Thursday 26 October 2017

CEYLON TAMILS TEARS




CEYLON  TAMILS TEARS



ஜில் துரையின் புதைகுழி
- சிறுகதை

சந்தனம் கடை மண்டியிலிருந்து லயத்துக்கு வந்த பொழுது மணி ஆறரையாகி விட்டது. வரும்பொழுது கரு வளையல்கள் இரண்டை வாங்கி வந்திருந்தான். ஆனால் அவன் லயத்திலே கண்ட காட்சி அவனைத் திடுக்கிட வைத்து விட்டது. அழகு என்றுமில்லாதபடி லயத்தின் மூலையிலே போர்த்தி மூடிப் படுத்திருந்தாள்.

மற்ற நாட்களில் அவன் கடை மண்டிக்குப் போய் வரும் வேளைகளில் அழகுவின் சிரித்த முகம் அவனை வரவேற்கும். சிட்டுப் போல் பறந்தோடி கலயத்தில் தேநீர் கொண்டு வருவாள். கருப்பட்டியை வாயில் போட்டு தேநீரைப் பருகியவண்ணமே அவன் தனக்குத் தெரிந்த கதைகள் எல்லாவற்றையும் அளப்பான். கள்ளுத்தண்ணி கொஞ்சம் ஏறியிருக்கும் வேளைகளில்மட்டும் அவனை அறியாமலே தெம்மாங்குகளை அவன் பாட ஆரம்பிப்பான். அழகுக்கு அவன் கள்ளுக் குடிப்பதில் பிரியமில்லை. ஆனாலும் சிருங்காரமான தெம்மாங்குகளைக் கேட்பதில் அவளுக்கு ஆசை. "இன்னொண்ணுபாடு மச்சான்" என்று தொல்லை பண்ணுவாள். அவனும் பாடுவான். அழகுக்கு உடலெல்லாம் பூரிக்கும். 

ஆசை நிறைந்த விழிகளால் நோக்குவாள் சந்தனத்தை...
இன்று இவ்விதமான வரவேற்புக்கு இடமில்லை. இருள் படர்ந்த அந்த அறையின் மூலையிலே அழகு சுருண்டு படுத்திருந்தாள்.
நெருப்புப் பெட்டியை எடுத்து மண்ணெண்ணெய் லாம்பைக் கொளுத்தியவண்ணமே "ஏ, அழகு புள்ளே, என்ன படுத்திருக்கே?" என்று கேட்டான் அவன்.

அழகு, தன் முகத்தை மூடியிருந்த சீலையை விலக்கி பேசமுடியாது முனகினாள். சந்தனம் அவளை நெருங்கி அவளது நெற்றியில் தன் கையை வைத்துப் பார்த்தான். சூடேறிய தகடு போல் அவள் நெற்றி கொதித்துக் கொன்டிருந்தது.

சந்தனத்துக்கும் அழகுக்கும் திருமணமாகி மூன்றுமாதங்கள்தான். இதுவரைக்கும் அவளுக்கு ஒருநாளாவது தடிமன் காய்ச்சல் கூட பிடித்தது கிடையாது. இன்று அவளுக்கு திடீரென கடும் ஜூரம் அடிப்பதன் காரணம் அவனுக்கு விளங்கவில்லை. ஆனால் பக்கத்தறையில் வசித்த மீனாட்சி "அவ பார்க்கிறதற்கு லட்சணமாய் , புருஷனுக்கு ஒழுங்காக இருந்தா, எந்த நாயுடைய கண் தோஷமோ?" என்று தானறிந்த அளவில் அழகுக்கு நோய் ஏற்பட்டதன் காரணத்தை விளக்கினாள்.

சுக்கு, மிளகு, திப்பிலி கொடுக்கும்படி சந்தனத்தின் நண்பன் ராமசாமி ஆலோசனை கூறினான். ஆனால் லயத்திலே பெருவாரியானோர் 'டாக்டர் மாத்தையாவிடம் கொண்டு போ' என்று புத்திமதியையே கூறினார்கள். சந்தனம் ஜனநாயகவாதி. பெருவாரியானோரின் ஆலோசனையின்படியே நடப்பதென்று தீர்மானித்தான் அவன்.


டாக்டர் நீலமேகம் 'குடை நிழல்' வம்சாவளி. அதாவது தோட்டக்காடுகளில் குடை பிடித்து நடக்கும் விஷேச உரிமை பெற்ற கங்காணிமார் வகையறாவைச் சேர்ந்தவர் அவரது தகப்பனார். எப்படியோ தோட்டத்துரையின் மடப்பள்ளிச் சேவகமும் அதைத் தொடர்ந்து சில்லறை ஆங்கிலமும் அவருக்குக் கிடைத்துவிட்டன. இதன் விளைவாக வாழ்க்கையில் எவ்வளவோ சுழல்கள். படிப்படியே ஏணி போட்டு கடைசியில் அவர் மகன் டிஸ்பென்சர் நீலமேகம், டாக்டர் என்னும் பெயருக்கும் உரியவரானார்.

கருக்கலிலே நீலமேகத்தின் பங்களாவுக்கு வந்து சேர்ந்தான் சந்தனம். அழகுவை வராந்தாவில் வளர்த்தி விட்டு டாக்டரின் வரவை எதிர்பா ர்த்திருந்தான். அந்த விசாலமான வராந்தாவில் ஏற்கனவே மூன்று நோயாளிகள் முனகிக்கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். அழகுவின் ஈனக்குரலும் அவர்களின் முனகலுடன் சேர்ந்தது.

டாக்டர், கன்னங்கரேலென்ற 'யாழ்ப்பாணம்' சுருட்டை வாயில் செருகிக் கொண்டு பத்திரிகையை அகல விரித்துப் பார்த்துக்கொண்டிருந்தார். குழந்தைகள் ரேடியோவை முடுக்கிவிட்டு கிரிக்கெட் பந்தாட்ட விமர்சனத்தைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.


சரியாக ஏழரை மணிக்கு டாக்டர் நோயாளிகள் மத்தியில் பிரவேசித்தார். 'இப்போதாவது வந்தாரே மனுசர்' என்று பெருமூச்சுவிட்டார்கள் நோயாளிகள். அந்தத் திருப்தியிலேயே அரைவாசி நோய் தீர்ந்துவிடும் போலிருந்தது. டாக்டர் ஒரு நோயாளி விஷயத்தைத் தீர்த்துக்கட்டி விட்டு சுருண்டு படுத்திருந்த அழகுவின் பக்கம் தமது திருஷ்டியைச் செலுத்தினார். அப்போது பங்களா வாசலில் தோட்டத்துரையின் வேலைக்காரப் பையன் ஆசிர்வாதம் திடீரெனத் தோன்றினான்.

'என்ன ஆசிர்வாதம், என்ன விஷேசம்?' என்றார் டாக்டர்.
'ஜில்லின் உடம்புக்கு ஆபத்து. உங்களை அழைச்சிண்டு வரும்படி துரைசானி உத்தரவு'
ஆசிர்வாதனம் ஓடிவந்த களைப்பினால் இன்னும் இளைத்துக் கொண்டிருந்தான். ஒரு நிமிஷம் கழிந்திருக்கும். டாக்டரின் லொடலொட்டை கார் இருளைக் கிழித்துக்கொண்டு வெள்ளைத்துரை மிஸ்டர் புரும்ஸ் பங்களாவை நோக்கி கடபுடா, கடபுடா என்று விரைந்து கொன்டிருந்தது.

சந்தனம் திக்பிரமை பிடித்து உட்கார்த்திருந்தான். 

அழகுவின் முனகல் அமைதியைக் கிழித்து ஒலி செய்து கொண்டிருந்தது. எல்லையற்ற வேதனை அவளது குரலில் கலந்தொலித்தது. சந்தனமோ கண்ணில் நீர் துளிக்க வெறிச்சென்ற ஆகாயத்தை நோக்கினான்.

ஜில்லும் அழகு போன்ற ஒரு 'வாயில்லாப் பிராணி'தான். ஆனால் மற்ற விஷயங்களில் சிறிது வித்யாசம் இருக்கத்தான் செய்தது. உதாரணமாக அழகுவிலும் பார்க்க இரண்டு கால்களும் ஒரு வாலும் அதற்கு அதிகம். எனவே அது விஷேச மரியாதைக்கு உரியது தானே?

சந்தனத்தின் உள்ளம் பொருமியது. வாடித்துவண்டுபோன ஒரு பூங்கொடிபோல அழகுவின் தளிர்மேனி அவன் மீது சாய்ந்து கிடக்க, "சரிதான். அவர் வரும் வரைக்கும் காத்திருக்க வேண்டியதுதான்" என்று அவன் முடிவு செய்திருந்தான். வேறேதுதான் அவன் செய்ய முடியும்?

டாக்டர் தேடிச் சென்ற ஜில், புரும்ஸ் துரை பங்களாவிலே ஒரு மெத்தையிலே படுத்திருக்க, பக்கத்திலே துரைசானி அழாக்குறையாக உட்கார்த்திருந்தாள்.
ஜில் 'புல்டெரியர்' ஜாதி சீமையிலிருந்து இறக்குமதியான அதன் எஜமாட்டி போல் அதுவும் அங்கிருந்து இறக்குமதியானதால் அதற்கு விஷேச அந்தஸ்தும் மதிப்பும் இருந்து வந்தது. புரும்ஸ் துரை எவ்விதம் சுற்றுவட்டாரத்துப் பொதுமக்களோடு உறவு வைத்துக்கொள்ளமாட்டாரோ, அவ்வாறுதான் நாலு கால் உலகில் ஜில் ஒரு துரை. தொழிலாளரின் நாய்களுடன் ஜில் உறவாடுவதில்லை.

ஜில் துரை , தோட்டத்திலே ஒரு முக்கியஸ்தர். அவரைப் பற்றிப் பலவிதமான கதைகள் தொழிலாளரிடையே உலாவின. அவற்றை அவர்கள் மிகவும் தாழ்ந்த குரலிலே குசுகுசுப்பது போன்று பேசிக்கொண்டார்கள்.
துரைசானிக்கு புரும்ஸ் துரையைவிட, ஜில் துரை மீது கொஞ்சம் அதிகப்படியான வாத்சல்யம். ஏனோ தெரியாது, துரைசானியைப் பொறுத்த அளவில் அந்தக் கிழடுதட்டிய விளக்குமாற்றுத் துரைக்கு (புரும்ஸ் துரையை விளக்குமாற்றுத் துரையென்று சிலர் கிண்டலாக அழைப்பதுண்டு). இரண்டாவது ஸ்தானம்தான் என்று தோட்டத்திலே கதை பரவியிருந்தது.
அது எவ்விதமுமாகட்டும், ஜில்லுக்கு சுகயீனம். 'சோகத்தாலான கட்டடமாக' பங்களா காட்சியளித்தது.

டாக்டர் என்ற இடுகுறிப் பெயருக்கு ஆளான நமது நீலமேகம் துரை பங்களாவுக்குள் கால வைத்ததும், துரைசானி ஒரு குப்பி மருந்தை அவர் கையில் கொடுத்து ஜில்லின் பின்னங்காலில் அதைக்கொண்டு ஊசி போடும்படி கட்டளையிட்டாள்.

திரு நீலமேகம் ஒரு சோகப்பார்வையை வலிந்து வரவழைத்து முகத்திலே பரவவிட்டார். ஆனால் கவலைப் படுவதற்குப் பதில் அவர் பரந்த முகத்திலே அசடு தட்டியதை அவர் உணராமலில்லை. மீண்டும் அவர் விஷேச முயற்சி செய்ததன்பேரில் முகம் சிறிது அழுமூஞ்சி போலாயிற்று.

'பாவம், நேற்று முன்தினம் நான் பார்த்தபோது என்ன மாதிரித் துள்ளி விளையாடிச்சுது!' என்று பரிதாபமான குரலில் கூறினார் அவர்.
'நேற்று முழுவதும் ஒன்றுமே சாப்பிடவில்லை. கோழிமுட்டையைக்கூட உண்ண மறுத்து விட்டது' என்றாள் துரைசானி.

'குளிர்ந்த வாடை வீசுது. நன்றாகப் போர்த்துங்கள்' என்றார் டாக்டர். துரைசானி தனது கம்பளி 'டிரேசிங் கவுனைக்' கொண்டுவந்து ஆதரவாகப் போர்த்தினாள்.
நீலமேகம் தமது பங்களாவுக்குச் செய்தியனுப்பினார். இரவு வரமாட்டா ரென்றும் நோயாளிகளை வீட்டுக்குப் போய்விடும்படியும் அறிவித்தார். ஆசிர்வாதம் இந்தச் செய்தியுடன் பங்களாவுக்குப் புறப்பட்ட பின்னர் நீலமேகம் யாழ்ப்பாணம் சுருட்டொன்றைப் பற்ற வைத்துக் தலையைத் தடவிக்கொ ண்டே ஒரு நாற்காழியில் உட்கார்ந்து மெல்லத் தூங்கிவிழ ஆரம்பித்தார். புரும்ஸ் துரையின் பங்களா மடைப்பள்ளியிலேயே அவருக்கு இரவு போசனமுமாயிற்று. இரவு நாயின் 'தேக நிலை' வரவர மோசமாகவே துரைசானி நாயுடன் விஷேச சிகிச்சைக்காகக் கொழும்புக்குக் காரிலே பிரயாணமானார். திரு நீலமேகமும் துரைசானிக்குக் துணையாகக் கொழும்பு புறப்பட்டார்.

சந்தனத்துக்கு ஆத்திரம் பொங்கியது. கேவலம் நாய்க்கு வைத்தியம் செய்வதற்காக இங்கே ஒரு மனிதப் பிறவியைப் புறக்கணித்துச் சென்ற டாக்டர் மீதுதான் ஆத்திரம் வந்தது. ஆனால் அந்த டாக்டரால் அதைத் தவிர்த்திருக்க முடியுமா?

சந்தனத்துக்கு இந்தச் சிக்கலெல்லாம் எப்படிப் புரியும்? அழகுவை மட்டும் அவன் அணைத்துக்கொண்டிராவிட்டால் கோப வெறியில் யாரை அவன் என்ன செய்திருப்பான் என்று சொல்ல முடியாது.

பெருமூச்சு விட்ட வண்ணமே அழகுவை அணைத்துத் தூக்கிக்கொண்டு அவன் வந்தவழியே இருளில் கிளம்பினான். பையன் ஒருவன் தீப்பந்தமொன்று தாங்கிச் சென்றான் முன்னுக்கு. அழகு கோடை வெயிலில் வாடிப்போன செடி போல அசைவற்று அவனது தோள்களில் தூங்கிக்கொண்டிருந்தாள். சந்தனம் நடக்க நடக்க, நடை வேகத்தில் அவள் உடம்பில் திடீரெனத் தெம்பு பிறந்ததுபோல் இருந்தது. சந்தனத்தை ஆசையோடு இறுக அணைத்து, அவன் முகத்தோடு தன் முகத்தை ஒட்ட வைப்பதற்கு முயன்றாள்.

இந்த எதிர்பாராத அசைவைக் கண்டதும் சந்தனத்தின் உள்ளம் மகிழ்ந்தது. நம்பிக்கையின் கிரணங்கள் அவன் உள்ளத்தில் புகுந்தன. ஏதோ மந்திரத்தால் நோய் நீங்கி விட்டதோ என்று எண்ணினான். அவன் மயிர்க்கால்கள் உணர்ச்சி வசத்தால் சிலிர்த்தன. "அழகு என் தங்கமே!" என்று ஒழுகக் கூறினான்.
அழகு பதில் பேசினாள். தாழ்ந்த ஈனக் குரலில் அவன் காதுகளில் குசுகுசுப்பதுபோல்

 "ஆசை மச்சான், நான் போய் வருகிறேன்" என்றாள்.

சந்தனம் திடுக்கிட்டான். அவன் உள்ளத்தை இருள் கப்பியது. கண் குருடாகியது போலிருந்தது அவனுக்கு.

முன்னே பையன் கொண்டு போன பந்தம் பொங்கிவரும் காற்றின் வேகத்தோடு போராடி வெற்றிபெற்றது. அணைந்துபோய் விடவில்லை.

ஆனால் இங்கு வாழ்வு தீபம் ஒன்று மங்கி அணைந்தது. அழகுவின் உடற்பாரம் அதிகரித்தது. சந்தனம் நிலைமையைப் புரிந்து கொன்டான். 'ஐயோ' என்று அவனது அலறல் ஆழங்காணா அவ்வமைதியிலே ஓர் பேரொளியாகச் சப்தித்தது.

காலையிலே ஒரு சிறு கோஷ்டி 'தப்'படித்து முன்னே செல்ல, அழகு தன் அந்திம யாத்திரையை மேற்கொண்டாள். தேயிலைச் செடிகளின் நடுவே கொழுந்தெடுத்த அக்கோதையின் கடைசித் துயிலுக்கும் அங்கேயே இடம் கிடைத்தது.

ஜில்லுக்கு ஊசிமேல் ஊசி போட்டார்கள். சீமையில் கற்றுத் தேறிய மிருக வைத்தியர் தனக்குத் தெரிந்த சிகிச்சைத் தந்திரங்கள் எல்லாவற்றையும் பிரயோகித்து விட்டார். சொகுசான ஸ்பிரிங் கட்டிலில் காலனோடு நடத்திய போராட்டத்தில் காலன் வென்றான். ஜில் தோற்று விட்டது.

துரைசானிக்கும் புரும்ஸ் துரைக்கும் ஒரே கவலை. ஜில்லின் பூத உடலை தோட்டத்துக்குக்கொண்டு வந்தார்கள். அங்கே பங்களா நந்தவனத்தில் சலசலக்கும் நீரோடைக்குப் பக்கத்திலே ஜில் துரையின் புதைகுழி அமைந்தது. குடும்ப நண்பர்கள் அனுப்பிய எத்தனையோ புஷ்பஹாரங்கள் அதன்மீது வாடி வீழ்ந்தன.


ஒரு வாரஞ் செல்ல அழகான கல்லறை ஒன்று அதன் மீதெழுந்தது. அதில் சலவைக் கல்லொன்று பதிக்கப்பட்டுப் பின்வருமாறு எழுதப்பட்டது.





ஹோவார்ட் புரூம்ஸ் ரோஸ் மேரி புரும்ஸ் 
ஆகியோரின்  பிரிய பைரவ நண்பன் 
'ஜில்' 
கடைசித் துயில் கொள்ளும்
புதைகுழி இதுவாம்.
பிறப்பு: 10-12-39
இறப்பு: 20-1-47


நாட்கள் சென்றுவிட்டன. அழகுவின் புதைகுழி மீது புல் படர்ந்துவிட்டது. சுற்றிலுமுள்ள தேயிலைக் காட்டிலே அழகு எங்கே துயில் கொள்கிறாள் என்பதை யாரும் கூற முடியாதபடி புல் படர்ந்து விட்டது.

 'அழகுவை எங்கே புதைத்தார்கள். உன்னால் அடையாளம் கண்டு சொல்ல முடியுமா? என்று கொழுந்தெடுக்கும் ஒரு சிறுமி இன்னொருத்தியைக் கேட்டுக்கொண்டிருந்தாள்....

மலர்க்கொடி ஒன்று 'ஜில்துரை'யின் கல்லறைச் சுவரில் பாய்ந்து படர்ந்தது. மலர் மாலைபோல் அதன் புஷ்பங்கள் வளைவாகத் தொங்கி இறந்துபோன ஜில்லின் 'ஆத்மா'வைப் பற்றிய நினைவுகளைப் பார்ப்பவர் மனத்தில் சுடர் வைத்தன. 

தோட்டக்காரன் நாள் தப்பாது அதற்குத் தண்ணீர் வார்த்து வளர்த்தான்....
நன்றி: தமிழ்முரசு (சிங்கப்பூர்) 17 ஜூன் 1955

No comments:

Post a Comment