிட்டது. தவறாமல் இனிமேல் அழைப்பேன்.’

தாயாருக்கு பொய் சொன்னது என்னவோபோல இருந்தது. தாயாரை தான் கொடுமைப்படுத்தியதற்கு இது தண்டனையோ என யோசித்தான்.  ஒருதடவை அவர் மருத்துவ மனையில் கிடந்தபோது அங்கே போகாமல் மிதிலாவின் பிறந்தநாளைக் கொண்டாடியது நினைவுக்கு வந்தது. அவள் சொன்னாள். ’18 வயதுப் பிறந்த நாள் ஒருமுறைதான் வரும்.’ உடனேயே மனம் மாறியது. பெரும் சோகம் அவனை மூடியது. துயரத்தை மறக்க குதிரை ஓடும் சத்தத்தை வாயினால் உண்டாக்கியபடியே காரை ஓட்டினான். மனது கொஞ்சம் அமைதியடைந்தது.

ஓர் உயரமான பெண் நாயை சங்கிலியில் பிடித்தபடி நடந்தாள். அழகான காட்சி. அவளுடைய காதலனுடன் செய்த ஒப்பந்தப்படி நாயை நடைக்கு கூட்டிச் செல்வது அன்று அவள் முறையாக இருக்கலாம். மிதிலாவை நினைத்தான். எங்கே தவறு நடந்தாலும் அதை திருப்பி வளைத்து கொண்டு வந்து அவன் தலையில் போட்டுவிடுவாள். சிறந்த வழக்கறிஞராகும் தகுதி அவளுக்கிருந்தது. அவள் பக்கத்தில் நிற்கும்போது அவன் போதாமை பெரிதாகத் தெரியும். தரிப்பிடத்தில்  காரை நிறுத்திவிட்டு வீட்டினுள் நுழைந்தான். ஒரு சத்தமும் இல்லாமல் அது அமைதியாக இருந்தது. மேல்கோட்டை கழற்றி மாட்டினான். காலணிகளை உதறினான். கார்ச் சாவியை மேசையில் வைத்தான். செல்பேசியை மின்னேற்றியில் பொருத்தினான். அவன் நிழல் சுவரில் விழுந்தது. என்ன அழகான நிழல்? என்ன ஒய்யாரம்? அதைப் பார்க்க ஒருவரும் இல்லை.

கதவு நீக்கல் வழியாக ஒருகடிதம் உள்ளே தள்ளப்பட்டு கிடந்ததை கண்டான். ஆச்சரியமாக இருந்தது. அவனுக்கு கடிதங்கள் வருவதில்லை. பழுப்பு உறை. அரசாங்கக் கடிதமாக இருக்கவேண்டும். கனடிய சட்டமா அதிபரிடம் இருந்து வந்திருந்தது. கை கொஞ்சம் நடுங்கியது. அவன் ஒரு குற்றமும் செய்யவில்லையே. சுப்பர்மார்க்கெட்டில் ஒருமுறை 12 டொலர் கணக்கு காட்டாமல் விட்டதாக இருக்குமா?

பயத்துடன் கடிதத்தை பிரித்தான். அவன் கண்கள் விரிந்தன. அவனை ஒரு வழக்கில் ஜூரியாக கடமையாற்ற அழைத்திருந்தார்கள்.  கடவுள் ஒரு யன்னலை மூடினால் ஒரு கதவை திறப்பார் என்று சொல்லியிருக்கிறார்கள். நாலு கதவுகளை அல்லவா திறந்துவிட்டிருக்கிறார். கொண்டாடவேண்டிய பெரும் சந்தோசத்துக்குரிய விசயம். வழக்கு விவரம் தெரியாது, ஆனால் இரண்டு வாரத்துக்குள் போக வேண்டும். சம்பளம் நாளுக்கு 40 டொலர்கள். வழக்கு இழுத்தடித்தால் நாளுக்கு 100 டொலராக உயர்ந்துவிடும்.

அவனால் மகிழ்ச்சியை தாங்க முடியவில்லை. யாரோடு அந்த நல்ல செய்தியை பகிரலாம் என்று யோசித்தால் ஒருவரும் இல்லை. அம்மாவுக்குச் சொன்னால் பெருமைப்படுவாரே என்று நினைத்தான். என்ன வழக்காக இருக்கும்? கொலைக்குற்றமா அல்லது கள்ளக் கடத்தலா? ஜூரிமாருக்கு பெயரை எழுதி சேர்ட்டிலே குத்துவார்களா? அல்லது பெயர் அட்டையை கழுத்திலே தொங்க விடுவார்களா? ஒருவேளை  ஜூரி மேசையிலே பெயர்ப் பலகைகளை அவர்கள்   வைக்கக்கூடும். ஒரு மாதத்துக்கு மேல் வழக்கு நீண்டால் நல்ல தொகை கிடைக்கும். அம்மாவுக்கு பிடித்த ஏதாவது விலை உயர்ந்த பரிசுப் பொருளை வாங்கிக்கொடுக்கலாம்

ஒரு பேச்சுக்கு குற்றவாளி மிதிலாவாக இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்தான். கூண்டிலே நின்றாலும் அவள் வாள் சுழற்றுவதுபோல வேகமாகப் பேசுவாள். குரல் உச்சத்துக்கு போகும்போது அவள் பேச்சுக்குரல் நாய் குரைப்பதுபோல ஆகிவிடும்.  ஒரு பேச்சுக்கு அவள் திருடியாக இருக்கலாம். அரசாங்கத்தை ஏமாற்றியவளாக இருக்கலாம்.  மூன்றுநாள் சாப்பிடாமல் இருந்தவனை கொலை செய்தவளாகவும் இருக்கலாம். ஒரு பேச்சுக்கு அவள் குற்றவாளி என்று அவன் கையை தூக்கும்போது அவனுடைய மகிழ்ச்சி எத்தனை மடங்கு பெருகியிருக்கும். இந்த உலகத்தில் பழிவாங்கும் மகிழ்ச்சியின்  உச்சத்திற்கு ஈடே கிடையாது. 

END

Tuesday, 20 March 2018

பொன்னுருக்கு , அ.முத்துலிங்கம்






பொன்னுருக்கு

 அ.முத்துலிங்கம்


நெடுங்காலமாக என்னுடன் பழகிவரும் ஒருவர் இந்தியாவில் இருந்து மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். ’பொன்னுருக்கு என்றால் என்ன?’சமீபத்தில் ரொறொன்ரோவில் நடந்த பொன்னுருக்கு சடங்கு ஒன்றுக்குப் போயிருந்தேன். அதைப் படம் பிடித்து முகப்புத்தகத்தில் போட்டபோது என் நண்பரும் வேறு சிலரும் இதே கேள்வியை கேட்டார்கள். அப்பொழுதுதான் இந்தியாவில், அதுவும் தமிழ்நாட்டில்,  பொன்னுருக்கு சடங்கு கிடையாது என்பது தெரிய வந்தது. பொன்னுருக்கு என்றால் திருமணத்துக்கு முன்னர் செய்யப்படும் சடங்கு. ஆசாரியார் தாலி செய்யும் பொன்னை மாப்பிள்ளை வீட்டில் அவருக்கு முன்னால்  உருக்குவது. 

நான் சென்ற பொன்னுருக்கு ரொறொன்ரோவில் மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. ஏறக்குறைய ஒரு கல்யாணம்தான். ஒரேயொரு குறை, மணப்பெண் இல்லை. யாழ்ப்பாணத்தில் 50  வருடங்களுக்கு முன்னர் எப்படி பொன்னுருக்கு நடந்ததோ அப்படியே, அதேமாதிரி நுணுக்கங்களுடன் இன்றும் கொண்டாடப்பட்டது, ஆனால் பத்து மடங்கு தொழில் நுட்ப வசதிகளுடன். மாப்பிள்ளையின் ஒவ்வொரு அசைவையும் படம் எடுத்தார்கள். வீடியோவை இன்னொருவர் கவனித்தார். ஸ்கைப்பில் ஜேர்மனியில் இருந்தும் அவுஸ்திரேலியாவில் இருந்தும் யாழ்ப்பாணத்திலிருந்தும் நேரடியாகப் பார்த்தார்கள்.

பெண் வீட்டார் பூசைக்குரிய பொருட்களுடன், பெரிய பெரிய தட்டங்களில் பலகாரம் ஏந்தி வந்தார்கள். ஆசாரி வாயு அடுப்பில் மாப்பிள்ளை முன் தாலிப் பொன்னை உருக்கினார். மாப்பிள்ளையின் வேலை சும்மா உட்கார்ந்திருப்பதுதான். உருக்கிய பொன் வட்டமாக வந்ததும் அதை ஒரு தட்டிலே வைத்து பார்வையாளர்களுக்கு ஆசாரியார் அனுப்பினார். எல்லோரும் தொட்டு ஆசி வழங்கினார்கள். இதுதான் நடந்தது. ஆசாரி இதை நீட்டி இரண்டு மணி நேரத்துக்கு இழுத்துவிட்டார். இரண்டு வீடியோக்களும் 1200 படங்களும் எடுக்கப்பட்டன.

1960 களில்  கொழும்பில் நடந்த என்னுடைய பொன்னுருக்கில் பலதரமான நாடக அம்சங்கள் இருந்தன. இப்பொழுது நினைக்கும்போது சிரிப்பு வந்தது; துயரமும் கூடியது.  எங்களுடையது காதல் திருமணம். பெண் வீட்டாருக்கு சம்மதம். வீட்டிலே எனக்கு மூன்று அண்ணன்மார். அவர்கள்தான் திருமணம் பற்றிய முடிவு எடுக்க வேண்டும். அவர்களுக்கு விருப்பமே இல்லை, ஆனாலும் நான் விடாப்பிடியாக இருந்ததால் ஒப்புக்கொள்வதுபோல நடித்தார்கள். எப்படியாவது இதை நிறுத்திவிடவேண்டும் என்று மன அடிஆழத்தில் ரகஸ்யமாக  வேலைசெய்தார்கள். பெண்வீட்டார் ஆடம்பரமானவர்கள்.  அவர்களை மட்டம் தட்டவேண்டும் அல்லது  பழி வாங்கவேண்டும் என்பதே முக்கிய நோக்கம்.  இதற்கு பொன்னுருக்கு வசதியாக அமைந்தது.

அந்தச் சாக்குச் சொல்லி, இந்தச் சாக்குச் சொல்லி எத்தனை கடத்த முடியுமோ அத்தனையும் கடத்தி கடைசியில் ஒருவாறு பொன்னுருக்குவதற்கு ஒரு   நாளை நிச்சயம் பண்னினார்கள். இரண்டு பகுதியும்  சம்மதித்த பின்னர் ஆசாரிக்கும் சொல்லிவிட்டார்கள். பெண் வீட்டார் எத்தனை மணிக்கு, என்ன என்ன கொண்டுவரவேண்டும் என்ற பட்டியலும் கொடுக்கப்பட்டுவிட்டது. மாப்பிள்ளை வீட்டு பட்டியலில் மஞ்சள், விபூதி, சந்தனம், வாழை இலை, வாழைப்பழம், தேங்காய், வெற்றிலை, பாக்கு, கற்பூரம், பச்சை அரிசி, கற்கண்டு, பட்டு ஆகியவை இருந்தன. பெண் வீட்டார் கொண்டுவர வேண்டிய பட்டியலில் நவதானியம், மண்சட்டி, மண், பழவகை, பலகாரம், வேட்டி, சால்வை, கொழுக்கட்டை என்று எழுதியிருந்தது.

நிச்சயித்த நாள் ஆடிக்காற்று அடித்தது. ஆடிக் காற்று என்றால் அது புழுதிக்காற்றுக்கு மேலே. புயல் காற்றுக்கு கீழே. அதைப்பற்றி கவலைப்படாமல் என்னுடைய மூன்று அண்ணன்மாரும் சிரித்து மகிழ்ந்து ஓடியாடி காரியங்கள் பார்த்தார்கள். சிரிப்பு என்றால் முகத்துக்கு வெளியே நீண்ட சிரிப்பு. எனக்கு திக்கென்றது. வழக்கம்போல அவர்கள் வதனம் ஓர் அடி முன்னே தள்ளிக்கொண்டு நிற்கவில்லை. ஓர் அறைக்குள் நுழையும்போது அவர்கள் முகம் முதலில் வரும்; பின்னர் அவர்கள் வருவார்கள். எனக்கு நெஞ்சு பதறத் தொடங்கியது. ஏதோ சதி வேலை நடக்கிறது தெரிந்தது. என்ன வெடி எப்போது வெடிக்கும் என்று ஊகிக்க முடியவில்லை.

தாவணிகள் மேலே வீச, அங்கவஸ்திரம் பறக்க, பெண்வீட்டார் வந்து சேர்ந்தனர். ஆசாரியார் பூசையை ஆரம்பித்தார். என்னுடைய வேலை, இருக்கும் உடுப்பில் திறமானதை அணிந்து ஆசாரியார் கொண்டுவந்த சட்டிக்கு முன் உட்கார்ந்திருப்பதுதான். பிள்ளையாருக்கு தேங்காய் உடைத்து முறையான பூசை செய்யப்பட்டது. வலது கை கற்பூர ஆரத்தி செய்யும்போது இடது கை மணியை அடித்தது. பெண் வீட்டார் கொண்டு வந்த சட்டியில்,  மண்ணை நிரப்பி நவதானியங்களை பாலிலே தோய்த்து ஒவ்வொன்றாக ஊன்றினார்.  திருமணத்தின்போது  முளைவிட்டிருக்கும்  நவதானியத்தை மாப்பிள்ளை  எடுத்துச் செல்வதற்கான ஆயத்தம்.  

எனக்கு முன்னாலிருந்த சட்டியில்  சிரட்டைக்கரி நிரப்பியிருந்தது. வட்டமான பவுண் காசை சட்டியிலே போட்டு நெருப்பை மூட்டி ஊதாங்குழலால் ஊதி ஊதி அதை ஆசாரியார் பெரிசாக்கினார். சிரட்டைக்கரியை அடிக்கடி கிளறிவிட்டார். பவுண் காசு மறைந்து சில நிமிடங்களின் பின்னே அது உருண்டு திரண்டு நல்ல வடிவில் வந்தது. எல்லோரும் நல்ல சகுனம் என்றார்கள். சிலருக்கு சப்பையாக வரும். சிலவேளை பிழைத்துப்போன தோசைபோல இருக்கும். முக்கோண வடிவில் வந்ததும் உண்டு. அதிர்ஷ்டம் என்று என்னை பாராட்டினார்கள். நான் என்ன செய்தேன்? சும்மாதானே உட்கார்ந்திருந்தேன்.

பிரச்சினை இல்லாமல் முடிந்தது என்று மூச்சு விட நினைத்தபோதுதான் அது நடந்தது. ’கொழுக்கட்டை எங்கே?’ என்றார் மூத்த அண்ணர். எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்தனர். ஒன்றுமே புரியவில்லை. பெண்வீட்டார் காவி வந்த பெரிய தாம்பாளத்தை மூடியிருந்த வெள்ளைத்  துணியை திறந்ததும் நடுவில் ஒரேயொரு கொழுக்கட்டைதான் இருந்தது. அதிர்ச்சி நீங்கியதும் ’ஒரேயொரு கொழுக்கட்டையா?’ என்று குரல் எழுப்பினார் மூன்றாவது அண்ணி. அவர் இரண்டு நாட்களாக கொழுக்கட்டை பற்றிய கனவிலேயே இருந்திருப்பார். அவருக்கு ஐந்து வயதாயிருந்தபோது கோயிலுக்கு துலாபாரம் நேர்த்திக்கடன் வைத்து எடைக்கு எடை கொழுக்கட்டை அவித்துக் கொடுத்தார்களாம். அதில் சரி பாதியை அந்த வயதிலேயே அவர் தின்று தீர்த்ததாக கதை இருந்தது.  பெண் வீட்டார் ஒரே குரலில் ’பட்டியலில் கொழுக்கட்டை என்றுதானே எழுதியிருந்தது’ என்றார்கள். ’சரி, வெட்டும்’ என்று கட்டளையிட்டார் பெரிய அண்ணர்.  கொழுக்கட்டையை தாம்பாளத்தில் வைத்து, இரண்டாவது அண்ணி தொட்டுப்பிடிக்க,  மூத்த  அண்ணி சரிபாதியாக வெட்டினார். ஒரு பாதி மாப்பிள்ளை பகுதிக்கு, அடுத்த பாதி பெண் வீட்டுக்காரருக்கு.

’எங்கே பவுண் காசு?’ என்றார் அண்ணர். வீட்டு நாயை அதட்டும் குரல். கொழுக்கட்டைக்குள் ஒரு பவுண் காசை வைத்து அவித்து வரவேண்டும் என்பது ஐதீகம். அதை வெட்டும்போது யாருக்கு பவுண் கிடைக்கிறதோ அவர்கள் வென்றவர்கள். இவர்கள் பவுணே வைக்கவில்லை. பெண்ணின் அண்ணர் கொழும்பில் பிரபல வழக்கறிஞர். அவர் மெல்லிய குரலில் ’பட்டியலில் இல்லையே.’ என்றார்.  ’இது எல்லோருக்கும் தெரியுமே. வெறும் கொழுக்கட்டையை யாரும் சடங்குக்கு எடுத்து வருவார்களா? பவுண் வைத்து கொண்டுவருவதுதானே வழக்கம்.’ இதைச் சொன்னது பெரிய அண்ணி. அந்தக் களைப்பு தீர இரு பகுதியினரும் பலகாரங்களை தின்று தீர்த்தார்கள்.

‘எங்கே மரம்? நல்ல நேரம் முடிவதற்கிடையில் மரத்தை நடவேண்டும்.’ இது இரண்டாவது அண்ணர். கெடுதி செய்யும்போது அதையும் சரிசமமாகப் பிரித்துக் கொடுக்கவேண்டும் என்ற கொள்கை உடையவர். எல்லாவற்றையும் மூத்த அண்ணரையே செய்ய விடக்கூடாது.

’மரமா? என்ன மரம்? பட்டியலில் இல்லையே?’

‘மரத்தையுமா பட்டியலில் சேர்ப்பார்கள். மரம் நடாமல் எங்காவது பொன்னுருக்கு முடிவுக்கு வந்திருக்கிறதா? மரம் நடவேண்டும் என்பது பரம்பரை பரம்பரையாக கடைப்பிடிக்கும் வழக்கம்தானே.’ இரண்டாவது அண்ணிக்கு என்னிலும் ஒரு வயது கூட. ஆனால் அவர் இப்படியான விசயங்களை விரிவாகவும் ஆழமாகவும் தெரிந்து வைத்திருந்தார்.

பெண் வீட்டார் ஆறு கார்களில் வந்திருந்தார்கள். எல்லாமே சொந்தக் கார்கள். அதிலே ஒருவர் ஒரு பேச்சுப் பேசாமல் காரைக் கிளப்பிக் கொண்டுபோய் அழகான முள் முருங்கை மரம் ஒன்றை எப்படியோ சம்பாதித்து கொண்டு வந்து இறக்கினார். வெட்டினாரா, வாங்கினாரா, திருடினாரா ஒன்றுமே தெரியவில்லை. முள்முருங்கை வளர்ப்பதற்கு எளிதானது. அநேகமான திருமண வீடுகளில் அதைத்தான் நடுவார்கள்.  அது எத்தனை தழைக்கிறதோ அத்தனை மணமக்கள் குடும்பமும் தழைக்கும் என்பது ஐதீகம்.

சரி சரி. நல்ல நேரம் முடிவதற்கிடையில் மரத்தை நடவேண்டும். பெண்ணின் மாமாவை அழையுங்கள். அவர்தான் நடவேண்டும்  என்றார் மூத்த அண்ணர்.  இதுதான் நான் எதிர்பார்த்திருந்த தருணம். எங்கே எப்படியான குண்டை வெடிக்க வைக்கவேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியும். கதி கலங்கிப்போய் சகலரும் நின்றனர். பெண்ணின் மாமனார்தான் மரத்தை நடவேண்டும் என்ற விதியை யார் எப்போது எழுதி வைத்தது. கணியன் பூங்குன்றனாரா? அல்லது தொல்காப்பியரா? ஒருவேளை ஈழத்து பூதந்தேவனாரா?

இத்தனை நேரமும் பேசாமல் நடப்பதை அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்த எங்கள் சிறிய தகப்பனார் – நாங்கள் அவரை சின்னப்பு என்றுதான் அழைப்போம் – பேச ஆரம்பித்தார். சடங்குளை முறையாகச் செய்யவேண்டும் என்பது அவர் கொள்கை. எங்கள் ஊரில் சடங்குகளின் காவலர் அவர்தான். அவரை எதிர்த்துப்பேச ஆட்கள் பயப்படுவார்கள். அவருக்கு கவி பாடவரும் என்பதால்  அறம் பாடிவிடுவார் என நடுங்குவார்கள். ஒருமுறை வீட்டு மாமரத்தில் அணில்  மாம்பழத்தை கொந்தியதை இவர் பார்த்து, அறம்பாட அணில் பொத்தென்று விழுந்து இறந்துபோனதாம். சின்னப்பு ‘மரம் நடுவதென்றால் பெண்ணின் மாமாதான்  நடவேண்டும்.  சாஸ்திரங்களை எழுதி வைத்தது அவற்றை மீறுவதற்கா? பெண்ணுக்கு மாமா இல்லாவிட்டால் அதற்கு நாங்களா பொறுப்பு’ என்றுவிட்டு கோபத்துடன் என்னைப் பார்த்தார். நான் இடைவெளியை கூட்டினேன். சின்னப்புவின் வாய் சாமர்த்தியத்தை வெல்லும் தகுதிகொண்டவர் அந்தக் கூட்டத்தில் கிடையாது. அக்காவையும் தங்கையையும் ஏக்கத்துடன் பார்த்தேன்.

என் அக்காவும் தங்கையும் காலை நாலு மணிக்கே எழும்பி தங்கள் அலங்காரங்களை ஆரம்பித்து குறைவின்றி செய்திருந்தார்கள். அக்காவின் தலையை தங்கை செய்தார். தங்கையின் தலையை அக்கா செய்தார். ஏதோ அவர்களைப் பெண்பார்க்க வருவதுபோல அலங்காரம் அட்டகாசமாக இருந்தது. காப்புகளை எண்ணி எண்ணி சரிபார்த்து இருகைகளிலும் அணிந்திருந்தார்கள். கண்களுக்கு அஞ்சனம் பூசி கண்களை மேலும் கறுப்பாக்கியிருந்தனர். நான் அவர்களை மாறி மாறிப் பார்த்தேன். ஆதரவு தருவதாக தலையலங்காரம் செய்ய முன்னரும், செய்த பின்னரும் அக்கா வாக்கு தந்திருந்தார். அவர் வாயை திறப்பார் என்று பார்த்தேன். ‘பொறு பொறு’ என்று அஞ்சனம் பூசிய கண்களால் சாடை காட்டினார். எனக்குத் தெரியும். அவர்களால் ஒரு பிரயோசனமும் இல்லை. அவர்களுக்கு இப்படியான விசயங்களில் ’வோட்’ கிடையாது.

பெண்ணுக்கு மாமனார் இல்லை. இது இல்லோருக்கும் இருநூறு முறை அடித்து அடித்து சொல்லப்பட்ட விசயம். மாமனாரை கண்டுபிடிப்பது முள்முருங்கைபோல இலகுவான விசயமும் அல்ல. பெண்ணுக்கு ஒன்றுவிட்ட, இரண்டுவிட்ட, மூன்றாம் வகையில் ஒரு மாமா இருந்தார். அவர் அன்றைக்கு ரயில் பிடித்து யாழ்ப்பாணம் போகிறார். பெண்ணுக்கு தம்பி முறையான ஒரு பையன் காரை எடுத்துக்கொண்டு பறந்தான். கொழும்பு  ரயில் நிலையத்தில் டிக்கட் எடுத்து வைத்துக்கொண்டு யாழ்ப்பாணம் பயணம் புறப்பட காத்திருந்தவரிடம் முழுக் கதையையும் விஸ்தாரமாகக் கூறி, பாதி மன்றாட்டத்துடனும், பாதி வலோத்காரத்துடனும் அவரை கொண்டுவந்து இறக்கினான். கொலைசெய்த ஒருவர் நீதிமன்றத்துக்குள் நுழைவதுபோல தடுமாற்றத்துடன் அவர் உள்ளே வந்தார்.

அவரைப் பார்த்தபோது எனக்கு உடனே தோன்றியது கும்பிடுபூச்சியின் உருவம்.  மேலே டெர்லின் சட்டை அணிந்திருந்ததால் உள்ளே ஒவ்வொரு விலா எலும்பையும் எண்ணக்கூடியதாக இருந்தது. கைகள் நடுங்கின. வழக்கமான நடுக்கமா, பயத்தில் நடுங்கினாரா தெரியவில்லை. வயது 60 இருக்கும். நீளமான தலைமுடி கன்னத்தில் இருபக்கமும் விழுந்து வியர்வையில் ஒட்டிக் கிடந்தது. எல்லோர் மனத்திலும் அந்தக் கணம் ஓடியது ஒரேயொரு  கேள்விதான். இவரால் மரத்தை தூக்கி நடமுடியுமா?

காற்று ஒரு பக்கம் இழுக்க அவர் மற்றப் பக்கம் எப்படியோ மரத்தை இழுத்து தூக்கி நட்டார். அன்றைய ரயிலை தவறவிட்டார். அவருக்கு பலகாரமோ, கொழுக்கட்டையோ, குளிர்பானமோ ஒன்றுமே கொடுக்க மறந்துவிட்டார்கள். அடுத்த நாளோ அதற்கு அடுத்த நாளோ அவர் ரயில் பிடித்து யாழ்ப்பாணம் போவார். அன்றைய கதாநாயகன் அவர்தான். ஒரு கல்யாணத்தை இக்கட்டான சமயத்தில் காப்பாற்றிய அந்த மகானை உடனேயே மனித வழக்கம் போல எல்லோரும் மறந்துவிட்டார்கள்.

அன்பின் வந்த அகனமர் காதல் பெண்ணுக்கு மாப்பிளை வீட்டில் நடந்த பிரச்சினைகள் ஒன்றுமே தெரியாது. வீட்டார் கொண்டுவரப்போகும்  மிச்சப் பலகாரத்தை சாப்பிடுவதற்காக தன் வீட்டு கேட்டை பிடித்துக்கொண்டு நின்றார். வேறு அவமதிப்புகள் இல்லை என்று தெரிந்ததும் பெண் வீட்டார் புறப்பட்டனர். அவரவர் கார்களில் போய் ஏறுமட்டும் அவர்கள் நிலத்திலே சுழலும் சருகுகளைத் தவிர வேறு எதையுமே பார்க்கவில்லை.  வாழ்நாளில் இப்படியான ஒருநாளை அவர்கள் சந்தித்திருக்க  வாய்ப்பில்லை. என்னுடைய அண்ணன்மார் மூவர் உதடுகளிலும் புன்னகை இருந்தது. அதே சிரிப்புத்தான், கொஞ்சம் வித்தியாசமானது. வஞ்சம் தீர்த்த சிரிப்பு.