MANONMANI PLAYED
SARANGI INSTRUMENT IN CINEMA
"கூட மேல கூட வெச்சி கூடலூரு போறவளே...’ பாட்டைக் கேட்டிருக்கிறீர்களா? அந்தப் பாடலின் உணர்வை, கேட்பவருக்கு நெருக்கமாக்கும்விதமாக அதில் `சாரங்கி' இசைக்கப்பட்டிருக்கும். அதை வாசித்தவர் மனோன்மணி.
தென்னிந்திய அளவில் அதிகம் பரிச்சயமில்லாத இசைக்கருவி, சாரங்கி. அதை வாசிப்பவர்கள்கூட மிகச் சொற்பமான எண்ணிக்கையில்தான் இருக்கிறார்கள். அவர்களில், தனிச் சிறப்புடன் எல்லோரின் கவனத்தையும் ஈர்த்திருப்பவர் மனோன்மணி. சமூக ஊடகங்களில் இவரின் இசைக்கு ஏராளமான ரசிகர்கள். அவர் வீட்டுக்குச் சென்றபோது முதலில் `வெல்கம்' சொன்னது அவரின் மகன் சுமந்த். மனோன்மணியைச் சந்தித்த இசைப்பொழுதிலிருந்து...
`` `சாரங்கி' மனோன்மணியைப் பற்றிச் சொல்லுங்களேன்?’’
``சின்ன வயதிலிருந்தே மியூசிக்ல ஆர்வம். அதுக்குக் காரணம் என் அம்மா. அவங்க தில்ரூபாங்கிற இசைக்கருவியை வாசிச்சிட்டு இருக்காங்க. அப்பப்போ அம்மாவின் தில்ரூபாவை எடுத்து வாசிச்சுப் பார்ப்பேன். முறையான பயிற்சியெல்லாம் கிடையாது. ஆனா, `இப்போ மியூசிக்கெல்லாம் வேண்டாம். நல்லா படிச்சு, நல்ல வேலைக்குப் போ’ன்னாங்க. அம்மா சொன்னதுபோல எம்.சி.ஏ படிச்சிட்டு ஐ.டி வேலைக்குப் போயிட்டேன்.’’
``ஐ.டி வேலையிலிருந்து இசைத் துறைக்கு வந்தது எப்படி?’’
``காலையில கிளம்பிப் போய் ராத்திரி வரைக்கும் ஆபீஸுல வேலை பார்க்குறது எனக்குச் சலிச்சுப் போயிடுச்சு. என் கல்யாணத்துக்கு அப்புறம் சின்ன வயதிலேருந்தே காதலாக இருந்த சாரங்கியை வாசிக்க ஆசைப்பட்டேன். சாரங்கி வாசிக்கிறது ரொம்பக் கஷ்டம்னு தெரியும். அதனால, சாரங்கி வாங்கி, நானே ப்ராக்டீஸ் பண்ணிட்டிருந்தேன். ஆனா, எந்தவொரு கலையையும் குருவோட துணையில்லாம கத்துக்க முடியாதுனு புரிஞ்சுது. யாரிடம் கத்துக்கலாம்னு தேடிட்டு இருந்தேன். டெல்லியில இருக்கிற உஸ்தாத் குலாம் சபீர் கானைப் பற்றிக் கேள்விப்பட்டேன். அஞ்சு வருஷமா அவர்கிட்டதான் சாரங்கி வாசிக்கக் கத்துட்டு இருக்கேன். இதுக்கு ரொம்ப சப்போர்ட்டா இருக்கறது என் கணவர் தங்கமணி. அவர் எனக்கு அறிமுகமானதே என் அம்மாவோட இசையிலிருந்துதான். பாடல்கள்ல அம்மா வாசிச்ச பகுதியை மட்டும் கட் பண்ணி, கேட்டுட்டு இருந்தாங்க. அவருக்கு இருந்த இசை ஆர்வம்தான் எங்களைச் சேர்த்தது. இப்பவும் நான் டெல்லிக்கு கிளாஸுக்குப் போயிருக்கிற நாள்கள்ல பையனைப் பார்த்துகிற வரைக்கும் என் வளர்ச்சியில அவ்வளவு அக்கறையோட இருக்கார். டெல்லிக்குப் போயிட்டா சில சமயம் திரும்பி வர 20 நாள்கள்கூட ஆகிடும்.’’
``ஐந்து வருடங்களாக டெல்லிக்குச் சென்றுவருகிறீர்களா?’’
``ஆமாம், குருஜியோட மகன் முராத் அலி கான் ஃபேஸ்புக்கில் இருக்கிறார். அவரிடம் எனக்குச் சாரங்கி கற்றுக்கொடுக்கக் கேட்டேன். தன்னோட அப்பாவிடம் கற்றுக்கொள்ள அவர்தான் வழிகாட்டினார். இப்ப நான் அவங்க வீட்டுல ஒரு பொண்ணு. ஆரம்பத்துல இரண்டு, மூணு முறை ஹாஸ்டலில் தங்கிட்டு, அவங்க வீட்டுக்குப் போயிட்டு இருந்தேன். அதனால், சாயந்தரம் ஹாஸ்டலுக்குத் திரும்பிடணும்கிறதால ரொம்ப நேரம் கிளாஸ்ல இருக்க முடியாது. இதைக் கவனிச்ச குருஜி, அந்தத் தெருவிலேயே இருக்கிற அவரின் மகளோட வீட்லேயே என்னைத் தங்க சொல்லிட்டார். அங்கே இருக்கிற ஒவ்வொரு நிமிஷமும் நான் கற்றுக்கொள்ள விஷயம் இருந்துச்சு. ஏன்னா, குருஜியின் குடும்பத்துல எல்லாருமே சாரங்கி வாசிப்பாங்க. இரவு பத்து மணிக்கு மேல அப்பா, மகன், பேரன்னு எல்லோரும் சாரங்கி வாசிக்க ஆரம்பிச்சா இரவு ஒரு மணிக்கு மேலேயும் வாசிச்சிட்டே இருப்பாங்க. அந்த இடமே உணர்ச்சிப்பிழம்பா இருக்கும். ஒரு சில நாள்கள்ல என்னைக் கட்டுப்படுத்த முடியாம அழுதிருக்கேன். ஒவ்வொரு முறை அவங்க வீட்டைவிட்டுக் கிளம்பும்போதும் ரொம்பக் கஷ்டமா இருக்கும். அடுத்த நாளே அங்கே வந்துரணும்னு தோணும். ஒரு கச்சேரியில குருஜியோட சேர்ந்து வாசிச்ச நாளை மறக்கவே முடியாது. நிகழ்ச்சி ஆரம்பிக்கிற வரைக்கும் பயமும் பதற்றமும் கலந்து இருந்துச்சு. நிகழ்ச்சி முடியும்போது கனவுல இருந்ததுபோல உணர்ந்தேன்.’’
``மற்ற இசைக்கருவிகளைவிட, சாரங்கி வாசிக்கிறது சிரமமாச்சே?’’
``ஆமா, இதை வாசிக்கும்போது நகங்களை ஒட்டியிருக்கும் விரல் பகுதியைப் பயன்படுத்த வேண்டியிருக்கும். பயிற்சி எடுக்கும்போது பல நாள்கள் அந்தப் பகுதியில ரத்தம் கசிஞ்சிருக்கு. அதை மீறியும் சாரங்கி மேல பெரிய காதல். அதுதான் இதை இடைவிடாம கற்றுக்கொள்ள வெச்சுது. தென்னிந்தியாவிலேயே சாரங்கி வாசிக்கிற பெண் அநேகமாக நான் மட்டும்தான்னு நினைக்கிறேன். அம்மாவும் இப்படித்தான். தில்ரூபா வாசிக்கிறதுல தனித்துவமாகத் தெரியுறாங்க. அதுபோல நானும் ஆகணும்.’’
``அம்மா என்ன சொல்றாங்க?’’
``மியூசிக்கெல்லாம் வேண்டாம்னு சொன்ன அம்மா, நான் சாரங்கி வாசிக்கிறதைக் கேட்டு மனசார வாழ்த்தினாங்க. ரெக்கார்டிங் நடக்கும்போது கடைப்பிடிக்கவேண்டிய டெக்னிக்கல் விஷயங்களைச் சொன்னாங்க. மற்றபடி `நீயா தேடிக் கத்துக்கோ...' - இதுதான் அம்மா அடிக்கடி சொல்றது. சொல்றது மட்டுமல்ல, அந்தளவுக்குச் சுதந்திரத்தையும் கொடுக்கிறாங்க. ஏன்னா, அம்மாவும் என்னை மாதிரி கல்யாணத்துக்கு அப்புறம்தான் தில்ரூபா வாசிக்க ஆரம்பிச்சாங்க. 30 வருஷத்துக்கு மேல வாசிச்சிட்டு இருக்காங்க. கிட்டத்தட்ட எல்லா மியூசிக் டைரக்டர் கூடவும் வொர்க் பண்ணியிருக்காங்க. தாத்தாவைப் பற்றி அம்மா நிறையச் சொல்லியிருக்காங்க. தாத்தா ஏ.பி.சண்முகம், தபேலா இசைக்கலைஞர். ஒருநாள் வீட்டுக்கு வந்த தயாரிப்பாளர் ஒருத்தர் பரண் மேல இருந்த தில்ரூபாவைப் பார்த்து, அதை எடுத்து வாசிக்கச் சொல்லியிருக்கார். அதிலேருந்து அம்மாவின் பயணம் தில்ரூபாவோடுனு ஆகிடுச்சு.’’
``சீன வயலினும் வாசிப்பீங்களாமே?’’
``ஏ.ஆர்.ரஹ்மான் சார் வெளிநாட்டுக்குப் போனப்போ, `எர்ஹு'ங்கிற (Erhu) சைனீஸ் வயலினை வாங்கி, எங்க அம்மாவுக்கு கிஃப்ட்டா கொடுத்திருக்காங்க. அதை அம்மா என்கிட்ட கொடுத்திட்டாங்க. நான் அதில் வாசிச்சுப் பழகினேன். ரஹ்மான் சாரிடம் ஒருமுறை வாசிச்சுக் காட்டினேன். ஒரு இந்திப் படத்துல எர்ஹு வாசிக்க வாய்ப்புக் கொடுத்தார். யுவன்சங்கர் ராஜா, `சண்டக்கோழி’ படத்துல `என்னமோ நடக்கிறதே...'ங்கிற பாடலில் வாசிக்க வைத்தார். எர்ஹு வாசிக்கிறது ரொம்பக் கஷ்டம். அதோட அந்த இசை நம்மோட சூழலுக்குப் பொருத்தமானது இல்லையோனு நினைக்கிறேன்.’’
``வேற என்னென்ன படங்களில் பணியாற்றியிருக்கிறீர்கள்?’’
``இமான் சார்தான் முதல் வாய்ப்பைத் தந்தார். `மைனா’வில், `கிச்சுக்கிச்சுத் தாம்பாளம்...’, `ரம்மி’யில `கூட மேல, கூட வெச்சு’, `சொப்பனச் சுந்தரி நான்தானே...’ இன்னும் நிறையப் பாடல்கள் இருக்கு. ஏ.ஆர்.ரஹ்மான், வித்யாசாகர், அனிருத், ஹிப்ஹாப் தமிழா, ஜிப்ரான் இவங்ககூடயும் வொர்க் பண்ணியிருக்கேன்.’’
``சோகமான மனநிலையை வெளிப்படுத்துவதற்காகத்தான் சாரங்கியைப் பயன்படுத்துவார்களா?’’
``பெரும்பாலான நேரத்தில் அப்படித்தான். கதையில் மரணம் நடந்தால், அப்போ சாரங்கி பின்னணி இசையாக வரும். ஆனா, இது இப்போ மாறி வருது. சந்தோஷமான தருணங்கள்லயும் சாரங்கி இசை பயன்படுத்தப்படுது. `சொப்பன சுந்தரி...’ பாடலே அப்படியானதுதானே. நாட்டுப்புறச் சூழலுக்கும் பொருத்தமாக இருக்கும். ஆனா, சாரங்கி வாசிக்கும்போது ரொம்பவும் ஃபீல் பண்ணித்தான் வாசிக்க முடியும். சில நேரங்கள்ல என்னையும் அறியாம அழுதிருக்கேன்.’’
``உங்களின் மியூசிக் வீடியோ சோஷியல் மீடியாவில் பிரபலமாகப் பேசப்படுகிறதே?’’
`` `சாரங்கி' தென்னிந்திய ரசிகர்களுக்குப் பெரிய அளவில் அறிமுகமாகலை. அதனால, சினிமாப் பாடல்களை வாசிச்சு வீடியோ செய்ய ப்ளான் பண்ணினேன். என் ஃப்ரெண்ட் ஷ்யாம் பெஞ்சமினோடு சேர்ந்து, அதை எடுத்து சோஷியல் மீடியாவில் அப்லோடு செஞ்சேன். ஆனா, அதுக்கு இவ்வளவு வரவேற்பு இருக்கும்னு நான் நினைக்கலை. சாரங்கியை அறிமுகப்படுத்தறதுதான் நோக்கம். ஆனா, எங்க வீடியோவுக்கு நெகிழ்ச்சியான கமென்ட்ஸ் வர்றதைப் பார்க்கும்போது திருப்தியான ஒரு வேலையைச் செஞ்சிட்டு இருக்கோம்னு நினைக்கிறேன்.’’
``வீடியோவுக்கான பாடல்களை எந்த அடிப்படையில் தேர்வு செய்கிறீர்கள்?’’
``உணர்வுபூர்வமான பாடல்களைத்தான் முதலில் செலக்ட் பண்ணுவேன். என்னைப் பொறுத்தவரை இளையராஜா சாரின் எல்லாப் பாடல்களையுமே அப்படிச் சொல்வேன். வார்த்தைகளோடு அந்தப் பாடல்களைக் கேட்டுட்டு இருந்தவங்களுக்கு சாரங்கி இசை மூலமாகக் கொண்டு சேர்க்க நினைத்தேன். அதை சரியா செய்யறேனு நினைக்கிறேன். இதில் பட்ஜெட் மட்டும்தான் பிரச்னை. செலவுகளை நான்தான் பார்த்துகிறேன். என் கணவரும் அதற்கு ஒத்துழைக்கிறதாலதான் நிறைவா செய்ய முடியுது.’’
``உங்கள் வாசிப்பில், உங்கள் குடும்பத்தினருக்குப் பிடித்த பாடல்கள் எவை?’’
``என் அப்பாவுக்கு `உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது...' பாடலும், கணவருக்கு `சுந்தரி கண்ணால் ஒரு சேதி’ பாடலும் பிடிக்கும். பையன் சுமந்த், என்னோட ரொம்ப கறாரான விமர்சகர். வாசிக்கும்போது நான் என்ன தப்பு செய்யறேனு கண்டுபிடிக்கிறதுதான் சாரோட வேலை. சுமந்த், கீ போர்டு கிளாஸுக்குப் போயிட்டு இருக்கான்...’’ (மனோன்மணி இப்படிச் சொன்னதும் கீ போர்டில் இசைத்துக் காட்டுகிறார் சுமந்த்).
``இசைத் துறையில் உங்களின் அடுத்தகட்டத் திட்டம் என்ன?’’
``நம் ஊரில் தனி நபராகச் செய்யும் மியூசிக் ஆல்பத்துக்குப் பெரிய அளவில் வரவேற்பு இருப்பது இல்லை. ஆனா, இப்போ சோஷியல் மீடியாவெல்லாம் வளர்ந்திருப்பதால் சாரங்கியை மையப்படுத்தி, இயற்கை சார்ந்த கான்செப்ட்டில் ஆல்பம் தயாரிக்கவிருக்கிறேன். தனியாக மியூசிக் கம்போஸ் செய்தும் வருகிறேன்.''
'சாரங்கி' இசையோடு மனோன்மணியின் பெயரும் திக்கெட்டும் ஒலிக்கட்டும்!
No comments:
Post a Comment