Saturday 21 October 2017

ATHIRAPALLI ,TOURIST SPOT OF KERALA



ATHIRAPALLI ,TOURIST  SPOT OF KERALA

அசரவைக்கும் அதிரப்பள்ளி பயணம்..!

மேற்கத்திய நாடுகளில் புகழ்பெற்ற பைக் ரைடிங் கலாசாரம், சமீபகாலமாக இந்தியர்களையும் தொற்றிக்கொண்டுவிட்டது. பரபரப்பான இந்தியச் சாலைகளில் பதற்றமே இல்லாமல் தேசாந்திரியாகச் சுற்றித்திரியும் பைக் ரைடிங் குழுக்கள் நாள்தோறும் நம்மைக் கடந்துசெல்கின்றன. பைக் ரைடிங் பயணத்தில் புத்துணர்வு தேடி அலையும் இந்திய இளைஞர்களுக்கு ஏராளமான வழித்தடங்கள் நம் நாட்டில் இருந்தாலும், இயற்கையின் அரவணைப்பில் இணைந்துகொண்டு பயணிக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் சாலைகளையே அதிகம் விரும்புகிறார்கள். அதிலும், பல ஆயிரம் கிலோ மீட்டர் விஸ்தரித்துக் கிடக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைகளில், தமிழக - கேரள எல்லைகளை இணைக்கும் வால்பாறை - அதிரப்பள்ளி மலைப்பாதை, தற்போது பைக்கர்களின் மத்தியில் செம ட்ரெண்ட். இந்திய பைக் ரைடிங் வெறியர்களைக் கவர்ந்திழுக்கும் இந்த வால்பாறை - அதிரப்பள்ளி சாலையில் அப்படி என்னதான் இருக்கிறது?
பைக்கர்கள் குவியும் வால்பாறை!
கோவை மாவட்டம், பொள்ளாச்சியிலிருந்து 65 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது வால்பாறை. கடல்மட்டத்திலிருந்து 3,400 அடி உயரத்தில் அமைந்துள்ள வால்பாறையைச் சென்றடைய நாம் மலைப்பாதையில் 40 கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்தாக வேண்டும். ஆனைமலைப் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மலைப்பகுதி என்பதால், இங்கு வனத்துறையினரின் சோதனைகளுக்கும் பஞ்சம் இருக்காது. மலைப்பாதையில் வாகனத்தை ஏற்றுவதற்கு முன்னதாகவே ஆழியாறு செக்போஸ்ட்டில் நம் ஆவணங்கள் சரிபார்க்கப்படுகின்றன. பின்னர் சரியாக 12 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அட்டக்கட்டி செக்போஸ்ட்டிலும் ஏகப்பட்ட விசாரிப்புகள்.முறையான ஆவணங்களையும், முழுமையான பாதுகாப்பு உபகரணங்களையும் வைத்திருக்கும் வாகன ஓட்டிகள் மட்டுமே வால்பாறை நோக்கி மலையேற முடியும். வால்பாறையிலிருந்து கேரளத்தின் புகழ்பெற்ற அதிரப்பள்ளி அருவிக்குச் செல்லும் சாலை.
பரவசப் பயணம்

பச்சைப் பட்டாடை உடுத்தியிருக்கும் தேயிலைத் தோட்டங்களை ரசித்துக்கொண்டே, ஒவ்வொரு கொண்டை ஊசி வளைவையும் கவனத்துடன், பைக் ஓட்டிகள் கடந்துகொண்டிருக்க, சாலையின் ஓரத்தில் ஆங்காங்கே நின்றுகொண்டு வரையாடுகளை வாகனப் பாதைக்கு வந்துவிடாமல் பாதுகாக்கிறார்கள் வனக்காவலர்கள். இந்தியாவின் மற்ற மலைப்பிரதேசங்களில் காண முடியாத வரையாடுகள் இனத்தை, நாம் வால்பாறைப் பயணத்தில் சர்வ சாதாரணமாகக் காணலாம்.
வால்பாறையில் சுற்றிப் பார்க்க ஆறுகள், அணைக்கட்டுகள் மற்றும் எண்ணற்ற காட்சிமுனைகள் இருந்தாலும், அதிரப்பள்ளிக்குச் செல்ல விரும்பும் பைக் ரைடர்கள் யாருமே வால்பாறையில் நேரத்தைச் செலவழிக்க முன்வருவதில்லை. காரணம், மாலை 4 மணிக்குள் மலக்கப்பாறை என்ற இடத்தில் உள்ள கேரள வனத்துறையின் எல்லைக்குள் நுழைந்துவிட வேண்டும். அடர்ந்த காடுகளுக்குள் செல்லும் வழித்தடம் என்பதால், மாலை 4 மணிக்கு மேல் இரு சக்கர வாகனங்களும், 6 மணிக்கு மேல் கார்களும் இந்தப் பாதையில் அனுமதிக்கப்படுவதில்லை. எனவே, அதிகபட்சம் சோலையாற்று அணையில் சில மணித்துளிகள் இளைப்பாறிவிட்டு, கடகடவென கேரள எல்லைக்குப் பறந்துவிடுகிறார்கள் பைக்கர்கள்.
மினி ஜுராசிக் பார்க்

வால்பாறையின் பெரும்பகுதிகளைத் தனியார் தேயிலைத் தோட்டங்கள் ஆக்கிரமித்திருக்க, மலக்கப்பாறையில் தொடங்கும் சோலையாற்று ரிசர்வ் காடுகளில், இயற்கையைக் கடுகளவுகூட நாசமாக்காமல், அடர்வனத்தை அதன்போக்கில் விட்டுவைத்திருக்கிறார்கள்.
தமிழக வனத்துறையைவிடக் கேரள வனத்துறையின் கட்டுப்பாடுகள் மிகவும் கடுமையானவை. மலக்கப்பாறை செக்போஸ்ட் வழியாக அதிரப்பள்ளி செல்லும் அனைத்து வாகனங்களையும் முழுமையாகச் சோதனையிடும் செக்போஸ்ட் அதிகாரிகள், பைக்கின் மாடல், எத்தனை நபர்கள், கையில் என்னென்ன பொருள்களை எடுத்துச் செல்கிறார்கள் என அனைத்தையும் தங்களுடைய பதிவேட்டில் குறித்துக் கொள்கிறார்கள். பின்னர் சில விதிமுறைகள் அடங்கிய ரசீது ஒன்றை வாகன ஓட்டிகளிடம் கொடுத்து, அதிரப்பள்ளியை நோக்கி வழியனுப்புகிறார்கள்.
அந்த ரசீதைப் பெற்ற அடுத்த இரண்டு மணி நேரத்துக்குள் மறு எல்லையில் இருக்கும் வாழச்சல் செக்போஸ்ட்டை வாகன ஓட்டிகள் கடந்தாக வேண்டும். தாமதித்தால் அல்லது காடுகளுக்குள் தேவையின்றி வாகனத்தை நிறுத்தினால் 2,000 ரூபாய் அபராதமாகச் செலுத்த வேண்டும். பிளாஸ்டிக் பொருள்களைக் காடுகளுக்குள் வீசியெறிந்தாலும், கேரள வனத்துறையின் தண்டனைகளுக்கு ஆளாக நேரிடும். கையில் எடுத்துச் செல்லும் பொருள்கள் அனைத்தும் காட்டை விட்டு வெளியேறும்போது நம்மிடம் இருக்கின்றனவா என்பதை வாழச்சல் செக்போஸ்ட்டில் உன்னிப்பாக சோதனையிடுவார்கள் கேரள வனத்துறை சேட்டன்கள். இதுபோன்ற பல கடுமையான வனத்துறை விதிகளைப் பின்பற்றி சுமார் 50 கிலோமீட்டர் தூரம் பயணிக்கும் இந்தக் காட்டுப் பாதைதான் பைக் ரைடர்களைப் பரவசத்தில் ஆழ்த்தும், `மினி ஜுராசிக் பார்க் சாலை’ என்று அழைக்கப்படுகிறது.

ஊசிபோல் துளைத்தெடுக்கும் பனிக்காற்று, திடீரெனப் பெய்யும் பேய் மழை, திணறவைக்கும் கொண்டை ஊசி வளைவுகள், அச்சுறுத்தும் பாலங்கள் என ஒவ்வொரு நொடியும் நம்மை அதிரவைத்துக்கொண்டே இருக்கும் சாலை இது. சூரிய வெளிச்சம்கூடப் படாத வகையில் வனத்துக்கு நடுவே அமைந்திருக்கும் சாலை, சட்டென ஆற்றுப் பள்ளத்தாக்கைப் பின்தொடரும். யானைகள், புலிகள், சிங்கவால் குரங்குகள், கரடிகள் என விலங்குகளின் நடமாட்டம் நம் பல்ஸை எக்கச்சக்கமாக எகிறவைக்கும். வாகனப் போக்குவரத்து குறைவாக உள்ள நேரங்களில் எட்டிப்பார்க்கும் மற்ற விலங்குகளைப்போல இல்லாமல், எப்போது வேண்டுமானாலும் சாலையை ஆக்கிரமித்துக்கொள்ளத் தயாராகவே இருக்கின்றன யானைக் கூட்டங்கள். ஆங்காங்கே அறிவிப்புப் பலகைகளை வைத்து வனத்துறை நம்மை அலெர்ட் செய்தாலும், திரும்பிய திசைகளில் எல்லாம் படு உஷாராகப் பயணிக்கவில்லை என்றால், ஆபத்து நிச்சயம். ஆள் நடமாட்டம் இல்லாத இந்த வனத்தில் செல்போன் தொடர்பெல்லாம் நினைத்துக்கூடப் பார்க்க முடியாதது. வாகனத்தில் ஏதேனும் பழுது ஏற்பட்டாலும், வனத்துறைக்குத் தகவல் தெரிந்து வந்தால் மட்டுமே உண்டு. எனவே, இதுபோன்ற ஆபத்துகளைத் தவிர்க்க பெரும்பாலான பைக்கர்கள் குழுவாக மட்டுமே பயணிக்கிறார்கள்.
பெங்களூரைச் சேர்ந்த பைக் ரைடிங் குழுவை, ஐயர்பாடி என்ற பகுதியில் சந்தித்தோம், ``பயணத்தின்மீது தீராக் காதல் கொண்ட எங்கள் குழுவில் மருத்துவர்கள், பொறியாளர்கள், சுயதொழில் செய்வோர் எனப் பலரும் கலந்திருக்கிறோம். இந்த அதிரப்பள்ளி சாலையில் பயணிக்க வேண்டும் என்ற எங்களின் பல வருடக் கனவு இப்போதுதான் நிறைவேறியிருக்கிறது. மலக்கப்பாறையில் தொடங்கியபோது பயணத்தின் ஒவ்வொரு நொடியும் பரபரப்பை ஏற்படுத்தினாலும், கேரள எல்லையை அடைந்தவுடன் தென்படும், அந்த பிரமாண்ட அதிரப்பள்ளி அருவியைக் கண்டதும் நம் மனதில் உருவெடுக்கும் தன்னம்பிக்கையை வார்த்தைகளால் விவரிக்க இயலாது’’ என்கிறார் அந்தக் குழுவில் உள்ள ஒருவர்.
கேரள வனத்துறையின் அனுமதிக்காகக் காத்துக்கொண்டிருந்த `ரைடர்ஸ் ஆஃப் மெட்டல் பேர்டு’ குழுவினரிடம் பேசினோம். ``வருடத்தில் ஆறு மாதங்கள் வரை பைக் பயணம் செல்வது எங்களின் வழக்கம். இந்தியாவின் அனைத்துப் பகுதிகளையும் சுற்றிவந்துள்ள எங்களுக்கு அதிரப்பள்ளி சாலை என்றுமே பிரமிப்பைக் கொடுத்துக்கொண்டே இருக்கிறது. பைக் ரைடர்களுக்கு என்றே அமைக்கப்பட்டதுபோல இருக்கும் இந்தச் சாலையை, `தென் இந்திய பைக் ரைடர்களின் சொர்க்கபுரி’ என்றே சொல்லலாம்’’ என்கிறார் அவர்களில் ஒருவர்.
`மெட்ராஸ் டோமினார் ரைடர்ஸ்’ குழுவைச் சேர்ந்த பேராசிரியர் பால மணிகண்டன், ``வேகமாகப் பயணிக்க நினைக்காமல், காடுகளின் அழகை ரசித்தவாறு பயணிப்பதுதான் சிறந்தது. வனத்தில் உள்ள விலங்குகளோ அல்லது மற்ற பயணிகளோ நம்மால் பதற்றமடையக் கூடாது. சிலர் போட்டி போட்டுக்கொண்டு வேகமாகப் பயணிப்பதால், வனத்தில் வாழும் விலங்குகள்தான் பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகின்றன. காடுகளுக்குள் பயணம் செல்லும் பைக்கர்களுக்கு இயற்கை குறித்த சிறிய அளவிலான புரிதலாவது இருக்க வேண்டும்’’ என்றார்.
உண்மை... உணருங்கள்!

No comments:

Post a Comment