Thursday 19 October 2017

VIRUDHUNAGAR - CIVILISATION GONE WITH THE WIND


VIRUDHUNAGAR - 
CIVILISATION GONE WITH THE WIND 





தென் மாவட்டங்களில் நடைபெறும் திருவிழாக்களில் விருதுநகர் பராசக்தி மாரி யம்மன் கோவில் பங்குனி பொங்கல் விழா பிரசித்தி பெற்றது. இந்த விழாவின் முக்கிய அம்சமாக பக்தர்கள் அக்னிச்சட்டி எடுக்கும் விழா இன்று கோலாகலமாக நடக்கிறது.
 ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னிச்சட்டி எடுத்து வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். கோவில் வரலாறு விருதுநகர், விருதுபட்டியாக இருந்த போது 1780-ல் தற்போது கோவில் உள்ள இடத்தில் சிறிய பீடம் அமைத்து 1859-ல் பீடம் மீது அம்மன் சிலை வைத்து வழிபடத்துவங்கினர். அன்று முதல் இக்கோயிலின் முக்கிய பண்டிகையாக பங்குனி பொங்கல் திருவிழாவை கொண்டாடி வருகின்றனர். 1918-ல் கோயிலில் முதல்முறையாக கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. மண் சுவரால் ஆன கோவில் மூலஸ்தானத்திற்கு 1923ல் புதிய கட்டிடம் கட்டப்பட்டது.


 1933 முதல் பங்குனி பொங்கல் திருவிழாவை வெகுவிமரிசையாக கொண்டாட துவங்கினர். கோயிலின் முன்புறம் 1966-ல் சிற்பங்கள் இல்லாமல் வடிவமைக்கப்பட்டது. அதன்பின் 1975-ல் இருந்து 1980 வரை சிற்பங்கள் அமைக்கும் பணி மேற்கொள் ளப்பட்டது. இப்பணி 1981ல் நிறைவடைந்தது.
பொங்கல் அறிவிப்பு பொங்கல் திருவிழாவிற்கு 21 நாட்களுக்கு முன்பு தெப்பம் மேற்கு பகுதியில் உள்ள தண்ணீர் தர்மம் விநாயகர் கோவிலில் அனைத்து சமுதாய பெரியோர்களையும் அழைத்து விழா குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதையடுத்து காணிக்கைகாரர்கள் மூன்று பேரை கோயிலுக்கு அழைத்து சென்று கோயில் முன்பு தண்டோரா மூலம் பொங்கல் தேதியை அறிவித்தனர். தொடர்ந்து விருதுநகர் வீதிகள் தோறும் தண்டோரா போட்டு பொங்கல் தேதி அறிவிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து பக்தர்கள் விரதம் மேற்கொண்டுள்ளனர். பொங்கல் சாட்டியதில் இருந்து 15-வது நாள் கோயிலில் கொடியேற்றம் நடந்தது. அன்று முதல் திருவிழா துவங்கி விட்டது. பொங்கல் விழா இன்று நடக்கிறது. நகரில் இருந்தும், கிராமங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னிச்சட்டி எடுத்து வந்தும், வாயில் சூலம் குத்தியும், கரகம், ரதம் இழுத்து வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இன்று அம்மன் கோயில் திடலில் அமைக்கப்பட்டுள்ளது. பிரமாண்ட மண்டபத்தில் அம்மன் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நாளை மாலை தேரோட்டம் நடக்கிறது.
பிழைப்புக்காகப் பிரதேசம் வந்தாலும் ஓடி ஆடி விளையாண்ட மண்ணின் நினைவுகளே அலாதி தான். விருதுநகரின் எச்சங்கள் இன்னும் மனதை விட்டு நீங்கவில்லை.
ஊருக்கு நடுவே பராசக்தி மாரியம்மன் கோவில், பக்கத்தில் வெயிலாத்தேவர் பிள்ளையார் கோவில், பொட்டல், (இப்போது தேசபந்து திடல்) வெயில் உகந்த அம்மன் கோயில், பாலசுப்பிரமணியர் கோவில், ரேடியோ டெய்லர், பரபரப்பான பஜார்.
பெரும்பாலும் விருதுநகர் வாசிகளுக்கு பொட்டலும் ரயில்வே பீடர்ரோடும் தான் பொழுது போக்கு - ஊருக்கே தண்ணீர் வழங்கிய வேலா மடை வழியில் இருக்கிறது.

1990க்குப் பிறகு தான் பெரிதாக உள்ளது விருதுபட்டி ரயில் ஸ்டேசன், விருதுநகர் என்று பட்டி தொட்டி எல்லாம் பேசப்பட்டாலும் இன்னும் விருதுபட்டி என்றுதான் பழைய காலப் பெரிய வர்கள் பேசுகிறார்கள். ரயில்வே டிக்கெட்டுகளில் கூட ஏஞகூ என்று தான் போடுவார்கள்.

ஸ்டேசனுக்கு எதிரே இப்போது மரங்களாக உள்ள பகுதியில்தான் ஒரு ஆண் உட்கார்ந்து டிக்கெட் கொடுப்பார். நிலையம் ஒற்றைத் தண்ட வாளமாக இருக்கும். டிக்கெட் எடுத்து விட்டு ஓட வேண்டும். அப்போதும் 1960-களில் கூட்டமாகவே இருக்கும். ஆனால் பொறுமையாக ஏறி இறங்கு வார்கள். ஒரே ஒரு அய்யர் பாத்திரத்தில் வடை களை வைத்துக் கொண்டு நடைமேடை முழுதும் நடப்பார். ஐந்து பைசாவிற்கு ஒரு வடை அம்மா வாங்கித் தரும்போது, காரியாபட்டி ஊரணியோரக் கடை வடைகளின் ருசி மறந்து விருதுபட்டி கைப் பக்குவம் முந்தி நிற்கும்.
ரயில்வே ஸ்டேசனிலிருந்து வெளியே வரும் போது ஒரு சிறிய போஸ்ட் ஆபீஸ். 70களில் செ.ஞானன் உட்கார்ந்திருப்பார். போஸ்ட் மாஸ் டரான அவர் கலை இலக்கியப் பெரு மன்றம் பற்றியே பேசுவார். உள்ளூரில் உள்ள சிந்தனை வாதிகள், சிவப்புச் சிந்தனையாளர்கள் உட்கார்ந் திருக்க பேராசிரியர் நா.வா., பற்றியும் தொ.மு.சி. பற்றியும் ஞானன் சொல்ல ஏதோ கதை கேட்பது போலக் கேட்போம்.
சற்றுத் தள்ளி வந்தால் பஞ்சுப்பேட்டை இருக்கும். உள்ளே ரங்கநாதப் பெருமாள் கோவில் இருக்கும். அங்கே தான் மேடையில் உட்கார்ந்து கிருபானந்தவாரியார் “உபன்யாசம்” செய்வார். ஒவ்வொரு வருடமும் அவர் பேசும்போது இரவில் ரயில் போவதற்காக கேட்டை மூடுவார்கள். இவரும் “கேட்டை மூடினார்கள்” யாரைக் கேட்டு மூடினார்கள்” என்று டைமிங் டயலாக் பேச, கூட்டம் முழுவதும் சிரிக்கும். அவரும் சிரிப்பார்.
ராமமூர்த்தி ரோட்டில் நியூ முத்து டாக்கீஸ், அரச கட்டளை பார்க்க கம்பிகளில் ஏறி வரிசை தாண்டிச் செல்ல, கூட்டத்தில் எவரோ ஒருவர் “தாயோ... களா” என்று கத்துவார். இப்போது ராஜலெட்சுமி தியேட்டராகி விட்டது.
மதுரை ரோட்டில் ராதா டாக்கீஸ் தரை டிக்கெட் பிரபலம். முப்பது பைசாவிற்கு டிக்கெட் வாங்கித் தரையில் உட்கார பீடியும் மூத்திரமும் நாசியைத் துளைக்கும். படம் போடச் சொல்லி விசில் சத்தம் எழும்பும். முக்கால்வாசி தமிழ்ப்படம் அங்கே தான் தரையில் உட்கார்ந்து பார்த்தது.
இதனை விருதுபட்டியின் அடையாளம் என்றே சொல்லலாம். சுலோச்சனா தியேட்டராக பெயர் மாற்றப்பட்டு இப்போது கரூர் வைசியா பாங்க் ஆகி விட்டது.
நகரின் நடுமையத்தில் பஸ் நிலையம் எதிரே சென்ட்ரல் தியேட்டர் இருந்தது. பெரும்பாலும் எம்.ஜி.ஆர். படம் ஓடும். தியேட்டரில் படம் பார்த்து விட்டு ஊருக்குப் போக பஸ் ஸ்டாண்டு நோக்கி ஓடும் ரசிகப் பெருமக்கள் பெரும்பாலும் கோட்டூர், பாலவநத்தம், வச்சக்காரபட்டி, புல்லலக் கோட்டை ஊர்வாசிகளாகத் தான் இருப்பார்கள். இப்போது எல்லா ஊர்களையும் போல சென்ட்ரல் தியேட்டரும் உருமாறி எதைஎடுத்தாலும் நாற்பது ரூபாய் பஜாராகி விட்டது.
விருதுபட்டியில் எண்ணெய் புரோட்டா, புறாக்கறி போல ஆஞ்சநேயவிலாஸ் ஹோட்டலும் பெயர் பெற்றது. ஆதியில் வந்ததாக பெரியப்பா (ரெகுலர் கஸ்டமர்) கூறி அழைத்துச் செல்வார். இன்றும் பழைமை நிலை மாறாமல் அதே டேபிள், அதே உணவு வகை என்று தனக்கென ஒரு கூட்டத்தை வைத்துக் கொண்டுள்ளது. அதற்குப் பிறகு தன லெட்சுமி ஹோட்டல், பர்மா கடை என்று தோன்றி னாலும் நான் ஆஞ்சநேய விலாஸ் ரசிகர் என்று சொல்ல ஒரு கூட்டம் உள்ளது.
விருதுபட்டியில் பொழுது போக்கு பொட்டல் தான். வெயிலுகந்தம்மன் கோவில் வாசலையும் பஜாரையும் இணைக்கும் இந்தப் பொட்டலில் தான், காமராஜர் சுதந்திர முழக்க மிட்டார். ஜவஹர்லால் நேரு, ராஜேந்திர பிரசாத் என்று தலைவர்கள் வரும்போது காமராசரே ஒரு தொண் டரைப் போலக் கூட்டத்தை ஒழுங்குபடுத்துவார் என்று இன்றளவும் பேச்சு உண்டு. இங்கே வந்து பேசாத அரசியல்வாதிகளே கிடையாது. அசோக சக்கர ஸ்தூபி ஒன்று பிரம்மாண்டமாக நிற்கும். அதன் அடியில் “மகாலிங்கம்! வந்திருக்கும் அய்யா விற்கு ஒரு சீட்டு கொடு” என்று கிளி ஜோசியர் கட்டளையிட சீட்டெடுக்கும் கிளிகள். கூட்டத்தைக் கவருவதற்காக கிளி ஜோசியர் கிளிகளுக்கு வண்டி தள்ளுதல், சறுக்கு விளையாடுதல் “என்று பயிற்சி கொடுத்து வைத்திருந்தார்.

பாம்புக்கும் கீரிக்கும் சண்டை விடுதல், சுவை யான பருத்திப் பால் காடா விளக்கு எரிய ஜமுக் காளம் ஏலம் விடும் சங்கரன் கோவில் முத்துச்சாமி- இவைகளெல்லாம் இல்லாத பொட்டலுக்குப் போகவே மனம் கூசுகிறது.
விருதுபட்டியின் உயிர்ப்பான இந்தப் பொட்டல் களையிழந்து இப்போது தேங்காய், மிளகாய், காய்கறி விற்கும் மார்க்கெட்டுகளாக மாறிவிட்டன. சுற்றி உள்ள வீடுகள், கட்டடங்களிலிருந்து மழை நீரைக் கொண்டுவந்து நிரம்பிய தெப்பக்குளம் ஊரின் நிலத்தடி நீர் வற்றாமல் காக்கிறது.
விருதுபட்டியின் பங்குனிப் பொங்கல் திரு விழா மிகவும் பேசப்படுகிற ஒன்று. கொடி கட்டிப் பொங்கல் சாற்றி விட்டால் எல்லா ஊர்களிலும் வாழ்கிற விருதுபட்டி மக்கள் ஜாதி பேதமின்றித் தங்கள் சொந்த விழாவாக எண்ணிக் குவிந்துவிடு வார்கள். தேரோட்டம், கரகாட்டம் என்று திகழும் விழாவையொட்டி மு.ஏ. சாலா பள்ளி வளாகத்தில் பொருட்காட்சி திறக்கப்படும். நாடகம், சினிமா நடிகர் உரை என்று குதூகலமாக விழாவில் மகனுக்குப் பெண்ணும் மகளுக்குப் பையனையும் பார்க்கச் செய்து நிச்சயம் செய்வதும் நடக்கும்.
பொங்கலன்றும் முன்னும் பின்னும் உடலில் கரியையும் சுண்ணாம்பையும் பூசிக்கொண்டு வேப்பிலைக் கொத்துக்களை இடுப்பில் சொருகி,
“ஆஹோ! அய்யாஹோ!
ஆத்தாத்தா பெரியாத்தா
அம்பது மக்களைப் பெத்தாத்தா!
என்னையும் சேர்த்துப் பெத்தாத்தா
எனக்கு நாழி போடாத்தா!’
என்று தெருத்தெருவாக வேண்டுதல் வலம் வரு வதும் கையில் உள்ள விபூதியுடன் கூடிய தட்டில் எதிர்ப்படுவோரிடம் வாங்கும் காசுகளைக் கொண்டு வந்து உண்டியலில் சேர்ப்பதிலும் இன்றும் கூட எழுவது வயதான பெரியவர்களும் கலந்துகொள்வது கண்கொள்ளாக் காட்சி.
விருதுபட்டி அக்கினிச் சட்டி மிகவும் பிரபலம். பள்ளிப் பிள்ளைகள் முதல் பேரிளம் பெண்கள் வரை அக்கினிச் சட்டியை எடுத்து தெப்பம், மேலரத வீதி சுற்றி வந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். சில இடங்களில் அக்கினிச் சட்டி எடுத்து வருபவர் களுக்கு சம்பந்திகள் மரியாதை செலுத்துவார்கள். வழியில் சாமியாடுவதும் அருள்வாக்கு கேட்பதுவும் நடக்கும். திருவிழா முடிந்து விருந்தாளிகள் ஊருக்குத் திரும்பும்போது இருபது திருமணங்களாவது பேசி முடித்துச் செல்வார்கள்.
விருதுநகர் பஸ் ஸ்டாண்ட் ஒரு சினிமா திரை யரங்கம் அளவுதான், எம்.எஸ்.பி.ராஜா காலத்தில் உருவான இந்தப் பஸ் ஸ்டாண்டை ஒரு தரம் சுற்றி வந்தால் விருதுபட்டியின் கிராமிய பண்பாடு மிளிரும். இனிப்பான சேவு, ஜீரணி, காராச்சேவு இன்றும் கிடைக்கின்ற விருதுபட்டி பலகாரங்கள்.
பாலி கிளினிக், பிரசவ ஆஸ்பத்திரி என்றெல்லாம் வந்தாலும் விருதுநகரில் முன்னாளில் “லைசாண்டர் ஆஸ்பத்திரி தான் பெரிதும் பேசப்படும். இதன் அருகில் உள்ள சந்தில் பாம்பாட்டி முதலியார் என்பவர் வீட்டில் ஒரு சாமியார் ஆணிச் செருப்பு போட்டுக் கொண்டு அருள்வாக்கு கூறுவார். இதே போலத் தெப்பக்குளத்தின் கரையில் உள்ள “காய்ச்சல் கார அம்மன் தான் ஊராருக்கு உடனடி தீர்வு. காய்ச்சல் வந்தவர்களை அழைத்துச் சென்று திருநீறு பூசி” விட்டால் போதும். காய்ச்சல் குறைந்து விடுவதான நம்பிக்கை இன்றும் உண்டு. மாரியம்மனுக்கு கண் படிவம் கை, கால் உருவங்கள் வாங்கி பிரார்த்தனைக் கான நேர்த்திக் கடன்கள் கோவிலில் செலுத்தப் படும்.
விருதுபட்டியின் பழைய வீடுகளெல்லாம் ஒரே மாதிரி இருக்கும். உள்ளே வீடுகள் விசாலமாக இருந்தாலும் வாயிற்கதவுகள் குறுகியதாக இருக்கும். எல்லா வீடுகளிலும் “எடுப்புக் கக்கூஸ்” வழக்கம் 80கள் வரை இருந்தது. அப்பத்தா வீட்டில் “கஞ்சி ஊத்துங்க ஆச்சியோவ்” என்று குரல் கொடுக்கும் பூச்சியம்மாள்தான் ரெகுலராக கக்கூஸ் சுத்தம் செய்பவள்.
நாயக்கமார் சாவடியில் வைகுண்ட ஏகாதசிக்கு கட்டபொம்மன் நாடகம்தான் வழக்கமாக நடக்கும். இரண்டு நாட்கள்கூடப் போடுவார்கள். பானர் மென்னும் கட்டபொம்மனும் மாறி மாறிப் பேசும் போது பொழுது விடியத் தொடங்கும்.
இந்த நாடகம் நடக்கும்போது பேரனை மடியில் போட்டுத் தாலாட்டும் போது கூட்டத்தில் போக இடம் தெரியாமல் ஓடி வந்த ஒரு பன்றிக்குட்டியும் மடியின் கணகணப்பில் படுக்க தங்கம்மாள் பாட்டி அதையும் தட்டிக் கொடுத்ததாகத் தெருவாசிகள் சொல்வார்கள். இதனால் சந்தியம்மன் கோவில் தெரு இளைஞர்கள் அவளுக்கு “வராகத்தைத் தாலாட்டிய வனிதை” என்று பட்டம் கொடுத்தனர்.
விருதுபட்டியின் தேசிய வாசகசாலை தேச பக்தர்களின் புகலிடம். வீட்டுக்கு வருகிறவர்களுக்கும் சந்திப்பவர்களுக்கும் திருக்குறளைக் கொடுக்கும் வள்ளல் ச.வெள்ளைச்சாமி நாடார் விருதுபட்டியில் திருக்குறள் பரவக்காரணமானவர். இவர் பெயரில் பலகல்வி நிலையங்கள் உள்ளன.
எந்த அளவிற்கு விருதுபட்டி தேசிய விடுதலைக்குக் குரல் கொடுத்ததோ அதே அளவில் நீதிக்கட்சியும் வளர்ந்தது. விருதுநகரில் ஏ.ஏ.ராமசாமி, ஏ.வி.பி. ஆசைத்தம்பி போன்றோர் ஜஸ்டிஸ் பார்ட்டியையும், தி.மு.க.வையும் வளர்த்தனர்.
தேசபக்தரான தோழர் உலகநாதன், சீனிவாசன் போன்றவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியை வளர்த்தனர். விருதுபட்டியின் தொழிற்சங்கம் வளர்ச்சியில் கம்யூனிஸ்டுகளின் பங்கு மகத்தானது.
எந்த அளவிற்கு காங்கிரசையும் காமராசரையும் விருதுபட்டி தூக்கிப் பிடித்து உலகளாவிய புகழ் பெறச் செய்ததோ அதை ஊர் கல்லூரி மாணவரான பெ.சீனிவாசனிடம் காமராசரைத் தோற்கச் செய்ததை இன்றளவும் வருத்தத்துடன் நினைவு கூர்கின்றனர். என்றாலும் காமராசர் பிறந்து வளர்ந்த சுலோச்சன நாடார் தெருவில் உள்ள அவரது வீடு இன்றளவும் பல மாநிலத் தலைவர்கள் வந்து காணும் நினைவு இல்லமாக உள்ளது.
விற்பவனுக்கும் வாங்குபவனுக்கும் இடையே யான விற்பனைவரி தோன்றுவதற்கு விருதுபட்டி நாடார்களின் பிடி அரிசித்திட்டம், மகமைக்கு வரியே மூலகாரணமாகியுள்ளது என்பது பலருக்குத் தெரியாது.
விருதுபட்டிக்கு வருகை தந்த ராஜாஜி இந்தப் பிடி அரிசித் திட்டம், மகமைக்கு வரி இவை களைக் கேள்விப்பட்டு வணிகவரி, விற்பனை வரியை அமுல்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
கடைசியாக ஒன்று! விருதுநகரின் சந்து பொந்து களிளெல்லாம் குஞ்சும் குளுவானுமாய் சகதி அள்ளிப் பூசித் திரிந்த பன்றிகள் இப்போது முற்றிலுமாக இல்லை என்பது ஆறுதலான விஷயம்.

விவரங்கள்
எழுத்தாளர்: ந.பாண்டுரங்கன்

No comments:

Post a Comment