Showing posts with label PHILANTHROPIC. Show all posts
Showing posts with label PHILANTHROPIC. Show all posts

Friday, 12 January 2018

MGR , PHILANTHROPIC ,HELPER BORN 1916 JANUARY 11





MGR , PHILANTHROPIC ,HELPER 
BORN 1916 JANUARY 11


வண்டுக்கு வாழ்வளித்த எம்.ஜி.ஆர்..!

பழந்தமிழ் இலக்கியங்களில், தலையேழு வள்ளல்கள் இடையேழு வள்ளல்கள் மற்றும் கடையேழு வள்ளல்கள் என்று படித்திருக்கிறோம். அவர்களுள், கடையேழு வள்ளல்களில் ஒருவரான பாரிவள்ளல், கொம்பின்றித் தவித்த முல்லைக்கொடிக்கு வேலையாளிடம் சொல்லி ஒரு பந்தல் போடச் சொல்லாமல், உடனே தன் தேரை அங்கே நிறுத்தி, அந்த முல்லைக்கொடியை அதில் படர விட்டுவிட்டுத்தான் நடந்தே இல்லம் வந்து சேர்ந்தான் என்று படித்திருக்கிறோம். அதுபோல, துன்பப்படுவோரைப் பார்த்தவுடன், அவர்களுக்கு உடனே உதவுவது எம்.ஜி.ஆரின் சிறந்த பண்பாகும் . எம்.ஜி.ஆர், தானே வலியப் போய் உதவிகள் செய்வார் என்பதால், திருமுருக கிருபானந்த வாரியார் இவருக்கு பொன்மனச் செம்மல் என்று பட்டம் வழங்கினார். எம். ஜி. ஆர் வலியப் போய் உதவியதற்குப் பல சான்றுகளைக் காட்டலாம். இந்த ஓர் அத்தியாயம் மட்டுமே ஒரு நூலாக விரிவடையும் என்றாலும், சில சான்றுகளை மட்டும் இங்கு காண்போம்.

வண்டுக்கு வாழ்வளித்த எம்.ஜி.ஆர்
மனிதர்களுக்கு உதவியதைப் பார்ப்பதற்கு முன், வண்டுக்கு உதவிய ஒரு நிகழ்ச்சியை அறிந்துகொள்ளலாம். ஒருநாள் தேவர் படத்தின் ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தபோது, மேக்கப் அறையிலிருந்து எம்.ஜி.ஆர் வெகு நேரமாக வெளியே வரவில்லை. தேவர் பொறுத்துப் பொறுத்துப் பார்த்துவிட்டு, நேரே எம்.ஜி.ஆரைத் தேடிப்போய்விட்டார். அங்கே, எம்.ஜி.ஆர், பாத்ரூமுக்குள் இருந்தார். வெகு நேரம் காத்திருந்துவிட்டு, பின்பு கதவைத் தட்டிவிட்டார். சிறிது நேரம் கழித்து எம்.ஜி.ஆர் சிரித்தபடி ஏதோ சாதித்துவிட்டதைப்போல வெளியே வந்தார். தேவரைப் பார்த்து, “ஒரு வண்டு தண்ணிக்குள்ள விழுந்துகிடந்தது. எவ்வளவோ முயற்சிபண்ணியும் அதை வெளியே கொண்டுவர முடியல. கடைசியில் கையைவிட்டு எடுத்து வெளியில் விட்டுட்டேன். பாவம்ண்ணே அது. இப்பப் பறந்துபோயிருச்சு என்றார். தேவர் நொந்துகொண்டார். எத்தனை பேர் அங்கே காத்துக்கொண்டிருக்கிறார்கள். இவர் வண்டைப் பிடித்து வெளியே விட்டேன் என்கிறார்’’ அவர் ஒன்றும் சொல்லவில்லை. போய்விட்டார். இதுதான் மற்றவருக்கும் எம்.ஜி.ஆருக்கும் உள்ள வேறுபாடு. எம்.ஜி.ஆருக்கு அந்த வண்டு சாகக் கூடாது என்பது முக்கியமாக இருந்தது.

குதிரைவண்டிக்காரரின் துயர் துடைத்த எம்.ஜி.ஆர்
எம்.ஜி.ஆர், ஒரு நாள் இரவில் காரில் வந்துகொண்டிருந்தபோது, ஓர் இடத்தில் 10 பேர் கூடி நின்றனர். அங்கு, அழுகைச் சத்தமும் கேட்டது. உடனே என்ன நடந்தது என்று போய் பார்த்துவிட்டு வா என தன் உதவியாளரை அனுப்பினார். அவர் வந்து, ஒரு குதிரை செத்துவிட்டது. குதிரைவண்டிக்காரரின் மனைவி அழுதுகொண்டிருக்கிறாள் என்றார். உடனே, எம்.ஜி.ஆர் அந்தக் குதிரைவண்டிக்காரரிடம் புதுக் குதிரை வாங்க எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்டு, அதற்குப் பணம் கொடுத்தார். அவர், குதிரை வாங்கி வண்டியில் பூட்டி ஓடவைப்பது வரை அவர்களுக்குச் சாப்பாட்டுக்குப் பணம் வேண்டுமே, அதற்கும் தனியாகப் பணம் கொடுத்தார். குதிரைவண்டிக்காரர் புதுக் குதிரை வாங்கியதும் வண்டியில் பூட்டிக்கொண்டு வந்து, எம்.ஜி.ஆரிடம் காட்டிவிட்டுப் போனார். 
காலில் காயம் பட்ட ஊழியருக்கு உதவி
ஒரு நாள், படப்பிடிப்பு தளத்தில் ஓர் ஊழியர் காலை நொண்டியபடி வேலைபார்த்துக்கொண்டிருந்ததை எம்.ஜி.ஆர் பார்த்துவிட்டார். அவரை அழைத்து, அவருக்கு சிகிச்சைக்குப் பணம் கொடுத்து, ‘கால் குணமடையும்வரை வேலைக்கு வரவேண்டாம்' என்று கூறி அனுப்பினார். அப்போது அவர் அருகில் இருந்தவர்களிடம், “எனக்கு வசதி இருந்ததால் என் கால் முறிந்தபோது நல்ல சிகிச்சைபெற்று குணமானேன். பாவம் அவர் வசதி இல்லாத காரணத்தால்தானே இவ்வாறு காலில் கட்டோடு வேலைக்கு வந்துள்ளார். அவருக்கு நாம்தானே உதவ வேண்டும்’’ என்றார். ஏழை எளியோருக்கு உதவுவதை எம்.ஜி.ஆர் தன் கடமை என்று நினைத்ததால் மட்டுமே அவருக்கு இப்படி வலியச் சென்று உதவும் மனமும் குணமும் அமைந்தது.
கேமராக்காரருக்குக் கேட்காமல் அளித்த உதவி
தினமும் எம்.ஜி.ஆரின் படப்பிடிப்பு முடிந்ததும், ஸ்டில்ஸ் போட்டோ எடுத்துவந்து கொடுக்க புகைப்படக்காரர்கள் படப்பிடிப்புத் தளத்திலேயே இருப்பார். அந்தப் படங்களைப் பார்த்து விக், மேக்கப், உடை ஆகியன சரியாக இருந்தால் மட்டுமே படப்பிடிப்பைத் தொடர்வார்கள். காலையில் எடுத்த படங்கள் இரண்டு மூன்று மணியளவில் தளத்துக்கு வந்துவிடும். ஒரு நாள், நாகராஜராவின் அக்காள் மகன் சங்கர் ராவ், அந்தப் பணியில் ஈடுபட்டிருந்தார். திடீரென எம்.ஜி.ஆரின் உதவியாளர் அவரை வந்து தளத்திலிருந்து தனியறைக்கு அழைத்துக்கொண்டுபோனார். அங்கு, எம்.ஜி.ஆரின் மருத்துவர் பி.ஆர்.எஸ் இருந்தார். சங்கருக்கு ஒன்றும் புரியவில்லை. டாக்டர் சங்கரின் உடலைப் பரிசோதித்தார். சங்கருக்கு ஹெர்னியா இருப்பதால், உடனே அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் என்றார் எம்.ஜி.ஆரிடம். அதற்கு எம்.ஜி.ஆர், சரி ஏற்பாடுசெய்யுங்கள் சிகிச்சைக்குவேண்டிய முழுச்செலவையும் நான் ஏற்றுக்கொள்கிறேன் என்றார். சங்கர் பயந்துவிட்டார். எம்.ஜி.ஆர், அவர் மாமாவிடமும் விஷயத்தை எடுத்துச்சொன்னார். சிகிச்சை முடிந்து சங்கர் நலம் பெற்றார். எம்.ஜி.ஆர் மருத்துவமனையில் வந்து சங்கரைப் பார்த்துச்சென்றார்.
சங்கர், செட்டில் நின்றுகொண்டிருந்தபோது, அவரைக் கவனித்த எம்.ஜி.ஆர், அவர் ஏதோ வலியால் அவதிப்படுவதைப் புரிந்துகொண்டார். சங்கரின் முகபாவத்தைவைத்து வலியின் தீவிரத்தை எம்.ஜி.ஆரால் உணர முடிந்தது. இவனிடம் கேட்டால் ஏதாவது காரணம் கூறுவான் என்று அவர் உடனே தன் சொந்த மருத்துவரை வரவழைத்துப் பரிசோதிக்கும்படிக் கூறினார். சங்கருக்கு வலி மற்றும் நோயிலிருந்து நிரந்தர நிவாரணம் கிடைத்தது.

நடன இயக்குநருக்கு பாக்கி கிடைத்தது
எம்.ஜி.ஆர் படப்பிடிப்பில் இருக்கும்போது, சுற்றி நடக்கும் விஷயங்களைக் கவனித்துக்கொண்டே இருப்பார். இதனால்தான் வெளிப்புறப் படப்பிடிப்பின்போது லதா (மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்), சரோஜாதேவி (அன்பே வா), நம்பியார் (ஆயிரத்தில் ஒருவன்), மனோகர் (அடிமைப்பெண்), வீரப்பா (ஜெனோவா) போன்றோருக்கு ஆபத்து ஏற்பட்டபோது, எம்.ஜி.ஆரால் அவர்களைக் காப்பாற்ற முடிந்தது. எம்.ஜி. ஆரின் இந்தப் பண்புகுறித்து டான்ஸ் மாஸ்டர் சுந்தரம் ஒரு பேட்டியில் தெரிவித்தார். ஒருநாள், டான்ஸ் மாஸ்டர் சுந்தரம் முகம் வாடிப்போய் இருப்பதைப் பார்த்த எம்.ஜி.ஆர், உடனே அவரைத் தனியாக அழைத்து காரணத்தைக் கேட்டார். அவருக்கு மைசூரில் டான்ஸ் ஷூட் செய்ததற்குரிய சம்பள பாக்கி இன்னும் வரவில்லை என்பதை அறிந்ததும், தயாரிப்பாளரிடம் சொல்லி உடனே சம்பளத்தைப் பெற்றுத் தந்தார். 'அப்போதெல்லாம், மாதத்துக்கு ஐந்து பாடல்கள்தான் வரும். அதற்கும் சம்பளம் வராமல் இருந்துவிட்டால், குடும்பம் நடத்துவது கஷ்டம். இதை உணர்ந்த எம்.ஜி.ஆர், வாடிய என் முகத்தைப் பார்த்தே உதவிவிட்டார்' என சுந்தரம் தன் பேட்டியில் கூறினார். 
ஸ்டன்ட் மாஸ்டர் குழுவிற்கு வாழ்வளித்தல்
பலராம் என்றொரு ஸ்டன்ட் மாஸ்டர், தன் குழுவினருடன் சினிமாவில் கோலோச்சி வந்தார். அந்தக் குழுவினர், படங்களில் நடனமும் ஆடுவார்கள், சண்டையும் போடுவார்கள். ஒரு நாள், பலராம் மாஸ்டர் காலமாகிவிட்டார். துக்கம் விசாரிக்க வந்த எம்.ஜி.ஆர், தாயிழந்த பிள்ளைகள் போல அங்கு நின்றுகொண்டிருந்த மாஸ்டரின் மாணவர்களைப் பார்த்தார். அவர்களைத் தன்னிடம் வந்து சேர்ந்துவிடுமாறு அழைத்தார். மறுவாழ்வு கிடைத்த அவர்கள், அகமகிழ்ந்தனர். அப்படி வந்தவர்கள், கடைசி வரை எம்.ஜி.ஆருடனேயே இருந்தனர். எம்.ஜி. ஆர் அரசியலுக்கு வந்த பின்பும் அவருடன் மெய்க்காப்பாளர்களாகத் தொடர்ந்தனர். இவர்களில் யாரும் எம்.ஜி.ஆரிடம் வந்து உதவி கேட்கவில்லை. ஆனால், பார்த்த மாத்திரத்திலேயே அவர்களின் அனாதரவான நிலையை உணர்ந்து, அவர்களைத் தன்னுடையவர்களாக எம்.ஜி.ஆர் ஏற்றுக்கொண்டார்.
எம்.ஜி.ஆர், வடபழனியில் ஓர் இடம் வாங்கி, அதை ஸ்டன்ட் மாஸ்டர்கள் பயிற்சிபெறுவதற்காகக் கொடுத்தார். பின்பு அவர் முதல்வரானதும், அவர்களுக்குத் திருமங்கலத்தில் 48 வீடுகள் கட்டிக்கொடுத்து, அவற்றில் 47ஐ குடியிருக்கவும் ஒன்றை மட்டும் அலுவலகமாகப் பயன்படுத்தும்படியும் கூறினார். ஆனால், திருமங்கலம் அவர்களின் பணித்தளமான கோடம்பாக்கத்திலிருந்து வெகு தொலைவில் இருப்பதால், வேண்டாம் என்று மறுத்துவிட்டனர். அவர் காலத்தில்தான் ஸ்டன்ட் மாஸ்டர்களுக்கென்று தனிச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது.

வெயிலில் நடந்தவர்களுக்குச் செருப்பு
அண்ணா, ஒரு கட்டுரையில் காலில் செருப்புகூட இல்லாமல் நடந்துபோகும் ஏழை, தன்னருகே காரில் பறந்துபோகின்றவனை நின்று திரும்பிப்பார்த்துச் செல்வான். ஆனால் காரில் போகிறவனோ, அந்த ஏழையைப் பற்றி கனவிலும் நினைக்க மாட்டான் என்பார். ஆனால் எம்.ஜி.ஆர், அதற்கு விதிவிலக்கு. அவர், எப்போது காரில் போனாலும் படப்பிடிப்பில் இருந்தாலும் அவர் கண்ணில் படும் கஷ்டங்களைப் பற்றி கவலைப்படுவார். அதற்கு தன்னால் முடிந்த அளவுக்குப் பரிகாரம் தேடவும் முயல்வார். ஒரு நாள் கர்நாடக முதலமைச்சரைச் சந்தித்துவிட்டு, அவர் மைசூரிலிருந்து மனைவி ஜானகி அம்மையார் மற்றும் ஜானகி அம்மையாரின் தம்பி மகளோடும் சென்னை திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, சாலை ஓரத்தில் ஒரு பாட்டியும் இளம்பெண்ணும் தலையில் விறகுச் சுமையுடன் கால் சூடு பொறுக்காமல் நின்று நின்று நடந்துசென்றனர். உடனே எம்.ஜி.ஆர், தன்னுடன் காரில் பயணித்த இருவரிடமும் உங்கள் செருப்பைக் கழற்றுங்கள் பாவம் அந்தப் பாட்டி வெயிலில் நடக்க முடியாமல் கஷ்டப்படுகிறார் என்றார். உடனே ஜானகியின் செருப்பு பாட்டிக்கும் ஜானகியின் தம்பி மகள் செருப்பு பாட்டியுடன் வந்த இளம்பெண்ணுக்கும் வழங்கப்பட்டன. அவர்கள், அதன் பின்பு நிம்மதியாக நடந்து சென்றனர். அந்தச் சாலையில் எத்தனை பேர் காரில் போயிருப்பார்கள். யாருக்காவது இந்தச் சிந்தனை வந்ததா?
இளநீர்க்காரருக்கு மருத்துவ உதவி
எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த நேரம். அவர் கோட்டைக்குப் போகும்போது, அவ்வழியே தினமும் ஒருவர் கையில் இளநீர் வைத்துக்கொண்டு அதை நீட்டியபடியே நிற்பார். எம்.ஜி.ஆரின் கார் நிற்காது. ஒரு நாள் எம்.ஜி.ஆர், இங்கு ஒருவர் இளநீர் வைத்தபடி நிற்பாரே அவரைச் சில நாள்களாகக் காணோமே, அவருக்கு என்னவாயிற்று என்று பார்த்துச்சொல்லுங்கள் என்றார். அந்த இளநீர்க்காரர் விஷயம் அப்போதுதான் அவர் உதவியாளருக்குத் தெரிந்தது. விசாரித்துப் பார்த்ததில், இளநீர்க்காரருக்கு மஞ்சள் காமாலை வந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது தெரிந்தது. எம்.ஜி.ஆர், அவருக்கு நல்ல மருத்துவ சிகிச்சை கிடைக்கும்படிச் செய்து, அவருக்கு மேலும் பல உதவிகள் செய்தார்.

போலீஸ்காரருக்கு லிஃப்ட் கொடுத்த எம்.ஜி.ஆர்
எம்.ஜி.ஆர் காரில் வரும்போது, வழியில் ஏதாவது கார் நின்றிருந்தால் உடனே தன் ஆட்களை அனுப்பி என்ன பிரச்னை என்று கேட்டு அவர்களுக்கு உதவுவார். ஒரு நாள், வழியில் ஒரு போலீஸ்காரர் பேருந்துக்காக நிற்பதைப் பார்த்து, அவரைத் தன் காரில் வரும்படி கூறினார். ஆனால், அந்த போலீஸ்காரரோ, தனக்கு அடுத்தவரிடம் தேவையில்லாமல் உதவியோ சலுகையோ பெறுவது பிடிக்காது. தானொரு நேர்மையான போலீஸ்காரர் என்றார். எம்.ஜி.ஆர் திரும்பவும் அவரிடம், இந்த வழியே இனி பஸ் கிடையாது. நீங்கள் காரில் வாருங்கள், அடுத்து வரும் பஸ்ஸ்டாப்பில் இறங்கிக்கொள்ளுங்கள். பஸ் வராவிட்டால், காலையில் டூட்டிக்குப் போக முடியாதே என்றார். போலீஸ்காரருக்கு காரில் வர மனமேயில்லை. இருந்தாலும் இப்போதைக்கு வேறு வழியில்லையே என்று காரில் ஏறி உம்மென்று உட்கார்ந்துகொண்டார். 
எம்.ஜி.ஆருடன் பேச விரும்பாதவர் போல நடந்துகொண்டார். ஆனால் எம்.ஜி.ஆர், தனக்குக் கடமை உணர்ச்சியுள்ள கண்டிப்பான போலீஸ்காரர்களை மிகவும் பிடிக்கும் என்று சொல்லி, அவரது ஸ்டேஷன் மற்றும் டூட்டி விவரங்களை எல்லாம் மெள்ள விசாரித்தார். மன இறுக்கத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுபட்ட போலீஸ்காரர், எம்.ஜி.ஆர் தனக்கு உதவும் நோக்கத்துடன்தன் காரை நிறுத்தி தன்னை ஏற்றிக்கொண்டார் என்பதைப் புரிந்துகொண்டு, பின்பு சகஜமாகப் பேசினார். விரைவில் இருவரும் நல்ல நண்பர்களாகிவிட்டனர். அவர் பின்னர், தன் இரண்டு மகள்களின் திருமணத்துக்கும் எம்.ஜி.ஆரை அழைத்தார். எம்.ஜி.ஆரும் நேரில் சென்று வாழ்த்தினார். 
வேற்று மாநிலங்களில் உதவி
எம்.ஜி.ஆர், 'பணம் படைத்தவன்' படப்பிடிப்புக்கு கொல்கத்தா போயிருந்தபோது அங்கு வாழ்ந்த தமிழர்களுக்கு நிதி உதவி அளித்தார். 'அடிமைப்பெண்' படப்பிடிப்புக்கு ராஜஸ்தான் போயிருந்தபோது, முதல் நாளே அங்கு நடந்த தீவிபத்துக்கு நிவாரணமாக 50,000 உதவினார். 'அன்பே வா' மற்றும் 'இதய வீணை' படப்பிடிப்புகளுக்கு காஷ்மீர் போனபோது, உடன் வந்த நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு ஸ்வெட்டர், சாக்ஸ் மற்றும் மஃப்ளர் வாங்கிக் கொடுத்தார். இதை, டான்ஸ் மாஸ்டர் புலியூர் சரோஜா தனது பேட்டியில் தெரிவித்தார்.

ரிக்‌ஷாக்காரருக்கு மழைக்கோட்டு 
1964-ம் வருடம். அப்போது காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. நல்ல மழை. எம்.ஜி.ஆரின் கார், கோடம்பாக்கம் ரயில்வே கேட்டில் நிற்கிறது. ஒரு ரிக்‌ஷா ஓட்டி, வேகமாகத் தன் வண்டி நனையாமல் இருக்க பாடுபடுகிறார். வண்டி சீட் நனைந்துவிட்டால், யாரும் வண்டியில் ஏற மாட்டார்களே என்ற கவலை அவருக்கு. தான் மழையில் நனைந்தாலும் வண்டி நனையக் கூடாது என்று கவலைப்படும் அந்தத் தொழிலாளிக்காக எம்.ஜி.ஆர் கவலைப்பட்டார். அதனால்தான் அவர், 'ஏழைப் பங்காளன் எம். ஜி.ஆர்' என்று வாழ்த்தப்படுகிறார். 
எம்.ஜி.ஆர், உடனே சென்னையில் எத்தனை ரிக்‌ஷாக்கார்கள் இருக்கிறார்கள் என்ற விவரம் கேட்டறிகிறார். மொத்தம் 3000 என்கின்றனர். இவர், தன் தையல்காரரிடம் சொல்லி ஒரே வாரத்துக்குள் 5000 மழைக்கோட்டுகளைத் தைக்கும்படி உத்தரவிடுகிறார். எத்தனை தையல்காரர் வேண்டும் என்றாலும் வாடகைக்கு வைத்துக்கொள்ளுங்கள் என்கிறார். தைத்து முடித்ததும், அறிஞர் அண்ணாவை அழைத்து, அவர் கையால் ரிக்‌ஷாக்காரர்களுக்கு மழைக்கோட்டுகளை வழங்கும்படிச் செய்தார். மீதி 2000 கோட்டுகள் மதுரை, திருச்சி போன்ற ஊர்களில் வாழ்ந்த ரிக்‌ஷாக்காரர்களுக்கு வழங்கப்பட்டன.
சாலைப் பணியாளருக்குக் காலுறை
கணவன்' படத்தில் ஜெயலலிதாவும் எம்.ஜி.ஆரும் தார்ச்சாலை போடும் பணியாளர்களாக நடித்திருப்பார்கள். அப்போது, ஜெயலலிதா காலில் தார் கற்கள் ஒட்டிக்கொள்ளும். அவற்றை எம்.ஜி.ஆர் மெள்ள மெள்ள ஒவ்வொன்றாக எடுத்துவிட்டு, தன் கால் செருப்பைக் கொடுத்து போட்டுக்கொள்ளச் சொல்வார். அவர், தார்ச்சாலைமீது சமப்படுத்தியபடி வரும் புல்டோஸரோடு அதன் சக்கரத்தில் தண்ணீர் ஊற்றியபடி ஓடி வருவார். புதிதாகப் போடப்பட்ட தார், காலில் ஒட்டாதபடி அப்போது காலில் சாக்குத்துணி கட்டியிருப்பார். இந்த நிலை பிறகு மாறிவிட்டது. எம்.ஜி.ஆர், சாலைப் பணியாளருக்கு ரப்பர் கால் உறைகள் வழங்கி, அவர்களின் கண்ணீர் துடைத்தார்.

Thursday, 4 January 2018

SAVITHRI NOT ONLY ACTRESS , KIND HEARTED WOMAN PHILANTHROPIC BORN JANUARY 4 ,1934.



SAVITHRI NOT ONLY ACTRESS , 
KIND HEARTED WOMAN  PHILANTHROPIC 
BORN JANUARY 4 ,1934.


நடிகர்களில் என் .எஸ் .கிருஷ்ணன் ,நடிகைகளில் சாவித்திரி ,புராணத்தில் கர்ணன்  இம்மூவரும்  ஒரே நேர் கோட்டில் கொடுத்து வாழ்ந்தவர்கள்   


ஒருவர் வாழ்ந்த வாழ்க்கை வரலாறாகவோ, காவியமாகவோ ஆவதில்லை. ஆண்டவனால் ஆசிர்வதிக்கப்பட்ட ஆயிரத்தில் ஒருவருக்கு தான், வாழ்க்கை, வரலாறு சொல்லக்கூடிய காவியமாக இருக்கிறது. அந்த ஆயிரத்தில் ஒருவர் தான் நடிகையர் திலகம் சாவித்திரி. அவரது வாழ்க்கை வரலாற்றை இங்கு தொடராக தொகுத்து வழங்குகிறார் கட்டுரையாசிரியர்.

முதன் முதலாக, சாவித்திரி, ஜெமினியை சந்தித்தது, மனம் போல் மாங்கல்யம் படப்பிடிப்பில் தான்!
வெள்ளை நிறச் சட்டை, அதற்கு இணையாய் போட்டிருந்த கால்சட்டையில், எடுப்பாய் இருந்த அந்த இளைஞர், சாவித்திரியை நோக்கி வந்தார்.
அவரைப் பார்ப்பதை தவிர்க்க முனைந்த சாவித்திரியால், கண்களை அப்புறப்படுத்த முடியவில்லை. அவர் அருகில் வந்ததும், அவர் மனதுள் இனம் புரியாத பரவசம்!

'இவர் தான் இந்தப் படத்தின் கதாநாயகன்...' என்று, இயக்குனர் பி.புல்லையா, அந்த இளைஞனை அறிமுகப்படுத்த, அந்த இளைஞரோ, சாவித்திரியைப் பார்த்து, 'ஹலோ...' சொல்லி, நகர்ந்து சென்றார்.
சாவித்திரிக்கு, அவருடன் பேச வேண்டும் என்ற துடிப்பு. ஆனால், வெறும் ஒற்றை வரியில் பேசிச் சென்றவரிடம், 'நாம் வலிந்து பேசுவதா...' என நினைத்து, தன் ஆர்வத்திற்கு தடை விதித்துக் கொண்டார். முதல் சந்திப்பிலேயே, சாவித்திரிக்கு பரவசத்தை ஊட்டிய அந்த இளைஞர் தான், ஜெமினி கணேசன்!
ஜெமினி கணேசனின் உண்மையான பெயர், ராமசாமி கணேசன். தஞ்சை புதுக்கோட்டையை சேர்ந்த, நடுத்தர பிராமண வகுப்பை சேர்ந்தவர். தமிழ் திரைத்துறையில் ஆரம்ப கால நடிகர்கள், நாடக பின்னணியில் இருந்து வந்தவர்கள். ஆனால், எவ்வித நாடக அனுபவமும் இன்றி, திரையுலகிற்கு வந்தவர் ஜெமினி கணேசன்.

எஸ்.எஸ்.வாசனின், ஜெமினி ஸ்டுடியோவில், நிர்வாக மேலதிகாரியாகப் பணியாற்றிய காரணத்தால், தன் பெயரோடு, ஜெமினியை சேர்த்துக் கொண்டார். பின்னாளில் ஜெமினி என்ற அடைமொழிப் பெயரே, அவரின் நிஜப்பெயர் போல் ஆனது.
ஜெமினி புரொடக் ஷன் தயாரித்த, மிஸ் மாலினி என்ற படத்தின் மூலம், முதன்முதலாக திரைக்கு அறிமுகமானார் ஜெமினி கணேசன். தனக்கென்று தனி பாணியை வகுத்து, காதல் மன்னனாய் உலா வந்தவர், அக்கால கல்லூரி பெண்களின் கனவு நாயகனாகவும் திகழ்ந்தார்.
தமிழில், பாதாள பைரவி படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் சாவித்திரி. இதற்கு முன், தெலுங்கில், சம்சாரம் என்ற படத்தில் நடித்திருந்தார்.
பாதாள பைரவி படத்தை தொடர்ந்து, தமிழில், தேவதாஸ் மற்றும் பரோபகாரம் ஆகிய படங்களில் நடித்தார் சாவித்திரி. தேவதாஸ் மற்றும் பாதாள பைரவி இரண்டும் பெரிய வெற்றியை பெற, தேவதாசின் பார்வதி, தமிழகம் மறக்க முடியாத கதாபாத்திரம் ஆனது.

நெல்லூரைச் சேர்ந்த பி.புல்லையா, 1937ல், சாரங்கதாரா என்ற படத்தின் மூலம் இயக்குனராக, திரையுலகில் அடி எடுத்து வைத்தார். இவர், தன் படத்தில் நடித்த கதாநாயகி சாந்தகுமாரியை, மணந்து கொண்டார்.
பார்வதி கதாபாத்திரத்தில், சாவித்திரியின் நடிப்பை கண்ட இயக்குனர் புல்லையா, நாராயணன் அன் - கோ கம்பெனி சார்பில், தான் இயக்க இருந்த, மனம் போல் மாங்கல்யம் படத்தில், சாவித்திரியை ஒப்பந்தம் செய்தார்.
இப்படத்தில் ஜெமினி, சாவித்திரி மற்றும் சுரபி பாலசரஸ்வதி நடித்திருந்தனர்.

முதல் நாளில் ஜெமினியை பார்த்ததில் இருந்து, சாவித்திரியின் மனதில் அவரின் நினைவு தான். 15 வயதை தாண்டிய சாவித்திரிக்கு, மனதில் காதல் பட்டாம்பூச்சி, இறக்கை விரித்து, பறக்க ஆரம்பித்தது.
தெலுங்கு பெண்ணான சாவித்திரிக்கு, தமிழ் கடினமாக இருந்தது. ஒரு சில சொற்களை தவிர, தமிழில் வேறு எதுவும் பேச தெரியாமல், படத்தில் நடிக்க திணறினார். சாவித்திரியின் நிலை கண்டு அவருக்கு உதவ வந்தார் ஜெமினி. கலகலப்பான குணத்துடன், மனதில் பட்டதை, 'பளிச்' என்று பேசும் ஜெமினியின் பேச்சு, சாவித்திரிக்கு அவர் மேல் காதலை ஏற்படுத்தியது.

சிறு வயதிலேயே தந்தையை இழந்த சாவித்திரி, தன் தந்தையின் அரவணைப்பையோ, ஆறுதலையோ பெற்றதில்லை. இந்நிலையில், ஜெமினியின் அரவணைப்பு, அவருக்கு பெரும் ஆறுதலைத் தந்தது.
படப்பிடிப்பு சமயங்களில், ஜெமினியை சீண்டி, அவர் கோபப்படுவதை பார்த்து ஆனந்தப்படுவதும், தன்னை விட்டு அவர் வேறு யாரிடமாவது பேசினால், பொறாமை கொள்வதும் என, அவர் மனம் ஜெமினியுடன் இரண்டற கலக்கத் துவங்கியது.
சாவித்திரியின் மனநிலை, ஜெமினிக்கு தெரியாமல் இல்லை. அவரும் அந்த நிலைமைக்கு மாறி, நாட்கள் பலவாகி இருந்தன.
சாவித்திரியை காதலிக்க துவங்கிய ஜெமினியின் மனதில், எங்கோ ஒரு மூலையில், இரண்டு பாச முட்கள் குத்தி கொண்டே இருந்தன.
ஏற்கனவே, இரு பெண்களை திருமணம் செய்தவர் ஜெமினி. இந்து திருமண சட்டத்தின்படி, முதல் மனைவியை மண முறிவு செய்யாமல், இன்னொரு மணம் புரிய முடியாது. ஆனால், ஜெமினி எப்படி, மூன்று பெண்களை, பகிரங்கமாக மணம் முடித்தார் என்பது தான், இன்று வரை விளங்காத மர்மம். 

சென்னை கிறித்தவ கல்லூரியில் படிப்பை முடித்த பின், தன், 19வது வயதில், ஜூன், 30, 1940ல் அலமேலு என்ற பாப்ஜியை திருமணம் செய்தார் ஜெமினி.
அதன்பின், தன் முதல் படமான, மிஸ் மாலினி படத்தில், தன்னுடன் நடித்த புஷ்பவல்லியை மணந்தார். இதில் சிறப்பு என்னவென்றால், புஷ்பவல்லியும், ஜெமினியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் என்பதே!
சாவித்திரியை காதலிக்கும் அதே சமயத்தில் தான், புஷ்பவல்லியுடனும், ஜெமினியின் காதல் தொடர்ந்தது.
ஜெமினியை காதலிக்க ஆரம்பித்தபோது, அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது என்பது சாவித்திரிக்கு தெரியும்; ஆனால், புஷ்பவல்லியுடன் நடந்த காதல் திருமணம், அவருக்கு தெரியாத ஒன்று!
மனம் போல் மாங்கல்யம் படம் வளர்ந்த வேகத்தை விட, ஜெமினி - சாவித்திரியின் காதல் வளர்ந்த வேகம் அதிகம்!

பதினைந்து வயதை தாண்டிய சாவித்திரிக்கு, ஜெமினியின் அரவணைப்பு, சொர்க்கமாக தெரிந்தது. தான் தலை சாய்ந்து தூங்கும் அந்தத் தோள்கள், தனக்கு மட்டுமே சொந்தம் என நினைத்தார். கடைகளில் அவர் ஏதாவது பொருள் வாங்க போனால், முதலில், ஜெமினிக்கு பிடித்தமானதை தான் தேடுவார்.
இவர்களின் காதல் பார்வைகள், படக் குழுவினர் அனைவருக்கும் தெரிய ஆரம்பித்தது.
ஒருநாள், படப்பிடிப்புக்கு, ஜெமினி வர சற்று காலதாமதம் ஆகிவிட்டது; 'ஜெமினி வரும் வரை ஏன் நேரத்தை கடத்த வேண்டும், சாவித்திரி நடிக்க வேண்டிய காட்சிகளை எடுக்கலாம்...' என்றார் இயக்குனர் புல்லையா. ஆனால், அதற்கு ஒத்து கொள்ளவில்லை சாவித்திரி. ஜெமினியை பார்க்காமல், தன்னால் நடிக்க முடியாது என்பது, அவருக்கு மட்டும் தானே தெரியும்!

காலதாமதமாக வந்த ஜெமினியை கண்டவுடன், சாவித்திரியின் கண்களில், தாரை தாரையாக கண்ணீர்! காதல் எவ்வளவு வலிமையானது என்பதை, அப்போது தான் தெரிந்து கொண்டனர் படக்குழுவினர்.
குச்சுப்புடி நடனம் ஆடுவதில் திறமையானவர் சாவித்திரி. அந்த நடனத்தின் வாயிலாக தான், திரைப்பட வாய்ப்பை பெற்றார்.
சிறுவயதிலேயே திரையுலகில் காலடி எடுத்து வைத்த சாவித்திரி, தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான போது, அவரின் வயது, 15!
யார் கண்ணீர் விட்டு அழுதாலும், சாவித்திரியால் தாங்க முடியாது. கஷ்டம் என்று வந்தவர்களுக்கு, இல்லை என்று அவர் கை விரித்ததில்லை.

சம்சாரம் என்ற தெலுங்கு படத்துக்கு பின், விஜயா புரொடக் ஷன்ஸ் தயாரித்த, பாதாள பைரவி என்ற படத்தில், ஒரு நடனக் காட்சியில், தெலுங்கு மற்றும் தமிழ் என, இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் நடித்துக் கொண்டிருந்தார், சாவித்திரி.
ஒருநாள், படப்பிடிப்பில், கடைநிலை ஊழியர் ஒருவர் மயங்கி விழுந்து விட்டார். சாவித்திரி கையில், காசு எதுவும் இல்லாத ஆரம்ப கால நேரம் அது. மயங்கி விழுந்த ஊழியரை, அருகில் இருந்த மருத்துவரிடம் அழைத்து சென்றனர்.
அந்த ஊழியரைப் பரிசோதித்த மருத்துவர், அவருக்கு மூளையில் கட்டி இருப்பதாக கூறினார்.

அந்த ஊழியரின் மருத்துவ செலவுக்காக, சிறுவயதில் தன் தாய், தன் விரலில் அணிவித்த மோதிரத்தைக் கழற்றிக் கொடுத்தார், சாவித்திரி. நல்ல பெயர் எடுப்பதற்காக, அவ்வாறு செய்வதாக குதர்க்கமாக பேசினர் சிலர். ஆனால், அதை சாவித்திரி கண்டுகொள்ளவில்லை.
காங்கிரஸ் தலைவரான காமராஜர் வீட்டின் அருகில் தான் சாவித்திரியின் வீடு இருந்தது. பல நேரங்களில் மரியாதை நிமித்தமாக, அவர் காமராஜரை சந்திப்பது வழக்கம். அவருக்கு பிடித்த தலைவர்களில் ஒருவர் காமராஜர்.
நிதியின்றி காமராஜர் கட்சி நடத்த கஷ்டப்படுகிறார் என்பதை கேள்விப்பட்ட சாவித்திரி, தன் நகைகளை எல்லாம் அவரிடம் கொடுத்தார்.

அவரின் பாசத்தை கண்டு காமராஜருக்கு, என்ன சொல்வது என்றே தெரியவில்லை.
அந்த நகைகளை அவரிடமே திருப்பி கொடுத்து, 'நிதி விஷயத்தை கட்சிக்காரர்கள் பார்த்து கொள்வர்; நீயும், உன் கணவரும் எங்களுக்காக பரப்புரை செய்கிறீர்களே அது போதும்...' என்றார்.
சாவித்திரியின் மனதை படித்தவர்களுக்கு தான் தெரியும், அவருடைய கருணை உள்ளம்!
தான் சம்பாதித்த பணத்தில், எத்தனையோ குடும்பங்களை வாழ வைத்து இருக்கிறார் என்பதை, மனசாட்சி உள்ளவர்கள் புரிந்து கொள்வர்.
காதலில் விழுந்த சாவித்திரியின் காதல் பயணம், தங்கு தடையின்றி போன போது, வந்த செய்தி ஒன்று, அவரை அதிரச் செய்தது!
— தொடரும்.

ஞா. செ. இன்பா



R P ராஜநாயஹம்


கேமராவிற்கென்றே வடித்த முகம் ஒன்று என்றால் அது சாவித்திரியின் முகம் தான்! எப்போதும் நான் பொது இடங்களுக்கு செல்லும்போது சாவித்திரி போல ஒரு பெண் தென்படுகிறாரா என்று தேடுவேன். தேடிக்கொண்டே தான் இருக்கிறேன்.இன்னும் சாவித்திரி போன்ற அச்சு அசலாக இன்னும் ஒரு பெண்ணை பார்க்க வாய்க்கவில்லை. வாழ்க்கையில் எத்தனையோ நிராசைகள்!என்னுடைய சாவித்திரி பாசமலர்,பாதகாணிக்கை,காத்திருந்த கண்கள் போன்ற படங்களில் வரும் செழிப்பா
ன சாவித்திரி.

சாவித்திரிக்கு சிவாஜி போலவே ஒவ்வொரு காலகட்டத்திலும் உடல் அமைப்பில் மாறுபாடு  உண்டு.  தேவதாஸ்,மிஸ்ஸியம்மா,மாயாபஜார் சாவித்திரி ஒரு வகை அழகு. களத்தூர் கண்ணம்மா,பாசமலர், பாவமன்னிப்பு, பாதகாணிக்கை, காத்திருந்த கண்கள் போன்ற படங்களில் வரும் சாவித்திரி வேறு வகை அழகு.

அப்புறம் பூஜைக்கு வந்த மலர் படத்தில் வரும் குண்டு சாவித்திரி.
திருவருட்செல்வர் படத்தில் ’ஊதிப்பெருத்த’ சாவித்திரி. பின்னால் மலையாளப்படம் ’சுழி’ சாவித்திரி. அப்புறம் அம்மா கதாபாத்திரங்களில் மெலிந்த ஒல்லி சாவித்திரி

அமிதாப் பச்சன் கூட இப்போது சாவித்திரி பற்றி குறிப்பிட முடிகிறது. ரேகா தன் சோட்டி மம்மி பற்றி சிலாகிக்கிறார். சாவித்திரி மட்டுமே அனைத்து நடிகைகளிலிருந்தும் வித்தியாசமானவர்! நடிகைகள் அனைவரிலும் மேலான திறமை கொண்டவர் தான் சாவித்திரி.

பத்மினி,சரோஜாதேவி,தேவிகா இந்த வரிசையில் முதலிடம் சாவித்திரிக்குத் தான். வேற்று மொழிப்பெண்கள் தமிழ் திரையில் அன்று நிகழ்த்திய கண்ணிய சாதனை மகத்தானது. முழுக்க ஹீரோ நடிகர்களின் ஆக்கிரமிப்பின் காலத்தில்,ரசிகப்பெருமக்களும் அந்த நடிகர்கள் பற்றிய பிரமிப்பில் இருக்கின்ற நிலையில்,  பெண் கதாபாத்திரங்களை ஏற்று நடித்த அன்றைய சாவித்திரி,பத்மினி,சரோஜாதேவி,தேவிகாவெல்லாம் உயர்ந்த கலாபூர்வ நளினத்தை வெளிப்படுத்தினார்கள்.

சாவித்திரி தன் துணை யாரென்று ஆரம்ப காலத்திலேயே,16 வயதிலேயே தேர்ந்தெடுக்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்திருக்கிறார்.அதிலும் சாஸ்திரப்படி இரண்டாவது மனைவி அந்தஸ்தில், சம்பிரதாய வரிசைப்படி மூன்றாவது தாரமாக வாழ்க்கைப்பட்டவர்.ஜெமினி கணேசனுக்கு அப்போது 32 வயது!

(படிப்பதற்கே தலை சுற்றுகிறதென்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.)

சில வருடங்கள் ரகசியமாக அந்தத் திருமணத்தைப் பேணிக்காக்க வேண்டிய சூழ்நிலை வேறு! தலைமறைவுத் தாம்பத்தியம்.இதற்கு அவருடைய வளர்ப்பு தகப்பன் சௌதுரி மட்டும் காரணமல்ல.ஆனால் ஜெமினிகணேசன் காந்தர்வத்திருமணம் ( எவ்வளவு யோசித்தும் வேறு வார்த்தை கிடைக்கவில்லை.) செய்து கொண்ட பிரபல நட்சத்திரம் புஷ்பவல்லியும் தான் காரணம்.முதல்மனைவி பாப்ஜி அமைதியாக வேடிக்கை பார்த்தாலும் கூட புஷ்பவல்லி கடுமையான குரோதத்தை சாவித்திரி மீது காட்டினார்.  தான் ஓட்டி வந்த காரை இவர் மீது ஏற்றிக் கொல்லத்துணிகிற ஆவேசம்,துவேசம் புஷ்பவல்லிக்கு இருந்தது.

1952ல் மனம்போல் மாங்கல்யம் படத்தில் நடித்துக்கொண்டிருந்த காலத்தில் சாவித்திரிக்கு திருமணம். ஏற்கனவே ஜெமினி கணேசனுக்கு1951செப்டம்பர் 22ல் புஷ்பவல்லியோடு தொடர்பு ஏற்பட்டு விட்டது.புஷ்பவல்லிக்கு 1954ல் ரேகாவும் 1955ல் ராதா என்ற பெண்ணும் பிறந்த நிலையில் அந்த வருட கடைசியில் Gemini-Pushpavalli relationship ended abruptly. 1956ல் தான் சாவித்திரியுடன் ஜெமினி திருமண உறவு வெளித்தெரிந்தது.

இவ்வளவிலும் சாவித்திரியின் நடிப்புத்திறமை ஜ்வலித்த மாயம் தான் பெரிய விஷயம். Director’s delight என்றே பெரிய இயக்குனர்கள் வாய்விட்டுச்சொன்னார்கள்.பிரமிக்க அடிக்கிற நேர்த்தியான நடிப்பு.

An angel’s graceful performance!

தெலுங்கு தமிழ் திரையுலகங்களில் கதாநாயக தேவேந்திரர்களின் இந்திராணியாக சாவித்திரி எட்டுக்கண்ணும் விட்டெரிய வலம் வந்தார்.

நிர்மலமான அழகுமுகம் கொண்ட சாவித்திரி.
பெண்மையின் மொத்த சாரமும் இயைந்து ஊறிய ஈர மென்மை.

எந்த ஹீரோ நடித்தாலும்,படத்தின் பெரும்பகுதியையும் ஹீரோ ஆக்கிரமித்தாலும் சாவித்திரி தன் விஷேச நடிப்பால் புறந்தள்ளி விட்டார்.

காதல் காட்சிகளில் vulgarity,obscenity எதுவும் காணமுடியாது. வேட்டைக்காரனில் எம்.ஜி.ஆருடன் காதல் காட்சி பற்றி கொஞ்சம் முணுமுணுப்பு இருந்தது.

சாவித்திரி தெலுங்குப்பெண்.ஆனால் தமிழ் பேசுவது ரொம்ப கச்சிதம். Accent and Diction பிரமாதம். சிவாஜி கணேசனுக்கு இணையாக ஏன் இன்னும் கூடிய அளவில் தமிழ் உச்சரிப்பு சிறப்பாகவே இருக்கும்.ஆனால் சிவாஜி ஒரு தெலுங்குப் படத்தில்(பெம்புடு கொடுகு) நடித்தபோது “Ganesan’s Telugu pronunciation is horrible” என்று அங்கே ஒரு பத்திரிக்கையில் (Kinema, Dec 1953 issue)எழுதினார்கள். நடிகர் திலகத்தை விட நடிகையர் திலகம் எத்தகைய திறமை வாய்ந்தவர்!
சார்லி சாப்ளின் போலவே சாவித்திரியும் Left hander!சாவித்திரியின் நடிப்பைப் பற்றி விளக்கக்கூட ஒரே வார்த்தை-'Perfect'.

சாவித்திரியின் கண்கள் பேசிய கதைகள்! முக பாவங்களின் உணர்ச்சிகள்!

சரோஜாதேவி தனக்கு கிடைத்த வாய்ப்புகளால் சாவித்திரியை மிஞ்சி விடமுடிந்தாலும் அவருடைய திறமையான நடிப்பை நெருங்க முடிந்ததில்லை.

நடிகையாக சாவித்திரியின் சாதனைகள் பற்றி எழுதி உணர்த்தி விட சாத்தியமில்லை. The greatest actress ever born and ever to be born!
ஆறு படங்கள் இயக்கியவர்.ஜெமினி,வாணிஸ்ரீ யுடன் நடித்த ’குழந்தையுள்ளம்’,(’முத்துச்சிப்பிக்குள்ளே ஒரு பூவண்டு,துயில் கொண்டதே இன்பத்தேனுண்டு’ என்ற ஆரம்பகால எஸ்.பி.பி பாடல் இந்தப்படத்தில் தான்!)சிவாஜியுடன் இவர் நடித்த’பிராப்தம்’ (பி.சுசிலா டிஎம்எஸ் பாடிய ’சொந்தம் எப்போதும் தொடர்கதை தான்.முடிவே இல்லாதது.எங்கே சென்றாலும் தேடிகிடைக்கும் இனிய சுகம் இது’)இரண்டு படங்களும் சாவித்திரியே இயக்கியவை தான்.

1969ல் ஜெமினி கணேசனும் சாவித்திரியும் பிரிந்து விட்டார்கள்.

சாவித்திரி தமிழில் எடுத்த ’பிராப்தம்’ படமும் தெலுங்கில் எடுத்த ’விண்ட சம்சாரம்’படமும் இவர் பொருளாதாரத்தை சிதைத்து வாழ்வு தடம்புரளக்காரணமாகிவிட்டது.
தெலுங்கில் சாவித்திரியுடன் அக்கினேனி நாகேஸ்வரராவ்,ஜமுனா நடித்து வெற்றி பெற்ற படம் ’மூக மனசுலு’.இதைத்தான்  சாவித்திரி தமிழில் 1969ல் படப்பிடிப்பை துவங்கி சிவாஜி,சந்திரகலாவும்  நடிக்க ’பிராப்தம்’ என்ற பெயரில் தானே கதாநாயகியாக நடித்து,தயாரித்து இயக்கினார்.
’பிராப்தம்’ படம்  இரண்டு வருடம் தயாரிப்பில் இருந்ததால் வட்டி எகிறி விட்டது.சிவாஜி படங்கள் சில அந்த நேரத்தில் சரியாக ஓடாததால் வினியோகஸ்தர்கள் இந்தப் படவெளியீட்டில் ஒத்துழைக்கவில்லை.அதனால் படம் படுதோல்வி கண்டது.

தமிழில் சிவாஜி பத்மினி நடித்த ’வியட்நாம் வீடு’ படம் தான்தெலுங்கில்1970ல் துவங்கி ரீமேக்காகி ’விண்ட சம்சாரம்’ என்ற பெயரில் சாவித்திரியும் ஜக்கையாவும் நடித்து வெளியானது.

பிராப்தம், விண்ட சம்சாரம் இரண்டு படங்களுமே ஒரே நாளில் 1971ல் வெளியாகிய படங்கள். துரதிர்ஷ்டங்கள் எப்போதுமே தனியாக வருவதேயில்லை!

ஒரு மனுஷியாக saint என்று தான் சொல்லவேண்டும். சொத்துக்களை இழந்து,ஹபிபுல்லா ரோடு பங்களாவை இழந்து, அண்ணா நகர் வீட்டில் இருந்த போதுகூட அவர் செய்த உதவிகள் பற்றி தெரிய வரும்போது ஆச்சரியம் தான் மிஞ்சுகிறது.

ஒரு ரசிகர். தினமும் நூறு ரூபாய் மணியார்டர் சாவித்திரிக்கு செய்து வந்தவர்.திடீரென்று ஒரு நாள் தன் தொழிலில் நொடித்துப்போய் சாவித்திரியைக் காண வந்து தன் நிலையை சொல்கிறார். 6000 ரூபாய் இருந்தால் மீண்டும் பிசினசை துவங்கமுடியும். வீட்டில் உள்ள தன் ஷீல்டுகள் எல்லாவற்றையும் ஒரு சேட்டுக்கடையில் விற்று 10000 ரூபாய் அந்த ரசிகருக்கு கொடுத்தவர்.

அண்ணாநகர் வீட்டுக்கு இவருடைய பழைய டிரைவர் ஒருவரின் மகள் வருகிறார்.தன்னுடைய விலையுயர்ந்த சேலையை எடுத்து வீட்டு முன் இருக்கிற ரிக்‌ஷாக்காரனிடம் கொடுத்து விற்று வரச்சொல்லி,கிடைக்கும் பெருந்தொகையான பணத்தை அந்தப்பெண்ணின் திருமணச்செலவுக்கு கொடுக்கிறார். பெண் தெய்வம் சாவித்திரி!

எம்.ஜி.ஆருடன் மஹாதேவி,வேட்டைக்காரன்,பரிசு ஆகிய படங்கள். சந்திர பாபு தயாரித்து இயக்கி, வாழ்க்கையைப் பாழாக்கி, முடியாமல் நின்று போன ’மாடி வீட்டு ஏழை’யில் கூட எம்.ஜி.ஆருக்கு ஜோடி சாவித்திரி தான்.


சிவாஜியோடு ஜோடியாக அமரதீபம்,வணங்காமுடி,அன்னையின் ஆணை, காத்தவராயன் துவங்கி,ரத்தத்திலகம்,கை கொடுத்த தெய்வம், நவராத்தி்ரி, திருவிளையாடல் தாண்டி பிராப்தம் வரை சாவித்திரி!

ஜெமினி கணேசன் தான் சாவித்திரிக்கு மிகப்பொருத்தம் என்று இன்றும்
”யார் யார் யார் அவள் யாரோ ஊர்பேர் தான் தெரியாதோ” “காலங்களில் அவள் வசந்தம்” காற்று வந்தால் தலை சாயும் நாணல்” போன்ற பாடல்கள் சாட்சி சொல்கின்றன.

பாசமலர் படம் ரிலீஸ் அன்று எல்லாம் உனக்காக என்று ஒரு படமும் வெளியானது. அதில் சிவாஜியின் ஜோடி சாவித்திரி. ஆனால் அண்ணன் தங்கையாக பாசமலரில் வந்தவர்கள் அதே நேரத்தில் இதில் ஜோடியாக நடித்ததை ரசிகர்கள் ஏற்கவில்லை.

சாவித்திரியின் Rash car driving பற்றி இப்போதும் பலர் நினைவில் வைத்திருக்கிறார்கள்.அவருடைய குடிப்பழக்கம்.... மிகத்தேர்ந்த நடிகை சொந்த வாழ்க்கையில் வேஷம் போடத்தெரியாதவராயிருந்திருக்கிறார்!

அவருடைய அம்மா சுபத்ராம்மா,அக்கா மாருதி ஆகியோரை புகைப்படங்களாக பார்க்கும்போது அவர்கள் சாவித்திரியின் பேரழகுக்கு உறை போடக்காணமாட்டார்கள் என்று உடனே தோன்றுகிறது. சேற்றில் செந்தாமரை தான்.  ஒன்றரை வருடங்கள் கோமாவில் கிடந்து சாவித்திரி  இறக்கவேண்டி யிருந்திருக்கிறது.அப்போது 46 வயது. சில மரணங்கள் ஆறாத துயர வடுக்களை ஏற்படுத்தி விடுகின்றன. 

ஆறாது ஆறாது அழுதாலும் தீராது
ஆனாலும் வழியென்ன தாயே! 

இந்திய அரசாங்கம் 08-03-2009ல் ஒரு தபால்தலை சாவித்திரிக்கு வெளியிட்டது.இந்த விஷேச கௌரவம் இந்தி நடிகை தேவிகாராணி,மீனாகுமாரிக்கும் கூட கிடைத்திருக்கிறது.


Sunday, 24 December 2017

MGR - THE PHILANTHROPIC DIED 1987 DECEMBER 24




MGR - THE PHILANTHROPIC DIED
 1987 DECEMBER 24





எம்ஜியார் என்றால் அவர் ஒரு மலையாளி என்று .உண்மையில் அவர் தேவர் இனத்தை சேர்ந்த மன்றாடியார் என்பதே உண்மை .சிவாஜியும் 
அவரும் ஒரே ஜாதி தான் .இதை எம்ஜியார் ஒரு சமயத்தில் சொல்லியும் இருக்கிறார் .
ஆனால் விளம்பர படுத்தப் படவில்லை

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

எம்ஜியா்ரும் தமிழ் பற்றும்....

எம்ஜியார் அவர்கள் மலையாள நாயர் வகுப்பில் பிறந்தவர் என்பதால் அவர் வாழும் காலத்தில் பல நேரத்தில் மலையாளி எப்படி தமிழ் நாட்டை ஆளலாம்? என்ற விமர்சனங்கள் அவர் மேல் எழுந்தன.
தமிழ் நாட்டை தமிழன்தான் ஆள வேண்டும் என்று ஒரு சிலர் சொல்லிப்பார்த்தனர். ஆனால் தமிழ் மக்கள் அவரை முழுவதுமாக ஏற்றுக் கொண்டதோடு கொண்டாடினர். ஏன் இன்னும் கொண்டாடிக் கொண்டுதான் இருக்கின்றனர் என்று சொன்னால் அது மிகையாகாது. அவர் தமிழனாகவே வாழ்ந்து தமிழனாகவே மறைந்தார்.

பிறப்பினால் மலையாளி ஆனாலும் என்றுமே அவர் தன்னை மலையாளியாக அடையாளப்படுத்திக்கொண்டதில்லை. தமிழ் மேல் நல்ல பற்றுக் கொண்டிருந்தார் என்பதற்கு பல உதாரணங்களை இந்தப் புத்தகத்தில் படித்தேன்.
முதலாவது அவர் பிறந்தது இலங்கையில், கேரளாவில் இல்லை. சிறு வயதிலேயே தந்தையை இழந்தவுடன், அவரின் தாய் தன் இரு மகன்களான சக்ரபாணி, ராமச்சந்திரன் ஆகிய இருவருடன் பிழைப்புத்தேடி வந்த மாநிலம் தமிழ்நாடுதான். அவர் முதலில் பள்ளிக்குப்போனது தமிழ் நாட்டில் இருக்கும் தமிழ்ப் பள்ளியில்தான். தமிழ்ப்பள்ளியில் சிறிது காலமே படித்தாலும் ஆரம்ப கல்வியை நல்லமுறையில் கற்றுக் கொண்டார்.
குடும்ப வறுமையின் காரணமாக ஏழை விதவையான சத்யபாமா, தன் பிள்ளைகள் இருவரையுமே நாடகக்கம்பெனியான மதுரை பாய்ஸ் கம்பெனியில் சேர்ந்துவிட்டார். எம்ஜியாருக்கு அப்போது ஏழு வயதுதான் இருக்கும்.

எம்ஜியார், நடிப்பு, பாடுதல், மனனம் செய்தல் போன்ற பல விடயங்களை கற்றுக் கொண்டார். அதுவும் ஆரம்பகாலம் முதல் தமிழ்தான். வசனம் பேசி, நடிக்க தமிழ் உச்சரிப்பையும் நன்கு கற்றுக் கொண்டு, குரல் மகரக்கட்டு உடையும் வரை பெண்குரலில் பாடி பெண் வேஷங்கள் பலவற்றைப் போட்டிருக்கிறார்.
பாய்ஸ் கம்பெனியில் முதலில் அவருக்கு கிடைத்தது வெறும் சாப்பாடு மட்டும்தான். கொஞ்சம் அனுபவம் கிடைத்து வேஷம் கட்ட ஆரம்பித்தபின் தான் வாரம் நான்கு அணா வாங்கினார். அதாவது 25 பைசாதான் அவரது முதல் சம்பளம். அப்படியென்றால் மாதத்திற்கு 1 ரூபாய் மட்டும் தான் என்று நினைக்கும்போது அது ஆச்சரியமளிக்கிறது.

பாய்ஸ் கம்பெனி எங்கெல்லாம் செல்கிறதோ அங்கெல்லாம் செல்ல வேண்டும். தங்குமிடமும் சாப்பாட்டும் கம்பெனி பொறுப்பு. அவர்கள் கொண்டு வந்து கொடுக்கும் சம்பளத்தில் தான் அவர்கள் குடும்பம் நடந்தது என்பதை நினைத்தால் அதிசயமாயிருக்கிறது.
எம்ஜியார் வளர வளர அவருடைய தமிழ் ஆர்வமும் நன்கு வளர்ந்தது. மலையாளம் அவருக்கு எழுதப்படிக்கத் தெரியாது. அதற்கான சந்தர்ப்பமும் அமையவில்லை. அம்மா இருக்கும்வரை தான் மலையாளத்தில் பேசுவதுகூட.
M.V. மணி அய்யர் என்பவர் எம்ஜியாருக்கு தமிழ்ப்பற்றை ஊட்டினார். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அவரிடம் சென்று தமிழ் பற்றியும் அதன் பெருமைகளைப் பற்றியும் அளவளாவுதலில் மிகுந்த விருப்பம் கொண்டார்.

மணி அய்யர் எம்ஜியாருக்கு நிறைய புத்தகங்களை அறிமுகப்படுத்தினார்.
எம்ஜியார் படித்த புத்தகங்களையும் சில எழுத்தாளர்களையும் அவர் குறிப்பிட்டுள்ளது மிகவும் சிறப்பு.
மணிக்கொடியில் ஆரம்பித்து பல பத்திரிக்கைகளைத் தொடர்ந்து படித்து வந்தார். அது தவிர தி.ஜானகிராமன், க.நா.சுப்பிரமணியன், ந. பிச்சமூர்த்தி, மு.வரதராசனார், கு.ப.ராச கோபாலன், புதுமைப்பித்தன் ஆகிய அந்தக்கால கட்டத்தில் இருந்த சிறந்த படைப்பாளர்களை எம்ஜியார் படித்தார்.
மகாத்மா காந்தியின் கொள்கைகளில் கவரப்பட்டு, சுதந்திரப் போராட்ட காலத்தில் கதர் ஆடை உடுத்த ஆரம்பித்தார். அதன் பின் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் சுயமரியாதை இயக்கத்தைப் பற்றிச் சொல்லி "குடியரசு" நாளிதழை அறிமுகப்படுத்தினார்.
அறிஞர் அண்ணாவின் அறிமுகம் அவரை அப்படியே வேறு தளத்திற்கு எடுத்துச் சென்று திராவிட இயக்கத்தில் அய்க்கியமானார். அதற்கு முக்கியக் காரணம் அண்ணாவின் எழுத்தும், பேச்சும் அவருடைய எளிமையான அணுகு முறையும் தான்.

கலைஞர் கருணாநிதியுடன் நட்புக் கொண்டதன் காரணமும் அவருடைய எழுத்தின் மேலுள்ள காதலால் தான். இந்தப்புத்தகத்தில் கலைஞரைப் பற்றிக் குறிப்பிடும் ஒவ்வொரு இடத்திலும் மிகவும் மரியாதையுடன் குறிப்பிடுகிறார். அவருடைய எழுத்தையும் கதை வசனத்தையும் மிகவும் சிலாகிக்கிறார்.
இந்தப் புத்தகம் எழுதும்போது கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருந்த சமயம். ஒவ்வொரு முறையும், மாண்புமிகு டாக்டர் கலைஞர் என்றே குறிப்பிடுகிறார்.
திராவிட இயக்கத்தில் முழுவதுமாக ஈர்க்கப்பட்டதோடு, இயக்கத்தின் முக்கிய கொள்கை பரப்பு பேச்சாளராக மாறிப்போனார். திரைப்படங்களில் நடித்துப்புகழ் பெற்றதால், அவர் எங்கு சென்றாலும் அவரைப் பார்க்க ஏராளமான மக்கள் கூடினர்.
எம்ஜியாரின் வரவு நிச்சயமாக திராவிட இயக்கத்திற்கு வலிமை சேர்த்தது.

கலைஞரின் எழுத்து மற்றும் பேச்சு வன்மையில் கவரப்பட்டதால் தான் அண்ணாவின் மறைவுக்குப்பின் கலைஞரை முன்னிறுத்தி,கலைஞர் முதலமைச்சரானதில் பெரும்பங்கு வகித்தவர் எம்ஜியார்.
இணை பிரியாத நண்பர்களாக இருந்தவர்கள் பிரிந்ததுதான் காலம் செய்த கோலம். யோசித்துப் பார்த்தால் இந்த இரு பிரதான கட்சிகளும் இணைந்தே இருந்திருந்தால் தமிழ் நாட்டில் எதிர்க்கட்சியே இருந்திருக்காது.
இந்தப் புத்தகத்தில் எம்ஜியார் நடித்துப் புகழ்பெற்ற 'மருத நாட்டு இளவரசி' என்ற திரைப்படத்திற்கு கலைஞர் எழுதிய வசனத்தைப் பற்றி மிகவும் வியந்து பாராட்டுகிறார்.