Genghis Khan ,in search of his tomb



 Genghis Khan ,in search of his tomb





செங்கிஸ் கானின் பொக்கிஷம்!

அது மட்டும் கிடைத்துவிட்டால், உலகின் பல வரலாற்று நூல்களை மாற்றி எழுத வேண்டியிருக்கும். ஏராளமான பேர் 800 ஆண்டுகளாக அதைத் தேடுகிறார்கள்... ஆனால், கிடைக்கவில்லை. வரலாற்றில் சாகாவரம் பெற்ற மர்மங்களில் ஒன்றாக அதைச் சொல்கிறார்கள். 

‘செங்கிஸ் கானின் கல்லறை எங்கே இருக்கிறது?’

‘செங்கிஸ் கானின் கல்லறை எங்கே இருக்கிறது?’ என்ற தேடல்தான் அது. வெறுமனே வரலாற்றை மாற்றுவதற்கு மட்டும்தான் இந்தத் தேடலா? இல்லை. செங்கிஸ் கான் தன் வாழ்நாள் முழுக்க நடத்திய போர்களில் கைப்பற்றிய அத்தனை பொக்கிஷங்களும் இந்தக் கல்லறையில்தான் பாதுகாப்பாக இருப்பதாகச் சொல்கிறார்கள். அதன் இன்றைய மதிப்பை வைத்து, பல தேசங்களையே விலைக்கு வாங்கலாம். அதை அடையவே இந்த வேட்டை!

ஆசியாவின் அழிவு மையம் 

‘செங்கிஸ் கான்’... 800 ஆண்டுகளுக்கு முன்பு உலகம் முழுக்க அச்சத்தை விதைத்த பெயர். ஆசியாவில் தொடங்கி ஐரோப்பா கண்டம் வரை படையெடுத்துச் சென்று, பல தேசங்களைச் சூறையாடியவர். ஆசியாவின் மையத்தில் இருக்கும் மங்கோலியாவில் ஒரு நாடோடி இனக்குழுத் தலைவனின் மகனாகப் பிறந்து, மற்ற இனங்களையும் இணைத்து ஒரு வலிமையான படையை உருவாக்கி, வெற்றிகளையும் தோல்விகளையும் சமமாகச் சந்தித்து வளர்ந்தவர், ஒரு கட்டத்தில் நிகரற்ற பேரரசனாக உருவெடுத்தார். பிரமாண்ட மாட்டு வண்டியில் - நகரும் கூடாரத்தில் - அமர்ந்து செங்கிஸ் கான் நடுநாயகமாக வர... வெடிமருந்துகளை வீசி எதிரிக் கோட்டைகளை நிலைகுலையச் செய்து வீழ்த்தும் குதிரைப்படையினர் அவரைச் சூழ்ந்திருப்பார்கள். ‘செங்கிஸ் கான் படையெடுத்து வருகிறார்’ என்ற ஒற்றை வரித் தகவலே பல நாடுகளை வீழ்த்தியது; பல மன்னர்களை மணிமுடி துறக்கச் செய்தது; பல படைகளை ஓடச் செய்தது. அவர் உருவாக்கிய மங்கோலியப் பேரரசு அளவுக்கு, இந்தப் பூமியின் பெருநிலப் பரப்பை வேறு எந்த இனமும் ஆண்டது இல்லை.

மரண ரகசியம் 

அவரது போர்முறைகள் போலவே, மரணமும் மர்மங்களின் கலவை. அவர் எப்படி இறந்தார் என்பதிலிருந்தே மர்மம் தொடங்குகிறது. 1227-ம் ஆண்டு ஆகஸ்ட் 18-ம் தேதி செங்கிஸ் கான் இறந்தார். அப்போது அவருக்கு வயது 65 என்று சிலர் சொல்கிறார்கள்; முதுமையின் தள்ளாட்டத்தில், 72 வயதில் இறந்தார் என்றும் சொல்கிறார்கள். எந்த வயதில் இறந்தார் என்பது போலவே, அவர் எப்படி இறந்தார் என்பதும் மர்மம். சீனாவின் மேற்கு ஜியா பேரரசோடு போர் புரிந்து வெற்றி பெற்றபோது, போரில் ஏற்பட்ட காயத்தால், யின்சுவான் என்ற இடத்தில் தன் குதிரையிலிருந்து விழுந்து இறந்தார் என்கிறார்கள். ‘மங்கோலியர்களின் ரகசிய வரலாறு’ எனும் பழைமையான நூல், ‘வேட்டைக்குச் சென்றபோது ஏற்பட்ட காயத்தால் செங்கிஸ் கான் இறந்தார்’ என்கிறது. வரலாற்றுப் புகழ்பெற்ற வெனிஸ் யாத்ரீகரான மார்க்கோ போலோ, ‘கடைசிப் போரின்போது செங்கிஸ் கான் உடலில் துளைத்த அம்பு ஒன்றினால் ஏற்பட்ட காயம் ஆறவே இல்லை. அதில் நோய்த்தொற்று ஏற்பட்டு அவர் இறந்தார்’ என எழுதியிருக்கிறார். ‘கடைசிப் போரில் மேற்கு ஜியா நாட்டின் இளவரசியை செங்கிஸ் கான் அபகரித்து வந்தார். ஓர் அந்தரங்கமான தருணத்தில் அவள் குறுவாளால் செங்கிஸ் கானைக் குத்திக்கொன்றாள்’ என 17-ம் நூற்றாண்டு வரலாற்றுக் குறிப்பு ஒன்று சொல்கிறது. மின்னல் தாக்கி இறந்ததாகவும் சொல்கிறார்கள்.

செங்கிஸ் கான் வென்ற பொக்கிஷங்கள் 

உயிரோடு இருந்தபோது பல அரசர்களின் சிம்ம சொப்பனமாக இருந்த செங்கிஸ் கான், இறந்த பிறகு தன் கல்லறை யார் கண்ணிலும்படக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தார். இதற்காகத் தன் மகன்களிடமும் நெருக்கமான தளபதிகளிடமும் சத்தியம் வாங்கியிருந்தார். ‘‘என் கல்லறையில் ஆறு பூனைகளை உயிரோடு புதையுங்கள். அவற்றின் குரல்கள், மரணத்துக்குப் பிறகான பயணத்தில் என்னை வழிநடத்தட்டும்’’ என்று கேட்டிருந்தார். பூனைகளை மட்டுமல்ல... செங்கிஸ் கான் வென்ற பொக்கிஷங்கள் பலவற்றையும் கல்லறையில் புதைக்க முடிவெடுத்தார்கள். அதோடு, அந்தக் கல்லறையை படு ரகசியமாக வைத்திருக்கவும் முடிவெடுத்தார்கள்.
ஒரு படுபயங்கர பயணம் தொடங்கியது. 

பிணத்தை கண்டவர்கள் அனைவரும் கொலை 


செங்கிஸ் கானின் சடலத்தை ஒரு வண்டியில் ஏற்றிக்கொண்டு ஆயிரம் வீரர்களும் ஏராளமான அடிமைகளும் கிளம்பினார்கள். ‘பேரரசரின் சடலத்தைப் புதைப்பதற்காக எடுத்துச் செல்கிறார்கள்’ என்று ஆர்வத்துடன் வேடிக்கை பார்க்க வந்தவர்களுக்கு, தங்கள் விதி என்ன ஆகும் என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ‘இந்த வழியாகத்தான் செங்கிஸ் கானின் சடலத்தை எடுத்துப் போனார்கள்’ என்று சொல்வதற்குக்கூட ஆள் இருக்கக் கூடாது என முடிவெடுத்து இருந்ததால், அவர்கள் அத்தனை பேரும் கொல்லப்பட்டனர். தற்செயலாக அந்தப் பாதையில் எதிர்ப்பட்டவர்களின் கதியும் இதுதான். மங்கோலியாவில் மக்கள் நெருக்கம் மிகக் குறைவு. ஓர் ஊரைத் தாண்டினால் அடுத்த கிராமம் மிக நீண்ட பயணத்துக்குப் பிறகே வரும். அதனால், சில நூறு பேரை மட்டுமே கொன்றுவிட்டு, செங்கிஸ் கானின் சடலப் பயணம் தனது இலக்கை அடைந்தது. 

கல்லறைகளின் புதைவிடம் 

‘கல்லறைக்கான பள்ளத்தை அடிமைகள் தோண்டி முடித்தனர். பேரரசரின் அடக்கம் முடிந்ததும், அத்தனை அடிமைகளும் கொல்லப்பட்டார்கள். பூமிக்கு அடியில் அமைக்கப்பட்ட அந்தக் கல்லறையை ரகசியமாக்கிவிட்டு, அதன் பின்னர் ஆயிரம் வீரர்களும் தற்கொலை செய்துகொண்டு இறந்தனர்’ என மங்கோலிய வரலாறு கூறுகிறது. புதிதாக மண்ணைத் தோண்டிய தடயம் தெரியக் கூடாது என்பதற்காக அந்த இடத்தில் ஆயிரம் குதிரைகளை ஓடவிட்டு, எல்லா இடங்களையும் ஒரே மாதிரி சமப்படுத்திக் குழப்பியதாக ஒரு தகவல். இன்னொரு தகவல் இன்னும் பயங்கர மானது. ‘ஓடிக்கொண்டிருந்த ஒரு நதியைச் சில மணி நேரங்கள் வேறு திசையில் திருப்பிவிட்டு, அந்த நதியின் பழைய பாதையில் கல்லறையை அமைத்து முடித்து, நதியை பழையபடி தன் பாதையில் ஓடவிட்டார்கள்’ என்பதே அந்தத் தகவல்.

செங்கிஸ் கானின் கல்லறை கிடைக்கவில்லை

2,000 ஆண்டுகளுக்கு முன்னர் மங்கோலியாவின் ஜியாங்கு மன்னர்களுக்கு அமைக்கப்பட்ட கல்லறைகள் விநோதமானவை. தரைக்கு அடியில் 20 மீட்டர் ஆழத்தில் ஒரு குட்டி அரண்மனைபோல இதை அமைப்பார்கள். நடுநாயகமாக மன்னரின் உடல் வைக்கப்படும். அவர் அணிந்திருந்த நகைகள், பயன்படுத்திய பொருள்கள், பயணித்த தேர் எனச் சகலமும் அந்தக் கல்லறையில் வைக்கப்படும். அதன் பிறகு அதை மூடிவிட்டு, அந்தக் கல்லறை அமைந்த இடத்தில் தரைக்கு மேலே சதுரக் கற்களை வரிசையாக நட்டு வைப்பார்கள். இது அடையாளத்துக்காக. செங்கிஸ் கான் கல்லறையில் இந்த நடைமுறைகளை எல்லாம் செய்துவிட்டு, தரைக்கு வெளியில் சதுரக் கற்களை மட்டும் வைக்கவில்லை. அதனால்தான், 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஜியாங்கு மன்னர்களின் கல்லறைகள் எல்லாம் கிடைத்துள்ளன; செங்கிஸ் கானின் கல்லறை கிடைக்கவில்லை.

தேடுதல் வேட்டை 

அமெரிக்க தங்க வியாபாரியான மௌரி கிராவிட்ஸ், 40 ஆண்டுகளாக செங்கிஸ் கானின் கல்லறையைத் தேடும் முயற்சியில் இருந்தவர். ‘‘ஒவ்வொரு நாட்டையும் வென்ற பிறகு, அங்கிருந்து பெரிய மாட்டு வண்டிகளில் தங்கமும் விலையுயர்ந்த கல் நகைகளுமாக சூறையாடி வருவது செங்கிஸ் கானின் வழக்கம். அவர் வைத்திருந்த உடைவாளின் கைப்பிடிகூட தங்கத்தால் ஆனது. இப்படி ஏராளமான ஆயுதங்கள் செங்கிஸ் கானின் அரண்மனையில் இருந்தன. பல நாடுகளிலிருந்து வண்டி வண்டி யாகக் கொண்டுவந்த எந்தப் பொக்கிஷமும் இப்போது மங்கோலியாவில் இல்லை. இங்கிருந்து வெளியில் போகவும் இல்லை. அப்படியானால், அவை எங்கே? அந்தக் கல்லறையில்தான் புதைக் கப்பட்டன’’ என்கிறார் கிராவிட்ஸ்.
இந்தப் பொக்கிஷங்களுக்காகப் புதையல் வேட் டைக்காரர்கள் ஒருபுறம் தேட, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இன்னொரு புறம் தேடினர். நீண்ட மணல் பரப்புகளும், நிறைய மலைகளுமாக இருக்கும் மங்கோலியாவில் இந்தக் கல்லறையைத் தேடுவது என்பது, கிட்டத்தட்ட வைக்கோல் போரில் குண்டூசியைத் தேடுவது போன்றது.

‘பேசக் கூடாத பெரிய இடம்

செங்கிஸ் கானின் கல்லறை, கென்டி மலைப் பகுதியில் இருப்பதாக மங்கோலியாவில் உலவும் செவிவழிச் செய்திகள் சொல்கின்றன. இளம் வயதில் போரில் தோற்று தலைமறைவாக இருந்தபோது செங்கிஸ் கான் இங்குதான் இருந்திருக்கிறார். ‘‘என் இறுதிக்காலத்தில் இங்கு தான் வருவேன்’’ என்று சொல்லியிருந்தாராம். அதனால், இங்கு ஒரு கும்பல் தேடி வருகிறது. செங்கிஸ் கான் பிறந்த இடம், புர்கா கால்டுன் மலைப் பகுதி. இங்கு ஓனோன் நதி ஓடுகிறது. இங்கு ஓரிடத்துக்கு ‘இக் கோரிக்’ என்று பெயர். மங்கோலிய மொழி வார்த்தையான இதற்கு ‘பேசக் கூடாத பெரிய இடம்’ என அர்த்தம். ‘‘இங்குதான் நதிக்கு அடியில் கல்லறை உள்ளது. இதைப் பற்றி யாரும் பேசக் கூடாது என்பதால்தான் இந்த இடத்துக்கு இந்தப் பெயர் வந்தது’’ என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால், ‘‘ரகசியமான இடத்துக்கு யாராவது இப்படிப் பெயர் வைப்பார்களா?’’ என்று கிண்டல் செய் பவர்களும் உண்டு. 


செங்கிஸ் கானின் அரண்மனை


ஜப்பானிய தொல்பொருள் நிபுணர்களும் மங்கோலிய தொல்பொருள் துறையும் இணைந்து இங்கு அகழ்வாராய்ச்சி நடத்தி, கடந்த 2004-ம் ஆண்டு செங்கிஸ் கானின் அரண்மனையைக் கண்டறிந்தார்கள். ‘அரண்மனை இங்கே இருக்கிறது என்றால், பக்கத்தில்தான் கல்லறை இருக்கும்’ என்று தேடினார்கள். ஆனால், மங்கோலியாவில் நிகழ்ந்த ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு இந்த முயற்சி நிறுத்தப்பட்டது. இங்கு ரகசியத் தேடலில் ஒரு பெரிய கும்பலே இறங்கியுள்ளது.
அமெரிக்கரான மௌரி கிராவிட்ஸ் தேடியது, ஓக்லோக்சின் கெரெம் என்ற இடத்தில். ஆனால், அவருக்கு விநோதமான அனுபவங்கள் ஏற்பட்டன. தேடுதல் குழுவில் இருந்தவர்கள் சிலர், திடீரென பாம்பு கடித்துச் செத்துப் போனார்கள். மலைப்பாதைகளில் சில வாகனங்கள் தானாகவே கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின. மங்கோலிய எதிர்க்கட்சிகள் இந்தக் குழுவின் தேடலுக்குக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததால், இவர்களை வெளியேறச் சொல்லிவிட்டது அரசு. ‘செங்கிஸ் கானின் கல்லறையை இரண்டு மைல் நீளமுள்ள ஒரு சுவர் பாதுகாக்கிறது. இந்தச் சுவர் கற்களால் கட்டப்படவில்லை. முழுக்க முழுக்க பாம்புகள் பிணைந்திருக்கும் சுவர் இது. நெருங்கும் யாரையும் இந்தப் பாம்புகள் உயிரோடு விட்டு வைக்காது’ என அப்போது ஒரு ‘பயங்கரக் கதை’ பரவியது. 

செங்கிஸ்கான் வழிபாடு 

இப்போது அமெரிக்காவின் கலிஃபோர்னியாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஆல்பர்ட் லின் யு-மின் என்பவர், செயற்கைக்கோள் படங்கள், தரையைத் துளைத்துப் பார்க்கும் ரேடார் பதிவுகள் ஆகியற்றின் மூலம் இந்தக் கல்லறையைத் தேடும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
மங்கோலியர்கள், மரணம் குறித்துப் பேசுவதைப் பாவச் செயலாகவே கருதுகிறார்கள். இறந்தவர்களைப் புதைத்த இடத்தைத் தொந்தரவு செய்யக் கூடாது என்பது அவர்களின் நம்பிக்கை. அதிலும் செங்கிஸ் கான் குறித்து அவர்களுக்குப் பெருமிதம் உள்ளது. தங்கள் இனத்தின் வீரத்தை உலகத்துக்கு உணர்த்திய தலைவராக அவரைப் பார்க்கிறார்கள். ஒவ்வொரு வீட்டிலும் செங்கிஸ் கானின் ஓவியத்தை வைத்து வழிபடுகிறார்கள். சாக்லேட் முதல் ரூபாய் நோட்டு வரை எல்லாவற்றிலும் செங்கிஸ் கானின் உருவம் இருக்கும். மங்கோலிய மக்கள் எல்லோருமே தங்களை செங்கிஸ் கானின் குழந்தைகளாக நினைக்கிறார்கள். ‘செங்கிஸ் கானின் கல்லறையை யாராவது கண்டுபிடித்துத் திறந்துவிட்டால், அதுவே இந்த உலகத்தின் கடைசி நாள்’ என நம்புகிறார்கள். 

ஆசியா ஐரோப்பா இணைப்பு 

கடந்த 1941-ம் ஆண்டு மங்கோலிய அரசர் டாமர்லேன் என்பவரின் கல்லறையை சோவியத் ரஷ்யாவின் தொல்பொருள் ஆய்வாளர்கள் திறந்தபோது, இரண்டாம் உலகப் போர் மூண்டது. நாஜி படைகளின் தாக்குதலால் ரஷ்யா பெரும் சேதத்தைச் சந்தித்தது. அதைத்தான் முன்னுதாரணமாகச் சொல்கிறார்கள். மிருகத்தனமான தாக்குதல்கள் நடத்தி பல்லாயிரம் பேரைக் கொன்று குவித்த மன்னனாக வரலாறு அவரை அடையாளப்படுத்துகிறது. எனினும், இந்த வரலாற்றை வேறுவிதமாகச் சொல்பவர்களும் உண்டு. 

‘‘அலெக்ஸாண்டரையும், சீஸரையும், நெப்போலியனையும் மாவீரர்களாக மேற்கத்திய உலகம் சித்திரிக்கிறது. அவர்களும் போர்களில் கொல்லத்தான் செய்தார்கள். அவர்களைவிட அதிக நிலப்பரப்பை ஆட்சி செய்தவர் செங்கிஸ் கான். ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைத்து, முதன்முதலில் இந்த உலகை ஒருங்கிணைத்தவர் அவர். இரண்டு கண்டங்களுக்கும் வணிகமும் பண்பாட்டுப் பரிமாற்றமும் அதனால்தான் நிகழ்ந்தது. மதச் சுதந்திரம் மக்களுக்குக் கிடைத்தது. நிலப்பிரபுகளின் அதிகாரத்தை ஒழித்தார். 

சீனாவிலிருந்து காகிதம் ஐரோப்பாவுக்குப் போவது அவரால்தான் சாத்தியமானது. காகித கரன்சி, தபால் முறையை எல்லாம் அறிமுகம் செய்தார். அவர் உலகை ஆக்கிரமித்தவர் அல்ல, நாகரிகப்படுத்தியவர்’’ என்கிறார்கள் மங்கோலியர்கள். அதனால்தான் உலகமே செங்கிஸ் கானின் கல்லறையைத் தேடினாலும், அதைத் தொந்தரவு செய்யாமல் பாதுகாக்க வேண்டும் என மங்கோலிய மக்கள் நினைக்கிறார்கள்.

Comments

Popular posts from this blog

DACOITS OF CHAMBAL

List of Muhammad's Wives and Concubines

MAHARANI SITADEVI OF BARODA the "Indian Wallis Simpson" INTERESTING LIFE STORY OF HER