Monday 23 October 2017

DUNKIRK, WORLD WAR II MOVIE




DUNKIRK,  WORLD WAR II MOVIE 


ஒரு படம் அதன் போஸ்டர், டீசர், டிரெய்லர் என எல்லாவற்றிலும் ஒரு ரசிகனை ஆச்சரயமடையச் செய்ய முடியுமா? இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் என்றால் முடியும். இந்த முறை நோலன் கையில் எடுத்திருப்பது, உலக சினிமா வரலாற்றில், அதிக முறை படமாக்கப்பட்ட ஒன்று. சினிமாக்களில் இரண்டு உலகப் போர்களுக்கும் பெரும்பங்கு இருக்கிறது. இரண்டாம் உலகப் போரின்போது நிகழ்ந்த டன்கிர்க் வெளியேற்றம் நிகழ்வுகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டு இருக்கிறது டன்கிர்க்.
டன்கிர்க்
நோலனின் மிகச்சிறந்த படம் என்னும் அடைமொழி பெற்றிருக்கும் டன்கிர்க் படத்தின் விமர்சனத்திற்கு முன், படத்தின் இசை பற்றி சொல்லியாக வேண்டும். முதல் ஃபிரேமில் இருந்து, ஓர் இசை உங்களை பதற்றத்தில் வைக்க முடியுமா? முடியும் என்கிறார் ஹான்ஸ் ஜிம்மர். ஒவ்வொரு காட்சியையும் பல மடங்கு உயர்த்துகிறது ஜிம்மரின் இசை. கண்களை மூடி, அதைக் கேட்டால் நம்மை ஏதோ ஒரு பீதியில் ஆழ்த்துகிறது. விமானத்தில் இருந்து குண்டுகள் விழும்போதும் சரி... துப்பாக்கி குண்டுகளுக்கு இடையே சிக்கிக்கொண்டு தப்பிப் பிழைக்கும் போதும் சரி.. இசை எல்லாவற்றையும் கடந்து அசரடிக்கிறது.

டன்கிர்க் கடற்கரையில் இருக்கும் மோலில் இருந்து தப்பிக்க பல லட்சம் வீரர்கள் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். மற்றொருபுறம் , இவர்களைக் காப்பாற்ற டாசன் என்பவர் தன் மகனுடன் படகில் வருகிறார். இன்னொரு புறம், வானில் ஹெலிகாப்டரில் எதிரிகளின் படையைக் கட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்கிறது ஒரு குழு. ஒரு உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்துக்கொண்டு, அதில் தன்னால் முயன்றளவு புனைவுகளின் மூலம் வரலாறு கெடாமல், சுவாரஸ்யத்தைக் கூட்ட முயற்சி செய்து இருக்கிறார்.
மார்க் ரைலேன்ஸ் (டாசன்), சிலியன் மர்ஃபி (படகில் நடுங்கிக் கொண்டு இருப்பவர்), டாம் ஹார்டி (விமான வீரன்) என முன்னணி நடிகர்கள் சிலர் இருந்தாலும், படம் 20 வயது புதுமுக நடிகரான ஃபியோன் வொயிட்ஹெட்டைத்தான் (டாம்மி) முன்னணி கதாப்பாத்திரமாகக் கொண்டுள்ளது. முதல் காட்சியில், தன்னுடன் இருக்கும் அனைவரையும், ஒரு குழு சுட்டுவிட, அங்கு இருந்து தப்பித்து கடற்கரைக்கு வருகிறான் டாம்மி. படத்தின் இறுதியில், எண்ணெய்க்குவியலுக்கு நடுவே உயிர்ப்பிழைத்து வெளியே வரும் வரை, அவர் முகத்தில் இருக்கும் அந்த அப்பாவிக்களையும், பீதியும் மாறவில்லை.

படத்தில் வரும் வசனங்கள் மிகக்குறைவு. "பார்த்துப்போங்க, அங்க ஒருத்தன படுக்க வச்சு இருக்கோம்", " தம்பி, அந்தப் பையன் செத்துட்டான்", " அதனால் என்ன, பார்த்து போங்க’’ என டாசனின் மகன் சொல்லும் அந்த வசனம் போர் சூழலில் உடல்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை பறைசாற்றுகிறது.
வானில் நிகழும் காட்சிகளில், ஸ்குவாட்ரன் லீடர் சில நிமிடங்களிலேயே வீழ, முழு பொறுப்பையும் எடுத்துக்கொள்கிறான் ஃபேரியர் (டாம் ஹார்டி). இறுதிவரை சண்டையிட்டு, நண்பனைக் காப்பாற்றி, வீரர்களைக் காப்பாற்றிவிட்டோம் என்ற நிலையில் எதிரி கேம்ப்பிற்கு செல்லும் கதாப்பாத்திரத்தில் டாம் ஹார்டி செம்ம. படம் முழுக்க ஜெர்மன் என்ற பெயரைக்கூட சொல்லாமல், enemy என்றே சொல்வது (படகில் வரும் ஒரு சண்டையைத் தவிர). இறுதியில் வின்சென்ட் சர்ச்சில் பேசியதாய் வாசிக்கப்படும் பத்திரிகை செய்தியில் கூட enemy தான்.
சில த்ரில் காட்சிகள், பல அசரடிக்கும் இசை , சிற்சில 'வாவ்' மொமன்ட்டுகள் என படம் இருந்தாலும், மொத்தமாய் பெரிய ஒரு அனுபவத்தை படம் தர மறுக்கிறது. இவ்வளவு இருந்தாலும், படத்தில் ஏதோவொன்று பெரிதாக குறைகிறது. புரியாமல் இருப்பதுதான் நோலன் படங்களில் ஸ்பெஷல் என்றான பின், இவ்வளவு தட்டையான ஒரு கதையை எடுக்க நோலன் எதற்கு என்ற கேள்வி எழாமல் இல்லை. போரும் போர் சார்ந்த மனிதர்களின் உணர்வகளுமே களம் என்றால் ரோமன் பொலான்ஸ்கியின் தி பியானிஸ்ட் the pianist, ராபெர்ட்டோ பெனிங்னியின் லைஃப் ஈஸ் பியூட்டிஃபுல் life is beautiful போன்ற பல படங்கள் இதைவிட சிறப்பானவை. கடந்த ஆண்டு வெளியான ஹேக்சா ரிட்ஜ், 2016ம் ஆண்டு ஆஸ்கர் வென்ற ‛சன் ஆஃப் சால்’ என எண்ணற்ற படங்கள் இதைவிட சிறப்பானவை. ஒரு குறிப்பிட்ட காட்சியின் இரண்டு கோணங்கள் தான் டன்கிர்க் ஸ்பெஷல் என்றால் அது ஒன்றும் புதிதில்லை. ஃபிஷ் அண்ட் கேட்ஸ் Fish and cats போன்ற பரிசோதனை முயற்சி சினிமாக்களில் கூட இவற்றை காண முடிந்தது

No comments:

Post a Comment