Thursday 26 October 2017

அந்தனி ஜீவாவின் நெஞ்சம் மறப்பதில்லை






அந்தனி ஜீவாவின் நெஞ்சம் மறப்பதில்லை
நேர்காணல்-  மணி ஸ்ரீகாந்தன்

இவரைப் பற்றி விரிவாக அறிமுகம் செய்ய வேண்டியதில்லை. ஏனெனில் இவர் சுமார் நாற்பது ஆண்டுகளாக எழுத்துலகில் நீடித்து நிற்பவர். அறுபது வயதைக் கடந்த நிலையிலும் இளைஞரைப் போல சுறு சுறுப்பாக இயங்கி வருபவர். மலையக இலக்கியத்தையும் அம் மக்களின் வரலாற்றுப் பின்னணியையும் வெளிக் கொணர்ந்த மீட்பர்களில் அந்தனி ஜீவா முக்கியமானவர். நாடக உலகில் பேசப்படும் நபராக விளங்கும் ஜீவா, தமிழ் - சிங்கள கலைஞர்களின் பாலமாக விளங்கி வருபவர். தமிழ் இலக்கிய, இதழ் வெளியீட்டுத்துறையில் தொடர்ச்சியாக இயங்கி வரும் ஜீவா தற்போது கொழுந்து சஞ்சிகையை அழகிய வடிவமைப்பில் வெளியிட்டு வருகிறார். ஈழத் தமிழ் இலக்கிய பரப்பில் அந்தனி ஜீவா தவிர்க்க முடியாத பிரமுகர் என்பது சொல்லித் தெரிய வேண்டிய ஒன்றல்ல.

"எனது அப்பா பர்மாவில் இந்திய இராணுவத்தில் பணியாற்றிய போது ஒரு தடவை கொழும்பு வந்திருக்கிறார். வந்த இடத்தில் ஒரு மலையக பெண்ணை மணந்திருக்கிறார். அதன் பிறகு அவர்களுக்கு இரண்டாவது பிள்ளையாக நான் பிறந்திருக்கிறேன்... எனது அம்மாவின் பெயர் லெச்சுமி அம்மாள். அவர் ஒரு இந்து. அப்பா கத்தோலிக்கர். என் குடும்பத்தில் எனக்கு மூன்று சகோதரர்கள். நான் பிறந்த போது என் தந்தைக்கு ஒரு அதிர்ஷ்டமும் கிடைத்திருக்கிறது. தமிழ் நாட்டிலிருந்த பூர்வீக சொத்துக்கள் அனைத்தும் அவருக்கு கிடைத்து விட்டதாம்.

அப்போது அப்பாவிற்கு ஒரு ஆசை. என்னையும் அண்ணனையும் இந்தியாவில் படிக்க வைக்க வேண்டும் என்பதே அந்த ஆசை. அதன்படி என்னையும் அண்ணனையும் அழைத்துக் கொண்டு பாளையங்கோட்டைக்குப் பக்கத்திலிருந்த ஊருக்குச் சென்றார். அங்கே பாளையங்கோட்டை சென். சேவியர் பாடசாலையில் எங்கள் இருவரையும் சேர்த்தார். ஆனால் எங்களுக்கு அங்கே படிக்க பிடிக்கவில்லை. வீட்டு ஞாபகம் வந்து விட்டது. அம்மாவை பிரிந்து இருக்க முடியுமா...? வீட்டையும் அம்மாவையும் நினைத்து நானும், அண்ணனும் அழுது கொண்டே அப்பாவிடம் சொன்னோம். அப்பாவும் எங்களின் நிலைமையை உணர்ந்தவராக எங்களை மீண்டும் இலங்கைக்கே அழைத்து வந்து விட்டார். நான் பிறந்தது வளர்ந்தது எல்லாமே கிருலப்பனை எட்மனன் வீதியில் தான்.

இளமையில்...

வெள்ளவத்தை பத்திரகாளி கோயிலுக்கு எதிரில் உள்ள சுவர்ணா வீதியில் ஒரு கலவன் பாடசாலை இருந்தது. அதில்தான் நான் அகரம் கற்றேன். எனக்கு அகரம் கற்பித்த ஆசிரியரின் பெயர் ஞாபகத்தில் இல்லை. அதற்குப் பிறகு எனது அண்ணனை பம்பலப்பிட்டி சென். மேரிஸ் பாடசாலையில் சேர்ப்பதற்காக அப்பா அண்ணனை அழைத்துச் செல்லும் போது என்னையும் கூடவே அழைத்துச் சென்றார். என்னைப் பார்த்த அதிபர் இவரையும் சேர்த்து விடுங்களேன் என்று கேட்க அப்பா என்னையும் அதே பாடசாலையில் சேர்த்து விட்டார். அந்தப் பாடசாலையில் நான் 9வது வரை படித்தேன். அந்தப் பள்ளியில் முத்தழகு, துரைசாமி உள்ளிட்டோர் எனக்கு நண்பர்களாக இருந்தார்கள் என்ற ஜீவாவிடம் எப்படி ஐயா எழுத்துத் துறைக்கு வந்து சேர்ந்தீர்கள் என்று கேட்டோம்.

‘எனது தந்தை இடதுசாரி இயக்கத்தை சேர்ந்தவர். அவரோடு அரசியல் விழாக்களுக்கு சென்றிருக்கிறேன். அங்கே என். எம். பெரேரா, கொல்வின் ஆர். டி சில்வா ஆகியோர் உணர்ச்சிபூர்வமாக ஆற்றும் உரைகளை கேட்டிருக்கிறேன். அவைகளை பார்க்கும் போது எனக்கு அப்படிப் பேசவேண்டும் என்ற ஆவல் எழுந்தது.

எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில்தான் இலங்கை தி. மு. க.வின் பொதுச் செயலாளர் இளஞ்செழியன் இருந்தார். அவருடன் அடிக்கடி பொதுவுடமை கருத்துக்கள் பற்றிப் பேசுவோம். அவர் என்னிடம், ‘நீ இடதுசாரியோடு இரு’ என்று சொல்வார். என் எழுத்து வடிவமும் ஆழமும் பெறுவதற்கு தி. மு. க. கட்டி எழுப்பிய தமிழுணர்வு ஒரு பெருங் காரணம். பராசக்தி வசனம், ராதாவின் ரத்தக் கண்ணீர் உள்ளிட்ட நாடகங்களில் கையாளப்பட்ட தமிழ் வசன நடை எங்களை எல்லாம் வசீகரித்து கட்டிப் போட்டது. என்னை மொழியின் பால் ஈர்க்க வைத்தது. அப்போது தமிழகத்தில் இருந்து வெளியாகும் திராவிட நாடு, தென்றல், முரசொலி ஆகியவை இங்கே தாராளமாகக் கிடைக்கும். அவற்றை நான் விடாமல் படிப்பேன். அவற்றில் சொல்லப்பட்ட கருத்துகளும் வசன நடையும், எழுத்து வன்மையும் என்னுள் கிளர்ச்சியையும் சிந்தனை விருத்தியையும் ஏற்படுத்தியது. அதன் பலனாக நான் தேடி எழுதும் எழுத்தாளனானேன்.

திருமணத்தின் போது...

இலங்கையின் நாடக வளர்ச்சிக்கு தி. மு. க.வின் பகுத்தறிவு நாடகங்களின் வருகையே பின்புலமாக இருந்தது என்ற கருத்தை யாரும் மறுப்பதற்கில்லை. இலங்கையின் பிரபல தமிழ் நாடக கலைஞரான லடிஸ்வீரமணி இளஞ்செழியனின் பாசறையில் வளர்ந்ததினால் தான் இங்கே நாடகம் புத்தொளி பெற்றது.

அந்த நாட்களில் கிருலப்பனையில் அந்தனி பெர்னாண்டோ என்பவர் பத்திரிகையில் கட்டுரைகள் எழுதுவார். வீரசேகரியில் ‘கிருலப்பனை அந்தனி பெர்னாண்டோ’ என்று தனது ஊரோடு அவரின் பெயர் பத்திரிகையில் வருவதைப் பார்த்த எனக்கு என் பெயரும் அப்படி பத்திரிகையில் வெளிவர வேண்டும் என்று ஒரு ஆசை வந்து விட்டது. உடனே நானும் ஒரு கட்டுரையை எழுதி வீரசேகரிக்கு அனுப்பி வைத்தேன். அந்தக் கட்டுரை வெளியாகியது. அதற்குப் பிறகு இலங்கையில் வெளியான அனைத்துப் பத்திரிகையிலும் எனது படைப்புகள் வெளியாகின என்று தனது எழுத்துலக அறிமுகம் பற்றி விபரித்த ஜீவா, தனது மரியாதைக்குரிய எழுத்தாளர் ஜெயகாந்தன் பற்றி இப்படிக் கூறுகிறார்,

அப்போது கம்யூனிஸ்ட் கட்சியின் பெரிய தலைவராக இருந்த கல்யாண சுந்தரம் எமது பிரச்சினைகளைக் கேட்பதற்காக தமிழகத்திற்கு வரும்படி எங்களை அழைத்திருந்தார். இங்கிருந்து நான் சென்றிருந்தேன். தமிழ் நாட்டில் திருப்பூரில்தான் இந்த கலை இலக்கிய பெருமன்ற மாநாடு நடைபெற்றது. நான் திருச்சியிலிருந்து ரயில் ஏறி திருப்பூருக்கு சென்றேன். அங்கே நான் இறங்குவதற்கு முன்னால் சிவாஜி போன்ற தோற்றமுடைய ஒருவர் ராஜகம்பீரத்துடன் எனக்கு முன்னால் இறங்கி நடந்து போனார். அவருக்குப் பின்னால் ஒரு ரசிகர் பட்டாளமே சென்றது. பிறகுதான் புரிந்து கொண்டேன், அவர்தான் என் கனவு நாயகன் ஜெயகாந்தன் என்று! அவரும் நான் வந்த அதே ரயிலில்தான் ஈரோட்டிலிருந்து அவர் பயணம் செய்திருக்கிறார். அவரும் நான் செல்லும் அதே விழாவுக்கு தான் வந்திருந்தார்.

அங்கே என்னை வரவேற்க வந்த பிரமுகர்கள் என்னை ஜெயகாந்தனுக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள். பிறகு நாங்கள் அங்கிருந்து ஒரு ஹோட்டலுக்கு புறப்பட்டோம். நான் புறப்படும் போது, ‘ஓய் சிலோன்காரரே! நீ என் காரிலே வாரும்!’ என அழைத்தார் ஜெயகாந்தன். நானும் மகிழ்ச்சியுடன் அவரது காரிலேயே பயணித்தேன். நாங்கள் ஹோட்டலுக்கு சென்ற பிறகு ‘உன்னோடு நான் சிலோன் கதைகள் பேச வேண்டி கிடக்கு. அதனால நீ என்னோடு தங்கும்’ என்று கேட்டதற்கு அமைய நானும் ஜெயகாந்தனுடன் தங்கினேன். நாங்கள் அந்த அறையில் இருந்த சில நிமிடங்களில் எப்படித்தான் ரசிகர்கள் தெரிந்து கொண்டார்களோ தெரியவில்லை, ரசிகர்கள் கூட்டம் கதவை தட்ட ஆரம்பித்தது.

 ஜெயகாந்தனே கதவைத் திறந்தார். வந்தவர்கள், ‘சார் நாங்க உங்களோடு பேசணும்’ என்றார்கள். அதற்கு அவர் கோபமாக ‘ஜெயகாந்தன் என்ன தேவடியாவா, இல்ல சினிமா நடிகனா? இப்போ பேச முடியாது... நாளைக்கு பார்க்கலாம்’ என்று அவர்களை முகத்தில் அறைவது போல கதவை படார் என்று சாத்தினார். ஜெயகாந்தன் ரசிகர்களிடம் நடந்து கொண்ட விதம் எனக்குப் பிடிக்கவில்லை. அது எனக்குள் ஒரு அச்ச உணர்வை ஏற்படுத்தியது. பிறகு நானே அவரிடம் ஏன் அப்படி நடந்து கொண்டீர்கள்? உங்களை ஒரு முரட்டு ஆசாமி என்கிற ஒரு தோற்றத்தை இந்த சம்பவம் உருவாக்குமே! என்றேன். அதற்கு ஜெயகாந்தன் சிரித்துக் கொண்டே, ‘நாங்கள் நீண்ட தூரம் பயணம் செய்து களைத்துப் போய் இருக்கிறோம். இப்போது பேசிக் கொண்டிருக்க முடியுமா? நாங்களும் மனிதர்தானே...’ என்று சொன்னார் ஜெயகாந்தன். நான் அங்கிருந்து வரும்போது ஜெயகாந்தனின் அழைப்பின் பேரில் சென்னைக்கு சென்று அவரை சந்தித்து விட்டுதான் வந்தேன்’.

சின்ன வயதிலே சினிமா பார்த்த அனுபவம்...?

‘நான் பாடசாலைக்கு அதிகம் கட் அடித்து இருக்கிறேன். பிளாஸா தியேட்டரில் முதல் நாள் காட்சிக்கு சென்றால் அங்கே கூட்டம் அதிகமாக இருக்கும். அப்போது அங்கே ஒரு சண்டியன் இருந்தான். அவன் பெயர் ராமன். அவனை கைக்குள் போட்டுக் கொண்டு அவனிடம் காசைக் கொடுத்து விடுவேன். தியேட்டருக்குள் நுழைந்து டிக்கட்டோடு வந்து விடுவான். நான் அந்த நாட்களில் சந்திரபாபுவின் தீவிர ரசிகன். ஒருமுறை சந்திரபாபு கொழும்பு ‘கெபிட்டல்’ தியேட்டருக்கு வந்த போது அவரைப் பார்க்க சென்று கூட்டத்தில் சிக்கி பொலிஸாரிடம் அடியும் வாங்கி இருக்கிறேன். ஆனாலும் அப்பாவின் இடுப்பு பெல்டால் வாங்கிய அடியை இன்றும் மறக்க முடியாது. அந்தச் சுவடு இன்றும் என் நெஞ்சில் அப்படியே இருக்கிறது. அந்த சுவடை தொட்டுப் பார்க்கும் போதெல்லாம் என் அப்பா என் இதயத்திற்குள் வந்து விடுகிறார்.
அப்பா என்னை ஒருபோதும் அடித்ததில்லை.


நான் வீட்டிலுள்ள ஒரு பொருளை திருடி விற்றதற்காக என்னை பெல்டால் அடித்தார். என்னை அடித்த பிறகு அப்பா அழுது விட்டார். எனது உணர்வுகளுக்கு அப்பா எப்போதும் மதிப்பளித்து வந்தார். சின்ன வயதிலே எனக்கு பூச்சிக்கு நல்லதென்று சாராயம் கொஞ்சம் குடிக்கக் கொடுப்பார். கிறிஸ்மஸ் பண்டிகை தினத்தில் அப்பா எனக்கு ஒரு கிளாஸில் கொஞ்சம் சாராயம் ஊற்றித் தருவார். அதை குடித்து விட்டு அப்பா அந்த இடத்தை விட்டு எப்போ கிளம்புவார் என்று சமயம் பார்த்து காத்திருப்பேன். அவர் சமையலறையில் ஏதாவது எடுத்துவர போகும் போது போத்தலில் இருந்து கொஞ்சம் ஊற்றிக் குடித்து விடுவேன். அவர் வந்த பிறகு போத்தலை பார்த்து விட்டு இதில் இருந்த சாராயம் கொஞ்சம் குறைகிறதே என்பார். அதற்கு நான் உங்களுக்குத்தான் குடித்தால் எதுவுமே ஞாபகத்தில் இருக்காதே என்பேன். அப்பா போதையில் பாடும் தியாகராஜா பாகவதரின் பாடல்கள் இன்னும் என் காதுக்குள் ரீங்காரமிடுகிறது.

‘ஹெவ்லொக் பூங்காவில் நண்பர்களுடன் சேர்ந்து உதைபந்தாட்டம் விளையாடி விட்டு ஒரு மரத்தடி ஓரத்தில் அமர்ந்து நானும் என் நண்பர்களும் திரிரோஸ் சிகரெட்டை இழுத்து வளையம் விடுவோம். இதைக் கண்ட என் பள்ளி மாணவர்கள் பாடசாலை மதரிடம் வத்தி வைத்து விட்டனர். மறுநாள் காலை கூட்டத்தில் என்னை வரச் சொல்லி மதர் ‘சாத்தான்! சாத்தான்!’ என்று சொல்லிச் சொல்லி அந்த மதர் அடித்தார். இந்த சாத்தான் தண்டனை இன்றும் மறக்க முடியாத ஒரு நிகழ்வாக என்னில் நிற்கிறது’.என்றவரிடம் காதல் பற்றி கேட்டோம்.

‘பாடசாலையில் படிக்கும் போது ஒரு பெண்ணை விரும்பினேன். ஆனால் அது கைகூடவில்லை. இதனால் வெறுத்துப் போய் கல்யாணமே வேண்டாம் என்று இருந்தேன். ஒருநாள் கண்டியில் நடந்த பாரதி விழாவில் ஒரு பெண்ணைப் பார்த்தேன். அவளுடன் பேச வேண்டும் போல் இருந்தது. அந்தக் குறுகுறுப்பு அடங்காமல் போகவே அவளைப் பற்றிய விபரங்களை எனது நண்பனின் ஊடாக பெற்றுக் கொண்டு அவள் வீட்டுக்குச் சென்று பெண் கேட்டேன். முறைப்படி பேசி திருமணத்தை ஏற்பாடு செய்யப்பட்டது. எமது திருமணம் கண்டியில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் நடைபெற்றது. திருமணப் பதிவு பத்திரத்தில் சாட்சி கையெழுத்தை எழுத்தாளர் க. ப. சிவம் இட்டார். திருமணத்திற்கு செய்தி பத்திரிகை நாகலிங்கம், ரட்னசபாபதி, முரளியின் தந்தை முத்தையா உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டார்கள். திருமணப் படத்தை கண்டி மல்லிகா ஸ்டூடியோவில் எடுத்தோம்.

மறக்க முடியாத நபர்கள்?

விளம்பரத்தை எதிர்பார்க்காது எவ்வளவோ உதவி செய்த தொழிலதிபர் முத்தையா, அப்புறம் ஹாசீம் உமர் ஆகியோரை மறக்க முடியாது. குறிப்பாக என் பிறப்புக்கு காரணமான என் பெற்றோர்கள், என் சிறப்புக்கு காரணமான என் துணைவி ஆகியோரையும் மறக்க முடியாது என்ற அந்தனி ஜீவா தனது வாழ்க்கைப் பயணத்தில் மறக்க முடியாத அனுபவமாக லண்டனில் கம்யூனிசத்தின் சிற்பி கார்ல் மார்க்ஸ் நாடகாசிரியர் ஷேக்ஸ்பியர் ஆகியோரின் கல்ல றைகள், அவர்கள் வாழ்ந்த இடங்களை பார்த்ததைக் குறிப்பிடுகின்றார்.

ம்... அது ஒரு காலம் என்று ஏங்குவது எதை நினைத்து என்று ஜீவாவிடம் கேட்டோம்.

‘நான் பிறந்து தவழ்ந்து, நடந்து, வளர்ந்த அந்த கிருலப்பனையில் எட்மன்டன் வீதியில் இருந்த எங்கள் வீடு என்னால் மறக்க முடியாதது. இன்று அந்த வீதியில் நடக்கும் போது அந்த பழைய ஞாபகம் வந்து போகும். அந்த வீடு இருந்த இடமே இல்லாமல் மாறிப் போய் அங்கெல்லாம் பெரிய கட்டிடங்கள் வந்து விட்டன.

நான் அந்த வீட்டில் வசித்த போது பக்கத்து வீட்டில் பழனியப்பன், கதிர்வேல் என்று இரண்டு நண்பர்கள் இருந்தார்கள். அவர்களில் பழனியப்பன் நன்றாக எழுதக் கூடியவர். கதிர்வேல் ஒரு அச்சகத்தில் வேலை செய்தார். நாங்கள் மூவரும் சேர்ந்து கரும்பு என்ற பெயரில் ஒரு பத்திரிகையை அச்சிட்டோம். கதிர்வேல் வேலை செய்த அச்சகத்திலேயே அச்சிட்டோம்.

பேப்பருக்கு மட்டும்தான் பணம் செலவானது. அச்சிட்ட பேப்பரை விற்பதைவிட அதை யாராவது பார்த்தால் போதும் என்ற நிலைப்பாட்டில்தான் நாங்கள் இருந்தோம். ஒரு சைக்கிளில் பத்திரிகையை கட்டி எடுத்து கோல்பேஸ் புல் தரைகளில் தமிழர்கள் குழுமியிருக்கும் இடமாக பார்த்து அங்கே கரும்பு சஞ்சிகையை போட்டு விட்டு விடுவோம். அவர்களிடம் பத்திரிகையை நேரில் கொடுக்க ஒரு அச்சம். அதனால்தான் அப்படிச் செய்தோம். தரையில் போட்டுவிட்டு பேப்பரை யாராவது எடுக்கிறார்களா என்று மறைந்திருந்து பார்ப்போம். அதை யாராவது எடுத்து விட்டால் எங்களுக்கு ஒரு மகிழ்ச்சி. எமது எழுத்துக்களையும் படிக்கிறார்களே என்ற மகிழ்ச்சி! அந்த பழனியப்பனும், கதிர்வேலும் அந்த காலத்திலேயே தமிழகத்திற்கு சென்று விட்டார்கள் என்று அந்த காலத்தை நினைத்து ஏங்குகிறார் அந்தனி.

வாழ்க்கையில் நீங்கள் தவறவிட்டதாக கருதுவது?

இளமைதான். இன்னும் கொஞ்சம் இளமையாக இருந்தால் இன்னும் நிறைய சாதிக்கலாம் அல்லவா? இன்றைய இளைய தலைமுறையினருடன் போட்டி போடவும் முடியுமே... என்று இளமை தொலைந்து போனதை நினைத்து ஜீவா வருந்துகிறார்.

கடந்து வந்த வாழ்க்கையைப் பற்றி கேட்டோம்.

நான் நாடறிந்த எழுத்தாளனாக இருப்பது என் வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த பாக்கியமாகக் கருதுகிறேன். வாழ்க்கை எனக்கு வசந்தமே என்று ஜீவா தனது பழைய நினைவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார்.

(தினகரன்-2010-08-01)

No comments:

Post a Comment