Friday 27 October 2017

DIRECTION ACTION DAY , JINNAH EXECUTES REHEARSAL MURDERS,RIOTS AUGUST 16,1946



DIRECTION ACTION DAY , 
JINNAH EXECUTES REHEARSAL 
MURDERS,RIOTS
AUGUST 16,1946







லீகுக்கு ஆதரவான நாளிதழ்களில் 16-ம் தேதி எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்​கான திட்டமிடல் வெளியானது. அதன்படி, அன்று இரண்டு மணிக்கு பெரிய பொதுக் கூட்டமும் பிரார்த்தனையும் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும், அதையட்டி சிறப்புப் பேரணி நடக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது. நிலை​மையைக் கட்டுக்குள் கொண்டுவர பாதுகாப்பு நடவடிக்கைகளை பிரிட்டிஷ் அரசு செய்யத் தொடங்கியது.

அதே நேரத்தில், கடைகளைத் திறந்துவைத்து வழக்கம் போல வியாபாரம் செய்ய வேண்டும், முஸ்லிம் லீகின் மிரட்டலுக்கு நாம் பயந்துவிடக் கூடாது என்று இந்து விசுவாசிகளாக உள்ள காங்கிரஸ் உறுப்​பினர்கள் பகிரங்க அறிவிப்பு வெளியிட்டனர். ஒருவேளை, தாங்கள் தாக்கப்பட்டால் பதிலடி கொடுக்க மக்கள் படை தயாராக உள்ளது என்று காங்கிரஸ் பிரமுகர் பிரபுல்ல சந்திர கோஷ் அறிவித்தார்.

இதைக் கேட்டு முஸ்லிக் லீக் கடும்கோபம் அடைந்தது. திறந்துவைக்கப்படும் கடைகளைச் சூறையாடுவோம் என்று உணர்ச்சிவேகத்தில் அவர்களும் அறிவித்தனர். விடுமுறை அறிவிக்கப்பட்ட காரணத்தால், அரசு அலுவலகங்கள், பள்ளிகள் எதுவும் திறக்கப்படவில்லை. ஆகஸ்ட் 16-ம் நாள் காலை கல்கத்தாவில் பதற்றத்துடனே தொடங்கியது. கடைகளைத் திறப்பதா, வேண்டாமா என்ற குழப்பம் ஏற்பட்ட காரணத்தால் வியாபாரிகள் தயங்கிக்கொண்டே இருந்தனர். காங்கிரஸ் தலைவர்கள் சிலர் கடைகளைத் திறக்கும்படி கட்டாயப்படுத்தினர். லால்பஜார் பகுதியில் உள்ள இந்துக்களின் கடைகள் திறக்கப்பட்டன. 



இரும்புக் கம்பிகள், உருட்டுக்கட்டைகள் சகிதமாக அந்தப் பகுதிக்கு வந்த முஸ்லிம் லீக் அமைப்பினர், திறந்திருந்த கடைகளைச் சூறை​யாடத் தொடங்கினர். அடிதடியும், தீ வைத்தலும் நடந்தன. இந்தத் தகவல் நகரம் முழுவதும் பரவியது. உடனே, நகரின் மற்றொரு பகுதியில் உள்ள இஸ்லாமியத் தலைவர்களின் வீடுகள் தாக்கப்​பட்டன. மசூதிகள் மீது கற்கள் வீசப்பட்டன. இரு தரப்பு மோதல்களையும் கட்டுப்படுத்த காவல்​துறை முடுக்கிவிடப்பட்டது. பொதுக் கூட்டம் மற்றும் ஊர்வலத்தில் கலந்துகொள்ள 30,000 பேர் வரக்கூடும் என போலீஸ் கணித்து இருந்தது. ஆனால், ஒரு லட்சம் பேருக்கும் அதிகமானோர் திரண்டுவிட்டனர். இதனால், நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீஸ் திணறியது.

2 மணிக்கு முஸ்லிம் லீக்கின் பொதுக் கூட்டம் தொடங்கியது. நகரெங்கும் முஸ்லிம்கள் தாக்கப்​படுவதாகவும் கலவரத்தில் காயமடைந்து ஆறு பேர் உயிருக்கு ஊசலாடுகின்றனர் என்றும் பொதுக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. அதைக் கேட்டு ஆவேசமடைந்த லீக் உறுப்பினர்கள், லாரி​கள் மற்றும் வேன்களில் கூட்டம் கூட்டமாக ஏறிச்சென்று ஆயுதங்களால் இந்துக்களைத் தாக்கத் தொடங்கினர். முதற்கட்ட தாக்குதலில் நூற்றுக்கணக்கான வீடுகள் சூறையாடப்பட்டன. பெண்கள் வன்புணர்ச்சிக்கு ஆளாகினர். 16 பேர் அடித்துக் கொல்லப்பட்டனர். நூலகங்கள், துணி குடோன்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.



இந்தத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்க இந்து மதவாதி​களின் கூட்டம் கிளம்பியது. முஸ்லிம்களின் வீடுகள் நொறுக்​கப்பட்டன. பெண்களைத் துரத்தி துரத்திக் கொலை செய்தனர். வணிக நிறுவனங்களை உடைத்துச் சூறையாடினர். இரண்டு தரப்பும் கொலை வெறியுடன் களம் இறங்கி நகரைச் சூறையாடியதில் 30,000 பேர் இறந்திருக்கக்கூடும் என்கின்றனர். ஆனால், அதிகாரப்பூர்வமாக 10,000 பேருக்கும் குறைவாக இறந்துபோனதாகவே தெரி​விக்கப்படுகிறது. இந்தக் கலவரத்தில் ஒரு லட்சம் பேர் வீடுகளை இழந்தனர்.

ஒரே நாளில் கல்கத்தா மாநகரம் முற்றிலும் சூறையாடப்பட்டுத் தீக்கிரையானது. மக்கள் எங்கே போவது எனத் தெரியாமல் உயிர் பயத்தில் தப்பி ஓடினர். காணும் இடமெல்லாம் சடலங்கள், எரியும் கட்டடங்கள், முதல் நாள் இரவு வன்​முறை வெறியாட்டம் நீண்டது. சாலையோரம் வசித்த பிச்சைக்காரர்கள்கூட இதில் தப்பிக்க முடியவில்லை.

மறுநாள், ஆகஸ்ட் 17 அன்று லிஜ்ஜாபகான் பகுதியில் உள்ள கேசோரம் துணி ஆலை ஒன்றில் வேலை பார்த்த ஒரியாவைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் 300 பேர் ஆலைக்குள்ளேயே அடித்துக் கொல்லப்பட்டு தீ வைத்து எரிக்கப்​பட்டனர். இந்தக் கொடூரச் சம்பவத்தில் இந்துக்கள், சீக்கியர், முஸ்லிம் என பேதமில்லாமல் பலரும் பலியாகினர். இந்தச் சம்பவம் இந்தியாவை உலுக்​கியது. இதன் காரணமாக ஒரிசா, பீகார், உத்தரப் பிரதேசம் பஞ்சாப் என பல மாநிலங்களில் மதக் கலவரம் வெடித்தது. கல்வி நிலையங்களில் தங்கிப் படித்துக்கொண்டிருந்த மாணவர்களைக்கூட வெளியே இழுத்துப் போட்டு அடித்துத் துவைத்தனர். மருத்துவமனைகளைக்கூட விட்டுவைக்கவில்லை. டாக்ஸியில் சென்ற இஸ்லாமியக் குடும்பம் ஒன்றை வண்டியோடு  தீ வைத்து எரித்தது ஒரு கும்பல். இதற்குப் பதிலடியாக கல்கத்தாவின் புறநகர் பகுதி மருத்துவமனையில் புகுந்த ஒரு கும்பல், ஒரு வார்டுக்கு தீ வைத்தது. நோயாளிகள் பலர் மூச்சுத் திணறி இறந்தனர்.

நான்கு நாட்கள் நடந்த இந்தக் கலவரம் கல்கத்தாவை மயான பூமியாக மாற்றியது. வரலாறு காணாத அளவுக்கு சடலங்கள் சாலைகளில் கிடந்தன. அவற்றைத் தின்ன வரும் கழுகுகள் கூட்டமாக நகரை வட்டமிட்டன. சடலங்களை அப்புறப்படுத்த வருபவர்களுக்கு இலவசமாக மதுவும் உணவும் வழங்கப்படுவதோடு கூடுதல் கூலியும் வழங்குவதாக பிரிட்டிஷ் அரசு அறிவித்தது.



சடலகங்களை வண்டிகளில் அள்ளிச்சென்று மொத்தமாகப் புதைத்தனர். சடலங்களில் இருந்து தொற்றுநோய் பரவிவிடுமோ என்ற பயம் காரணமாக மருத்துவ முகாம்கள் அமைக்கப்​பட்டன. இதற்கிடையில், வீடுகளை இழந்த மக்கள் நகரைவிட்டு வெளியேறத் தொடங்கினர். போக்கு​வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. உணவுக்கும் குடிநீருக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. உறங்க இடமில்லாமல் மரங்களில்தான் மக்கள் தூங்கினர். நான்கு நாட்கள் நடந்த இந்தக் கலவரத்தை ஒடுக்க பிரிட்டிஷ் அரசு ஐந்து பட்டாலியன்களை கல்கத்தாவில் இறக்கியது. இதில் இந்தியர்களும் பிரிட்டிஷ் ராணுவ வீரர்களும் இருந்தனர். அந்த வீரர்கள் கடுமையாகப் போராடி கலவரத்தை ஒடுக்கினர். 


ஆகஸ்ட் 21 அன்று வங்கத்தில் முழுமையான வைஸ்ராய் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. 22-ம் தேதி கலவரம் கட்டுக்குள் வந்தது. உடனே, நிவாரணப் பணிகளும் தொடங்கப்பட்டன. கல்கத்தாவில் கலவரம் ஒடுங்கியபோதும், அதன் எதிரொலியாக நவகாளியில் கலவரம் பற்றிக்கொண்டது. அங்கு, 5,000க்கும் மேற்பட்டோர் பலியாகினர். பீகாரிலும் கலவரம் பற்றி எரியத் தொடங்கியது. கலவரத்தைத் தடுத்து நிறுத்துவதற்காக காந்தி ஒரு நடைபயணத்தைத் தொடங்​கினார். இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு ஒத்திகை போலவே, கல்கத்தா கலவரம் அமைந்துவிட்டது.

இந்தக் கலவரம் இரண்டு பக்கமும் தூண்டி​விடப்பட்டே நடந்திருக்கிறது. இந்திய மக்களிடம் சகிப்புத்தன்மை அகன்றுவிட்டது. சகோதரர்களைப் போல பழகியவர்களை வெறிகொண்டு கொல்ல முனைந்துவிட்டனர். மோசமான மனப்போக்கின் அடையாளம் என்பதன் சாட்சியாகவே இந்தச் சம்பவம் இருந்தது. காந்தியின் தலையீடும் அவர் மேற்கொண்ட நடைபயணமும் கலவரத்தைக் கட்டுப்படுத்த உதவியது. 166 மைல்கள் நடந்து 47 கிராமங்களுக்குச் சென்றார் காந்தி. அந்த நவகாளி பகுதிகளில் இன்று வரை மதஒற்றுமையுடன் மக்கள் வாழ்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கல்கத்தா கலவரத்தில் குறிப்பிட வேண்டிய ஒன்று, ஐரோப்பியர்களோ பிரிட்டிஷ்காரர்களோ எவரும் கொல்லப்படவில்லை. சுதந்திர எழுச்சி பற்றி எரிந்த காலத்தில்கூட கலவர நேரத்தில் பிரிட்டிஷ்காரர்கள் தாக்குதலுக்கு ஆளாகவேயில்லை. ஆகவே, அவர்கள் இதை மதக் கலவரமாக மட்டுமே கருதினர். ஒருவகையில் அவர்கள் விரும்பியதுபோல இந்தியாவை இரண்டு துண்டாடப் போதுமான காரணம் அவர்களுக்குக் கிடைத்துவிட்டது.

சாமான்ய மனிதர்கள் கையில் துப்பாக்கி, கத்தி, கோடரி ஆகிய ஆயுதங்களுடன், தெருவில் கும்பல் கும்பலாக வேட்டையாடிய அந்தக் கொடூர நாட்கள் கல்கத்தாவின் நினைவுகளில் அழியாத ரத்தக்​கறையாகவே இருக்கிறது.

கல்கத்தா கலவரம் ஒடுக்கப்பட்ட பிறகு, வைஸ்ராய் அழைப்பை ஏற்று மந்திரிசபை அமைக்க நேருவுக்கு அங்கீகாரம் அளித்தது காங்கிரஸ் காரியக் கமிட்டி. அதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 24-ம் தேதி வைஸ்ராயைச் சந்தித்த நேரு, மந்திரிகளின் பட்டியலைக் கொடுத்தார். நேரு பிரதமராகவும், சர்தார் படேல், ராஜேந்திர பிரசாத், ஆசப் அலி, ராஜாஜி, சரத் சந்திரபோஸ் ஜான் மத்தாய், ஷாபத் அகமத்கான் உட்பட 13 பேர் அமைச்சர்களாகவும் இடம் பெற்றிருந்தனர் .
முஸ்லிம் லீகின் முறையான அனுமதியின்றி நேருவின் மந்திரிசபையில் சேர்ந்ததற்காக, ஷாபத் அகமத் கானை, சில முஸ்லிம் இளைஞர்கள் தாக்கி, கத்தியால் குத்தினர். காயத்துடன் அவர் உயிர் தப்பினார். நேருவின் மந்திரிசபை செப்டம்பர் 2-ம் தேதி பதவி ஏற்றது. நேரு மந்திரிசபை பதவி ஏற்கும் நாளை துக்க நாளாகவே நாங்கள் கருதுகிறோம் அதற்காக எல்லா இடங்களிலும் கறுப்புக் கொடி ஏற்றப்படும் என முஸ்லிம் லீக் அறிவித்தது. கறுப்புக் கொடி ஏற்றுவதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, பம்பாயில் வகுப்புக் கலவரம் நீடித்தது. இதில், 181 பேர் பலியாகினர். 579 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

இடைக்கால மந்திரிசபையில் முஸ்லிம் லீக் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்று வைஸ்ராய் தொடர்ந்து வற்புறுத்தினார். கடைசியில், ஜின்னா சம்மதித்தார். இதனால், நேரு மந்திரிசபையில் இடம் பெற்றிருந்த சரத் சந்திரபோஸ், ஷாபத் அகமத்கான், சையத் அலி ஜாகிர் ஆகிய மூவரும் பதவி விலகிக்கொண்டனர். முஸ்லிம் லீக் சார்பாக ஐந்து மந்திரிகளை ஜின்னா இடம்பெறச் செய்தார்.

ஆனால், முஸ்லிம் லீக் மந்திரிகள் நேருவின் தலைமைக்குக் கட்டுப்படாமல் தங்களுக்குள் ஒருவரைத் தலைவராகத் தேர்ந்தெடுத்துக்கொண்டு தனியாக செயல்படத் தொடங்கினர். இந்தக் குழப்ப நிலை நேருவுக்கும் மற்ற காங்கிரஸ் தலைவர்களுக்கும் எரிச்சலை ஏற்படுத்தியது. மந்திரிசபையில் இருந்து முஸ்லிம் லீக் மந்திரிகள் ராஜினாமா செய்யவேண்டும் என்று வைஸ்ராய்க்கு கடிதம் அனுப்பிவைத்தனர். இதுபற்றி, ஜின்னாவிடம் வைஸ்ராய் கருத்துக் கேட்டபோது ''முஸ்லிம் லீக் மந்திரிகளை வெளியேற்றினால் ஆகஸ்ட் 16-ம் தேதி கல்கத்தாவில் என்ன நடந்ததோ, அதுபோல நாடு முழுவதும் கலவரம் நடக்கும்'' என்று பயமுறுத்​தினார். இதனால், ''முஸ்லிம் லீக் மந்திரிகளை பதவி விலகும்படி கட்டாயப்படுத்த முடியாது' என்று வைஸ்​ராய் கூறிவிட்டார். அப்படியானால், '' காங்கிரஸ் மந்திரிகள் அனைவரும் ராஜினாமா செய்வார்கள்' என்று நேருவும் படேலும் அறிவித்தனர்.

நெருக்கடி நிலையை உணர்ந்த வைஸ்ராய், இங்கிலாந்து அரசுக்கு உடனே தகவல் அனுப்பினார். இதன் காரணமாக, பிரதமர் நேரு, ஜின்னா, நிதி மந்திரி லியாகத் அலிகான், பல்தேவ்சிங் ஆகியோரை உடனே லண்டனுக்கு அனுப்பிவைக்குமாறு வைஸ்ராய்க்கு இங்கிலாந்துப் பிரதமர் ஆட்லி கட்டளையிட்டார். அதன் பேரில், நால்வரும் 1947 பிப்ரவரியில் லண்டனுக்கு சென்றனர்.

அங்கு நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகே, இந்தியாவுக்குச் சுதந்திரம் தருவதற்கான வழிமுறை​களைப் பற்றி பிரிட்டிஷ் அரசு யோசிக்கத் தொடங்கியது. அதன் பிறகுதான் பாகிஸ்தான், இந்தியா என இரண்டு தேசங்கள் உருவாக்கப்படப் போகின்றன என்ற நிலை உருவானது. அதையடுத்துதான் இந்திய சுதந்திரமும் இந்தியப் பிரிவினையும் நடந்தேறின.
இந்திய சுதந்திர வரலாறு நமக்கு சுட்டிக்​காட்டும் உண்மை என்னவென்றால், மதக் கலவரங்கள் எப்போதுமே திட்டமிட்டே உருவாக்கப்படுகின்றன. இந்தக் கலவரங்களால் அதிகமாக பாதிப்பு அடைபவர்கள் சாமான்ய மக்களே. அதிலும் குறிப்பாக பெண்களும் குழந்தைகளும் மதக் கலவரங்களில் சொல்ல முடியாத துயரங்களை அனுபவிக்கின்றனர். மதம், மக்களிடையே சகிப்புத்தன்மையும் அன்பையும் பகிர்ந்து தருவதற்கு மாற்றாக... கொலை வெறியை, வன்முறையை வளர்த்துவிடுகிறது என்றால், அதை வழிநடத்துபவர்களின் செயல்களில்தான் தவறு இருக்கிறது.

கல்கத்தா, நவகாளி கலவரங்களில் பலியான அப்பாவி மக்களின் கருகிய உடல்கள் நம்மிடம் யாசிப்பது, மதத்தின் பெயரால் மனித உயிர்களைப் பலி கொடுக்காதீர்கள் என்பதை மட்டுமே. அதை நாம் மறந்தால், நடமாடும் சடலங்களாகவே நாம் கருதப்படுவோம்.


-----------------------------------

1942ல் இரண்டாம் உலகப்போர் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் இந்தியாவின் முழு ஒத்துழைப்பு பிரிட்டிஷ் அரசாங்கத்துக்குத் தேவைப்பட்டது. ஜப்பான் படை  இந்தியாவின் எல்லைகளைத் தொடும் வேளையில் இந்தியாவில் எந்த விதமான பெரிய கிளர்ச்சியையும் அரசு விரும்பவில்லை. அதனால் 1942 மார்ச் மாதம் ஒரு தூதுக்குழு இந்தியாவுக்கு அனுப்பப்பட்டது. சர் ஸ்டாஃபோர்ட் கிரிப்ஸ் அக்குழுவுக்குத் தலைமை தாங்கினார். அவர் அப்போது  வின்ஸ்டன் சர்ச்சிலின் போர்க்கால மந்திரி சபையில்  இருந்தார். இந்திய அரசியல் தலைவர்களைச் சந்தித்து, தான் கொண்டு வந்த திட்டத்தை விளக்கினார். மாகாணங்களுக்கு டொமினியன் அந்தஸ்து; அவை தனியாக செயல்படுவதற்கு அதிகாரம்; ஒரு பொது அரசமைப்பு சட்டத்தை உருவாக்குவது போன்ற அம்சங்களைக் கொண்டது கிரிப்ஸ் திட்டம். அந்தப் பொது அரசமைப்பு  சட்டத்தை அப்படியே பிரிட்டிஷ் அரசங்கம் ஏற்றுக்கொள்ளும் என்பதற்கு உத்தரவாதமில்லை என்ற நிபந்தனையும் அதில் அடங்கி இருந்தது. அதனால் அதை இந்திய அரசியல் தலைவர்கள் ஏற்கவில்லை. திவாலான வங்கியின்  ‘பின் தேதியிட்ட காசோலை’ என்று அதை அவர்கள் வருணித்தார்கள்.

எனவே கிரிப்ஸ் தூதுக்குழுவின் முயற்சி தோல்வியில் முடிந்தது. அதைத் தொடர்ந்து 1942 ஆகஸ்ட் 8 ஆம் தேதி காங்கிரஸ் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை அறிவித்தது. விடுதலையை நோக்கி ஒருமுகப்படுத்தபட்ட நாட்டை காந்தி, கப்பலை இயக்கும் கேப்டனைப் போல வழி நடத்தினார்.
இந்த வேளையில் தான் ஜின்னாவும் அவருடன் இருந்தவர்களும், முஸ்லிம்களுக்கு தனி நாடு அவசியம் என்று தெளிவாக அறிவித்தார்கள். தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி பிரிட்டிஷாருக்கு மட்டுமல்ல காங்கிரஸுக்கும் அழுத்தம் கொடுத்தார்கள். விடுதலை கைக்கு எட்டும்  தொலைவில் இருப்பதை உணர்ந்த ஜின்னா பேரம் சீக்கிரம் முடியவேண்டும் என்று விரும்பினார். 1946 இல் எல்லாம் முற்றிய நிலையில் ஜின்னா இதற்கு மேல் நாங்கள் பொறுக்க முடியாது என்று அனைவருக்கும் காட்ட முடிவெடுத்தார்.
1946 இல் நடைபெற்ற மாகாணத்தேர்தல்களுக்குப் பிறகு வங்காளத்தில் முஸ்லிம் லீக்கின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதே ஆண்டில் பிரிட்டிஷ் அரசின் கேபினட் மிஷன் பிரிட்டிஷ் ஆட்சியின் அதிகாரங்களை இந்தியாவுக்கு மாற்றும் பெரும் பணியில் ஈடுபட்டது. அது இந்தியாவை தற்போதுள்ள பாகிஸ்தான், வங்க தேசம் சேர்த்து விடுதலை பெற்ற டொமினியனாக அறிவிக்க முடிவு செய்தது. அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றது முஸ்லிம் லீக். அது இந்தியாவும், பாகிஸ்தானும்  விடுதலை பெற்ற இரண்டு தனி டொமினியன்களாக அறிவிக்கப்பட வேண்டும் என்றது. ஆனால் முஸ்லிம் லீக் கோரிக்கையை காங்கிரஸ் ஏற்க மறுத்தது. அந்த நிகழ்வுகளின் தொடர்ச்சியாக 1946 ஜூலை  27 ஆம் தேதி முஸ்லிம் லீக் பம்பாயில்  கூடியது. பிரிட்டிஷ் அரசின் கேபினட் மிஷன் முடிவை அது  நிராகரித்தது. மேலும்  1946 ஆகஸ்ட் 16 ஆம் தேதி மிகப்பெரிய நாடு தழுவிய ஹர்த்தாலை நடத்தப் போவதாக அறிவித்தது. அந்த தினத்துக்கு  ‘நேரடி நடவடிக்கை நாள்’என்று பெயரிட்டது.

நேரடி நடவடிக்கை நாளான ஆகஸ்ட் 16 ஆம் தேதி  எல்லாம் திட்டமிட்டபடி நடந்தன. இந்தியாவின் பல பகுதிகளில் பிரச்சனை ஏதுமின்றி கடந்து போனது. ஆனால் அது கல்கத்தாவை உலுக்கி எடுத்தது. முஸ்லிம் லீக் மிகப்பெரிய திட்டம் தீட்டி இருந்தது. வெகு முன்னதாகவே ரயில் தண்டவாளங்களைப் பயன்படுத்தி கொடிய ஆயுதங்களை தயார் செய்து தேவையான இடங்களுக்கு அனுப்பி வைத்தது. நேரடி நடவடிக்கை நாளன்று முஸ்லிம் லீக் தொண்டர்கள் இந்துக்களையும் முஸ்லிம்களையும்  கடைகளை மூடச் சொல்லி  மிரட்டினார்கள். மறுப்பவர்கள் கடைகளை சூறையாடினார்கள்.  முஸ்லிம்கள் இந்துக்களையும் சீக்கியர்களையும் கொல்ல, இந்துக்களும் சீக்கியர்களும் முஸ்லிம்களைக் கொல்லத் தொடங்கினார்கள். சில இடங்களில் மனிதர்கள் துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்டர்கள். கல்வி நிறுவனங்களுக்குள் புகுந்து மாணவர்களைச் சிலர் வெளியே இழுத்து வந்து கொலை செய்தார்கள்.
இஸ்லாமிய மக்கள் மிரண்டு போய் உயிருக்கு பயந்து கிழக்கு வங்காளத்துக்குத் தப்பிச் செல்ல புறப்பட்டது உண்மை. அதனால் ஹவுரா பாலம் முழுவதும் மக்கள் கூட்டம் அலைமோதியது. ஆனால் மிகக் கவனமாக மேல் மட்டத்தில் இருந்து கீழ் மட்டம் வரை திட்டமிட்டு தொண்டர்களுக்கு ரகசிய சுற்றறிக்கைகளை விநியோகித்து, ஆயுதங்களும் வழங்கி வன்முறைகளை ஒருங்கிணைத்தது முஸ்லிம் லீக் கட்சிதான்.
இணைந்திருந்த வங்காளத்தை ஆட்சி செய்துகொண்டிருந்தது முஸ்லிம் லீக்தான். அதனால் ஆட்சியாளர்கள் கல்கத்தா படுகொலைகள் நடக்க குண்டர்களுக்கும், முஸ்லிம் லீக்கை சேர்ந்தவர்களுக்கும்  முழு ஆதரவும், ஆசியும் அளித்தார்கள். ரேஷன் முறையில் பெட்ரோல் வழங்கப்பட்ட அக்காலத்தில் பெட்ரோல் கூப்பன்களை அவர்களுக்கு  தாராளமாக  வழங்கினார்கள். அதிகாரத்தையும், திறமையையும் பயன்படுத்தி  வன்முறையை அனுமதித்தார்கள்.

வங்காளத்தின் முதலமைச்சர் பிரீமியர் ஷாகித் சுகர்வாடி ஒரு மோசமான மதக்கலவரம் நடைபெறுவதற்குக் காரணமானார். காவல் நிலையங்களுக்குள் சென்று போலீசார் கைது செய்து வைத்திருந்த முஸ்லிம் லீக் தொண்டர்களையும் சமூக விரோதிகளையும் விடுதலை செய்தார். இது சில காவலர்களின்  வாக்குமூலங்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது.   சுகர்வாடி போன்ற வங்காள முஸ்லிம் தலைவர்கள் முழுமூச்சுடன் நேரடி நடவடிக்கையில் இறங்கினார்கள். அவர்கள் பாகிஸ்தான்  என்ற பரிசைப் பெறுவதற்கு சில கடினமான முறைகளைக் கையாள்வதில் துளியும் தவறில்லை என்று எண்ணி இருக்கலாம். இந்துக்கள் திருப்பித் தாக்குவார்கள் என்று அவர்கள் எதிர்பார்த்தார்கள். அதன் காரணமாகவே  ஆகஸ்ட் 16 ஆம் தேதிக்கு முன்னதாகவே ஆயுதங்களோடு, ஆம்புலன்ஸ் வண்டிகளும் தயாராக இருந்தன.
அகிம்சாவாதியான காந்தியை மதக்கலவரம்  கடுமையான கவலைக்குள்ளாக்கியது . பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று வந்த காந்தி மனம் உடைந்து போனார். அதனால்தான்  வேவல் பிரபு காந்தி தன்னிடம்  இப்படி ஒரு கருத்தைக் தெரிவித்தார் என்றார். “இந்தியா ரத்தத்தில் நீராட விரும்பினால் அப்படியே ஆகட்டும்.”
கடைசியாக பதிவு செய்யப்பட்ட  தகவல்களின்படி கல்கத்தா கலவரத்தில் சுமார் 7000 முதல் 10,000 பேர் கொல்லப்பட்டார்கள்; ஒரு லட்சம் பேர் காயமடைந்தார்கள். ஆகஸ்ட் 21 ஆம் தேதி ராணுவத்தின் ஐந்து பெட்டாலியன்களும், நான்கு கூர்க்கா  பெட்டாலியன்களும் வந்து இறங்கின. நிலைமை கட்டுக்குள் வந்தது. எதிர்வினையாற்றிய இந்துக்கள் சிலர் தற்காப்பு நடவடிக்கைகளிலும்,  கொலை செய்வதிலும் ஈடுபட்டார்கள். அப்போது அவர்கள், 1945 முதல் கல்கத்தாவில் தங்கி இருந்த அமெரிக்க ராணுவ வீரர்களிடமிருந்து துப்பாக்கிகளை வாங்கி பயன்படுத்தினார்கள். சில மார்வாரிகள் கலவரம் நடக்கப்போவதை எதிர்பார்த்து அமெரிக்க ராணுவ வீரர்களிடம் இருந்து துப்பாக்கிகளை வாங்கி வைத்திருந்தார்கள் என்று கல்கத்தா படுகொலைகள் பற்றி விசாரிக்க அமைக்கப்பட்ட கமிஷனின் அறிக்கை கூறுகிறது. உயிரோடு குழந்தைகளை தீக்குள்  வீசி எறிவது ; காருக்குள் இருந்த குடும்பத்தை காரோடு சேர்த்து கொளுத்துவது போன்றவற்றில் முஸ்லிம் வன்முறையாளர்கள் ஈடுபட்டார்கள். படித்த நாகரீகமான மனிதர்கள் கூட மோசமான மன நிலைக்கு நிரந்தரமாகத் தள்ளப்படுவார்கள் என்றார் நேரு.

வரலாறு காணாத படுகொலைகள் நடந்தபோது வங்காளத்தின் அரசு இயந்திரமும், காவல் துறையும் என்ன செய்து கொண்டிருந்தன என்பதும், குறிப்பாக முதலமைச்சர் என்ன நடவடிக்கைகளை எடுத்தார் என்பதும் பலருக்கும்  எழும் முக்கியமான கேள்விகள். இவற்றுக்கு விடை காண பத்திரிகை செய்திகளைப் பார்த்தால் மட்டும் போதாது. சில காவல் துறை ஆவணங்களும், புலனாய்வுத்துறை குறிப்புகளும் தேவைப்படும்.  பிற்காலத்திலும் அவை சில உண்மைகளை வெளிக்கொணர்ந்து விடும் என்று ஆட்சியில் உள்ளவர்கள் கருதினார்கள். அப்போது வங்காளத்தில் ஆட்சியில் இருந்த முஸ்லிம் லீக்கைச்  சேர்ந்தவர்கள்,பாதிக்கப்பட்ட மக்கள் கொடுத்த பல நூறு மனுக்கள், முறையீடுகள், இன்னும் பல ஆவணங்கள் ஆகியவற்றில் பெரும்பாலானவற்றை அழித்தார்கள். இருந்தும் எல்லாவற்றையும்  நீக்கவோ, அழிக்கவோ முடியவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த வாக்குமூலங்கள், கல்கத்தா போலீஸார் பல பேருடன் நடத்திய விசாரணைகள் அடங்கிய ஆவணங்கள் ஆகியவை விசாரணைக் கமிஷனிடம் அளிக்கப்பட்டன.
காவல் துறை கொடுத்த  ஆவணங்கள்; இந்திய தேசிய காங்கிரஸிடமும், இந்து மகாசபையிடமும் பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த மனுக்கள் ஆகியவற்றை கமிஷன் முறையாக பதிவு செய்துள்ளது. அவை எல்லாம் கல்கத்தா, டெல்லி அருங்காட்சியகங்களில் பாதுகாப்பாக உள்ளன. இவற்றோடு,  பலர் தங்கள் நினைவுகளில் இருந்து கூறியவையும், உண்மை நிகழ்வுகளை நம் கண்முன்னே கொண்டு வருகின்றன. தேதி வாரியாக , ஒவ்வொரு மணி நேரமும் நடத்தப்பட்ட படுகொலைகள், சூறையாடல்கள் ஆகியவை கல்கத்தா போலீஸ் ஆவணங்களில் பதிவாகியுள்ளன. அவற்றை எல்லாம் பார்க்கும்போது, அது  தவறி நடந்த கலவரமாகத் தெரியவில்லை. ஒரு நோக்கத்துக்காக திட்டமிட்டு இழைக்கப்பட்ட கொடுமைகள் அவை.
தனி நாடு கேட்டவர்கள் அதை அடைய கொடிய வழிமுறைகளைக் கையாண்டார்கள். அதன் பிறகு தங்கள் அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொள்ள அவர்களில் பலர், 1971 இல் நடந்த இந்திய பாகிஸ்தான் போரின் போதும், அதற்கு  முன்பும்,  கிழக்கு வங்காளத்தில் பல லட்சம் முஸ்லிம்களைக் கொன்றார்கள்.
0

தற்போதிருக்கும் வங்கதேசத்தில் மொத்தம் ஏழு நிர்வாகப் பிரிவுகள் உள்ளன. அவற்றுள்  மிகப்பெரியது தென்கிழக்கில் உள்ள சிட்டாகோங் பிரிவு. இந்தப் பிரிவை வட மேற்கில் இருந்து தென்கிழக்காக பார்த்துக் கொண்டே வர வேண்டும். அப்போது வரிசையாக இந்த  நிர்வாகப் பிரிவில் நாம் பிரம்மன்பாரியா, கொமிலா, சந்த்பூர், லட்சுமி பூர், நவகாளி, ஃபென்னி, சிட்டாகோங், காகரசாரி, ரங்கமதி, பந்தர்பன், காக்ஸ் பஜார் ஆகிய பதினோரு மாவட்டங்களைப் காணலாம். இவற்றில் முதல்  ஐந்து மாவட்டங்களை (37.6%) வட மேற்கு மாவட்டங்கள் எனவும் எஞ்சியுள்ள ஆறு மாவட்டங்களை (62.4%) தென்  கிழக்கு மாவட்டங்கள் எனவும் எளிதாகப் பிரித்துவிடலாம். வரைபடத்தில் பார்த்தால் தென் கிழக்கு மாவட்டங்கள் உள்ள பகுதி பிற்சேர்க்கை போல தொங்கிக் கொண்டிருக்கும். இப்போது தனி நிர்வாகப் பிரிவாக இருக்கும் சில்ஹெத்தின் ஆறு மாவட்டங்கள் 1995 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை சிட்டாகோங் பிரிவோடு சேர்ந்திருந்தன.
நமக்கு வேண்டியது  1946 இல் பிரிட்டிஷ் இந்தியாவில் மேற்கு வங்காளமும், கிழக்கு வங்காளமும் (வங்க தேசம் இணைந்த வங்காள மாகாணத்தில்  சிட்டாகோங் பிரிவின் நிலை. வங்காள மாகாணத்தில் சிட்டாகோங் ஒரு நிர்வாகப் பிரிவாக (யூனிட்)  இருந்தது. அதன் தலைநகரம் துறைமுக நகரமான சிட்டாகோங். நவகாளியும், திபேராவும் சிட்டாகோங் நிர்வாகப் பிரிவில் இருந்த இரு மாவட்டங்கள்.
1946ல் இனஅழிப்பு வன்முறைகள் அரங்கேறிய நவகாளி மாவட்டம் என்பது தற்போது இருக்கும் வங்க தேசத்து நவகாளி, லட்சுமி பூர், ஃபென்னி ஆகிய மாவட்டங்கள் சேர்ந்த பகுதியாக இருந்தது. திப்பேரா மாவட்டம் (Tippera) என்பது தற்போதைய வங்கதேசத்தின்  கொமிலா, சந்த்பூர், பிரம்மன்பாரியா ஆகிய மாவட்டங்கள் சேர்ந்த பகுதியாக இருந்தது.

அப்போதிருந்த சிட்டாகோங் நிர்வாக பிரிவில் ஹில் திப்பேரா சமஸ்தானமும் இணைந்திருந்தது. அகர்தலாவைத் தலைநகராகக் கொண்ட அந்த சமஸ்தானத்தின் பரப்பளவு 1941 இல் 10,660 சதுர கிலோமீட்டர். ஹில் திப்பேரா அல்லது திரிபுரா  சமஸ்தானம்  இந்திய விடுதலைக்குப் பிறகு 1949 இல் இந்தியாவுடன் இணைந்து கொண்டது. தற்போது திரிபுரா இந்தியாவின் ஒரு மாநிலமாக உள்ளது. அது பூகோள அமைப்பின்படி வங்க தேசப் பகுதிகளுக்குள் சிக்கியிருக்கும் ஒரு மாநிலம். அதன் மேற்கு,வடக்கு,தெற்கு எல்லைகளில்  வங்கதேசப் பகுதிகள் உள்ளன. அதன் கிழக்கில் இந்தியாவின் மிசோராம் மாநிலமும்,வட கிழக்கில் அசாம் மாநிலமும் உள்ளன.
வன்முறைகள் நடந்தபோது நவகாளி மாவட்டத்தில் ராம் கன்ஜ் ; பேகம் கன்ஜ்; ராய்பூர்; லட்சுமிபூர்; சாகல் நையா; சந்த்விப் காவல் நிலையங்களின் கட்டுப்பாட்டில் வரும் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.  திப்பேரா மாவட்டத்தில்  ஹஜிகன்ஜ்; பாரித் கனஜ்; சந்த்பூர்; லக் ஷம்; சவுத கிராம் காவல் நிலையங்களின் கட்டுப்பாட்டில் வரும் பகுதிகள் நரகமாயின. மொத்தம் 2000 சதுர மைல்கள் பரப்பளவுள்ள பகுதி மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது. நவகாளி, திப்பேரா ஆகிய மாவட்டங்களில் சுமார் 5000 இந்துக்கள் கொலை செய்யப்பட்டார்கள்; பெண்கள் வல்லுறவு கொடுமைக்கு ஆட்படுத்தப்பட்டார்கள்.

கல்கத்தாவில் இருந்து நவகாளிக்கு விமானத்தில் பயணித்தால் ஒன்றரை மணி நேரத்தில் சென்று விடலாம். ஆனால் தடைகள் ஏற்படுத்தப்பட்டிருந்ததால் ராணுவம் உள்ளே நுழைய அதிக சிரமப்பட்டது. படகுகள் செல்லும் நீர்வழிகள் எல்லாவற்றிலும் தடைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. அதனால்  விமானம் மூலம் வந்த ராணுவம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குள் நுழைய ஒரு வார காலமானது. ஒரு மாத காலத்துக்குப் பிறகு தான் முழு வீச்சில் நிவாரணப் பணிகள் நடந்தன.
நவகாளி, திப்பேரா கொலைகள் பற்றியும், கட்டாய மதமாற்றம் பற்றியும்  பத்திரிகைகளில் செய்திகள் வர ஆரம்பித்தன. முஸ்லிம் லீக்கின் ஸ்டார் பத்திரிகை கட்டாய மதமாற்றம் நடைபெற்றதாக வந்த செய்திகளை மறுத்தது. வங்காள சட்டசபையில் திரேந்திரநாத் தத்தா வன்முறைகள் தொடர்பாக கேள்வி எழுப்பினார். வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பல்லாயிரம் பேர் மதமாற்றம் செய்யப்பட்டார்கள் என்றார். அப்போது பதிலளித்த முதலமைச்சர் சாகித் சுகர்வாடி அந்தப் பகுதிகளில் கட்டாய மதமாற்றம் நடந்ததை ஒப்புக் கொண்டார். மேலும் அவர்  கல்கத்தாவில்  இந்துக்களின் சொத்துகள் சூறையாடப்பட்டது; கொள்ளையடிக்கப்பட்டது; கட்டாய மதமாற்றம் நடைபெற்றது என்றும் ஒப்புக் கொண்டார். பாலங்கள் தகர்க்கப்பட்டுள்ளன. சாலைகளில் பயணிக்க முடியாதபடி தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நீர் வழிகளும் பயணிக்க முடியாத நிலையில் உள்ளன. அதனால் பாதுகாப்புப் படைகளை உடனடியாக அனுப்பமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.
நவகாளி வன்முறைகள் வெளி உலகுக்குத் தெரிய ஆரம்பித்ததும் அரசியல் அமைப்புகளும், மதம், சமுதாயம் சார்ந்த அமைப்புகளும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன் வந்தன. இந்திய தேசிய காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய தேசிய ராணுவம், பாரத சேவாசிரம சங்கம், இந்து மகாசபை, ஆர்ய சமாஜம் போன்ற அமைப்புகளோடு இன்னும் பல அமைப்புகளும் உதவிகள் செய்யவும், களப்பணியாற்றவும் தம்மை அர்ப்பணித்துக் கொண்டன. 30 தொண்டு நிறுவனங்களும், ஆறு மருத்துவ மிஷன்களும் பணியாற்றின. இவை போக காந்தியின் கீழ் இருபது முகாம்கள் செயல்பட்டன. இந்துமகா சபையின் பொதுச் செயலாளர் அஷுதோஷ் லாகிரி நவகாளி வன்முறைகள் பற்றி செய்திகள் வந்தவுடன் சந்த்பூர் சென்றார். ராணுவப் பாதுகாப்புடன் விமானத்தில் ஷியாம பிரசாத் முகர்ஜி, நிர்மல் சந்திர சாட்டர்ஜி, பண்டிட் நரேந்திர நாத் தாஸ் போன்ற  தலைவர்களும், தொண்டர்களும் கொமிலாவை அடைந்தார்கள். அரிசி, ரொட்டி, பால், மருந்துகள் எல்லாம் விமானம் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்பட்டன.
கல்கத்தாவில் தஞ்சம் அடைந்தவர்கள் நகரத்திலும் அதை ஒட்டிய பகுதிகளிலும் 60 மையங்களில் தங்க வைக்கப்பட்டார்கள். பொது மக்கள் தாராளமாக பணம் கொடுத்து உதவினார்கள். நவகாளி, திப்பேரா மாவட்டங்களில் இருந்த நிவாரண முகாம்கள் ஒவ்வொன்றிலும் நடமாடும் மருத்துவக் குழு அமைக்கப்பட்டது. அவற்றைத் திறமைமிக்க மருத்துவ அதிகாரிகள் வழி நடத்தினார்கள். நவகாளியில் வன்முறையை எதிர்த்துப் போராடி உயிர் விட்ட  ராஜேந்திரலால் என்பவரின் நினைவாக 25 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை லட்சுமிபூரில் தொடங்கப்பட்டது. அகில இந்திய பெண்கள் கூட்டமைப்பின் துணை அமைப்பான சடோகிராம் மகிள சங்கம் சார்பில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்காக  நவகாளி நிவாரணக் குழு அமைக்கப்பட்டது. பெண்கள் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்ட தலை சிறந்த போராளி லீலா ராய் டிசம்பர் மாதம் சவுமுஹானியிலிருந்து 90 மைல்கள் நடந்து சென்று  ராம்கன்ஜ் அடைந்தார். அவருடைய தேசிய சேவை அமைப்பு 17  நிவாரண முகாம்களை அமைத்தது. லீலா ராய் வன்முறையாளர்களால் கடத்தப்பட்ட  1307 அபலைப் பெண்களை மீட்டார்.
நவகாளி, திப்பேரா இன அழிப்பு வன்முறைகளுக்குப் பிறகு வங்காளத்தின் அண்டை  மாநிலமான பிகாரை பெரும் கலவரம் ஒன்று உலுக்கியது. 1946 அக்டோபர் 30 ஆம் தேதிக்கும் நவம்பர் 7 ஆம் தேதிக்கும் இடையே மிகப்பெரிய படுகொலைகள் அங்கு  நடந்தன. இம்முறை மிகுதியாக பாதிக்கப்பட்டவர்கள் இஸ்லாமியர்கள். பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில்  5000 பேர் கொல்லப்பட்டார்கள் என்று ஓர்  அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. ஸ்டேட்ஸ்மன் பத்திரிகை 10,000 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்றது. கொல்லப்பட்டவர்களில் முஸ்லிம் பெண்களும், குழந்தைகளும் அடங்குவார்கள்.

ஜின்னா பதறினார். பிரிவினைக்கு முழு அழுத்தம் கொடுத்தார். முக்கியமான விஷயம் என்னவென்றால் கல்கத்தா, நவகாளி படுகொலைகளுக்கு பழி தீர்ப்பதற்காக பிகார் இனப்படுகொலைகள் நிகழ்த்தப்பட்டன என்ற கருத்து பரவியது தான். உண்மை அது வல்ல.
அங்கு அமைதியாக இருந்த மாவட்டத் தலை நகரங்களிலும், பல கிராமங்களிலும் கல்கத்தா, நவகாளி போலவே முஸ்லிம் லீக் மதக்கலவரத்தை பெரிய அளவில் திட்டமிட்டு நடத்தியது. அது  டாக்டர் பி.எஸ்.மூன்ஜ் போன்றோரால் அம்பலப்படுத்தப்பட்டது. அவர் உயிரைப் பணயம் வைத்து மேலும் சிலருடன் வன்முறையால் பாதிக்கப்பட்ட  நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் சென்று உண்மை நிலவரங்களைக் கண்டறிந்து உலகுக்குத் தெரிவித்தார். அங்கு இந்துக்களின் எதிர் தாக்குதல்கள்  கடுமையாக இருந்தன என்பது  உண்மை. ஆனால்அவை கல்கத்தா, நவகாளி படுகொலைகளுக்கு பழி தீர்ப்பதற்காக நடத்தப்பட்டவையல்ல என்பது அவர் அறிக்கைகள் முலம் தெளிவானது. அமைதியாக இருக்கும் மக்களை கொடிய திட்டங்கள் மூலம் தூண்டிவிட்டது முஸ்லிம் லீக். தொண்டர்களையும், சமூக விரோதிகளையும் ஏவி விட்டு மதக்கலவரத்தை தொடங்கி வைத்தது அது தான்  என்பது ஆதார பூர்வமாக நிரூபிக்கப்பட்டது.
கல்கத்தாவில் ஓடிய ரத்த ஆறு  நவகாளியையும், திப்பேராவையும் அழித்து, பிகாரைத் தொட்டது.அதன் பின் இணைந்த மாகாணங்களில் படுகொலைகள் நடந்தன. இணைந்த மாகாணம் என்பது கிட்டத்தட்ட தற்போதைய உத்தரப் பிரதேச மாநிலத்தையும், உத்தரகண்ட் மாநிலத்தையும் கொண்ட பகுதியைக் குறிக்கிறது. தற்போது பாகிஸ்தானில் உள்ள வட மேற்கு  எல்லை மாகாணம், சிந்து ஆகிய இடங்களும் பாதிக்கப்பட்டன. அதே வேளையில் பாகிஸ்தானை உருவாக்க நினைத்தவர்கள் நிகழ்த்திய கொடுமைகள் விடுதலைக்கு முன் இணைந்திருந்த பஞ்சாப் மாகாணத்தை மற்ற எல்லா இடங்களையும்விட அதிகமாக தாக்கி சீரழித்தன. ஏனென்றால் தனி பாகிஸ்தானை அடைய நடக்கும் போரில் முஸ்லிம் லீகுக்கு வங்காளத்துக்கு அடுத்தபடியாக  இணைந்திருந்த பஞ்சாப் பிரிக்கப்பட வேண்டியது மிகவும் முக்கியம். பஞ்சாபில்  சீக்கியர்கள் படுபயங்கரமான எதிர் தாக்குதல் நடத்தியபோது அது தேசப்பிரிவினைக்காக நடத்தப்படும்  உள் நாட்டுப்போராக மாறிவிட்டது.


No comments:

Post a Comment