Monday 23 October 2017

ANAI MALAI , TEMPLE,TREASURE, REVEALS ITS SECRECY


ANAI MALAI , TEMPLE,
TREASURE, REVEALS ITS SECRECY






``இது வெறும் மலை மட்டும் இல்ல சார்... இது ஒரு பொக்கிஷம். பிரமாண்டமான கோயில், வெளியே தெரியாத பல ரகசியங்கள், இந்த மண்ணின் உண்மையான வரலாறு உள்ளே தூங்கிக்கிட்டு இருக்கு. சமண வழி வந்த அறவோரின் ஆன்மாக்கள் இப்போதும் தியானத்தில் இருக்கின்றன. நாம அவர்களுக்குத் தொந்தரவு கொடுக்காமல் அமைதியா வந்துட்டுப் போயிடணும். அதைத்தான் இங்கு வரவங்ககிட்டே சொல்லிட்டிருக்கேன்’’ என்கிறார், சித்தர்போலக் காட்சியளிக்கும் ரவிச்சந்திரன்.
மதுரை மாநகரம் ஓர் ஆச்சர்யம் என்றால், மதுரையைச் சுற்றி அரண்போல அமைந்திருக்கும் மலைகள் மற்றோர் அதிசயம். பசுமலை, நாகமலை, ஆனைமலை என உயிரினங்களின் பெயர்களை மலைகளுக்குச் சூட்டியுள்ளனர். மலையின் தோற்றத்தைவைத்து பயமுறுத்துவதற்காக அழைக்கப்பட்ட பெயர்களாக இவற்றை நினைத்துவிடக் கூடாது. ஒவ்வொரு மலைக்குள்ளும் ஆயிரமாயிரம் ஆண்டுகளின் சமூக, தத்துவ வரலாறு புதைந்துகிடக்கின்றன. நேரில் சென்று காண்பவர்களுக்குத்தான் அதன் தொன்மம் புரியும். மதுரையைப் பல மன்னர்கள் ஆட்சி செய்திருந்தாலும், சாட்சிகளாக நிற்கும் மலைகளையோ, அதிலுள்ள வரலாற்றையோ அழிக்க முடியவில்லை. சமணத் துறவிகளின் பள்ளிகளாக விளங்கிய இம்மலைகள், மதுரை மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில் உள்ளன.

அப்படிப்பட்ட மலைகளில் முக்கியமானது, ஒத்தக்கடையில் அமைந்திருக்கும் ஆனைமலை. சமணர்கள் வாழ்ந்த அடையாளங்களுடன் இன்றும் காட்சியளிக்கும் இந்த மலையை, சில ஆண்டுகளுக்கு முன்னர் கொஞ்சம் அசந்திருந்தாலும், கூறு போட்டு பாலீஷ் செய்து, மார்பிள்களாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருப்பார்கள் மலைக்கொள்ளையர்கள். 2011-ம் ஆண்டு, தி.மு.க ஆட்சியின் இறுதிக்கட்டத்தில்தான், `ஆனைமலையைக் குடைந்து சிற்ப நகரம் அமைக்க வேண்டும்’ என்று எங்கிருந்தோ ஒருவர் அனுமதி கேட்க, தி.மு.க அரசும் உடனே அனுமதித்துவிட்டது, இதன் பின்னணியில் சில கிரானைட் புள்ளிகள் இருக்கிறார்கள் என்பதையும், இது தி.மு.க அரசுக்கு முன்கூட்டியே தெரியும் என்பதையும் தெரிந்துகொண்ட மதுரை மக்கள் விழித்துக்கொண்டனர். தொடர் போராட்டங்களுக்குப் பிறகு ஆனைமலை காப்பாற்றப்பட்டது.
அப்படிக் காப்பற்றப்பட்ட ஆனைமலையைப் பாதுகாக்க, அதன் சிறப்புகளை மக்களுக்கு எடுத்துச் சொல்ல, அடுத்து வந்த அரசு முயற்சி எதுவும் எடுக்காத நிலையில், தொல்லியல் துறையினரின் கட்டுப்பாட்டிலுள்ள ஆனைமலையைச் சுத்தம் செய்வது; முட்புதர்களை அகற்றுவது; மது குடிக்கும் இடமாக நினைத்து வருகிறவர்களைத் துரத்துவது; மலையில் மரங்கள் வளர்ப்பது; சுற்றிப் பார்க்க வரும் மக்களுக்கு மலையின் அற்புதங்களை எடுத்துச் சொல்வது என்று, ஒரு தீர்த்தங்கரர்போல வாழ்ந்துகொண்டிருக்கிறார் ரவிச்சந்திரன்.

‘`எனக்கும் இந்த மலைக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டு இருபது வருஷமாச்சு. நான் மதுரை டவுனுக்குள்ள வாழ்ந்தவன். எங்கப்பா மீனாட்சியம்மன் கோயில் கடையில வேலை பார்த்தார். நான் எவர்சில்வர் பட்டறையில வேலை பார்த்தேன். அப்புறம் ஒத்தக்கடை பக்கம் எவர்சில்வர் கம்பெனிங்க வந்த பிறகு குடும்பத்தோடு இங்கே வந்துட்டோம். வேலை இல்லாத நேரத்துல பொழுது போகலைன்னா, மனசு சரியில்லைன்னா இங்கே வந்துடுவேன். அப்பல்லாம் இந்த மலையைப் பற்றி எதுவும் தெரியாது. இங்கே வந்துட்டுப் போற வரலாற்று ஆசிரியர்கள், தொல்லியல் அதிகாரிகள் சொல்றதைக் கேட்டு, இது சாதாரண மலை இல்லை; பல புனிதர்கள் வாழ்ந்த இடம்கிறதைப் பிறகுதான் புரிஞ்சிக்கிட்டேன். அதுக்கப்புறம் இங்கே வருவதை வழக்கமாக்கிக்கிட்டேன். மனசுக்குள்ளே எவ்வளவோ வேதனைகள், கஷ்டங்கள் இருந்தாலும் மலை மேல வந்துட்டா, அப்படி ஒரு நிம்மதி கிடைக்கும். இயற்கையான குளிர்ச்சி இங்கே எப்பவும் உண்டு. அப்படியே காலம் ஓடிட்டிருக்கும்போதுதான் தி.மு.க ஆட்சியில இந்த மலையை உடைக்க அனுமதி கொடுத்தாங்க. அதைக் கேட்டு, இந்தப் பகுதி மக்கள் போராட்டத்தில் இறங்கினாங்க. அதுக்கு ஆதரவா, பல ஊர்களிலிருந்தும் பொதுமக்கள், அறிஞர்கள் கலந்துக்கிட்டாங்க. ஒவ்வொருவரும் இந்த மலையைப் பற்றியும், இங்கு வாழ்ந்த சமணர்கள் பற்றியும் பேசப் பேச... இந்த மலை மீது எனக்கு இன்னும் ஈடுபாடு அதிகமாச்சு.
அதற்கப்புறம் நானே இங்கே வருகிற சுற்றுலாப் பயணிகள், மாணவர்களுக்கு மலையைப் பற்றிய தகவல்களை எடுத்துச் சொல்ல ஆரம்பிச்சேன். தொல்லியல் துறை அதிகாரிகளும் எனக்கு எந்தத் தடையும் விதிக்கலை. சில வருஷங்களுக்கு முன்னால, மலைக்கு மேல அவ்வளவு சுலபமா வர முடியாது. முள்ளுக்காடா இருந்துச்சு. ஏறி வருகிற படிகளில் மனிதக்கழிவுகளா இருக்கும். சிலர் மது பாட்டில்களோடு இங்கே வந்துடுவாங்க. குடிச்சுட்டு பாட்டிலை உடைச்சுப் போட்டுட்டுப் போயிடுவாங்க. நான் அதையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா மாத்தினேன், ‘அண்ணே, இது கடவுள் வாழ்ந்த இடம்; இங்கே வந்து அசிங்கப்படுத்தலாமா?’னு எடுத்துச் சொல்வேன். ‘நாங்க பல காலமா இங்கே வந்து குடிச்சுட்டு இருக்கோம்... நீ புதுசா வந்து அறிவுரை சொல்றியா?’னு எகிறுவாங்க. நான் மறுபடியும் தன்மையா எடுத்துச் சொன்னதும், புரிஞ்சிக்கிட்டாங்க. அப்புறம் புதர்களை அப்புறப்படுத்தி, தினமும் குகைகளைச் சுத்தம் செய்யத் தொடங்கினேன். அப்புறம் செடிகளை நட்டு வளர்க்க ஆரம்பிச்சேன். ஆரம்பத்துல மலை ஏறுற இடத்துல வேலி கிடையாது. தொல்லியல் துறை மூலமா, இப்ப வேலி அமைச்சு பூட்டு போட்டு சாவியை என்கிட்டே கொடுத்துட்டாங்க. தினமும் சுத்தம் செஞ்சு, தண்ணி தெளிக்கிறதால வௌவால் நாற்றம் மறைஞ்சிடுச்சு. இப்படியே தொடர்ந்து இந்த மலையைச் சுத்தமா வெச்சுக்கற ஆளாகவும், இதன் பெருமையை எடுத்துச் சொல்றவனாகவும் மாறிட்டேன்’’ என்றவரிடம், ‘`இங்கே தனியா இருக்க உங்களுக்கு பயமா இல்லையா?’’ என்று கேட்டோம்.
‘`காலை ஏழு மணியிலிருந்து, சாயங்காலம் ஆறு மணி வரைக்கும்தான் இங்கே இருப்பேன். இந்த மலையில வாழுற மலைப்பாம்பு, உடும்பு, காட்டு வௌவால், குரங்கு அதது பாட்டுக்கு வரும் போகும். அதுக்கு இடைஞ்சல் கொடுக்காத வரை, அதுக யாரையும் தொந்தரவு செய்யாது. அதனால எனக்கு எந்த பயமும் இல்லை.’’

‘`இந்த மலையைப் பத்திக் கொஞ்சம் சொல்லுங்க’’ என்றதும் உற்சாகமாகித் தொடர்கிறார்...
‘`மதுரையில சமணம் செழித்து வளர்ந்ததுனு படிச்சிருப்பீங்க. அவங்களோட வாழ்க்கை முறை மிகவும் உன்னதமானது. மன்னர்கள் பலர் சமண மதத்தைச் சார்ந்தவங்களா இருந்தாங்க. சமணத் துறவிகள் அன்பையும் கருணையையும், நல்ல பண்பாட்டையும் பரப்பினாங்க. அவங்க தியானம் செய்வதற்கு மலைகளைத்தான் தேர்ந்தெடுத்தாங்க. கி.பி. பத்தாம் நூற்றாண்டு வரை சமணத்தை அதிகளவில் மக்கள் பின்பற்றினார்கள். தமிழகத்திலுள்ள அனைத்து மலைகளிலும் சமணப்பள்ளிகள் இருந்துள்ளன. மதுரையிலும், சுற்றியுள்ள பல ஊர்களிலும் சமண மலைகள் உள்ளன. இதை `ஜைனர் மலைகள்’ என்றும் அழைப்பார்கள். பற்றற்ற வாழ்க்கை வாழ, முற்றும் துறந்து தியானம்செய்ய மலைக் குகைகள்தான் சமணர்களுக்கு இயற்கையாக அமைந்திருக்கின்றன. மலைகளையே சமணத் தத்துவங்களைப் பயிற்றுவிக்கும் பள்ளியாகவும் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். வீடுபேறு அடைவதற்காக நிர்வாண நிலையில் பட்டினியுடன் கடுந்தவம் புரிந்து, வெற்றி பெற்றிருக்கிறார்கள். மதுரையில் அவர்கள் தவம் புரிந்த மலைகளில் உள்ள புடைப்புச் சிற்பங்கள் மூலம் பல அடையாளங்களை ஏற்படுத்திச் சென்றிருக்கிறார்கள். இந்த ஆனைமலையை, ஒரு `சர்வமதக் கோயில்’ எனலாம், இங்குதான் முருகனுக்குத் தனியாக குடைவரைக் கோயில் இருக்கிறது. பார்சுவநாதர், பாகுபலி, அம்பிகா, இசக்கியின் சிற்பங்கள் உள்ளன. புத்தரையும் மகாவீரரையும் சிலர் ஒரே மாதிரியாக நினைத்துவிடுகிறார்கள். இருவருக்குமுள்ள வேறுபாட்டை நான் விளக்கிக் கூறிவருகிறேன். சமீபகாலமாக மதுரையிலுள்ள பல்வேறு அமைப்புகள் மாணவர்களையும், பொதுமக்களையும் அழைத்து வருகிறார்கள். இதன் அருமை மக்களுக்குப் போய்ச்சேர பாடுபடுகிறார்கள்’’ என்ற ரவிச்சந்திரன், ‘‘இந்த மலையில் சிற்ப நகரம் உருவாக்க சிலர் முயன்றது ஏன்?’’ என்று கேட்டதும் அதற்குப் பதிலளிக்க ஆரம்பித்தார்.
“மூணு கிலோமீட்டர் நீளமுள்ளது இந்த மலை. அரும்பனூர், கொடிக்குளம், நரசிங்கம், ஒத்தக்கடை என்று நான்கு ஊர்கள் மலையின் நான்கு பக்கமும் உள்ளன. இப்ப நாம உட்காந்திருக்கோமே இந்தக் குகை, இதுக்குள்ளே ஒரு வழி இருக்கு, இது வழியா போனா கொடிக்குளம் மூலைக்குச் சென்றுவிடலாம். ஆனால், யாரும் செல்ல முயற்சி செய்ததில்லை. காரணம், இந்த மலைக்குள் பல அற்புதங்கள், அமானுஷ்யங்கள் உள்ளன. இந்த மலைக்குள் விலைமதிப்புள்ள கற்கள் இருப்பதைச் சிலர் அறிந்திருக்கிறார்கள். அதனால்தான் சிற்ப நகரம் என்ற பெயரில் மலையை உடைத்து ஆதாயம் பார்க்க நினைத்திருக்கிறார்கள். அது எப்படியோ தடுக்கப்பட்டுவிட்டது’’ என்று படபடவென்று பேசுகிற ரவிச்சந்திரன், அங்கு வருகிறவர்களில் ஆர்வமாக அவரிடம் பேசுகிறவர்களுக்கு சமணர்கள் குறித்த சில புத்தகங்களை அன்பளிப்பாக வழங்குகிறார். தான் வைத்திருக்கும் ஒரு குயர் நோட்டில் கருத்துகளை எழுதச் சொல்கிறார்.
அரசாங்கத்திடமிருந்து ஊதியம் பெறுகிற பணியாளர்களை நாம் பார்த்திருக்கிறோம். பெரும்பாலும் இதுபோல உணர்வுபூர்வமாக, ஆர்வத்துடன் பணியாற்றுபவர்கள் அபூர்வம். ஆனால், எந்தக் கூலியும் பெறாத ரவிச்சந்திரன் ஆர்வத்தோடு ஆனைமலையைக் காத்துவருவதைப் பார்க்கும்போது ஆச்சர்யமாக இருக்கிறது. ‘குடும்பத்தைக் கவனிக்காமல், வெட்டி வேலை பார்த்துக்கிட்டிருக்கியே..’ என்று தெரிந்தவர்கள் கேட்டாலும், அதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை ரவிச்சந்திரன். இந்த மலைக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டதாகக் கூறுகிறார்.
எல்லோரும் சொல்கிறார்களே என ஆனைமலையில் வேலை போட்டுத்தரும்படி மதுரை கலெக்டரிடம் மனுக் கொடுத்திருக்கிறார். அதைப் பரிசீலிக்கும்படி கலெக்டரும் தொல்லியல்துறைக்கு அனுப்பியுள்ளார். இது அங்குள்ள அதிகாரிகளுக்குப் பிடிக்குமா என்ன? ‘அதற்கெல்லாம் வாய்ப்பில்லை; இப்படி மனுக் கொடுத்துட்டு அலையக் கூடாது’ என்று ரவிச்சந்திரனிடம் அழுத்தமாகக் கூறிவிட்டார்கள். குடும்பத்தினரின் நெருக்கடி, மற்றவர்களின் ஏளனப்பேச்சு அவரை சில நேரங்களில் நிலைகுலையவைக்கின்றன. எவர்சில்வர் பட்டறைக்கு வேலைக்குச் சென்றாலும், ஒரு நாளைக்கு 300 முதல் 500 ரூபாய் வரை சம்பாதிக்கும் தெம்பு இருந்தாலும், ‘நான் போய்விட்டால், இந்த மலையை யார் பார்த்துக்கொள்வார்கள்?’ என்ற கவலை அவரை அழுத்துவதால், தன் கஷ்டத்தை, குடும்பத்தை மறந்துவிட்டு மலையேறிவிடுகிறார் மலைக்காவலன் ரவிச்சந்திரன்.

No comments:

Post a Comment