Showing posts with label RAJARAM. Show all posts
Showing posts with label RAJARAM. Show all posts

Friday, 22 May 2020

RAJARAM MOHAN ROY ABOLISHED SATI WITH LORD WILLIAM BENTINCK BORN 1772 MAY 22 - 1833 SEPTEMBER 27.


RAJARAM MOHAN ROY  ABOLISHED 
SATI  WITH LORD WILLIAM BENTINCK
BORN 1772 MAY 22 - 1833 SEPTEMBER 27.



இராசாராம் மோகன்ராய் (மே 22, 1772– செப்டம்பர் 27, 1833) வங்காளத்திலுள்ள வசதி படைத்த வைதிக பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவர். பிரம்ம சமாஜத்தை நிறுவியவர். இவரைப் புதிய இந்தியாவை நிறுவியர் என்றும், புதிய மறுமலர்ச்சியை தொடங்கி வைத்தவர் என்றும் கூறுவர்.[1] பிரம்மசமாஜம் கி.பி. 1828 இல் நிறுவப்பட்டது. இதுவே முதல் சீர்திருத்த இயக்கமாகும்.

இவர் கற்றறிந்த மொழிகள் ஆங்கிலம், பிரஞ்சு, இலத்தீன், இபிரு, கிரேக்கம், சமஸ்கிருதம் மற்றும் இந்தி போன்றவைகளாகும். இந்து சமய தரும சாத்திரங்கள், வேதங்கள், உபநிடதங்கள் போன்ற பிறவற்றையும் ஆழ்ந்து பயின்றிருந்தார். ஆங்கில நாகரிகத்தில் அதிக நாட்டம் கொண்டதால் பலமுறை இங்கிலாந்து சென்று திரும்பினார். அவர் தமது நாற்பதாவது வயதில் வேலையை விட்டு விலகினார். எஞ்சிய வாழ்நாளைச் சமுதாயப் பணிக்காக அர்ப்பணித்தார். அவர் இந்து சமுதாயத்தில் இருந்த
மூடநம்பிக்கைகளுக்கும் மற்றும் ஏனைய தீமைகளுக்கும் எதிராகக் குரல் எழுப்பினார். இந்த நிறுவனத்தை நிறுவியதன் மூலம் அவர் ஒரு புதிய சமயத்தைப் பரப்ப விரும்பவில்லை. மாறாக இந்த அமைப்பில் அனைத்துச் சமயங்களின் அரிய கோட்பாடுகள் அமைந்திருந்தன. எல்லா மக்களும் சாதி, சமய பாகுபாடின்றி ஒன்றாக சேர்ந்து ஒரே இறைவனை வழிபட இந்நிறுவனம் வழிவகுத்துக் கொடுத்தது. கிழக்கிந்திய நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த போது கிறித்துவப் பாதிரியார்களின் தொடர்பு அவருக்குக் கிடைத்தது. இதன் விளைவாக இந்து சமயத்தை சீர்திருத்தி அமைக்க வேண்டுமென
விரும்பினார். கி.பி. 1815 இல் கல்கத்தாவில் ஆத்மிக சபை என்பதை நிறுவினார். இதில் நடுத்தர, கீழ் தர மக்கள் கலந்து கொண்டனர். 1819 இல் வேதாந்த சாத்திரங்களின் சாரத்தை ஆங்கிலத்திலும், வங்காள மொழியிலும் வெளியிட்டார். பின்பு நான்கு உபநிடதங்களை மொழிபெயர்த்தார். 1820 இல் ஏசுவின் போதனைகளை திறனாய்வு செய்து, ஏசுவின் கொள்கைகள் அமைதிக்கும் ஆனந்தத்திற்கும் வழிகாட்டி என்ற நூலை வெளியிட்டார்.அக்காலத்தில் இந்துப் பெண்களுக்குக் கட்டாய வழக்கமாக இருந்த உடன்கட்டை ஏறல் (சதி) என்ற சமுதாயக் கொடுமையை ஒழிக்க இவர் பெரிதும் பாடுபட்டார்


.



நவீன இந்தியாவின் முதல் பெருந்தலைவர் என்று ராஜாராம் மோகன்ராயை சொல்வது பொருத்தமாக இருக்கும். 1772 இல் வங்கத்தில் பிறந்தார் இவர். இவரின் குடும்பம் வைணவத்தில் நம்பிக்கை கொண்டிருந்தது. முகலாய ஆட்சியாளர்களின் கீழே வரி வசூல் செய்யும் பணியில் அவரின் குடும்பத்தினர் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள். அவரின் பால்ய காலத்திலேயே உயர் ஜாதியில் இயல்பாகஇருக்கும் வழக்கத்தால் அவருக்கு இருமுறை திருமணம் செய்துவைக்க பட்டது. முதலில் வங்காளி மற்றும் பாரசீகத்தை கற்று தேர்ந்த பின் பாட்னா போய் அராபிய மொழியை கற்றுக்கொண்டார். அங்கே அவரின் ஆசிரியர்கள் அவருக்கு அரிஸ்டாட்டில்,குரான் மற்றும் பைபிளை
அறிமுகப்படுத்தினார்கள். பனாரஸில் அவர் சமஸ்க்ருதத்தை கற்றுத்தேர்ந்தார். இப்படி அவர் கற்ற மொழிகள் மட்டும் ஒரு டஜன் !
அவரின் அண்ணன் இறந்ததும் அவரின் கண் முன்னரே அவரின் எதிர்ப்பையும் மீறி அவரின் அண்ணி சதியால் தீக்கிரையாக்கப்பட்டார். கிழக்கிந்திய கம்பெனியில் அதிகாரியாக பல்வேறு ஊர்களில் அவர் பணியாற்றினார். அவரின் முதல் நூல் பாராசீகத்தில் அராபிய மொழியிலான முன்னுரையோடு வெளிவந்தது. அது உருவ வழிபாட்டை தாக்கியிருந்தது. கல்கத்தாவில் வாழ ஆரம்பித்ததும் ஆத்மிய சபையை துவங்கி இந்து மதத்தில் இருந்த மத மற்றும் சமூக தீமைகளுக்கு எதிராக போராட ஆரம்பித்தார்.

பிரம்ம சபையை நிறுவினார் ; பின்னர் அதுவே பிரம்ம சமாஜம் ஆனது. உருவ வழிபாட்டை எதிர்த்ததோடு இல்லாமல் ஜாதிய அமைப்பின் இறுக்கமான தன்மை,அர்த்தமற்ற மத சடங்குகள் ஆகியவற்றை விமர்சனம் செய்தார். ஒரே ஒரு இறைவனை தான் இந்து மதம்,கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் வலியுறுத்துவதாக உறுதிபட சொன்ன அவர் இந்திய மதத்தின் பல கடவுள் வழிபாடு,கிறிஸ்துவத்தின் இறைவன்,அவரின் மகன் மற்றும் புனித ஆவி வழிபாடு ஆகியவற்றை நிராகரித்தார். கிறிஸ்துவ மற்றும் இஸ்லாமிய மதத்தின் தத்துவ வெளிச்சத்தை இந்துக்கள் அறிய வேண்டும் என்று அவர்
இயங்கினாலும்,PERCEPTS OF JESUS நூலில் கிறிஸ்துவின் அற்புத செயல்களை சாத்தியமில்லை என்று நிராகரித்தார். இவ்வாறு இரு மதத்து மக்களின் வெறுப்புக்கும் அவர் ஆளானார்.
இந்து மதத்தை கிறிஸ்துவ மிஷனரிக்கள் தாக்குவதை தீவிரமாக எதிர்த்ததோடு மத மாற்றத்துக்கு எதிராகவும் அவர் குரல் கொடுத்தார். மேற்கு மற்றும் கிழக்கு ஆகிய இரு பகுதிகளின் தத்துவ சங்கமம் நிகழ வேண்டும் என்று அவர் இயங்கியதோடு எல்லா மதத்தின் நம்பிக்கையாளர்களும் சகோதர்களாக சேர்ந்திருக்க முடியும் என்று நம்பினார். அவரை பழமைவாதிகள் சமூகத்தை விட்டு ஒதுக்கி வைத்தார்கள் ; அதற்கான கூட்டத்தில் இவரை பெற்ற அன்னையே கலந்து கொண்டார். அவரை ஜாதியை விட்டு ஒதுக்கி வைத்தார்கள்.


பதினோரு ஆண்டுகள் சதிக்கு எதிரான தீவிரமான போராட்டத்தை அவர் தொடுத்தார். வேதங்கள் மற்றும் ஐந்து முக்கிய உபநிடதங்களை வங்க மொழிக்கு மொழிபெயர்த்திருந்த அவர் அவற்றைக்கொண்டு சதி என்பதை உண்மையான இந்து மதம் ஆதரிக்கவில்லை என்று தீவிரமாக வாதாடி சதி தேவையில்லை என்று முழங்கினார். வில்லியம் பெண்டிங்க் காலத்தில் சதிக்கு எதிரான சட்டம் நிறைவேற்றப்பட்டாலும் அது ராஜா ராம்மோகன் ராயின் உழைப்பாலே நிகழ்ந்தது என்பதே உண்மை
மேலும் ஆங்கிலேயே நாடாளுமன்றத்துக்கு சதியை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்று ஒரு சாரார் கடிதம் எழுதிய பொழுது கொண்டு வரக்கூடாது என்று உறுதிபட இவரும் கடிதம் எழுதினார். பல்வேறு இறுதி சடங்கு நடைபெறும் இடங்களில் பெண்கள் தீக்கிரையாக்கப்படாமல் இருக்க உறவினர்களிடம் நெடிய சமரச பேச்சுவார்த்தையை நிகழ்த்துகிற பண்பாளராகவும் அவர் இருந்தார். பெண்களுக்கு சொத்துரிமை வேண்டும் என்றும்,பல தார திருமணம் கூடவே கூடாது என்றும் அவர் வாதாடினார்.


ஆண்களுக்கு என்று தனியாக ஒரு பள்ளியை துவங்கி அதில் ஆங்கிலம் கற்பிக்க ஆரம்பித்தார். கூடவே இயங்கியல் மற்றும் வால்டேரின் தத்துவங்களை அவர் அங்கே கற்பித்தார். பல்வேறு இதழ்களை நடத்திய இந்தியாவின் பத்திரிக்கை துறை முன்னோடி அவர். வங்க மொழியில் இலக்கணம் சார்ந்து பல்வேறு நூல்களையும் அவர் இயற்றினார். ஜமீன்தார்கள் நிலத்தில் பாடுபடும் தொழிலாளியை சுரண்டுவதை அவர் சாடினார். ஆங்கிலேய அரசு ஒரு நிலத்தில் இருந்து எவ்வளவு வரி பெறப்பட வேண்டும் என்பதை உறுதியாக தீர்மானிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். கிழக்கிந்திய கம்பெனியின் ஆதிக்கத்தை சாடியதோடு இந்திய பொருட்கள் மீதான கடுமையான வரி விதிப்பை நீக்க வேண்டும் என்றும் அவர் முயற்சிகள் எடுத்தார்.

லத்தீன் அமெரிக்காவின் மக்கள் புரட்சி வென்றதும் அவர் ஊரில் உள்ள எல்லாருக்கும் விருந்து போட்டார். அயர்லாந்து மக்களை ஆங்கிலேய அரசு ஒடுக்கிய பொழுது சீர்திருத்த சட்டத்தை அவர்களுக்கு சாதகமாக ஆங்கிலேய அரசு நிறைவேற்றா விட்டால் ஆங்கிலேய ஆதிக்கமே இல்லாத பகுதியில் போய் வாழ்வேன் என்று முழக்கமிட்டார். நேப்பல்ஸ் புரட்சி தோல்வியுற்ற பொழுது மனம் வெம்மி முக்கியமான அலுவல்களை ரத்து செய்கிற பண்பும் அவருக்கு இருந்தது. கத்தோலிக்கர்கள் உரிமையோடு பிரட்டனில் வாழ வழி ஏற்பட்ட பொழுது அதை வரவேற்றார்

1831 இல் முகலாய அரசருக்கான ஊக்கத்தொகையை ஆங்கிலேய அரசு ஏற்றித்தர இங்கிலாந்துக்கு பயணம் போன அவர் நாடாளுமன்ற நடவடிக்கைகளை நேரில் பார்த்தார். சட்டம் மற்றும் பொருளாதாரம் சார்ந்து நூல்களை அங்கே இருந்து இயற்றினார். பிரிஸ்டோல் நகரத்தில் தங்கியிருந்த பொழுது மரணமடைந்தார். அங்கே எரிக்க வசதிகள் இல்லாததால் புதைக்கப்பட்டார். அவரின் கல்லறையின் மீது இந்த வாசகங்கள் ஒளிர்கின்றன :

இந்திய மக்களின் சமூக,அற மற்றும் பொருளாதார நிலையை முன்னேற்ற அவரின் ஓயாத உழைப்புகள்,உருவ வழிபாடு மற்றும் சதியை நீக்க அவரின் அக்கறை மிகுந்த முயற்சிகள் இறைவனின் மகிமை மற்றும் மனிதனின் நலத்தை மேம்படுத்துவற்றுக்காக வாதிட்ட ,ஓயாது அவரின் செயல்கள் அவரின் நாட்டு மக்களின் நினைவுகளில் நன்றியோடு நிறைந்திருக்கும்.

- பூ.கொ.சரவணன்


இராஜா ராம் மோகன் ராய் பெண்களுக்கு நீதி வேண்டும் என்று அரும்பாடு பட்ட முதல் இந்திய மேதை.

கணவன் இறந்தால், துணைவன் உடல் எரியும் சிதை நெருப்பிலேயே பெண்கள் துடிதுடிக்க எரிந்துச் சாம்பலாக வேண்டும் என்ற ‘சதி’ எனும் கொடுமையான மூடப் பழக்க வழக்கத்தை எதிர்த்து இராஜா ராம் மோகன் ராய் போராடினார். (1829-ஆம் ஆண்டில் ஆங்கிலேயர் இராஜப் பிரதிநிதியாகப் பணியாற்றிய லார்டு வில்லியம் பெண்டிங் உதவியால் ‘சதி’ திட்டத்தைச் சட்ட விரோதமாக்கி வெற்றி பெற்றார்! சதி திட்டத்தை வீழ்த்திப் பெண்களுக்குரிய நீதியை நிலை நாட்டிய சீர்திருத்த மா வீரராக இராஜராம் மோகன்ராய் திகழ்ந்தார்!)

கணவன் இறந்த பிறகு பெண்கள் மறுமணம் செய்து கொள்ளும் திட்டத்திற்காக அவர் போராடினார்.

பெண்களுக்குக் குடும்பச் சொத்தில் பங்கு கொடுக்க வேண்டும் என்று இராஜாராம் போராட்டம் செய்தார்.

பலமனைவிகள் திருமணத்தைச் சட்ட விரோதமாக்கிட ராம்மோகன் ராய் ஆங்கிலேயர் ஆட்சிக்கு அறிவுறித்தினார்.

பெண்களை விலைக்கு விற்கும் மூடப் பழக்க வழக்கத்தை எதிர்த்தும், ‘பெண் விடுதலை’ என்ற இயக்கப் போராட்டத்தை நடத்தியும், இராஜராம் மோகன்ராய் வெற்றி கண்டார்.

இந்து மதத்திலுள்ள உருவ வணக்க ஆராதனையைச் செய்து வந்த கல்கத்தா பிராமணர்களின் மூடப் பழக்கு வழக்கத்தை எதிர்த்துப் போராடினார்.

அதற்காக சமஸ்கிருத மொழியிலிருந்த கோனோப நிடதத்தையும், ஈசோட நிடதத்தையும் வங்காள மொழியிலும், ஆங்கில மொழியிலும் மொழி பெயர்த்து அச்சிட்டு, மக்களுக்கு இலவசமாகக் கொடுத்தார்.

கல்கத்தா தெருக்கள்தோறும் பொது மக்கள் கூட்டத்தைக் கூட்டி, வேதங்களில் உருவ வணக்கம் உண்டா? நிரூபிக்கத் தயாரா? என்று பிராமணர்களுக்கு சவால் விட்டுக் கூட்டம் நடத்தினார். ‘வேதாந்த சாரம்’ என்ற நூலை ஆங்கிலத்தில் அச்சிட்டு இந்து மதத்தின் பெருமைகளை உலகறியச் செய்திடப் போராடினார்.

‘இயேசு நாதர் இறைவனல்லர் நம்மைப் போலவே அவரும் ஒரு மனிதர்; அவர் உபதேசங்கள் உயர்ந்தவை; அவற்றை ஏற்கலாம்; ஆனால், அவரைக் கடவுளாக வழிபடுவது தவறு’ என்று கூறி, கிறித்தவர்களை எதிர்த்துப் போராடினார்.

எனவே, இராஜாாராம் மோகன் ராய் வாழ்க்கையே ஒரு போராட்ட வாழ்க்கையாக அமைந்தது.குடும்பப் போராட்டம்; உறவின் முறையாரோடு போராட்டம்; பிராமணர்களோடு போராட்டம், கிறித்தவப் பாதிரிமார்களோடு போராட்டம்; இந்து மதப் புலவர்களோடு கொள்கை ஆய்வுப் போராட்டம்; இறுதியாக ஆங்கிலேயே ஆட்சியாளர்களை எதிர்த்துப் பத்திரிகைச் சுதந்திரத்திற்காக நடத்தியப் போராட்ட வெற்றி. இவ்வளவு போராட்டங்களையும் அவர் அறிவு ஒன்றை நம்பியே போராடி வெற்றி கண்டார்.

இறுதியாக, இராஜா ராம்மோகன் ராய் நடத்திய பத்திரிகைச் சுதந்திரத்தின் விவரத்தையும் இதோ பாருங்கள்; படியுங்கள்.

பத்திரிகைகளுக்குச்
சுதந்திரம் வேண்டும்

இருபது ஆண்டுகள் வரை மோகன் ராய் ஓயாமல் பத்திரிகைகளில் எழுதினார். அவர் எழுதிய நூல்களையும், ஆசிரியராக இருந்த பத்திரிகைகளையும் கணக்கிட்டால் ஒரு தனி மனிதர் செய்த காரியங்களா இவை? என்ற மலைப்பு உண்டாகும்.

வங்காள மொழியில் அவர் ‘ஒருவனே தேவன்’ கொள்கைக்கான பிரார்த்தனைப் பாடல்களை இயற்றினார். அவருடைய உரை நடை மிகவும் எளிமையானது. ஆனால், வலிமை மிக்கது. நவீன வங்காள உரைநடைக்கு அவரே வழிகாட்டி; அடிமைப்பட்டுக் கிடந்த இந்நாட்டில் தேசிய உணர்ச்சி ஊட்டி பத்திரிகைகளைத் தோற்றுவித்த முதல்வர் அவரே. “இந்திய தேசியப் பத்திரிகைகளின் தந்தை” என்றே அவ்ர் இன்றும் போற்றப்படுகிறார்.

முதல் பார்ஸீ வாரப் பத்திரிகையான ‘மிராத்-உல்-அக்பார்’ (அறிவுக் கண்ணாடி) அவரால் தொடங்கப்பட்டது. அதில் அரசியல் செய்திகளோடு விஞ்ஞானம், இலக்கியம், வரலாறு பற்றியக் கட்டுரைகளும் வெளி வந்தன.

கல்வித் துறை பற்றிய அவர் கருத்துக்களையும் அப்பத்திரிகை ஏந்தி வந்தது. அந்தப் பார்ஸீ பத்திரிகைக்கு முன்னால் அவர் வங்காளியில் ‘சம்வாத கெளமுதி’ என்று வாரப் பத்திரிகையை நடத்தினார்.

மக்களுடைய மனோ பாவத்தை வெளியிடுவதும், பிரதிபலிப்பதும், உருவாக்குவதும் பத்திரிகைகளின் பொறுப்பு. இப்பணியை மோகனர் செவ்வையாகச் செய்து வந்தார். அப்போது, இது அடிமை நாடுதானே?

ஆங்கிலேயர் ஆட்சியாளர்கள் பத்திரிகைகளுக்குச் சுதந்திரம் வழங்க விரும்பவில்லை. தேசியக் கருத்துகளுடன் வெளியாகும் பத்திரிகைகளைக் கட்டுப்படுத்தவும் விரும்பினார்கள்.

1823-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14-ஆம் நாள் ‘பத்திரிகைக் கட்டுப்பாட்டுச் சட்டத்தை’ இயற்றி ஆங்கிலேயர் அமலுக்குக் கொண்டு வந்தனர்.

தம்முடைய பார்ஸீ வாரப் பத்திரிகையில் மோகனர் அச்சட்டத்தை கண்டித்துப் பல கட்டுரைகள் எழுதினார். அதன் பயனாக ஆட்சியாளர்களின் வெறுப்பை அவர் சம்பாதித்துக் கொண்டார். அவர் தனது பார்ஸீ பத்திரிகையை நிறுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

ஆனால், இராஜாராம் மோகன் ராய் அவர்களின் இடைவிடாத முயற்சிகளின் விளைவாக, 1835-ஆம் ஆண்டில் இந்தியப் பத்திரிகைகள் மீதிருந்த கட்டுப்பாடுகளை கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியாளர்கள் ஓரளவு தளர்த்தினார்கள்.




.

Tuesday, 27 September 2016

RAJARAM MOHAN ROY நவீன இந்தியாவின் முன்னோடி ராஜா ராம் மோகன் ராய் இறப்பு: செப்டம்பர் 27, 1833




RAJARAM MOHAN ROY 

நவீன இந்தியாவின் முன்னோடி 

ராஜா ராம் மோகன் ராய் 

இறப்பு: செப்டம்பர் 27, 1833





‘ராஜா ராம் மோகன் ராய்’ என்றும், ‘ராம் மோகன் ராய்’ என்றும் போற்றப்படும், ராஜா ராம் மோகன் ராய் அவர்கள் ‘நவீன இந்தியாவை உருவாக்கியவர்’ என்று அழைக்கப்பட்டார். அவர், முதல் இந்திய சமூக சமய சீர்திருத்த இயக்கமான ‘பிரம்ம சமாஜத்தை’ நிறுவியவர் ஆவார். நாட்டில் “சதி” என்னும் உடன்கட்டை ஏறும் பழக்கத்தை ஒழிப்பதில் ஒரு முக்கிய பங்கு வகித்தார்.












ராஜா ராம் மோகன் ராய் அவர்கள், ஒரு பெரும் கல்வியாளராகவும், சுயாதீன சிந்தனையாளராகவும் இருந்தார். அவர் ஆங்கிலம், அறிவியல், மேற்கத்திய மருத்துவம் மற்றும் தொழில்நுட்பம் போன்ற அனைத்துத் துறைகளிலும் தேர்ந்து விளங்கினார். இதனாலேயே, ‘ராஜா’ என்ற பட்டத்தை, அவருக்கு முகலாய பேரரசர் வழங்கினார்.
நாட்டில் பெண்ணுரிமைக்காகப் போராடி, சதியை ஒழித்த அந்த மாபெரும் சீர்திருத்தவாதியின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி தெரிந்துக் கொள்ள தொடர்ந்துப் படிக்கவும்.

பிறப்பு: மே 22, 1772

பிறந்த இடம்: ராதாநகர் கிராமம், ஹூக்லி, வங்காளம்

இறப்பு: செப்டம்பர் 27, 1833

தொழில்: கல்விமான், சீர்திருத்தவாதி

நாட்டுரிமை: இந்தியா

பிறப்பு

ராஜா ராம் மோகன் ராய் அவர்கள், வங்காளத்திலுள்ள ஹூக்ளி மாவட்டத்தில் இருக்கும் ராதாநகர் என்ற கிராமத்தில் மே 22, 1772 ஆம் ஆண்டு பிறந்தார். அவரது தந்தை, ராம்காந்தோ ராய், ஒரு வைஷ்ணவர் மற்றும் அவரது தாய் தாரிணி, சைவம் மதம் பின்னணியில் இருந்து வந்தவர்.

ஆரம்ப வாழ்க்கை

உயர் படிப்புகளுக்காக ‘பாட்னா’ அனுப்பப்பட்ட அவர், பதினைந்து வயதிலேயே, பங்களா, பாரசீகம், அரபு மற்றும் சமஸ்கிருத மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார்.

அவரது தந்தை ஒரு ஆச்சாரமான இந்துமத பிராமணராக இருந்தாலும், இவர் சிலை வழிபாடு மற்றும் ஆச்சாரமான இந்துமத சடங்குகளுக்கு எதிராகவே செயல்பட்டார். மேலும் அனைத்து வகையான சமூக மதவெறி, பழைமைபேண்வாதம் மற்றும் மூடநம்பிக்கைகளை எதிர்த்து உறுதியாக நின்றார். இதுவே அவருக்கும், அவரது தந்தைக்குமிடையே கருத்து வேறுபாடுகளுக்கு வழிவகுத்தது. இந்தத் தொடர் வேறுபாடுகளின் காரணமாக, அவர் வீட்டை விட்டு வெளியேறினார். அவர் இமயமலையில் வழியறியாமல் அலைந்துத் திறிந்து, திபெத் சென்றார். விசாலமான பயணம் மேற்கொண்ட பின்னர், அவர் வீடு திரும்பினார்.

தொழில்

வீடு திரும்பிய அவருக்கு, அவரது பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்தனர். ஆனால், இது அவரை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. திருமணத்திற்குப் பிறகு வாரணாசி சென்ற அவர், வேதங்கள், உபநிடதங்கள் மற்றும் இந்துமத தத்துவங்களை மிக ஆழமாகப் பயின்றார்.
1803ல், அவரது தந்தை இறந்தவிடவே, அவர் மூர்ஷிதாபாத்திற்குத் திரும்பினார். பின்னர், கொல்கத்தாவில் உள்ள ஒரு வட்டிக்கடையில் பணியாற்றினார். 1809 முதல் 1814 வரை, அவர் கிழக்கு இந்திய நிறுவனத்தின் வருவாய்த் துறையில் பணியாற்றினார்.

சீர்திருத்தப் பணிகள்

சமூகத்தில் நடக்கும் முறைகேடுகளைக் கண்டு வெகுண்டெழுந்த அவர், 1814ல், சமுதாயத்தில் சமூக மற்றும் சமய சீர்திருத்தங்களைக் கொண்டு வரும் முயற்சியாக ‘ஆத்மிய மக்களவை’ என்ற ஒரு அமைப்பை உருவாக்கினார். பின்னர், பெண்கள் உரிமைக்காகவும், விதவைகள் மறுமண உரிமைக்காகவும், பெண்களுக்கான சொத்து உரிமைக்காகவும், பல பிரச்சாரங்களில் ஈடுபட்டார். அவர் அக்காலத்தில் பெண்களுக்கு கட்டாய பழக்கமாக இருந்த  உடன்கட்டை ஏறுதல் மற்றும் பலதார மணம் புரிதல் போன்ற நடைமுறைகளைத் தீவிரமாக எதிர்த்தார்.

பெண்களுக்கானக் கட்டாயக் கல்வி முறைக்குப் பெரிதும் ஆதரவு காட்டிய அவர், பாரம்பரிய இந்திய கல்வி முறையை விட ஆங்கில மொழி கல்வி மேன்மையானது என்று நம்பினார், அதுமட்டுமல்லாமல், சமஸ்கிருதம் கற்றுத் தரும் பள்ளிகளில், அரசாங்க நிதிகளை பயன்படுத்தக் கூடாது என்று மிகக் கடுமையாக எதிர்த்தார். மேலும் 1822 ஆம் ஆண்டு ஆங்கிலக் கல்வியின் அடிப்படையில் ஒரு பள்ளியை நிறுவினார்.

பிரம்மா சமாஜ்

1828ல், ராஜா ராம் மோகன் ராய் அவர்கள், ‘பிரம்ம சமாஜம்’ என்ற அமைப்பை  நிறுவினார். பிரம்மா சமாஜ் மூலம், அவர் போலித்தனமான மத பாசாங்குகளை அம்பலப்படுத்தவும், இந்து மத சமூகத்தின் மீது கிறித்துவம் அதிகரித்து வரும் செல்வாக்கை சரிபார்க்கவும் எண்ணினார். மேலும் இந்த அமைப்பின் மூலம், பலதார மணம், சாதி அமைப்பு, குழந்தை திருமணம், சிசுக்கொலை, தீண்டாமை, பெண்கள் தனிமைப்பட்டிருப்பது, பர்தா முறை போன்ற சமூக முறைகேடுகளுக்கு எதிராக குரல் எழுப்பினார்.


‘கடவுளைத் தந்தையாகவும், மனித குலத்தில் சகோதரத்துவத்தை மேலோங்கச் செய்வதே’ பிரம்ம சமாஜின் தலையாய கொள்கையாகும். மேலும் இவர், மனிதர்களிடையே அன்பு செலுத்த வேண்டும்; மற்றும் சிலை வழிபாட்டை நிறுத்தி, கோயில்களில் பிரசாதம் வழங்குவதையும், விலங்குகளை பலி கொடுப்பது போன்ற பிற சடங்குகளை நிறுத்த வேண்டுமென்று போதித்தார். இந்த பிரம்மா சமாஜம், மனிதர்களிடையே தர்மம், நீதி, கடவுள் பக்தி, கருணை, நல்லொழுக்கம் மற்றும் அனைத்து மதத்தவரிடையே உள்ள பாச உணர்வைத் தூண்டி, அவர்களின் பந்தத்தை மேலும் வலுப்படுத்தும் ஒரு தூண்டுகோலாக இருந்தது.

சதி ஒழிப்பு

பிரம்ம சமாஜ் மூலம், சமூகத்தில் நிலவும் மோசமான செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க எண்ணிய ராஜா ராம் மோகன் ராய் அவர்கள், இந்து மத இறுதி நடைமுறையான கணவரின் இறப்புக்குப் பின்னர், மனைவி அவரின் சிதையில் உயிருடன் விழ வேண்டுமென்ற ‘சதி’ என்னும் உடன்கட்ட ஏறும் பழக்கத்தை முற்றிலும் ஒழிக்க எண்ணினார்.
அவரது அனைத்து முயற்சிகளுக்கும் வெற்றிக் கிட்டும் வகையில், 1833ல், அப்போது ஆட்சியிலிருந்த லார்ட் வில்லியம் பென்டிக் ஒரு சட்டம் இயற்றி, அதன் மூலம் சதி முறையை ஒழித்தார்.

இறப்பு

நவம்பர் 1830ல், ராஜா ராம் மோகன் ராய் அவர்கள், தனது ஓய்வூதிய மற்றும் உதவித்தொகைகளைப் பெறுவதற்காக, முகலாய பேரரசரின் ஒரு தூதராக ஐக்கிய ராஜ்யத்திற்குப் பயணித்தார்
. பின்னர், அவர் மூளைக்காய்ச்சல் காரணமாக, பிரிஸ்டல் அருகிலுள்ள ஸ்டேபிள்டன் என்ற இடத்தில் செப்டம்பர் 27, 1833 அன்று காலமானார்.

காலவரிசை:

1772: வங்காளத்திலுள்ள ஹூக்ளி மாவட்டத்தில் இருக்கும் ராதாநகர் என்ற கிராமத்தில் மே 22, 1772 ஆம் ஆண்டு பிறந்தார்.

1803: அவரது தந்தையின் மறைவின் காரணமாக மூர்ஷிதாபாத்திற்குத் திரும்பினார்.

1809 – 1814: கிழக்கு இந்திய நிறுவனத்தின் வருவாய்த் துறையில் பணியாற்றினார்.

1814: ‘ஆத்மிய மக்களவையை’ உருவாக்கினார்.

1822: ஆங்கிலக் கல்வியின் அடிப்படையில் ஒரு பள்ளியை நிறுவினார்.

1828: ‘பிரம்ம சமாஜம்’ என்ற அமைப்பை நிறுவினார்.

1833: ‘சதி என்னும் உடன்கட்டை ஏறுதல்’ என்ற இந்துமத நடைமுறை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது

1830: முகலாய பேரரசரின் ஒரு தூதராக ஐக்கிய ராஜ்யத்திற்குப் பயணித்தார்.

1833: மூளைக்காய்ச்சல் காரணமாக, பிரிஸ்டல் அருகிலுள்ள ஸ்டேபிள்டன் என்ற இடத்தில் செப்டம்பர் 27, 1833 அன்று காலமானார்.