Showing posts with label MALAYALA. Show all posts
Showing posts with label MALAYALA. Show all posts

Monday, 26 October 2020

ASIN MALAYALA ACTRESS BORN 1985 OCTOBER 26

 

ASIN MALAYALA ACTRESS 

BORN 1985 OCTOBER 26



.அசின் தொட்டும்கல் (ஆங்கில மொழி: Asin, மலையாளம்: അസിന്‍ തോട്ടുങ്കല്‍), (பிறப்பு அக்டோபர் 26, 1985[1])பரவலாக அசின் என்ற பெயரால் அறியப்படும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஓர் இந்திய நடிகையும், பயிற்சி பெற்ற பரதநாட்டியக் கலைஞர் ஆவார்.


2001 ஆம் ஆண்டில் வெளியான சத்யன் அந்திக்காடின் நரேந்திரன் மகன் ஜெயகாந்தன் வகா என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அவரது முதல் வர்த்தகரீதியான வெற்றித் திரைப்படம் 2003 ஆம் ஆண்டில் வெளிவந்த தெலுங்குத் திரைப்படமான அம்மா நன்னா ஓ தமிழ் அம்மாயி ஆகும். அத்திரைப்படத்திற்காகச் சிறந்த தெலுங்கு நடிகைக்கான பிலிம்பேர் விருதினை வென்றார். அவரது முதல் தமிழ் திரைப்படமான எம். குமரன் சன் ஆஃப் மகாலஷ்மி வெற்றித்


திரைப்படமாக அமைந்தது. கஜினி (2005) திரைப்படத்தில் அவரது பாராட்டத்தக்க நடிப்பிற்காக பிலிம்பேர் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார்.


கஜினி (2005), வரலாறு (2006), "போக்கிரி" (2007), "வேல்" (2008), "தசாவதாரம்" (2008) ஆகிய திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்றார். தமிழ் கஜினி திரைப்படத்தின் இந்தி தழுவலான கஜினி யின் மூலம் அசின் இந்தி திரையுலகில் கால்பதித்தார், இதன்மூலம் பிலிம்பேர் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதைப் பெற்றார். தற்போது இந்தித் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.அறிமுகம்

சத்யன் அந்திக்காடின் மலையாளத் திரைப்படமான நரேந்திரன் மகன் ஜெயகாந்தன் வகா (2001) படத்தில், 15 ஆவது வயதில் ஒரு துணைப் பாத்திரத்தில் அறிமுகமானார்.


பின்னர் ஓராண்டு காலம் படிப்பில் கவனத்தைச் செலுத்திய அசின், அம்மா நன்னா ஓ தமிழ் அம்மாயி என்னும் தெலுங்கு திரைப்படம் மூலம் மீண்டும் திரையுலகிற்குத் திரும்பினார்..



அவரது முதல் தெலுங்கு மொழிப் படமான இதில் ரவி தேஜாவுக்கு இணையாக, தமிழ்ப் பெண் கதாபாத்திரத்தில் நடித்தார், இப்படம் இவருக்கு சிறந்த தெலுங்கு நடிகைக்கான பிலிம்பேர் விருதினைப் பெற்றுத் தந்தது.[2] அதே ஆண்டில், சிவமணி, என்ற தனது இரண்டாவது தெலுங்குத் திரைப்படத்தில் நாகார்ஜூனாவுக்கு இணையாக இவர் நடித்ததற்கு சந்தோசம் சிறந்த நடிகைக்கான விருதினை வென்றார்.[2]


அதனையடுத்து இவர் நடித்த, லட்சுமி நரசிம்மா மற்றும் கர்சனா ஆகிய இரண்டு தெலுங்கு திரைப்படங்களும், வெற்றிப் படங்களாக அமைந்ததோடு தெலுங்கு திரையுலகில் ஒரு முன்னணி நடிகையாக இவரது இடத்தை வலுப்படுத்தியது.


தமிழ் மொழியில் அசினின் முதல் படம் எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, இதில் இவர் ஜெயம் ரவிக்கு இணையாக நடித்தார். இது அம்மா நன்னா ஓ தமிழா அம்மயி படத்தின் தழுவல் திரைப்படமாகும்.


குடும்பம்


கேரள மாநிலத்தின் கொச்சியில் ஒரு கத்தோலிக்கக் குடும்பத்தில் பிறந்தார். இவரின் பெற்றோர் யோசப்பு தொட்டும்கல், செலின் தொட்டும்கல் ஆவர். தொடுபுழாவைச் சேர்ந்த இவரது தந்தை யோசப்பு தொட்டும்கல் பல தொழில்நிறுவனங்களை நிர்வகித்து வந்தார். தற்போது அவர் மகளின் திரைப்படங்களில் அவருக்கு உதவியாக உள்ளார். அசினின் வெளிநாட்டு படப்பிடிப்புகளில் அசினுடன் செல்கிறார். அசினின் தாயார் செலின் தொடும்கல் தனது மகளுடன் வசிப்பதற்காக கொச்சியிலிருந்து சென்னைக்கும் அங்கிருந்து மும்பைக்கும் தொடர்ந்து இடம் மாறினார். இருப்பினும் அவரது தனது மருத்துவத் தொழிலை தொடர்கிறார்.



தனது பெயரின் பொருள் "தூய்மையானது, களங்கமில்லாதது" என்று அசின் கூறியிருக்கிறார். தனது பெயரில் இருக்கும் முதலெழுத்து 'அ' சமஸ்கிருதத்தில் இருந்து வந்தது என்றும் அதற்கு "இல்லாதது" என்று பொருள் என்றும், சின் என்பது ஆங்கிலத்தில் இருந்து வந்தது என்றும் கூறினார்.[3]


திருமணம்

சனவரி 18, 2016 ஆம் ஆண்டு மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ராகுல் சர்மா என்பவரைக் காதல் திருமணம் செய்துக்கொண்டார்.[4]

Sunday, 10 May 2020

A.K.LOHIDASS ,MALAYALA DIRECTOR BORN 1954 MAY 10 - 2009 JUNE 28



A.K.LOHIDASS ,MALAYALA DIRECTOR
 BORN 1954 MAY 10 - 2009 JUNE 28


அ. க. லோகிததாசு (அம்பலத்தில் கருணாகரன் லோகிததாஸ்) அல்லது ஏ. கே. லோகிததாஸ் மலையாளத் திரைப்பட இயக்குநர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார். இவர் 1985ஆம் ஆண்டு 'சிந்து சாந்தம் ஆகி ஒழுகுனு' என்ற நாடகத்தின் மூலம் மாநில அரசு விருதோடு தன் கலை உலக வாழ்க்கையைத் துவங்கியவர்[1]. "தனியாவர்த்தனம்" படம் மூலம் திரைக்கதையாசி‌ரியர் ஆனார். இப்படத்தில் ஒரு சாதாரண மனிதன் சமூகத்தால் எப்படி மனநிலை தவறியவனாக ஆக்கப்படுகிறான் என்பதை தனது துல்லியமான திரைக்கதையால் காட்சிப்படுத்தியிருந்தார். இந்தத் திரைப்படம் மம்முட்டியின் திரை வாழ்க்கையில் ஒரு மைல் கல்லாக அமைந்தது. இவருடைய படைப்பில் வந்த சில படங்கள், எழுதாபுரங்கள், கிரீடம், முத்ரா, ஹிஸ்ஹைனஸ் அப்துல்லா, பரதம், கமலாதலம், தனம், தசரதம், செங்கோல், பூதக்கண்ணாடி, கண்மதம், காருண்யம், கஸ்தூரி மான், அரையன்னங்களுடவீடு, நைவேத்தியம் போன்றவையாகும்[2].

லோகிததாஸ் மற்றும் இயக்குநர் சிபிமலையில் இருவரும் இணைந்து பல மலையாளத் திரைப்படங்கள் படைத்துள்ளனர். சிபிமலையிலுடன் இவர் சேர்ந்து பணியாற்றிய 'கிரீடம்', 'பரதம்' என அனைத்துப் படங்களும் மிகவும் வெற்றி பெற்றவையாகும். இவர் இதுவரை தனது திரைக்கதைக்காக 14 முறையும், இயக்கத்திற்காக 4 முறையும் ஃபிலிம் கிரிட்டிக் விருதுகளைப் பெற்றுள்ளார். மேலும் இவர் திலீப், மீரா ஜாஸ்மின், மஞ்சுவாரியர் என்று பல்வேறு திறமையாக கலைஞர்களை திரைப்படத் துறைக்கு அறிமுகப்படுத்தினார். இவர் கடைசியாக இயக்கிய ‘நைவேத்தியம்' திரைப்படம்கூட சிறந்த திரைப்படம், சிறந்த கதை ஆகிய பிரிவுகளில் விருதுகளைப் பெற்றது. தமிழில் இவர் கஸ்தூ‌ரிமான் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு

லோகிததாஸ் மலையாளத்தின் முக்கியமான திரைக்கதையாசிரியர்களில் ஒருவர். எம்.டி.வாசுதேவன்நாயர் .பி.பத்மராஜன் ஆகியோருக்குப்பின் லோகிததாஸ் மலையாளத்தின் மிகச்சிறந்த திரைக்கதையாசிரியர் எனப்படுகிறார். முழுபெயர் அம்பழத்தில் கருணாகரன் லோகிததாஸ் திரிச்சூர் மாவட்டத்தில் உள்ள முரிங்ஙூர் என்ற கிராமத்தில் பிறந்தவர் லோகிததாஸ். எரணாகுளம் மகாராஜாஸ் காலேஜில் பட்டப்படிப்பு முடித்தபின் திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரியில் ஆய்வக உதவியாளர் படிப்பை முடித்தார். சிறிதுகாலம்டரசு மருத்துவமனை ஊழியராகப் பணியாற்றினார்.

ஆரம்பத்தில் சிறுகதைகள் எழுதிவந்தார். மலையாள நாடக ஆசிரியரும் இடதுசாரி தலைவருமான தோப்பில் பாசி நடத்திவந்த கெ.பி.ஏ.சி (கேரளா பீப்பிள்ஸ் ஆர்ட் கிளப்) க்காக ஒரு நாடகத்தை 1986ல் லோகிததாஸ் எழுதினார். சிந்து அமைதியாக ஓடுகிறது (சிந்து சாய்தமாய் ஒழுகுந்நு) என்ற அந்நாடகம் பரவலாக கவனிப்பு பெற்றது. அதற்கு மாநில அரசின் சிறந்த நாடகத்துக்கான விருது கிடைத்தது. பிற்பாடு ‘ கடைசியில் வந்த விருந்தாளி (அவசானம் வந்த அதிதி) கனவு விதைத்தவர்கள் (ஸ்வப்னம் விதச்சவர்) போன்ற நாடகங்களையும் எழுதினார்.

நாடக நடிகராக இருந்து சினிமாவில் புகழ்பெற்றிருந்த திலகன் லோகித தாஸை சினிமாவுக்குக் கூட்டிவந்தார். சிபி மலையில் இயக்கிய தனியாவர்த்தனம் லோகிததாஸின் முதல் படம். ஒரு பாரம்பரிய நாயர் குடும்பத்தில் இருந்துவரும் மூடநம்பிக்கைக்குப் பலியாகும் பள்ளி ஆசிரியரைப்பற்றிய அந்தப்படம் மிகப்பரவலான கவனத்தைப்பெற்று லோகிததாஸை பிரபலப்படுத்தியது. 1997ல் பூதக்கண்ணாடி என்ற படத்தை லோகிததாஸ் இயக்கினார். இதுதான் இயக்குநராக அவரது முதல் முயற்சி. லோகிததாஸின் மனைவி பெயர் சிந்து, ஹரிகிருஷ்ணன் விஜயசங்கர் என்று இரு மகன்கள் இருக்கிறார்கள்.

படைப்புகள்

திரைக்கதை எழுதிய படங்கள்
1987 தனியாவர்த்தனம் 1987 எழுதாப்புறங்ஙள் 1988 குடும்பபுராணம் 1988 விசாரண 1988 முக்தி 1989 கிரீடம் 1989 ஜாதகம் 1989 தசரதம் 1989 முத்ர 1989 மஹாயானம் 1990 சஸ்னேகம் 1990 மாலயோகம் 1990 ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா 1990 குட்டேட்டன் 1991 தனம் 1991 பரதம் 1991 அமரம் 1991 கனல்காற்று 1992 வளையம் 1992 கமலதளம் 1992 ஆதாரம் 1992 கௌரவர் 1993 வெங்கலம் 1993 செங்கோல் 1993 வாத்ஸல்யம் 1994 சகோரம் 1994 சாகரம் சாட்சி 1995 ஸாதரம் 1996 சல்லாபம் 1996 தூவல்கொட்டாரம் 1997 பூதக்கண்ணாடி 1997 காருண்யம் 1998 ஓர்மசெப்பு 1998 கன்மதம் 1999 வீண்டும் சில வீட்டுகாரியங்ங்கள் 1999 அரயன்னங்ஙளுடே வீடு 2000 ஜோக்கர் 2001 சூத்ரதாரன் 2003 கஸ்தூரிமான் 2003 சக்ரம் 2006 சக்கரமுத்து 2007 நிவேத்யம்

இயக்கிய படங்கள்

1997 பூதக்கண்ணாடி 1997 காருண்யம் 1998 ஓர்மச்செப்பு 1998 கன்மதம் 2000 அரயன்னங்களுடே வீடு 2000 ஜோக்கர் 2001 சூத்ரதாரன் 2003 கஸ்தூரிமான் 2003 சக்ரம் 2005 கஸ்தூரிமான் [தமிழ்] 2006சக்கரமுத்து 2007 நைவேத்யம்

நடித்த படங்கள்
1992 ஆதாரம் 1999 வீண்டும் சில வீட்டுகாரியங்ங்கள் 2002 ஸ்டோப் வயலன்ஸ் 2005 தி காம்பஸ் 2005 உதயனாணு தாரம்

தயாரித்தபடம்
2005 கஸ்தூரிமான் [தமிழ்]

பாடல் எழுதிய படங்கள்
2000 ஜோக்கர். பாடல் ‘அழகே நீ பாடும்’ 2000 ஜோக்கர் ‘செம்மானம் பூத்தே’ 2003 கஸ்தூரிமான் ‘ராக்குயில்பாடி 2007 நிவேத்யம் ‘கோலக்குழல் விளி கேட்டுவோ

விருதுகள்

திரைக்கதைக்கான கேரள அரசு விருது தனியாவர்த்தனம் 1987 நல்ல திரைபப்டத்துக்கான கேரள அரசு விருது 1997 மிகச்சிறந்த அறிமுக இயக்குநர் படத்துக்கான தேசிய விருது பூதக்கண்ணாடி 1997

பிலிம் கிரிட்டிக்ஸ் அசோஷியேஷன் விருதுகள் - மிகச்சிறந்த திரைக்கதை
தனியாவர்த்தனம் [1987] தசரதம் [1989] கிரீடம் [1990] பரதம் [1991] செங்கோல் [1993] சகோரம் [1994] சல்லாபம் [1994] தூவல்கொட்டாரம் [1996] பூதக்கண்ணாடி [1997] ஓர்மச்செப்பு [1998] ஜோக்கர்[ 1999] வீண்டும் சில வீட்டுகாரியங்ஙகள் [2000] கஸ்தூரிமான் [2003] நிவேத்யம் [2007]

பிலிம் கிரிட்டிக்ஸ் அசோஷியேஷன் விருதுகள் - மிகச்சிறந்த திரைப்படம்
பூதக்கண்ணாடி [1997] ஜோக்கர்[ 1999] கஸ்தூரிமான் [2003] நிவேத்யம் [2007]

மறைவு
இவர் தன்னுடைய 55ஆம் வயதில் கொச்சியில் 2009 சூன் 28ஆம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார்[3]. இவருடைய மறைவிற்குப் பிறகு பல்வேறு திரைக்கலைஞர்கள் இவரைப் பற்றிக் கூறியவை:

சேரன்
"ஆட்டோகிராஃப் பார்த்துவிட்டு என்னிடம் நட்பாக நெருங்கினார் லோகி. வாழ்வின் அடித்தட்டு மக்களின் மேல் அவர் மிகவும் பரிவுகொண்டு இருந்தார். அவரது வெற்றி பெற்ற திரைக்கதைகளில் அந்தப் பரிவு பளிச்சென்று தெரியும். அவரோடு இணைந்து ஒரு படமாவது செய்ய வேண்டும் என்பது என் கனவாக இருந்தது. லோகிததாஸின் மரணம் மொழிகளைக் கடந்து படைப்பாளிகள் அத்தனை பேருக்குமான இழப்பு[1].

கமலகாசன்
இவர் முதல் படத்துக்குத் திரைக்கதை எழுதியதில் இருந்தே 'எனக்கொரு ஸ்கிரிப்ட்டை ரெடி பண்ணிக் கொடுங்கள்' என்று கேட்டுக்கொண்டே இருந்தேன். போன மாதம்கூட 'சந்திப்போமா?' என்று கேட்டு போன் செய்தேன். 'வருகிறேன்' என்றார். சந்திக்காமலேயே விடைபெற்றுவிட்டார். லோகி என்னுடைய நண்பர் எனச் சொல்வது சரியில்லை. அவர் என் நெருங்கிய உறவினர்[1]



லோகித்தாஸ்: திரைப்படம் என் ஊடகமாக ஆனது மிகவும் பிந்தித்தான். முதன் முதலாய் நான் கண்டுகொண்ட ஊடகம் இலக்கியம். மிகச் சிறிய வயதிலேயே எழுத்துடன் எனக்குத் தொடர்பு ஏற்பட்டுவிட்டது. சொல்லப்போனால் வாசிப்பை விடவும் முன்னதாகவே எழுத்து என்னிடம் வந்துவிட்டது.
ஒவ்வொரு குழந்தையும் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள முனைகிறது. தன் இருப்பை நிறுவிக்கொள்ள முனைகிறது. அதன் இயல்புக்கும் திறமைக்கும் அது வாழும் சூழலுக்கும் ஏற்ப ஒரு வழிமுறையைக் கண்டடைகிறது. இசை, விளையாட்டு, படிப்பு இப்படி நான் கண்டடைந்தது எழுத்தை. மிகச் சிறிய வயதிலேயே என் துக்கங்களையும் கண்ணீரையும் எழுதும் போது எனக்கு ஒரு அபூர்வமான வலிமை உருவாவதைக் கண்டுகொண்டேன். எழுதும் போது அந்த துக்கங்களை நான் வெல்வதுபோல. . . அவை என்னைத் தொடமுடியாது விலகுவது போல. . .


ஜெயமோகன்: உங்கள் இளமைப்பருவம் துயரம் மிக்கது என்று தெரியும்.
லோகித்தாஸ்: ஆமாம். . . சிறு வயதிலேயே தந்தை எங்களை விட்டுப் போனார். பசித்து அனாதையாக வளர்ந்தேன். உறவினர் வீடுகள் தோறும் மாறிமாறி தங்கி வாழ்ந்தேன். அப்போது எனக்கு எழுத்து பெரும் துணையாக இருந்தது. அடிப்படையில் நான் இலக்கியவாதி. இலக்கியம்தான் என் ஊடகம். என் இலக்கியத்திற்கு ஊடகமாக சினிமா உள்ளது.
அதே சமயம் எனக்கு வெறும் எழுத்தும் போதுமானதாக இருக்கவில்லை. எனக்கு நடிப்பில் ஆர்வம் இருந்தது. நான் எழுதுபவற்றையெல்லாம் இயல்பாகவே மனதுக்குள் நடித்துக்கொண்டிருந்தேன். மெல்ல நான் நடிப்பதற்குரியவகையில் எழுத ஆரம்பித்தேன். அவை நாடக வடிவுக்குப் பொருத்தமாக ஆயின. என் பதினெட்டு வயதில் முதல் நாடகத்தை எழுதினேன். இருபத்திரெண்டு வயதுக்குள் கேரளம் முழுக்க கவனிக்கப்பட்ட நாடக ஆசிரியரானேன். முதல் நாடகம் ‘சிந்து சாந்தமாய் ஒழுகுந்நு’ . அதன் பின்னர் திரைக்கதை எழுத வாய்ப்பு வந்தது.

1985இல் என் முதல் படம் ‘தனியாவர்த்தனம்’ வெளிவந்தது. சிபிமலையில் இயக்குநர். அது நாடகமாக என் மனதுக்குள் உருக்கொண்ட கரு. நான் நாடகத்தை ஒரு அடிப்படைக் கலையாகக் கருதுகிறேன். இலக்கியத்தை விடவும் ஏன் மொழியைவிடவும் புராதனமான கலை நடிப்பு. . . எல்லா உயிர்களும் நடிக்கின்றன. நடிப்பு மிக மிக அடிப்படையான ஒரு விஷயம். . .
ஜெயமோகன்: ஆமாம். ‘காட்ஸ் மஸ்ட் பி கிரேஸி’ படத்தில் புஷ்மேன் வகை மனிதர்கள் கூட  தங்கள் வேட்டை அனுபவங்களை நடித்துக் காண்பிக்கும் காட்சி இருந்தது. அவர்கள் மொழி இன்றும் மொழியாக ஆகாத வெறும் ஒலிதான். . .

லோகித்தாஸ்: எல்லாரும் நடிகர்கள்தான். வாயால் பேசுவதுபோல் நாம் ஒவ்வொரு கணமும் உடலாலும் பேசிக்கொண்டே இருக்கிறோம். நம் மனத்தில் ஓய்வில்லாமல் நடித்துக் கொண்டிருக்கிறோம். வளர வளர உடல் பற்றிய பிரக்ஞை அதிகமாகிறது. அந்த சுய உணர்வு நடிப்புக்குத் தடையாக ஆகிறது. ஒன்று கவனித்திருக்கிறேன். புத்திசாலிகளைவிட சற்று மந்தமானவர்களை நடிக்க வைப்பது எளிது. இளம் வயதில் நடிப்பார்வம் அனைவரிடமும் இயல்பாக இருக்கிறது. குறிப்பாக பதின்பருவத்தினர் மிக தீவிரமாக உணர்ச்சிகளை வெளிப்படுத்துவார்கள்

ஜெயமோகன்: நாடகத்துக்கும் இலக்கியத்திற்குமான உறவு என்ன?
லோகித்தாஸ்:  நடிக்கப்படும் இலக்கியமே நாடகம். ஏதோ ஒரு காலத்தில் நடிப்பும் இலக்கியமும் ஒன்றாகவே இருந்திருக்க வேண்டும்....
ஜெயமோகன்: மீரா கதிரவன் மொழி பெயர்த்த ‘பெருவழியம்பலம்’ (பி.பத்மராஜன்) திரைக்கதைக்கான முன்னுரையில் பாலுமகேந்திரா ஒரு விஷயம் கூறுகிறார்: திரைக்கதை என்பது ஓர் இலக்கிய வடிவம் அல்ல, அது வாசிப்புக்கு உரியதல்ல.  இயக்குநருக்கான குறிப்புகள் மட்டும்தான் என்று. . .

லோகித்தாஸ்: அது ஒரு கோணம். நான் வாதாட விரும்பவில்லை. நான் கூறுவது என் கோணத்தை, என் வாசிப்பு மூலமும் படைப்பனுபவம் மூலமும் கிடைத்த அறிதலை. திரைக்கதை கண்டிப்பாக ஓர் இலக்கிய வடிவமே. வளர்ந்து வரும் இலக்கிய வடிவம் அது. திரைக்கதை இலக்கியமல்ல என்றால் நாடகமும் இலக்கியமில்லை அல்லவா? ஷேக்ஸ்பியர் படிப்பதற்காக எழுதவில்லை, நடிப்பதற்காகத்தானே எழுதினார். இசைப்பாடல்கள் (கீர்த்தனை) பாடப்படுவதற்காக எழுதப்படுகின்றன. அவையும் இலக்கியங்கள்தானே? இலக்கியம்தான் அடிப்படை.



ஜெயமோகன்: எனக்கு மிகப் பிடித்தமான இயக்குநர் இங்மர் பர்க்மான். அவரது ‘Sevanth Seal’   (ஏழாவது முத்திரை) திரைக்கதை மொழி சார்ந்தது அல்ல; காட்சிப் படிமங்களால் ஆனது. ஆனால் அதைப் படிக்கும்போது இலக்கியமாகவே அனுபவமாகிறது. நம் கற்பனையில் உண்மையில் அந்தப் படிமத்தையும்விட மகத்தான சினிமா ஒன்று விரிகிறது.



லோகித்தாஸ்: மனதால் நடித்து அகக்கண்ணால் கண்டு விரிவடையச் செய்ய முடிகிறது என்பதாலேயே நாடகம் மிகச்சிறந்த கலையாக ஆகிறது. நம் கண்முன் மனிதர்கள் வருகிறார்கள். வாழ்க்கையை நாம் நேரடியாகப் பாக்கிறோம். திரைக்கதையும் அப்படித்தான்.



ஜெயமோகன்: ஆனால் திரைக்கதை சினிமா ஊடகத்தின் தேவைக்கு உட்பட்டே இயங்க முடியும். அந்த எல்லைகள் அதற்குத் தடைதானே?



லோகித்தாஸ்: சரி, நாடகத்திற்கு அதன் வெளி (Space) பெரிய எல்லைதானே? அது ஒரு சதுரத்திற்குள் நடந்தாக வேண்டுமே? ஆனால் மிகப் பெரிய நாடகாசிரியர்கள் அந்த இயல்பையே அந்த வடிவத்தின் பலமாக மாற்றிக்கொண்டார்கள். ஒரு இடத்தில், ஒரு புள்ளியில் வாழ்வின் அனைத்து முரண்பாடுகளும் வந்துமோதித் துடிக்கும்படிச் செய்தார்கள். ‘நாடகாந்தம் கவித்துவம்’ என்ற சொல்லாட்சி உருவானதே.



அதே போன்றதே  திரைக்கதை. திரைக்கதை அனைத்தையும் காட்டியாக வேண்டும். அது யோசிக்க முடியாது. அது தியானிக்க முடியாது. அது ‘காட்ட’ வேண்டும். அதுவே அதன் பலம். வாழ்க்கையின் முரண்களை, புதிர்களை, துக்கங்களை, சந்தோஷங்களை மிகச் சிறந்த திரைக்கதையாசிரியர்கள் காட்டியிருக்கிறார்கள். திரைக்கதை எப்படி இலக்கியமாக ஆகிறது தெரியுமா? நாம் வாசிக்கும்போது நமது கற்பனையில்தான் அனைத்தும் நிகழ்கின்றன என்பதனால்தான்.



ஜெயமோகன்: இங்கே வரும் இந்த முரண்பாட்டுக்குக் காரணம் இதுதான். மலையாளத்தில் ஆரம்ப காலம் முதல் எழுத்தாளர்கள்தான் திரைக்கதை எழுதினார்கள். . . ஆரம்பகாலப் படமான ‘நீலக்குயில்’-க்கு உறூப் எழுதினார். தகழி சிவசங்கரப் பிள்ளை, வைக்கம் முகமது பஷீர், எஸ்.கே.பொற்றெகாட், பாறப்புறத்து மத்தாயி, செ.சுரேந்திரன் என்று மலையாள சினிமாவின் இயல்பை முதல்தரப் படைப்பாளிகள்தான் தீர்மானித்ததார்கள்.



லோகித்தாஸ்: கவனியுங்கள், இவர்கள் சினிமாவை மொழியை நோக்கிக் கொண்டு செல்லவில்லை. அதை ஒரு காட்சிக்கலையாக வளர்த்தெடுத்தார்கள். தோப்பில் பாசி, எஸ்.எல்.புரம் சதானந்தன், எம்டி.வாசுதேவன் நாயர், பி.பத்மராஜன் என்று இன்று வரை அந்த வரிசை நீள்கிறது. பத்மராஜனும் எம்.டி.யும் இலக்கியவாதிகளாக புகழ்பெற்ற பிறகு திரைக்கதை எழுத வந்தார்கள். மிக மிக காட்சித்தன்மை கொண்ட திரைக்கதைகள் அவர்கள் எழுதியவை. இலக்கியப் படைப்புகளாகவும் இன்றுஅவை அங்கீகாரம் பெற்றுள்ளன. இதேபோல இந்நூற்றாண்டு இலக்கியத்தை சினிமா போன்ற காட்சிக் கலைகளும் பெரிதும் பாதித்துள்ளன.



ஜெயமோகன்: ஒரு கதைக்கான தொடக்கம் எப்படி வருகிறது?



லோகித்தாஸ்: எப்படிஒரு சிறுகதைக்கு, ஒரு நாவலுக்கு, ஒரு ஓவியத்திற்கு தொடக்கம் வருகிறதோ அப்படி. ஒருபோதும் ஒரு கலைப் படைப்பு யோசித்து திட்டமிட்டு உருவாக்கப்படுவதில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். மனதில் ஒரு மின்னல் போல ஒரு தூண்டல் ஏற்படுகிறது. அவ்வளவுதான் சொல்லமுடியும்.



என்னுடைய அனுபவம் இப்படி. அது மழை கறுத்து இருண்டு மூடி நிற்பதைப்போல. இதோ பெய்யும் என்று தோன்றும். சில சமயம் பெய்யாமலேயே போகும். எப்போது, ஏன் பெய்கிறது என்று கூறவே முடியாது. ஒரு கணத்தில் சட்டென்று ஆரம்பித்து விடுகிறது. முதலில் துளிகள். பிறகு பெருமழை.



ஜெயமோகன்: திரைக்கதையின் தொடக்கம் எப்போதும் ஒரு கதாபாத்திரம்தான் என்று கூறப்படுவது உண்டு.



லோகித்தாஸ்: கண்டிப்பாக, அது முக்கியம்தான். ஒரு நாடகம் அல்லது திரைக்கதை என்பது வாழ்க்கையின் ஒரு பகுதி. யாருடைய வாழ்க்கை என்ற கேள்வி உடனே முளைத்துவிடுகிறது. ஆகவே கதாபாத்திரம் என்பது திரைக்கதையின் முக்கியமான தொடக்கப்புள்ளி. அதே சமயம் ஒரு முரண்பாட்டு முனை, ஒரு அடிப்படையான கேள்விகூட திரைக்கதையின் தொடக்கமாக இருக்க முடியும்.  ‘தனியாவர்த்தனம்’, ‘கிரீடம்’ போன்ற திரைக்கதைகளில் மையக் கதாபாத்திரம்தான் தொடக்கம்.  ‘பாதேயம்’, ‘எழுதாப்புரங்கள்’  போன்றவற்றுக்கு மைய முரண்தான் தொடக்கம்.



ஜெயமோகன்: எப்போதாவதுஒரு கருத்து அல்லது ஒரு அவதானிப்பு அப்படி தொடக்கமாக அமைந்ததுண்டா?





லோகித்தாஸ்: அபூர்வமாக அப்படி அமையலாம். என்னுடைய திரைக்கதைகளில் ‘ஜாதகம்’ அப்படிப்பட்டது. சோதிட நம்பிக்கை பற்றிய ஒரு விமரிசனம் அது. இன்னொரு விஷயம் உண்டு. ஒரு திரைக்கதை ஏதேனும் வடிவில் தொடங்குவதற்கு வெகுகாலம் முன்பே அதன் விதை நம் மனதுக்குள் விழுந்துவிடுகிறது. அங்கே அது முளைத்து தன் இருப்பைத் தெரிவிக்கிறது. படைப்புக்கான தவிப்பு அல்லது நிம்மதியின்மைஅங்கேயே தொடங்கிவிடுகிறது. உண்மையான தொடக்கம் அதுதான்.




உதாரணமாக, நான் இயக்கிய முதல் படமான ‘பூதக்கண்ணாடி’, சிறுமிகள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாவதைப் பற்றிய செய்தி ஒன்று என் மனதுக்குள் எப்போதோ புகுந்தது. நாட்கணக்கில் அது என்னைத் தொந்தரவு செய்தது. குறிப்பாக ஒரு ·போட்டோ. பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான ஒரு சிறுமியின் புத்தகப் பையின் படம் அது. புத்தகங்கள் சிதறி, சோற்று டப்பா திறந்து சிந்தி. . . அந்த அவஸ்தை என்னில் எச்சம் கொண்டபோது நான் கண்டுகொண்டேன், அச்சம்பவத்தை நான் ஒரு தந்தையின் கண்ணால்தான் பார்க்கிறேன் என்று!



அந்தக் கோணத்தை வெளிப்படுத்தும் ஒரு கதாபாத்திரமாக வித்யாதரன் உருவாகி வந்தான். அவனுக்கு சமகால வாழ்க்கையைப் பற்றி பதற்றமும் பயமும் அதிகம். ஆனால் அவன் ஒன்றும் சொல்வதில்லை. மத்திய வர்க்கத்தைச் சேர்ந்த கோழை அவன். ஆகவே அவன் மனம் சிதைகிறது. பிறக்கிறது. அவனுடைய பார்வைகள் வழியாக அந்தப் பிரச்சினையை நான் ஆராய்ந்தேன்.



ஜெயமோகன்: நான் ஒரு நாவல் எழுதினால் முழு வேகத்துடன் அதை எழுதிவிடுவேன். பிறகுதான் அதை என் எடிட்டர்களுடன் விவாதிப்பேன். ஆனால் இங்கே திரைக்கதைகள் கரு நிலையிலேயே விவாதிக்கப்படுகின்றன. படிப்படியாக உருவாக்கப்படுகின்றன.



லோகித்தாஸ்: என்னுடைய திரைக்கதைகள் நீங்கள் நாவல் எழுதுவதுபோலவே உருவாக்கப்படுகின்றன. நான் எப்போதும் விவாதிப்பதைத் தவிர்ப்பவன். எழுதிய பிறகு இயக்குநரிடம், நடிகர்களிடம் விவாதிப்பேன். கதைக்கருவை விவாதித்து உருவாக்கவோ வளர்க்கவோ முடியாது. அது செயற்கையான கஆதையைத்தான் உருவாக்கும்.



ஜெயமோகன்: எப்போதாவது விவாதித்திருக்கிறீர்களா?



லோகித்தாஸ்: ஒரு முறை முயன்று பார்த்தேன்.  ‘விசாரணை’ என்ற என் திரைக்கதை ஓர் இடத்தில் முட்டி முனனகராமல் நின்றுவிட்டது. ஒரு விஷயம் தெரிந்தது. கதை விவாதத்தில் அதுதான் முக்கியமான சிக்கல். நாம் ஒரு கருவைச் சொலும்போது அது கேட்பவர்களில் ஒவ்வொருவரின் மனதிலும் ஒவ்வொரு வகையான உணர்வுகளையும் எண்ணங்களையும் உருவாக்குகின்றது. அதன் பிறகு விவாதம் என்பது கண்ணைக் கட்டிக் கொண்டு சண்டை போடுவது போலத்தான். அந்தக் கருவை நான் முழுமையாக உணர்வுரீதியாகவும் கதையளவிலும் விரிவுபடுத்தி முன்வைத்தால்தான் என் தரப்பு அவர்களிடம் போய்ச்சேரமுடியும். திரைக்கதையின் சில தொழில்நுட்ப அம்சங்களைப் பற்றி மட்டுமே நாம் பிறரிடம் விவாதிக்க முடியும்.



ஜெயமோகன்: ஆனால் இங்கே தமிழில் இன்னும் விவாதம் மூலமே உருவாகிறது.



லோகித்தாஸ்: இங்கே சினிமா பல்வேறு கேளிக்கைகளை ஒரு விஷயத்திற்குள் இணைக்க முயல்வதாகவே உள்ளது. திரைக்கதை அவையனைத்தையும் இணைக்கும் ஓர் அமைப்பு. அதைப் படிப்படியாக விவாதித்து உருவாக்கலாம். அதற்கு சில வழிமுறைகள் உருவாகியும் உள்ளன. கதையின் ஆன்மாவை அப்படி விவாதித்து உருவாக்கிவிட முடியாது. இதில் எனக்கு சந்தேகமே இல்லை. விவாதிக்கிறார்கள் என்று வைப்போம். ஆனால் அவை ஒரே உணர்ச்சியால், ஒரு பார்வையால் இணைக்கப்பட்டிருக்காது. திரைக்கதையில் ஒருமை இருக்காது.



ஜெயமோகன்: பூதக்கண்ணாடி பற்றி சொன்னீர்கள். அந்தப் படத்தில் அந்தப் படிமம் மிகவும் புகழ்பெற்றது. வாட்ச் ரிப்பேர் பார்க்கும் வித்யாதரன் ஒரு கண்ணில் பூதக்கண்ணாடி அணிந்திருக்கிறான். மறு கண் சாதாரணம். இரு பார்வையும் அவனிடம் உள்ளது. படிமங்களை நீங்கள் எப்படித் தேர்வு செய்கிறீர்கள். . .



லோகித்தாஸ்: நான் பொதுவான படிமங்களைத் தனித்து நிற்கும்படி பயன்படுத்துபவனல்ல. அதில் எனக்கு நம்பிக்கை இல்லை. திரைக்கதையில், காட்சியமைப்பில் வெளியே இருந்து ‘செலுத்தப்படும்’ படிமங்கள் படைப்பை பலவீனமாக்குகின்றன. பூதக்கண்ணாடி எடுக்க கதை எழுதிக் கொண்டிருந்த நாட்களில் நான் ஒரு முறை ஒரு வாட்ச் ரிப்பேர் கடைக்குள் மழைக்கு ஒதுங்கினேன். அங்கே வாட்ச் ரிப்பேர் செய்பவர் வேலை செய்தபடியே என்னிடம் பேசினார். சட்டென்று அவர் நிமிர்ந்து என்னைப் பார்த்தபோது வியப்பாக இருந்தது. சகஜ வாழ்வைப் பார்க்கும் ஒரு கண். அதிநுண்ணிய உலகைப் பார்க்கும் இன்னொரு கண். அதுதான் வித்யாதரனின் இயல்பு என்று பட்டது.



அதேசமயம் அந்தப் படிமத்தை நான் திணிக்கவில்லை. வாட்ச் ரிப்பேர் செய்வது வித்யாதரனின் தொழில், அவ்வளவுதான். நீங்கள் மேலதிகக் குறியீட்டு அர்த்தங்களை அளிக்காவிட்டால் அது ஒரு தகவல் மட்டுமே. பூதக்கண்ணாடி படத்தில் வித்யாதரன் சாலையில் போகும்போது வழிமறிக்கும் அந்தப் பாம்பு குறியீடாக பெரிதும் விவாதிக்கப்பட்டது. அது வேண்டுமென்றால் காமத்தின் குறியீடு என கொள்ளலாம். வித்யாதரனின் ஒடுக்கப்பட்ட காமத்தை அது குறிக்கிறது எனலாம்.  ஆனால்அப்படி பொருள் தராதவர்களைப் பொறுத்தமட்டில் அது சாதாரணமான பாம்பு. அவனுடைய பயங்கொள்ளித் தனத்தைக் காட்டுவதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு கதாபாத்திரம். ஒரு சினிமாவில் எல்லாமே குறியீடுதான். ஆகவே குறியீடாக தனியாக ஏதும் இருக்கக்கூடாது.


ஜெயமோகன்: ஏன்?



லோகித்தாஸ்: ஏனெனில் காட்சிக் கலை என்பது நேரடியாக மனதைப் பாதிக்கும்  ஊடகம். சிந்தனையை பாதித்து அதன் வழியாக மனதை பாதிப்பதல்ல அது. மனதைக் கவர்ந்து அதன் வழியாகச் சிந்தனையைப் பாதிப்பது. எந்த காட்சிக்கலையானாலும் அது நம் கண்ணையும் கருத்தையும் கவர்கிறது. நம்மை அதில் ஆழ்ந்து போக வைக்கிறது. ஆகவேதான் காட்சிக்கலை என்பது எல்லா காலத்திலும் எளிய மக்களின் ஊடகமாக இருந்து வந்துள்ளது. அது தேர்வு செய்யப்பட்ட சிறுபான்மையினருக்கு உரியதல்ல. அறிஞர்களுக்கும் பயிற்சி உடையவர்களுக்கும் உரியதல்ல. காட்சிக்கலையில்  அம்மாதிரி செயற்கையான படிமங்களைப் புகுத்தினால் அனுபவத்தில் ஒருமை

சிதறும். அதில் ரசிகன் ஈடுபட முடியாமலாகும்.



நான் யாருக்காக்க் கதை சொல்கிறேன்? சாயங்காலம் வேலை முடிந்து கைகால்களை சேறு போகக் கழுவி மண்வெட்டியைச் சாத்திவிட்டு வந்து அமரும் விவசாயிக்காக. அவனுடைய அறிவுத்திறன் குறைவு என்றோ அவனுடைய ரசனை பழுதுபட்டது என்றோ நான் நம்பவில்லை. அவனுடைய அற உணர்வு நம் அனைவருடைய அற உணர்வை விடவும் எவ்வளவோ மடங்கு மேலானது. அவனை நம்பி நான் கதை சொல்கிறேன். நான் இன்று வரை தரக்குறைவான எதையும் எழுதியதில்லை. என் படங்கள் அடைந்து வரும் தொடர்வெற்றி அவன் மீது எனக்கு இருக்கும் நம்பிக்கையைத்தான் உறுதிப்படுத்துகிறது.


ஜெயமோகன்: கோடிக்கணக்கான மக்கள் பார்த்து ரசிக்கும் வணிகப் படங்கள்தான் நல்ல படங்களா?



லோகித்தாஸ்: இல்லை. நான் என் மதிப்பீடுகளில் ஒன்றைத்தான் சொல்லியிருக்கிறேன். ‘வினோதம் + வித்யாப்பியாசம்’  (கேளிக்கை, கற்பித்தல்) நம்மை ஈர்த்து தன்னில் ஈடுபட வைக்கவேண்டிய வலிமை கலைக்கு இருந்தாக வேண்டும். இது முதல் தேவை அடுத்தபடியாக அதற்கு கற்பிக்கும் பண்பு இருக்க வேண்டும். மூளைக்குக் கற்பித்தலைச் சொல்லவில்லை, ஆத்மாவுக்குக் கற்பித்தலைப் பற்றி சொல்கிறேன்.



நல்ல கலையின் நோக்கமே மனதைப் பண்படுத்துவதுதான். நம்மை ஈர்த்து ஆழமான அனுபவத்தை அளித்து நம்மை மேம்படுத்துவது எதுவோ அதுவே சிறந்த கலை. கலையனுபவம் உருவாவதில்லை. அறிவு சார்ந்த அனுபவம் மட்டுமே உருவாகிறது. அம்மாதிரி பரிசோதனை முயற்சிகளை நான் குறைகூற மாட்டேன். அதெல்லாம் தேவைதான். பரிசோதனைகள்தான் பல புதிய சாத்தியங்களைத் திறக்கின்றன. ஆனால் கலை ரசிக்கப்படும் விதம் எப்போதும் ஒன்றுதான்.


ஜெயமோகன்: அது என்ன?



லோகித்தாஸ்: இந்த நிமிடம் தமிழகம் முழுக்க எத்தனை திரையரங்குகளில் எத்தனை லட்சம் மக்கள் தங்களை மறந்து ஒருவருக்கொருவர் ஒன்றாகி, ஒரே மனதாக அமர்ந்திருக்கிறார்கள். எத்தனை மகத்தான விஷயம் அது. ஒரு நல்ல சினிமா அவனை மன உச்சங்களுக்கு கொண்டு செல்கிறது. அங்கே அவன் நீதியை, அழகை மட்டுமே நாடுகிறான்.



திரையரங்கில் ரசிகனின் மனம் கருணையால் நிரம்பியிருக்கிறது. பெருந்தன்மையால் விரிந்திருக்கிறது. உயர்ந்த விஷயங்களுடன் அவன் சட்டென்று இணைந்து கொள்கிறான்.  நல்லவர்களுடன் தன்னை அடையாளம் காண்கிறான். சிறிய அநீதியைக்கூட அவன் அங்கே ஏற்பதில்லை. ஒரு குற்றவாளி தண்டிக்கப்படாமல் விடப்பட்டால் அந்தப் படம் ஓடாது.



கவனியுங்கள், அங்கே வந்து அமர்ந்திருப்பவர்கள் எல்லாரும் யோக்கியமானவர்கள் அல்ல. அவர்களுள் மோசடிக்காரர்கள், குற்றவாளிகள், கோழைகள் இருக்கலாம். அங்கே அந்த இருளில் அவர்களின் மனங்கள் உருகி, ஒன்றாகி, உச்சம் நோக்கி நகர்கின்றன. அது பெரிய தியானம். சினிமாவை இகழும் அறிவுஜீவிகள் நம் சமூக மனத்திற்கு சினிமா அளிக்கும் இந்தப் பெரும் பங்களிப்பைப் பற்றி அறிவதில்லை.



ஜெயமோகன்: அப்படியானால் சினிமா மீண்டும் மீண்டும் நீதியை, கருணையை, அன்பைப் பற்றித்தானே பேச முடியும்?



லோகித்தாஸ்: அதைப்பற்றித் மட்டும்தான் பேசவேண்டும். பல நூற்றாண்டுகளாக அதைப் பற்றித்தான் பேசி வந்திருக்கிறது. இனியும் அதைப் பற்றித்தான் பேசும். ஏனென்றால் நீதியும் கருணையும் அறமும் மனிதனின் அடிப்படை இயல்புகள் அல்ல. மனிதனுக்குள் இருப்பது காமமும் குரோதமும் போகமும் மட்டும்தான். இடைவிடாமல் ஒவ்வொரு கணமும் வலியுறுத்திக் கொண்டிருந்தால் மட்டும்தான் மனிதனின் பண்பாட்டின் அடிப்படைகளான நல்லுணர்வுகள் நிற்க முடியும்.



ஒரு போர் அல்லது பஞ்சம் வந்தால் எத்தனை சீக்கிரம் இந்த உணர்வுகள் அழிந்து, மிருகம் வெளிவருகிறது என்று பாருங்கள். எத்தனை சீக்கிரமாக மனிதனைக் கட்டவிழ்த்துவிட்டுவிட முடிகிறது! ஆகவே கலைஞன் மீண்டும் மீண்டும் அறம், கருணை, அன்பு என்று கூறிக்கொண்டே இருக்கவேண்டியுள்ளது.



இலக்கியமும் நாடகக் கலையும் உருவாக்கும் உலகம் என்பது என்ன? கருணையும் அறமும் மேலோங்கிய ஒரு கற்பனை உலகம். அதை நிஜம் போல அவை நிகழ்த்திக் காட்டுகின்றன. இந்த மூர்க்கமான உலகிலிருந்து மக்களை சில மணி நேரம் அங்கே போய் வாழ வைக்கின்றன. அதன் மூலம் அவனை மகிழ்விக்கின்றன. அவனை இளைப்பாற்றுகின்றன. நம்பிக்கையூட்டுகன்றன



இப்படிப் பார்க்கும்போது நல்ல சினிமாவுக்கும் மோசமான சினிமாவுக்கும் இடையேயான வேறுபாடு தெளிவாகிறது. நல்ல சினிமா மனிதனுக்குள் அவன் இயல்பில் இல்லாத நல்லுணர்வுகளை உருவாக்க முயல்கிறது. அதற்கு தன் கலையைப் பயன்படுத்துகிறது. அது உருவாக்குவதே தியான நிலை. மாறாக மோசமான சினிமா மனித மனதில் உறையும் இயல்பான மிருக உணர்வுகளைத் தூண்டுகிறது. அது உருவாக்கும் ஈர்ப்பு நேர் எதிரானது. அது தியான நிலையை உருவாக்குவதில்லை. அது உருவாக்குவது கொந்தளிப்பைத்தான்.
ஜெயமோகன்: இப்படி யோசித்துப் பார்ப்போம். . . உங்கள் கோணத்தில் பார்த்தால் உயரிய உணர்வுகளை உருவாக்கும் நோக்கம் கலைக்கு இருக்கவேண்டும். ஏன் இன்னொருவர் இப்படி யோசிக்கக்கூடாது? அவருக்கு அப்படிப்பட்ட நோக்கம் ஏதும் இல்லை. உண்மையை, யதார்த்தத்தை முன்வைப்பது மட்டுமே அவரது படைப்பியக்கத்தின் நோக்கம். . .



லோகித்தாஸ்: உண்மையும் யதார்த்தமும் பலவிதமானவை. முடிவே இல்லாதவை. அவற்றில் சிலவற்றை மட்டும் தேர்வு செய்து ஒருவர் முன்வைக்கிறார் என்றால் அதன் நோக்கம்தான் அங்கே முக்கியம். உயர்ந்த கலையை உருவாக்க முடியாதவர்களின் சமாதானம் அல்லது சப்பைகட்டுதான் இது.


ஜெயமோகன்: நீங்கள் கூறுவதுபோல ஒரு நோக்கம் இருக்கும்போது கலைக்கு ஒருமை உருவாகிறது. ஆனால் ஒருமையை மறுக்கக்கூடிய சிதைவை, முன்வைக்கக்கூடிய கலைப் படைப்புகள் உள்ளன.



லோகித்தாஸ்: அத்தகைய படைப்புகளை நான் ஏற்கவில்லை. இலக்கியத்தில் நேர்ந்த சிறு வட்டத்தில் அவை அதிர்வுகளை உருவாக்கலாம். சினிமா போன்ற பெரிய கலைவடிவில் அவை வெறும் சலசலப்பாக மட்டுமே முடியும். கலைஞனின் நோக்கமும் கலைப் படைப்பின் விளைவும் மிக மிக முக்கியமானவை.



ஜெயமோகன்: ஆனாலும் கலைஞர்களில் இருவகை உண்டு. சமன் குலைலக்கும் கலைஞர்கள் சால்வதார் டாலி போல, விளாடிமிர் நபக்கோவ் போல, சமன் உருவாக்கும் கலைஞர்கள் டால்ஸ்டாய் போல….



லோகித்தாஸ்: சமன் குலைப்பதை ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தை நோக்கியே செய்ய முடியும். டால்ஸ்டாய் இன்றும் உயிர்வாழ்கிறார். மேலான கலை உருவாக்குவது சமன்தான். ஒரு நல்ல கச்சேரி கேட்டு வெளியே வந்தால் மனம் சட்டென்று கோபப்பட முடியாது. மனம் சாந்தியடைகிறது. இது முன்பே கூறப்பட்ட விஷயம்தான். ரசங்கள் ஒன்பது. பிற அத்தனை ரசங்களும் சரியாக இணைந்தால் உருவாகும் ரசம் கடைசி ரசமான ‘சாந்தம்’தான். எல்லா ரசங்களும் அலையடிக்கும் மகாபாரதம் சாந்த ரசத்தை உருவாக்கும் இதிகாசம்.



ஜெயமோகன்: உங்கள் எழுத்தில் மகாபாரதம் உருவாக்கிய பாதிப்பு என்ன?



லோகித்தாஸ்: இரு இதிகாசங்களும்தான் என் கற்பனைக்கான அடிப்படை. மகா பாரதத்தில் ஒரு துளி போதும் எனக்கு ஒரு கதையை உருவாக்கமுடியும். மகாபாரதம் கடல். ஆகவே எனக்கு கதைகளுக்குப் பஞ்சமே இல்லை. முன்பு என் கதைகளுக்கு என்ன மூலம் என்ற சர்ச்சை வந்தது. ஒரு கதாபிரசங்கக்காரர் அவரது கதையை நான் திருடி விட்டதாகச் சொல்லி நீதி மன்றம் போனார். நான் நீதிமன்ற மேடையில் நின்று அக்கதையின் மகாபாரத மூலவடிவைச் சொன்னேன்.



ஜெயமோகன்: சரி, ஒரு நேரடியான கேள்வி. நடிகர்களுக்காக நீங்கள் கதை எழுதியதுண்டா?



லோகித்தாஸ்: இல்லை. அதே சமயம் கதா பாத்திரங்களுக்கு நடிகர்கள் மனதில் தெரிவது, ஒருவரை உத்தேசித்து எழுதுவது மிகவும் வசதியானது. ஒன்று படமாக்கும்போது பிரச்சினை இருக்காது. இரண்டாவதாக ஒரு மனித உடல், ஒரு முகம் நம் முன் தெரிகிறது. அது மிகவும் திட்டவட்டமானது.



ஜெயமோகன்: நீங்கள்  திரைக்கதையாசிரியர். வெற்றிகரமானவர். எப்போது, ஏன் இயக்குநராக வேண்டுமென்று தோன்றியது?



லோகித்தாஸ்: இயக்குநர் ஒரு படத்தின் தலைவர். ஒருங்கிணைப்பாளர். திரைக்கதையாளன் உருவாக்கும் சட்டகத்தை நிரப்புபவர். அந்த இடம் அனைவராலும் விரும்பப்படுவதாகவே இருக்கும். என் திரைக்கதைகளை என் விருப்பப்படி படமாக்க விரும்பினேன்.



ஜெயமோகன்: நீங்கள் அடிப்படையில் ஒரு திரைக்கதையாசிரியர்.  உங்களால் தொழில் நுட்ப ரீதியாக இயக்குநராக ஏதேனும் சிரமம் இருந்ததா?



லோகித்தாஸ்: இயக்குநர் வேலை என்பது அந்த அளவுக்கு தொழில்நுட்ப வேலை அல்ல. அது அதிகமும் நிர்வாக ஒருங்கிணைப்பு சார்ந்த வேலை. பலரிடமிருந்து வேலைகளைப் பெற்றுக்கொள்வது. அதற்கும் மேலாக உள்ள மூன்று விஷயங்கள் நடிப்பை வெளிக்கொணர்வது, காட்சிக் கோணங்களை அமைப்பது, காட்சிகளை வெட்டித் தொகுக்கும் பிரக்ஞையுடன் இருப்பது. இது மூன்றும் திரைக்கதை ஆசிரியனிடமும் இருந்தாக வேண்டும். நல்ல திரைக்கதையாசிரியன் உள்ளூர நல்லநடிகனாக, நல்ல காட்சியமைப்பாளனாக இருப்பான். கதையை வெட்டித் தொகுப்பது எந்த எழுத்தாளனிடமும் இயல்பாக இருக்கும் பிரக்ஞைதான்.



ஜெயமோகன்:  திரைக்கதையை வசனத்துடன் சேர்த்து எழுதக் கூடாது என்கிறார்களே. அப்படி எழுதினால் காட்சியமைப்புக்கு இடமில்லாமல் போய்விடும் என்கிறார்களே. . .



லோகித்தாஸ்: அது சரியல்ல. ஒரு சினிமவில் வசனமும் காட்சியும் ஒன்றையொன்று நிரப்புகின்றன. ஆகவே அதை உருவாக்கும்போதே முழுமையாக எழுதிவிடுவதே நல்லது. அப்போதுதான் சரளமான ஓட்டம் இருக்கும். சிலர் ஒரு கதையோட்டத்தை மட்டும் எழுதிவிட்டு அவ்வப்போது வசனத்தை எழுதுகிறார்கள். அப்போது வசனம் இயல்பாக, திரைக்கதையின் ஒரு பகுதியாக இருக்காது. திரைக்கதை ஒரு இலக்கியப் படைப்பு. இலக்கியமாகவே அது எழுதப்படவேண்டும்.



ஜெயமோகன்: இலக்கியத்தை எடுத்துக் கொண்டால் பல வகையான கதை சொல்லும் முறைகள் உள்ளன. யதார்த்தவாதம், மிகுபுனைவு, ஆவணப்பதிவு என்றெல்லாம் நான் எல்லாவற்றையும் மாறி மாறிப் பயன்படுத்துகிறேன். ஆனால் சினிமாவில் இன்றும் ஒரே கூறுமுறைதான். யதார்த்தவாத அணுகுமுறை. சமீபத்தில் ஈரானியப் படங்களைப் பார்க்கும்போது யுபை சைக்கிள் தீவ்ஸ்ருன் அதே அழகியல்தான் இன்றும் உள்ளது. வெவ்வேறு கூறுமுறைகள் ஏன் இன்னும் சினிமாவில் பிரபலமாகவில்லை?



லோகித்தாஸ்: சினிமாவிலும் ·பாண்டஸி, ஆவணமுறை போன்றவை உள்ளன. அவை யதார்த்தவாத கூறுமுறையின் ஒரு பகுதியாகவே உள்ளன. ஏன் என்று யோசித்தால் கிடைக்கும் விடைதான், சினிமா வெகுஜனக் கலை. இங்குள்ள ஒரு சிறிய மாறுதல்கூட மொத்த சமூகத்தில் ஏற்படும் ஒரு உளவியல் மாற்றத்தின் விளைவுதான். சினிமா தன் விருப்பப்படி மாற முடியாது. கூடவே மக்களும் மாறவேண்டும். ஒரு தரப்பு இன்னொன்றை பாதித்து இருவரும் சேர்ந்து மாற வேண்டும்.



இன்று மக்கள் யதார்த்த வாழ்வை சினிமாவில் காண விரும்புகிறார்கள். சொல்லப்போனால் யதார்த்த உணர்வு வலிமை பெற்றே வருகிறது. ஆரம்ப காலத்தில் இருந்த ·பாண்டஸி அம்சம்கூட இன்று சினிமாவில் இல்லை. ஏன் வெகுஜன எழுத்திலும் யதார்த்தவாதம்தானே உள்ளது. மக்கள் தங்கள் வாழ்வைப் போன்ற ஒன்றை திரையில் காணும்போதுதான் அதனுடன் ஐக்கியமாகிறார்கள்.



ஜெயமோகன்: உங்கள் இளமைப்பருவம் கேரளத்தில் இடதுசாரி தீவிரவாதம் தோன்றி வீழ்ந்த காலகட்டம். ஏராளமான எழுத்தாளர்களும் கலைஞர்களும் அதன் பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள். நீங்கள் அதனால் பாதிப்பு அடைவில்லையா?



லோகித்தாஸ்: கட்சி அரசியலில் எனக்கு ஆர்வம் இல்லை. உண்மையான அரசியலில் ஆர்வம் உண்டு. அது கருத்துக்களின், அதிகாரத்தின் அரசியல். அப்படிப்பட்ட அரசியலை ஒரு படத்தில் எழுத திட்டம் உள்ளது. பொதுவாக என் கவனம் எப்படியோ சமூகத்திடம் மோதி அன்னியமாகும் தனிமனிதர்களின் அவலத்திலேயே உள்ளது. இது என் இயல்பு சார்ந்ததாக இருக்கலாம்.



ஜெயமோகன்: நீங்கள் ஏன் ஓர் அரசியல் படம்கூட எடுக்கவில்லை? சொல்லப்போனால் உங்கள் படத்தில் அரசியலே இல்லை.



லோகித்தாஸ்: நான் எழுதவிருப்பது அதைப் பற்றித்தான். அந்தக் காலகட்டம் என்னிலும் அழுத்தமான சுவடுகளை விட்டுச் சென்றுள்ளது. அவற்றை என் கோணத்தில் பரிசீலிக்க விரும்புகிறேன்.



ஜெயமோகன்: வணிகப் படங்களைப் பார்ப்பீர்களா?



லோகித்தாஸ்: எல்லா நல்ல படங்களையும் பார்ப்பேன். திரைப்படம் என்னுடைய ஊடகம். அதன் மீது எனக்கு மோகம் உண்டு. கலைப்படம், கமர்ஷியல் படம் என்ற பிரிவினையே இல்லை. அது ஒரு காலகட்டத்தில் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது. கமர்ஷியல் நோக்குடன் எடுக்கப்படும் படங்களில் பத்துக்கு ஒன்பது படங்கள் தோல்விப்படங்கள்தான். அப்படியானால் எப்படி அவற்றை கமர்ஷியல் படம் என்கிறீர்கள்? கலைப்படங்களுக்கு கமர்ஷியல் நோக்கமே இல்லையா என்ன? இரு வகையிலும் சில மாடல்களையும் ·பார்முலாக்களையும் வைத்திருக்கிறார்கள். அதையே பெரும்பாலானவர்கள் கடைப்பிடிக்கிறார்கள். கமர்ஷியல் படமென்றால் பாட்டு, சண்டை, கதாநாயகனின் வீரதீர பிரதாபங்கள், கலைப்படமென்றால் இருட்டு, மந்தத்தன்மை.



ஜெயமோகன்: பள்ளிக்கூடத்தில் சினிமாவைக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று கூறப்படுகிறதே?



லோகித்தாஸ்: கற்றுக்கொடுக்கலாம். ஆனால் முதலில் பள்ளிக்கூடத்தில் கற்பனையைக் கற்றுக் கொடுக்க வேண்டும். எல்லா கலைகளுக்கும் அடிப்படை கற்பனை. இங்கே நம் கல்வியின் பிரச்சினை சினிமாக் கல்வி இல்லாமையோ இசைக்கல்வி இல்லாமையோ அல்ல. கற்பனை இலலாமைதான். சில சமயம் சிந்திக்கக் கற்றுக் கொடுக்கிறோம். கற்பனை இல்லாதபோது கலைகள் ரசிப்பதற்கான இயல்பே இல்லாமல் போய்விடுகிறது. சினிமாவுக்கு மட்டுமா ரசனை தேவை? இசைக்கு, ஓவியத்திற்கு? நம் கல்வி அமைப்புகளில் கற்றுத் தேறியவர்களில் எத்தனை பேருக்கு அத்தகைய ரசனை உள்ளது?



இங்கே ரசனை உள்ளவர்கள் சுயமாகவே அதை அடைந்தார்கள். தங்கள் உழைப்பால் அதை வளர்த்துக் கொண்டார்கள். இலக்கிய வாசகர்களும் சினிமா ரசிகர்களும் எல்லாம் அப்படித்தான். நமது கல்விமுறையில் கற்பனை இல்லாமலிருப்பதனால் அது உலர்ந்து, வறண்டு காணப்படுகிறது. அதில் கருணைக்கும் கனிவுக்கும் இடமில்லாமல் இருக்கிறது. இதுதான் இன்றுள்ள முக்கியமான பிரச்சினை என்று நான் நினைக்கிறேன்.



ஜெயமோகன்: மலையாள சினிமாவில் உங்களுக்குப் பிடித்த இயக்குநர் யார்? திரைக்கதையாசிரியர்?



லோகித்தாஸ்: இயக்குனர் பரதன். அவருடைய இலக்கிய ஞானம் முக்கியமாகக் குறிப்பிட்டாக வேண்டும். இசையிலும் ஓவியத்திலும் ஆர்வமும் பயிற்சியும் உடையவர் அவர். இந்த மூன்று கலைகளையும் தன் சினிமாவில் அவர் இணைத்தார். அவரது படச் சட்டகங்கள் மிகவும் அழகானவை. திரைக்கதையை உள்வாங்குவதில் அவர் மிகவும் நுட்பமானவர்.



திரைக்கதையாசிரியர் பத்மராஜன். இலக்கியவாதியாக அங்கீகாரம் பெற்ற பிறகு சினிமாவுக்கு வந்தார் அவர். மிக இயல்பான வசனங்களிலும் நுட்பமான யதார்த்த சித்தரிப்பும், வலிமையான கதாபாத்திரங்களும் அவரால் உருவாக்கப்பட்டன. பத்மராஜனின் வசனம் ஒருபோதும் பத்மராஜனுடையதாக இருக்காது. அது அந்தக் கதாபாத்திரம் கூறுவதாகவே இருக்கும். ஒரு முறை என் படத்தைப பார்த்த பிறகு பத்மராஜன் என்னுடைய கதாபாத்திரங்கள் சொந்த ஆத்மாவால் உரையாடுவதாக கூறினார்.



நானும் ‘பஞ்ச்’ வசனங்கள் எழுதுவதில்லை. வசனங்களை வைத்து விளையாட மாட்டேன். மிக இயல்பாக காதாபாத்திரங்களை உரையாடவிடுவேன். பத்மராஜனின் கதைக்கருக்கள் விசித்திரமானவை. ‘ஓர் இடத்தில் ஒரு பயில்வான்’ போல. ஒரு ஊருக்கு வரும் பயில்வானின் பிரச்சினைகள். அவற்றை மிக நம்பகமாகவும் சுவாரஸியமாகவும் கூறியிருந்தார். மலையாளத்தில் எனக்குப் பிடித்த படம் அது.


ஜெயமோகன்: பிடித்த நடிகர்?



லோகித்தாஸ்: என்னுடைய பல நல்ல கதாபாத்திரங்களை மோகன்லாலும் மம்முட்டியும் செய்திருக்கிறார்கள். மிக மிக வலுவாக நடித்திருக்கிறார்கள். அவர்கள் இந்தியத்திரையின் சிறந்த நடிகர்கள். ஆனால் ஒரு ரசிகனாக மலையாளத்தில் எனக்குப் பிடித்த நடிகர்கள் கோபியும் நெடுமுடி வேணுவும்தான்.


ஜெயமோகன்:  திலகன்?



லோகித்தாஸ்: மிக நுட்பமான நடிகர். எனது பல கதாபாத்திரங்களை உயிர்கொடுத்துக் கொண்டு வந்தவர். ‘ஜாதகம்’ படத்தைப் பாருங்கள். அதில் அந்த முதியநாயர்  அடிக்கடி தலையை வருடுவார். தலைக்குள் ஒரு எரிமலை புகைவது படத்தில் கடைசியில்தான் வரும். திலகனின் கண்கள் மாறும்விதம் நடிகர்கள் பார்த்துப் படிக்கவேண்டிய விஷயம்.



ஆனால் திலகனுக்கு பல வரையறைகளும் உண்டு. உடல், குரல் என பல எல்லைகள். நெடுமுடியும் கோபியும் அப்படியல்ல. அவர்கள் எங்கும் போகமுடியும். எப்படியும் மாற முடியும்.  ‘மீ£ண்டும் சில வீட்டு காரியங்கள்’ படத்தில் நெடுமுடி வேணு முதலில் தோன்றும்போது பின்பக்கம்தான் தெரியும் பாருங்கள், அவர் ஓர் அற்பர் அயோக்கியர் என்று அந்த பின்பக்கமே சொல்லிவிடும்.



ஜெயமோகன்: லோகி மிக மிக உணர்ச்சிகரமான மனிதர். அப்படிப்பட்டவர்கள் குரூரமானவர்களாகவும் சில சமயம் வெளிப்படுவார்கள். . .



லோகித்தாஸ்: குரூரமாக நான் நடந்து கொண்டதாக எனக்கு நினைவில்லை. சிறு வயதில் நான் குரூரமாக நடத்தப்பட்டதனால் அப்படி இருக்கலாம். இல்லை என் பயம் காரணமாக இருக்கலாம். அதைவிட முக்கியமாக என் கலை என்னை சுத்திகரிப்பதனால் அது நிகழ்ந்திருக்கலாம்.



ஜெயமோகன்: உங்களுக்கு நடிப்புப் பிரச்சினைகள் உண்டா? கலைஞர்களுக்கு அது இருக்கும். . .குரல்கள் கேட்பது, கண்களில் ஒளி தெரிவது, உடல் நடுநடுங்குவது. . .



லோகித்தாஸ்: ரொம்ப உண்டு. . . ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் மனநோயாளியாகவும் இருந்து சிகிச்சை பெற்றிருக்கிறேன். உணர்ச்சிகள் என் கட்டுக்குள் நிற்காது. நூலகத்தில் படித்துக் கொண்டிருப்பேன். உருக்கமான இடங்களைப் படித்தால் கதறிக் கதறி அழுவேன். சிறிய விஷயத்தில்கூட என்னைக் கட்டுப்படுத்த முடியாது. தூக்கத்தில் பயங்கரமாக அழுவேன். என்அழுகையைக் கேட்டு நானே திடுக்கிட்டு விழித்துக் கொள்வேன்.


ஜெயமோகன்: துளை விழுந்த மூங்கில்தான் பாடும் என்று வயலாரின் வரி ஒன்று உள்ளது.



லோகித்தாஸ்: இருக்கலாம். ஆனால் துளை விழுவது என்பது மிகவும் வலி தருவது.



ஜெயமோகன்: மலையாள இலக்கியத்தில் உங்களுக்குப் பிடித்தமான எழுத்தாளர் யார்?



லோகித்தாஸ்: பஷீர், மாதவிக்குட்டி, எம்.டி.வாசுதேவன் நாயர்.



ஜெயமோகன்: மூவருமே உங்கள் ஊர்க்காரர்கள், வள்ளுநாடு.



லோகித்தாஸ்: கேரளத்தின் கலாச்சார மையம் அல்லவா அது.



[2003 ஆம் வருடம் லீனா மனிமேகலை ஆசிரியத்துவத்தில் வெளிவந்த சினிமா இதழில் வெளிவந்த பேட்டி]



Save
Share

Friday, 17 April 2020

THAKAZHI SIVASANKARA PILLAI ,MALAYALA WRITER BORN 1912 APRIL 17-1999 APRIL 10



THAKAZHI SIVASANKARA PILLAI ,MALAYALA
 WRITER BORN 1912 APRIL 17-1999 APRIL 10




தகழி சிவசங்கரப் பிள்ளை (Thakazhi Sivasankara Pillai, மலையாளம்: തകഴി ശിവശങ്കര പിള്ള, ஏப்ரல் 17, 1912 - ஏப்ரல் 10, 1999)[1] மலையாள மொழியின் யதார்த்தவாத முற்போக்கு எழுத்தாளர்களில் முக்கியமானவர். ஞானபீட விருது பெற்றவர்.[2] மலையாள மொழியில் 36 நாவல்களையும் 500க்கு மேற்பட்ட சிறுகதைகளையும் ஒரு நாடகத்தையும் எழுதியிருந்ததால் பரவலாக அறியப்பட்டார்.

தாக்கங்கள்
கை டி மாப்பசான், கார்ல் மார்க்ஸ், சிக்மண்ட் பிராய்ட்.

வாழ்க்கைக் குறிப்பு
சிவசங்கரப்பிள்ளை கேரளாவிலுள்ள ஆலப்புழா அருகே தகழி என்ற கிராமத்தில் பிறந்தார். அப்பா பொய்ப்பள்ளிக்குளத்து சங்கரக்குறுப்பு. அம்மா பார்வதியம்மா. பிரபல கதகளி நடிகரான குரு குஞ்சுக்குறுப்பு தகழி சிவசங்கரப்பிள்ளையின் சித்தப்பா.

அம்பலப்புழா கடற்கரை ஆங்கிலப்பள்ளியில் ஏழாம் வகுப்பு வரை படித்தார். வைக்கத்திலும் கருவாற்றாவிலும் பள்ளியிறுதிப் படிப்பை முடித்தார். பின்னர் திருவனந்தபுரம் சட்டக் கல்லூரியில் பிளீடர் படிப்பை முடித்தார். அப்போது கேரளத்தின் முக்கியமான இலக்கிய விமர்சகரான கேசரி பாலகிருஷ்ணபிள்ளையின் மாணவரானார். கேரளகேசரி இதழின் நிருபராக பணியாற்றினார். 1934ல் காத்தம்மாவை மணந்துகொண்டார். நெடுமுடி தெக்கேமுறி செம்பகச்சேரி சிறைக்கல் வீட்டில் கமலாட்சியம்மா என்பது காத்தம்மாவின் முழுப் பெயர்.

அம்பலப்புழா நீதிமன்றத்தில் பி பரமேஸ்வர பிள்ளை என்ற வழக்கறிஞரின் கீழே பணியாற்றினார். அப்போது கம்யூனிஸ்டுக் கட்சி ஈடுபாடு வந்தது. முற்போக்கு எழுத்தாளர் சங்க ஊழியராக பணியாற்றினார். கேரளத்தில் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை நிறுவி நிலைநாட்டியவர் தகழி.

இவர் கேரள சாகித்ய அக்காதமி என்ற அமைப்பை தலைமை ஏற்று திறம்பட நடத்தியிருக்கிறார்.

இலக்கிய வாழ்க்கை
தகழி தன் 13 ஆம் வயதில் முதல்கதையை எழுதினார். கேசரி பாலகிருஷ்ணபிள்ளை வழியாக முற்போக்கு எழுத்தில் ஈடுபட்ட தகழி யதார்த்தவாத அழகியல் கொண்ட முற்போக்கு படைப்புகளை எழுதினார். அவர் பிறந்த நிலப்பகுதி குட்டநாடு என்று அழைக்கப்பட்டது. அதைப்பற்றி விரிவாக எழுதியமையால் குட்டநாட்டின் இதிகாசக்காரர் என்று அவர் சிறப்பிக்கப்பட்டார்

1934ல் வெளிவந்த தியாகத்தின் விலை என்ற நாவல் அவரது முதல் பெரும் படைப்பாக அமைந்தது. 600 சிறுகதைகளை எழுதினார். வெள்ளப்பொக்கத்தில் என்ற அவரது கதை மிகப்பிரபலமான ஒன்று. 1954ல் வெளிவந்த செம்மீன் அவரது மிகப் புகழ் பெற்ற நாவல். இதை ராமு காரியாட்டு 1965ல் திரைப்படமாக தயாரித்தார். அந்தப் படம் தேசிய விருது பெற்றது. அதற்கு சிவசங்கரப் பிள்ளையே திரைக்கதை எழுதினார். இவரது பெரும்பாலான நாவல்கள் திரைப்படங்களாக வந்தன. இரண்டு இடங்கழி, அனுபவங்ஙள் பாளிச்சகள், அடிமகள், ஏணிப்படிகள் போன்றவை முக்கியமான படங்கள்.

ஏணிப்படி என்ற நாவலுக்காக கேந்திர சாகித்திய அக்காதமி விருது வழங்கப்பட்டது. 1984ம் ஆண்டுக்கான ஞானபீட விருதை கயிறு என்ற நாவலுக்காக பெற்றார்.

தலைமறைவு வாழ்க்கை
விடுதலைப் போராட்ட இயக்கத்திலும் பங்கு பெற்ற இவரது செயல்பாடுகள் அனைத்தும் காவல்துறையினரின் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டன. எனவே திருச்சூர் அருகிலுள்ள “தடக்கன்சேரி” எனும் ஊரில் இவர் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டார்.

நூல்கள்
தோட்டியின் மகன் [தமிழில் சுந்தர ராமசாமி]
செம்மீன் [தமிழில் சுந்தர ராமசாமி]
ஏணிப்படிகள் [தமிழில் சி ஏ பாலன்]
அனுபவங்கள் பளிச்சகள்
ரண்டிடங்கழி [இரண்டுபடி. தமிழில் சி ஏ பாலன்]
கயிறு [தமிழில் சி ஏ பாலன்]
ஔசேப்பின்றே மக்கள்
பலூனுகள்
ஒரு மனுஷ்யன்றே முகம்


Home » Book Reviews » தகழி சிவசங்கரப்பிள்ளையின் ஏணிப்படிகள்
தகழி சிவசங்கரப்பிள்ளையின் ஏணிப்படிகள்
தகழி சிவசங்கரப்பிள்ளையின் ஏணிப்படிகள்
 ஜெயமோகன்  Share on   
கதையில், குறிப்பாக நாவலில் வாசிப்பார்வம் எப்படி உருவாகிறது? அடுத்தது என்ன என்ற ஆவலை தொடர்ச்சியாக அது ஊட்டுவதன் மூலம்தான். அடுத்தது என்ன என்று ஒவ்வொரு தருணத்திலும் தெரிந்திருக்கையில் ஒரு நாவல் நமக்கு எப்படி அர்த்தப்படும்? சமகால வரலாற்று நாவல்களின் சவால் இது. சமகால வரலாற்றில் நாமறியாத தகவல்கள் குறைவு.

அபூர்வமான தகவல்களைப் பெரும்பாலும் கலைப்படைப்புகள் கண்டுபிடிப்பதில்லை. அவை தகவல் சார்ந்த புதுமைகளுக்காக முயல்பவை அல்ல. அறிந்தவற்றின் ஆழங்களையே அவை நாடுகின்றன. அறிந்த விஷயங்கள் மீதான புதிய கோணம், அறிந்த தகவல்களின் புதிய வகை தொகுப்பு ஆகியவை மூலம் ஆர்வத்தையும் கலையனுபவத்தையும் ஊட்டவே அவை முயல்கின்றன.

தமிழின் சமகால வரலாற்று நாவல்கள் எனப் பலவற்றை நாம் சுட்டிக்காட்டலாம். பொன்னீலனின் ‘புதிய தரிசனங்கள்’, கெ. முத்தையாவின் ‘உலைக்களம்‘, ‘விளைநிலம்’, ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’, ‘மண்ணகத்துப் பூந்துளிகள்’, ‘பாதையில் படிந்த அடிகள்’, ‘குறிஞ்சித்தேன்’, ‘வளைக்கரம்’ வாசந்தியின் ‘நிற்க நிழல் வேண்டும்’, ‘மௌனப்புயல்’ முதலியவை உடனடியாக நினைவுக்கு வருபவை.சமகால வரலாற்றை அவை தங்கள் கோணத்தில் ஆராய்ந்து அர்த்தப்படுத்தி அளிக்கின்றன. இன்று நம் வாழ்க்கையில் வரலாறு அரசியலுக்குத்தான் அதிகமும் பயன்படுகிறது. ஆகவே சமகால வரலாற்று நாவல்களில் பெரும்பாலானவை அரசியல் நாவல்களே.

சமகால வரலாற்று நாவல் என்ற வடிவுக்குப் பல பிரச்சினைகள் உண்டு. பண்டைய வரலாறு என்பது கால ஓட்டத்தில் அழுத்திச் சுருக்கப்பட்டு ஒருவகையில் சாராம்சப் படுத்தப்பட்டிருக்கும். உதாரணமாக ராஜராஜசோழனின் வரலாற்றில் அவனுடைய குணாதிசயம், ஆட்சி-முறை, அவன் எதிர்கொண்ட பிரச்சினைகள் ஆகியவை சார்ந்து ‘முக்கியமான’ தகவல்கள் மட்டுமே இன்று கிடைக்கின்றன. பிற, காலத்தில் மட்கிவிட்டன.

ஆனால், எம்.ஜி.ஆரின் வரலாற்றில் உண்மையும் பொய்யும், அவசியமானவையும் அவசியமற்றவையுமாக தகவல் பெருங்குப்பை நம்மீது வந்து மோதுகிறது.பழைய வரலாறு என்பது ஏற்கனவே கதையாக மாறிய ஒன்று. இலக்கியம் அதை மீண்டும் கதையாக்குகிறது. சமகால வரலாறு என்பது தகவல்களின் பெருங்குவியல்
பழைய வரலாறு ஏற்கெனவே சாராம்சப்படுத்தப்பட்டிருப்பதனால் அது சார்ந்து துல்லியமான சில தரப்புகள் கலாச்சார மதிப்பீட்டில் உருவாகியிருக்கும். ராஜராஜனை சிவனருட் செல்வனாகவோ, வேளாள ஆதிக்கத்தின் உச்சப்-புள்ளியாகவோ, தமிழ் மன்னர்களில் தலைசிறந்தவனாகவோ பார்க்கும் மதிப்பீடு தமிழில் உண்டு; அவற்றை ஏற்றோ மறுத்தோ நாம் எழுதலாம். எம்.ஜி.ஆரைப் பற்றிய மதிப்பீடுகள் எண்ணற்றவை, ஆளுக்கு ஆள் மாறுபடுபவை.

கடைசியாக ஒன்று, ராஜராஜனின் வரலாறு இன்று ஐதீகச்சாயல் மிகுந்து உள்ளது. இவ்வைதீகங்கள் அவன் கதைக்கு ஒரு கனவுத்தோரணையைத் தருகின்றன. அவற்றை இன்றைய படைப்பாளி குறியீடாகவோ படிமமாகவோ மாற்றிக்-கொள்ளலாம். பழைய வரலாற்று நாவல்களில் எளிதாக ஒரு கனவுச்சாயல் உருவாகி வருகிறது. அது புனைவை விறுவிறுப்பாக ஆக்குகிறது.

உதாரணமாக ராஜராஜசோழன் சைவத் திருமுறைகளை மீட்டது பற்றிய ஐதீகத்தை கற்பனையால் விரிவுபடுத்திக் கொள்ளலாமெனில் நான் இப்படி எழுதுவேன். சைவத்திருமுறைகளை மீட்கும் பொருட்டு ராஜராஜன் பொன்னாலான சைவக்குரவர்களை உருவாக்கினான். அவை மிக உயர்ந்த, இலட்சிய சிற்ப வடிவில் இருந்தன. அவை அச்சைவக்குரவர்களின் பலதோற்றங்களில் ஒன்று மட்டுமே. அவற்றை கொண்டுபோய் சிதம்பரம் நூல்களஞ்சியத்தைத் திறந்தபோது அவற்றுக்கு ஈடான திருமுறைப் பகுதிகள் மட்டும் வெளிப்போந்தன. பிறகு எளிமையும் கனிவும் கொண்ட ஒரு சிவனடியார் மண்ணில் செய்யப்பட்ட சைவக்குரவர் சிலைகளுடன் வந்தபோது பக்தியில் நெகிழ்ந்துருகிய பாடல்கள் வெளிவந்தன.

ஐதீகங்கள் இவ்வாறு மறுஆக்கம் செய்யப்படுவதனூடாகவே ஒரு சமூகம் மரபை புரிந்து, உள்வாங்கிக்கொள்கிறது. பழைய வரலாறு இவ்வாறு தொடர்ந்து உருமாறுகிறது. ஆனால் சமகாலவரலாறு தகவல்களின் கறாரான இரும்புப்பிடிக்குள் உள்ளது. அதை கற்பனை மீறவே முடியாது. உதாரணமாக எம்.ஜி.ஆருக்கு இரண்டு முகம் உண்டு என்பது தெரிந்ததே. ஒரு குறிப்பிட்டவகை தரிசனத்தை என் படைப்பில் நிலைநாட்டுவதற்காக உண்மையில் எம்.ஜி.ஆர். என்ற ஆளுமை இருமனிதர்கள் சேர்ந்து உருவாக்கியது என்றும் சினிமாவில் தெரியும் எம்.ஜி.ஆர். தம்பி, மேடைகளில் வரும் எம்.ஜி.ஆர். அண்ணா, இருவரும் இதை பிறர் அறியாத ரகசியமாக வைத்திருந்தார்கள் என்றும் ஒரு கதையை நான் எழுதிவிடமுடியாது. அது மிகவும் செயற்கையாகத் தொனிக்கும்.

ஆகவே ஒரு சமகால வரலாற்று நாவல் தகவல்களின் உலகுக்குள்ளேயே, தகவல்களின் மறு வடிவமாக, இயங்கவேண்டியுள்ளது. இந்நிலையில் ஒரு சமகால வரலாற்று நாவலை தோற்கடிக்கும் பல அம்சங்களில் முதன்மையானது நாவலாசிரியன் நாவலில் முன்வைக்கும் தரப்புக்கு ஏற்ப வரலாற்றுத் தகவல்களைக் குறைவாகவோ திரித்தோ தருவதுதான். இதன் மூலம் உண்மையில் உருவாகி வருவது சமகால வரலாற்றின் ‘குறைவுபட்ட’ ஒரு சித்திரிப்புதான்.

உதாரணமாக அவசரநிலைக்காலம் பற்றிய ‘புதிய தரிசனங்கள்’, ‘உலைக்களம்’ இரண்டு நாவல்களுமே மிக்க குறைபட்ட சித்திரத்தையே தருகின்றன. ஒரு காங்கிரஸ்காரனும், கட்சி சார்பில்லாத அன்றைய குடிமகன் ஒருவனும், தங்கள் தரப்பை இதைப்போலவே எழுதினால், அவற்றையும் இந்நாவல்களுடன் இணைத்தால், மட்டுமே அவசர நிலைக் காலகட்டத்-தின் முழுமையான சித்திரம் நமக்குக் கிடைக்கமுடியும்.

இலக்கியம் வரலாற்றை முழுமைப்படுத்துவது என்று நான் நம்புகிறேன். வரலாற்று சித்திரம் தகவல்களினாலும், அத்தகவல்களை பலவாறாக கோக்கும் கண்ணோட்டங்களினாலும் ஆனது. எந்த வரலாற்று நூலிலும் ஒரு கோணம் மட்டுமே இருக்கும். ஆனால் வரலாறு இலக்கியமாகும்போது இவ்வனைத்து கோணங்களும் பிணைந்து உருவாகும் ஒட்டுமொத்தச் சித்திரம் அதில் இருக்கும். ஆனால், அது மட்டும் இருந்தால்கூட அது இலக்கியப் படைப்பு ஆவதில்லை. கூடவே வரலாற்றாய்வில் எது தவறவிடப்-படுகிறதோ அது, மானுடமனம்சார்ந்த ஒரு தளம் என அதை மிகத் தோராயமாக கூறலாம்.

உண்மையில் இலக்கியப் படைப்பில் இருக்கும் வரலாற்றின் மீது மனிதமன ஓட்டங்களை ஏற்றிப்பார்க்கும் கலைஞனின் பார்வையின் விளைவு அது. வரலாற்றின் மீது உள்ளுணர்வுசார்ந்த ஆய்வுமுறை ஒன்றை பிரயோகித்துப் பார்ப்பதன் விளைவு அது. வரலாற்றின் மீது அடிப்படையான மானுட அறம் ஒன்று கலைஞனின் தரப்பாக பரவும்போது ஏடிற்படும் விசேஷ அழுத்தம் அது. தமிழில் எழுதப்பட்ட அத்தனை சமகால வரலாற்று நாவல்களிலும் ஒரு தரப்பு மட்டுமே உணர்ச்சிகரமாக முன்நிறுத்தப்பட்டுள்ளன. ஒரு அரசியல் / வரலாற்று நூல் அளிக்காத உபரியான தரிசனம் எதையும் அவை அளிப்பதுமில்லை.

*

மலையாள எழுத்தாளரான தகழி சிவசங்கரப்பிள்ளை கடல் சார்ந்த நிலப்பகுதியான ஆலப்புழையில் பிறந்து வளர்ந்து அதைப்பற்றி மட்டும் எழுதியவர். அவரை ‘குட்டநாட்டின் வரலாற்றாசிரியன்’ [குட்டநாடு ஆலப்புழாவின் மறுபெயர்] என்பதுண்டு. ஆரம்பகாலம் முதலே தகழி அரசியல் ஈடுபாடு உடையவர். கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராக இருந்தவர், தேடப்பட்டு தலைமறைவாக அலைந்தவர், தேர்தலில் போட்டியிட்டவர். ஆரம்பகாலப் படைப்புகளில் தகழியும் கட்சிசார்பான, சித்தாந்தம் சார்பான கோணத்தில் தன் நாவல்களை எழுதினார் ‘இரண்டு கைப்பிடியளவு’, ‘தோட்டியின் மகன்’, ‘அனுபவங்கள் பிழைகள்’ முதலிய நாவல்கள் இதற்கு உதாரணமாகக் கூடியவை.

இப்போக்கில் முதல் திருப்புமுனையாக அமைந்த நாவல் அவருடைய ‘ஏணிப்படிகள்’. இந்நாவலில் தகழி சித்தாந்தப் பிரச்சாரத்தை விட்டுவிடுகிறார்.மாத்ருபூமி வார இதழில் வெளிவந்து அக்காலகட்டத்தில் மிகப்பரபரப்பான வாசிப்பைப் பெற்றது. சி.ஏ. பாலனின் மொழி பெயர்ப்பில் தேசிய புத்தக நிறுவனத்தால் 1975இல் வெளியிடப்பட்டுள்ளது. மூல ‘ஏணிப்படிகள்’ 1964இல் எழுதப்பட்டது.

‘ஏணிப்படிகள்’ முந்தைய நாவல்களைப் போலன்றி ‘ஒட்டுமொத்த’ சித்திரத்தை உருவாக்க சிரத்தை மேற்கொண்ட ஒரு சமகால வரலாற்று நாவல். ஒருதரப்பை மட்டும் முன்வைப்பது அதன் நோக்கமல்ல. ஒரு குறிப்பிட்ட விஷயத்தை மையமாக்க குவிப்பதும் அதன் இலக்கு அல்ல. சுதந்திரத்திற்கு முந்தைய திருவிதாங்கூர் சமஸ்தான அரசில் சிறிய குமாஸ்தாவாக நுழையும் கேசவபிள்ளை படிப்படியாக அதிகாரத்தின் ‘ஏணிப்படிகளில்’ ஏறி, இறுதியில் சீப் செகரடரி என்ற மிக உயர்ந்த பதவியை அடைவதுதான் இந்நாவலின் ‘கதை’. ஒவ்வொரு படியை ஏறவும் ஏதாவது ஒன்றை உதற வேண்டியுள்ளது. தன் காதலை உதறும் கேசவபிள்ளையின் இளம்பருவ சித்திரத்தில் தொடங்கும் நாவல் தன் அறவுணர்வை முற்றிலும் உதறிவிட்டு அதிகார வர்க்கத்தின் தரகராக நிற்கும் கேசவபிள்ளையின் காட்சியில் முடிகிறது.

இந்தக்கதைநகர்வை யதார்த்தமான நம்பகத்தன்மைக்காகவே மிகுந்த கவனம் எடுத்துக் கொண்டு செதுக்கியிருக்கிறார் தகழி. நாவலெங்கும் அசாதாரணமான நிகழ்ச்சிகள் ஏதுமில்லை. பரபரப்பான நிகழ்ச்சிகள் நடந்தாலும்கூட அவை பரபரப்பாகச் சொல்லப்படவில்லை.வடக்கு திருவிதாங்கூரில் ஒரு கிறாமப்புற விவசாயியின் மகனாக பிறந்து கடுமையாக கஷ்டபட்டு பிஏ படித்த கேசவபிள்ளை வேலைக்காக திருவனந்தபுரம் வருகிறார். சிபாரிசுக்காக யாருமில்லை. தெரிந்தவர்களும் யாருமில்லை. மன்னராட்சியின் நிர்வாக அமைப்பில் ஒரு எல்லையில் ஒட்டிக்கொள்வதுமட்டும்தான் அவரது ஆசை. தலைமைச்செயலர் வீட்டுமுன் பழி கிடக்கிறார். ‘விடாதே, கோபம் உள்லவரானாலும் கனிவும் உள்ளவர்’ என்று வாயில் காவலன் சொல்கிறான்.

கடைசியில் ஒருநாள் தலைமைச்செயலர் காரை நிறுத்தி என்ன என்று கேட்டபோது ”பிஏ படித்திருக்கிறேன்.சாப்பிட வழியில்லை’ என்று கண்ணிருடன் சொல்கிறார் கேசவ பிள்ளை.முதலில் சில தடவை எரிந்துவிழுந்த தலைமைச்செயலர் ஒருநாள் கேசவபிள்ளையை உள்ளே கூப்பிட்டு கீழ்மட்ட குமாஸ்தாவாக நியமனம் செய்கிறார். ஏணிப்படிகளில் கேசவபிள்ளை கால்வைக்கிறார்.

அவரது பக்கத்து சீட் தங்கம்மாவுடையது. மெல்ல பழக்கம் காதலாகிறது. ஆனால் ஊருக்கு கூப்பிடும் அப்பா கேசவபிள்ளைக்கு திருமணம் நிச்சயித்திருப்பதைச் சொல்கிறார். அவரது நண்பரின் மகள் கார்த்தியாயினி என்ற கிராமத்துப் பெண்.கேசவபிள்ளை கொதிக்கிறார், எதிர்த்துப் பேச முடியவில்லை. வழியில் அவரைச் சந்திக்கும் அப்பாவின் நண்பர் கிட்டுமாமா ‘அவள் மிகப்பெரிய அதிர்ஷ்டசாலி. அவளைக் கட்டுகிறவன் பாக்கியவான். ஜாதகத்தை பார்த்தேன்’ என்கிறார். ”ஆனால் இன்னொன்றும் உள்ளது, வாழ்க்கை முழுக்க அவளுக்கு மனநிம்மதி இல்லை” என்றும் சொல்கிறார். கேசவபிள்ளையின் மனதில் அது ஆழப்பதிகிறது.
சிறிய மனப்போராட்டத்துக்குப் பின் கேசவபிள்ளை கார்த்தியாயினியை மணம்செய்ய சம்மதிக்கிறார். அதை தங்கம்மாவிடம் மறைத்து அவளிடமே பணம் கடன் வாங்கி ஊருக்குப்போய் கார்த்தியாயினியை கரம்பிடிக்கிறார். ஏணிப்படிகளுக்காகச் செய்த முதல் துரோகம் அது. இந்த துரோகத்தைச் செய்யும்போது குற்றவுணர்வு அவரை நெடுநாள் வருத்துகிறது. ஆனால் ஆழத்தில் ஊறியுள்ள சுயநலமே வெல்கிறது.

கார்த்தியாயினியும் தங்கம்மாவும் அவரது வாழ்க்கையின் இரு பெண்கள். கார்த்தியாயினிக்கு கணவன் சமையலறை அல்லாமல் வேறு உலகமேயில்லை.தங்கம்மா அந்தரங்கத்தில் மிக ஆவேசமான காமவிருப்புள்ளவள். புயல் போல கேசவ பிள்ளையை அவள் சுழற்றி எடுத்துக் கொள்கிறாள். அவளுடனான அவர் உறவு தொடர்கிறது. தாலிகட்டிய மனைவியை ஊரிலேயே விட்டுவிட்டு திருவனந்தபுரத்தில் தங்கம்மாவுடன் உறவில் இருக்கிறார் கேசவபிள்ளை. கார்த்தியாயினி கண்ணிருடன் ஏக்கத்துடன் காத்திருக்கிறாள். தங்கம்மா ஒருநாள் கேசவபிள்ளையின் காமச்செயல்பாடு போதாமலாகி அவரை உதைத்து துரத்துகிறாள். அவர் ஊருக்குப்போய் கார்த்தியாயினியை காண்கிறார். அப்போதுதான் அவர்கள் கணவன் மனைவியாகிறார்கள்.

தன் நிலத்தை அரசாங்கம் அரசுவேலைக்கு எடுத்துக் கொண்டதன் விலையை பெற அதிகாரத்தின் படிகள் தோறும் அலையும் கோபாலன்நாயர் கேசவபிள்ளையை தேடிவருகிறார். கைக்காசையெல்லாம் லஞ்சமாக்க கொடுத்து தனக்கு உரிமைப்பட்ட அப்பணத்தைப் பெற முயலும் கோபாலபிள்ளையிடம் பதிமூன்று ரூபாயை பேரம்பேசி வாங்கிக் கொள்கிறார் கேசவ பிள்ளை. முதல் லஞ்சம். இது அவரது மனசாட்சியை பாதிக்கும் விதம் இன்னும் சற்று குறைவுதான். காரணம் ஏணிப்படிகளின் அடுத்த படி மட்டுமே அவரது கவனத்தில் உள்ளது.

தலைமைச்செயலகத்துக்கும் திவானுக்குமான அதிகாரப்போட்டியில் ஒருநாள் கறிவேப்பிலை போல தலைமைச்செயலர் தூக்கி வீசப்படுகிறார். தங்கம்மாவின் சித்தப்பா கிருஷ்ணபிள்ளை திவானாகிறார். அவரது மனைவி பகவதிக்குட்டி பேரழகி. திவானின் காரியதரிசி அவளுடைய காதலன். மனைவி மூலமே அதிகார வாசல்களைக் கடந்து கருவறை வரை வந்தவர் கிருஷ்ண பிள்ளை. தங்கம்மாவை வைத்து எப்படியாவது தலைமைச்செயலகத்துக்குச் செல்லும்படி பியூன் மாதேவன் பிள்ளை உபதேசம் செய்கிறார். ” பெரிய ஆளாகும்போது எங்களை மறக்கக் கூடாது” என்கிறார். கேசவபிள்ளை புன்னகைச் எய்வதுடன் சரி.

தங்கம்மாவின் பெற்றோர் அவளுடைய எதிர்காலக் கணவனாகவே கேசவபிள்¨ளையை எண்ணி அவருக்காக சிபாரிசு செய்கிறார்கள். கேசவபிள்ளை ஏணிப்படிகளின் அடுத்த படியை எட்டுகிறார். அவருடன் படித்து அவருக்கே சூபரிண்டெண்டாக வந்து அவரை முன்பின் தெரியாதவர் போல நடத்தும் [தனிப்பட்ட மூறையில் இவ்வனுபவம் எனக்கும் அலுவலக வாழ்வில் உண்டு.] ராமச்சந்திர பிள்ளையை தன்னைத்தேடிவரச்செய்து ‘ ஒன்றுமில்லாவிட்டாலும் நானும் நீயும் கல்லூரித்தோழர்கள்!’என்று சொல்லவைக்கிறார் கேசவபிள்ளை. அதிகாரத்தின் முதல் சுவை!

மெல்லமெல்ல அதிகாரத்தின் போதை கேசவபிள்ளையின் பேச்சை பார்வையை மாற்றுகிறது. அவரை உதறும் தங்கம்மா ராமச்சந்திரபிள்ளையின் காதலியாகிறாள்.அத்தகவலை வந்து சொல்லும் முன்னாள் சக ஊழியர் கோவிந்தன் நாயர் கேசவபிள்ளை அதிர்ச்சி அடைவதில்லை என்று காண்கிறார். அத்தகவலை எவரிடமும் சொல்லக்குட்டாது என்று சொல்லும் கேசவபிள்ளை உடன்பட மறுக்கும் அவரிடம் ; ”அண்ணனுக்கு மோட்டுக்குடிக்கு டிரான்ஸ்பருக்கு நேரமாயிட்டுது போல் இருக்கே ” என்று மிரட்டும் கேசவபிள்ளையில் மாரிய விஷமுகத்தை கோவிந்தன் நாயர் காண்கிறார். முதல் மிரட்டல்!

அதன் பின் அதிகாரத்தின் படிகளில் வேகமாக ஏறுகிறார்கேசவபிள்ளை. திவான் தலைமைச்செயலர் மேல் கோபமாக இருக்கிறார். அவர் காங்கிரஸ் மீது அனுதாபம் கொண்டவரோ என திவானுக்கு சந்தேகம். காங்கிரஸை கடுமையாக ஒடுக்கும்படியும் காங்கிரஸின் முக்கிய தலைகளை லஞ்சம் மூலமும் ஆசைகாட்டியும் அடக்கும்படியும் கேசவபிள்ளை தலைமைச் செயலருக்கு ஆலோசனை சொல்லி வழிமுறைகளும் வகுத்துக் கொடுக்கிறார். அதை திவானிடம் தலைமைச்செயலர் சொல்லியதனால் திவானுக்கு கேசவபிள்ளை மேல் நல்லெண்ணம் வருகிறது. முதல் சதி!

தலைமைச்செயலரின் கைத்தடியாக மாறி காங்கிரஸை உடைத்து தோட்டமுதலாளிகளின் உதவியுடன் திருவிதாங்கூர் காங்கிரஸ் என்ற போட்டி அமைப்பை உருவாக்கி காங்கிரஸை பலமிழக்கச் செய்கிறார். ஈழவ,நாயர் சாதிக்கட்சிகளை திவானுக்கு ஆதரவாகத் திரட்டுகிறார். மெல்லமெல்ல அதிகாரம் மிக்கவராகிறார். கூடவே ஊழலால் சம்பாதிக்கிறார். ராமச்சந்திர பிள்ளையால் கைவிடப்பட்டு தன்னிடம் மீளும் தங்கம்மாவை வைப்பாட்டியாக வைத்து பங்களா கட்டிக்கொடுக்கிறார்.

காங்கிரசை உடைத்து காங்கிரஸ் ஆதரவுக் கூட்டங்களை குழப்பி மக்களை அடித்து சிறையில் இட்டு வதைத்துஅரசு வன்முறையின் சூத்ர தாரியாக விளங்கும் கேசவபிள்ளை மக்கள் விரோதியாக அடையாளம் கானப்படுகிறார். அவரது சொந்த ஊரிலேயே ‘கேசவபிள்ளையை தூக்கில் போடு! ஊழல் சொத்துக்களை ஜப்தி செய் !’ என்ற கோஷம் எழுகிறது. ”ஊரார் சாபம் ஏற்கவா உன்னை படிக்கவைத்தேன்” என்று மனம் புழுங்கும் தந்தையையும் தாயையும் தன் முன்னேற்றத்துக்குத் தடையானவர்கள் என்று வசைபாடுகிறார் கேசவபிள்ளை.

தலைமைச்செயலரின் சூபரிண்டெண்ட் ஆகிறார் கேசவபிள்லை. பின்னர் செயலர் ஆகிறார். ஏணிப்படிகளில் வேகமாக ஏற ஆரம்பித்துவிட்டார். கோபாலன் நாயர் கேசவபிள்ளையின் வீட்டு முன்னாலேயே தூக்கில் தொங்கி இறக்கிறார். நிலத்தை அரசு எடுத்துக் கொண்ட பணத்தைப் பெறும் முயற்சியில் அவரது வீடும் இல்லாமலாகிறது. வெறும் காகிதக்கற்றைகளை தன் மகன் முகுந்தனுக்கு அளித்துவிட்டு வாழ்க்கையைமுடித்துக் கொள்கிறார். அந்த நிகழ்ச்சி கேசவபள்ளையின் ஆழத்தில் இனம்புரியா அச்சமொன்றை நிறைக்கிறது.

ஆனால் அந்த அச்சம் அவரை மேலும் மூர்க்கமாக ஆக்குகிறது. அன்று தன் பங்களா முன் காவல் நின்ற காவலர் குடும்பங்களை வேலைநீக்கம் செய்கிறார். எங்கள் குடும்பங்கள் நிர்க்கதியாகும் என்று அவர்கள் புலம்புகையில் அவர் உதாசீனம் செய்கிறார். அநீதியை அநீதியாலேயே மூடி மறைக்கும் அதிகார மமதை.

ஒரு தருணத்தில் திவானின் கருணையால் கேசவபிள்ளை சட்டென்று தலைமைச்செயலர் ஆகிவிடுகிறார். ஏணிப்படிகளின் உச்சம். கிளப்புகளுக்குச் செல்கிறார். பெரியமனிதர்களுடன் அமர்ந்து குடிக்கிறார். ஆனால் மனைவியை ஊரிலேயே விட்டிருக்கிறார் கேசவபிள்ளை. திருவனந்தபுரத்தில் அதிகாரத்தின் படிகளில் கீழே இருப்பவனின் மனைவியை மேலே இருப்பவன் சுகிப்பதென்பது ஒரு கேளிக்கை மட்டுமல்ல, ஒரு அதிகார உத்தியாகவே உள்ளதென அவர் அறிவார்.

ஊரில் அன்னியப்பட்டு மனம் வருந்தி வாழ்கிறார்கள் கேசவபிள்ளையின் பெற்றோர். கோபாலன் நாயரின் மகன் முகுந்தனால் கேசவபிள்ளையின் தந்தை கொல்லப்படுகிறார். அந்த நிகழ்ச்சியையும் தன் முன்னேற்றத்துக்காக பயன்படுத்த கேசவ பிள்ளையால் முடிகிறது.

சுதந்திரம் நெருங்கி வருகிறது. திவானுடன் சேந்துகொண்டு தனி திருவிதாங்கூருக்காக முயல்கிறார் கேசவபிள்ளை. ஆனால் உள்ளூர அச்சம் வாட்டி வதைக்கிறது. காங்கிரஸ் பதவிக்கு வருவது உறுதி. வந்தால் என்ன ஆகும்? தூக்கில் போடுவார்களா? சொத்துக்களை பறிப்பார்களா? மனைவியடம் சொல்ல முடியாமல் உள்ளுரப் புழுங்குகிறார்.

ஆனால் சுதந்திரம் கிடைத்து திருவிதாங்கூர் இந்திய யூனியனுடன் சேரும்போது சுதந்திரநாளைக் கொண்டாடும் பொறுப்பே அவருக்குத்தான் வருகிறது. அவரால் நம்பவே முடியவில்லை. காங்கிரஸ் தலைவர்கள் அவரை நேரில் கண்டபோது கைகூப்பி பணிந்து நின்றார்கள். அவர் அவ்வழியாகசெல்லும்போது சாதாரண கிளார்க்குகளைப்போல பாய்ந்து எழுந்து நின்றார்கள். அவர்கள் வெறும்மேடைப் பேச்சு வீரர்கள் என அவர் அறிகிறார். மனைவியிடம் சொல்லிச் சொல்லிச் சிரிக்கிறார்.

அவருக்கு வியப்பு. நீண்டகாலமாகவே தெய்வமாக வணங்கிவந்த மன்னரை வெறுத்து இந்த வாய்வீரர்களை எப்படி மக்கள் நம்பி நாட்டையே ஒப்படைக்கிறார்கள்? காரணம் பிரிட்டிஷ் ஆட்சிமேலான வெறுப்புதான். ஆனால் ஆட்சியைப்பிடித்த காங்கிரஸ்காரர்களுக்கு ஆளத்தெரியவில்லை. அல்லது ஆட்சி செய்வது எபப்டி என்ற மலைப்பு. அவர்கள் எவருமே அதிகாரத்தை கையாண்டவர்கள் அல்ல. மேலும் பிரிட்டிஷ்-மன்னர் கால நிர்வாக அமைப்பு மேல் அவர்களுக்கு உள்ளூர மரியாதை. அது அப்படியே நிலைநிற்கவேண்டுமென அவர்கள் நினைக்கிறார்கள்.

ஒவ்வொருவருக்கும் சொந்த நலன்கள் உள்ளன. மலைக்குத்தகை, நிலக்குத்தகை என. அதற்கு உதவக்கூடிய அமைப்பு தேவை அவர்களுக்கு. ஏற்கனவே இருந்த அமைப்பு அவ்வாறு ஊழல்களை பாதுகாக்க, ஊழலுக்கு உதவ நாநூறுவருடம் பயிற்சி எடுத்த அமைப்பு. அவர் மன்னராட்சியில் திவானுக்குச் செய்த அதே செயல்களை அப்படியே இப்போது மந்திரிகளுக்குச் செய்ய வேண்டும் என கேசவபிள்ளை கண்டுகொள்கிறார்.

கேசவபிள்ளை கதர் உடுத்து தேசவிடுதலைக் கொண்டாட்டங்களை கொண்டாடுகிறார். அதிகார அமைப்பு என்பது ஓர் இயந்திரம். அது பாரபட்சமற்றது. நேற்று அவர்களுக்காக உழைத்தோம் இனி உங்களுக்காக. இதை பலமாக வைக்காவிட்டால் நாடு சிதறிப்போகும் என்கிறார் காங்கிரச்காரர்களிடம். அதை ஆமோதிக்கிறது காங்கிரஸ். வலிமையான அரசு இல்லாவிட்டால் ஜனநாயகமே இல்லை என்ற முரணியக்கத்தை அவர்களை நம்பவைக்கிறார்.

கேசவபிள்ளைக்கு உதவியாக வந்துசேர்கிறது கைதாகி சிறையில் இருக்கும் சுதந்திரப்போராட்ட வீரர்களை விடுதலைசெய்யும் பிரச்சினை. ஒட்டுமொத்தமாக விடுதலை செய்தால் நாட்டுமக்களுக்கு சட்டத்தின் ஆட்சி மீதான நம்பிக்கை சிதறிப்போகும் எகிறார் கேசவபிள்ளை. மேலும் உண்மையான குற்றவாளிகளும் ஊடே தப்பித்துவிடக்கூடும். ஆகவே தனித்தனியாக அவர்களின் சொந்தக்காரர்கள் தலைமைச்செயலருக்கு விண்ணப்பிக்கட்டும், அவற்றை பரிசீலனைசெய்வோம் என்கிறார். அப்படியாக காங்கிரஸ் தியாகிகள் சுதந்திர அரசில் தலைமைச்செயலரின் கருணைக்காக காத்து நிற்கும் நிலை ஏற்படுகிறது.

சுதந்திரத்துக்குப் பின் வந்த முதல் தேர்தலில் தீவிரகாங்கிரஸ்காரர்களின் அமைப்பு அதிகாரமேற்கலாகாது என மிதவாத கோஷ்டி விரும்புகிறது. கம்யூனிஸ்டுகள் பற்றிய அச்சமும் அவர்களுக்கு இருக்கிறது. கேசவபிள்ளை ‘குடுமப பாரம்பரியமும் கௌரவமும்’ உள்ளவர்களுக்கு இடம் கொடுங்கள். போராடுவதற்கு பஞ்சைப்பராரிகள் வேண்டும்தான், அவர்கள் நாடாள முடியாது. ஆண்டால் எல்லாம் கெட்டுப்போகும் என்கிறார். ‘புலையனும் பறையனும் வந்து என்ன செய்யப்போகிறார்கள்?’ என்கிறார். அது காங்கிரசுக்கும் ஏற்புடையதாகிறது.

திருவிதாங்கூர் காங்கிரஸையும் சாதிக்கட்சிகளையும் சேர்த்துக்கொண்டு தீவிரவாத கும்பலை வெல்லுங்கள் என்று அறிவுரை சொல்கிறார் கேசவபிள்ளை. ஒவ்வொரு ஊரிலும் தேர்தலை நடத்த பணபலமும் ஆள்பலமும் உள்ள ஆட்களை கட்சியில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்கிறார். விளைவாக நேற்றுவரை பிரிட்டிஷ்- மன்னராட்சியின் தரககர்களாக இருந்த அதே கும்பல் காங்கிரஸில் சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டு அதிகாரத்தைபிடிக்கிறது. ஆட்சி மாறியது. ஆனால் கேசவபிள்ளை மாறவில்லை!

கார்த்தியாயினி அவருக்காக கண்ணிர் வடிக்கிறாள் அவரது சதிகளும் வெற்றிகளும் அவளுக்குச் சரியாகத்தெரியவில்லை. அவரது அப்பா ஊரார் திரும்பிப்பார்க்காமல் அனாதைப்பிணமாக செத்ததை அவள் கண்டாள். அவளுடைய தோழிகளே அரசால் அடித்து வதைக்கப்பட்டதைக் கண்டாள். அரசு என்பது ஒரு பெரும்பாவச்செயல் என அவள் உணர்ந்தாள். கேசவபிள்ளை தன் மகளுக்கு ஓர் அரசு ஊழியனைதேடியபோது அவள் அதை மூர்க்கமாக எதிர்த்து ஒரு விவசாயியே போதும் அரசூழியர்களுக்கு நீதியும் நேர்மையும் இல்லை என்கிறாள்.வாழ்நாள்முழுக்க நான் பட்ட கஷ்டங்கள் அவளுக்கு வேண்டாம் என்கிறாள்.

தீவிர காங்கிரஸ் கோஷ்டி கம்யூனிஸ்டுகளாகிறார்கள். கம்யூனிஸ்டு கிளர்ச்சி வலுக்கிறது. காங்கிரசாக வேடம்பூண்ட நிலப்பிரபுத்துவ- புது முதலாளித்துவ கும்பல் அஞ்சுகிரது. திவானுக்குசெய்த அதே சேவையை கேசவபிள்ளை காங்கிரஸ்காரர்களுக்காகவும் செய்ய நேர்கிறது. வெளிஎதிரிகளான கம்யூனிஸ்டுகளை வேட்டையாடுகிறார். உள் எதிரிகளை அழிக்க சதிவகுத்து அளிக்கிறார், வியூகங்கள் அமைக்கிறார். அரசே அவர் கையில்தான் இருக்கிறது. தனிப்பட்ட சிக்கல்களுக்குக் கூட அவரே ஆலோசனை சொல்கிறார்.

கம்யூனிஸ்டுகள் அடக்குமுறையை மீறி பலம்பெறுகிறார்கள். தேர்தலில் வென்று ஆட்சியைப்பிடிக்கிறார்கள். தலைமைச்செயலராக ஒரு மேனன் வருகிறார். கேசவபிள்ளை அவமானகரமாக தூக்கிவீசப்படுகிறார். ஒரு மேனன் முதல் கேசவபிள்ளையின் அரசுப்பணி தொடங்குகிறது, இன்னொரு மேனனில் முடிகிறது. அந்த மேனனும் குணாதிசயத்தில் இன்னொரு கேசவபிள்¨ளையேதான் என நாவல் காட்டுகிறது.

புதிய ஆட்சி, புதிய தியாகிகள், புதிய தலைவர்கள். ஆனால் அதிகார அமைப்பு அதுவேதான். கம்யூனிஸ்டுகள் நடத்திய புன்னப்புரா வயலார் போராடத்தில் திவானின் பட்டாளத்தை கூட்டிக்கொண்டு வீடுவீடாகப்போய் மனிதவேட்டை ஆடிய அதே முதலாளிகள் கட்சிக்குள் கூட்டணிக்காரர்களாக வந்து அதிகாரத்தை அடைகிறார்கள். அடிபட்டு ரத்தம் கக்கிய தியாகிகள் மறக்கப்படுகிறார்கள்.

அரை எக்கர் நிலம் கிடைக்கும் என்று அரசாங்கத்திடம் மனுபோட்டு தேசப்போராட்டத் தியாகி சங்கரப்பிள்ளையும் சரி, கைதான மகனை விடுவிக்கக் கோரி தலைமைச்செயலகத்திற்கு அலையும் புன்னப்ர வயலார் தியாகி கிருஷ்ணனும் சரி ஒரே இடத்தில்தான் இருக்கிறார்கள். கிளார்க் ஒருவன் தெளிவாகவே சொல்லிவிடுகிறான். ”எது மாறினாலும் அதிகாரம் மாறாது. இன்று நாங்கள் கம்யூனிஸ்டுகளுக்கு கப்பம் கொடுக்கவேண்டியுள்ளது. மக்கள் எங்களுக்கு லஞ்சம் கொடுத்தேயாகவேண்டும்”.

இரு தியாகிகளும் சேர்ந்தே தலைமைச்செயலகம் முன் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். அலட்சியம்செய்யப்பட்டு தற்கொலை செய்துகொண்டு இறக்கிறார்கள். மன்னராட்சியில் ஒருவர் இறந்த அன்றுதான் தலைமைச் செயலகத்தில் கேசவபிள்ளை பதவி ஏற்றார். இவர்கள் இறந்த அன்று அவர் வெளியேறினார். மூன்று அதிகார வற்கம் மாறி வந்துவிட்டது, அதிகார அமைப்பில் எதுவுமே மாறவில்லை.

கேசவபிள்ளையின் மகள் ஒரு கம்யூனிஸ்டைக் காதலிக்கிறாள். அதை கார்த்தியாயினி ஆதரிக்கிறாள். இறந்த தங்கம்மாவில் கேசவபிள்ளைக்குப் பிறந்த குழந்தையுடன் அவர்கள் திருவனந்தபுரம் விட்டு வெளியேறும்போது நாவல் முடிகிறது.

*

இந்தக் கதை வழியாக தகழி சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும் கேரள [இந்திய] அதிகார அமைப்பில் ஏற்பட்ட மேலோட்டமான மாற்றங்களையும் மாறாத அடிப்படைக் கட்டுமானத்தையும் விரிவாகச் சித்திரிக்கிறார். எல்லா இலட்சியவாதங்களும் ஏதோ ஒரு இடத்தில் அதிகாரத்திடம் சமரசம் செய்துகொண்டு அதன் பகுதியாக ஆகி, மேலும் அதிகாரம் செலுத்த ஆரம்பித்துவிடுகின்றன. சமரசம் செய்யவே முடியாத தியாகி சங்கரப்பிள்ளையைப் போன்றவர்கள் முழுமையான தோல்விக்கு ஆளாகிறார்கள்.
சுதந்திரம் கிடைக்கிறது, காங்கிரஸ் பதவி ஏற்கிறது, அதிகாரப்போட்டியில் மந்திரிசபைகள் கவிழ்கின்றன. கம்யூனிஸ்ட் ஆட்சி வருகிறது. எதுவும் அடிப்படையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை. அரசியல் என்பது துயரப்படும் மக்களுக்கு விடிவுகாலம் வருகிறது என்று சொல்லி போதையூட்டும் ஒரு மாயமாக, ஒரு வகைக் கேளிக்கையாக மட்டுமே உள்ளது என்கிறது இந்நாவல்.

அப்படியானால் அதிகாரத்தை, அடிப்படையான அறக்கோட்பாடுகளை மாற்றியமைப்பது எது? அது நாவலில் ஒருவகையில் சுட்டப்படுகிறது. இந்த நீண்ட காலஓட்டத்தில் அதிகார சுமையும், அற அடிப்படைகளும் வேறு ஒரு விதத்தில் கண்ணுக்குத் தெரியாமல் மாறியபடிதான் உள்ளன. தொடர்ச்சியான மக்கள் போராட்டம் நிகழ்ந்தபடியேதான் உள்ளது. அது பலவற்றை இழந்தாலும் பலவற்றை அடையவும் செய்கிறது. ஒரு பொதுப்பார்வையில் அரசரின் ஆட்சியும் கம்யூனிஸ்டு ஆட்சியும் ஒன்றுதான் என்றுபடலாம். ஆனால் அது உண்மையல்ல. மக்களின் குரல் ஓங்கியிருக்கிறது. சுததிர உணர்வும் உரிமையுணர்வும் உருவாகியுள்ளன. மாற்றங்கள் இப்படித்தான் வர முடியும். நுட்பமாக, கண்னுக்குத்தெரியாமல். மற்றபடி மனித இயல்பில் புரட்சிகர மாறுதல்கள் ஏதும் நிகழ்வதற்கு வாய்ப்பில்லை என்று தகழியின் முதிர்ந்த லௌகீக விவெகம் நாவலில் பேசுகிறது.

வரலாறெங்கும் மனிதனின் திருப்தியற்ற தேடல்தான் புதியவற்றை கண்டடைகிறது, கைப்பற்றுகிறது. ஒன்றை அடைந்ததுமே இன்னொன்றுக்கான தேடல் தொடங்குகிறது.தியாகி சங்கரப்பிள்ளை தோற்றாரென்றால் கேசவபிள்ளைகூடத்தான் வேறு ஒரு விதத்தில் பூரணமான தோல்வியை அடைந்தார் என்று நாவலின் இறுதியில் ஒரு மனபிம்பம் ஏற்படுவது உண்மை.

தகவல்களைக் கறாராக்க கடைப்பிடித்து, பத்திரிகை அறிக்கைகளின் தெளிவுடன், நேரடியாக கதை சொல்கிறார் தகழி. ஆர்வப்படுத்துவதோ, விறுவிறுப்பூட்டுவதோ அவரது இயல்பல்ல. நம்பகத்தன்மையே அவருடைய குறி. நிதானமாக வலைபோல விரிந்து பரந்து செல்கிறது நாவல். தொடர்கதை வாசித்துப் பழகியவர்களுக்கு இந்த சாதாரணத்தன்மையும் நிதானமும் சலிப்பூட்டக்கூடும். சலிப்பும் அலுப்பும் சிறிதளவேனும் ஊட்டாத பெரும் நாவல் ஏதும் உலக இலக்கிய வரலாற்றில் இல்லை என்பதே இதற்குப் பதிலாக அமையமுடியும்.

அதேசமயம் நுட்பங்களை ரசிப்பவர்களுக்கு, வேகத்தை உதாசினம் செய்பவர்களாக அவர்கள் இருந்தால், இப்படைப்பு தொடர்ந்து தீனி போட்டபடியே செல்லும். மன உணர்வுகளை தகழி எப்போதும் ஊசிமுனையால் தொட்டு எடுக்கிறார். காம உறவின் பல்வேறு சூட்சுமமான சுருதிபேதங்களை மிக மிக யதார்த்தமான குரலில் தொட்டுக் காட்டுகிறார்.

உதாரணமாக கேசவபிள்ளை கார்த்தியாயினியைக் கல்யாணம்செய்துகொள்ளும் இடம். அவர்களுக்குள் உறவு மெல்லமெல்ல உருவாகும் விதம். கார்த்தியாயினியின் உடலெங்கும் வியர்வை அழுக்கு. சரியாக்க குளிக்கவே அவளுக்குத்தெரியவைல்லை. ஆனால் அவர் அதில் ஒரு விருப்பத்தை மெல்ல கண்டடைகிறார். அவருள் உறையும் விவசாயியால் விரும்பப்படுபவள் அவள். அவருள் எஞ்சும் ஒரே மனசாட்சியின் அம்சம். ஆனால் அவருள் உறையும் தலைமைச்செயலரின் காதலிதான் தங்கம்மா.

‘தங்கம்மா’ மிதமிஞ்சிய சுதந்திர இச்சை உடையவள், மீறலில் தன்னை அடையாளம் காண்பவள். ஆனால், ஒரு இடத்தில் தன் துடிப்புகளுக்குப் பின்னணியாக வலுவான ஓர் ஆளுமையால் தான் கட்டுப்படுத்தப்படவேண்டும் என்ற விழைவும் இருந்ததை அவளே கூறுகிறாள். இந்த விசித்திரமும் நுட்பமும் கூடிய மனஇயக்கத்தை நாவல் முழுக்க தகழி மிகுந்த நம்பகத் தன்மையுடன் கூறிச் செல்வது கவனத்தைக் கவர்வதாகும்.

நாவலில் ஒருவகை மனசாட்சியின் குரலாக கருதப்படும் கார்தியயினிக்கேகூட அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதும் சொத்துசேர்ப்பதும் தவறென படவில்லை. அது இயல்பான ஒன்றாக அதிகாரச்செயல்பாட்டின் ஒருபகுதியாகமட்டுமே தெரிகிறது. மக்கள் மீதான வன்முறையை மட்டுமே அவள் எதிர்க்கிறாள். இது நம் நாட்டுப்புறமக்களின் இயல்பு. காரணம் பலநூற்றாண்டாக அதிகார அமைப்பு இப்படித்தான் செயல்பட்டுவருகிறதென அவர்கள் அறிவார்கள்.

வரலாற்றை எடுத்துப் பார்த்தால் லஞ்ச ஊழல் என்பவை குற்றம் என்பதெல்லாம் மேலைநாட்டு ஜனநாயகக் கோட்பாடுகளால் இங்கு கொண்டுவரப்பட்ட லட்சியங்கள் மட்டுமே. மன்னராட்சியிலும் சரி அதைத்தொடர்ந்த பிரிட்டிஷ் ஆட்சியிலும் சரி ஊழல் பாரபட்சம் இரண்டும் ஆட்சிமுறையாகவே இருந்தது. சுதந்திரத்துக்குப் பின்வந்த நம் அரசியல்வாதிகளால்தான் எல்லாம் கெட்டுப்போயிற்று என்பவர்கள் இந்நாவல் காட்டும் சித்திரத்தைக் கண்டு அதிரக்கூடும்.

உலக இலக்கியத்தில் ‘தல்ஸ்தோய்த்தன்மை’ என்ற ஒன்று உண்டு. ‘விரிவு, நுட்பம், முழுமை, சமநிலைத்தன்மை’ ஆகியவை கைகூடியவை அத்தன்மை கொண்ட படைப்புகள். அத்தகைய படைப்புகளுக்குத் தமிழ் உதாரணம் சமீபகாலம்வரை இல்லை. ‘ஏணிப்படிகள்’ அத்தகையது. ஒரு சமகால வரலாற்று நாவலின் சிறப்பான முன்னுதாரணமாக ஏணிப்படிகளைக் கூறலாம்.

இந்நாவலின் பலவீனம் என்று உடனடியான பார்வைக்குப் படுவது பெரிய ஆன்மிக, அறநெருக்கடிகள் ஏதும் நாவலுக்குள் நிகழவேயில்லை என்பதே. ஆனால், ஏதும் நிகழாது என்பதுதான் முன்கூட்டியே ஆசிரியருக்கு, தெரிந்த, அவர் கூற விரும்புகிற ஒன்றாக உள்ளது. ஒரு ஒட்டுமொத்த சித்திரம்தவிர இது வேறு எதுவுமே அல்ல என்பதே இதன் பலம், பலவீனம்.

ஏணிப்படிகளின் அதே உலகை விவரிக்கும் நாவல் ஒன்று மலையாளத்தில் உள்ளது, தமிழரான மலையாற்றூர் ராமகிருஷ்ணன் எழுதிய ‘யந்திரம்’. இந்திய ஆட்சிப்பணியில் நுழையும் ஒர் இளைஞனின் அகநெருக்கடியையும் வீழ்ச்சியையும் சொல்வது அந்நாவல். அதை ஏணிப்படிகளின் அடுத்த பகுதி என்று சொல்லலாம். சுதந்திர இந்தியாவில் ஐம்பதுவருடங்களில் ஆட்சியில் எதுவுமே மாறவில்லை, கேசவபிள்ளைகளுக்கு அழிவேயில்லை என்பதற்கான சான்று அந்நாவல்.

(நன்றி: ஜெயமோகன்)

செம்மீன்(மலையாளம்: ചെമ്മീൻ) என்பது தகழி சிவசங்கரப் பிள்ளை 1956-ல் எழுதிய ஒரு மலையாள புதினம் ஆகும். இது இந்து மத மீனவனின் மகள் கருத்தம்மைக்கும் ஒரு முஸ்லிம் மொத்த மீன் வியாபாரியின் மகன் பரீக்குட்டிக்கும் இடையேயான காதலைப் பற்றிய கதையாகும்.[1]. இதன் மையக்கருவானது தென்னிந்தியாவின் கேரள மாநிலத்தின் கடலோரத்தில் வசிக்கக்கூடிய மீனவ சமுதாய மக்களின் இடையே உள்ள நம்பிக்கை பற்றியது. அந்த நம்பிக்கையானது கற்பு பற்றியது அதாவது மனைவி ஒருவர் இறைமறுப்பு கொண்டவராக இருந்தால் அவருடைய கணவன் கடலுக்குச் சென்றால் கடல் தெய்வம் (கடல் அன்னை மற்றும் கடலம்மா எனவும் கூறுவர்) அவரை விழுங்கிவிடும் என்பதாகும். இந்த நம்பிக்கையை தொடர்ந்து நிலைநிறுத்தச் செய்யும் வகையிலேயே தகழி சிவசங்கரப் பிள்ளை இந்தப் புதினத்தை எழுதியிருப்பார். இந்தப் பெயரிலேயே இது திரைப்படமாகவும் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது.

இந்தப் புதினத்தில் மீனவ மக்களின் வாழ்வியலை உணர்ச்சிப்பூர்வமாக விளக்கியுள்ளார். இவர்களின் வாழ்வியலானது நீதிக்கதைகளின் தரத்தில் அமைந்துள்ளது. மீனவ சமுதாய மக்களின் பழக்க வழக்கங்கள் , விலக்குகள் (செய்யக் கூடாதவைகளாக அவர்கள் கருதுவது), நம்பிக்கைகள், சடங்குகள் மற்றும் அவர்களின் அன்றாட தொழில் நிகழ்வுகள், அவர்களின் வலிகள் ஆகிய அனைத்தும் இயல்பு மாறாமல் தகழி அவர்களின் அற்புதமான எழுத்துக்களால் அறிய முடிகிறது.

இந்திய இலக்கியத்தின் இரண்டாவது பெரிய விருதாகக் கருதப்படும் சாகித்திய அகாதமி விருது விருதினை செம்மீன் புதினம் 1957 இல் பெற்றது.


கதைச் சுருக்கம்
செம்பன்குஞ்சு என்பவர் ஒரு மீனவர். அவருக்கு சொந்தமாக ஒரு படகையும் ,மீன்பிடி வலை வாங்க வேண்டும் என்பதையே வாழ்க்கையின் ஒரே நோக்கமாகக் கொண்டுள்ளார். இதனை ஒரு முஸ்லீம் மீன் மொத்தவியாபாரியின் மகனான பரீக்குட்டியின் உதவியுடன் நிறைவேற்றுகிறார். ஆனால் பரீக்குட்டி ஒரு நிபந்தனை விதிக்கிறார். அது செம்மன் குஞ்சுவிற்குக் கிடைக்கும் மீன்கள் அனைத்தையும் தன்னிடமே விற்க வேண்டும் என்பதாகும். செம்பன்குஞ்சுவிற்கு அழகான ஒரு மகள் இருக்கிறார். அவருடைய பெயர் கருத்தம்மா. கருத்தம்மாவிற்கும் பரீக்குட்டிக்கும் இடையே காதல் மலருகிறது. இதனைத் தெரிந்துகொண்ட கருத்தம்மாவின் தாய் சக்கி, அவருடைய சமுதாயக் கட்டுப்பாடுகளுக்கு எதிரானது என எச்சரிக்கை செய்கிறார். கருத்தம்மா , பரீக்குட்டிக்காக தனது காதலை தியாகம் செய்கிறார். பின் பழனி என்ற ஆதரவற்றோரை திருமணம் செய்கிறார். பின் கனவருடன் அவருடைய ஊருக்குச் செல்கிறார். சென்பன்குஞ்சு மற்றுமொரு படகு, வலையை வாங்குகிறான். அதன்பின் பேராசைக்காரனாகவும், இதயமற்றவனாகவும் ஆகின்றான். பரீக்குட்டியிடம் வாங்கிய கடனையும் திருப்பிச் செலுத்த மறுக்கிறான். சக்கி இறந்த பிறகு பாப்பிகுஞ்சு என்ற பெண்ணை மறுமணம் செய்கிறார் செம்பன்குஞ்சு. தனது தந்தை மறுமணம் செய்ததை அறிந்து தனது சகோதரி பஞ்சமியின் வீட்டிற்குச் செல்கிறார் கருத்தம்மா. அதேசமயம் கருத்தம்மா ஒரு நல்ல மனைவியாகவும், தாயாகவும் நடந்துகொள்கிறார். ஆனால் பரீக்குட்டியுடன் இருந்த காதலை அந்த ஊர் மக்கள் பழனியிடம் தவறாக எடுத்துக் கூறுகின்றனர். பழனியின் நன்பர்கள் இதனைக் காரனம் காட்டி அவரைத் தங்களுடன் மீன்பிடிக்க அழைத்துச்செல்வதில் இருந்து விலக்கி வைக்கின்றனர். பின் ஒருநாள் இரவில் பரீக்குட்டியும் கருத்தம்மாவும் சந்திக்கின்றனர். அந்தச் சந்திப்பின் போது அவர்களின் பழைய காதல்மீன்டும் துளிர்க்கிறது. பழனியின் வலையில் ஒரு பெரிய சுறா சிக்குகிறது அப்போது ஒரு பெரிய நீர்ச்சுழி அவனை விழுங்குகிறது. அடுத்த நாள் காலையில் கடற்கரை ஓரத்தில் கருத்தம்மாவும் பழனியும் கைகோர்த்தபடி இறந்து கிடக்கின்றனர்.

மொழிபெயர்ப்பு

செம்மீன் தமிழில்
செம்மீன் புதினம் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து ஆங்கிலம், உருசிய மொழி, இத்தாலிய மொழி, பிரெஞ்சு மொழி, அரபு மொழி போன்ற பல இந்திய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. [2]. தமிழில் எழுத்தாளர் சுந்தர ராமசாமி இந்நூலை மொழிபெயர்த்துள்ளார்.[3]

ஆங்கில மொழியில் செம்மீன் புதினம் பலமுறை மொழிமாற்றம் செய்யப்பட்டது. கடலன்னையின் கோபம் என்ற நாராயண மேனனின் மொழிபெயர்ப்பு இன்றளவிலும் புகழ்பெற்றதாக விளங்குகிறது. மேலும் டி. எஸ். பிள்ளை மற்றும் அனிதா நாயர் போன்றவர்கள் செம்மீன் என்ற பெயரிலேயே ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்தனர். [4]

திரைப்படம்
முதன்மைக் கட்டுரை: செம்மீன் (திரைப்படம்)
1965-ல் ராமு கார்யாட்டு என்பவர் இந்நாவலைத் திரைப்படமாக்கினார். இப்படத்திற்கு 1965-ம் ஆண்டிற்கான சிறந்த திரைப்படத்திற்கான, இந்தியக் குடியரசுத் தலைவரின் தங்கப் பதக்கம் கிடைத்தது. ஷீலா, மது, கொட்டாரக்கர ஸ்ரீதரன் நாயர், சத்யன் ஆகியோர் நடித்திருந்தனர்.

செம்மீன்: நாவலும் திரைப்படமும்
 10th January 2018
4 min read
Read this essay in English here.

சில ஆண்டுகளுக்கு முன், சுந்தர ராமசாமியின் மொழிபெயர்ப்பில் மலையாள எழுத்தாளர் தகழி சிவசங்கரப் பிள்ளை எழுதிய “செம்மீன்” நாவல் வாசிக்கக் கிடைத்தது. என்னைத் தீவிர இலக்கிய வாசகனாக மாற்றிய மிக முக்கியமான நூல்களில் செம்மீனும் ஒன்று. செம்மீன் நாவலை அடிப்படையாகக் கொண்டு ஒரு திரைப்படமும் வெளிவந்திருப்பதைச் சமீபத்தில் அறிந்துகொண்டு மிகுந்த உற்சாகத்துடன் அத்திரைப்படத்தைப் பார்த்தேன். எஸ்.எல்.புரம் சதானந்தன் என்பவரது திரைக்கதையில் ராமு கார்யாட் இயக்கி, 1965ம் ஆண்டு செம்மீன் திரைப்படமாக வந்துள்ளது. மிக அட்டகாசமான முயற்சி!

நாவல்களை அடிப்படையாக வைத்துத் திரைப்படங்கள் வெளிவரும் போக்கு தமிழில் இல்லவே இல்லை என்னும் தற்போதைய சூழலில் செம்மீன் திரைப்படத்தைப் பற்றிப் பேசுவது அவசியமாகிறது. ஏனெனில், செம்மீன் ஒரு சாதாரண படம் என்று கடந்து செல்ல முடியாதபடி அது மலையாளத்தில் பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது. 2015ம் ஆண்டு செம்மீன் வெளிவந்து ஐம்பதாண்டு நிறைவுற்றதை ஒட்டி கொண்டாட்டங்கள் நடத்தும் அளவிற்குக் கேரள மக்களின் மனங்களில் நீங்காத இடத்தை அது பெற்றிருக்கிறது!

அரபிக் கடலோரம் உள்ள ஒரு மீனவ கிராமத்தைச் சேர்ந்த கருத்தம்மாவின் கதைதான் செம்மீனின் கதை. தன் முதலாளியின் மகன் பரீக்குட்டி மீது கருத்தம்மாவுக்கு அவளது பால்யத்தில் ஈர்ப்பு ஏற்படுகிறது. ஒருகட்டத்தில் அந்த ஈர்ப்பு காதலாகவும் மாறுகிறது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி கருத்தம்மாவின் தந்தை செம்பங்குஞ்சு தன் லட்சியமான தோணி வாங்குவதற்காகப் பரீக்குட்டியிடம் ஒரு பெரும் தொகையைக் கடனாக வாங்குகிறார். அந்தக் கடனைத் திருப்பிக் கொடுக்காததாலும், கருத்தம்மாவுக்கும் வேறொருவருக்கும் திருமணம் செய்யப்படுவதாலும் அவர்கள் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களே செம்மீன் கதையாகிறது.

இந்த நாவலில் இருந்து திரைக்கதையை உருவாக்குவதற்குப் பெரிய அளவில் நாவலில் உள்ள கதையின் போக்கில் மாற்றங்கள் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படாமல் போனதை முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். திரைக்கதையின் வடிவம் நாவலின் வடிவத்தோடு கச்சிதமாக ஒன்றிவிட்டது. நாவலிலிருந்து பல சம்பவங்களைத் திரைப்படத்தில் அப்படியே காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். நாவலைத் தமிழில் வாசித்துவிட்டு திரைப்படத்தை மலையாளத்தில் பார்த்ததால் அதன் வசனங்கள் குறித்து எனக்குத் தெரியவில்லை. ஆனால், திரைப்படத்திற்கான தொடக்கம், plot points (நிலக்கூறு, கதைக்கரு), முடிவு அனைத்துமே நாவலிலிருந்து கிடைத்திருப்பது திரைக்கதைக்கு மிகப் பெரிய பலம்.



கறுத்தமாவைக் காதலிக்கும் வேற்றுமத இளைஞன் பரீக்குட்டியாக நடித்திருக்கும் நடிகர் மதுவின் கதாபாத்திரம், தேவதாஸ் கதாபாத்திரத்தை ஞாபகப்படுத்தக் கூடியதாக இருக்கிறது. எப்போதும் தனிமையில் பாட்டு பாடியபடி துயரத்துடன் சுற்றித் திரியும் பரீக்குட்டியாக மிகச் சிறந்த உடல் மொழியை வெளிப்படுத்தியிருக்கிறார் மது. ஆனாலும் திரைப்படத்தைக் கருத்தம்மாவாக நடித்திருக்கும் ஷீலாதான் வேறு தளத்திற்கு இட்டுச் செல்கிறார்.

காதல் தோல்வி அடையும் நாயகர்களை நாம் அதிகம் சினிமாவில் பார்த்துவிட்டோம் என்பது ஒரு காரணம் என்றாலும், தகழி சிவசங்கரப் பிள்ளையும் சரி, பூரம் சதானந்தனும் சரி, கருத்தம்மாவை ஒரு மிக வலுவான, ஆழமான கதாப்பாத்திரமாகச் செதுக்கியிருக்கிறார்கள்! காதல் தோல்வியில் துயரப்படுதல் என்பது ஆண்களுக்கே உரிய பிரத்யேகமான செயலாகக் கருதப்படும் நம் உலகில், கருத்தம்மாக்களின் காதல் தோல்விகளைப் பேசுவது முக்கியம் என்பதைச் செம்மீன் நினைவூட்டுகிறது. காதல் தோல்வியை வெளிப்படுத்துவதற்குச் சுதந்திரமும் சூழ்நிலையும் பெண்களுக்குக் கிடைத்திராத இந்தச் சமூகக் கட்டமைப்பில், ஒரு பெண் தன் சோகத்தை மனத்திற்குள் பூட்டி வைத்துத் துயரப்படும் சித்திரமாகச் செம்மீன் திகழ்கிறது.

நாவலில் கிடைக்காத அனுபவத்தைத் திரைப்படத்தில் ஒளிச்சித்திரங்கள் மூலமாகவும், இசை மூலமாகவும் பெற முடிகிறது. என்னதான் நாவலில் மிகச் சிறந்த வர்ணனைகள் இருந்தாலும், ஒரு கடற்கரை கிராமம் குறித்த தெளிவான காட்சிச் சித்திரத்தைத் திரையில் பார்ப்பது அலாதியான அனுபவமாகிறது! ஏனெனில் தோணியையோ வலையையோ மீன்களையோ நேரில் ஒரு தடவைகூடப் பார்த்திராத ஒருவனுக்கு, வாசிப்பு மூலம் மிகத் துல்லியமான பார்வையை – அது எவ்வளவு சிறந்த எழுத்தாக இருந்தாலும் – அடைவது சிரமமாக இருக்கும் அல்லவா? இந்தக் கோணத்தில் திரைப்படம் நாவலிலிருந்து தனித்துவம் அடைகிறது.

சலீல் சௌதுரியின் பின்னணி இசை, பாடல்கள் எல்லாம் பிரமாதம்! தமிழில் 1970களில் இளையராஜாவின் வருகைக்குப் பிறகே நம் மண்ணின் இசையைத் திரையில் அதிகம் கேட்க முடிந்தது. அதுவரையில் வடக்கத்திய பாணியிலான இசைதான் பரவலாக இருந்தது. ஆனால் 1965ம் ஆண்டிலேயே தெற்கத்திய இசையைத் திரையில் சாத்தியப்படுத்தி இருக்கிறார். வசனங்களுக்கு இடையூறாகப் பின்னணி இசையைப் பயன்படுத்தாமல் மிகக் கச்சிதமாக படத்தில் அதைப் பொருத்தியிருக்கிறார்கள்! உதாரணமாக, திரைப்படத்தின் தொடக்கத்தில் கருத்தம்மாவும் பரீக்குட்டியும் கடற்கரையில் அமர்ந்துபேசிக் கொண்டிருக்கும் காட்சியில், கடலோசையைத் தவிர எந்தப் பின்னணி இசையும் சேர்க்கப்படவில்லை. ஆனால் திரைப்படம் முடியும் தருவாயில் அவர்கள் துயரத்தின் விளிம்பில் சந்தித்துக் கொள்ளும்போது முழுக்க முழுக்க அந்தக் காட்சியை இசையின் மூலமாகவே நகர்த்தி இருக்கிறார்கள். மது மற்றும் ஷீலாவின் சிறந்த நடிப்புடன் இந்த இசை ஒன்றிணையும்போது, அத்துயரத்தின் வலியை நமக்குள்ளும் கடத்திவிடுகிறது.

திரைப்படத்தில் பெண்களின் கற்பு, ஒழுக்கம் குறித்தெல்லாம் மீண்டும் மீண்டும் வரும் வசனங்கள் பிற்போக்குத்தனமாக இருக்கிறது. அவற்றை நாவலில் வாசிக்கையில் அவை அந்தக் கதாபாத்திரங்களின் வாழ்வியலில் ஓர் அங்கமாகவே புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் திரைப்படத்தில் எரிச்சலூட்டுகிறது. இருந்தாலும், பெண்ணின் காதலைத் தனித்துவமாகப் பேசிய கோணத்தில் இன்றளவிலும் செம்மீன் முற்போக்காகத்தான் தெரிகிறது.

நாவலில் கருத்தம்மாவின் தந்தை செம்பங்குஞ்சுவின் வாழ்க்கை பேசப்பட்டிருக்கும் அளவிற்கு அது திரைப்படத்தில் பேசப்படவில்லை. செம்பங்குஞ்சுவின் வாழ்க்கை மூலமாக, அந்த மீனவ கிராமத்தின் ஒட்டுமொத்த வாழ்வியலையும் நாவலில் புரிந்துகொள்ள முடிந்தது. தோணி வாங்கும் லட்சியத்தை நோக்கிய அவரது நகர்வு, அந்த லட்சியத்தை அடைந்ததும் அவர் அடையும் மாற்றங்கள் எல்லாம் திரைப்படத்தில் மேலோட்டமாக இருப்பதாகவே தோன்றியது. ஒரு திரைப்படத்திற்கான சாத்தியங்களையும் புரிந்துகொள்ள முடிகிறது.

செம்பங்குஞ்சுவின் வாழ்க்கை அனுபவங்கள் மூலமாக ஒரு மீனவன் தன் அன்றாட வாழ்வில் சந்திக்கும் சிக்கல்கள், அவனது வாழ்க்கை முறை, சமூகத்துடனான அவனது உறவு போன்றவை நாவலில் தரிசனமாகக் கிடைக்கிறது. அவ்வாறே கேரள மீனவ கிராமங்களின் உலகத்தை ஆழமாகப் பதிவு செய்யும் களமாகச் செம்மீன் நாவல் இருந்திருக்கிறது. அதுவே திரைப்படமாக உருமாறும்போது பரீக்குட்டிக்கும் கருத்தம்மாவிற்கும் இடையிலான காதலைப் பிரதானமாகப் பேசும் ஒரு ரொமான்டிக் திரைப்படமாகிறது. ஆனாலும், திரைப்படம் நாவலின் ஒருமித்த மையத்திலிருந்து பெரிய அளவில் விலகவில்லை.

ஒன்றும் அறியாத பிள்ளையாகக் கடற்கரையைச் சுற்றித் திரிந்து கொண்டிருந்த கருத்தம்மாவின் வாழ்க்கையில், பரீக்குட்டி மீதான ஈர்ப்பு ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. காதலன் அல்லாத ஒருவனுடன் திருமணம் செய்து வைக்கப்பட்ட பின்னர் கொஞ்சம் கொஞ்சமாகக் காதல் தோல்வியை மறந்து தன்னுடைய குடும்பத்தின் மீது தீராத பாசம் கொள்கிறாள். ஆனால் அதையும் இந்தச் சமூகம் ஏற்றுக்கொள்ளாமல் அவளுக்கும் பரீக்குட்டிக்கும் இடையிலான பழைய காதலைக் குத்திக் காட்டிக் கொண்டே இருக்கிறது.

பரீக்குட்டியோ, காதல் மயக்கத்தில் ஒரு பெரும் தொகையைச் செம்பங்குஞ்சுவிடம் கடனுக்குக் கொடுத்துவிட்டு ஏமாந்து போவதால் அவனது வாழ்க்கையே ஒன்றும் இல்லாமல் ஆகிறது. செல்வச் செழிப்புடன் வாழ வேண்டியவன் கடைசியில் தற்கொலை செய்துகொள்ள வேண்டிய பரிதாப நிலைக்குத் தள்ளப்படுகிறான். இன்னொரு பக்கம் ஒரு சாதாரண ஏழை மீனவனாக வாழ்ந்துகொண்டிருந்த செம்பங்குஞ்சு பணக்காரராக வளர்ந்தாலும், பணம் கையில் புரளப் புரள தன் மனிதத் தன்மையை முற்றிலும் இழந்து விடுகிறார்.

இப்படி மாற்றம் ஒன்றே மாறாதது எனும் வாழ்க்கைத் தத்துவத்தை நினைவூட்டும் நாவலின் ஜீவன் திரைப்படத்திலும் இருக்கிறது. நாவல்களில் இருந்து உருவாகிய இந்தியத் திரைப்படங்களில், செம்மீன் இவ்வளவு தூரம் கொண்டாடப்படுவதற்கு அந்த ஜீவன் தான் முக்கிய காரணம்!

படங்கள்: படியெடுத்தல்