Showing posts with label PATEL. Show all posts
Showing posts with label PATEL. Show all posts

Saturday, 17 October 2020

WHO ARE YOU ? SMITHA PATIL......REAL STORY

 


யார் மாமா இது, ஸ்மிதா பாட்டீல் மாரியே?’

சிறு கதை / உண்மை கதை

-வேணுவனம்

----------------------------------------------------------------------------------



கே.ஏ.அப்பாஸ்தான் அதுக்குக் காரணம். இன்னைக்கும் ராஜ்கபூர் படங்கள்லயே ‘மேரா நாம் ஜோக்கர’ அதானெ நம்மால மறக்க முடியல. அப்பாஸ லேசுப்பட்டவன்னு நெனச்சுராதெ. ‘ஆவாரா’வும் அவன் கததான்’. சஞ்சீவி மாமா இப்படித்தான் திடீரென பாதியிலிருந்து பேசத் துவங்குவார். அதற்கு முந்தைய நாளோ, முந்தைய சந்திப்பிலோ எங்களது உரையாடலின் தொடர்ச்சியாக, விட்ட இடத்திலிருந்து தொடங்கிப் பேசிக் கொண்டேபோவார். அவர் பேசப் பேசத்தான் எனக்கு முதல்நாள் என்ன பேசினோம் என்பது மெல்ல நினைவுக்கு வரும். சஞ்சீவி மாமா பேசுவது போலவே அவரைப் பற்றிய தகவலொன்றும் இப்படி திடீரென்று வந்தது.

ஒருவாரமாக திருநெல்வேலியிலேயே இருந்தவன், சஞ்சீவி மாமாவைப் போய்ப் பார்த்திருக்கலாம்தான். இன்னும் நான்கு நாட்கள்தான் இருக்கப் போகிறோமே, சென்னைக்குக் கிளம்புமுன் போய்ப் பார்த்துக் கொள்ளலாம் என்று அசட்டையாக இருந்தது, எவ்வளவு பெரிய மடத்தனம் என்பதை தொலைபேசியில் வந்த தகவல் உணர்த்திவிட்டது. இத்தனைக்கும் டவுணிலிருந்து ஒரு அழுத்து அழுத்தினால் பதினைந்து நிமிடங்களில் பாளையங்கோட்டை கோபால்சாமி கோயில் பக்கம் போய் விடலாம். அதற்குப் பக்கத்தில்தான் சஞ்சீவி மாமாவின் வீடு. பாளையங்கோட்டை சதக்கத்துல்லா கல்லூரியிலிருந்து பஸ்ஸில் திரும்பிக் கொண்டிருக்கும் போது, சமாதானபுரம் பஸ்ஸ்டாப் பக்கத்தில் ‘காதி வஸ்திராலயத்தில்’ சஞ்சீவி மாமாவின் தலை தெரிந்தால் உடனே இறங்கி விடுவேன். அருகில் போய் ‘மாமா’ என்றழைத்தாலும் உடனே ஏதும் பேசிவிட மாட்டார். ஒரு சின்ன சிரிப்பைக் கூட எதிர்பார்க்க முடியாது. சில நிமிடங்கள் கழித்து, அவராகப் பேசத் தொடங்குவார். முரட்டு கதரில் முழுக்கைச் சட்டையும், கதர் பேண்டுமே சஞ்சீவி மாமாவின் உடை. நடுமுதுகு வரைக்கும் புரளும் நீண்ட தலைமுடி. பின்னால் இருந்து பார்க்கிறவர்கள், திருநவேலி ஊருக்குள் பேண்ட் சட்டையில் ஒரு பெண் போகிறாள் என்று சந்தேகித்து முன்னால் வந்து பார்த்து, சஞ்சீவி மாமாவின் தொங்கு மீசையைப் பார்த்து முகம் கோணி, நாணி பின்வாங்குவதை பலமுறை பார்த்து சிரித்திருக்கிறேன். மாமாவுடன் அவரது ராஜ்தூத் பைக்கின் பின்னால் உட்கார்ந்து ஒருமுறை கிருஷ்ணாபுரம் சென்று கொண்டிருக்கும் போது, மற்றொரு பைக்கில் ஒரு இளைஞன் எங்களை ரொம்ப நேரமாகப் பின் தொடர்ந்து கொண்டேயிருந்தான். கூந்தல் பறக்க மாமா பைக் ஓட்டுவதைப் பின்னால் இருந்து பார்த்தவன், ஒரு முடிவோடு எங்களை முந்தாமல் வந்து கொண்டிருந்தான். இதை புரிந்து கொண்ட மாமா, வேண்டுமென்றே வேகத்தைக் குறைத்தார். ஆனாலும் அவன் அசரவில்லை. கிருஷ்ணாபுரம் வந்தவுடன் மாமா, ஓரமாக பைக்கை நிறுத்தியபிறகு, வேறு வழியில்லாமல் கடந்து சென்றபடி திரும்பிப் பார்த்தவன், தன்னை மறந்து ‘ச்சை’ என்றபடி ஆக்ஸிலேட்டரை முறுக்கி பறந்தான்.

அன்றைக்கு முழுவதும் கிருஷ்ணாபுரம் சிற்பங்களை சஞ்சீவி மாமா புகைப்படங்களாக எடுத்துத் தள்ளிக் கொண்டிருந்தார். கிருஷ்ணாபுரம் சிற்பங்கள் உலகப் புகழ்பெற்றவைதான். ஆனால் அவற்றை சஞ்சீவி மாமாவின் புகைப்படங்களில் அவரது கேமரா கோணங்களில் பார்க்கும் போது, அச்சிற்பங்கள் அனைத்தும் ஓர் இனம்புரியாத அழகும், உயிர்ப்பும் அடைந்து விடும். சிற்பங்கள் மட்டுமில்லை. மனிதர்களும்தான். மாமாவின் புகைப்படங்களில் சாலையோரத்தில் நுங்கு விற்பவர்கள், ரைஸ்மில்லிலிருந்து மரப்பொடி சுமந்து திரும்புபவர்கள், திருச்செந்தூர் கோயிலில் மொட்டை போட்டுவிட்டு சந்தனத் தலையோடு பேரூந்தின் ஜன்னலோரம் தூங்குபவர்கள், சின்ன டிரான்ஸிஸ்டரில் பாட்டு கேட்டபடியே மார்க்கெட் பூக்கடையில் பூ சுற்றிக் கொண்டிருக்கும் பெண்கள், வேண்டா வெறுப்பாக புத்தப்பை சுமந்து வாடிய முகத்துடன் தளர்ந்து பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், மாலையில் பள்ளி முடிந்து குதூகலத்துடன் துள்ளலாக நடந்து வரும் அதே குழந்தைகள் என சஞ்சீவி மாமாவின் கேமராவில் சிக்கிய முகங்கள் ஏராளம்.

கேமரா மட்டுமல்ல. கிதார் என்னும் வாத்தியத்தை எனக்கு முறையாக அறிமுகப்படுத்தியவரும் சஞ்சீவி மாமாதான். அதற்கு முன்னால் கிதார் என்றால் எனக்கு ’மூடுபனி’ திரைப்படத்தின் ‘என் இனிய பொன்நிலாவே’ பாடலில் பிரதாப் போத்தன் கையிலும், இன்னும் வேறு சில ஹிந்தி திரைப்படங்களிலும் மட்டுமே பார்த்திருக்கிறேன். கிதாரில் எத்தனை வகைகள் உள்ளன, அவை என்னென்ன போன்றவற்றை சஞ்சீவி மாமாதான் விளக்கினார். மாமாவிடம் நான்கைந்து கிதார்கள் இருந்தன. ’இது அகௌஸ்டிக், இது எலக்ட்ரிக், இப்படி வாசிக்கறது லீட் கிதார், இப்படி வாசிச்சா பாஸ்’. இவை போக சின்ன கிதார் என்று நான் நினைத்துக் கொண்டிருந்த மாண்டலினும் மாமாவிடம் இருந்தது.

‘நம்ம ஊர்ல எல்லா பயலுவளும் பேஸ் கிதார்னு சொல்லுதானுவொ. பாஸ் கிதார்னுதான் சொல்லணும்’.

மாமா திருத்துவார். தேவ் ஆனந்தின் ‘Guide’ படப்பாடலான ‘தேரே மேரே சப்னே’ பாடலையெல்லாம் கிதாரில் வாசிக்க முடியும் என்பது, சஞ்சீவி மாமா வாசிக்கும்போதுதான் தெரிந்தது. நிறைய பழைய ஹிந்தி பாடல்களை கிதாரில் வாசித்து காண்பிப்பார். தமிழ்ப் பாடல்களும் வாசிப்பார்தான். அப்படி மாமா அடிக்கடி தன்னை மறந்து ஒரு பாடலை ரகசியக் குரலில் ‘என் கானம் இன்று அரங்கேறும்’ என்று பாடியவாறே ரசித்து வாசிப்பார். அதற்கு முன்னர் அந்தப் பாடலை நான் கேட்டதே இல்லை. ‘இந்தப் பாட்ட மட்டும் இல்ல மாப்ளெ . . இந்தப் படத்தயும் ஒரு பய பாக்கல. படம் பேரு ‘ஈரவிளிக்காவியங்கள்’. ஒவ்வொரு முறை அந்தப் பாடலை வாசித்து முடிக்கும் போதும் ’ராஸ்கல்’ என்று முணுமுணுக்க மாமா தவறுவதில்லை.

நான்கைந்து வீடுகள் உள்ள ஒரு காம்பவுண்டின் ஒரு மாடியறையில் மாமா தனியாகவே இருந்தார். மாமாவின் மனைவி எதிரே உள்ள பெரிய வீட்டில் தனது சகோதரர்களுடன் வசித்தார். சஞ்சீவி மாமாவுக்கும், அத்தைக்கும் பேச்சு வார்த்தை அறவே இல்லாமல் போனதற்கு அவர்களுக்கு குழந்தைப் பேறு இல்லாமல் போனதுதான் காரணம் என்று ஊருக்குள் பேசிக் கொண்டார்கள். ஒரே ஒருமுறை இது பற்றிப் பேசும் போது மாமா தனக்குத் தானே சொல்வது போல, ‘எல்லா டெஸ்ட்டும் எடுத்து பாத்தாச்சு. கம்ப்ளெயிண்ட் எண்ட்ட இல்லன்னு எல்லா டாக்டரும் சொல்லிட்டாங்க. அதுல ஒங்க அத்தைக்கு தாங்கல’ என்றார். அதற்கு ஏற்றாற் போலத்தான் அத்தையின் நடவடிக்கைகளும் இருந்தன. அத்தையின் தகப்பனார் சேர்த்து வைத்திருந்த சொத்துக்கள் போதுமான அளவுக்கு இருந்ததால், யாரையும் எதிர்பார்க்காமல், வீட்டு வாடகைகள், நிலபுலன்கள் மூலம் வரும் வருமானத்தை வைத்து தன் சகோதரர்களின் குடும்பங்களையும் கவனிக்கும் அளவுக்கு அத்தை செழிப்புடனே வாழ்ந்து வந்தார். மாமாவைப் பற்றிச் சொல்லும் போதெல்லாம் ‘அவன்’ என்று ஒருமையிலேயே சொல்லுவார். மாமாவை விட அத்தை ஒரு வயது மூப்பு என்றும் ஒரு தகவல் உண்டு. ‘என்ன சொல்லுதான் ஒன் மாமன்காரன்?’ ஆனால் என்னிடத்தில் பாசமாக இருப்பார். வாய் நிறைய ’மருமகனே’ என்றழைப்பார். ‘நீ பாட்டுக்கு மச்சுல இருந்து அரவமில்லாம எறங்கி அவன் கூட ஓட்டலுக்கு கீட்டலுக்கு போயிராதெ. சாப்ட்டுட்டு போ’ என்பார். ‘என்னய மட்டும் அத்தைக்கு எப்பிடி மாமா புடிச்சு போச்சு?’ வியப்புடன் மாமாவிடம் ஒருமுறை கேட்டேன். ‘நீ என்னய மாரி இல்லாம சாமி கும்பிடுதெல்லா? அதான்’ . சிரித்தபடி சொன்னார்.

சஞ்சீவி மாமாவுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. வைணவ குடும்பத்தில் பிறந்தவரான மாமா, திருநெல்வேலி மாவட்டத்திலுல்ள ‘நவதிருப்பதி’ கோயில்கள் அனைத்துக்கும் என்னை அழைத்துச் சென்றிருக்கிறார். ஆனால் அங்கு வந்தாலும் அவரது கேமராவுக்குத்தான் வேலை. சிற்பங்கள், அக்ரஹாரத்து திண்ணைகள், ஆடுமாடுகள், மண் தெருக்கள், பழைய வீடுகள், டூரிங் தியேட்டர் போஸ்டர்கள் என எல்லாவற்றையும் புகைப்படம் எடுத்துக் கொண்டிருப்பார். தென் திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர் பெருமாள் கோயிலுக்கு ஒருமுறை மாமாவுடன் சென்றிருந்த போது மாமா கோயிலுக்குள் வரவேயில்லை. ‘நீ போயிட்டு வாடே’ என்று சொல்லிவிட்டு கேமராவுடன் வாசலிலேயே நின்று கொண்டார். இருட்டுக்குள் இருந்த பெருமாளைப் பார்த்து

‘ஓடும் புள்ளேறி சூடும் தன்துழாய்

நீடுநின்றவை ஆடும் அம்மானே

அம்மானாய் பின்னும் எம்மாண்பும் ஆனான்

வெம்மாவாய் கீண்ட செம்மா கண்ணனே’

என்று உருகி வணங்கி விட்டு வெளியே வந்தால், தயிர் விற்கும் ஒரு மூதாட்டியுடன் பேச்சு கொடுத்துக் கொண்டே அவளை புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தார், மாமா. ஒருசில தினங்களில் அவற்றை பிரிண்ட் போட்டு காண்பித்தபடி சொன்னார். ‘இந்த அம்மா மொகத்துல இருக்குற சுருக்கங்கள பாத்தியா? ஒவ்வொண்ணும் ஒவ்வொரு கத சொல்லுது, பாரு. அவ ஸ்கின் டோன கவனி’.

***************** ******************** *********************

வழக்கமாக மாமா தென்படும் ‘காதி வஸ்திராலயம், காளி மார்க் கேண்டீன், வ.உ.சி மைதானம்’ போன்ற எந்த இடத்திலும் மாமாவை சில நாட்கள் பார்க்க முடியாமல் போனது. எங்கெல்லாமோ தேடிப் பார்த்து விட்டு அத்தையிடமும் கேட்காமல் விட்டு விட்டேன். ஒரு இடைவெளிக்குப் பிறகு மாமாவின் வீட்டுக்குச் சென்ற போது, மாமாவின் வீட்டில் ராஜ்தூத் நின்று கொண்டிருந்தது. உடனே மாமாவைப் பார்க்க சென்றால் அத்தை ஏசுவார் என்பதால் சிறிது நேரம் அவருடன் பேசிக் கொண்டிருந்துவிட்டு, மாடியறைக்குச் சென்றேன். குமார் கந்தர்வாவின் ஹிந்துஸ்தானி சங்கீதம் சன்னமாக ஒலித்துக் கொண்டிருந்தது. கமாஸ் போன்ற ஏதோ ஒரு வடநாட்டு ராகம். மாமா ஒரு புகைப்படத்தை எடுத்து என் முன்னால் இருந்த சிறிய மர மேஜையில் போட்டார். மாமாவால் எனக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஸ்மிதா பாட்டீலை நினைவுபடுத்துகிற ஒரு பெண்ணின் புகைப்படம். வியப்புடன் எடுத்துப் பார்த்தேன். ‘யார் மாமா இது, ஸ்மிதா பாட்டீல் மாரியே?’. இந்தக் கேள்விதான் என்னிடமிருந்து வரும் என்பதை ஏற்கனவே அறிந்திருந்தவராக, ‘அவளேதான்’ என்றார், மாமா. ‘அவளேதான்’ என்று அவர் சொன்னது ஸ்மிதா பாட்டீலை இல்லை. சுமி அக்காவை. சுமி அக்காவை சஞ்சீவி மாமா, ஸ்மிதா பாட்டீலாகவேதான் நினைத்தார்.

அருஞ்சுணை காத்த அய்யனார் கோயிலில் வைத்து சுமி அக்காவை முதன் முறையாக எனக்கு அறிமுகம் செய்து வைக்கும் போதும் ‘இது ஸ்மிதா’ என்றார். பார்த்த மாத்திரத்திலேயே ஆண்பிள்ளைகள் மாதிரி, என் கைகளைப் பற்றிக் குலுக்கியபடி சுமி அக்கா, ‘எப்டி இருக்கெ மக்கா?’ என்றாள். கழுத்தில், காதில் எதுவும் இல்லை. பளிச்சென்ற பவுடர் பூசிய முகம். நெற்றியில் கூர்ந்து கவனித்தால் தென்படுகிற ஒரு துளி சாந்துப் பொட்டு. ’நீங்க சோஃபியா பவுடர் போட்டிருக்கீங்க. கரெக்டா?’ என்றேன். சட்டென்று சிரித்தபடி ’அடப்பாவி’ என்றாள். சுமி அக்காவுக்கு என்னை ரொம்பவே பிடித்து போய்விட்டது. என்னைவிட நான்கு வயது அதிகமான அவளை ‘சுமி அக்கா’ என்று இயல்பாக என்னால் கூப்பிட முடிந்தது.

சுமி அக்காவுக்கு திருச்செந்தூர் பக்கம் என்றார் மாமா. தாய், தந்தை இல்லாத சுமி அக்கா முதுகலை பட்டப்படிப்பு முடித்திருந்தாள். ஆதரவற்றோர் விடுதி ஒன்றிற்கு மாமா சென்றிருந்த போது பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. சுமி அக்காவின் வருகைக்குப் பிறகு சஞ்சீவி மாமாவைப் போய்ப் பார்ப்பது வெகுவாகக் குறைந்து விட்டது. மாமாவும் ‘என்னடே ஆளையே காணோம்?’ என்று சம்பிரதாயமாகக் கேட்பதோடு சரி. ஒருநாள் மாமா தன் கிதார் ஒன்றின் கம்பிகளை சரி பார்த்துக் கொண்டிருக்க, நான் அவரது புத்தக அலமாரியைக் குடைந்து கொண்டிருந்தேன். அதுவரைக்கும் மாமாவின் மாடியறைக்கு வந்தேயறியாத அத்தை, மூச்சு வாங்க மாடியேறி வந்து, அந்த அறையில் ஃபிரேம் போட்டு மாட்டப்பட்டிருந்த சுமி அக்காவின் கருப்பு வெள்ளை புகைப்படத்தை எடுத்து கீழே போட்டு சுக்குநூறாக உடைத்தார். வேறேதும் பேசாமல் கீழே இறங்கி சென்று விட்டார். சிறிது நேர மௌனத்துக்குப் பிறகு மாமா எழுந்து உடைந்த கண்ணாடித் துண்டுகளை எடுக்க குனிந்தார். ‘நான் எடுக்கென் மாமா’. மாமாவைத் தடுத்து விட்டு, ஒவ்வொரு கண்ணாடித் துண்டாகப் பொறுக்கி எடுத்தேன். ’பூமிகா’ திரைப்படத்தின் ஸ்மிதா பாட்டீலை நினைவுபடுத்தும் விதமாக கழுத்திலும், காதுகளிலும் நகையணிந்து சிரித்தபடி சுமி அக்கா இருக்கும் கிழிந்த, கசங்கிய புகைப்படத்தை மாமாவின் மேஜை டிராயரில் வைத்தேன். மாமா என் முகத்தைப் பார்ப்பதைத் தவிர்க்கும் விதமாக கிடார் கம்பிகளில் மும்முரமாக ஏதோ செய்யும் பாவனையில் இருந்தார். அதற்குப் பிறகு கொஞ்சம், கொஞ்சமாக எனக்கும் சஞ்சீவி மாமாவுக்குமான உறவு குறைந்து போனது. சென்னையிலிருந்து திருநெல்வேலிக்குப் போகும் போதெல்லாம் சஞ்சீவி மாமாவைப் பார்க்க வேண்டும் என்று நினைப்பேன். பிறகு ஏதேதோ காரணங்களால் தொடர்பே இல்லாமல் போய்விட்டது.

பதினைந்து வருடங்களுக்குப் பிறகு மாமாவின் வீட்டு காம்பவுண்ட் சுவரைத் தாண்டி உள்ளே நுழையும் போது ஏதோ ஒரு புதிய இடத்துக்கு வருவது போல தோன்றியது. அத்தை வீட்டு வாசலில் ஷாமியானா போட்டு நான்கைந்து பிளாஸ்டிக் சேர்கள் போடப்பட்டிருந்தன. வீட்டுக்கு உள்ளே அத்தை சோஃபாவில் சாய்ந்திருந்தார். முன்பை விட உடல் கனம் கூடியிருந்தது. உடன் ஏதேதோ புதிய மனிதர்கள். என்னைப் பார்த்ததும் உடனே அடையாளம் பிடிபடாமல், பிறகு சுதாரித்து, சிநேகப் பார்வை பார்த்து ‘வந்துட்டியா? ம்ம்ம், போ. அங்கனயேதான்’ என்று மாடியை காண்பித்தார்.

சுற்றிலும் கிதார்கள்,பழைய ரீடர்ஸ் டைஜஸ்ட், இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி உட்பட பழைய புத்தகங்களின் வாசனையுடன் கண்ணாடிப் பெட்டிக்குள் சஞ்சீவி மாமா தூங்குவது போல கண்மூடி படுத்திருந்தார். நெற்றியில் சூர்ணம் இடப்பட்டிருந்தது. அருகில் அத்தையின் சகோதரர் அமர்ந்திருந்தார். ‘வெயில் தாள எடுத்துரலான்னு இருக்கொம்’ என்றார். நான் பார்க்காத காலங்களில் மாமாவின் முகத்தில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது என ஆராயும் விதமாக மாமாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

‘நீங்கள்லாம் மெட்ராஸ்ல இருக்கணும் மாமா’. பலமுறை சொல்லுவேன்.

‘மெட்ராஸ்ல இருந்து?’ எதிர்க்கேள்வி கேட்பார்.

‘பெரிய ஆளா ஆயிரலாம்லா’. சிறுபிள்ளைத்தனமாகச் சொல்லியிருக்கிறேன்.

‘பெரிய ஆளுன்னா என்னதுடே?’. என்பார்.

அதற்குள் கீழே இருந்து சத்தம் கேட்டது. ‘நவநீதா சீக்கிரம் கீள வா. அந்த முண்ட வந்திருக்கா’.

அத்தையின் இன்னொரு சகோதரரின் குரலது. என்னருகில் இருந்தவர், ‘இந்தா வாரேன்’ என்று பாய்ந்து செல்லவும், நிலைமையை உணர்ந்து அவருக்குப் பின்னால் மாடிப்படிகளில் இறங்கி ஓடினேன். காம்பவுண்டுக்கு வெளியே அழுதபடி சுமி அக்கா நின்று கொண்டிருந்தார். உடன் பத்து வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன். சிறு வயது புகைப்படத்தில் சஞ்சீவி மாமா இருப்பது போலவே இருந்தான். அத்தையின் சகோதரர்கள் இருவரும் சுமி அக்காவை, ‘எங்கெட்டி வந்தெ?’ என்று சத்தம் போட்டபடியே நெருங்கினார்கள். அவர்கள் சுமி அக்காவை எதுவும் செய்துவிடக் கூடாதே என்கிற பதைபதைப்பில் நான் அவர்களைத் தாண்டிச் சென்றேன். என்னைப் பார்த்ததும் அடையாளம் கண்டு கொண்ட சுமி அக்கா, ‘மக்கா’ என்று என் கைகளைப் பிடித்து, என் மீது சாய்ந்த படி கதறி அழுதாள். சத்தம் கேட்டு வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்து எட்டிப் பார்த்த அத்தை, முறைத்தபடி நிற்கும் தன் சகோதரர்களிடம், ‘எல, இங்கெ வாங்க’ என்று அதட்டி அழைத்தார். சுமி அக்காவுடன் நிற்கும் என்னைப் பார்த்து, ‘மருமகனே, அவள மச்சுக்குக் கூட்டிட்டு போ’ என்றார்.

Image may contain: 1 person
Image may contain: one or more people
No photo description available.
No photo description available.

Wednesday, 6 November 2019

INDIA`S IRON MAN SARDAR VALLABHAI PATEL



INDIA`S IRON MAN   SARDAR VALLABHAI PATEL 




இந்தியாவின் ‘இரும்பு மனிதர்’ என்று போற்றப்படும் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து…
• குஜராத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். சிறுவனாக இருந்தபோது உடம்பில் கட்டி வந்தது. நாட்டு வைத்தியரிடம் அழைத்துப் போனார்கள். இரும்புக் கம்பியை சூடாக்கி, கட்டியை உடைக்க முற்பட்ட வைத்தியர், சிறுவனின் பிஞ்சு முகத்தைப் பார்த்து தயங்கினார். ‘ஐயா! சீக்கிரம் வையுங்கள். சூடு ஆறிவிடப்போகிறது’ என்றதாம் அந்த இரும்புக் குழந்தை.
• படிப்பில் கெட்டிக்காரர். சட்டக் கல்வி முடித்து வழக்கறிஞர் ஆனார். நல்ல வருமானம் வந்ததால், முதலில் தன் அண்ணனை லண்டன் அனுப்பி சட்ட மேற்படிப்பு படிக்க வைத்தார். அவர் திரும்பியதும் தானும் லண்டன் சென்று பாரிஸ்டர் பட்டம் பெற்றார்.

• அகமதாபாத்தில் வக்கீல் தொழில் நடத்தியபோது உள்ளூர் மக்களின் பிரச்சினைகளுக்கு உதவி, பிரபலமானார். 1917-ம் ஆண்டு மாநகராட்சித் தேர்தலில் வெற்றி பெற்றார். சுதேசி இயக்கம் உச்சத்தில் இருந்தபோது காந்திஜியின் உரையைக் கேட்டவர், வக்கீல் தொழிலை உதறி சுதேசி இயக்கத்தில் இணைந்தார்.
• குஜராத்தில் கேடா என்ற இடத்தில் பயங்கர பஞ்சம். ஆங்கிலேய அரசிடம் வரி விலக்கு கேட்டு விவசாயிகள் போரா டினர். அரசு பணியாததால் காந்தி, படேல் தலைமையில் வரிகொடாமைப் போராட்டம் வெடித்தது. அரசு பணிந்தது. வரி ரத்தானது. படேலின் முதல் வெற்றி இது!
• பார்டோலி என்ற இடத்தில் விவசாயிகள் நலன் காக்க நடைபெற்ற மற்றொரு சத்தியாக்கிரகப் போராட்டத்திலும் படேலுக்கு வெற்றி கிடைத்தது. அப்போதிருந்து மக்களால் ‘சர்தார்’ என்று அன்போடு அழைக்கப்பட்டார். அதன் பிறகு போராட்டங்களும் சிறைவாசமும் அவருக்கு வாடிக்கையாகிப் போனது.
• வட்டமேஜை மாநாட்டு தோல்விக்குப் பிறகு காந்தி, படேல் கைது செய்யப்பட்டனர். எரவாடா மத்திய சிறையில் அடைக்கப்பட்டபோது இருவருக்கும் நெருக்கம் வளர்ந்தது.
• சுதந்திரப் போராட்டத்தின் சிப்பாய் என்று அழைக்கப்பட்டார். இந்திய விவசாயிகளின் ஆன்மாவாக கருதப்பட்டார். நவீன இந்தியாவை உருவாக்கியவர்களில் முக்கியமானவர். சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராகவும் துணைப் பிரதமராகவும் பணியாற்றினார்.
• நாடு முழுவதும் ஆங்காங்கே துண்டு துண்டாக மன்னராட்சி நடந்துகொண்டிருந்த 565 ராஜ்ஜியங்களை ஒன்றிணைத்ததுதான் உள்துறை அமைச்சராக அவர் ஆற்றிய முதல் பணி. வி.பி.மேனனுடன் இணைந்து அகண்ட பாரதத்தை அமைத்தார்.
• அகண்ட பாரதம் அவ்வளவு எளிதாக அமையவில்லை. அந்த இலக்குக்காக சகல வழிகளையும் பின்பற்றினார். சர்ச்சைகள், எதிர்ப்புகள் எழுந்தாலும் இரும்பு மனிதராக நின்று சமாளித்தார்.
• 75-ம் வயதில் இறந்தார். 1991-ல் படேலுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

Saturday, 12 May 2018

READY TO MARRY AND DIVORSE PRABUDEVA -NIKISHA PATEL BORN 1982 JULY 20







READY TO MARRY AND DIVORSE PRABUDEVA
-NIKISHA PATEL BORN 1982 JULY 20




முன்னணி ஹீரோக்களுடன் நடிப்பது தெலுங்கில் சுலபம்.. தமிழில் கஷ்டம்!- நிகிஷா படேல் நேர்காணல்

பிரபுதேவாவை திருமணம் செயதுகொள்ள தயார்! செக்ஸி நடிகை நிகிஷா படேல்!
பிரபுதேவாவை திருமணம் செய்து கொள்ள தனக்கு விருப்பம் இருப்பதாக நடிகை நிகிஷா படேல் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் நடிகர் பிரபுதேவா. நடிகராக மட்டுமல்லாமல், இயக்குனர், தயாரிப்பாளர், டான்சர், நடன இயக்குனராக இருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில், ஏற்கனவே நயன்தாராவுடன் காதல் கொண்டிருந்த பிரபுதேவா, அவரது மனைவியிடமும் விவாகரத்து பெற்றார். இதையடுத்து நெருக்கமாக இருந்த பிரபுதேவா – நயன்தாரா காதலும் திடீரென்று முறிந்தது. 


இந்த நிலையில், தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து வரும் செக்ஸி நடிகை நிகிஷா படேல், 45 வயதாகும் பிரபுதேவாவை திருமணம் செய்துகொள்ள தயாராக இருப்பதாக அதிரடியாக அறிவித்துள்ளார். தற்போது கஸ்தூரி ராஜா இயக்கத்தில் பாண்டி முன்னி படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் நிகிஷா படேல். இதையடுத்து, இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்துள்ளது. இதன் பிற்கு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் நிகிஷா கூறுகையில், தனக்கு ஹிந்தி படங்களில் வாய்ப்பு வரும் நிலையில், முன்னணி நடிகருக்கு ஜோடியாகவும், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்தால் தொடர்ந்து நடிப்பேன் என்றும் கூறியுள்ளார்.

முழுவதும் நாயகிகளை மையமாக வைத்து தயாராகியுள்ள படம் ‘கரையோரம்’. சிம்ரன், நிகிஷா படேல், இனியா இணைந்து நடித்திருக்கும் இப்படத்தைப் பற்றி நிகிஷா படேலிடம் பேசியபோது..

‘கரையோரம்’ படத்தைப் பற்றிச் சொல்லுங்கள்...

ஒரு பெண்ணின் பயணத்தைப் பற்றியதுதான் ‘கரையோரம்’. 8 கதாபாத்திரங்கள் படத்தின் பிரதான பாத்திரங்களாக இருக்கும். ‘அடுத்து என்ன நடக்கப்போகிறது’ என்ற எதிர்பார்ப்பு, படத்தின் தொடக்கத்தில் இருந்தே ரசிகர்களுக்கு இருக்கும். தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் படமாக்கப்பட்டுள்ளது. அனைவரையும் கவரவேண்டும் என்ற முனைப்பில் இதை உருவாக்கி இருக்கிறோம். என் திரை வாழ்வில் இது முக்கியமான படமாக இருக்கும். கதை அமைப்பு, ஒளிப்பதிவிலும் பெரிய அளவில் பேசப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது. உடுப்பி கடற்கரையில் உள்ள வீட்டில் 80 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.



சிம்ரனோடு நடித்த அனுபவம் எப்படி இருந்தது?

சிம்ரன் கவுரவ வேடத்தில்தான் நடித்துள்ளார். ஒரு காட்சியை எப்படி உணர்ந்து நடிக்க வேண்டும் என்பதை அவரிடம் கற்றுக்கொண்டேன். என் படப்பிடிப்பு இல்லாத நேரத்தில்கூட தளத்திலேயே இருந்து, சிம்ரன் எப்படி நடிக்கிறார் என்று பார்த்தேன். பழகுவதற்கு மிகவும் மென்மையானவர்.

உங்களை தமிழ் படங்களில் அவ்வளவாக காணமுடிவதில்லையே?

தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகர்களுடன் நடிப்பதற்கு ஒரே நாளில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், தமிழில் அப்படி அல்ல. இங்கு முன்னணி நட்சத்திரங்களுடன் சேர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைப்பது மிகவும் கடினம். இங்கு பெரிய படங்களில் நாயகியாக நடிக்க வேண்டும் என்றால் பல படங்களில் முக்கிய வேடத்தில் நடித்திருக்க வேண்டும். நல்ல கதாபாத்திரங்கள், முன்னணி நடிகர்கள் அல்லது சிறந்த கூட்டணி உள்ள படத்தில் நடித்திருக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை தமிழ் திரையுலகில் நுழைவதே மிக கடினம். இந்த சூழ்நிலையிலும், எனக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் வருவது சந்தோஷம்தான்.

லண்டனில் முன்னணி தொலைக்காட்சி நாயகியாக இருந்த உங்களுக்கு, இந்தியாவில் நாயகியாக நடிக்கும் ஆசை எப்படி வந்தது?

லண்டனில் தொலைக்காட்சி தொடர்களில் நாயகியாக நடித்தாலும், இந்தியாவில், நம் சொந்த மண்ணில் நடிப்பதற்கு ஈடாகுமா! இந்திப் படங்கள் என்பது நம் அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்டது. எப்போதுமே வீடு திரும்பியதும், இந்தி படங்கள் பார்ப்பேன். இந்தியப் படங்களில் நடிப்பதுதான் என் கனவாக இருந்தது.

தொடர்ச்சியாக கவர்ச்சியாக நடிக்கி றீர்களே..




கவர்ச்சியாக நடிக்கும் ஆசை எனக்கும் இல்லைதான். ஆனால், ரசிகர்கள் விரும்புவார்கள் என்பதால் அவ்வாறு நடிப்பதில் தவறில்லை என்பது என் கருத்து. மேலும், ஒரு படத்தின் காட்சிக்கு தேவைப்பட்டால் அவ்வாறு நடிப்பதற்கும் நான் தயங்குவதில்லை. இருந்தாலும், நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள பாத்திரத்தில் நடிக்கவே ஆசைப்படுகிறேன். அதற்கான முழு திறமையும் என்னிடம் இருக்கிறது.

தமிழில் எந்த நாயகனுடன் இணைந்து நடிக்க ஆசை?

தனுஷ் படங்கள் என்றால் ரொம்ப இஷ்டம். நேரம் போவது தெரியாமல் பார்த்துக்கொண்டே இருப்பேன். எந்த பாத்திரம் என்றாலும் அற்புதமாக நடிக்கிறார். அவருடன் நடிக்க ஆசை. நாயகிகளில் அனுஷ்காவை ரொம்ப பிடிக்கும்!

Wednesday, 1 November 2017

SARDAR VALLABHAI PATEL ,THE MAN WHO CONSOLITATE 565 STATES WITHIN 2 YEARS BORN 1875 OCTOBER 31



SARDAR VALLABHAI PATEL ,THE MAN WHO CONSOLITATE 565 STATES WITHIN 2 YEARS  
BORN 1875 OCTOBER 31



"சர்தார் வல்லபபாய் படேல் தன் குடும்பத்திற்காக எதையும் செய்ததில்லை; அவரது குடும்பத்தாரும் "படேல் எங்களுக்கே சொந்தம்' என்று உரிமை கொண்டாடியதில்லை' என்று பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டினார்.
சுதந்திரத்துக்குப் பின் தேசத்தை ஒருங்கிணைத்தவரும், நாட்டின் முதல் மத்திய உள்துறை அமைச்சருமான சர்தார் வல்லபபாய் படேலின் 141-ஆவது பிறந்த தினம் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி தில்லியில் படேலின் வாழ்க்கை வரலாற்றைச் சித்திரிக்கும் கண்காட்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
நம்மிடையே உள்ள பிரிவுகள் மீது மட்டுமே கவனம் செலுத்திக் கொண்டிருந்தாலோ, ஒற்றுமை உணர்வுடன் வாழா விட்டாலோ, இந்தியாவைப் போன்ற வேறுபாடுகள் நிறைந்த நாட்டை நடத்திச் செல்ல முடியாது.

ஒற்றுமையைப் பற்றி பேசும்போது ஒரு விஷயம் தெளிவாகிறது. நானோ பாஜகவைச் சேர்ந்தவன். சர்தார் படேலோ, காங்கிரûஸச் சேர்ந்தவர். ஆனாலும் நாம் அவரது பிறந்த தினத்தை அதே உற்சாகத்துடன் கொண்டாடுகிறோம்.
சர்தார் படேலின் பிறந்த தினத்தைக் கொண்டாடுவதற்கு நான் (மோடி) யார்? என்று சிலர் கேட்பதைக் கண்டு நான் வியப்படைந்தேன். ஆனால், படேல் எப்படிப்பட்டவர் என்றால் அவருக்காக குடும்பத்தினர் சொந்தம் கொண்டாடியதில்லை. பொது வாழ்க்கையில் அவர் ஈடுபட்டிருந்தபோது தன் குடும்பத்திற்காக எதையும் செய்ததில்லை. அவர் எதைச் செய்தாலும் நாட்டுக்கு ஆற்றிய கடமையாகவே நினைத்து அதைச் செய்தார்.
சிலர் (படேல்) மிகவும் உயர்ந்தவர்கள். அவர்கள் நாட்டுக்கு ஆற்றிய பங்களிப்பை மறக்கடிக்கச் செய்ய கடந்த 70 ஆண்டுகளாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அந்த முயற்சிகளுக்கு வெற்றி கிட்டவில்லை.
ஆமதாபாத் நகராட்சித் தலைவராக படேல் இருந்தபோது, பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டைக் கொண்டுவருவதற்கான தீர்மானத்தைக் கொண்டுவந்தார்.

நாடு சுதந்திரம் பெற்ற பிறகு அரசுக்கு படேல்தான் தலைமை தாங்க வேண்டும் என்றே பெரும்பாலான மாநிலங்கள் விரும்பின. நேரு பிரதமராக வேண்டும் என்று அவை விரும்பவில்லை. எனினும், இந்த விவகாரத்தில் காந்தியின் விருப்பத்தை படேல் ஏற்றுக் கொண்டார்.
அதைத் தொடர்ந்தே நேரு பிரதமரானார் என்றார் அவர்.
முன்னதாக, தில்லியில் படேல் செüக்கில் உள்ள அவரது சிலைக்கு பிரதமர் மோடி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தி நடைபெற்ற ஓட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்து பேசியதாவது:
சர்தார் வல்லபபாய் படேலின் பிறந்த தினத்தில் அவருக்கு தலைவணங்கி மரியாதை செலுத்துகிறேன். இந்தியாவுக்கு அவர் ஆற்றிய தொண்டு மிகப்பெரியது.


சுதந்திரத்துக்குப் பிறகு இந்திய தேசத்தை ஒருங்கிணைக்கும் மிகப்பெரிய பொறுப்பை ஏற்று வெற்றிகரமாக செயல்படுத்திய அவர், இந்தியாவை வலுப்படுத்துவதிலும் முக்கியப் பங்கு வகித்தார். இன்று காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை கடவுச் சீட்டு போன்ற ஆவணங்கள் ஏதுமின்றி நாம் பயணம் செய்கிறோம்.

இதற்கு சர்தார் வல்லபபாய் படேல் என்ற ஒரு மனிதர்தான் காரணம். தேசத்தின் அனைத்து சமஸ்தானங்களையும் ஒருங்கிணைத்து இந்திய தேசத்தைக் கட்டமைத்த சாதனையாளர் அவர். இப்போது இந்தியா மிகவும் பலமான, பொருளாதார ரீதியாக சக்தி வாய்ந்த நாடாக இருப்பதற்கு தேசம் ஒருங்கிணைந்ததுதான் முக்கியக் காரணம்.
எனவே, தேசத்தை பிளவுபடுத்த நினைக்கும் தீயசக்திகளிடம் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றார் அவர்.
இந்தியாவின் இரும்பு மனிதர் என்று வர்ணிக்கப்படும் சர்தார் வல்லபபாய் படேல் குஜராத்தைச் சேர்ந்தவர். நாட்டின் மிக உயரிய விருதான "பாரத ரத்னா' மறைவுக்குப் பின் அளிக்கப்பட்டது