SAMBAPATHI DEVI , PROTECTOR OF POOMPUKAR
பூம்புகாரின் காவல் தெய்வம் சம்பாபதி தேவி
முற்காலச் சோழர்களின் தலைநகராக மட்டுமின்றி, துறைமுக நகரமாகவும் செல்வச் செழிப்புடன் திகழ்ந்த ஊர், பூம்புகார். மிக மிகத் தொன்மையான வரலாற்றுச் சிறப்பு இந்த நகரத்துக்கு உண்டு. பூம்புகார் கடலின் சீற்றத்தால் மறைந்துபோனாலும், இன்றைக்கும் சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காப்பியங்கள் மூலமாக அதன் சிறப்புகளையும் பெருமைகளையும் நம்மால் புரிந்துகொள்ள முடியும்.
அன்றைய பூம்புகாரைக் கடல் கொண்டுவிட்டாலும், கடல் சீற்றத்திலிருந்து தப்பி எஞ்சி இருக்கும் ஒரு பகுதி இன்றைக்கும் உண்டு. அது பூம்புகாரின் காவல் தெய்வமாகக் கொண்டாடப்படும் சம்பாபதி கோட்டம். தற்போது இந்தப் பகுதி `சாயாவனம்’ என்று அழைக்கப்படுகிறது.
பூம்புகாருக்குக் `காவிரிப் பூம்பட்டினம்’ என்ற இன்னொரு பெயர் ஏற்பட்டதற்குக் காரணம், இந்தச் சம்பாபதி கோட்டத்தில் அருள்புரியும் பெண் தெய்வமான சம்பாபதிதான். இதை மணிமேகலை காப்பியத்திலிருந்து நாம் அறிந்துகொள்ள முடியும்.
செங்கதிர்ச் செல்வன் திருக்குலம் விளக்கும்
கஞ்ச வேட்கையிற் காந்தமன் வேண்ட
அமர முனிவன் அகத்தியன் றனாது
காகங் கவிழ்த்த காவிரிப் பாவை
செழுங்குணக் கொழுகிய சம்பா பதியயல
பொங்கு நீர்ப்பரப்பொடு பொருந்தித் தோன்ற
முற்காலத்தில் சூரிய குலத்தைச் சேர்ந்த காந்தமன் என்ற மன்னன், தனது நாட்டில் தண்ணீர் இல்லாத காரணத்தால் மக்கள் தவிப்பதைக் கண்டு, தண்ணீர் வேண்டித் தவம் புரிந்தான். தன் குடிமக்களின் துன்பம் போகத் தன்னை வருத்தித் தவமியற்றும் மன்னன் காந்தமனிடம் அன்பும் இரக்கமும்கொண்ட அகத்திய முனிவர், தம் கைக் கமண்டலத்தில் இருந்த காவிரி நீரை விடுவித்தார். அது கிழக்காகப் பாய்ந்துசென்று சம்பாபதிக் கோயிலுக்கு முன்பாகத் தவழ்ந்தோடியது. வரப்போகும் காலத்தில் சோழர்தம் குலக்கொடியாகத் திகழப்போகும் காவிரி, தன்னை விடுவித்த அகத்திய முனிவரின் உத்தரவின்படி, பெண்ணாக வடிவெடுத்துச் சம்பாபதி தெய்வத்தைத் தொழுது நின்றாள்.
தனக்கு முன்பாகத் தவழ்ந்து வந்து, பெண்ணுருக்கொண்டு தன்னைத் தொழுது நின்ற காவிரியைப் பார்த்து, `எப்போது பிரம்மதேவன் இந்த உலகத்தையும் உலகத்தில் உள்ள உயிரினங்களையும் படைத்தானோ, அப்போது முதலே இந்த ஊர் என் பெயரில் சம்பாபதி என்று அழைக்கப்பட்டது. இனி, உன் பெயரால் இந்த ஊர் காவிரிப்பூம்பட்டினம் என்று அழைக்கப்படுவதாக' என்று வரம் தந்து வாழ்த்தினாள்.
இந்தச் சம்பாபதி தெய்வம் உலகம் தோன்றிய போதே தோன்றியவள் என்பதால், இவளையே `முதல்வியான இறைவி’ என்றும் `முதியோள்’ என்றும் சிறப்பித்துச் சொல்கிறார்கள். இவளுடைய கோயில், `முதியோள் கோட்டம்’ என்று அழைக்கப்பட்டதாக `பதியோர் தம்மொடு பலர் தொழுதேத்து முதியோள் கோட்டம்' என்று மணிமேகலை குறிப்பிடுகிறது. மேலும், `தீவ தெய்வம்’ என்றும் சம்பாபதியைப் போற்றுகிறது மணிமேகலை காப்பியம். தீவினை காக்க வந்த தெய்வமாம் இவள்!
தீவு என்பது மேருமலைக்குத் தெற்கிலிருந்த நாவலந்தீவைக் குறிப்பதாகும். ஆதிகாலத்தில் மேருமலைக்குத் தெற்கில் உள்ள நாவலந்தீவுப் பகுதியில் அரக்கர்களின் தொல்லை அதிகமாக இருந்தது. அரக்கர்களின் தொல்லையிலிருந்து மக்களைக் காப்பதற்காக, உலகின் ஆதிமுதற் தெய்வமான அம்பிகையே சம்பாபதி தெய்வமாகத் தோன்றினாளாம்! அவள் எங்கு தோன்றி எப்படி இங்கு வந்தாள்?
பொன்திகழ் நெடுவரை உச்சித் தோன்றி
தென்திசை பெயர்ந்த இத் தீவத் தெய்வதம்
பொன்போல் ஒளிரும் சிகரங்களைக் கொண்ட மேருமலையின் உச்சியில் தோன்றிய பெண் தெய்வமாம் இவள். பின்னர், தென் திசை மக்களைக் காக்கத் திருவுள்ளம்கொண்டு பூம்புகாரை அடைந்த அந்தப் பெண் தெய்வம்,
சாகைச் சம்பு தன் கீழ் நின்று
மாநில மடந்தைக்கு வருந்துயர் கேட்டு
வெந்திற லரக்கர்க்கு வெம்பகை தோற்ற
சம்பு என்பாள் சம்பாபதியினள்
அடர்த்தியான கிளைகளை உடைய பெரிய நாவல் மரத்தினடியில் வந்து அமர்ந்ததால், `சம்பு’ என்று பெயர் பெற்றாள். சம்பு என்றால் `நாவல்’ என்று பொருள். வடமொழியில் `ஜம்பு’ என்றும் அழைப்பார்கள். நாவல் மரங்கள் அடர்ந்து இருந்தபடியால்தான் அந்தத் தீவு `நாவலந்தீவு’ என்றும் `ஜம்புத்வீபம்’ என்றும் அழைக்கப்பட்டது.
சம்பாபதி தெய்வம், அரக்க குணம் கொண்டவர்களிடமிருந்து பெண்களைக் காப்பாற்ற மட்டும் வரவில்லை. பூம்புகாரின் நீர்நிலைகள், பசுமையான சோலைகள், மக்களின் வாழ்விடங்கள், தெய்வங்கள் உறையும் திருக் கோயில்களையும் காக்கும் காவல் தெய்வமாகவும் இருந்துள்ளதை...
`துறையும் மன்றமுந் தொல்வலி மரனும்
உறையுளுங் கோட்டமும் காப்பாய்' - என்று பூம்புகாரின் மக்கள் சம்பாபதி தெய்வத்தை வாழ்த்தி வணங்கியதிலிருந்து நம்மால் அறிய முடிகிறது. பூம்புகார் மக்கள் மட்டுமல்லாமல், வாணிபத்தின் பொருட்டுப் பலப் பல அயல் தேசங்களிலிருந்து வந்தவர்களும் வழிபட்ட சம்பாபதி தெய்வத்தின் கோயிலை, `முதியோள் கோட்டம்’ என்றே மணிமேகலை காப்பியம் குறிப்பிடுகிறது. இந்தக் காப்பியத்தில் வரும் சில சம்பவங்கள் இந்தக் கோயிலுடன் தொடர்பு கொண்டிருந்ததையும் நம்மால் அறிய முடிகிறது.
மாதவியின் மகளான மணிமேகலையின் அழகைப் பற்றிக் கேள்விப்பட்டு அவளை அடைய விரும்பினான் இளவரசனான உதயகுமாரன். ஒருமுறை அவன் மணிமேகலையை அடைய விரும்பி அவளைத் துரத்தியபோது, அவனிடமிருந்து தப்புவதற்காக, மணிமேகலை அடைக்கலம் புகுந்தது சம்பாபதி கோயிலுக்குள் தான்.
அங்கே அவள் தன்னை காயசண்டிகையாக மாற்றிக்கொள்கிறாள் என்று நீளும் கதை. தகாத விருப்பத்துடன் வந்தவன் என்பதால், உதயகுமாரனால் முதியோள் கோட்டமான சம்பாபதி கோயிலுக்குள் செல்ல முடியவில்லை. எனவே, வெளியில் இருந்தபடியே
'முதியாள் உன்றன் கோட்டம் புகுந்த
மதிவாள் முகத்து மணிமேகலை தனை
ஒழியப் போகேன்' என்று சூளுரைத்ததாக மணிமேகலை குறிப்பிடுகிறது.
இப்படி மணிமேகலை காப்பியத்தில் மிகவும் சிறப்பாக விவரிக்கப்ப ட்டிருக்கும், நாவலந்தீவின் மூத்த தெய்வம் சம்பாபதி தெய்வம் குடியிருக்கும் ஆலயம், கடல்கோளால் மூழ்காமல் இருந்தாலும் கூட, கோயில் முற்றாகச் சிதைந்துபோய், தற்போது ஒரு சிறிய செங்கற் கட்டடத்தில் முறைப் படியான பூஜைகள் எதுவும் இல்லாமல் இருப்பது மிகுந்த வேதனையைத் தருகிறது.
பூம்புகாருக்குச் சுமார் இரண்டு கி.மீ தொலைவில் உள்ள சாயாவனம் என்ற ஊரின் தென்புறத்தில், அடர்த்தியான புதர்கள் மண்டிக்கிடக்கும் ஒற்றையடிப் பாதையில் நடந்து சென்றால், சற்றுத் தொலைவில் ஒரு வெட்டவெளியில் முதலில் நம் கண்களில் படுவது ஆண் பூதம், பெண் பூதம் என்ற இரண்டு பூதங்களின் பிரமாண்டமான சிலைகள். இந்த இரண்டு பூதங்கள்தான் சம்பாபதி கோயிலைக் காவல் காத்து வருவதாகச் சொல்கிறார்கள்.
பிரமாண்டமான அந்தப் பூதங்களின் உடல்கள் மெல்லிய ஒற்றை ஆடையால் போர்த்தப் பட்டிருப்பதைக் கண்டதுமே, கோயிலின் நிலைமை நமக்குப் புரிந்துவிட்டது. பூதங்களுக்கு அருகில் ஒரு சிறிய செங்கற் கட்டடத்தில், ஒற்றை விளக்கின் மெல்லிய வெளிச்சத்தில் சம்பாபதி அம்மன் திருக்காட்சி தருகிறாள். சிதிலமடைந்த ஆலயத்திலும், கண்களில் கனிவும், கம்பீரமும் பளிச்சிட காட்சி தரும் சம்பாபதி தேவிக்கு, ஒருகாலத்தில் மிக விமர்சையாகத் திருவிழாக்கள் நடைபெற்றதாகவும், தற்போது தினசரி ஒரு கால பூஜைக்கே மிகவும் சிரம நிலையில் இருப்பதாகவும் அந்த ஊரைச் சேர்ந்தவர்கள் நம்மிடம் தெரிவித்தார்கள். திருவிழாக்கள் நடைபெற்றது என்று சொன்னால், உற்சவ மூர்த்தம் இருக்க வேண்டுமே என்று நினைத்து, உற்சவ மூர்த்தம் பற்றிக் கேட்டோம். போதிய பாதுகாப்பு இல்லாததால், உற்சவ மூர்த்தம் அதே ஊரில் உள்ள சாயாவனேஸ்வரர் கோயிலில் இருப்பதாகத் தெரிவித்தார்கள்.
வடதிசை மேருமலையிலிருந்து தென்திசை காக்க வந்த மூத்த தெய்வம்; சம்பாபதி என்று தன் பெயரில் வழங்கப்பட்ட ஊரின் பெயரை, சோழர்தம் குலக்கொடியாக விளங்கிய காவிரியின் பெயர் கொண்டு காவிரிப்பூம்பட்டினம் என்று அழைக்கும்படி செய்த கருணையின் உருவம்; மணிமேகலைக்கு அடைக்கலம் தந்த அன்பு வடிவமான சம்பாபதி தெய்வம் அருளும் சம்பாபதி கோயிலின் தொன்மைச் சிறப்பை உணர்ந்து, சம்பந்தப்பட்ட துறைகளைச் சேர்ந்தவர்கள் கோயிலைப் புதுப்பித்துச் சம்பாபதி தெய்வத்துக்கு நித்திய பூஜைகள் நடைபெறச் செய்வார்களா? அவளுடைய திருவருள் நமக்குக் கிடைக்கும்படிச் செய்வார்களா?'
No comments:
Post a Comment