Saturday 21 October 2017

M.G.R , POLITICAL MYSTERY OF HUGE SUCCESS



M.G.R , POLITICAL MYSTERY OF HUGE SUCCESS





"ஏப்ரல் பதினான்காம் தேதி பூஜை வைத்துக்கொள்ளலாம்’’ என்று எம்.ஜி.ஆர் சொன்னபோது, சுற்றி நின்ற அனைவருக்குமே ஆச்சர்யம்தான். ஓரிருவர் அதிர்ச்சியோடு பரஸ்பரம் பார்த்துக்கொண்டனர். காரணம், அப்போது எம்.ஜி.ஆர் திரையுலக சூப்பர் ஸ்டார் அல்ல, தமிழகத்தின் முதலமைச்சர். அ.தி.மு.க என்ற தனிப்பெருங்கட்சியின் தலைவர். ஒட்டுமொத்தத் தமிழகத்தின் நம்பிக்கை நட்சத்திரம். அத்தகைய பெரு நட்சத்திரம் மீண்டும் திரையில் மின்ன விரும்புகிறதா? என்று எல்லோரும் யோசித்துக்கொண்டிருக்க, ``படத்துக்கு நான்தான் ஹீரோ, சீக்கிரமா கதை ரெடி பண்ணுங்க’’ என்று சொல்லிவிட்டு எழுந்துபோய்விட்டார் எம்.ஜி.ஆர்.

என்ன ஆயிற்று இவருக்கு? தமிழ்நாட்டின் முதலமைச்சர். எத்தனை பெரிய பொறுப்புகள் நிறைந்த பதவி? சட்டம் ஒழுங்கு... மக்கள் பிரச்னை...திட்டங்கள்... கோப்புகள்... ரசிகர்கள்... தொண்டர்கள்... எத்தனையெத்தனை நெருக்கடிகள்... எத்தனையெத்தனை பிரச்னைகள். `எப்போது சறுக்குவார் எம்.ஜி.ஆர்?’ என்று கண்கொட்டாமல் காத்துக்கொண்டிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் கருணாநிதி. எல்லா அரசியல் நெருக்கடிகளையும் சமாளிக்க வேண்டும். மூச்சுவிடக்கூட நேரம் இல்லை. இருந்தும்  `நடிக்கப்போகிறேன்' என்கிறாரே? என்ன மனிதர் இவர்! பதவிக்கு வந்த ஒரே ஆண்டில் அதிகாரம் அலுத்துவிட்டதா? நாற்காலி கசந்துவிட்டதா? சொடக்குப்போடும் நேரத்தில் எதையும் சாதிக்கும் வித்தை தெரிந்தவர் எம்.ஜி.ஆர் என்பது வாஸ்தவம்தான். அதற்காக நடிக்கப்போகிறேன் என்பதெல்லாம் சாத்தியம்தானா?



சாத்தியம்தான் என்று புன்னகை செய்தார் எம்.ஜி.ஆர் அந்தப் புன்னகையில் தெறித்து விழுந்த பொறி மற்றவர்களை ஆக்கிரமித்தது. கதை தயாரிக்கும் பணிகள் தொடங்கின. பத்து நாள்கள். `கதை தயார்’ என்ற விவரத்தைத் தொலைபேசியில் சொன்னார் கவிஞர் வாலி. அன்று இரவே வாலியின் வீட்டுக்கு வந்தார் எம்.ஜி.ஆரின் உறவினர் கே.என்.குஞ்சப்பன்.

``நாளைக் காலை விமானத்தில் மதுரை செல்கிறார் முதல்வர். நீங்களும் ஏறிக் கொள்ளுங்கள். கதையைச் சொல்லுங்கள். அடுத்த விமானத்தில் சென்னை வந்துவிடுங்கள்.’’

``ஆகட்டும்’’ என்று சொல்லி, ஆகாயத்தில் பறந்தபடியே எம்.ஜி.ஆருக்குக் கதை சொன்னார் வாலி. கவனம் கலையாமல் கதையைக் கேட்டார் எம்.ஜி.ஆர். அவ்வப்போது திருத்தங்களையும் சொன்னார். இறுதியாக, படத்தின் தலைப்பு முடிவானது... ‘உன்னைவிட மாட்டேன்!’

`விட மாட்டார்கள்’ என்றார் மோகன்தாஸ். மூத்த காவல்துறை அதிகாரி. எம்.ஜி.ஆரின் கண்களாகவும் காதுகளாகவும் பார்க்கப்படுபவர். மனத்தில் பட்டதை முகத்துக்கு நேராகச் சொல்லிவிடக்கூடியவர். எம்.ஜி.ஆருக்கு எதிரே அப்படிப் பேச அனுமதிக்கப்பட்ட ஓரிருவருள் அவரும் ஒருவர். அப்போது மோகன்தாஸ் அப்படிச் சொன்னதற்கு வலுவான வரலாற்றுக் காரணம் ஒன்று இருந்தது. 

1971, சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க வெற்றிபெற்று ஆட்சியைத் தக்கவைத்த சமயம் அது. வெற்றிக்குக் காரணகர்த்தாக்களுள் ஒருவரான எம்.ஜி.ஆருக்கு அமைச்சர் பதவி நிச்சயம் என்ற எதிர்பார்ப்பு எல்லோருக்கும் இருந்தது. அப்போது, எம்.ஜி.ஆர் காஷ்மீரில் ‘இதயவீணை’ வாசித்துக்கொண்டிருந்தார். தொலைபேசிமூலம் தன் விருப்பத்தைக் கருணாநிதியிடம் நாசூக்காகச் சொல்லிவிட்டு, தனி விமானத்தில் சென்னை வந்தார். ஆனால், ‘நடித்துக்கொண்டே அமைச்சராக இருப்பது சரியாக இருக்காது. சட்டம் அனுமதிக்காது’ என்று காரணம் சொல்லி, எம்.ஜி.ஆரின் விருப்பம் நிராகரிக்கப்பட்டது. அதன் எதிர்வினையாகவே அ.தி.மு.க உருவானது.

அமைச்சர் பதவிக்கே அவ்வளவு எதிர்ப்பு வந்ததென்றால், முதலமைச்சர் பதவி எவ்வளவு முக்கியமானது? மத்திய அரசு இதைச் சகித்துக் கொள்ளுமா? அதிலும், இந்தியப் பிரதமர் மொரார்ஜி தேசாய் கொஞ்சம் கெடுபிடி மனிதர். சினிமா சங்கதிகளை எல்லாம் அவர் அனுமதிக்க மாட்டார். தவிரவும், அரசியல் அமைப்புச் சட்டத்துக்குச் சவால்விடக்கூடிய காரியம் இது. ஆகவே, வேண்டாம்.

எம்.ஜி.ஆருக்கு நெருக்கமான எல்லோருமே கிட்டத்தட்ட இதே ரீதியில்தான் ஆலோசனை சொன்னார்கள். எல்லோருக்கும் புன்னகையை மட்டுமே பதிலாகத் தந்தார் எம்.ஜி.ஆர். அந்தப் புன்னகைக்கான விளக்கம், மறுநாள் வெளியான செய்தித்தாள்களில் வந்திருந்தது. 

`மாநில முதலமைச்சராக இருந்துகொண்டு தன் கடமைகளுக்குக் குந்தகம் வராமல் திரு. எம்.ஜி.ஆர் சினிமாவில் நடிப்பதில் எனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை’ என்று பேட்டி கொடுத்திருந்தார் பிரதமர் மொரார்ஜி தேசாய். செய்தியைப் படித்த அத்தனை பேருமே அசந்து போனார்கள். எம்.ஜி.ஆர் மீண்டும் சினிமாவில் நடிக்கிறார் என்ற செய்தி டெல்லி வரைக்கும் கேட்டிருந்தது. பத்திரிகையாளர்கள் அனைவரும் இந்தச் செய்திக்குத் தேசிய அந்தஸ்து கொடுத்திருந்தனர். 

எப்படி நடந்தது இந்த அதிசயம்? கச்சிதமாகக் காய் நகர்த்தியிருந்தார் எம்.ஜி.ஆர். படம் தொடர்பாக அடுத்தடுத்த வேலைகள் தொடங்கின. அப்போது சினிமாவில் புகழ்பெறத் தொடங்கியிருந்த இளையராஜா, இசையமைக்கப் பணிக்கப்பட்டார். அமைச்சர் நாஞ்சில் மனோகரன் தலைமையில் பூஜை. எம்.ஜி.ஆரின் காலில் விழுந்து ஆசிபெற்றார் இளையராஜா. எல்லாம் சுமுகமாகத்தான் சென்று கொண்டிருக்கிறது என்று எல்லோரும் நினைத்திருந்த சமயத்தில், எம்.ஜி.ஆரிடமிருந்து அதிரடி அறிவிப்பு வெளியானது.



`படம் நிறுத்தப்படுகிறது.’

வட்டமடித்துக்கொண்டிருந்த அத்தனை சர்ச்சைக் கழுகுகளும் ஒரே நொடியில் அடங்கி, ஒடுங்கிவிட்டன. ‘ஏன் நிறுத்தினீர்கள்?’ என்று எவருமே கேட்கவில்லை. அவரும் சொல்ல வில்லை. அதுதான் எம்.ஜி.ஆர். அவர் எடுக்கும் முடிவுக்கு அவர் மட்டுமே ராஜா. அவருக்கு எதிராக நிமிர்ந்து நிந்திக்கவும் முடியாது; குனிந்து குமுறவும் முடியாது.

முற்றிலும் புரிந்துகொள்ள முடியாத நபர். மற்றவர்களால் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத காரியங்களை அநாயாசமாகச் செய்து முடிக்கக்கூடியவர். ஆனால், எந்த நேரத்தில் என்ன முடிவை எடுப்பார் என்று எவராலும் ஊகிக்க முடியாது. ஒரு முடிவைப் பகிரங்கமாக எடுப்பார். பத்தே நிமிடங்களில் அதைத் தலைகீழாக மாற்றுவார். ஆனால், அவர் எந்த முடிவை எடுத்தாலும், அது சரியாகத்தான் இருக்கும் என்று நினைத்தனர் தமிழக மக்கள். அதுதான் எம்.ஜி.ஆரின் வெற்றிக்கான சூட்சுமம்.

`சத்துணவுத் திட்டம்’ என்றபோது எம்.ஜி.ஆரை நோக்கிக் கைகூப்பித் தொழுத பொதுமக்கள், அவருடைய ஆட்சியில் அவரது குடும்பத்தினரை முன்வைத்துச் சாராய பேர ஊழல் வெடித்தபோது, அதிகாரிகளை நோக்கியே கைகளை நீட்டினர். சந்தேகத்தின் நிழல்கூட எம்.ஜி.ஆர்-மீது விழவில்லை. அதுதான் எம்.ஜி.ஆர் என்கிற மந்திரத்தின் சக்தி. 

எம்.ஜி.ஆருக்குப் பல்வேறு பரிமாணங்கள் உண்டு. ரசிகர்களுக்குத் தலைவன், படத் தயாரிப்பாளர்களுக்கு லாபதேவன், வறியவர் களுக்கு வள்ளல், எதிர்க்கட்சிகளுக்குச் சிம்ம சொப்பனம், தமிழ்நாட்டுப் பாட்டிகளுக்கு அவர்தான் கடவுள். இன்னும் இன்னும் நிறைய பரிமாணங்கள் எம்.ஜி.ஆர் என்ற மனிதருக்குள் புதைந்துகிடக்கின்றன. ஆச்சர்யங்களாலும், சுவாரஸ்யங்களாலும், பிரமிப்புகளாலும், சர்ச்சைகளாலும் நிரம்பிய மனிதர் எம்.ஜி.ஆர். 

முதல் வாத்தியார்


கோபாலமேனன் – சத்தியபாமா தம்பதிக்கு ஏற்கெனவே நான்கு குழந்தைகள். காமாட்சி, பாலகிருஷ்ணன், சுமித்ரா, சக்கரபாணி. ஆனாலும் 17 ஜனவரி 1917 அன்று ஆண் குழந்தை பிறந்தபோது, எல்லாம் அந்த ராமச்சந்திரமூர்த்தியின் கருணை என்று சொல்லி, `ராமச்சந்திரன்’ என்று பெயர் வைத்துவிட்டனர். அப்போது, கோபாலமேனன் குடும்பம் இலங்கையின் கண்டி நகரில் வசித்துக் கொண்டிருந்தது. திடீரென ஒருநாள் கோபாலமேனன் மரணம் அடையவே, குடும்பத்தின் எதிர்காலம் கேள்விக்குறியானது. அதற்குப் பதில் தேடி, குடும்பத்தோடு கும்பகோணத்துக்கு வந்தார் சத்தியபாமா. 

வாட்டும் வறுமையிலும் வளைந்துகொடுக்காத குணம் கொண்டவர் சத்தியபாமா. பிள்ளைகளையும் அப்படியே வளர்த்தெடுத்தார். ஒத்தாசைக்கு உறவினர்கள் இருந்தனர். ஆனால், எத்தனை காலத்துக்கு அடுத்தவரை நம்புவது? ஆகவே, ஆனையடிப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த பிள்ளைகளை வேலைக்கு அனுப்பத் தயாரானார். அப்போதுதான் `பாய்ஸ் கம்பெனி’ என்ற பெயர் சத்தியபாமாவுக்கு அறிமுகமானது. `பிரபலமான நாடக கம்பெனி. பிள்ளைகள் இருவரையும் அங்கு வேலைக்குச் சேர்த்துவிடலாம். வளமான எதிர்காலம் காத்திருக்கிறது’ என்றார் குடும்ப நண்பர் நாராயணன் நாயர். 

குழந்தைகளைக்கொண்டு வெற்றிகரமான நாடகங்களைத் தயாரிப்பதில் பாய்ஸ் கம்பெனி முன்னத்தி ஏர்.ராமச்சந்திரனின் முதல் வாத்தியார் காளி என்.ரத்தினம். நாடக நுட்பங்களைக் கற்றுக்கொடுத்தவர் அவர். சிலம்பம் சுற்றுவதில் ஆர்வம்கொண்ட ராமச்சந்திரனுக்கு `ஸ்த்ரீ பார்ட்’ என்கிற பெண் வேடம் வேப்பங்காய். ஆனாலும், சம்பளத்துக்காக அதையும் சந்தோஷமாகச் செய்தார். மனோகரன், அபிமன்யூ என நிறைய வேடங்கள். எல்லாம் சுமுகமாகச் சென்றபோது பருவ வயது, குரலைப் பதம் பார்த்தது.

எல்லோருக்கும் உடையும் குரல் 


எம்.ஜி.ராமச்சந்திரனுக்கு மட்டும் உடையாதா என்ன... உடைந்தது. நண்பர்களின் கேலியை ராமச்சந்திரனால் சகித்துக்கொள்ள முடியவில்லை. பாய்ஸ் கம்பெனிக்குப் பிரியாவிடை கொடுத்துவிட்டுக் கந்தசாமி முதலியாரின் கம்பெனியில் சேர்ந்துவிட்டார் ராமச்சந்திரன். கூடவே, சகோதரர் சக்கரபாணியையும் அழைத்துக்கொண்டார். அந்த கம்பெனி ராமச்சந்திரனின் வாழ்க்கையில் முக்கியமான திருப்புமுனை. மேடையிலிருந்து சினிமாவுக்குள் நுழைய வாய்ப்புக் கிடைத்தது அதன் பிறகுதான்.



என்.எஸ்.கே வழியாக அரசியல் பாலபாடம்!

`சதிலீலாவதி’ படத்தில் இன்ஸ்பெக்டர் வேடம் கிடைத்தது. நடித்தார். அடுத்த படத்திலும் அதே வேடம் கிடைத்தபோது துணிச்சலாக மறுத்துவிட்டார் ராமச்சந்திரன். `சதிலீலாவதி’யில் நடித்தபோது ராமச்சந்திரனுக்கு ஒரு நண்பர் கிடைத்திருந்தார். பின்னாளில் அந்த நண்பர் ராமச்சந்திரனின் நலம்விரும்பியாகவே மாறிப்போனார். அவர் என்.எஸ்.கிருஷ்ணன். அரசியல் ஆர்வம்கொண்ட என்.எஸ்.கே-வுடன் பழகியதால், ராமச்சந்திரனுக்கும் அரசியல் பிடித்துப்போனது. பெரியாரின் `குடியரசு’ பத்திரிகையை ராமச்சந்திரனுக்கு அறிமுகம் செய்துவைத்தார் என்.எஸ்.கே. 

அடுத்தடுத்துக் கிடைத்த பட வாய்ப்புகளால் கொஞ்சம்போல பொருளாதாரம் உயர்ந்தது. கூடவே, வயதும் உயர்ந்தது. ராமச்சந்திரனின் வாழ்க்கைத் துணையாகப் பார்கவி வந்துசேர்ந்தார். அந்த நேரம் பார்த்து வாய்ப்புகள் வரும் வேகம் குறைந்தது. சரி, நடிப்புக்கு நடைசாத்திவிட்டு, ராணுவத்துக்குப் போய் விடலாம் என்று நினைத்தார். அந்த எண்ணத்தை அடியோடு மாற்றினார் அசோக்குமார். ஆம், திரையுலக சூப்பர்ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதரின் `அசோக்குமார்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு ராமச்சந்திரனுக்கு வந்தது. அந்தப் படம் ராமச்சந்திரனின் முகத்தைப் பிரபலப்படுத்தியது. 

`மருதநாட்டு இளவரசி.’ - எம்.ஜி.ராமச்சந்திரன் நாயகனாக நடித்த முதல் படம். அந்தப் படத்துடன் தொடர்புடைய இருவர் எம்.ஜி.ஆரின் வாழ்க்கையில் இரண்டறக் கலந்து விட்டார்கள். ஒருவர், படத்தின் வசனகர்த்தா கருணாநிதி. இன்னொருவர், படத்தின் நாயகி வி.என்.ஜானகி. `ராஜகுமாரி’ என்றொரு படம். அதிலும் ராமச்சந்திரன் – கருணாநிதி கூட்டணிதான். `நான் எட்டாத பழம்’ என்பார் நாயகி. உடனே, `நான் வெட்டும் கத்தி’ என்று பதிலடி கொடுப்பார் நாயகன். படம் வெளியானது. வெற்றி. ஆம், ஏழு வயதில் எம்.ஜி.ராமச்சந்திரன் எடுக்கத் தொடங்கிய பயிற்சிகள் கால் நூற்றாண்டு போராட்டத்துக்குப் பிறகு அவரை நாயகனாக்கியிருந்தன. 

`ராஜகுமாரி’ படத்தில் நடித்தபோது, ராமச்சந்திரனுக்கு இன்னொரு மனிதர் அறிமுகமானார். அவர், டி.வி.நாராயணசாமி. திராவிட இயக்க நடிகர். அறிஞர் அண்ணாவுக்கு அணுக்கமானவர். ராமச்சந்திரனின் அழகையும் மிடுக்கையும் பார்த்த நாராயணசாமி, அவரை அண்ணாவிடம் அறிமுகம் செய்துவைத்தார். பிறகு, அண்ணா எழுதிய `சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்’ நாடகத்தில் சிவாஜியாக நடிக்க ராமச்சந்திரனை அணுகினர். `அப்படியே ஆகட்டும்’ என்று சொன்ன ராமச்சந்திரன், பிற்பாடு சகோதரர் சக்கரபாணியின் தலையீட்டால் வேண்டாமென்று விலகிக்கொண்டார். அந்த நொடிதான் வி.சி.கணேசன் என்ற நடிகர் சிவாஜி கணேசனாக மாறுவதற்கான ஆரம்ப நொடி.

புரட்சி நடிகர்

அடுத்தடுத்த படங்களின் வெற்றியால் எம்.ஜி.ராமச்சந்திரன் மெள்ள மெள்ள எம்.ஜி.ஆர் ஆகியிருந்தார். அரசியல்மீதும் ஆர்வம் வந்திருந்தது. அதற்கு முக்கியக் காரணம், அணுக்க நண்பர் மு.கருணாநிதி. குறிப்பாக, `அரும்பு’ என்ற நாடகத்தைச் சொல்ல வேண்டும். அதில் எம்.ஜி.ஆருக்கோ கருணாநிதிக்கோ எந்தப் பங்குமில்லை. மணப்பாறையைச் சேர்ந்த நாடக மன்ற நிர்வாகியான உறந்தை உலகப்பன் தனது நாடகத்தைத் தொடங்கிவைக்க கருணாநிதியையும் எம்.ஜி.ஆரையும் அழைத்திருந்தார். 

அந்த மேடையில் எம்.ஜி.ஆருக்குப் `புரட்சி நடிகர்’ என்ற பட்டம் தரவேண்டுமென கருணாநிதியிடம் சொன்னார் உலகப்பன். `ஆகட்டும்’ என்று சொல்லி எம்.ஜி.ஆரைப் புரட்சி நடிகராக்கினார் கருணாநிதி. அந்த மேடையிலேயே, தன்னைக் கழகத்தில் இணைத்துக்கொள்வதாக அறிவித்தார் 
எம்.ஜி.ஆர். ‘கற்புக்கரசியைக் காக்க வந்த கடவுள், துஷ்ட, நிக்ரஹ இஷ்ட பரிபாலனம் செய்யவந்த ஆண்டவன் எடுத்த அவதாரம் என்றெல்லாம் எண்ணாதே. நான்தான் மலைக்கள்ளன்!’

இது, `மலைக்கள்ளன்’ படத்தில் எம்.ஜி.ஆர் பேசிய வசனம். ஒற்றை வேடத்துக்குக் காத்துக்கொண்டிருந்த எம்.ஜி.ஆருக்கு இப்போது தன்னம்பிக்கைச் சிறகுகள் முளைத்திருந்தன. மலைக்கள்ளனின் வெற்றி எம்.ஜி.ஆரை உச்சத்துக்குக் கொண்டுசென்றது. `எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே…’ என்று டி.எம்.எஸ். குரலில் கம்பீரமாக ஒலித்தது எம்.ஜி.ஆரின் முதல் கொள்கைப் பாடல். 

`மலைக்கள்ளனில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிட்டாதிருந்தால், எனது சினிமா வாழ்க்கை யென்னும் கப்பல் தரை தட்டியோ பாறைகளில் மோதியோ விபத்துக்குள்ளாகிய நிலையை அடைந்திருக்கும்’ என்று பின்னாளில் சொன்னார் எம்.ஜி.ஆர். ரசிகர்கள் தங்கள் வீட்டுச் சுவர்களில் எல்லாம் மலைக்கள்ளனை கரித்துண்டுகளால் வரைந்து மகிழ்ந்தார்கள். 

`குலேபகாவலி’, `அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’ என்று ஒருபக்கம் கலைப்பணி, சித்தூர் தி.மு.க மாநாடு, செங்கல்பட்டு தி.மு.க மாநாடு என்று இன்னொரு பக்கம் அரசியல் பணி என்று இரட்டைக் குதிரையில் வெற்றிகரமாகச் சவாரி செய்துகொண்டிருந்தார் எம்.ஜி.ஆர். குறிப்பாக, `மதுரை வீரன்’ படம் அவரைத் திரை, அரசியல் என்ற இரு துறைகளிலும் மிகப்பெரிய சக்தியாக உருமாற்றியது. படத்துக்கு வசனம் எழுதியவர், கண்ணதாசன். தாழ்த்தப்பட்ட மக்களின் வாக்கு வங்கி இன்னமும் அ.தி.மு.க-வின் பக்கம் அசைவின்றி இருப்பதில் `மதுரை வீரன்’ ஏற்படுத்திய தாக்கம் முக்கியமானது. 

கே.ஆர்.ராமசாமி, டி.வி.நாராயணசாமி, சிவாஜி, எஸ்.எஸ்.ராஜேந்திரன் என்று இருந்த தி.மு.க-வின் நட்சத்திரக் கோட்டைக்குள் எம்.ஜி.ஆரால் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. அந்த வாய்ப்பை வாங்கிக்கொடுத்தது 1957-ம் ஆண்டின் பெரும் புயல். புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி திரட்டச் சொன்னார் அண்ணா. அத்தோடு நிறுத்தாமல், அதிக நிதி திரட்டியவருக்குப் பாராட்டுக் கூட்டமும் நடத்தினார். அந்த மேடையில் எம்.ஜி.ஆரை அண்ணா பாராட்ட, அது சிவாஜிக்குச் சினத்தைக் கொடுத்தது. தி.மு.க-வுடனான தொடர்பைத் துண்டித்துக்கொண்ட சிவாஜி, காங்கிரஸில் ஐக்கியமானார். சிவாஜியின் இடப்பெயர்ச்சி தி.மு.க-வில் எம்.ஜி.ஆரின் இடத்தை விரிவுபடுத்தியது.



`உதயசூரியன்’ எம்.ஜி.ஆர்

சுதந்திர இந்தியாவின் இரண்டாவது பொதுத்தேர்தலில் தி.மு.க களமிறங்கியது. அந்தத் தேர்தலுக்குச் சில மாதங்களுக்கு முன்னால் வந்த `சக்கரவர்த்தி திருமகள்’ படத்தில் எம்.ஜி.ஆரின் பெயர், உதயசூரியன். பின்னாளில் தி.மு.க-வின் தேர்தல் சின்னம். அந்தத் தேர்தலில் தி.மு.க-வின் பிரசார பீரங்கிகளுள் ஒருவர், எம்.ஜி.ஆர். அதை அண்ணாவும் ஒரு மேடையில் அங்கீகரித்திருந்தார்.

``எம்.ஜி.ஆர் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை காய்த்துக் கனிகிற நெல்லிக்கனி. அது யார் மடியில் விழும் என்று எல்லா அரசியல்வாதிகளும் காத்திருந்தார்கள். அது என்னுடைய மடியில் வந்து விழுந்துவிட்டது. இந்தத் தேர்தல் நிதிக்கு அவர் பல லட்ச ரூபாய் தருவதாகக் கூறுகிறார். எனக்கு நிதி முக்கியமல்ல; அவர் முகத்தைக் காட்டினால், முப்பதாயிரம் வாக்குகள் கிடைக்கும். அவர் தெருவில் ஊர்வலமாக வந்தால்போதும், காங்கிரஸ் கட்சியைத் தூள் தூளாக்கிக் காட்டுவேன்.’’

அந்தத் தேர்தலில் தி.மு.க-வுக்காகப் பிரசாரம் செய்தவர்களில் இரண்டு நட்சத்திரங்கள் முக்கியமானவர்கள். என்.எஸ்.கே மற்றும் எம்.ஜி.ஆர். அந்தத் தேர்தல் முடிந்த பிறகு என்.எஸ்.கே மரணம் அடையவே, தி.மு.க-வில் எம்.ஜி.ஆரின் தளம் விரிவடைந்தது. அரசியலில் அங்குலம் அங்குலமாக உயர்ந்துகொண்டிருந்த எம்.ஜி.ஆர் திரைத் துறையில் அசுரப் பாய்ச்சலில் சென்றுகொண்டிருந்தார். ஒத்தாசைக்குச் சாண்டோ சின்னப்பா தேவர் போன்றோர் இருந்தனர். அவர்களால் எம்.ஜி.ஆரும் எம்.ஜி.ஆரால் அவர்களும் என்று பரஸ்பரம் லாபம் பார்த்தனர்.

எம்.ஜி.ஆரை வைத்து எல்லோரும் லாபம் பார்க்கும்போது, நாமே ஏன் லாபம் பார்க்கக் கூடாது என்று யோசித்தார் ஒருவர். அவர், சாட்சாத் எம்.ஜி.ஆரேதான். `நாடோடி மன்னன்’ படத்தின் தயாரிப்பு, இயக்கம், நடிப்பு எனச் சகலமும் எம்.ஜி.ஆரே. படத் தயாரிப்பு நிறுவனமான எம்.ஜி.ஆர் பிக்சர்ஸின் இலச்சினையில் ஓர் ஆணும் பெண்ணும் தி.மு.க-வின் கறுப்பு சிவப்புக் கொடியை உயர்த்திப் பிடித்திருந்தார்கள். அந்த அளவுக்கு எம்.ஜி.ஆருக்குத் திரை, அரசியல் இரண்டிலும் இணையற்ற ஈர்ப்பு இருந்தது. 

படத்துக்குப் பாடல் எழுதியவர்கள் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும் உவமைக்கவிஞர் சுரதாவும். வசனமெழுதியவர்கள் கண்ணதாசனும் ரவீந்திரனும். `என்னை நம்பிக் கெட்டவர்கள் யாரும் இல்லை, நம்பாமல் கெட்டவர்கள் அதிகம்’ என்ற அரசியல் பொறி பறக்கும் வசனம் இடம்பெற்ற `நாடோடி மன்னன்’ பெற்ற பிரமாண்ட வெற்றி எம்.ஜி.ஆரைத் திரையுலக சூப்பர் ஸ்டாராக உருமாற்றியது. `கண்ணுக்கு விருந்து, காதுக்கு விருந்து, கருத்துக்கு மருந்து, ஆனால் காசுக்குதான் நஷ்டம். ஒரு வாட்டி பார்த்துட்டா இரண்டாம் தடவை பார்க்கச் சொல்லும்’ என்று `நாடோடி மன்ன’னைப் பாராட்டி மகிழ்ந்தது `ஆனந்த விகடன்.' எம்.ஜி.ஆரின் வெற்றி தி.மு.க-வின் வெற்றியாகவும் பார்க்கப்பட்டது. நான்கு குதிரைகள் பூட்டிய தேரில் எம்.ஜி.ஆரை உட்காரவைத்து வெற்றிப் பவனி வரச்செய்தார் தி.மு.க-வின் மதுரை முத்து. 

அந்த வெற்றிப்பவனிக்குத் திடீரென ஓர் இடையூறு. சீர்காழியில் ‘இன்பக்கனவு' நாடகத்தில் நடித்துக்கொண்டிருந்த எம்.ஜி.ஆர் மேடையிலேயே சரிந்து விழுந்தார். கால் முறிவு. அத்தோடு அவருடைய கலை முறிவும் நடந்துவிட்டதாக எதிரிகள் கெக்கெலி கொட்டத் தொடங்கினார்கள். ஆனாலும், தன்னுடைய மன உறுதியால் மீண்டெழுந்த எம்.ஜி.ஆர் மீண்டும் வெள்ளித்திரைக்கு வந்தார். `திருடாதே’ படத்தின் மூலம் மீண்டும் வெற்றிக்கோட்டைக்குத் திரும்பினார். அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்தபோதும் அரசியல் வேலைகளில் எந்தக் குறையையும் எம்.ஜி.ஆர் வைக்கவில்லை. அதற்குச் சரியான உதாரணம், வேலூர் பொதுக்குழு. தி.மு.க நடத்திய பொதுக்குழுக்களில் மிகப்பெரிய சர்ச்சைகள் வெடித்த பொதுக்குழு அது. அதில்தான்   ஈ.வெ.கி. சம்பத் தாக்கப்பட்டார் என்றும் எம்.ஜி.ஆரும் எஸ்.எஸ்.ஆரும் அப்போது அந்த இடத்தில்தான் இருந்தார்கள் என்றும் சொல்லப்பட்டது.



மூன்றெழுத்தில் எம்.ஜி.ஆரின் மூச்சு

முதல் தேர்தலில் 15 பேரைச் சட்டமன்றத்துக்கு அனுப்பிய தி.மு.க, அடுத்த தேர்தலில் அதைவிட அதிக எண்ணிக்கையில் வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்புடன் இருந்தது. அதற்காக அண்ணா அதிகம் நம்பிய சிலருள் எம்.ஜி.ஆரும் ஒருவர். 1962-ம் ஆண்டுத் தேர்தலில் தி.மு.க-வின் பிரதான பிரசார பீரங்கி எம்.ஜி.ஆர். அந்தப் பிரசாரத்துக்கு மத்தியில் எம்.ஜி.ஆரின் இரண்டாவது மனைவி சதானந்தவதி இறந்துவிட்டதாகச் செய்தி வந்தது. ஆனாலும் அறிவித்தபடி பிரசாரக் கூட்டத்தில் பேசி முடித்துவிட்டு, நள்ளிரவு வீடு திரும்பி, இறந்த மனைவியின் முகத்தைப் பார்த்தார் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆரின் கவனம் கலையாத கடும் உழைப்பு அண்ணாவின் மனத்தை உருக்கியது. அந்தத் தேர்தலில் வெற்றிபெற்ற ஐம்பது எம்.எல்.ஏ-க்களைக்கொண்டு எம்.ஜி.ஆரைச் சட்டமன்ற மேலவை உறுப்பினராக்கி, எம்.ஜி.ஆரின் உழைப்புக்கும் கடமையுணர்வுக்கும் கெளரவம் தேடிக்கொடுத்தார். ஆனால், அந்தப் பதவியை ஒருகட்டத்தில் தூக்கிவீச வேண்டிய நிர்பந்தம் எம்.ஜி.ஆருக்கு உருவானது. அண்ணாவின் மனத்தை ரணமாக்கிய காரியம்தான் அது. ஆனாலும், எம்.ஜி.ஆர் அண்ணாவின் தம்பியாகவே தொடர்ந்தார். தி.மு.க-வின் நட்சத்திரப் பிரசாரகராகவே நீடித்தார். `மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்’ என்று பாடியது அண்ணாவுக்கான அரசியல் செய்தி
தான். 

இப்போது எம்.ஜி.ஆரின் படங்களுக்கென்று ஒரு ஃபார்முலா உருவானது. எம்.ஜி.ஆர் படங்களில் மது அருந்துவதுபோல ஒரு காட்சியும் வரக் கூடாது. சூதாட்டம் இடம் பெறலாம்; ஆனால், எம்.ஜி.ஆர் அங்கே இருக்க மாட்டார். ஏழைகள் என்றால் ஓடோடி வந்து உதவுவார். வயதானவர்களிடம் வாஞ்சையுடன் நடந்துகொள்வார். பெண்ணுடைய கற்புக்கு உலகின் எந்த மூலையில் பாதிப்பு ஏற்படப்போகிறது என்றாலும், அங்கே உடனடியாக வந்து நின்று, அந்தப் பெண்ணைக் காப்பாற்றுவார். வில்லனை அடித்துத் துவைப்பார். எந்த இடத்திலும் நீதிக்குப் புறம்பாகச் செயல்பட மாட்டார். நாயகியைத் தேடி ஓட மாட்டார்.  பாடமாட்டார். ஆனால், நாயகி இவரைச் சுற்றிச்சுற்றி வந்து காதலிக்க வேண்டும். ஆபாசம் என்பது கனவுக் காட்சியின்போது மட்டுமே அனுமதி. மற்றபடி கண்ணியத்துக்குரிய கதாநாயகன்.

அறுபதுகளின் ஆரம்பத்தில் திரைத்துறையானது எம்.ஜி.ஆருக்கும் சிவாஜிக்கும் இடையேயான யுத்தக் களமாகவே இருந்தது. எம்.ஜி.ஆர் படத்தின் தயாரிப்பாளர், சிவாஜி படத்தைத் தயாரிக்க மாட்டார். சிவாஜிக்குப் பாடல் எழுதுபவர், எம்.ஜி.ஆருக்கு எழுத மாட்டார். இருவருக்குமிடையே பனிப்போர் அல்ல, பகிரங்கப் போர்தான். ஆனாலும், ஏதேனும் ஒரு விழாவிலோ படப்பிடிப்பிலோ பார்த்துக்கொண்டால்,  பரஸ்பரம் கட்டித்தழுவிக்கொள்வதில் இருவருமே கவனமாக இருந்தார்கள். 

இடைப்பட்ட காலங்களில் எம்.ஜி.ஆரைப் பற்றி ஏகப்பட்ட சர்ச்சைகள். `படப்பிடிப்புக்குத் தேதி கொடுக்க இழுத்தடிப்பார். தேதி கொடுத்தால், சொன்னபடி படப்பிடிப்புக்கு வர மாட்டார். அதிகச் செலவு வைத்துத் தயாரிப்பாளரைத் தொல்லைப்படுத்துவார்’ என்று ஏகப்பட்ட விமர்சனங்கள். நடிகர் சந்திரபாபு, நடிகர் அசோகன் போன்ற உதாரணங்கள் அந்த விமர்சனங்களுக்கு வலுசேர்த்தன. அந்தச் சர்ச்சைகளை எல்லாம் தாண்டியே `வேட்டைக்காரன்’களும் `படகோட்டி’ களும் வந்தார்கள். வசூலை வாரிக் குவித்தார்கள்.  

கொள்கைப் பாடல்கள் அதிக அளவில் வெளிவரத் தொடங்கின. ஆரம்பத்தில் கண்ணதாசனும் பட்டுக்கோட்டையாரும் எழுதிய பாடல் வரிகள் எம்.ஜி.ஆருக்கு அட்சரம் பிசகாமல் பொருந்தின. பிறகு வாலி எம்.ஜி.ஆருக்கென்றே வரிகளை வடிக்கத் தொடங்கினார். 

கண்ணதாசனுக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையே மோதல் முற்றியிருந்த சமயம் அது. மேடை ஒன்றில் பேசிய எம்.ஜி.ஆர், `இனி என்னுடைய படங்களுக்கு வாலியே பாடல்கள் எழுதுவார்’ என்று பகிரங்கமாக அறிவித்தார். 

எம்.ஜி.ஆர் படங்களின் ஆஸ்தான நாயகி என்று சரோஜாதேவியைச் சொல்வார்கள். எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக சரோஜாதேவி நடித்த அத்தனை படங்களுமே வெற்றி என்று சொல்லலாம். ஆனாலும், எம்.ஜி.ஆரின் கதை நாயகிகள் பட்டியலில் ஜெயலலிதாவின் இடம் மிகப் பிரதானமானது. `ஆயிரத்தின் ஒருவன்’ படத்தில் எம்.ஜி.ஆரின் நாயகியாக அறிமுகமான ஜெயலலிதா, அதன் பிறகு எம்.ஜி.ஆரின் தனி,  திரை, அரசியல் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத சக்தியாக மாறிப்போனார்.













எம்.ஜி.ஆர் விஷயத்தில் அண்ணாவின் ராஜதந்திரம்

1965 - மொழிப் போராட்ட வரலாற்றில் முக்கியமான ஆண்டு. ஆனால், எம்.ஜி.ஆரைப் பொறுத்தவரை வேறொரு வகையில் முக்கியமான ஆண்டு. அந்த ஆண்டு நடந்த காமராஜர் பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற எம்.ஜி.ஆர், “காமராஜரே என் தலைவர்; அண்ணா என் வழிகாட்டி” என்று பேசிவைக்க, தி.மு.க-வுக்குள் புயல் வெடித்தது. `எம்.ஜி.ஆர் ஒரு துரோகி’ என்று அறிக்கை வெளியிட்டனர் சில முன்னணித் தலைவர்கள். ஆனால், அண்ணாவோ அமைதியாக இருந்தார். மற்றவர்களைப்போல அண்ணாவும் அவசரம் காட்டி, நடவடிக்கை எதையும் எடுத்திருந்தால், எம்.ஜி.ஆர் என்ற மந்திரத்தைக் காங்கிரஸ் தந்திரமாக வளைத்துப்போட்டிருக்கும். அந்த வகையில் அண்ணா காட்டிய நிதானம் அரசியல் ராஜதந்திரத்தின் உச்சம். 

`இந்தித் திணிப்பு’ என்ற ஆயுதம்கொண்டு இந்திய அரசு தாக்குதலில் ஈடுபட்டபோது, தமிழகம் பொங்கி எழுந்தது. போராட்ட நெருப்பு பற்றிக்கொண்டு எரிந்தது. தி.மு.க-வின் முன்னணித் தலைவர்கள் பலரும் போராட்டக் களத்தில் இருந்தபோது படப்பிடிப்புத் தளத்தில் இருந்தார் எம்.ஜி.ஆர் அதுவும் அண்ணாவின் அங்கீகாரத்தோடு. ஆம், திரைக்கலைஞர்கள் போராட்டங்களில் பங்கேற்பதற்கு விதிவிலக்கு தந்திருந்தார் அண்ணா. அதைத்தான் எம்.ஜி.ஆர் பயன்படுத்திக்கொண்டிருந்தார். அது கட்சியின் மூத்த, முன்னணித் தலைவர்கள் பலருடைய மூக்கையும் சிவக்கச் செய்திருந்தது. 

1967 தமிழகம் தேர்தலுக்குத் தயாராகியிருந்தது. முக்கியமாக, தி.மு.க அதிகபட்ச நம்பிக்கையுடன் களத்தில் இறங்கியிருந்தது. தேர்தல் நிதியாக ஒரு லட்சம் ரூபாய் நிதி தருவதாக மேடையில் பேசினார் எம்.ஜி.ஆர். உடனே எழுந்த அண்ணா, ``எம்.ஜி.ஆரிடம் இருக்கும் பணம் என்னுடைய பணம்போல. அது எங்கேயும் போகாது. தேவைப்படும்போது எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கிக்கொள்வேன். எம்.ஜி.ஆர் எனக்கு முப்பது நாள்கள் கால்ஷீட் தர வேண்டும். ஒருமாத காலம் அவர் தமிழகமெங்கும் சுற்றுப் பயணம் செய்ய வேண்டும். அவர் முகம் காட்டினால், முப்பதாயிரம் வாக்குகள் கழகத்துக்குக் கிடைக்கும்’’ என்றார். ஆனால், அண்ணா நினைத்ததுபோல எம்.ஜி.ஆரால் பெரிய அளவில் பிரசாரம் செய்ய முடியவில்லை. காரணம், துப்பாக்கிச்சூடு. 12 ஜனவரி, 1967 அன்று எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டத்துக்கு வந்த எம்.ஆர்.ராதா எம்.ஜி.ஆரைச் சுட்டுவிட்டார் என்று செய்தி பரவியது. பிறகு, எம்.ஆர்.ராதாவும் தன்னைத்தானே சுட்டுக்கொண்டார் என்றும் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அடுத்தடுத்து செய்திகள் வந்தன. தீவிர சிகிச்சைகளுக்குப் பிறகு இருவருமே உயிர் பிழைத்தனர். 

மருத்துவமனையில் இருந்ததால் எம்.ஜி.ஆரால் தேர்தல் பிரசாரத்துக்குச் செல்ல முடியவில்லை. பரங்கிமலைத் தொகுதி வேட்பாளரான எம்.ஜி.ஆர் மருத்துவமனையில் இருந்தபடியே வேட்புமனு தாக்கல் செய்தார். அவருக்குப் பதிலாக அவர் புகைப்படம் இடம்பெற்ற சுவரொட்டி தமிழகமெங்கும் பிரசாரம் செய்தது. கழுத்தில் கட்டுடன் எம்.ஜி.ஆர் கைகூப்பும் படம் மிகப்பெரிய அனுதாப அலையைத் திரட்டிக் கொடுத்தது. அந்தத் தேர்தலில் தி.மு.க அபார வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. அண்ணா முதல்வரானார்.

கசந்துபோன கருணாநிதி நட்பு 

அண்ணா அமைத்த அமைச்சரவையில் யார் யார் இடம்பெற வேண்டும் என்பதில் எம்.ஜி.ஆரின் ஆலோசனையும் இருந்தது என்பதற்குச் சமீபத்தில் மறைந்த நாடாளுமன்றவாதி இரா.செழியனின் வார்த்தைகளே சாட்சி. அண்ணாவின் அகால மரணத்துக்குப் பிறகு, கட்சியையும் ஆட்சியையும் கருணாநிதியிடம் கொண்டு சேர்த்ததில் எம்.ஜி.ஆரின் பங்களிப்பு பிரதானமானது. இதனை எம்.ஜி.ஆர் லேசாகவும் கருணாநிதி அழுத்தமாகவும் பதிவு செய்திருக்கிறார்கள். ஆனாலும்கூட, அவர்களுடைய உறவு அதிக நாள்கள் நிலைக்கவில்லை.

1971-ம் ஆண்டு தேர்தலில் கருணாநிதி தலைமையிலான தி.மு.க மிருக பலத்துடன் ஆட்சியமைக்க உதவிய எம்.ஜி.ஆருக்கு சில விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் முளைத்தன. கருணாநிதியின் அமைச்சரவையில் சுகாதாரத் துறையைக் கோரினார் எம்.ஜி.ஆர். ஆனால், சட்டக் காரணத்தைச் சொல்லிக் கருணாநிதி மறுத்துவிட்டார் என்று ஒரு சர்ச்சை. 

எம்.ஜி.ஆருக்குப் போட்டியாகத் தனது மகன் மு.க.முத்துவைத் திரையுலகுக்குக் கொண்டு வந்திருக்கிறார் கருணாநிதி. எம்.ஜி.ஆர் மன்றங்கள் எல்லாம் மு.க.முத்து மன்றங்களாக மாற்றப்படுகின்றன என்றொரு சர்ச்சை.

எல்லா சர்ச்சைகளும் ஒருநாள் திருக்கழுக்குன்றத்தில் வெடித்தன. தி.மு.க-வின் பொருளாளரான எம்.ஜி.ஆர், தி.மு.க-வின் தலைவர் தொடங்கி நிர்வாகிகள் அனைவருடைய சொத்துக் கணக்கையும் பொதுவெளியில் வைத்துக் கேட்டார். அந்தக் கேள்வி தி.மு.க-வுக்குள் பெரும் புயலைக் கிளப்பியது. விளைவு, எம்.ஜி.ஆர் தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்டார். அதே வேகத்தில், அ.தி.மு.க என்ற தனிக் கட்சியைத் தொடங்கினார் எம்.ஜி.ஆர்.

`கருணாநிதியின் ஆட்சி ஊழலாட்சி’ என்று ஊருக்கு ஊர் போய்ப் பிரசாரம் செய்தார் எம்.ஜி.ஆர் தி.மு.க அரசின்மீது புகார்ப் பட்டியல் தயார்செய்து ஆளுநரிடம் கொடுத்தார். அவர் ஏற்க மறுத்தபோது, அவற்றைக் குடியரசுத் தலைவரிடம் கொடுத்தார். அவற்றை அடிப்படையாகக்கொண்டுதான் பின்னாளில் கருணாநிதி உள்ளிட்டோர் மீது நீதிபதி சர்க்காரியா தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. 

1973-ம் ஆண்டு நடந்த திண்டுக்கல் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல், எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்புமுனை. அவர் நிறுத்திய மாயத்தேவர் தி.மு.க வேட்பாளரை மூன்றாவது இடத்துக்குத் தள்ளி வெற்றிபெற்றார். அந்தத் தேர்தலுக்கு முன்னால்தான் எம்.ஜி.ஆர் நடித்த `உலகம் சுற்றும் வாலிபன்’ வெளியாக வேண்டியிருந்தது. அதற்கு ஆளுங்கட்சியிலிருந்து கடுமையான நெருக்கடிகள். அதைத் தாண்டித்தான் `உலகம் சுற்றும் வாலிபன்’ வெளியானது.

அந்த வெற்றியைத் தொடர்ந்து எம்.ஜி.ஆரின் அரசியல் பயணம் வேகமெடுத்தது. `அண்ணாயிசம்’ என்ற தலைப்பில் கொள்கை விளக்க அறிக்கை வெளியிட்டார். அந்தச் சமயம் பார்த்து எமர்ஜென்ஸியை அமல்படுத்தினார் பிரதமர் இந்திரா காந்தி. ஒட்டுமொத்த இந்தியாவும் எமர்ஜென்ஸியை எதிர்த்தபோது, அதை ஆதரிக்கும் நிலைப்பாட்டை எடுத்தார் எம்.ஜி.ஆர்.

அப்போதுதான் அ.தி.மு.க என்ற பெயரை `அனைத்திந்திய அதிமுக’ என்று மாற்றினார் எம்.ஜி.ஆர். கட்சியின்மீதும் தன்மீதும் தொண்டர்களுக்கும் தலைவர்களுக்கும் இருக்கும் விசுவாசத்தை வெளிப்படுத்த, கையில் பச்சை குத்திக்கொள்ள வேண்டும் என்றார். அதை ஏற்றுப் பச்சை குத்திக் கொண்டவர்களுள் முக்கியமானவர் நாஞ்சில் மனோகரன்.



நாடாள வந்தார் எம்.ஜி.ஆர்

எமர்ஜென்ஸி முடிந்து 1977-ம் ஆண்டு தேர்தல் அறிவிக்கப்பட்டது.  எம்.ஜி.ஆர் சந்தித்த முதல் பொதுத்தேர்தல் அது. காங்கிரஸுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது எம்.ஜி.ஆரின் அனைத்திந்திய அ.தி.மு.க. முதலில் மக்களவைக்குத் தேர்தல் நடத்தப்பட்டது. அந்தத் தேர்தலில் இந்திரா காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. ஜனதா கட்சி சார்பில் மொரார்ஜி தேசாய் பிரதமரானார். அதன் பிறகு தமிழகச் சட்டமன்றத்துக்குத் தேர்தல் நடந்தது. அதில் தி.மு.க-வை வீழ்த்தி ஆட்சியைப்பிடித்தார் அ.தி.மு.க-வின் நிறுவனர் எம்.ஜி.ஆர். அன்று தொடங்கி, பத்து ஆண்டுகளுக்கு எம்.ஜி.ஆர் ஆட்சிதான்.

அந்தப் பத்தாண்டுகளில் பல்வேறு பங்களிப்புகளைச் செய்திருக்கிறார் என்றாலும், அவற்றில் முதன்மையானது சத்துணவுத் திட்டம். 

ஏழைகளுக்கு உதவிடும் வகையில் ஏதேனும் ஒரு திட்டத்தைக் கொண்டுவர விரும்பினார் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அப்போது காமராஜர் காலத்தில் அமலுக்கு வந்த மதிய உணவுத் திட்டம் செயல்பட்டுக்கொண்டிருந்தது. அதனை மேம்படுத்தும் வகையில், `சத்துணவுத் திட்டம்’ என்ற பெயரில் புதிய திட்டத்தைக் கொண்டுவந்தார். பள்ளிக்கு வருகிற ஏழை மாணவர்களுக்கு நல்ல சத்தான காய்கறிகளைக் கொண்டு, சுகாதாரமான இடத்தில் வைத்து, சமைத்துக்கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டுள்ள திட்டம் என்றார் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.

இந்தத் திட்டத்தைக் கொண்டுவருவதற்கு முன்னர் அதிகாரிகள் அனைவரும் எதிர்மறைக் கருத்துகளையே முன்வைத்தனர். அதிகம் செலவு பிடிக்கும் காரியம்; நிதிச் சிக்கலை உருவாக்கும்; மத்திய அரசு உதவிக்கு வராது; இப்படி ஏகப்பட்ட தடைக்கற்கள். ஆனாலும், பிடிவாதத்துடன் அந்தத் திட்டத்தைக் கொண்டுவந்தார். எம்.ஜி.ஆர் என்ற தலைவர், கடவுளாகக் கொண்டாடப்பட்டது சத்துணவுத் திட்டத்துக்குப் பிறகுதான். ஏழைகளின் எண்ணவோட்டத்தைப் புரிந்து கொண்டதன் காரணமாக உருவான திட்டம் அது. அந்தத் திட்டத்தைப் பிரபலப்படுத்த எம்.ஜி.ஆரால் அரசியலுக்கு அழைக்கப்பட்டார் ஜெயலலிதா. கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர், மாநிலங்களவை உறுப்பினர் என்று அதிகாரப் படிக்கட்டுகளில் அடுத்தடுத்து ஏறத் தொடங்கினார் ஜெயலலிதா. அதற்கு எம்.ஜி.ஆரின் பரிபூரண ஆசி இருந்தது.

திராவிட இயக்கத்தின் அடிப்படை, சமூக நீதி. குறிப்பாக, பள்ளத்தில் கிடப்போரைக் கைப்பிடித்து மேலேற்றிவிடுகிற காரியத்தைச் செய்வதற்குத் திராவிட இயக்கம் கண்டுபிடித்த ஆயுதம்தான் இட ஒதுக்கீடு. அது நீதிக்கட்சி காலத்திலிருந்து அமலில் இருக்கும் விஷயம் என்றாலும், எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் அது புதிய உயரத்தைத் தொட்டது. கருணாநிதி முதலமைச்சராக இருந்த காலத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டு சதவிகிதம் 31 ஆக இருந்தது. அந்த விகிதத்தைத் தனது ஆட்சிக் காலத்தில் அதிரடியாக 50 சதவிகிதம் என்று உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டார் எம்.ஜி.ஆர். திராவிட இயக்கத்தின் அடிநாதமான சமூகநீதிக்கு எம்.ஜி.ஆர் செய்த இந்தப் பங்களிப்பு மிக முக்கியமானது.

ஒவ்வொரு கிராமத்திலும், ஏதோவொரு குறிப்பிட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், குறிப்பாக, பிறப்பால் உயர்ந்தவர்களாக அவர்களே கருதிக்கொள்கிற சிலரே பரம்பரை பரம்பரையாகக் கிராமத்தை நிர்வகிக்கும் மணியம், கர்ணம் போன்ற பதவிகளை அனுபவித்து வந்த நிலையில், அந்த முறையை அடியோடு ஒழித்து,  கிராம நிர்வாக அலுவலர் என்கிற பதவியை ஏற்படுத்தி, அந்தப் பதவிகள் சாதி, மத வித்தியாசமின்றி எல்லோருக்கும் கிடைக்கச் செய்தவர் எம்.ஜி.ஆர். முற்போக்குச் சிந்தனையுடன் கூடிய அந்தச் செயலை முறைப்படுத்தும் வகையில், அந்தப் பதவிகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தவர் எம்,ஜி.ஆர். அதேபோல, தெருப் பெயர்களில் சாதிப் பெயர் இடம்பெறக் கூடாது என்பதை அரசாங்க உத்தரவாகவே வெளியிட்டார் எம்.ஜி.ஆர்.

மத்திய அமைச்சரவையில் மாநிலக் கட்சிகள் இடம்பெறுவது அரிதாக இருந்த காலகட்டத்தில், அதைத் தமிழ்நாட்டுக்கு முதன்முதலாகச் சாத்தியப்படுத்தியவர் எம்.ஜி.ஆர். குறைந்த காலகட்டமே என்றாலும், சரண் சிங் பிரதமரான சமயத்தில் அ.தி.மு.க-வைச் சேர்ந்த இரண்டு பேர் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றனர். அதிலும், ஒரே சமயத்தில் தமிழகத்துக்கு சத்தியவாணி முத்து, புதுச்சேரிக்கு அரவிந்த பாலா பழனூர் என்று இரண்டு மாநிலங்களுக்குப் பிரதிநிதித்துவம் கொடுத்தார் எம்.ஜி.ஆர். சத்தியவாணி முத்து தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த பெண் என்பது குறிப்பிடத்தக்கது.



மூகாம்பிகை பக்தர், ஆன்மிக நம்பிக்கையாளர் என்று சொல்லப்படும் எம்.ஜி.ஆர் தான் பெரியார் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடினார் என்பதுடன், பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்துக்கு அரசு அங்கீகாரம் கொடுத்தார். முக்கியமாக, எம்.ஜி.ஆர் இரண்டாம் முறையாக முதலமைச்சரானபோது, நீதிபதி மகாராஜன் தலைமையில் கோயில் அர்ச்சகர் நியமன முறை தொடர்பான ஆய்வுக் கமிட்டியை உருவாக்கினார். அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற நெடுநாள் கனவுக் கோரிக்கைக்கான பிரதான ஆவணங்களுள் ஒன்று, மகாராஜன் கமிட்டி அறிக்கை. இதுவெல்லாம் சமூகநீதிப் பார்வையோடு கவனிக்க வேண்டிய அம்சங்கள்.

சினிமாவில் இருந்தவரை, அவரை முந்த இன்னொருவர் அங்கே கிடையாது. முதல்வரான பிறகு, எந்தவொரு சட்டமன்றத் தேர்தலிலும் தோல்வி அடையவில்லை. நேருவின் மகளாக இருந்தாலும் சரி, வேலுப்பிள்ளை மகனாக இருந்தாலும் சரி, எம்.ஜி.ஆரின் பக்கபலம் இருந்தால் வெற்றி  அவசியம் என்று தீர்மானமாக நம்பினார்கள். அப்படித்தான் சொல்கிறது சரித்திரம்.

நக்சலைட்டுகள் மீது எம்.ஜி.ஆர் எடுத்த கடுமையான நடவடிக்கை, (இது கரும்புள்ளியா என்ன?) குண்டர் தடுப்புச் சட்டம் என்ற கடுமையான சட்டத்தைக் கொண்டுவந்தது, எரிசாராய ஊழல் விவகாரம், மதுவிலக்கை ரத்து செய்தது ஆகியன எம்.ஜி.ஆர் ஆட்சியின் குறிப்பிடத்தக்க கரும்புள்ளிகள். 

சாதனைகளும் சர்ச்சைகளும் நிரம்பிய மனிதரான எம்.ஜி.ஆர், பொதுவாழ்வில் பெற்ற பிரமாண்ட வெற்றி ஓரிரவில் வந்ததல்ல; கடும் உழைப்பும் சலியாத உத்வேகமும் எளிதில் கண்டுபிடிக்க முடியாத சூட்சுமக் கணக்குகளும் நிறைந்தது. அது எம்.ஜி.ஆர் என்ற ஆகப் பெரிய ஆளுமைக்கு மட்டுமே சாத்தியமானது!

No comments:

Post a Comment