Showing posts with label திருப்தி. Show all posts
Showing posts with label திருப்தி. Show all posts

Monday, 18 November 2019

ஆத்ம திருப்தி SELF SATISFACTION




ஆத்ம திருப்தி 




விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே பூக்கடை வைத்து நடத்தி வரும் துரைப்பாண்டி, அங்குள்ளவர்களுக்கு ஆச்சர்ய மனிதர். தினம் வியாபாரம் முடிந்து இரவு கடையை பூட்டி விட்டு செல்லும் போது மறக்காமல் கடைக்கு வெளியே 4 மாலைகளை கட்டி தொங்க விட்டுச் செல்கிறார். மறு நாள் காலை கடையை  திறக்க வரும்போது கட்டி தொங்கப்படவிட்ட மாலையில் சில காணாமல் போயிருந்ததை கண் டால் நிம்மதி பெருமூச்சு விட்டு பிறகு வழக்கம் போல் பூ வியாபாரத்தை ஆரம்பித்து விடுகிறார். இது கடந்த 15 வருடங்களாக நடந்து வரும் சங்கதி.

இரவு நேரங்களில் அப்பகுதிகளில் ஏதேனும் மரணங்கள் நிகழ்ந்தால், அந்நேரத்தில் இறந்தவர் உடலுக்கு மரியாதை செலுத்த மாலைகள் கிடைப்பது பெரும் சிரமம். மாலைகளுக்காக இறந்தவரின் உறவினர்கள் நடு இரவில் அலைந்து திரிவதை தவிர்க்கவே இந்த ஏற்பாடாம். எந்த பிஸியான நாட்களானாலும், வியாபாரத் திற்காக தொடுக்கும் மாலைகளில் கண்டிப்பாக 4 மாலைகளை இரவில் விட்டுச்செல்வதற்காக முன் கூட்டியே எடுத்துவைத்துவிடுகிறார் துரைப்பாண்டி.

துரைப்பாண்டியனிடம் பேசினோம். “தினமும் பூ வியாபாரத்தில் ஒரு நாளைக்கு 300 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை கிடைக்கும். இதை வைத்துதான் குடும்பத்தை கவனித்து வருகிறேன். திருமணம் போன்ற முகூர்த்த நாட்களில் கொஞ்சம் கூடுதலாக பணம் கிடைக்கும். விருதுநகர் ரொம்ப சின்ன ஊர். எந்த பொருள் வாங்கனும்னாலும் பக்கத்தில் இருக்கும் மதுரைக்கு போய்தான் வாங்கணும். ராத்திரி 10 மணிக்கு மேல் எந்த கடையும் திறந்திருக்காது. ரொம்ப அவசரம்னா இரவில் மதுரை போய்தான் அந்த சாமான்கள் வாங்கிட்டு வரணும்.

விருதுநகரில் ராத்திரி 10 மணிக்கு மேல் யாராவது இறந்து விட்டால் அவர் களது உடலுக்கு போடுவதற்கு மாலை கிடைக்காது. உயிர் போன பிறகு உடலுக்கு மாலை போட்டு விளக்கு ஏற்றி வைப்பதுதான் அந்த உயிருக்கு செய்யும் முதல் மரியாதை. ஆனால் மாலை கூட இல்லாமல் மறு நாள் காலை பூக்கடை திறக்கும் வரை வெத்து உடம்போடு காத்திருப்பது பெரிய கொடுமை. ஒருமுறை பேருந்தில் பயணத்தில் எனது நண்பர்கள் இதைச் சொல்லி வருத்தப்பட்டனர். அது என் மனதில் வருத்தத்தை தந்தது.

கூடவே ஒரு யோசனை தோணுச்சு. அதுதான் இப்படி 15 வருடமா செய்து வர்றேன். தினமும் பூ வியாபாரம் முடிந்து வீட்டுக்கு கிளம்பும்போது தனி யாக 4 மாலைகளை கடைக்கு வெளியே தொங்க விட்டுட்டு போவேன். ராத்திரி நேரத்தில யாராவது இறந்து போயிட்டா மாலை வாங்குவதற்கு பூக்கடைகளை தேடறவங்க என் கடையில் தொங்குற மாலைகளில் தேவையானதை எடுத்துப் போய் பிரேதத்துக்கு போடுவாங்க. ஆரம்பத்தில இந்த விஷயம் தெரியாததால் காலையில பார்க்கும்போது மாலைகள் அப்படியே இருந்தது.

பிறகு பலருக்கும் இது தெரிஞ்சதால் இப்ப பெரும்பாலும் மாலைகள் இருக்காது. முகம் தெரியாத ஒரு மனிதரின் உடலுக்கு நாம தொடுத்த மாலையால மரியாதை கிடைச்சதே என்ற திருப்தி அன்னிக்கு முழுக்க மனசில இருக்கும். ராத்திரி மாலையை எடுத்துட்டு போன சில பேர் காலையில் வந்து மாலைக்கு காசு கொடுப்பாங்க. வாங்க மறுத்துடுவேன். தொங்க விட்டுப் போன மாலைகளில் ஏதாவது மிச்சம் இருந்தா அதை மறுநாள் வியாபாரத்துக்கு வச்சுக்க மாட்டேன். முதல் காரியமாக அதை குப்பை தொட்டியில் து£க்கிப்போட்டுட்டு புதுசா மாலை கட்ட ஆரம்பிச்சுருவேன்.

என்னோட ஆத்ம திருப்திக்காக இதை 15 வருசமாக செஞ்சுக்கிட்டு வர்றேன். ஒரு மாலை 50 ரூபாய் வீதம் 200 ரூபாய் வரை ஒரு நாளைக்கு செலவாகும். காசு, பணமா சார் முக்கியம். மாட மாளிகையில பொறந்தாலும் குடிசையில் பிறந்தாலும் இறப்புங்கறது எல்லாருக்கும் பொதுவானது. கஷ்ட நஷ்டங்களை பார்த்து கண் மூடுற மனுஷன், அவனுக்கான மரியாதை இந்த மாலை. அதை முகம் தெரியாத யாருக்கோ என்னால செய்ய முடியுது என்பதே எனக்கு ஆத்ம திருப்தி தர்ற விஷயம்” என்கிறார் சிறு புன்னகையுடன் பூ வியாபாரி துரைப்பாண்டி.

பழகியவர்களுக்கே உதவி செய்ய பர்ஸை திறக்காத மனிதர்களுக்கு மத்தியில், வருமானத்தை புறந்தள்ளி முகம் தெரியாத மனிதர்களின் மேல் அன்பை செலுத்தும் துரைப்பாண்டி பாராட்டத்தகுந்த மனிதர்தான்.

Thursday, 8 September 2016

எத்தனைதான் அள்ளிக் கொடுத்தாலும் மனித இதயம் திருப்திப் படுவதில்லை .

எத்தனைதான் அள்ளிக் கொடுத்தாலும் மனித இதயம் திருப்திப் படுவதில்லை . 




ஒரு ராஜா இரவில் மாறுவேடத்தில் நகர்வலம் வந்தார். இரண்டு மெய்க்காப்பாளர்களும் கூடவே சென்றனர்.
திடீரென்று கடுமையான மழையும், காற்றும் அடித்தன. வானம் இருண்டு போனது . ராஜா காவலாளிகளை விட்டு வழி தவறிப் போய்விட்டார்.


எங்கு

ம் காரிருள்,சற்று தொலைவில் ஒரு சிறு குடிசை தெரிந்தது . அதிலிருந்து லேசான வெளிச்சமும் வந்து கொண்டிருந்தது. ராஜா வேகமாக அதனை நோக்கி நடந்தார்.
அதற்குள்ளே கந்தல் ஆடை அணிந்த ஒரு மனிதனைத் தவிர வேறு யாருமில்லை. ராஜா உள்ளே நுழைந்தும் அவன் எந்த சலனமும் இல்லாமல் அமர்ந்திருந்தான்.

 அவன் மரியாதை தராமல் அமர்ந்திருந்ததில் ராஜாவுக்குக் கொஞ்சம் கோபம் வந்தது . 
"ஏம்ப்பா! உன் வீட்டுக்கு வந்திருக்கேன் , நீ மரியாதையே இல்லாம, ஒரு வணக்கம் கூட சொல்லாம உக்காந்திருக்கியே?" என்றார்.


பதிலுக்கு அவன், "நீதான் என் வீட்டுக்குள்ள அடைக்கலமா நுழைஞ்சிருக்க. உனக்கு எதுக்கு நான் வணக்கம் சொல்லணும்?" என்றான்.
ராஜாவால் இதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவர் எப்போதும் நகர்வலம் போகையில் ஒரு பொற்காசு மூட்டையைஉடன் வைத்திருப்பார்.

அதை அவனிடம் பிரித்துக் காட்டி விட்டு "பார்த்தாயா? நான் எவ்வளவு பெரியவன் என்பதை? 
இப்ப எனக்கு வணக்கம் சொல்வாயா ?" என்றார்.
அவனும் பதிலுக்கு, "ஒரு ஏழை பக்கத்தில இருந்தும் ஒரு மூட்டை பொற்காசை நீயே வச்சிருக்கியே, உனக்கு எப்படி வணக்கம்
சொல்வது?" என்றான்.

ராஜா கோபமாய் ஒரு காசை அதிலிருந்து 

எடுத்து அவனிடம் வீசி, "இப்ப வணக்கம் சொல்வாயா?" என்றார் .



காசைத் தொடாமல் அவன் சொன்னான்,
"ஒரு மூட்டை காசை வச்சுக்கிட்டு அற்பமா ஒத்தக் காசை வீசுறியே, உனக்கா வணக்கம் சொல்வேன்?"

அரசர் இன்னும் உக்கிரமானார். பாதி மூட்டையை அவனருகே பிரித்துக் கொட்டி விட்டுக் கேட்டார்

, "எங்கிட்ட இருந்ததுல சரி பாதியைக் கொடுத்துட்டேன். இப்பவாவது வணக்கம் சொல்வியா?"


மெல்லிய புன்னகையுடன் அவன் சொன்னான், "உங்கிட்ட இருக்குற அளவுக்கு இப்ப எங்கிட்டேயும் இருக்கே! இப்ப நீயும் நானும் சமமாயிட்டோமே. சரி சமமா இருக்கிற உன்னை எதுக்கு நான் மதிக்கணும்? "

ராஜாவுக்கு ஆத்திரம் கண்ணை மறைத்தது. மிச்சமிருந்த மூட்டையும் அவனிடத்தில் வீசி விட்டார், "இருந்த எல்லாத்தையுமே கொடுத்துட்டேன். இப்பவாவது வணக்கம் சொல்" என்றார் .

அவன் சிரித்துக் கொண்டே சொன்னான் ,
"இப்ப உங்கிட்ட ஒன்னுமே இல்லை. ஆனா எங்கிட்ட ஒரு மூட்டை தங்கம் இருக்கு. இப்ப நீதான் எனக்கு வணக்கம் சொல்லணும்?" என்றான்.
ராஜா வாயடைத்துப் போனார் .

எத்தனைதான் அள்ளிக் கொடுத்தாலும் மனித இதயம் திருப்திப் படுவதில்லை . 






நிரந்தரமான மரியாதை என்பது பணத்தைக் கொண்டு வாங்கும் பொருளுமில்லை. உண்மையான அன்பைப் பிறருக்குக் கொடு. அதுவே பலமடங்காக உனக்குத் திரும்பக் கிடைக்கும்.