குடியிருக்க ஒரு பாழுங்கிணறு
சிறுகதை
கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை எனக் கூறி, விவசாய நிலத்தையும் அதிலிருந்த வீட்டையும் ஃபைனான்ஸ் கம்பெனி ஜப்தி செய்து, மாடசாமியையும் அவனது குடும்பத்தையும் வெளியேற்றிய மூன்றாம் நாள், அவர்கள் கிணற்றில் குடியிருக்கலாம் என முடிவு செய்தார்கள். அது ஒரு பாங்கிணறு. தண்ணீர் வற்றிப்போய்த் தூர்ந்த நிலையில் இருந்தது. கிழிந்துபோன சாக்குப்பைகளும் குப்பைகளும் கோழி ரோமங்களும் நிரம்பியிருந்தன. காலி மதுபாட்டில்களும், உடைந்த மண்சட்டிகளும், தூமைத் துணிகளும்கூடக் கிடந்தன. அந்தப் பாங்கிணற்றுக்கும் வயது எழுபதுக்கு மேல் இருக்கக்கூடும். மாடசாமியும் அவனது குடும்பமும் அக்கிணற்றை இரண்டு நாள்கள் சுத்தப்படுத்தினார்கள். கிணற்றினுள் படிகள் இல்லை. கல்சொருகினுள் கையைப் பிடித்து ஏறவும் இறங்கவும் வேண்டியிருந்தது. இதனால், மூலைவீட்டுக் கருப்பையா தனது ஏணியை அவர்களுக்குக் கொடுத்து உதவினார்.
தன் இரண்டு மகள்கள், ஒரு மகன், மனைவியுடன் தன் வயதான தாயையும் அழைத்துக்கொண்டு மாடசாமி கிணற்றுக்குள் குடியிருக்கத் தொடங்கினான்.
வீடு என்பதே உருவாக்கிக்கொள்வதுதானே? குகையோ, மரத்தடியோ, சாலை ஓரமோ, குடிசையோ ஏதோவொன்று உண்ணவும் உறங்கவும் போதும் என்றுதானே நினைக்கிறார்கள்.
பதினெட்டு ஆண்டுகள் விவசாயியாகப் பிழைத்த பிழைப்புக்குக் காலம் தன்னைப் பிச்சை எடுக்கும் நிலைக்குத் துரத்திவிட்டிருக்கிறது. இப்படிப் பிழைத்த பிறகு கிணற்றில் குடியிருந்தால் என்ன, சுடுகாட்டில் குடியிருந்தால் என்ன, ஒன்றுதானே? விவசாயிக்கு ஒரே புகலிடம் கிணறு மட்டும்தானே.
கதவுகள் இல்லாத, ஜன்னல் இல்லாத, வாசல்படி இல்லாத வீட்டை உருவாக்கிக்கொண்டான் மாடசாமி. அந்த ஊரில் சில பெண்கள், வீட்டில் கோபித்துக்கொண்டு கிணற்றில் இறங்கி உட்கார்ந்துகொள்வது வழக்கம். புருஷனோடு சண்டையிட்ட சில பெண்கள், கிணற்றில் பிள்ளையைப் போட்டுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். ஆனால், ஒரு குடும்பம் கிணற்றில் குடியிருப்பது இதுவே முதன்முறை.
கிணற்றின் மேற்கு மூலையில் கல்லைக் கூட்டி அடுப்பை உருவாக்கினாள் மாடசாமியின் மனைவி வள்ளி. பண்ட பாத்திரங்களை அருகிலே பரப்பி வைத்துக்கொண்டாள். வீட்டின் தரையைப் போலின்றி, கிணற்றின் தரை மேடுபள்ளமாகயிருந்தது. அந்த மண்ணும் பொதுமிப்போயே இருந்தது. கிணற்றுக்கென்று தனி வாசம் இருப்பதை அவள் நன்றாக உணர்ந்தாள்.
தெற்கு மூலையை ஒட்டிப் பாயை விரித்துப் படுத்துக்கிடந்தாள் கிழவி. பெண்பிள்ளைகள் காலிக்குடத்தைக் கவிழ்த்துப்போட்டு, அதில் உட்கார்ந்துகொண்டார்கள். மாடசாமி தன்னிடமிருந்த டிரான்சிஸ்டர் ரேடியோ ஒன்றை, கல்புடவு ஒன்றில் குச்சியைச் செருகி அதில் தொங்கவிட்டிருந்தான். பகலில் அந்த ரேடியோ பாடிக்கொண்டும், செய்திகள் சொல்லியபடியுமிருந்தது. அது ஒன்றுதான் அவர்களின் உலகம்.
உலகின் செய்திகளைத் தெரிந்துகொள்ளாமல் ஒரு மனிதன் எப்படி வாழ முடியும்? படிக்காத மாடசாமிக்கு ரேடியோதான் உலகை அறிமுகம் செய்தது. அவன் ஒருநாளும் பார்த்திராத பிரதமர் ரேடியோவில்தான் புரியாத மொழியில் அவனுடன் பேசினார்.
மாடசாமியின் குடும்பம் இப்படிக் கிணற்றில் வசிப்பதை ஊர் மக்கள் வியப்போடு பார்த்தார்கள். ஆகவே, எப்போதும் கிணற்றைச் சுற்றிக் கூட்டம் கூடியிருந்தது. கிணற்றுக்குள்ளாகவே அவர்கள் சமைப்பதையும் சாப்பிடுவதையும் மேலிருந்து ஆட்கள் வேடிக்கை பார்த்தார்கள். மேல வீட்டுக் கணபதி `ஒரு மடக்கு நாற்காலி வேண்டுமானால் தருகிறேன், பயன்படுத்திக்கொள்ளுங்கள்' என்று சொன்னார். மாடசாமி மறுத்துவிட்டான். `கடனைக் கட்ட முடியாமல் வீடு வாசல் போனவனுக்கு சொகுசு என்ன வேண்டிக்கிடக்கு! நாசமாப்போன விவசாயி கிணத்துல குடியிருக்க வேண்டியதுதான்’ என்று தனக்குத்தானே திட்டிக்கொண்டான்.
மாடசாமிக்குச் சொந்தமாக இருந்தது இரண்டரை ஏக்கர் நிலம். அது பாட்டன் காலத்தில் வாங்கியது. கமலைக்கிணறு ஒன்று இருந்தது. அதில் இறைத்து, வயலுக்கு நீர்ப் பாய்ச்சுவான். மழை பெய்தால் மட்டுமே கிணற்றில் தண்ணீர் ஊறும். அதுவும் நாலைந்து நாள்கள் இறைக்கலாம்; பிறகு, வற்றிவிடும். ஒரு வாரம் ஊறவிட வேண்டும். அதை வைத்துக் கொண்டு விவசாயம் செய்வது பெரும் சிரமமாக இருந்தது. அவனது நிலத்தின் கிழக்கே நீண்டு விரிந்த கரிசல் நிலம். அதனுள் மாட்டுவண்டிகள் செல்லும் சிறு வண்டிப்பாதை, பாதையின் இருபுறங்களிலும் சீமைக்கருவேல மரங்களும், சுரை முட்களும் புதராக வளர்ந்திருக்கும்.
ஒருநாள், ஜீப்பில் ஜெர்மன் கம்பெனி ஒன்றின் ஆட்கள் அந்த ஊருக்கு வந்திருந்தார்கள். `கிணற்றை ஆழப்படுத்தப் புதிய இயந்திரம் ஒன்று வந்துள்ளது, அதைப் பயன்படுத்தினால் தண்ணீர் பீய்ச்சியடித்துக் கிணறு நிரம்பிவிடும்’ என உற்சாகமாகப் பேசினார்கள்.
`கிணற்றை ஆழப்படுத்த எவ்வளவு பணம் தேவை?’ எனக் கேட்டான். `இருபத்தைந்தாயிரம் வரை ஆகும்’ என்றார்கள். தன்னிடம் பணமில்லை எனக் கையை விரித்தபோது, அவன் சிரமப்பட வேண்டாம் என்றும், அவனுக்காக அவர்களே ஃபைனான்ஸ் கம்பெனி ஒன்றின் மூலம் கடன் ஏற்பாடு செய்து கொடுப்பதாகச் சொன்னார்கள். சொன்னது போலவே சில நாள்களில் ஃபைனான்ஸ் அலுவலகத்துக்கு அவனை அழைத்துப் போனார்கள்.
கிணற்றில் புதிய ஊற்று கண்டுபிடித்து, தண்ணீர் கொண்டு வரும்வரை தாங்கள் கடனுதவி செய்கிறோம் என உற்சாகமாகப் பேசிப் பத்திரங்களில் அவனிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டார்கள். சில நாள்களில், ஜெர்மன் நிறுவனத்தின் ராட்சச இயந்திரம் அவனது கிணற்றடிக்கு வந்துசேர்ந்தது.
மாடசாமியின் குடும்பமே வியந்து பார்த்தது. அவர்களின் குடிசை வீடு நிலத்தடியிலே இருந்தது. மாடசாமியின் மனைவி, வேலை செய்யவந்த இன்ஜினீயர்களின் இரும்புத் தொப்பியை வியப்போடு பார்த்துக்கொண்டு இருந்தாள். பகலிரவாக அவர்கள் கிணற்றை ஆழப்படுத்தினார்கள். ஆயிரம் அடி போட்டும் தண்ணீர் வரவில்லை. வேறு ஓர் இடத்தில் துளை போடுவோம் என இன்னோர் இடத்தில் துளையிட்டார்கள். ஒன்பது நாள்கள் வேலை நடந்தது. முடிவில், நிலத்தடியில் தண்ணீர் இல்லை என்று கையை விரித்துவிட்டுப் போய்விட்டார்கள்.
`நமக்குக் கொடுத்து வெச்சது அவ்வளவுதான்' என, மாடசாமி கவலையில் ஆழ்ந்தான். வள்ளியும் செல்லியம்மன் கோயிலுக்குப் போய் விளக்குப் போட்டு வந்தாள்.
இரண்டு மாதங்களுக்குப் பிறகு, ஃபைனான்ஸ் கம்பெனி ஆட்கள் வீடு தேடி வந்து, வட்டி கட்டவில்லை என நோட்டீஸைத் தந்தார்கள். அப்போதுதான், தான் ஒன்றரை லட்ச ரூபாய் கடன் வாங்கியிருப்பது மாடசாமிக்குத் தெரிந்தது. எங்கிருந்து அந்தப் பணத்தைக் கட்டுவது? தண்ணீர் வராமல் போனதற்கு யார் பொறுப்பு? மாடசாமி, தான் கடனைக் கட்ட முடியாது. அவர்கள் சொன்னதுபோல கிணற்றில் தண்ணீர் வரவில்லையே எனக் கோபித்துக்கொண்டான்.
ஆனால், ஃபைனான்ஸ் கம்பெனி ஆட்கள் அவனை மிரட்டியதோடு, `நிலத்தை ஜப்தி செய்துவிடுவோம்’ என எச்சரிக்கை செய்தார்கள். மாடசாமி அவர்களின் மிரட்டலுக்குப் பயப்படவில்லை. ஆனால், மூன்று வருடக் காலத்தில் அந்தக் கடனும் வட்டியும் சேர்ந்து ஐந்தரை லட்ச ரூபாய் ஆகிவிட்டதாக, ஒருநாள் ஜீப்பில் பத்துப் பேர் வந்து அவனை மிரட்டினார்கள். மழை பொய்த்து, விவசாயம் இல்லாமல், கூலி வேலைக்குப் போய்க் கொண்டிருந்தான் மாடசாமி. ஆகவே, அவர்கள் வீடு தேடிவந்து மிரட்டவும் ஆத்திரமாகி, மண்வெட்டியைத் தூக்கிக்கொண்டு அவர்களை அடிக்கப்போய்விட்டான்.
இரண்டு நாள்களில், அவன் வீடு தேடி போலீஸ் கான்ஸ்டபிள் இருவர் வந்திருந்தார்கள். ஃபைனான்ஸ் கம்பெனி ஆட்களைக் கொலை செய்ய முயன்றதாக, அவனை விசாரணைக்கு அழைத்துப் போனார்கள். ஸ்டேஷனில் வைத்து அவனை மிக மோசமாகக் கெட்ட வார்த்தைகளில் திட்டினார் இன்ஸ்பெக்டர். பிறகு, சாயங்காலம் ஃபைனான்ஸ் கம்பெனி மேலதிகாரி ஒருவன் வந்து, மாடசாமியிடம் ஐந்து பேப்பர்களில் கையெழுத்து வாங்கினான். வீடு வந்து சேர்ந்த மாடசாமி, சொல்ல முடியாத வேதனையுடன் வெறும் கிணற்றின் கமலைக்கல்லில் உட்கார்ந்துகொண்டு, மண்ணை வெறித்துப் பார்த்தபடி இருந்தான்.
`நம்மைப்போல விவசாயிகளைத்தான் எல்லா மயிரான்களும் ஏமாத்துகிறார்கள். தண்ணீர் வரவேயில்லை. ஆனால், கடன் பெருகிவிட்டது. இருந்த நிலமும் பறிபோகப்போகிறது. பேசாமல் பூச்சி மருந்தைக் குடித்துச் செத்துப் போய்விடலாமா?’ எனத் தோன்றியது. தான் செத்துவிட்டால், பெண்டாட்டி பிள்ளைகள் பிச்சை எடுக்கத்தான் வேண்டும். யார் இருக்கிறார்கள் அவர்களைக் காப்பாற்ற?
கிணறு, தன் அகன்ற வாயைத் திறந்து தன்னைப் பரிகாசம் செய்வதுபோல் இருந்தது. நிலத்தடித் தண்ணீரையெல்லாம் யார் உறிஞ்சி எடுத்தது? எங்கே போனது நீரோட்டம்? கிணற்றுவெட்டுக்கு வரும் கூலி ஆட்கள் ஒருவரையும் கண்ணிலே காணவில்லையே. புதிய கிணறுகள் தோண்டப்படுவதே நின்றுபோய்விட்டதா? தண்ணீரை பாட்டிலில் அடைத்து விற்கத் தொடங்கியதைக் கண்ட நாளிலே இப்படியெல்லாம் ஆகப் போகிறது என மாடசாமி உள்ளூரப் பயந்தான். ஆனால், இவ்வளவு வேகமாக நடந்துவிடும் என நினைக்கவில்லை. தண்ணீர்த் திருடர்களை ஏன் ஒருவரும் பிடித்துக்கொடுப்பதேயில்லை?
அவன் பயந்ததுபோலவே, அடுத்த வாரம் ஃபைனான்ஸ் கம்பெனி தனது ஆட்களுடன் வந்து, அவனது நிலத்தைப் பறிமுதல் செய்து, அவனைத் துரத்தியடித்தது. வீடும் நிலமும் கிணறும் பசுமாடும் பறிபோன மாடசாமி, வேஷ்டியை உருவிவிட்டு அம்மணமாக நிற்க வைக்கப்பட்டதைப்போலவே உணர்ந்தான். எந்தக் கையை வைத்து அம்மணத்தை மூடுவது? மாடசாமியின் மனைவி ஒப்பாரி வைத்து அழுதாள். ஃபைனான்ஸ் கம்பெனி ஆட்களை மண்ணை வாரித் தூற்றினாள். சுடலைமாடன் அவர்கள் கண்ணைப் பறித்துவிடும் எனச் சாபம் கொடுத்தாள். இல்லாதவர்களின் குரலை எந்தக் கடவுள் கேட்டிருக்கிறது?
நிலம் பறிபோன மாடசாமி பனைமரத்தடியிலே இரண்டு நாள்கள் குடியிருந்தான். என்னதான் அவமானம் நடந்தாலும், வயிறு பசிக்கத்தானே செய்கிறது... உறக்கம் பீடிக்கத்தானே செய்கிறது?
அவனைவிடவும் பிள்ளைகள் வாடிப் போனார்கள். பனையடியில் சேலையை விரித்து உறங்கும் பிள்ளைகளைப் பார்த்தபோது அவனுக்கு வருத்தமாக வந்தது. இவ்வளவு பெரிய பூமியில் அவனுக்கென ஒரு துண்டு இடம்கூடக் கிடையாது. ஒரு புல்லுக்குக்கூடக் காலூன்றிக் கொள்ள பிடி நிலமிருக்கிறது. மனுசனுக்குதான் ஒன்றும் கிடையாது.
மூன்றாம் நாள் காலை, மாடசாமி முடிவு செய்தான். பேசாமல், கிணற்றில் போய்க் குடியிருக்க வேண்டியதுதான். அப்படி நினைத்தவுடனே, ஊரில் தூர்ந்துகிடந்த பாங்கிணறு மனதில் வந்துபோனது. அது பொதுக்கிணறு. யாரும் கோபித்துக்கொள்ள மாட்டார்கள்.
மாடசாமியின் குடும்பம் கிணற்றுக்குள் குடியிருக்கத் தொடங்கிய முதல் இரண்டு நாள்களுக்கு அவர்களால் உறங்க முடியவில்லை. கிணற்றுக்குள் இருந்தபடியே ஆகாசத்தைப் பார்க்கும்போது, எங்கோ புதைகுழிக்குள் இருப்பதுபோலத் தோன்றியது. பாம்பு வந்துவிடுமோ, அல்லது மழை வந்துவிடுமோ என மாடசாமியின் மனைவி பயந்து கொண்டேயிருந்தாள்.
மாடசாமியின் மூத்த மகள் செல்வி, கிணற்றில் முளைத்திருந்த சிறுசெடியில் தன் முகம் பார்க்கும் கண்ணாடியை ஒரு கயிற்றில் கட்டித் தொங்கவிட்டாள். அதிலேயே அவள் முகம் பார்த்துத் தலை சீவிக்கொண்டாள். குளிக்கவும், மலம் கழிக்கவும் அவர்கள் கிணற்றைவிட்டு வெளியே போனார்கள். மற்றபடி, சமைப்பது, சாப்பிடுவது, உறங்குவது... ஏன், விளையாடுவதும்கூட கிணற்றுக்குள்தான் நடந்தன. மாடசாமியின் தாய் ஒச்சம்மாள் பிடிவாதம் கொண்டவள். அவள், கிணற்றில் குடியிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனச் சாப்பிட மறுத்து ஒடுங்கியே கிடந்தாள்.
மாடசாமி அவள் அருகில் உட்கார்ந்து சொன்னான்... ``எங்க குடியிருந்தா என்னம்மா? வயித்துப் பசிக்குக் கஞ்சி கிடைக்குதா, படுத்தா உறக்கம் வருதா... அதை மட்டும் பாரு. நாம பிழைச்ச பிழைப்புக்கு என்ன அரமணையா கட்டித் தருவாங்க? ரோட்டில கிடந்து பிச்சை எடுக்காம கௌரவமா இங்கே குடியிருக்கோமே, அதுவே பெரிய காரியம்.''
ஒச்சம்மாள் ஏற்றுக்கொள்ளவில்லை. மற்ற விவசாயிகளைப்போலக் கோளாறாகப் பிழைக்கத் தன் மகனுக்குத் தெரியவில்லை என்று புலம்பிக்கொண்டிருந்தாள். பசித்த நேரத்தில், வீம்பாக வட்டிலில் தண்ணீரை ஊற்றிக் குடித்து வயிற்றை நிரப்பிக்கொண்டாள். ஆனால், மூன்றாம் நாள் பசிதான் ஜெயித்தது. அவளாக அலுமினியத் தட்டை நீட்டி, குருணைச் சோற்றை வாங்கி உண்டாள். பசியை யாரால் வெல்ல முடியும்?
மாடசாமியின் குடும்பம் பஞ்சாயத்து அலுவலகக் குழாயில் பிடித்துக் குடிநீர் கொண்டுவந்தது. தண்ணீர்க் குடத்துடன் புளிய மரங்கள் அடர்ந்த பாதையில் நடந்துவரும்போது புளியம்பிஞ்சைப் பறித்துச் சாப்பிட ஆசைப்படுவாள் செல்வி. ஆனால், அம்மாவின் கோபத்துக்குப் பயந்து, ஆசையோடு அதை ஏறிட்டுப் பார்த்தபடியே வருவாள்.
செல்வியும் அவன் தம்பி தங்கையும் அரசாங்கப் பள்ளியில் படித்துவந்தார்கள். அவர்கள் வீட்டுப் பாடம் படிப்பதற்குக் கிணற்றில் வெளிச்சமில்லை என்று முணுமுணுத்தார்கள். கிணற்றில் ஒரேயொரு அரிக்கேன் விளக்கு மட்டுமே பயன்பட்டுவந்தது. அதுவும், சமைக்கும், சாப்பிடும் நேரங்களில் மட்டுமே எரிந்தது. மற்ற நேரங்களில் அவர்கள் இருட்டுக்குப் பழகியிருந்தார்கள்.
கிணற்றுக்குக் குடியிருக்க வந்த நாளிலிருந்து மாடசாமியின் பத்து வயது மகன் ராமு மட்டும் சந்தோஷமாக இருந்தான். அந்த ஊரிலே கிணற்றில் குடியிருப்பது அவர்கள் மட்டும்தான். வட்டமான வீடு அவர்களுக்கு மட்டுமே இருக்கிறது. அதைவிடவும் அந்த வீட்டுக்குக் கதவு, ஜன்னல் எதுவும் கிடையாது. பூமிக்குக் கீழே வசிக்கிறார்கள். இந்த விஷயங்கள் அவனுக்கு மிகவும் சந்தோஷமாயிருந்தன.
பள்ளியில் அதைப்பற்றிப் பெருமையாகப் பேசிக்கொள்ளும்போது, எட்டாம் வகுப்பில் உள்ள பரமசிவம் என்ற பையன் கேலியாகச் சொன்னான்... ``ஆமைதான் கிணத்துக்குள்ளே குடியிருக்கும். நீங்க என்ன ஆமையா, வக்கத்துப் போயிக் கிணத்துக்குள்ளே குடியிருந்துகிட்டு... பேச்சைப் பாரு, பேச்சை.''
அதைக் கேட்டதும் ராமுவுக்கு ஆத்திரமாக வந்தது. அவனைக் கன்னத்தில் அடித்துவிட்டான். டீச்சர் வந்து அவர்களின் சண்டையை விலக்கிவிட்டபோது, ராமு பல்லைக் கடித்தபடியே சொன்னான்.
``இவன்தான் டீச்சர் கேலி பண்றான்.''
``அவன் சொன்னதுல என்னடா தப்பு? பாங்கிணற்றுக்குள்ள பாம்பு, தவளைதானே குடியிருக்கும்?'' என்றாள் சரோஜா டீச்சர். அதைக் கேட்டு வகுப்பே சிரித்தது.
ராமுவின் முகம் ஒடுங்கிப் போனது. அன்றைக்கு அவன், கிணற்றுக்குள் உறங்க மறுத்து, கமலைக்கல்லில் உட்கார்ந்தேயிருந்தான். கிணற்றில் குடியிருந்தால் என்ன தப்பு, ஏன் கேலி பேசுகிறார்கள் என அவனுக்குப் புரியவேயில்லை வீட்டில் யாரும் அவனைப் பொருட்படுத்தவேயில்லை. செல்வி அக்காதான் அவனை ஆறுதல்படுத்தினாள்.
குடியிருக்க ஆரம்பித்த சில நாள்களிலேயே அந்தக் கிணறு அவர்கள் வீடு போலாகியது. உள்ளே அழகான கோலம் போட்டார்கள். கிணற்றின் குறுக்கே ஒரு கொடியைக் கட்டி, அதில் துணிகளைக் காயப்போட்டிருந்தார்கள். கிணற்றுக்குள்ளாகவே ஓலைத் தடுப்பு வைத்து, சிறிய அறைபோல ஒன்றை மாடசாமி உருவாக்கியிருந்தார். கிணற்றுச் சுவரிலே சாமி படங்களை மாட்டிவைத்தார்கள். சில நேரங்களில், பூனையொன்று கிணற்றுக்குள் இறங்குவதையும், ஆள் இருப்பதைக் கண்டு குழம்பி வெளியேறுவதையும் கண்டு சிரித்தார்கள்.
ஆரம்பத்தில், கிணற்று ஏணியில் ஏறவும் இறங்கவும் சிரமப்பட்டவர்கள், பின்பு பழகிப் போனார்கள். மாடசாமி கிணற்றில் போய் குடியிருக்கத் தொடங்கிய பிறகு, அவனிடம் கடன் கொடுத்தவர் எவரும் கேட்டு வரவேயில்லை. அதைவிடவும், ஊர்வாசிகள் அவன் மீது இரக்கம் காட்டியதோடு காய்கறிகளைக்கூட ஓசியில் கொடுத்தார்கள். ஒருநாள், செவலையின் மனைவி சீம்பால் கொண்டு வந்து, கிணற்றுமேட்டில் நின்றபடியே, ``மயினி, வெளியே வாங்க. சீம்பால் கொண்டு வந்திருக்கேன்'' என்றாள்.
வள்ளி கிணற்றிலிருந்தபடியே, ``உள்ளே வா, லட்சுமி'' எனக் கூப்பிட்டாள்.
``கிணத்துக்குள்ளே இறங்கக் கூச்சமா இருக்கு. இன்னொரு நாள் வர்றேன் மயினி, நீங்க மேல வந்து வாங்கிட்டுப் போயிருங்க'' என, அவள் தூக்குவாளியை எட்டி நீட்டினாள்.
உப்பு விற்பவன் ஒருநாள், ஆச்சர்யத்துடன் கிணற்றின் மேலிருந்து ``உப்பு வேணுமாக்கா?’' எனக் கூவினான். ``ரெண்டு படி வேண்டும்’' என்றதும், அவனே இறங்கி வந்து கொடுத்துப் போனான். அவனைப்போலவே, கருவாட்டு வியாபாரிகளும், கனகாம்பரம் விற்பவளும்... ஏன், குச்சி ஐஸ் விற்பவன்கூட கிணறுதான் அவர்கள் வீடு என்பதை ஏற்றுக்கொண்டார்கள் ஒருநாள், வேலைவிட்டுத் திரும்பி வரும்போது, மாடசாமி ஓர் ஆட்டுக்குட்டியை வாங்கி வந்திருந்தான். அந்தக் குட்டியைக் கண்டதும், ராமு மிகவும் சந்தோஷம் அடைந்தான். அதையும் கிணற்றுக்குள்ளாகவே கட்டிப்போட்டார்கள். செல்வி ஆட்டுக்குட்டிக்காகப் பாலாட்டாங்குழையைத் தேடி அலைந்தாள்.
உறவினர்கள் திருமணப் பத்திரிகை கொடுக்க, கிணற்றைத் தேடி வந்துபோனார்கள். ஒருநாள், கோர்ட்டிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட தபால் ஒன்றை எடுத்துக்கொண்டு கிணற்றடிக்கு தபால்காரர் வந்துபோனார். சில இரவுகளில், அவர்கள் கிணற்றினுள் படுத்தபடியே வானில் மின்னும் ஆயிரம் நட்சத்திரங்களை எண்ணிக் கொண்டிருப்பார்கள். வீட்டைப் போலின்றி கிணற்றுக்குள் காற்று சுற்றிக்கொண்டேயிருப்பதை உணர்ந்தார்கள்.
நான்கு மாதங்கள் அவர்கள் கிணற்றுக்குள் வாழ்ந்த பிறகு, ஒருநாள் திருமண நிகழ்ச்சி ஒன்றுக்காக அந்த ஊருக்கு வந்திருந்த பத்திரிகை நிருபர் இந்த விஷயத்தைப்பற்றிக் கேள்விப்பட்டு அதைத் தனது மாலை பேப்பரில் சிறிய செய்தியாக வெளியிட்டார். அது வெளியான அடுத்த வாரம், அந்த ஊரைத் தேடி சென்னையிலிருந்து இருவர் வந்திருந்தார்கள்.
தங்கள் பத்திரிகைக்காக அவர்களைப் பேட்டி எடுக்க வேண்டும் என்றார்கள். மாடசாமிக்கு அவர்கள் சொன்னது புரியவில்லை. எங்கே ஃபைனான்ஸ் கம்பெனி ஆட்கள்போல இவர்களும் தன்னை ஏமாற்றிவிடுவார்களோ என பயந்தான். அவர்கள் நீண்ட நேரம் பேசியதன் முடிவில், நடந்த சம்பவங்களை அவர்களுக்குச் சொல்லத் தொடங்கினான்.
உயரமான அந்த போட்டோகிராபர் அவர்களைக் கிணற்றுக்குள் உட்காரச்சொல்லி, ஓரமாக நிற்கச்சொல்லி, சமைக்கச்சொல்லி... விதவிதமாகப் புகைப்படம் எடுத்தார். ராமுவையும் செல்வியையும் பத்மாவையும் ஏணியில் ஏறி வரச்சொல்லிப் புகைப்படம் எடுத்துக்கொண்டார். கொடியில் உலரும் யூனிஃபார்ம்களை, அவர்களின் ஆட்டுக்குட்டியைக்கூடப் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
அடுத்த வாரம், அவர்களின் குடும்பப் படம் வார இதழ் ஒன்றின் அட்டைப்படமாக வந்திருந்தது. அந்த இதழ் வந்த இரண்டுமணி நேரத்தில் தாசில்தார், அரசாங்க அதிகாரிகளுடன் ஒரு ஜீப்பில் ஊருக்குள் வந்து இறங்கினார். கிணற்றைத் தேடி வந்து உரத்த குரலில் மாடசாமியை மேலே வரும்படி அழைத்தார்கள்.
மாடசாமி அவர்களைத் தன் வீட்டுக்குள் வரும்படி அழைத்தான். வேறு வழியின்றி அவர்கள் கிணற்றுக்குள் இறங்கி வந்தார்கள். இன்னும் இரண்டுமணி நேரத்தில் அவன் கிணற்றைக் காலி செய்து வெளியேற வேண்டும் என்று மிரட்டினார்கள். அப்படித் தன்னால் போக முடியாது, இது ஊர்ப் பொதுக்கிணறு, ஊர் மக்கள் சொன்னால் மட்டுமே வெளியேறுவேன் எனப் பிடிவாதமாக இருந்தான் மாடசாமி.
அவனுடன் சமரசப் பேச்சுவார்த்தை நடத்திய தாசில்தார் கோபமடைந்து, போலீஸை வைத்து அவனை வெளியே தூக்கிப் போடப்போவதாக எச்சரிக்கை செய்துவிட்டுப் போனார். அந்த எச்சரிக்கை மாடசாமிக்குச் சாதகமாகவே அமைந்தது. அதுவரை மாடசாமியின் குடும்பத்தைப் பற்றிக் கவலைப்படாத ஊர் மக்கள் இப்போது அவர்களுக்காக ஒன்று திரண்டார்கள். மாடசாமி கிணற்றைவிட்டு வெளியேற வேண்டாம் என, ஒரே குரலில் சொன்னார்கள்.
இது நடந்த சில நாள்களில் பத்திரிகை, டி.வி சேனல் எனப் பல தரப்பினரும் அந்த ஊருக்கு வரத் தொடங்கினார்கள். மாடசாமி கிணற்றைவிட்டு வெளியே வரவேயில்லை. டி.வி சேனல் கேமராக்கள் கிணற்றுக்குள் இறங்கி, அவன் குடும்பத்தைப் படம்பிடித்து உலகுக்குக் காட்டிக்கொண்டிருந்தன.
இச்செயல் அரசாங்கத்தை மிகவும் எரிச்சல்படுத்தியது. அரசுத் தரப்பில் மாடசாமியைக் கைது செய்து வெளியேற்ற வேண்டும் என முடிவுசெய்தார்கள். காவல்துறை குவிக்கப்பட்டது. தன் விருப்பப்படி கிணற்றில் வாழ அரசாங்கம் அனுமதிக்காவிட்டால், மண்ணெண்ணெய் ஊற்றி, குடும்பமே நெருப்பில் எரிந்துபோய்விடுவோம் என மாடசாமி மிரட்டினான். ஊடகங்கள் கிணற்றை வளைத்து வளைத்துப் படம் பிடித்தன. இந்த மிரட்டல், உருட்டல் எதுவும் அறியாமல் ஆட்டுக்குட்டி எப்போதும்போல கிணற்றுக்குள் சுற்றிவந்தபடியே இருந்தது.
முடிவில் கலெக்டர் சித்தரஞ்சன், மாடசாமியோடு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வந்து சேர்ந்தார். தன்னைத் தேடி கலெக்டர் வருவார் என மாடசாமி எதிர்பார்க்கவேயில்லை. அவரைக் கிணற்றுக்குள் இறங்கி வரும்படி அன்போடு கேட்டுக்கொண்டான். கலெக்டர் தனியே கிணற்றில் இறங்க பயந்தார். ஐந்தாறு அதிகாரிகள் உடன் இறங்கினார்கள்.
கலெக்டர் அந்தக் கிணற்றினுள் இருந்த அடுப்பை, சமையல் பாத்திரங்களை, சாமி படத்தை, ரேடியோவையெல்லாம் விநோதமாகப் பார்த்தார். பின்பு, அழுத்தமான குரலில் சொன்னார்.
``மாடசாமி, கிணற்றுல குடியிருக்கிறது தப்பு. இது சட்ட விரோதம்.''
``எது சார் தப்பு? கிணறுதானே சார், விவசாயிக்குத் தாய்.''
``புரியாமப் பேசாதீங்க மாடசாமி. உங்களுக்கு கவர்மென்ட்ல இருந்து லோ காஸ்ட் வீடு கட்டித் தரச் சொல்றேன். முதல்ல வெளியே வாங்க.''
``ஏற்கெனவே ஃபைனான்ஸ் கம்பெனியில் கடனை வாங்கித்தான் இந்த நிலையில இருக்கேன். இதுல வீடு கட்டிக் குடுத்துட்டு, என் தலையில எந்தக் கல்லைப் போடுவீங்கன்னு யாருக்குத் தெரியும்?''
``இது ஃப்ரீ ஸ்கீம். நீங்க ஒரு பைசாகூடச் செலவு செய்ய வேண்டாம். அதுக்கு வழி இருக்கு.''
``அப்போ அதை முதல்லயே கட்டிக் குடுத்துருக்கலாம்லே? ஏன் என் வீட்டை ஜப்தி பண்ணி விரட்டி அடிச்சிட்டு, இப்போ வர்றீங்க?''
``ப்ரைவேட் ஃபைனான்ஸ்காரங்க ஜப்தி எல்லாம் பண்ணக் கூடாதுன்னு சட்டமே இருக்கு. அது சும்மா மிரட்டுறதுக்குச் செய்றது.''
``நீங்க மிரட்டுறதுக்கு நாங்கதான் கிடைச்சமா? எனக்கு இந்தக் கிணறே போதும். உங்களைக் கையெடுத்துக் கும்புடுறேன், எங்களை இப்படியே வாழவிடுங்க. உங்க ஓசி வீடு எங்களுக்கு வேணாம்.''
மாடசாமியின் தளர்ந்துபோன கண்களை கலெக்டர் பார்த்தபடியே நின்றிருந்தார். மாடசாமியின் மனைவி கலெக்டருக்காக ஓர் அலுமினிய டம்ளரில் மோரை வைத்துக்கொண்டு நின்றிருந்தாள். கலெக்டர் அதை வாங்கவில்லை. கோபத்துடன் வெளியேறிப் போனார்.
இரண்டு நாள்களில் அவர்களைக் கிணற்றை விட்டுக் காலி செய்ய வேண்டும் என்று கலெக்டர் உத்தரவிட்டிருப்பதாகப் பேசிக்கொண்டார்கள். ஆனால், எதுவும் நடக்கவில்லை. மாடசாமியின் குடும்பம் கிணற்றைவிட்டு வெளியே வரவேயில்லை. ஏதாவது சுவாரஸ்யம் நடக்கும் எனக் காத்திருந்த ஊடக ஆட்கள், ஒன்றும் நடக்கவில்லையே எனக் கலைந்துபோகத் தொடங்கினார்கள். ஊருக்கு வந்துபோன அரசு வாகனங்களும் நின்றுபோயின.
வெள்ளிக்கிழமை காலை கிணற்றடிக்கு வந்த பள்ளி மாணவர்கள் கிணற்றில் யாருமில்லாமல் இருப்பதைக் கண்டு கூச்சலிட்டார்கள். கயிற்றுக்கொடி மட்டுமே அசைந்தபடியிருந்தது. அடுப்பு அணைக்கப்பட்டிருந்தது. ஆட்டுப் புழுக்கைகள் கிடந்தன. ஊர்க்காரர்கள் மாடசாமியின் குடும்பம் எங்கே போனது எனத் தெரியாமல் குழம்பிப்போனார்கள். ஒருவேளை, இரவில் போலீஸ்காரர்கள் வந்து அவர்களைக் கைதுசெய்து கொண்டுபோய்விட்டார்களோ எனத் தெரியாமல் புலம்பினார்கள் ஆனால், பதினெட்டு மைல் தள்ளியிருந்த ஒரு சின்னஞ்சிறு ரயில்நிலையத்தில், வடக்கே செல்லும் ரயிலுக்காக மாடசாமியின் குடும்பம் காத்துக்கொண்டிருந்தது. ரயிலில் ஆட்டுக்குட்டியை எப்படி ஏற்றிக்கொண்டு போவது எனத் தெரியாத குழப்பத்துடன் மாடசாமி யோசித்துக்கொண்டிருந்தான்.
எந்த ஊருக்குப் போவது, என்ன செய்து பிழைப்பது... எதுவும் மாடசாமிக்குத் தெரியாது. எங்கே போனால் என்ன, குடியிருக்க ஒரு பாழுங்கிணறு இல்லாமலா போய்விடும் என்ற நம்பிக்கை மட்டும் அவனுக்கு இருந்தது. அதை அவன் மனைவியும் உணர்ந்தேயிருந்தாள். அவனுடைய பிள்ளைகள், தொலைவில் ரயில் வரப்போவதைக் காண்பதற்காக உற்சாகமாகக் கைகளை விரித்தபடியே காத்துக்கொண்டிருந்தார்கள்.
No comments:
Post a Comment