Saturday 21 October 2017

COORG...THE SCOTLAND OF INDIA



COORG...THE SCOTLAND OF INDIA




கூர்க்... இந்தியாவின் ஸ்காட்லாந்து

உங்களின் மனமும் உடலும் சோர்ந்து போகும்போது அதிலிருந்து உங்களை மீட்டு, புத்துணர்வு அடையச் செய்ய இயற்கையால் மட்டுமே முடியும். அதுவும் மாசுபடாத இயற்கையாக இருந்தால், அது கொடுக்கும் புத்துணர்ச்சியே தனி. அப்படிப்பட்ட ஓர் இடம்தான் `குடகு’ என அழைக்கப் படும் கூர்க்.
கோடை வெப்பத்திலிருந்து தப்பித்துக்கொள்வதாக இருந்தாலும், இதமான குளிரில் இன்பமாக ஒரு சுற்றுலா செல்ல வேண்டும் என நினைத்தாலும் உங்களுக்கான சரியான சாய்ஸ் கூர்க்தான். ஏனென்றால், இங்கு அதிரடி குளிரும் இல்லை; ஆர்ப்பாட்டமான வெயிலும் இல்லை. மிதமான குளிர்ச்சி நம்மைத் தழுவிக்கொண்டே இருக்கிறது. `இந்தியாவின் ஸ்காட்லாந்து’ என்றே கூர்க்கை அழைக்கிறார்கள். ஸ்காட்லாந்தின் அதே இயற்கை அழகு; அதே வசீகரிப்பு; அதே தட்பவெப்பம் கொண்டது கூர்க். எங்கு திரும்பினாலும் பசுமையான மலைகள், சிலிர்க்க வைக்கும் அருவிகள், மணக்கும் காபி தோட்டங்கள்... என இயற்கை நம்மை ஈர்க்கிறது.
கர்நாடகா மாநிலம், மைசூருக்கு மேற்கே 120 கிலோமீட்டர் தூரத்தில், மேற்குத்தொடர்ச்சி மலையின் மடியில் அமைந்திருக்கிறது கூர்க் மாவட்டம். குடகு என்ற கூர்க், இந்தியாவின் மிகச் சிறந்த விடுமுறை வாசஸ்தலங்களில் ஒன்று. கர்நாடக மாநிலம்தான் என்றாலும், இங்கே கன்னடம் தாய்மொழி அல்ல. குடகு மக்களின் தாய்மொழியான குடவா மொழியைத்தான் அனைவரும் பேசுகிறார்கள். தங்களுக்கென தனி மொழி, பண்பாடு, கலாசாரத்துடன் இருக்கும் குடகு மக்கள், இயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் பசுமை பூமியைச் செவ்வனே பராமரித்தும் வருகிறார்கள். சென்னையிலிருந்து பெங்களூரு, மைசூரு வழியாக கூர்க் செல்லலாம். ஊட்டி, கொடைக்கானல் எல்லாம் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டவை. ஆனால், குடகு ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. குடகு நாட்டை ஆண்டுவந்த மன்னரால் உருவாக்கப்பட்ட நகரம் மடிகேரி. ஊட்டி, கொடைக்கானல் போல இது கோடை வாசஸ்தலம் மட்டுமல்ல. குளிர் காலத்திலும் இதமான இடம். மடிகேரியை அடைந்தபோது, இதை நாங்கள் உணர்ந்தோம். மடிகேரியில் உள்ள கிளப் மஹிந்திரா ரிசார்ட்டில் தங்கினோம். அன்றிரவு கூர்க் மக்களின் பாரம்பர்ய உணவுகளான புட்டு, அக்கி ரொட்டி, கடம்புட்டு, பன்றி இறைச்சி வறுவல் அந்த ரிசார்ட்டில் பரிமாறப்பட்டன. அடர்ந்த வனத்துக்குள் இருப்பதுபோல, சுற்றிலும் மரங்கள் சூழ பசுமையாக இருந்தது கிளப் மஹிந்திராவின் தங்குமிடம். லேசான மழைத் தூறல், பறவைகளின் சத்தம் என ரம்மியமாக இருந்தது அந்த இரவு.
அதிகாலையை உற்சாகமாக்கும் காபி தோட்ட நடைமறுநாள் அதிகாலை எழுந்தோம். காபி தோட்டத்தில் இருந்துவரும் அருமையான காபி வாசத்துடனே அந்த காலை விடிந்தது. `அதிகாலை காபி தோட்ட நடை, உங்களைச் சுறுசுறுப்பாக்கும்' என்று கிளப் மஹிந்திராவின் ஊழியர்கள் சொல்ல, தங்குமிடத்தில் உள்ள காபி தோட்டத்தையொட்டி நடக்க ஆயத்தமானோம். குளிர்ச்சியான காலநிலை, அடர்ந்த மரங்கள், காபி தோட்டத்திலிருந்து வரும் அருமையான வாசனையுடன் இருந்தது அந்த நடைப்பயணம்.
எங்களோடு வந்த, `கூர்க் கன்சாலிடேட்டட் கமாடிட்டீஸ்’ நிறுவனத்தைச் சேர்ந்த நரேந்திர ஹெப்பர் என்பவர் காபி தோட்டத்தைப் பற்றி எங்களுக்கு விளக்கினார். கூர்க்கில் இரு வகையான காபிகள் பயிரிடப்படுகின்றன. ஒன்று அராபிகா. மற்றொன்று ரோபஸ்டா. இவை தவிர தற்போது உலக அளவில் காஸ்ட்லியான காபியான லூவா காபியும் (Kopi Luwak) தயாரிக்கப்படுகிறது. ``லூவா காபி என்பது காபியில் ஒருவகை அல்ல. அது வனத்தில் வாழும் ஒரு பூனையின் கழிவில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு காபி’’ என அவர் சொன்னபோது நாம் அதிர்ந்து போனோம்.
காபி பற்றி நமக்குத் தெரியாதவை நிறைய இருக்கின்றன. கூர்க் பயணம் சென்றால், அதை நீங்களும் அறிந்துகொள்ளலாம். வழிநெடுக அரிய வகைப் பறவை இனங்களையும் காண முடிந்தது. சிக்கரி கலக்காத அசல் காபியைக் குடித்துவிட்டு, கூர்க்கில் உள்ள சுற்றுலாத்தலங்களைப் பார்க்கத் தயாரானோம்.

துபாரே யானைகள் முகாம்

நாங்கள் முதலில் சென்றது துபாரே யானைகள் முகாம். நிறைந்தோடும் காவிரி நதிக்கரையோரத்தில் அமைந்திருக்கிறது இந்த யானைகள் முகாம். கர்நாடக மாநில வனத்துறை சார்பில், இங்கு யானைகள் பயிற்சியளித்துப் பராமரிக்கப்பட்டு வருகின்றன. துபாரே யானைகள் முகாமுக்கு நாங்கள் சென்றபோது நேரம் காலை 9 மணி. இங்கு காலை 8:30 மணி முதல் 10 மணிக்குள் செல்வது நல்லது. ஏனென்றால், இந்த நேரத்தில் தான் முகாமில் இருக்கும் யானைகள் குளியலுக்காகக் காவிரி நதிக்கரைக்கு அழைத்து வரப்பட்டுக் குளிப்பாட்டப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலுத்தினால் நாமும் யானையைக் குளிப்பாட்டலாம். குளியலை முடித்துக்கொண்டு செல்லும் யானைகளுக்கு உணவு கொடுக்கப்படுகிறது. பிறகு அருகில் இருக்கும் மைதானத்தில் சிறிது நேரம் விளையாடுகின்றன. யானைகளின் கால்பந்து விளையாட்டைச் சிறிது நேரம் பார்த்துவிட்டு அங்கிருந்து கிளம்பினோம்.
ராஃப்டிங் எனும் சாகசப் படகு சவாரி
துபாரே யானைகள் முகாமுக்கு அருகிலேயே, காவிரி ஆற்றில் ராஃப்டிங் எனும் சாகசப் படகு சவாரி நடக்கிறது. சாகசப் படகு சவாரியை மேற்கொள்ளத் திட்டமிட்டு அங்கு சென்றோம். லைஃப் ஜாக்கெட், ஹெல்மெட் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளுடன் பயணமானோம். மொத்தப் பயண தூரம் 5 கி.மீ. சில நிமிடப் பயணம்தான் என்றாலும், பாதுகாப்புக் கருதி நிறைய அறிவுறுத்தல்களை நமக்கு வழங்கினர். நாங்கள் எட்டு பேர் ஒரே படகில் பயணமானோம். ஆற்றில் படகைச் செலுத்துவது நாம்தான் என்றாலும், நம்மோடு அவர்களில் ஒருவரும் பயணிக்கிறார். திசை, தடம் மாறிப் போகாமல் அவரே வழிநடத்துகிறார். எந்த இடத்தில் படகைச் செலுத்த வேண்டும்; எந்த இடத்தில் துடுப்பைப் பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்திக்கொண்டே வருகிறார். சலனமில்லாத நீரில் செல்லும் ராஃப்டிங் (Still water Rafting), ஆர்ப்பரித்து ஓடும் ஆற்றில் நடக்கும் ராஃப்டிங் (White Water Rafting) என இரு ராஃப்டிங் இருக்கின்றன. நாங்கள் சென்றது செப்டம்பர் முதல் வாரத்தில். அதாவது, பருவ மழைக்காலத்துக்கு பிந்தைய காலகட்டத்தில். அதனால் ஆறு சலனமற்றும் இல்லை; பெரும் ஆர்ப்பரிப்பும் இல்லை. மிதமாக இருந்தது. லைஃப் ஜாக்கெட் அணிந்திருப்பதால், இடையில் ஆற்றில் குதித்து மீண்டும் படகில் ஏறுவது போன்ற சாகசங்களை நம்மோடு வந்தவரின் அறிவுறுத்தல்களோடு செய்தோம். மறக்க முடியாத பயணம்.

காவிரி சூழ் தீவு

அங்கிருந்து சில கிலோமீட்டர் தூரம் பயணித்தால், குஷால் நகர் என்னுமிடத்தில் காவிரி ஆறு இரண்டாகப் பிரிந்து, பின் மீண்டும் இணைகிறது. இதற்கு இடைப்பட்ட சில ஏக்கர் நிலம் சிறிய தீவு போல் காட்சியளிக்கிறது. இந்த இடத்தில் பூங்கா அமைத்து, சுற்றுலாத்தலமாகப் பராமரிக்கிறது கர்நாடக வனத்துறை. `நிசர்கதாமா’ என இந்த இடத்துக்குப் பெயர். இயற்கை எழில் கொஞ்சும் இடம் என்று இதற்குப் பொருள். காவிரி ஆற்றைக் கடக்க, தொங்கு பாலம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. சிறுவர்களுக்கான பூங்காவில் விளையாடி மகிழலாம். அழகிய காவிரியை ரசிக்கலாம். குடகு மக்களின் பாரம்பர்யத்தை உணர்த்தும் வகையில், குடகு மக்கள் பாரம்பர்ய உடையில் நடனமாடும் சிலைகள் பூங்காவில் அமைக்கப்பட்டிருந்தன.
இந்தியாவில் ஒரு `திபெத்'
மதிய உணவுக்குப் பின்னர், அருகில் உள்ள பைலகுப்பே எனும் ஊரில் உள்ள புத்த மடாலயத்துக்குச் சென்றோம். `தங்கக் கோயில்’ என அழைக்கப்படும் இதுதான் இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய திபெத்தியன் புத்த சமூகம். இங்குள்ள பத்மசம்பவா, சஹாயமுனி, அபிதாப புத்தா ஆகிய புத்தர் சிலைகள் பிரமிப்பூட்டுகின்றன. எங்கு திரும்பினாலும் வண்ணமயமான புத்தர் சிலைகள், கோயில் சுவர்கள் முழுக்க நுணுக்கமான ஓவியங்கள்... எனக் காணக் காண சலிப்பதில்லை இந்தப் புத்த மடாலயம். சுவர்களில் வடிக்கப்பட்ட ஓவியங்கள் எல்லாம் புத்த மதத் தத்துவங்களை விவரிப்பவை என்கிறார்கள்.
அப்பே அருவி

அங்கிருந்து நாங்கள் புறப்பட்ட இடம் அப்பே ஃபால்ஸ். மடிகேரியில் இருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது இந்த அருவி. அடர்ந்த காபி தோட்டத்தின் நடுவே அமைந்திருக்கும் அருவி, காணும்போதே நம்மைக் கவர்ந்திழுக்கிறது. இந்த அருவியில் வருடம் முழுவதும் நீர் விழும் என்கிறார்கள். பருவ மழை காலத்தில் அருவியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அந்தச் சமயங்களில் அருவியைக் காண்பது கண்
கொள்ளா காட்சி. காபி தோட்டங்கள் சூழ்ந்து இருக்கும் இந்த அருவியில் ரத்தத்தை உறிஞ்சும் அட்டைகள் நிறைந்திருக்கின்றன. அதனால் அருவியில் குளிக்க அனுமதிக்கப்படுவதில்லை. அருவிக்குச் சற்று தூரத்தில் இருந்தாலும், நீர்த்திவலைகள் உடலை நனைக்க, அருவியைக் கண்டு ரசிக்கலாம். அருவியை முழுமையாக ரசிக்க தொங்கு பாலம் ஒன்றை அமைத்திருக்கிறார்கள். கால் நனைக்க முடியவில்லை என்றாலும், காண்பதிலேயே அதற்கிணையான மகிழ்ச்சியைக் கொடுக்கிறது இந்த அருவி.
ஓம்காரேஸ்வரா கோயில்
அடுத்து நாங்கள் பயணப்பட்டது மடிகேரி நகரத்தின் நடுவில் அமைந்திருந்த ஓம்காரேஸ்வரா கோயில். இஸ்லாமிய மசூதிபோல் காட்சியளிக்கும் இந்தக் கோயில், இஸ்லாமிய, கோதிக், கேரளா என மூன்று வகையான கட்டடக்கலை இணைந்து கட்டப்பட்டிருக்கிறது.
இயற்கை அழகை அள்ளித்தரும் `ராஜா சீட்'
கோயிலில் இருந்து வெளியேவரும் நேரம் இருள் சூழத் தொடங்கிவிட்டது. அருகில் மடிகேரி கோட்டையும், மடிகேரி இயற்கை அழகை மன்னர் அமர்ந்து பார்க்கும் `ராஜா சீட்'டையும் பார்த்துவிட்டு அறைக்குத் திரும்புவது என முடிவெடுத்துப் பயணித்தோம். மடிகேரியில் உள்ள கோட்டையில் இப்போது அரசு அலுவலகங்கள் இயங்கிவருகின்றன. 16-ம் நூற்றாண்டில் மடுராஜா கட்டிய இந்தக் கோட்டை, மண்ணால் கட்டப்பட்ட கோட்டையாகும். உள்ளே மியூசியம் இருக்கிறது. மடிகேரியின் வரலாறு, மன்னர் பயன்படுத்திய பொருள்கள் ஆகியவை இங்கு இருக்கின்றன. ராஜாவின் அரண்மனை அரசு அலுவலகம் என்பதால், அதை முழுமை யாக ரசிக்க முடியவில்லை. அங்கிருந்து ராஜா சீட் பகுதிக்குச் சென்றோம். ஒரு பூங்காவும், சதுர வடிவிலான ஒரு கட்டமுமாகக் காட்சியளிக்கிறது அந்த இடம். அருகில் செல்லச் செல்ல மடிகேரியின் எழில்மிகு தோற்றத்தையும் அங்கிருந்து அப்படியே ரசிக்க முடிகிறது. மடிகேரியின் மன்னர் மாலை நேரத்தில் சூரிய அஸ்தமனத்தையும், இயற்கை எழிலையும் இங்கிருந்துதான் கண்டு ரசிப்பாராம்.
தலைக்காவிரிமடிகேரி வருபவர்கள் தவறாமல் செல்லும் இடம் தலைக்காவிரி. மடிகேரியில் இருந்து 48 கி.மீ தொலைவில் உள்ள இந்த இடம்தான் காவிரி ஆற்றின் உற்பத்தி இடம் இதுதான். குடகு மக்கள் காவிரி நதியையே பெண் தெய்வமாக வழிபடுகிறார்கள். காவிரி அம்மனுக்குக் கோயிலும் இங்கு உண்டு. மிகவும் சுத்தமாகப் பராமரிக்கப்படும் இந்த இடத்தின் சுத்தமான காற்றும், பசுமையான மலைகளும் நமக்குப் பரவசம் தருகின்றன. இதன் அருகே இருக்கும் பிரம்மகிரி மலை ஏறினால், தலைக்காவிரியையும், பசுமை போர்த்திய மலைகளையும் 360 டிகிரி சுற்றளவில் பார்க்க முடியும். ஆன்மிகப் பயணமாகவும், இயற்கையை ரசிக்கும் பயணமாக வும் தலைக்காவிரி கொண்டாடப் பட்டுவருகிறது.
தலைக்காவிரியில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது பாக மண்டலா. இங்கு காவிரி, கன்னிகே, சுஜ்யோதி ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கின்றன. இங்கு பாகண்டேஸ்வரா கோயில் காரவாலி என்ற மேற்குக் கடற்கரையைச் சேர்ந்த கட்டடக் கலையில் கட்டப்பட்டுள்ளது. இதோடு கூர்க்கில் மலையேற்றம் செய்ய பல அற்புதமான சிகரங்களும் இருக்கின்றன. குறிப்பாக தடியண்டமோல், பிரம்மகிரி, குமரபர்வத மலை போன்றவை சுற்றுலாப்பயணிகளிடையே பிரபலமான மலையேற்ற ஸ்தலங்களாக இருக்கின்றன. இந்த மூன்று சிகரங்களில் இருந்து பசுமை போர்த்திய மலைகளையும், மலைகளைத் தொட்டுச்செல்லும் மேகங்களையும் காணும் சுகமே தனி. கூர்க் மக்களின் வாழ்க்கை முறை, கலாசாரம், பாரம்பர்ய உணவு என அத்தனையும் நம்மை ஈர்க்கின்றன. பாரம்பர்யம் மட்டுமல்லாமல் சுற்றுலாவுக்கு ஏற்ற நகரமாகவும் கூர்க் இருக்கிறது. வாழ்வில் ஒருமுறையேனும் சென்றுவர வேண்டிய அற்புதமான இடம் குடகு.
கூர்க் பயணத்தில் கவனிக்க வேண்டியவை
எப்படிப் போவது? என்ன ஸ்பெஷல்?
* கர்நாடகா மாநிலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ளது கூர்க். வான்வழிப் பயணம் என்றால், பெங்களூரு வரை விமானத்தில் சென்று, அங்கிருந்து 6 மணி நேரம் காரில் பயணித்தால் மடிகேரியை அடையலாம்.
* ரயில் பயணம் அல்லது சாலை வழிப் பயணம் என்றால், மைசூரை அடைந்து அங்கிருந்து இரண்டரை மணி நேரப் பயணத்தில் கூர்க் தலைநகர் மடிகேரியை அடையலாம்.
* கூர்க்கை முழுமையாகப் பார்க்க மூன்று நாள்கள் தேவைப்படும். ஓரிடத்தில் இருந்து இன்னோர் இடம் சற்றுத் தொலைவு என்பதால், சொந்த காரிலோ, வாடகை காரிலோ செல்வது நல்லது.
* குடகு மக்களின் பாரம்பர்ய உணவுகளான நூல் புட்டு, அக்கி ரொட்டி, கடம் புட்டு, பன்றி இறைச்சி வறுவல் உள்ளிட்டவை தவிர்க்கக் கூடாதவை.
* கூர்க், காபிக்குப் புகழ் பெற்றது. எங்கு திரும்பினாலும் காபி தோட்டங்களை நீங்கள் காணலாம். மற்ற நாடுகளில் காபி பீன்கள் இயந்திரங்கள் மூலம் பறிக்கப்படுகின்றன. இங்கே கைகளால் பறிக்கப்படுகின்றன. காபி வகைகள், அதன் உற்பத்தி குறித்தும் நீங்கள் அறிந்துகொள்ளலாம்.

No comments:

Post a Comment