FORT CHENJI - DESINGU RAJAN HISTORY
FORT CHENJI - DESINGU RAJAN HISTORY தமிழகத்தைச் சேர, சோழ, பாண்டியர் மன்னர்கள் ஆட்சி செய்தபோதும் அவர்களின் பிரமாண்டமான அரண்மனைகள், கோட்டைகள் எதுவும் இன்று நம்மிடம் இல்லை. படையெடுப்பின்போது எரிக்கப்பட்டும் சிதைக்கப்பட்டும் அழிந்துபோயின என்கிறார்கள். மதுரை ஒரு காலத்தில் மாபெரும் சுற்றுக்கோட்டைகொண்ட நகரமாக இருந்து இருக்கிறது. அதை, 1840-களில் மாவட்டக் கலெக்டராக வந்த பிளாக்பெர்ன் இடித்துத் தரைமட்டமாக்கி புதிய மதுரையை உருவாக்கினார். கங்கைகொண்ட சோழபுரத்துக்கு அருகே மாளிகை மேடு என்ற இடத்தில் சோழர்களின் அரண்மனை இருந்ததாக சில அடையாளங்கள் காணப்படுகின்றன. மற்றபடி, வட இந்தியாவில் காணப்படுவது போன்ற கோட்டை கொத்தளங்களை தமிழகத்தில் காண முடியாது. வேலூர் கோட்டையும் செஞ்சிக் கோட்டையும்தான் தமிழக அளவில் பெரிய கோட்டைகள். இவையன்றி திருமயம் கோட்டை, திண்டுக்கல் கோட்டை, செயின்ட் ஜார்ஜ் கோட்டை, மனோரா கோட்டை, ஆலம்பரக்கோட்டை, சங்ககிரி கோட்டை, வட்டக்கோட்டை போன்றவை அளவில் சிறிய, சிதைவுற்ற நிலையில் உள்ள கோட்டைகளாகும். செஞ்சியும் வேலூரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோட்டைகள். வேலூர் கோட்டையில...