Showing posts with label SELF. Show all posts
Showing posts with label SELF. Show all posts

Monday, 18 November 2019

ஆத்ம திருப்தி SELF SATISFACTION




ஆத்ம திருப்தி 




விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே பூக்கடை வைத்து நடத்தி வரும் துரைப்பாண்டி, அங்குள்ளவர்களுக்கு ஆச்சர்ய மனிதர். தினம் வியாபாரம் முடிந்து இரவு கடையை பூட்டி விட்டு செல்லும் போது மறக்காமல் கடைக்கு வெளியே 4 மாலைகளை கட்டி தொங்க விட்டுச் செல்கிறார். மறு நாள் காலை கடையை  திறக்க வரும்போது கட்டி தொங்கப்படவிட்ட மாலையில் சில காணாமல் போயிருந்ததை கண் டால் நிம்மதி பெருமூச்சு விட்டு பிறகு வழக்கம் போல் பூ வியாபாரத்தை ஆரம்பித்து விடுகிறார். இது கடந்த 15 வருடங்களாக நடந்து வரும் சங்கதி.

இரவு நேரங்களில் அப்பகுதிகளில் ஏதேனும் மரணங்கள் நிகழ்ந்தால், அந்நேரத்தில் இறந்தவர் உடலுக்கு மரியாதை செலுத்த மாலைகள் கிடைப்பது பெரும் சிரமம். மாலைகளுக்காக இறந்தவரின் உறவினர்கள் நடு இரவில் அலைந்து திரிவதை தவிர்க்கவே இந்த ஏற்பாடாம். எந்த பிஸியான நாட்களானாலும், வியாபாரத் திற்காக தொடுக்கும் மாலைகளில் கண்டிப்பாக 4 மாலைகளை இரவில் விட்டுச்செல்வதற்காக முன் கூட்டியே எடுத்துவைத்துவிடுகிறார் துரைப்பாண்டி.

துரைப்பாண்டியனிடம் பேசினோம். “தினமும் பூ வியாபாரத்தில் ஒரு நாளைக்கு 300 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை கிடைக்கும். இதை வைத்துதான் குடும்பத்தை கவனித்து வருகிறேன். திருமணம் போன்ற முகூர்த்த நாட்களில் கொஞ்சம் கூடுதலாக பணம் கிடைக்கும். விருதுநகர் ரொம்ப சின்ன ஊர். எந்த பொருள் வாங்கனும்னாலும் பக்கத்தில் இருக்கும் மதுரைக்கு போய்தான் வாங்கணும். ராத்திரி 10 மணிக்கு மேல் எந்த கடையும் திறந்திருக்காது. ரொம்ப அவசரம்னா இரவில் மதுரை போய்தான் அந்த சாமான்கள் வாங்கிட்டு வரணும்.

விருதுநகரில் ராத்திரி 10 மணிக்கு மேல் யாராவது இறந்து விட்டால் அவர் களது உடலுக்கு போடுவதற்கு மாலை கிடைக்காது. உயிர் போன பிறகு உடலுக்கு மாலை போட்டு விளக்கு ஏற்றி வைப்பதுதான் அந்த உயிருக்கு செய்யும் முதல் மரியாதை. ஆனால் மாலை கூட இல்லாமல் மறு நாள் காலை பூக்கடை திறக்கும் வரை வெத்து உடம்போடு காத்திருப்பது பெரிய கொடுமை. ஒருமுறை பேருந்தில் பயணத்தில் எனது நண்பர்கள் இதைச் சொல்லி வருத்தப்பட்டனர். அது என் மனதில் வருத்தத்தை தந்தது.

கூடவே ஒரு யோசனை தோணுச்சு. அதுதான் இப்படி 15 வருடமா செய்து வர்றேன். தினமும் பூ வியாபாரம் முடிந்து வீட்டுக்கு கிளம்பும்போது தனி யாக 4 மாலைகளை கடைக்கு வெளியே தொங்க விட்டுட்டு போவேன். ராத்திரி நேரத்தில யாராவது இறந்து போயிட்டா மாலை வாங்குவதற்கு பூக்கடைகளை தேடறவங்க என் கடையில் தொங்குற மாலைகளில் தேவையானதை எடுத்துப் போய் பிரேதத்துக்கு போடுவாங்க. ஆரம்பத்தில இந்த விஷயம் தெரியாததால் காலையில பார்க்கும்போது மாலைகள் அப்படியே இருந்தது.

பிறகு பலருக்கும் இது தெரிஞ்சதால் இப்ப பெரும்பாலும் மாலைகள் இருக்காது. முகம் தெரியாத ஒரு மனிதரின் உடலுக்கு நாம தொடுத்த மாலையால மரியாதை கிடைச்சதே என்ற திருப்தி அன்னிக்கு முழுக்க மனசில இருக்கும். ராத்திரி மாலையை எடுத்துட்டு போன சில பேர் காலையில் வந்து மாலைக்கு காசு கொடுப்பாங்க. வாங்க மறுத்துடுவேன். தொங்க விட்டுப் போன மாலைகளில் ஏதாவது மிச்சம் இருந்தா அதை மறுநாள் வியாபாரத்துக்கு வச்சுக்க மாட்டேன். முதல் காரியமாக அதை குப்பை தொட்டியில் து£க்கிப்போட்டுட்டு புதுசா மாலை கட்ட ஆரம்பிச்சுருவேன்.

என்னோட ஆத்ம திருப்திக்காக இதை 15 வருசமாக செஞ்சுக்கிட்டு வர்றேன். ஒரு மாலை 50 ரூபாய் வீதம் 200 ரூபாய் வரை ஒரு நாளைக்கு செலவாகும். காசு, பணமா சார் முக்கியம். மாட மாளிகையில பொறந்தாலும் குடிசையில் பிறந்தாலும் இறப்புங்கறது எல்லாருக்கும் பொதுவானது. கஷ்ட நஷ்டங்களை பார்த்து கண் மூடுற மனுஷன், அவனுக்கான மரியாதை இந்த மாலை. அதை முகம் தெரியாத யாருக்கோ என்னால செய்ய முடியுது என்பதே எனக்கு ஆத்ம திருப்தி தர்ற விஷயம்” என்கிறார் சிறு புன்னகையுடன் பூ வியாபாரி துரைப்பாண்டி.

பழகியவர்களுக்கே உதவி செய்ய பர்ஸை திறக்காத மனிதர்களுக்கு மத்தியில், வருமானத்தை புறந்தள்ளி முகம் தெரியாத மனிதர்களின் மேல் அன்பை செலுத்தும் துரைப்பாண்டி பாராட்டத்தகுந்த மனிதர்தான்.

Wednesday, 9 May 2018

ILAIYARAJA `S SELF RESPECT





ILAIYARAJA `S SELF RESPECT





இசைஞானி இளையராஜாவின் இசையில் இசையரசி பி.சுசீலாம்மா அதிகமாக பாடல்களைப் பாடவில்லையே என்ற ஏக்கம் அவரது ரசிகர்களுக்கு உண்டு. ஏதோ இருவருக்குமிடையில் மனஸ்தாபமோ என்கிற எண்ணத்தில் நிறைய கற்பனை குறுஞ்செய்திகள் கோடம்பாக்கத்தில் உலா வந்து கொண்டிருந்தன.
இந்த நேரத்தில் சுசீலாம்மா-ராஜாண்ணன் இடையில் துவக்கக் காலத்தில் ஏற்பட்ட மோதல் ஒன்றை இப்போது வெளியில் சொல்லியிருக்கிறார் இளையராஜாவின் தம்பியும், இசையமைப்பாளருமான கங்கை அமரன்.

‘நக்கீரன்’ பத்திரிகையில் ‘பண்ணைப்புரம் எக்ஸ்பிரஸ்’ என்கிற தலைப்பில் பாவலர் பிரதர்ஸின் வாழ்க்கைக் கதையை எழுதி வரும் கங்கை அமரன், இரு வாரங்களுக்கு முன்பாக இளையராஜா-பி.சுசீலா சம்பந்தப்பட்ட கதையையும் எழுதியிருக்கிறார்.
அது இங்கே :
“இளையராஜா எவ்வளவு தன்மானம் உள்ளவர்ங்கிறதுக்கு இன்னொரு சம்பவம்.
பிரபல மியூஸிக் டைரக்டரான வி.குமார்கிட்ட நான், குன்னக்குடி வைத்தியநாதனெல்லாம் மியூஸீஸியனாக வேலை செஞ்சுக்கிட்டிருந்த நேரம்.
அது என்ன பாட்டுன்னு ஞாபகம் வரலை. வி.குமார் மியூஸிக்ல சுசீலாம்மா பாட வர்றாங்க. ராஜாண்ணன் கிடார் வாசிக்கப் போயிருக்கார்.
டேக் போகுது.
பல்லவிய பாடிட்டாங்க சுசீலாம்மா.
சரணம் பாடும்போது விட்டுட்டாங்க.
“சுசீலாம்மா.. ஏன்.. என்னாச்சு..?”ன்னு வி.குமார் கேட்க..
“எனக்கு அவர் கிடார் வாசிக்கல. கிடார் ஃபாலோ எனக்கு வரல. கார்டு குடுக்கல”ன்னு சுசீலாம்மா, ராஜாண்ணனை குறை சொல்ல..
“என்ன ராஜா?”ன்னு குமார் கேட்க..
“நான் கார்டு குடுத்தேன். வேணும்னா ரீவைண்ட் பண்ணிப் பாருங்க”ன்னு ராஜாண்ணன் சொல்ல..

“ஏய்.. என்ன பேசுற..? நீ கார்டு குடுக்கல”ன்னு குமார் சொல்ல..
“குடுக்கல இல்ல.. குடுத்தேன். ரெக்கார்டு ஆகியிருக்குல்ல. அத திரும்பப் போட்டுப் பாருங்க. நான் என்ன சும்மாவா உக்காந்திருக்கேன்.? வாசிக்கத்தான் வந்திருக்கேன். வாசிச்சிருக்கேன். ரீவைண்ட் பண்ணி கேட்டுப் பாருங்க. வாசிக்காமல் விட்டிருந்தால் ‘ஸாரி’ கேட்டிருப்பேன். நீங்க குடுத்த நோட்ஸ்படி வாசிச்சிட்டேன். போட்டுப் பார்த்துட்டுச் சொல்லுங்க”ன்னு ஸ்பெட்ப்னா சொல்லிட்டார் ராஜாண்ணன்.
“குடுத்திருந்தா நான் பாடியிருக்க மாட்டேனா..?”ன்னு சுசீலாம்மா அங்கேயிருந்து கத்துறாங்க.
“நான் குடுத்திட்டேம்மா.. வாசிச்சிட்டேம்மா.. தட்ஸ் ஆல்”ன்னு சொல்லிட்டார் ராஜாண்ணன்.
அடுத்தடுத்த டேக்ல அந்தப் பாட்டு ரெக்கார்டு பண்ணி முடிக்கப்பட்டது.
தான் தப்பு செய்யாதப்ப.. எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் இறங்கிப் போக மாட்டார் ராஜாண்ணன்.
இப்ப மட்டுமில்ல.. அப்பவுமே கெத்துவிடாமத்தான் இருப்பார் இளையராஜா. அதனால்தான் அவர் இளையராஜா.
இந்தச் சம்பவத்தால் ராஜா மீது சுசீலாம்மாவுக்கு வருத்தம் இருந்திருக்கலாம். சுசீலாம்மா மீது ராஜாண்ணனுக்கு கோபம் இருந்திருக்கலாம்.
ராஜாண்ணன் இசையில் சுசீலாம்மாவைவிட ஜானகியம்மா அதிகப் பாட்டு பாடியிருக்காங்க. ஆனா.. இதுக்கு அந்த வருத்தம் காரணமில்லை.
நாங்க மியூஸீஸியனா வேலை செஞ்சது ஜி.கே.வெங்கடேஷ்கிட்டதான். அவர் எங்க குரு. ஜி.கே.வி. இசைல கன்னடம், தெலுங்கு படங்கள்ல அதிகமான பாடல்களைப் பாடியது ஜானகியம்மாதான். அவங்களோடு எங்களுக்கு நல்லப் பரிச்சயம் இருந்தது.

முதலில் எங்களுக்கு ஜானகியம்மா வாய்ஸ் பிடிக்கல. ‘கீச்சு.. கீச்சு’ன்னு பாடுறதா ஃபீல் பண்ணினோம். சுசீலாம்மா வாய்ஸ்தான் இனிமையா இருக்கும்கிறதுதான் எங்க அபிப்ராயம்.
ஆனால், தொடர்ந்து ஜானகியம்மாவோட பாடல்களைக் கேட்க கேட்க.. அவங்களோட பழகப் பழக.. ஜானகியம்மாவோட வாய்ஸ் ரொம்ப டிப்ரண்ட்டா இருக்குறதை உணர்ந்தோம்.
அதனால்தான் ஜானகியம்மா எங்களோட முதல் படமான ‘அன்னிக்கிளி’யில் இருந்து அதிகமான பாடல்களை ராஜாண்ணன் இசைல பாடியிருக்காங்க.

ஆக, எங்க இசையில் ஜானகியம்மா அதிகப் பாடல்களை பாடினதுக்குக் காரணம் எங்க குரு ஜி.கே.வெங்கடேஷ்தான்..”
– இவ்வாறு சொல்லியிருக்கிறார் கங்கை அமரன்.
.