Showing posts with label VIRUDHUNAGAR. Show all posts
Showing posts with label VIRUDHUNAGAR. Show all posts

Wednesday, 26 August 2020

VIRUDHUNAGAR IN 1960`S





VIRUDHUNAGAR IN 1960`S




.விருதுநகரில் பொதுவாக யாரும் ஹோட்டலில் 1960 களில் வாங்கி சாப்பிடும் வழக்கம் அறவே கிடையாது .வீட்டில் இருக்கும் கஞ்சியோ ,கூழோ சாப்பிட்டு நிறைவடைந்தது நமது விருதுநகர் .யாருக்காவது உடம்புக்கு சரி இல்லை என்றால் மட்டும் இட்டலி வாங்க தங்கம் ஓட்டலுக்கு செல்வோம் .கூடவே ரெண்டு பாத்திரம் சட்னி வாங்க ஒன்று .சாம்பார் வாங்க ஒன்று .வாங்கும் இட்டலியோ ஒன்னு பத்து பைசா . அந்த சாம்பாருக்கு ம் ,சட்னிக்கு வீட்டுக்குள்ளே அடிதடிதான்.தெப்பம் தெற்கு பக்கம் தங்கம் ஓட்டல் . அப்போது சாப்பிட்டதுக்கு பில் போடும் வழக்கமோ ,துண்டுசீட்டு கொடுக்கும் வழக்கமோ அறவே கிடையாது . சாப்பிட்டு முடிச்சிட்டு கல்லாப்பெட்டி அருகே வரும்போது ஒரு ரூவா இருவது பைசா , அடுத்து கட்டம் போட்ட சட்டை எண்பது பைசா என்று மனக்கணக்கிலே சரியாக கணக்கு சொல்வார்கள் சப்பிளையர்கள் .அதை நினைக்கையில் எனக்கு இப்போதும் வியப்புதான் .


கேவியஸ் பள்ளி எதிரே coronation ஹோட்டல் . தையல் மாலுக்குள் ஒரு ஓட்டல் .தையல் மாலுக்குள் எதிரில் ஒரு ஓட்டல் .உக்காந்து சாப்பிடக்கூடிய ஓட்டல்கள் அநேகமாக இவை தான் . ஆஞ்சநேயா ஹோட்டல் மாரியம்மன் கோவிலுக்கு பின்புறம் ஒன்றும் அரசு மருத்துவமனை பக்கத்திலும் உண்டு
இப்போது எல்லோருடைய அமோக பாராட்டுதலையும் ,பெற்று சிவகாசி மதுரை ,சாத்தூர் வட்டாரங்களிலும் புகழ்பெற்ற விருதுநகர் புரோட்டா வை முதன் முதலில்
அறிமுகப்படுத்தியது coronation ஹோட்டல் தான் .பரோட்டாவை பக்குவமாக எண்ணெய் குளியலில் குளிப்பாட்டி முருகலோடு தயாரித்தவர்கள் இவர்கள் தான் .மட்டன் சாப்பாட்டிற்கு இப்போது அல்லாபிச்சை யும் ,பர்மாக்கடையும் இருப்பது போல அப்போது coronation ஹோட்டல் . தவிர சுக்கா வறுவலை பக்காவா எண்ணையை தாராளமா விட்டு மிளகுசீரகம் தூக்கலாய் கலந்து அறிமுகப்
படுத்தியதும் coronation ஹோட்டல் தான் . நான் ஏழாம் வகுப்பு படிக்கும்போது கிளாஸ்லயே மிக வளர்த்தியாய் ஒருவர் நான் குரூப் லீடராய் இருக்கும் போது என்னுடைய குரூப்பில் சேர்ந்தார் .
அவர் coronation ஹோட்டல் முதலாளி பையன் . இப்ப அவங்கள்லாம் பாதை மாறி நொடித்து போய் விட்டார் . . . தவிர மாத சாப்பாட்டுக் கடைகளும் அங்கங்கே இருக்கும் .அங்கல்லாம்
சுகாதாரம் இருக்காது . கும்மிருட்டில் வலது கையால் சாப்பிட்டு கொண்டே இடது கையால் ஈ ஓட்டிகிட்டே சாப்பிட வேண்டியிருக்கும் .
தவிர தெரு ஓரத்திலும் சிலர் சுவையாக தோசை ,இட்டலி விற்பார்கள் . ஆனால் சீக்கிரத்தில் விற்று விடும் .சுப்ரமணிய வித்தியாசாலை பக்கத்தில்
தாயம்மாள் வடை ,மற்றும் இடியாப்பங்கள் பிரசித்தி பெற்றவை .அப்போது அதற்கு பெயர் பூச்சி .பூச்சியைப்போல் இருப்பதால் அந்த பெயர் .அதே போல்
தோசை என்றால் அது ஊத்தப்பம் தான் .இப்போது நைசாக இருப்பது தோசை கனமாக இருப்பது ஊத்தப்பம் என்று மருவியிருக்கிறது
.அப்போதெல்லாம் கருப்பட்டி காப்பிதான் .சீனியை மியூசியம் தில் தான் பார்க்கமுடியும் .
சிலசமயங்களில் பள்ளிக்கூடம் பக்கத்திலே மிட்டாய் வியாபாரி பொன்வண்டு விற்பார் . தீப்பெட்டிகளில் அடைத்து சாயங்காலம் அது சொர்க்அடிப்பதை பார்த்து மகிழ்வோம் .அதில் புள்ளிவைத்த பொன்வண்டு ராஜா வண்டு .
1960 `s
பொன்வண்டு காலம் மட்டுமல்ல
பொற்காலமும் கூட





  • Syed Mohamed விருதுநகர் கமல் ஹோட்டல் மிகவும் பிரசித்தி பெற்று ஒரு சமயம் இயங்கியது. நான் சிறுவனாக இருக்கும்போது, எனது தந்தை அங்கே சாம்பார் ரசம் போன்றவைகளை வாங்கி வருவார் வீட்டில் சமைக்கும் பதார்த்தங்களை விட அக்கடையில் வாங்கும் குழம்பு வகைகள் இன்றும் நாவில் ருசிக்கிறது... தற்போது, அந்தக் கடை ஏன் இல்லை என்ற விவரம் கூட தெரியவில்லை... மேலும் மாரியம்மன் கோவில் பின்புறம் ஒரு அய்யர் ஓட்டல் இருக்கும் அங்கு கிடைக்கும் குலோப் ஜாமுன் பற்றி தற்போது நினைத்தாலே இனிக்கும்... அதன் நிலையும் அறியேன்...
  • Nagarajan K மாரியம்மன் கோவில் பின்னால் இருந்த ஹோட்டல் பெயர் ஆஞ்சனேயவிலாஸ் .அங்கே தகட்டு பக்கவடைன்னு ஒன்னு போடுவாங்க .ஊர்ல
    எங்கயும் அது போட்டதே இல்லை

VIRUDHUNAGAR KVS MIDDLE SCHOOL




விருதுநகர் KVS நடுநிலைப் பள்ளி 




விருதுநகர் KVS நடுநிலைப் பள்ளி பொருட்காட்சியின் கலை அரங்கமே !
1946ல் கீற்றுக் கொட்டகை ஆகப் பிறந்து 2003 ஆம் ஆண்டு வரை தீவிர கலைப் பணி ஆற்றினாய். 1960 முதல் மு. அ. பழனிச்சாமி நாடார் கலை அரங்கம் எனப் பெயர் சூட்டப்பட்டு புது வடிவம் பெற்றாய். விருதுநகரில் கலை நிகழ்ச்சிகளுக்குத் தனிக்கட்டணம் இல்லாததால் உனது mass reach அதிகம். எனவே தமிழ்த் திரைஉலகினர் உன்னைக் கொண்டாடினர்.

பங்குனி & சித்திரை கோடையிலே M K தியாகராஜ பாகவதர், K B சுந்தராம்பாள், M S விஸ்வநாதன், K V மஹாதேவன், T M S, P சுசிலா, ஜேசுதாஸ், SPB போன்றோரின் இன்னிசை மழை... NSK, தங்கவேலு, கிரேசி மோகன் முதலானோரின் கிச்சு கிச்சு மழை... MGR ன் அட்வகேட் அமரன், இன்பக்கனவு நாடகங்களில் முதன் முறையாக அவரைக் கண்டு மக்கள் " அங்கமா இல்லை தங்கமா " என்று திளைத்திட்ட ஆனந்த
மழை... மேடையில் MGR குண்டுமணியை குண்டுக்கட்டாக தூக்கிச் சுழற்றியதில் எப்படிப்பட்ட ஆர்ப்பாட்ட மழை... 1959 ல் உன் புதிய வடிவிற்கு அடிப்படைக் கல் நாட்டிய சிவாஜி கணேசன், தேன்கூடு நாடகத்தில் காட்டிய நேர்த்தியான நெஞ்சு வலியால் கலங்க வைத்த மழை, கட்டபொம்மனாக வீர வசன மழை .... துக்ளக் ஆக சோவின் பரபரப்பு மழை... ஹேமமாலினியின் பரதநாட்டியப் பூ மழை... R S மனோகர் சரித்திர நாடகங்களின் பிரம்மாண்டமான அரங்க அமைப்புகளை நீ அழகுற ஜொலிக்கச் செய்தது... ஒவ்வோர் ஆண்டும் இறுதி நாடகங்களாக லட்சுமி காந்தன், ரத்தக்கண்ணீர் நாடகங்களை தன் இறுதி நாட்கள் வரை அதிரடியாக M R ராதா நடத்தியது ...... இப்படி எத்தனை, எத்தனை....

ஊர் மக்கள் அனைவரும் ஒரு குடும்பம் போல ஏற்றத் தாழ்வின்றி அன்னியோன்யமாக தரையில் அமர்ந்து நிகழ்வுகளை நீ ரசிக்க வைத்தது உன் மிகப்பெரும் வெற்றி... கலைஞர்களை அருகில் காண உன் அருகே அமைக்கப்பட்ட பள்ளமான குறுகிய ஒரு வழிப் பாதையில் பாதம் படாதவர் எவரேனும் இருந்திருப்பார்களா? ... வீட்டுக்கு ஒரு பிள்ளை bed sheet உடன் வந்து, தன் குடும்பத்தினருக்காக இடம் பிடித்துப் பொறுமை காட்டிக் காத்திருந்த குடும்பப் பாங்கு நீ கற்றுத் தந்தது... காதும் காதும் வைத்த மாதிரியாக எவர் மனமும் புண்படாது decent ஆக மைதானத்தில் உன் முன்னிலையில் நடந்த பெண் பார்க்கும் படலங்கள் தானே உன்னை விருதுநகரின் கல்யாண மாலை ஆக்கியது....

1951 ஆம் ஆண்டு நீ ஈட்டிய லாபத்தினால் மதுரை சாலையில் உள்ள KVS நிலத்துக்கு அருகாமையில் உள்ள நிலங்கள் சேர்த்து வாங்கப்பட்டு இன்றைய கட்டிடங்களும், விளையாட்டு மைதானங்களும், வியத்தகு ஸ்டேடியமும் நிறுவ உதவியது. இப்படி உன் சாதனை பலப்பல...

விருதுநகரின் கலை உணர்விற்கு அரை நூற்றாண்டுக்கும் மேல் உயிர் ஊட்டியவன் நீ... கலை அரங்கமாக, விருதுநகரின் 20 ஆம் நூற்றாண்டு புவி சார் குறியீடு நீ ...
ஆம், விருதுநகரின் மற்றும் ஓர் பெருமை நீ ....


விருதுநகர் K. V. S. பள்ளியின் பிரதான இரட்டைக்கோபுர கட்டிடமாகிய நான் பேசுகிறேன்... நான் தமிழகத்திலே முதன் முறையாக உயர்நிலைப் பள்ளி அளவில் இலவசக் கல்வி தந்தவன்...

1895 ல் நான் பிறந்த பொழுது தான் இந்து மிடில் ஸ்கூல் ஆக இருந்த நம் பள்ளி க்ஷத்திரிய வித்தியாசாலை என்று பெயரிடப்பட்டது. திரு ல.பெ. சு. சண்முக நாடார் ரூ 5000/- பொருளுதவி செய்து மொத்தம் ரூ 10, 000/- செலவில் பாரிஸில் உள்ள கட்டிட மாதிரியில் உருவாக்கப்பட்டவன். மாணவர்கள் என் வளாகத்தில் இலவச ஆங்கிலக் கல்வி கற்று சிறந்த வணிகர்களாகத் திகழ வேண்டும் என்று விரும்பிய அவருக்கு நான் இன்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

1902 ல் நான் உயர்நிலைப் பள்ளி ஆன பொழுதில் கட்டிடத்தின் பின்புறக் கட்டுமானம் பலசரக்குக் கடை மகமையின் தயாளமான
ரூ 50, 000/- நிதி உதவியுடன் கட்டப்பட்டது. தூண்கள் நிரம்பிய அழகிய மண்டபமும், உள்ளூர் கட்டிடத் தொழிலாளர்கள் கை வண்ணத்தில் கண்கவர் வேலைப்பாடுகளுடன் அரண்மனையாக உருக் கொண்டேன். என் எழில் தோற்றத்திற்கு மேற்பார்வை இட்டவர்கள் திரு தொ. மு. ம. முத்து நாடார் மற்றும் திரு பூ. நா. வடிவேல் முருக நாடார்.

அக்காலம் திண்ணைப் பள்ளியிலும், மரத்தடியிலும் கற்று வந்த மாணவர் அனைவர்க்கும் பேதம் எதுவுமின்றி ரம்மியமான சூழலில் தரமான கல்வி தந்தேன். மாணவர்களின் உற்சாகமான ஈடுபாடு, தேர்ந்த ஆசிரியர்களின் முனைப்பான கல்விப் பணி மற்றும் நிர்வாகத்தினரின் சீரிய செயல்பாடுகள் கண்டு பேருவகை அடைந்தேன். திரு ராஜாஜி, திரு சத்தியமூர்த்தி, திரு சுப்பிரமணியம், திரு கக்கன் போன்றவர்கள் என்னைக் கண்டு வியந்தவர்கள்...

1902-1956 வரை உயர்நிலைப் பள்ளியாகவும், பின் 1962 வரை நடுநிலைப் பள்ளியாகவும், அதன் பின் 1966 வரை VVV மகளிர் கல்லூரியாகவும், பின் அதன் தங்கும் விடுதியாகவும், 1984-1988 வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எனவும் பல வடிவங்கள் பெற்றேன்.. தற்பொழுது, 30 ஆண்டுகளாக காமராஜர் இலவச மருத்துவ மையம் ஆகச் செயல்பட்டு வருகின்றேன். மற்றும் நம் பள்ளி நிர்வாகத்தின் கீழ், ஊஞ்சா தனசாமி அறக்கட்டளை சார்பாக நடத்தப்படும் நவீன ரத்த வங்கி என்னிடம் உள்ளது. இதன் மூலம், இந்தியாவிலேயே குறைந்த விலையில் ( யூனிட் ஒன்றுக்கு ரூ 400/-) வழங்கப்பட்டு வரும் உயரிய சேவை கண்டு பெருமை அடைகின்றேன்.

எனக்கு ' அக்கம் பக்கத்து ' மலரும் நினைவுகளும் உண்டு. நான் சிறுவனாக இருந்த பொழுது, அருள் மிகு மாரியம்மன் கோவில் கட்டப் பெற்றது, நம் பள்ளி மாணவர் காமாட்சி என்ற காமராஜ், 1921 ல் எனக்கு முன்னால் அமைந்திருக்கும் தேசபந்து மைதானத்தில் காங்கிரஸ் தலைவர்களை அழைத்து வந்து பொதுக் கூட்டங்கள் நடத்தி சுதந்திரப் போராட்டத்தில் எழுச்சி நாயகனாக இணைந்தது, 1933 ல் சத்தியாக்கிரகப் போராட்டம் நடத்திய காமராஜை என் எதிரே உள்ள தபால் அலுவலகத்தில் வெடிகுண்டு வீசினார் என்று பிரிட்டிஷார் பொய் வழக்குப் போட்ட பொழுது என் தாய் உள்ளம் பதை பதைத்தது, பின் அந்த வழக்கில் அவர் நிரபராதி என்று வந்த தீர்ப்பில் மகிழ்ந்தது, 1949ல் என் வைர விழா ஞாபகார்த்த ஸ்தூபியை நமது வளாகத்தில் திறந்து வைக்க தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரான காமராஜ் வந்த பொழுது அவர் உயர்வு கண்டு பெருமிதம் அடைந்தது முதலானவை என் மனதில் என்றும் மணம் வீசும் நினைவு மலர்கள்..

சென்னை மாகாணத்தின் முதன் மந்திரியான காமராஜரின் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட '10 ஆம் வகுப்பு வரை இலவசக் கல்வி' திட்டத்திற்கு வித்திட்டது நம் பள்ளி தான் என்பதில் நமக்கு எத்துணை பெருமை..

கிழக்கே மாரியம்மனும், தெற்கே முருகனும், மேற்கே வெயிலுகந்தம்மனும் விருதுநகர் காக்கும் தெய்வங்களாய் அருள் பாலிப்பது போல் வடக்கே இரட்டைக் கோபுரமாய் அமைந்து அன்று கல்வி, இன்று உயிர் காத்தல் ஆகிய பணிகளைச் சிறப்புற செய்து வருகின்றேன். விருதுநகரின் மற்றும் ஓர் அடையாளமாகத் திகழ்வதில் மகிழ்ச்சி....

.

Tuesday, 25 August 2020

FEMALE EDUCATION IN VIRUDHUNAGAR


FEMALE EDUCATION IN VIRUDHUNAGAR



விருதுநகர் பெண்களுக்கு கல்வி வழங்கிய மாங்கா மச்சி!
***************************
மங்காவின் மச்சி வீடு என்ற பெயரே மருவி இப்பொழுது “மாங்கா மச்சி” என்று அழைக்கப்படுகிறது.

மனிதருள் மாணிக்கமாம் திரு.திருவாலவாய நாடார் அவர்கள் “பெண்களே நாட்டின் கண்கள்” என்றுணர்ந்து, பெண்கள் கல்வி கற்றால் நாடே வளம் பெறும் என்பதை வலியுறுத்தி, வீடு வீடாகச் சென்று வாதிட்டபோது சாணி உருண்டையால் அடி வாங்க நேர்ந்தது. பெண்கள் படிக்க வேண்டும் என்ற வாசக அட்டையை தன் நெஞ்சிலும், முதுகிலும் தொங்க விட்டுக் கொண்டு வீதியில் நடந்து சென்றார். இதற்கு அவர் பெற்ற பரிசு, கேலியும் ஏளனமும்.

அன்னாரின் கடுமையான முயற்சிக்குப் பின் தன் மனைவி மங்கம்மாள் வாழ்ந்த இடத்திலேயே பள்ளியமைக்க விரும்பி, தன் வீட்டையே கொடுத்த கொடையாளர். மங்காவின் மச்சி வீடு என்ற பெயரே மருவி இப்பொழுது “மாங்கா மச்சி” என்று அழைக்கப்படுகிறது.

பாக்கு வியாபாரத்திலே கிடைத்த பங்கை, பள்ளிக் கட்டிட நிதிக்கு அளித்தார். பள்ளி கட்டிடப் பணிக்கு வீதியில் கிடக்கின்ற கல்லையும், மண்ணையும் தன் தோளில் சுமந்து பணி செய்தார். தன் முயற்சியின் வெற்றியினால் 1910ம் ஆண்டு பெண்களுக்கென தனிப் பள்ளிக்கூடம் அமைத்தார். 1மற்றும்2ம் வகுப்புகள் கொண்ட “இந்து நாடார் பெண் பாடசாலையை” ஆரம்பித்தார்.

அவ்வாறு ஆரம்பிக்கப்பட்டப் பள்ளி ஆல விருட்சமாய், என்றும் அழியாப் புகழ் பெற்று, நூறு ஆண்டுகளைக் கடந்து, விருதைப் பெண்களின் திறமையை உலகிற்குப் பறை சாற்றி வருகிறது .

Saturday, 19 October 2019

VIRUDHUNAGAR TEPPAKULAM FEATURES ,LEGEND 1866






VIRUDHUNAGAR TEPPAKULAM  
FEATURES ,LEGEND 1866


நீர் நிறைந்து நிற்கும் இத்தெப்பக்குளத்தைப் பார்த்தாலே, எனக்கு சிறுவயதில் டின்னைக் கட்டிக் கொண்டு, என் தந்தையுடன் மைய மண்டபம் வரை நீச்சலடித்துக் கொண்டு சென்று குளித்தது நினைவுக்கு வரும்.


ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் மழை பெய்து நீர் நிறைந்திருக்கும் தெப்பத்தில் கந்தசஷ்டி, திருக்கார்த்திகை தினங்களில் அனைவரும்
குளிக்கலாம்.

மேலும் என் தந்தை திருவி.வி.எஸ.கேசவன் அவர்கள் நாட்குறிப்பு எழுதும் போது விருதுநகரில் மழை பெய்யும் நாட்களையும், தெப்பத்திற்குத் தண்ணீர் வந்த நாட்களையும் குறித்து வைப்பார்.

தெப்பம் நிறைந்து விட்டால் சொல்பவர்களுக்குப் பரிசும் உண்டு. மழை பெய்யாமல் இருந்தால்," மழை பெய்து தெப்பத்திற்குத் தண்ணீர் வரவேண்டும் என்று இறைவனிடம் வேண்டுங்கள்" என்று பார்க்கும் அனைவரிடமும்  சொல்வதோடு, துண்டுப் பிரசுர ங்கள் அச்சிட்டும் ஊர் மக்கள் அனைவரையும் வேண்டச் சொல்வார்.சிறு வயதில் எதற்காக இப்படிச் சொல்கிறார் என்பது புரியவில்லை.


இப்பொழுது நன்றாகப் புரிகிறது, தெப்பம் நிறைந்தா ல் சுற்று வட்டாரத்தில் உள்ள எத்துணை அடிகுழாய்க ள்,ஆழ்துளைக் கிணறுகளுக்கு குறைந்த ஆழத்திலே யே நிறைந்த தண்ணீர் மக்களின் தேவைகளுக்குக் கிடைத்து விடுகிறது.

வைகை நதி பாயும் மதுரையில் ஊருக்குள் நிலத்தடி நீர் 400_500அடிககீழ் இறங்கிவிட்டது.மழை குறைவான விருதுநகரில் நிலத்தடி நீர்மட்டம்
50_100க்குள் காக்கப் படுகிறது.

இத்தெப்பக்குளமும் மழையில்லாமல் வறண்டு, அதற்குள் இருக்கும் மூன்று கிணறுகளுக்குச் சென்று மக்கள் தண்ணீர் எடுத்து வந்ததையும் பார்த்திருக் கிறேன்.

ஆனால் தற்பொழுது தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, பல வழிகளில் தண்ணீர் கொண்டு வரப்படுவதால் தற்பொழுது தெப்பம் நீர் நிறைந்தே இருக்கிறது. தெப்பம் அமைக்கப் பட்டபொழுது, ஊரின் வடகிழக்கில் பெய்யும் மழைநீர் இரயிலவே பீடர் சாலைக்கும், மதுரைச் சாலைக்கும் இடையே உள்ள வேலாயுத மடைப் பகுதிக்குக் கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து பாதாள வாய்க்கால் மூலம் நீர் வந்து சேருமாறு அமைக்கப் பட்டிருந்தது.

தற்பொழுது,பழைய மடை வழியாக மட்டுமன்றி, கெளசிக காநதியிலிருந்தும, சில ஆழ்துளைக் கிணறுகளிலிருந்தும, குளத்தைச் சுற்றியிருக்கும் கட்டிடங்களில் சுமார் 60000சதுர அடி பரப்பளவிற்கு மழை நீரைச் சேமித்தும் குழாய்கள மூலம் தெப்பத்திற்குத் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.

இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல்,ஊருக்கு வடமேற்கில் சின்னமூப்பன்பட்டி கிராமத்தில் 4.5ஏக்கர் நிலம், இக்குளத்தைப் பராமரிக்கும் விருதுநகர் பலசரக்குக் கடை மகமைத் தரப்பினரால் வாங்கப் பட்டு, பெரிய குளம் அமைத்து, மழைநீர் தேக்கப் பட்டு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.

மேலும் தெப்பம் நிறைந்தால் வழியும் உபரி நீரும்,நகரின் தென் பகுதியில் உள்ள கிணறுகளுக்குச் சென்று, அப்பகுதியின் நீர் மட்டத்தையும் காக்கும்
வண்ணம் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.தெப்பத்திற்குள்ளும் ஆழ்துளைக் குழாய்கள் மூலம் நிலத்தின் அடியில் நீர் செல்லும் படி செய்யப் பட்டுள்ளது.

இத் தெப்பக்குளம் விருதுநகர் இந்துநாடார்கள் தேவஸ்தானத்திற்கு உரிமை யானது.அரசு,தனியார் உதவியுடன் பல திட்டங்கள் நிறைவேற்றப் பட்டு, இச்சமூகத்தைச் சேர்ந்த பலசரக்குக் கடை மகமைத் தரப்பினரால் மிகச் சிறப்பாகப் பராமரிக்கப் பட்டு வருகிறது. இந்தத் தெப்பம் உருவான வரலாற்றைப் பார்ப்போமா.!

ஊரின் நடுவில் இருந்த தேவஸ்தானத்திற்குச் சொந்தமான, உபயோகத்தில் இல்லாத ஊருணியை,பயன்தரத் தக்க குளமாக உருவாக்கிய பெருமை, 1860களில் சப்ரெஜிஸட்ரர்,சப்மாஜிஸ்டிரேட் ஆகப் பதவி வகித்த திரு மு.சரவணமுத்துப் பிள்ளை அவர்களையே சாரும்.அரசிடம் தேவையான அனுமதிகளைப் பெற்றுத்தந்து, நீர் வரும் பாதையையும் வடிவமைத்துக் கொடுத்துள்ளார். மற்றும் விருதுபட்டியைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து தூர்ந்து போன ஊருணி,குளங்களில் உள்ள கற்களையும், சாலையோரங்களில் இருந்த சுமைதாங்கிக் கற்களையும் கொணர்ந்து சேர்க்குமாறு உத்தரவிட்டார்.

1866ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மூன்றாம் நாள் (அட்சய வருடம் ,ஆடிமாதம்,18ம் நாள்) கிருஷ்ண பட்சம், பஞ்சமி திதி, உத்திரட்டாதி. நட்சத்திரம், புதன் கிழமை, சித்த யோகம், கடக லக்னம் கூடிய சுபவேளையில் குளம் வெட்டும் பணி துவக்கப் பட்டது. உள்ளூர் மற்றும் வெளியூர் இந்துநாடார் சமூகத்தினர் தேவையான நிதியினை  வழங்கியுள்ளனர்.நிதிப் பற்றாக்குறையின் போது தேவஸ் தானத்திற்குச் சொந்தமான நாச்சி தெருவில் இருந்த சொத்துக்கள் விற்கப் பட்டு பணி நிறைவு செய்யப் பட்டது.

உள்ளூர் நாடார்களில் வீட்டிற்கு ஒருவர் குளம் வெட்டும் பணியில் ஈடுபட, நாடார் குலப்பெண்மணிகள் கஞ்சி தயார் செய்து உணவளிக்க,சிறுவர், சிறுமியர் உதவி செய்ய ஊர் கூடித் தெப்பக்குளம் அமைக்கப் பட்டது.

குளத்தின் நீளம், கிழக்குப் பகுதியில், தென் வடலாக 330அடியாகும். மேற்குப் பகுதியில் 328அடி.வடபுறமும்,தென்புறமும் கீழ்,மேல் 298அடியாகும்.ஆழம் 21அடி.3.5ஏக்கர் பரப்பளவுள்ள இக்குளத்தின் கொள்ளளவு 5கோடியே 5லட்சம் லிட்டர். குளத்தினுள் வறண்ட காலத்தில் தண்ணீர் பெற, படிகளுடன் கூடிய மூன்று கிணறுகள் அமைக்கப் பட்டுள்ளன.நடுவில் அழகிய கோபுரத்துடன் மைய மண்டபமும் உண்டு.

குளத்தைச் சுற்றிலும் தண்ணீர்த் தருமம் என்ற பெயரில் அடிகுழாய்களும், மின்மோட்டருடன் .குழாய்களுடன் பலராலும் அமைக்கப் பட்டிருக் கின்றன. பரந்த உள்ளம் படைத்த ஓர் அரசு அதிகாரியின் எண்ணத்தில் வடிவமைக்கப் பட்டு, உருவாக்கப் பட்டு, சிறப்பாகப் பராமரிக்கப் பட்டு வரும் இத் தெப்பக் குளத்தால் பயன் பெறுவது சாதி,இனம்,மதம் கடந்து அனைவருமே!

இத் தெப்பக்குளத்தைப் பார்க்கும் பொழுதெல்லாம் எனக்கு மதுரையின் பரந்து, விரிந்த மாரியம்மன் தெப்பக்குளம் நினைவுக்கு வரும். அதற்கு நீர கொண்ட வர தற்பொழுது இருக்கும் தொழில் நுட்பங்களைப் பயன் படுத்தி ஆக்கபூர்வமாக ஏதாவது செய்யக் கூடாதா?

சிறிய ஊரான விருதுநகரிலேயே இவ்வளவு செய்யும் பொழுது மதுரை யில் எவ்வளவு செய்யலாம்?அரசின் நலத் திட்டங்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பி  தொகுதி மேம் பாட்டு நிதிகள், நன்கொடைகள் பெற்று,அரசியல் வாதிகள் தலையீடின்றி,நல்ல மனமுள்ள தொண்டு நிறுவனங்கள், தனியார் அமைப்புகள் மூலம், ஊழலின்றி, வெளிப்படையாகச் செயல் பட்டு,என்.சி.சி, என்.எஸ்.எஸ் போன்ற மாணவர் அமைப்புகள் மூலம் மாணவர்கள் மற்றும் மக்களின் உழைப்பையும் பயன்படுத்தி மாரியம்மன் தெப்பக் குளத்தை ஆழப்படுத்தி, நீர் நிறைத்தால் மதுரை மக்களுக்கு எவ்வளவு பயன்படும்? நிலத்தடி நீர் மட்டமும் உயருமே!

மதுரையில் மட்டுமல்ல,எல்லா இடங்களில் இருக்கும் குளங்கள், கண்மாய்களையும்,தூர்வாரி, நீரைச் சேமிக்க ஏதாவது செய்யக் கூடாதா!

மதுரையை பொறுத்தவரை கண்மாயை மறித்து வீடுகட்டுவது 

தொழில் நிலையங்கள் அமைத்து வாடகைக்கு விடுவது ,இதுக்கெல்லாம் 
அரசியல் பின்னணி என்று முட்டுக்கட்டைகள் ஏராளம் . தெப்பக்குள த்துக்கு  தண்ணீர் வைகையில் இருந்து மட்டுமே வருது . பிற இடங்களில் அரசியல் வாதிகள் ஆக்கிரமிப்பு , கோர்ட்டுகளில் மெத்தனம் இவைகள் தாண்டி தெப்பம் புனரமைத்து தண்ணீர் எந்த காலத்திலும் வரப்போவதே இல்லை 


ஏற்கனவே டவுன் ஹால் ரோடு   ராயர் தெப்பக்குளம் முழுவதுமாக மூடப்பட்டு கடைகள் ஆக்கிரமிப்பு 1960  இல் இருந்தே இருந்து வந்துள்ளது . மக்களுக்கும் இதுபற்றி விழிப்புணர்வும் இல்லை . மதுரை ஒரு தண்ணீருக்கு தரித்திரியம் பிடித்த ஊர் என்பதில் யாருக்கும் எள்ளளவு சந்தேகம் வேண்டாம் 

Thursday, 19 October 2017

VIRUDHUNAGAR - CIVILISATION GONE WITH THE WIND


VIRUDHUNAGAR - 
CIVILISATION GONE WITH THE WIND 





தென் மாவட்டங்களில் நடைபெறும் திருவிழாக்களில் விருதுநகர் பராசக்தி மாரி யம்மன் கோவில் பங்குனி பொங்கல் விழா பிரசித்தி பெற்றது. இந்த விழாவின் முக்கிய அம்சமாக பக்தர்கள் அக்னிச்சட்டி எடுக்கும் விழா இன்று கோலாகலமாக நடக்கிறது.
 ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னிச்சட்டி எடுத்து வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். கோவில் வரலாறு விருதுநகர், விருதுபட்டியாக இருந்த போது 1780-ல் தற்போது கோவில் உள்ள இடத்தில் சிறிய பீடம் அமைத்து 1859-ல் பீடம் மீது அம்மன் சிலை வைத்து வழிபடத்துவங்கினர். அன்று முதல் இக்கோயிலின் முக்கிய பண்டிகையாக பங்குனி பொங்கல் திருவிழாவை கொண்டாடி வருகின்றனர். 1918-ல் கோயிலில் முதல்முறையாக கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. மண் சுவரால் ஆன கோவில் மூலஸ்தானத்திற்கு 1923ல் புதிய கட்டிடம் கட்டப்பட்டது.


 1933 முதல் பங்குனி பொங்கல் திருவிழாவை வெகுவிமரிசையாக கொண்டாட துவங்கினர். கோயிலின் முன்புறம் 1966-ல் சிற்பங்கள் இல்லாமல் வடிவமைக்கப்பட்டது. அதன்பின் 1975-ல் இருந்து 1980 வரை சிற்பங்கள் அமைக்கும் பணி மேற்கொள் ளப்பட்டது. இப்பணி 1981ல் நிறைவடைந்தது.
பொங்கல் அறிவிப்பு பொங்கல் திருவிழாவிற்கு 21 நாட்களுக்கு முன்பு தெப்பம் மேற்கு பகுதியில் உள்ள தண்ணீர் தர்மம் விநாயகர் கோவிலில் அனைத்து சமுதாய பெரியோர்களையும் அழைத்து விழா குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதையடுத்து காணிக்கைகாரர்கள் மூன்று பேரை கோயிலுக்கு அழைத்து சென்று கோயில் முன்பு தண்டோரா மூலம் பொங்கல் தேதியை அறிவித்தனர். தொடர்ந்து விருதுநகர் வீதிகள் தோறும் தண்டோரா போட்டு பொங்கல் தேதி அறிவிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து பக்தர்கள் விரதம் மேற்கொண்டுள்ளனர். பொங்கல் சாட்டியதில் இருந்து 15-வது நாள் கோயிலில் கொடியேற்றம் நடந்தது. அன்று முதல் திருவிழா துவங்கி விட்டது. பொங்கல் விழா இன்று நடக்கிறது. நகரில் இருந்தும், கிராமங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னிச்சட்டி எடுத்து வந்தும், வாயில் சூலம் குத்தியும், கரகம், ரதம் இழுத்து வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இன்று அம்மன் கோயில் திடலில் அமைக்கப்பட்டுள்ளது. பிரமாண்ட மண்டபத்தில் அம்மன் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நாளை மாலை தேரோட்டம் நடக்கிறது.
பிழைப்புக்காகப் பிரதேசம் வந்தாலும் ஓடி ஆடி விளையாண்ட மண்ணின் நினைவுகளே அலாதி தான். விருதுநகரின் எச்சங்கள் இன்னும் மனதை விட்டு நீங்கவில்லை.
ஊருக்கு நடுவே பராசக்தி மாரியம்மன் கோவில், பக்கத்தில் வெயிலாத்தேவர் பிள்ளையார் கோவில், பொட்டல், (இப்போது தேசபந்து திடல்) வெயில் உகந்த அம்மன் கோயில், பாலசுப்பிரமணியர் கோவில், ரேடியோ டெய்லர், பரபரப்பான பஜார்.
பெரும்பாலும் விருதுநகர் வாசிகளுக்கு பொட்டலும் ரயில்வே பீடர்ரோடும் தான் பொழுது போக்கு - ஊருக்கே தண்ணீர் வழங்கிய வேலா மடை வழியில் இருக்கிறது.

1990க்குப் பிறகு தான் பெரிதாக உள்ளது விருதுபட்டி ரயில் ஸ்டேசன், விருதுநகர் என்று பட்டி தொட்டி எல்லாம் பேசப்பட்டாலும் இன்னும் விருதுபட்டி என்றுதான் பழைய காலப் பெரிய வர்கள் பேசுகிறார்கள். ரயில்வே டிக்கெட்டுகளில் கூட ஏஞகூ என்று தான் போடுவார்கள்.

ஸ்டேசனுக்கு எதிரே இப்போது மரங்களாக உள்ள பகுதியில்தான் ஒரு ஆண் உட்கார்ந்து டிக்கெட் கொடுப்பார். நிலையம் ஒற்றைத் தண்ட வாளமாக இருக்கும். டிக்கெட் எடுத்து விட்டு ஓட வேண்டும். அப்போதும் 1960-களில் கூட்டமாகவே இருக்கும். ஆனால் பொறுமையாக ஏறி இறங்கு வார்கள். ஒரே ஒரு அய்யர் பாத்திரத்தில் வடை களை வைத்துக் கொண்டு நடைமேடை முழுதும் நடப்பார். ஐந்து பைசாவிற்கு ஒரு வடை அம்மா வாங்கித் தரும்போது, காரியாபட்டி ஊரணியோரக் கடை வடைகளின் ருசி மறந்து விருதுபட்டி கைப் பக்குவம் முந்தி நிற்கும்.
ரயில்வே ஸ்டேசனிலிருந்து வெளியே வரும் போது ஒரு சிறிய போஸ்ட் ஆபீஸ். 70களில் செ.ஞானன் உட்கார்ந்திருப்பார். போஸ்ட் மாஸ் டரான அவர் கலை இலக்கியப் பெரு மன்றம் பற்றியே பேசுவார். உள்ளூரில் உள்ள சிந்தனை வாதிகள், சிவப்புச் சிந்தனையாளர்கள் உட்கார்ந் திருக்க பேராசிரியர் நா.வா., பற்றியும் தொ.மு.சி. பற்றியும் ஞானன் சொல்ல ஏதோ கதை கேட்பது போலக் கேட்போம்.
சற்றுத் தள்ளி வந்தால் பஞ்சுப்பேட்டை இருக்கும். உள்ளே ரங்கநாதப் பெருமாள் கோவில் இருக்கும். அங்கே தான் மேடையில் உட்கார்ந்து கிருபானந்தவாரியார் “உபன்யாசம்” செய்வார். ஒவ்வொரு வருடமும் அவர் பேசும்போது இரவில் ரயில் போவதற்காக கேட்டை மூடுவார்கள். இவரும் “கேட்டை மூடினார்கள்” யாரைக் கேட்டு மூடினார்கள்” என்று டைமிங் டயலாக் பேச, கூட்டம் முழுவதும் சிரிக்கும். அவரும் சிரிப்பார்.
ராமமூர்த்தி ரோட்டில் நியூ முத்து டாக்கீஸ், அரச கட்டளை பார்க்க கம்பிகளில் ஏறி வரிசை தாண்டிச் செல்ல, கூட்டத்தில் எவரோ ஒருவர் “தாயோ... களா” என்று கத்துவார். இப்போது ராஜலெட்சுமி தியேட்டராகி விட்டது.
மதுரை ரோட்டில் ராதா டாக்கீஸ் தரை டிக்கெட் பிரபலம். முப்பது பைசாவிற்கு டிக்கெட் வாங்கித் தரையில் உட்கார பீடியும் மூத்திரமும் நாசியைத் துளைக்கும். படம் போடச் சொல்லி விசில் சத்தம் எழும்பும். முக்கால்வாசி தமிழ்ப்படம் அங்கே தான் தரையில் உட்கார்ந்து பார்த்தது.
இதனை விருதுபட்டியின் அடையாளம் என்றே சொல்லலாம். சுலோச்சனா தியேட்டராக பெயர் மாற்றப்பட்டு இப்போது கரூர் வைசியா பாங்க் ஆகி விட்டது.
நகரின் நடுமையத்தில் பஸ் நிலையம் எதிரே சென்ட்ரல் தியேட்டர் இருந்தது. பெரும்பாலும் எம்.ஜி.ஆர். படம் ஓடும். தியேட்டரில் படம் பார்த்து விட்டு ஊருக்குப் போக பஸ் ஸ்டாண்டு நோக்கி ஓடும் ரசிகப் பெருமக்கள் பெரும்பாலும் கோட்டூர், பாலவநத்தம், வச்சக்காரபட்டி, புல்லலக் கோட்டை ஊர்வாசிகளாகத் தான் இருப்பார்கள். இப்போது எல்லா ஊர்களையும் போல சென்ட்ரல் தியேட்டரும் உருமாறி எதைஎடுத்தாலும் நாற்பது ரூபாய் பஜாராகி விட்டது.
விருதுபட்டியில் எண்ணெய் புரோட்டா, புறாக்கறி போல ஆஞ்சநேயவிலாஸ் ஹோட்டலும் பெயர் பெற்றது. ஆதியில் வந்ததாக பெரியப்பா (ரெகுலர் கஸ்டமர்) கூறி அழைத்துச் செல்வார். இன்றும் பழைமை நிலை மாறாமல் அதே டேபிள், அதே உணவு வகை என்று தனக்கென ஒரு கூட்டத்தை வைத்துக் கொண்டுள்ளது. அதற்குப் பிறகு தன லெட்சுமி ஹோட்டல், பர்மா கடை என்று தோன்றி னாலும் நான் ஆஞ்சநேய விலாஸ் ரசிகர் என்று சொல்ல ஒரு கூட்டம் உள்ளது.
விருதுபட்டியில் பொழுது போக்கு பொட்டல் தான். வெயிலுகந்தம்மன் கோவில் வாசலையும் பஜாரையும் இணைக்கும் இந்தப் பொட்டலில் தான், காமராஜர் சுதந்திர முழக்க மிட்டார். ஜவஹர்லால் நேரு, ராஜேந்திர பிரசாத் என்று தலைவர்கள் வரும்போது காமராசரே ஒரு தொண் டரைப் போலக் கூட்டத்தை ஒழுங்குபடுத்துவார் என்று இன்றளவும் பேச்சு உண்டு. இங்கே வந்து பேசாத அரசியல்வாதிகளே கிடையாது. அசோக சக்கர ஸ்தூபி ஒன்று பிரம்மாண்டமாக நிற்கும். அதன் அடியில் “மகாலிங்கம்! வந்திருக்கும் அய்யா விற்கு ஒரு சீட்டு கொடு” என்று கிளி ஜோசியர் கட்டளையிட சீட்டெடுக்கும் கிளிகள். கூட்டத்தைக் கவருவதற்காக கிளி ஜோசியர் கிளிகளுக்கு வண்டி தள்ளுதல், சறுக்கு விளையாடுதல் “என்று பயிற்சி கொடுத்து வைத்திருந்தார்.

பாம்புக்கும் கீரிக்கும் சண்டை விடுதல், சுவை யான பருத்திப் பால் காடா விளக்கு எரிய ஜமுக் காளம் ஏலம் விடும் சங்கரன் கோவில் முத்துச்சாமி- இவைகளெல்லாம் இல்லாத பொட்டலுக்குப் போகவே மனம் கூசுகிறது.
விருதுபட்டியின் உயிர்ப்பான இந்தப் பொட்டல் களையிழந்து இப்போது தேங்காய், மிளகாய், காய்கறி விற்கும் மார்க்கெட்டுகளாக மாறிவிட்டன. சுற்றி உள்ள வீடுகள், கட்டடங்களிலிருந்து மழை நீரைக் கொண்டுவந்து நிரம்பிய தெப்பக்குளம் ஊரின் நிலத்தடி நீர் வற்றாமல் காக்கிறது.
விருதுபட்டியின் பங்குனிப் பொங்கல் திரு விழா மிகவும் பேசப்படுகிற ஒன்று. கொடி கட்டிப் பொங்கல் சாற்றி விட்டால் எல்லா ஊர்களிலும் வாழ்கிற விருதுபட்டி மக்கள் ஜாதி பேதமின்றித் தங்கள் சொந்த விழாவாக எண்ணிக் குவிந்துவிடு வார்கள். தேரோட்டம், கரகாட்டம் என்று திகழும் விழாவையொட்டி மு.ஏ. சாலா பள்ளி வளாகத்தில் பொருட்காட்சி திறக்கப்படும். நாடகம், சினிமா நடிகர் உரை என்று குதூகலமாக விழாவில் மகனுக்குப் பெண்ணும் மகளுக்குப் பையனையும் பார்க்கச் செய்து நிச்சயம் செய்வதும் நடக்கும்.
பொங்கலன்றும் முன்னும் பின்னும் உடலில் கரியையும் சுண்ணாம்பையும் பூசிக்கொண்டு வேப்பிலைக் கொத்துக்களை இடுப்பில் சொருகி,
“ஆஹோ! அய்யாஹோ!
ஆத்தாத்தா பெரியாத்தா
அம்பது மக்களைப் பெத்தாத்தா!
என்னையும் சேர்த்துப் பெத்தாத்தா
எனக்கு நாழி போடாத்தா!’
என்று தெருத்தெருவாக வேண்டுதல் வலம் வரு வதும் கையில் உள்ள விபூதியுடன் கூடிய தட்டில் எதிர்ப்படுவோரிடம் வாங்கும் காசுகளைக் கொண்டு வந்து உண்டியலில் சேர்ப்பதிலும் இன்றும் கூட எழுவது வயதான பெரியவர்களும் கலந்துகொள்வது கண்கொள்ளாக் காட்சி.
விருதுபட்டி அக்கினிச் சட்டி மிகவும் பிரபலம். பள்ளிப் பிள்ளைகள் முதல் பேரிளம் பெண்கள் வரை அக்கினிச் சட்டியை எடுத்து தெப்பம், மேலரத வீதி சுற்றி வந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். சில இடங்களில் அக்கினிச் சட்டி எடுத்து வருபவர் களுக்கு சம்பந்திகள் மரியாதை செலுத்துவார்கள். வழியில் சாமியாடுவதும் அருள்வாக்கு கேட்பதுவும் நடக்கும். திருவிழா முடிந்து விருந்தாளிகள் ஊருக்குத் திரும்பும்போது இருபது திருமணங்களாவது பேசி முடித்துச் செல்வார்கள்.
விருதுநகர் பஸ் ஸ்டாண்ட் ஒரு சினிமா திரை யரங்கம் அளவுதான், எம்.எஸ்.பி.ராஜா காலத்தில் உருவான இந்தப் பஸ் ஸ்டாண்டை ஒரு தரம் சுற்றி வந்தால் விருதுபட்டியின் கிராமிய பண்பாடு மிளிரும். இனிப்பான சேவு, ஜீரணி, காராச்சேவு இன்றும் கிடைக்கின்ற விருதுபட்டி பலகாரங்கள்.
பாலி கிளினிக், பிரசவ ஆஸ்பத்திரி என்றெல்லாம் வந்தாலும் விருதுநகரில் முன்னாளில் “லைசாண்டர் ஆஸ்பத்திரி தான் பெரிதும் பேசப்படும். இதன் அருகில் உள்ள சந்தில் பாம்பாட்டி முதலியார் என்பவர் வீட்டில் ஒரு சாமியார் ஆணிச் செருப்பு போட்டுக் கொண்டு அருள்வாக்கு கூறுவார். இதே போலத் தெப்பக்குளத்தின் கரையில் உள்ள “காய்ச்சல் கார அம்மன் தான் ஊராருக்கு உடனடி தீர்வு. காய்ச்சல் வந்தவர்களை அழைத்துச் சென்று திருநீறு பூசி” விட்டால் போதும். காய்ச்சல் குறைந்து விடுவதான நம்பிக்கை இன்றும் உண்டு. மாரியம்மனுக்கு கண் படிவம் கை, கால் உருவங்கள் வாங்கி பிரார்த்தனைக் கான நேர்த்திக் கடன்கள் கோவிலில் செலுத்தப் படும்.
விருதுபட்டியின் பழைய வீடுகளெல்லாம் ஒரே மாதிரி இருக்கும். உள்ளே வீடுகள் விசாலமாக இருந்தாலும் வாயிற்கதவுகள் குறுகியதாக இருக்கும். எல்லா வீடுகளிலும் “எடுப்புக் கக்கூஸ்” வழக்கம் 80கள் வரை இருந்தது. அப்பத்தா வீட்டில் “கஞ்சி ஊத்துங்க ஆச்சியோவ்” என்று குரல் கொடுக்கும் பூச்சியம்மாள்தான் ரெகுலராக கக்கூஸ் சுத்தம் செய்பவள்.
நாயக்கமார் சாவடியில் வைகுண்ட ஏகாதசிக்கு கட்டபொம்மன் நாடகம்தான் வழக்கமாக நடக்கும். இரண்டு நாட்கள்கூடப் போடுவார்கள். பானர் மென்னும் கட்டபொம்மனும் மாறி மாறிப் பேசும் போது பொழுது விடியத் தொடங்கும்.
இந்த நாடகம் நடக்கும்போது பேரனை மடியில் போட்டுத் தாலாட்டும் போது கூட்டத்தில் போக இடம் தெரியாமல் ஓடி வந்த ஒரு பன்றிக்குட்டியும் மடியின் கணகணப்பில் படுக்க தங்கம்மாள் பாட்டி அதையும் தட்டிக் கொடுத்ததாகத் தெருவாசிகள் சொல்வார்கள். இதனால் சந்தியம்மன் கோவில் தெரு இளைஞர்கள் அவளுக்கு “வராகத்தைத் தாலாட்டிய வனிதை” என்று பட்டம் கொடுத்தனர்.
விருதுபட்டியின் தேசிய வாசகசாலை தேச பக்தர்களின் புகலிடம். வீட்டுக்கு வருகிறவர்களுக்கும் சந்திப்பவர்களுக்கும் திருக்குறளைக் கொடுக்கும் வள்ளல் ச.வெள்ளைச்சாமி நாடார் விருதுபட்டியில் திருக்குறள் பரவக்காரணமானவர். இவர் பெயரில் பலகல்வி நிலையங்கள் உள்ளன.
எந்த அளவிற்கு விருதுபட்டி தேசிய விடுதலைக்குக் குரல் கொடுத்ததோ அதே அளவில் நீதிக்கட்சியும் வளர்ந்தது. விருதுநகரில் ஏ.ஏ.ராமசாமி, ஏ.வி.பி. ஆசைத்தம்பி போன்றோர் ஜஸ்டிஸ் பார்ட்டியையும், தி.மு.க.வையும் வளர்த்தனர்.
தேசபக்தரான தோழர் உலகநாதன், சீனிவாசன் போன்றவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியை வளர்த்தனர். விருதுபட்டியின் தொழிற்சங்கம் வளர்ச்சியில் கம்யூனிஸ்டுகளின் பங்கு மகத்தானது.
எந்த அளவிற்கு காங்கிரசையும் காமராசரையும் விருதுபட்டி தூக்கிப் பிடித்து உலகளாவிய புகழ் பெறச் செய்ததோ அதை ஊர் கல்லூரி மாணவரான பெ.சீனிவாசனிடம் காமராசரைத் தோற்கச் செய்ததை இன்றளவும் வருத்தத்துடன் நினைவு கூர்கின்றனர். என்றாலும் காமராசர் பிறந்து வளர்ந்த சுலோச்சன நாடார் தெருவில் உள்ள அவரது வீடு இன்றளவும் பல மாநிலத் தலைவர்கள் வந்து காணும் நினைவு இல்லமாக உள்ளது.
விற்பவனுக்கும் வாங்குபவனுக்கும் இடையே யான விற்பனைவரி தோன்றுவதற்கு விருதுபட்டி நாடார்களின் பிடி அரிசித்திட்டம், மகமைக்கு வரியே மூலகாரணமாகியுள்ளது என்பது பலருக்குத் தெரியாது.
விருதுபட்டிக்கு வருகை தந்த ராஜாஜி இந்தப் பிடி அரிசித் திட்டம், மகமைக்கு வரி இவை களைக் கேள்விப்பட்டு வணிகவரி, விற்பனை வரியை அமுல்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
கடைசியாக ஒன்று! விருதுநகரின் சந்து பொந்து களிளெல்லாம் குஞ்சும் குளுவானுமாய் சகதி அள்ளிப் பூசித் திரிந்த பன்றிகள் இப்போது முற்றிலுமாக இல்லை என்பது ஆறுதலான விஷயம்.

விவரங்கள்
எழுத்தாளர்: ந.பாண்டுரங்கன்