Showing posts with label தீரன் சின்னமலை. Show all posts
Showing posts with label தீரன் சின்னமலை. Show all posts

Monday, 1 August 2016

தீரன் சின்னமலை, இறப்பு: ஜூலை 31, 1805

தீரன் சின்னமலை, இறப்பு: ஜூலை 31, 1805

பூலித்தேவன், கட்டபொம்மன், மற்றும் மருது சகோதரர்கள், போன்றவர்கள் வீரம் விளைந்த நம் தமிழ் மண்ணில் பிறந்து, நாட்டின் விடுதலைக்காகத் தங்கள் வாழ்வையும், வசந்தத்தையும் தியாகம் செய்த மாமனிதர்கள். ‘தீர்த்தகிரி கவுண்டர்’ என்றும், ‘தீர்த்தகிரி சர்க்கரை’ என்றும் அழைக்கப்படும் தீரன் சின்னமலை அவர்கள், வெள்ளையர்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்து, தனது இறுதி மூச்சு வரை அடிபணியாமல், அவர்களை எதிர்த்துப் போரிட்டு வீரமரணம் அடைந்தவர்.

பல்வேறு போர்க் கலைகளைக் கற்றுத் தேர்ந்து, துணிச்சலான போர் யுக்திகளைத் தனது படைகளுக்குக் கற்றுத் தந்து, இந்திய விடுதலைப் போரில் பங்கேற்று, ஆங்கிலேயர்களுக்கு சவால் விட்டு, அவர்களின் கிழக்கிந்திய கம்பெனியை கருவறுக்க எண்ணினார். ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டுக்கிடந்த இந்தியாவை மீட்க மைசூர் மன்னன் திப்பு சுல்தான் உடன் இணைந்து, ஆங்கிலேயர்களை எதிர்த்த அவர் மூன்று முறை வெற்றியும் கண்டார்.

கொங்கு மண்ணில் பிறந்து, வீரத்திற்கு அடையாளமாக விளங்கி, தான் மறைந்தாலும் தனது புகழ் எப்போதும் நிலைத்திருக்குமாறு செய்த தீரன் சின்னமலையின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவர் ஆங்கிலேயர்களைத் எதிர்த்த போர்கள் பற்றியறிய மேலும் தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு: ஏப்ரல் 17, 1756
பிறப்பிடம்: மேலப்பாளையம், ஈரோடு, தமிழ்நாடு
இறப்பு: ஜூலை 31, 1805
பணி: கொங்கு தலைவர், பாளையக்காரர் மற்றும் விடுதலைப் போராட்ட வீரர்
நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு
தீரன் சின்னமலை அவர்கள், தென்னிந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் இருக்கும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள காங்கயம் அருகிலுள்ள மேலப்பாளையம் என்னும் ஊரில் ரத்னசாமி கவுண்டர் மற்றும் பெரியாத்தா தமபதியருக்கு மகனாக ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதி, 1756 ஆம் ஆண்டில் பிறந்தார். அவருக்குப் பெற்றோரிட்ட பெயர் தீர்த்தகிரி கவுண்டர்.

ஆரம்பகால வாழ்க்கை
பழைய கோட்டைப் பட்டக்காரர்கள் புலவர்களை ஆதரித்து, அவர்கள் வாயடைக்கும் அளவிற்கு அவர்களின் கவி மற்றும் புலமைக்காக அவர்களுக்குப் பரிசில் வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். தீர்த்தகிரி கவுண்டர் அவர்கள், அவர்களின் மரபு வந்ததால், அவர் இளம்பருவத்திலே ‘தீர்த்தகிரிச் சர்க்கரை’ என்றும் அழைக்கப்பட்டார். மேலும் அவர், தனது இளம் வயதிலேயே போர்க்கலைகளான வாள்பயிற்சி, வில்பயிற்சி, சிலம்பாட்டம், மல்யுத்தம், தடிவரிசை, போன்றவற்றைக் கற்றுத் தேர்ந்து, இளம் வீரராக உருவெடுத்தார். பல தற்காப்புகலைகள் அறிந்திருந்தாலும், அவர் அக்கலைகளைத் தன் நண்பர்களுக்கும் கற்றுக் கொடுத்து, சிறந்த போர்ப்பயிற்சி அளித்து, அவரது தலைமையில் இளம்வயதிலேயே ஓர் படையைத் திரட்டினார்.


தீரன் சின்னமலை பெயர் காரணம்

தீர்த்தகிரி கவுண்டர் அவர்களின் பிறப்பிடமான கொங்கு நாடு மைசூர் மன்னர் ஆட்சியில் இருந்ததால், அந்நாட்டின் வரிப்பணம், அவரது அண்டைய நாடான சங்ககிரி வழியாக மைசூர் அரசுக்கு எடுத்துச் செல்லப்படும். ஒருநாள், தனது நண்பர்களுடன் வேட்டைக்குச் சென்ற தீர்த்தகிரி, அவ்வரிப்பணத்தைப் பிடுங்கி, ஏழை எளிய மக்களுக்கு விநியோகம் செய்தார். இதைத் தடுத்த தண்டல்காரர்கள் கேட்ட போது, “சென்னிமலைக்கும், சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்ததாக மைசூர் மன்னர் ஹைதரலியிடம் சொல்” என்று சொல்லி அனுப்பினார். அன்று முதல், அவர் ‘தீரன் சின்னமலை’ என்று அழைக்கப்பட்டார்.

திப்பு சுல்தானுடன் கூட்டணி
தீரன் சின்னமலை வளர வளர நாட்டில், ஆங்கிலேயர்களின் ஆதிக்கமும் வளர்ந்தது. இதை சிறிதளவும் விரும்பாத சின்னமலை, அவர்களைக் கடுமையாக எதிர்த்தார். அச்சமயத்தில், அதாவது டிசம்பர் மாதம் 7ஆம் தேதி, 1782 ஆம் ஆண்டில் மைசூர் மன்னர் மரணமடைந்ததால், அவரது மகனான திப்பு சுல்தான் அவர்களை ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். அவரும் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை வேரோடு வெட்ட எண்ணினார். இதுவே, அவர்களுக்கும் சாதகமாக அமைந்தது. ஆகவே, அவரது நண்பர்களோடு அவர் ஒரு பெரும் படையைத் திரட்டி, மைசூர் மன்னர் திப்பு சுல்தானுடன் கைக்கோர்க்க முற்பட்டார். ஏற்கனவே, திப்புவின் தந்தையை ஒருமுறை எதிர்த்த நிகழ்வையும், அவரது வீரத்தையும் பற்றி அறிந்த திப்பு சுல்தான், அவருடன் கூட்டணி அமைத்தார். அவர்களின் கூட்டணி, சித்தேசுவரம், மழவல்லி, சீரங்கப்பட்டணம் போன்ற இடங்களில், ஆங்கிலேயர்களை எதிர்த்து நடந்த மூன்று மைசூர் போர்களில் ஆங்கிலேயர்களின் படைகளுக்குப் பெரும் சேதம் விளைவித்து, வெற்றிவாகை சூடியது.


நான்காம் மைசூர் போர்

மூன்று மைசூர் போர்களிலும், திப்புசுல்தான் – தீரன் சின்னமலை கூட்டணி வெற்றியடைந்ததைக் கண்டு வெகுண்டெழுந்த ஆங்கிலேயர்கள், பல புதிய போர் யுக்திகளைக் கையாளத் திட்டம் தீட்டினர். இதனால், திப்பு சுல்தான், மாவீரன் நெப்போலியனிடம், நான்காம் மைசூர் போரில் தங்களுக்கு உதவிப் புரியக் கோரி, தூது அனுப்பினார். என்னதான் நெப்போலியன் உதவிப் புரிந்தாலும், தங்களது படைகளோடு துணிச்சலுடனும், வீரத்துடனும் திப்புவும், சின்னமலையும் அயராது போரிட்டனர். துரத்ருஷ்டவசமாக, கன்னட நாட்டின் போர்வாளும், மைசூர் மன்னருமான திப்பு சுல்தான் அவர்கள், நான்காம் மைசூர் போரில், மே மாதம் 4 ஆம் தேதி, 1799 ஆம் ஆண்டில் போர்க்களத்திலே வீரமரணமடைந்தார்.

சின்னமலையின் பிற வெற்றிகள்
திப்பு சுல்தான் அவர்களின் வீரமரணத்திற்குப் பின்னர், கொங்கு நாட்டில் உள்ள ஓடாநிலை என்னும் ஊரில் தங்கியிருந்தார். திப்புவின் மரணத்திற்குப் பழிதீர்க்கும் வண்ணமாக, அவருக்கு சொந்தமான சிவன்மலை – பட்டாலிக் காட்டில் தனது வீரர்களுக்குப் பயிற்சி அளித்து, பிரெஞ்சுக்காரர்கள் உதவியோடு பீரங்கிகள் போன்ற போர் ஆயுதங்களையும் தயாரித்தார்.

பின்னர், கி.பி 1799ல் தனது படைகளைப் பெருக்கும் விதமாக, திப்புவிடம் பணிபுரிந்த முக்கியமான சிறந்த போர்வீரர்களான தூண்டாஜிவாக், அப்பாச்சி போன்றோரை தனது படையில் சேர்த்ததோடு மட்டுமல்லாமல், தன்னை ஒரு பாளையக்காரராக அறிவித்து, அண்டைய நாட்டில் உள்ள பாளையக்காரர்கள் அனைவரையும் ஒன்று திரட்டினார்.

லெஃப்டினன்ட் கர்னல் கே. க்ஸிஸ்டரின் கம்பெனியின் 5 ஆம் பட்டாளத்தை அழிக்க எண்ணிய அவர், ஜூன் மாதம் 3 ஆம் தேதி, 1800 ஆம் ஆண்டில், கோவைக்கோட்டையைத் தகர்க்கத் திட்டமிட்டார். சரியான தகவல் பரிமாற்றங்கள் இல்லாத ஒரே காரணத்தால், கோவைப்புரட்சி தோல்வியுற்றது.

1801ல், பிரெஞ்சுக்காரரான கர்னல் மாக்ஸ் வெல் தலைமையில் ஆங்கிலேயர்களை பவானி-காவிரிக்கரையில் எதிர்த்த அவர், வெற்றிக் கண்டார். அந்த வெற்றியைத் தொடர்ந்து, 1802ல் சென்னிமலைக்கும் சிவன் மலைக்குமிடையே நடந்த போரில் சிலம்பமாடி ஆங்கிலப்படையைத் தவிடுபொடியாக்கி, 1803ல் அறச்சலூரில் உள்ள கர்னல் ஹாரிஸின் ஆங்கிலப்படையை கையெறிகுண்டுகள் வீசி வெற்றிக் கண்டார்.

இறப்பு
ஆங்கிலேயர்கள் பலரையும் தோல்விக்குள்ளாக்கி, அவர்களை தலைகுனியச் செய்த தீரன் சின்னமலையை சூழ்ச்சியால் வீழ்த்த எண்ணிய ஆங்கிலேயர்கள், அவரது சமையல்காரன் நல்லப்பனுக்கு ஆசை வார்த்தைகள் காட்டி, அந்த மாவீரனையும் மற்றும் அவரது சகோதரர்களைக் கைது செய்தனர். கைது செய்து அவர்களை, சங்ககிரிக் கோட்டைக்குக் கொண்டு சென்ற ஆங்கிலேயர்கள், ஜூலை 31, 1805 அன்று தூக்கிலிட்டனர். தம்பிகளுடன், தீரன் சின்னமலையும் வீரமரணமடைந்தார்.

நினைவஞ்சலி

தீரன் சின்னமலையின் உருவச்சிலை தமிழக அரசால் சென்னையில் அமைக்கப்பட்டது.

ஓடாநிலையில் சின்னமலை நினைவு மணிமண்டபம் உள்ளது.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குத் ‘தீரன் சின்னமலை மாளிகை’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.


ஜூலை மாதம் 31 ஆம் தேதி 2005 ஆம் ஆண்டில், இந்திய அரசின் தபால்தந்தி தகவல் தொடர்புத்துறை, ‘தீரன் சின்னமலை நினைவு அஞ்சல் தலை’ வெளியிட்டது.


காலவரிசை

1756: ஈரோடு மாவட்டத்தில் உள்ள காங்கயம் அருகிலுள்ள மேலப்பாளையம் என்னும் ஊரில் ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதி, 1756 ஆம் ஆண்டில் பிறந்தார்.
1782: டிசம்பர் மாதம் 7ஆம் தேதி, 1782 ஆம் ஆண்டில் மைசூர் மன்னர் ஹைதர் அலி மரணமடைந்ததால், அவரது மகன் திப்பு சுல்தான் ஆட்சிப் பொறுப்பேற்றார்.
1799: நான்காம் மைசூர் போரில், மே மாதம் 4 ஆம் தேதி, 1799 ஆம் ஆண்டில் போர்க்களத்திலே வீரமரணமடைந்தார்.
1799: தனது படைகளைப் பெருக்கினார்.
1800: ஜூன் மாதம் 3 ஆம் தேதி, 1800 ஆம் ஆண்டில், கோவைக்கோட்டையைத் தகர்க்கத் திட்டமிட்டார்.
1801: பிரெஞ்சுக்காரரான கர்னல் மாக்ஸ் வெல் தலைமையில் ஆங்கிலேயர்களை பவானி-காவிரிக்கரையில் எதிர்த்து வெற்றிக் கண்டார்.
1802: சென்னிமலைக்கும் சிவன் மலைக்குமிடையே நடந்த போரில் சிலம்பமாடி ஆங்கிலப்படையைத் தவிடுபொடியாக்கினார்.
1803: அறச்சலூரில் உள்ள கர்னல் ஹாரிஸின் ஆங்கிலப்படையை கையெறிகுண்டுகள் வீசி வெற்றிக் கண்டார்.
1805: ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டு, சங்ககிரிக் கோட்டைக்குக் கொண்டு சென்ற அவரையும், அவரது தம்பிகளையும், ஜூலை 31, 1805 அன்று தூக்கிலிட்டனர்.











தீரன் சின்னமலை (ஏப்ரல் 17, 1756 - ஜூலை 31, 1805) இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். தமிழகத்தில் பிரித்தானியக் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியை எதிர்த்து கருப்ப சேர்வையுடன் இணைந்து போரிட்டவர்களுள் ஒருவர். கொங்கு நாட்டில் ஓடாநிலைக் கோட்டை கட்டி ஆண்டவர்.
வரலாறு

தீரன் சின்னமலை ஓடாநிலை மணிமண்டபம்
இன்றைய ஈரோடு மாவட்டத்தில் காங்கயம் வட்டம் சென்னிமலை அருகிலுள்ள செ.மேலப்பாளையம் என்னும் சிற்றூரில் ஏப்ரல் 17, 1756 அன்று பிறந்தவர்.[1] அவரின் தந்தையார் பெயர் ரத்னசாமி கவுண்டர் (பயிரன் கூட்டம்), தாயார் பெயர் பெரியாத்தா (ஓதாலன் கூட்டம்). இவரின் இயற்பெயர் தீர்த்தகிரி கவுண்டர். இவர் பழைய கோட்டைப் பட்டக்காரர் மரபு என்று கூற படுகிறது. இதனால் இவர் இளம்பருவத்தில் தீர்த்தகிரிச் சர்க்கரை எனப் பெயர் பெற்றார்.

தீர்த்தகிரி இளவயதிலேயே மல்யுத்தம், தடிவரிசை, வில்பயிற்சி, வாள்பயிற்சி, சிலம்பாட்டம் போன்ற போர்ப் பயிற்சியை சிவந்தாரையர் என்பார் வழிவந்தவரிடம் கற்றுத் தேர்ந்தார்.கொங்கு நாடு அப்பொழுது மைசூரார் ஆட்சியில் இருந்ததால், கொங்கு நாட்டு வரிப்பணம் சங்ககிரி வழியாக மைசூர் அரசுக்குச் சென்றது. ஒருநாள் வேட்டைக்குச் சென்ற தீர்த்தகிரி மைசூர் அரசுக்குச் செல்லும் வரிப்பணத்தைப் பிடுங்கி ஏழைகட்கு விநியோகித்தார். அப்பொழுது, வரி கொண்டு சென்ற வரி தண்டல்காரரிடம் சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்ததாகச் சொல் என்று சொல்லி அனுப்பினார். அதுமுதல் தீர்த்தகிரிக்குச் சின்னமலை என்ற பெயர் வழங்கலாயிற்று என்ற கருத்து பரவலாக உள்ளது.

இந்தியாவுக்கு வியாபாரம் செய்ய வந்த பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியினர் கொஞ்சம் கொஞ்சமாக நாட்டில் ஆதிக்கம் செலுத்துவதைத் தடுக்க வேண்டும் என்று சின்னமலை விரும்பினார். இன்றைய கேரளத்திலும் கொங்கு நாட்டின் சேலம் பகுதியிலும் இருந்த கிழக்கிந்திய கம்பெனிப்படை ஒன்று சேராவண்ணம் இடையில் பெரும் தடையாகச் சின்னமலை விளங்கினார். டிசம்பர் 7, 1782 இல் ஐதரலியின் மறைவிற்குப் பின் திப்பு சுல்தான் மைசூர் சீரங்கப் பட்டணத்தில் ஆட்சிக்கு வந்து கிழக்கிந்தியக் கம்பெனியிரை எதிர்த்துக் கடும் போர் செய்து வந்தார். மாவீரன் சின்னமலை ஆயிரக்கணக்கான கொங்கு இளைஞர்களைத் திரட்டி மைசூர் சென்றார். சின்னமலையின் கொங்குப்படை சித்தேசுவரம், மழவல்லி, சீரங்கப்பட்டணம் போர்களில் திப்புவின் வெற்றிக்குப் பெரிதும் உதவியது. குறிப்பாக 40,000 வீரர்களோடு மழவல்லியில் போரிட்ட வெள்ளையர் படைகட்குக் கொங்குப்படை பெரும் சேதத்தை உண்டாக்கியது. நெப்போலியனிடம் படை உதவி கேட்டுத் திப்பு சுல்தான் அனுப்பிய தூதுக்குழுவில் சின்னமலையின் மெய்க்காப்பாளர் கருப்பசேர்வையும் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்திய அரசு வெளியிட்டுள்ள தீரன் சின்னமலை நினைவு தபால் தலை
நான்காம் மைசூர்ப் போரில் மே 4, 1799-இல் கன்னட நாட்டின் போர்வாள் ஆன திப்பு சுல்தான் போர்க்களத்தில் வீரமரணம் எய்திய பின் சின்னமலை கொங்கு நாடு வந்து அரச்சலூர் அருகே ஓடாநிலைக் கோட்டை கட்டிப் போருக்குத் தயார் ஆனார். ஏற்கனவே ஏப்ரல் 18, 1792-இல் தான் வாங்கிய சிவன்மலை - பட்டாலிக் காட்டில் வீரர்கட்குப் பயிற்சி அளித்தார். ஆயுதங்கள் தயாரித்தார். ஓடாநிலையில் பிரெஞ்சுக்காரர் துணையோடு பீரங்கிகளும் தயாரிக்கப்பட்டன. தீர்த்தகிரிச் சர்க்கரை உத்தமக் காமிண்ட மன்றாடியார் என்று சின்னமலை தன்னைப் பாளையக்காரராக அறிவித்துக் கொண்டு கொங்குநாட்டுப் பாளையக்காரர்களை ஓரணியில் சேர்க்க முற்பட்டார். போராளிகளின் கூட்டமைப்பை ஏற்படுத்தி விருப்பாச்சி கோபால நாயக்கர், திப்புவிடம் பணியாற்றிய மராட்டிய மாவீரர் தூண்டாஜிவாக், பரமத்தி அப்பாச்சி ஆகியவர்களோடு இணைந்து ஜூன் 3, 1800 அன்று கோவைக்கோட்டையைத் தகர்த்து அங்கிருந்து லெப்டினன்ட் கர்னல் கே. க்ஸிஸ்டரின் கம்பெனியின் 5 ஆம் பட்டாளத்தை அழிக்க கோவைப்புரட்சிக்குச் சின்னமலை திட்டமிட்டார். முந்தியநாளே போராளிகள் அணியில் சிலர் அறிவிப்பின்றிச் சண்டையைத் தொடங்கியதால் கோவைப்புரட்சி தோல்வியுற்றது.

இடையறாத போர் வாழ்விலும் பல கோயில்களுக்குத் திருப்பணிகள் செய்தார். புலவர் பெருமக்களை ஆதரித்தார். சின்னமலை கோயில் கொடை பற்றிய கல்வெட்டுகள் சிவன்மலை, பட்டாலி, கவுண்டம்பாளையம் ஆகிய ஊர்களில் உள்ளன. சமூக ஒற்றுமை சின்னமலையிடம் மிகச் சிறப்பாக விளங்கியது. அவர் கூட்டமைப்பில் கவுண்டர், தேவர், வன்னியர், வேட்டுவர், நாயக்கர், நாடார், தாழ்த்த பட்டோர் மற்றும் இஸ்லாமியர் பலர் இருந்தனர். கருப்பசேர்வை, ஓமலூர் சேமலைப் படையாச்சி, முட்டுக்கட்டைப் பெருமாத்தேவன், ஃபத்தே முகம்மது உசேன் ஆகியோர் பலர் சின்னமலை படையில் முக்கியம் பெற்றிருந்தனர். எப்படியாவது சின்னமலையை ஒழிக்க வேண்டும் என்று ஆங்கிலேயர் முடிவு செய்தனர்.

வெற்றி
1801-இல் ஈரோடு காவிரிக்கரையிலும், 1802-இல் ஓடாநிலையிலும், 1804-இல் அறச்சலூரிலும் ஆங்கிலேயர்களுடன் நடைபெற்ற போர்களில் சின்னமலை பெரும் வெற்றி பெற்றார். சின்னமலையின் ஓடாநிலைக் கோட்டையைத் தகர்க்கக் கள்ளிக்கோட்டையிலிருந்து மிகப்பெரும் அளவில் பீரங்கிப்படை வந்தது. சுபேதார் வேலப்பன் அறிவுரைப்படி சின்னமலை ஓடாநிலையிலிருந்து தப்பிப் பழனிமலைத் தொடரில் உள்ள கருமலை சென்றார்.

தூக்கிலிடப்படல்

ஓடாநிலைக் கோட்டையில் கருப்பு சேர்வையின் திருவுருவச் சிலை
போரில் சின்னமலையை வெல்ல முடியாது என்று கண்ட ஆங்கிலேயர் சூழ்ச்சி மூலம், சின்னமலையைக் கைது செய்து சங்ககிரிக் கோட்டைக்குக் கொண்டு சென்று போலி விசாரணை நடத்தி ஜூலை 31, 1805 அன்று தூக்கிலிட்டனர். அவருடன் சின்னமலையின் தம்பியர்களும், படைத்தலைவர் கருப்பசேர்வையையும் தூக்கிலிட்டனர்.

கௌரவிப்பு
முன்பு தீரன் சின்னமலை நினைவாக திருச்சிராப்பள்ளியை தலைமையிடமாக கொண்டு போக்குவரத்துக் கழகமும், கரூரை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டமும் இருந்தது. தீரன் சின்னமலைக்குத் தமிழக அரசு சென்னையில் உருவச்சிலை ஒன்றை அமைத்ததுள்ளது. தமிழக அரசின் சார்பில் ஓடாநிலைக் கோட்டையில் சின்னமலை நினைவு மணிமண்டபம் உள்ளது. ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குத் தீரன் சின்னமலை மாளிகை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஏப்ரல் 17 அன்று அவர் பிறந்த நாளிலும், அவர் மறைந்த ஆடிப் பதினெட்டு நாளிலும் அவருக்கு அஞ்சலி செலுத்திக் கொங்கு மக்கள் தங்கள் நன்றியைச் செலுத்துகின்றனர். இந்திய அரசின் தபால்தந்தி தகவல் தொடர்புத்துறை 31 ஜூலை 2005 அன்று தீரன் சின்னமலை நினைவு அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டு தமிழக அரசால், இவர் தூக்கிலிடப்பட்ட ஊரான சங்ககிரியில் இவருக்கு ஒரு நினைவு மண்டபம் கட்ட திட்டமிடப்பட்டது. அவ்வாறே கட்டி முடிக்கப்பட்ட மண்டபம் டிசம்பர் 23, 2013 அன்று திறக்கப்பட்டது. அதே நாளில், கிண்டியிலுள்ள இவரது உருவச்சிலையும் புதுப்பிக்கப்பட்டு, இவரது வாழ்க்கை வரலாற்றுக் குறிப்பும் வெளியிடப்பட்டது.[2]

பெயர்க் காரணம்
தீர்த்தகிரி கவுண்டரின் பிறப்பிடமான கொங்கு நாடு மைசூர் மன்னர் ஆட்சியில் இருந்ததால், அந்நாட்டின் வரிப்பணம், அவரது அண்டைய நாடான சங்ககிரி வழியாக மைசூர் அரசுக்கு எடுத்துச் செல்லப்படும். ஒருநாள், தனது நண்பர்களுடன் வேட்டைக்குச் சென்ற தீர்த்தகிரி, அவ்வரிப்பணத்தைப் பிடுங்கி, ஏழை எளிய மக்களுக்கு விநியோகம் செய்தார். இதைத் தடுத்த தண்டல்காரர்கள் கேட்ட போது, “சென்னிமலைக்கும், சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்ததாக மைசூர் மன்னர் ஹைதரலியிடம் சொல்” என்று சொல்லி அனுப்பினார். அன்று முதல், அவர் ‘தீரன் சின்னமலை’ என்று அழைக்கப்பட்டார்.[மேற்கோள் தேவை]